Trending

தெற்கிலும் வடக்கு வாழ்கிறது

 

தெற்கிலும் வடக்கு வாழ்கிறது

'வருவோரை வாழ வைப்பது தமிழகம்!' என்ற முது மொழியைச் சற்றே திருத்தி 'வடவோரை வாழ வைப்பது தமிழகம்' என்று கூறுவது தவறாகாது.


தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வட மாநிலத்தவரின் வருகை பல மடங்குகளாக அதிகரித்து கொண்டே உள்ளதென்று ஊடகச் செய்தியில் காண்கிறோம். அவ்வாறே ஊர்புறந்தனிலும் எங்கும் வடக்கன்ஸ் தான்.


ஹோட்டலுக்கு சென்றால் வடக்கன். டீக்கடை என்றாலும் வடக்கன். சலூனிலும் வடக்கன் என சுற்றும் புறமனைத்தும் வடக்கின் வாழ்வு முன்னதற்கு இன்று சற்றே அதிகம் தான்.


சமீபத்தில் சென்னைக்கு வந்த ஒரு பீகார் இரயிலில் 4000 பீகாரியர்கள் தமிழகத்திற்கு வேலை வாய்ப்புத் தேடி வந்துள்ளார்கள். திருப்பூர் அருகே கொங்குபாளையம் என்னும் ஊர் சிறு இந்தி கிராமமாகவே மாறிவிட்டதாம்.


கடின உழைப்பு, குறைந்த சம்பளம் இந்த இரண்டும் தான் வடக்கத்தியோர் தமிழகத்தில் பெருக காரணம் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.


அமெரிக்க நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் இந்தியர்களுக்கு மாதம் 1500 டாலர்கள் முதல் 2500 டாலர்கள் வரைத் தரப்படுகிறது. 1500 டாலர் என்றால் இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்தி இருபத்து மூவாயிரம் - சொட்ச ரூபாய்கள். இந்திய மதிப்புபடி பார்த்தால் மாதம் 1 லட்சம் சம்பளம் என்பது பெரிய தொகை தான் ஆனால் அமெரிக்காவில் வாழும் அமெரிக்கனுக்கு இது போதாது. ஒரு சராசரி அமெரிக்கன் மாதம் 7000 டாலர்களுக்கு குறையாமல் வேலை செய்ய மாட்டான். அதனை இன்றைய டாலர் மதிப்புப்படி பார்த்தால் 5 லட்சத்து எழுபத்து ஐந்தாயிரம் ரூபாய்கள். ஒரு அமெரிக்கனின் குறைந்தபட்ச மாத வருமானம் 7000 டாலர்கள் இருந்தே ஆக வேண்டும் இல்லையெனில் அவனால் வாழவே முடியாது. இந்த வாய்ப்பை சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொண்ட இந்தியர்கள் அவர்களது பலவீனத்தையே அமெரிக்காவில் வேலை செய்வதற்கான பாலமாக்கிக் கொண்டனர். இதைத் தானே இப்போது வடநாட்டவர்கள் தமிழகத்தில் வந்து செய்கிறார்கள். 


பீகாரில் நாள் முழுவதும் வேலைப் பார்த்து ரூ.100 சம்பாதிக்கும் ஒருவனால் தமிழகத்தில் அதே வேலையைச் செய்து ரூ.500 பெற முடிகிறது. குறைந்த கூலிக்கு ஓடி வரும் அவர்களைத்தான் நம் முதலாளி வர்க்கமும் வெற்றிலைப் பாக்கு வைத்து வரவேற்க விரும்புகிறது. தமிழகத்து முதலாளிகள் மட்டும் சம்பாதிக்கும் ஆசைக்கு விதிவிலக்கா என்ன? 


அமெரிக்கர்களுக்கு, அவர்கள் நாட்டில் திரும்பும் திசையெல்லாம் இந்தியர்களாய் தெரிகிறார்களாம். தமிழர்கள் எங்கு திரும்பி பார்த்தாலும் வட நாட்டவர்கள் தெரிகிறார்கள். உணவகங்களில் சாம்பார் சாதம் வாங்கி சாப்பிட்டால் ஒரே நெய் வாடை எட்டி பார்த்தால் இந்திக்காரன். 


