Trending

ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு கட்டுரை

 ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு கட்டுரை

ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு


இட ஒதுக்கீடு, ஆஹா… சர்சைக்குரிய தலைப்பு! ஆம்; இட ஒதுக்கீடு என்றாலே பிரிவு பிரிவாக பிரிந்து சமூக வலைத்தளங்களில் சண்டை இட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஒரு சாரார் சாதிய ரீதியான இட ஒதுக்கீடு இருப்பது  தான் நல்லது என்றும், மற்றொரு சாரார் பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், இன்னொரு சாரார் இட ஒதுக்கீடு என்பது வேண்டவே, வேண்டாம் என்றும் பலவகையாக தங்கள் கருத்தை முன் வைக்கின்றனர். முதல் இரு கருத்துக்களை முன் வைப்பவர்கள் கூட சரியே, ஆனால் இட ஒதுக்கீடு என்பது முற்றிலும் வேண்டாம் என்று சொல்வது முட்டாள்தனம், அதுவும் இன்றைய சூழலில்…


முந்தைய காலங்களில் மக்களை  நான்கு வர்ணங்களாக பிரித்து அவரவருக்கொரு தொழிலையும், பெயரையும் வழங்கி ஒற்றுமை செய்யவே வர்ணாசிரம தர்மத்தை (நாற்பாற்றிணை) வகுத்ததாக செய்தி உண்டு. அதுவே காலப்போக்கில் அவரவர் தாங்கள் செய்யும்  தொழிலினைக் கொண்டு  உயர்ந்த தொழிலை செய்வோர் உயர்சாதி இனத்தவராகவும், மற்ற தொழில்களை செய்வோர் கீழ்சாதி இனத்தவராகவும் பகுத்து கொண்டுதன் மூலம் வகுப்புவாதம் ஆரம்பமானது. 


இதனை தவிர்த்து, எல்லா துறையிலும், எல்லா சாதியினருக்கும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதி இனத்தவருக்கும் அல்லது சிறுபான்மை இனத்தவரும் அந்த துறையில் குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கி, எல்லாரும் போல சமமாக அவர்களையும் கருதவே இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. (இட ஒதுக்கீட்டின் நோக்கமும் அதுவே) 


 மனிதநேயம் ஓங்க மதவெறி நீங்க


இதனை தெளிவாக புரிந்து கொள்ள மகாபாரத நிகழ்வு மூலம் விளக்க முயல்கிறேன். 


மகாபாரதத்தில் மகத நாட்டை சேர்ந்த வேட்டுவ இனத்தவன் ஏகலைவன். அவனுக்கு வில் வித்தையின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அவன் ஒரு முறை துரோணாச்சாரியிடம் சென்று எனக்கு நீங்கள் வில் பயிற்சி அளிக்க வேண்டும் என்று கேட்க, துரோணர் "வேட்டுவ இனத்தவனான உனக்கு என்னால் பயிற்சி அளிக்க முடியாது" என்றார் (சத்திரியன் மட்டுமே ஆயுத பயிற்சி பெற வேண்டும் (வருணாசிரமம்) என்பதை கருத்தில் கொண்டு) கூறினார்.


இதனால் வருத்தமடைந்த ஏகலைவன் கேட்டான், "குருவே நான் என்ன செய்வது? எப்படி இந்த தனுர் வித்தையை நான் கற்றுக் கொள்வேன்!?" 


துரோணர் மறுமொழி சொன்னார், "நீ வேண்டுமானால் ஒன்று செய். உனக்கு