திருவாரூரில் பிரபலமான உணவங்களில் வேலை செய்யும் பெரும்பாலானவர்கள் இந்திகாரர்கள் தான். அதில் சிலர் அசாமிகள். இதைப் பற்றி கொஞ்சம் அதிசிரத்தை எடுத்து விசாரிக்கையில் தான் மிகவும் வியப்பாய் இருந்தது.


ஆரம்பத்தில் பானிபூரிக் கடை, மொபைல் பாகங்கள், குளிர் போர்வைகள், ஒட்டடை குச்சிகள், சாலையோர ஆடைக் கடை என தொழில் செய்ய வந்த வடக்கத்தியோர் இப்போது பெரிய மளிகை கடைகள், எலக்ட்ரானிக் பொருட்களை விற்கும் பெரிய ஷோரூம்கள், ஹோட்டல், டீக்கடை என்று சராசரி மக்கள் புழங்கும் கடைகளிலும் பெருகிவிட்டார்கள். இதில் கடைக்கே உரிமையாளராய் இருப்போர் பலர்.


வணிக ரீதியாக தமிழர்களுக்கு இது பெரும் அபாயம் ஆனால் நான் அதைப்பற்றி இங்கதிகம் விவரிக்க போவதில்லை. வடக்கு வாழ்வது போதாதென்று தெற்கிலும் வடக்கு வாழ்வது தமிழர்களுக்கு வேலை பாதிப்பை உண்டாக்குகிறது என்பதையும் தாண்டி எனக்கு மொழியியல் ரீதியான பாதிப்பே பேராபத்தாய் தெரிகிறது.


தெலுங்கில் சமீபத்தில் வெளியாகும் சினிமாக்களைப் பார்த்தால் உங்களுக்கு மொழியியல் சார்ந்த பாதிப்பு எவ்வாறாகக்கூடும் என்பது புடிபடும். பிம்பிசாரா என்ற படத்தையும் அதற்கு முன்னதாக மற்றும் பின்னதாக வந்தசில தெலுங்கு படங்களையும் பார்த்தபோது இதைக் கவனித்தேன்.


தெலுங்கில் கலந்த இந்தி. ஆந்திராவில் இந்தி மொழியின் ஆக்கிரமிப்பு அதிகமாகி போகிறது. தெலுங்கு வசனங்களின் இடையிடையே இந்தி வசனங்களும், இந்தி பாடல்களும், இந்தி பெயர் பலகைகளும் கூட வரும். தெலுங்கு படங்களில் கவனித்திருக்கலாம். 


அதற்கு காரணம், அங்கு வாழும் இந்தி மக்களுக்கும் ஏற்ற வகையில் படம் எடுத்தாக வேண்டுமென்கிற நிர்பந்தம். 'ஒரு இனக்குழு வாழும் பகுதியில் இன்னொரு இனக்குழுவின் தாக்கம் அதிகமானால் பூர்வீக இனத்தின் வாழ்க்கை முறையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டேயாகும்' அவ்வாறு உருவானது தான் இந்தியா.


இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் அதன் மாட்சிமை பொருந்திய மொழிகளும் இவ்வாறு பாதிக்கப்படுவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது அந்த மாநிலத்திற்கு பஞ்சம் பிழைக்க வருவோர்க்கும் தரும் ஓட்டு உரிமை.


ஒரு அரசு எவ்வாறு உதயமாக வேண்டுமென்பதை அவ்வரசுக்கு உரிய அந்நிலத்தவர்கள் அல்லாது அயல் நிலத்தோரும் தேர்ந்தெடுக்கும் வகையான கட்டுகள் அற்ற சட்டங்களும் நம் மொழி பாதிப்புள்ளாவதற்கு ஒரு காரணமே.


ஒரு கடையில் 4 வடநாட்டவர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். அந்த கடையின் முதலாளி ஒரு தமிழர். இரண்டு தமிழர்கள் அங்கே மேல்நிலைப் பொறுப்பில் வேலைப் பார்த்தனர். கடைத் திறந்த ஆரம்பத்தில் அந்த இரண்டு தமிழர்களும் மற்ற நான்கு இந்தி காரர்களிடமும் தமிழிலே பேசி வேலை வாங்கினார்கள். தமிழ் பேசக் கற்று கொள்வார்கள் என்று நம்பினர். இரண்டு வாரம் கழிந்தது. அந்த இரண்டு தமிழர்களும் வேறு வழியின்றி இந்தி கற்று கொண்டார்கள்.


எனது தந்தையே வேலைக்காக தமிழகத்திற்கு வந்திருக்கும் வடக்கர்களிடம் பேச இந்தி கற்று கொள்ள வேண்டும் என்று பெரு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.


இந்தி கற்று கொள்ளலாம் தவறில்லை. வாழ இடம் தரும் இந்நிலத்தின் மொழியினை ஏன் அவர்கள் கற்க ஆர்வங்கொள்வதில்லை என்று சிந்திக்க வேண்டும். நாம் சிரத்தை எடுத்து கற்பது போல் அவர்கள் கற்க விரும்புவதில்லை. 


நான் ஒரு இந்தி பையனிடம் தினமும் 'இரண்டு' என்ற வார்த்தையை பல முறை அழுத்தி அழுத்தி கூறி பார்த்தேன். அவன் என்றாவது ஒருநாள் 'ரெண்டு' என்றாவது கூறுவான் என்று எதிர்பார்த்தேன். பிறகு தான் தெரிந்தது. நான் அவனிடம் எதிர்பார்த்தது போலவே அவன் என்னிடம் எதிர்பார்த்து இருந்திருக்கிறான். அதனால் தான் நான் 'இரண்டு' என்று கூறும்போதெல்லாம் அவன் என்னிடம் பதிலுக்கு 'தோ தோ' என்று நாயை அழைப்பது போல் கூவி இருக்கிறான்.


'பையா ஏக் பிளேட் பானி' என்றால் தான் தருகிறானாம். அதனால் இந்தி கற்று கொள்ள வேண்டுமாம், பிரபலம் ஒருவர் சொல்கிறார். ஒருவரிடம் பேசுவதற்காக ஒரு மொழியை கற்க வேண்டுமென்பதில் எந்த தவறும் இல்லை. எங்கும் அவர்களிடம் மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் படி ஆகிவிடக்கூடாது. தேவையை பூர்த்தி செய்வதற்கும் வேற்று மொழித் தேவை என்ற நிலை வந்துவிடக் கூடாது. பிறகு எதற்கு இலக்கணம், இலக்கியம், நவீன மொழியியல் ஆய்வுகள்? கலைச்சொல் ஆக்கங்கள்? பயன்படுத்த தானே மொழி. 


வடக்கத்தியோரை உங்கள் வாழ்வில் இனி அடிக்கடி சந்திக்க நேரும். அப்போதெல்லாம் இயன்றவகையில் தமிழில் பேசுங்கள். அவர்களுக்கு தமிழைச் சொல்லி கொடுங்கள். 


'அண்ணா' 'தம்பி' என்று கூப்பிடுவதையே விட்டுவிட்டார்கள். 'ஜி', 'bro', 'பாஸூ'... எவனைக் கண்டாலும் இந்த கருமங்களைத் தான் சொல்கிறான். தட்டச்சு செய்வதில் கூட யாருக்கும் தமிழ் தட்டச்சு தெரிவதில்லை. நம்மவர்களே அது அவசியம் இல்லையென்று நினைக்கிறார்கள். கணினி தட்டச்சு வேண்டாம், அன்றாடம் பயன்படுத்தும் கைபேசியிலாவது தமிழ் தட்டச்சு கற்று கொள்ளலாமல்லவா!


தமிழ் நாட்டில் தமிழ் பேசுங்கள் என்று கெஞ்ச வேண்டி உள்ளது. சீனம், ஜப்பான், கொரியன் போன்ற மொழிகள் இன்னமும் தங்களது மொழியின் நுட்பமான படிம வழக்கங்களை வழக்கில் வைத்துள்ளார்கள். நாமும் வைத்திருக்கிறோம். பெருமைக்கென வீணில் வைத்திருக்கிறோம். வழக்கில் இல்லை.


தீசன்

4 Comments

 1. இது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. ஒரு கோடி பேருக்கு வேலை கொடுக்கிறோம் என பெருமைப்பட்டு கொள்வதா? நம்மை நாமே அழித்து கொள்வதை எண்ணி வருத்தப்படுவதா ? எதுவும் புரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. இதைப் பெருமையாக எண்ணினால் விரைவில் உண்மைப் பெருமையை நாம் இழக்க நேரிடலாம்

   Delete
 2. தென்றலில் இந்த ஆண்டின் முக்கிய கட்டுரையாக இதை கருதலாம்.

  வருங்காலத்திற்கான ஒரு ஆரூடம் இது.

  விழித்துக்கொள்ளாவிட்டால் பின்னர் வலிக்கும்.


  நம்மவர்களிடம் இருக்கும் கிறுக்கு தனமான பழக்கம் என்னவென்றால் நாமே நம்மவர்களிடமிருந்து நம்மை தனித்து,, சற்று மேதாவி தனமாக காட்டிக்கொள்ள நினைப்பதுதான்.

  நாலு தமிழர்கள் பேசிக்கொண்டிருக்க.. இடையில்ஒரு இந்திகாரன் வந்து ஏதோகேட்க அவனுக்கு ஒரு தமிழன் இந்தியில் பதிலளித்து விட்டால் போதும்... மற்ற மூவருக்கும் அது ஒரு அவமானம்!!! அல்லது ஒரு தரக்குறைவு..!! அல்லது தற்கழிவிரக்கம்!! உண்மையில் இப்படி நினைப்பதுதான் வடிகட்டிய முழு மூடத்தனம். உடனே தானும் அந்த மொழியில் ஓரிரு சொற்களை தெரிந்து கொண்டு பிதற்றுவான்.இதைவிட அந்த இந்தி தெரிந்த தமிழனுக்கு ஒரு மேதாவி தனமான மிதப்பு வரும் பாருங்கள்... இதற்காகதானே ஆசைப்பட்டு கற்றுக்கொண்டான் அவன்.! இது ஒரு வீண் ஜம்பம். வீணான ஆர்வகோளாறு. ஒரு குட்டி பந்தா.

  இந்த மாதிரி சில்லறை தனமான காரியங்கள் ஒரு புறமிருக்க...

  செய்யும் தொழில்களில் ஏற்றத்தாழ்வு பார்ப்பது நம்மவர்களிடம் இடைக்காலத்தில் ஊறிப்போன ஒரு சாபக்கேடு. ஒரு வேலை செய்பவன் அதை தவிர இன்னொருவேலையை (தனக்கான ஒன்றாய் இருந்தாலும்கூட) தொட்டு கூட பார்க்க மாட்டேன் என நினைப்பது.... அதனை தரக்குறைவாய் நினைப்பது இந்த கேடுகெட்ட மனப்பான்மையை அடுத்த சந்ததி பிஞ்சு நெஞ்சுகளிலும் விதைப்பது

  இதெல்லாம் நல்லதுக்கு இல்லை.

  இதை தொடர்ந்தால் நம்மைவிட அந்த வடக்கத்திய உழைப்பார்கள் இங்கே வசிப்பது உத்தமம் ஆகி விடும்.

  தன்னை நேசித்து நாடுபவனையே
  நிலமகள் விரும்புவாள். கடமை தவறாத காலமகன் அதை நிகழ்த்துவான்.

  ஆதலால் தமிழர்களே கொஞ்சம் செவிமடுங்கள்..
  நம்நிலத்தில் நம்மவர்களுக்காக நம்மவர்களோடு நாம் உழைக்க பழகுவோம்.

  குறை நம்மிடமிருக்க பிறனை நொந்து பலனில்லை.

  ReplyDelete
 3. தீசனாரின் இந்த தீர்க்க தரிசனம் நிகழாதிருப்பதாகுக..!

  ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு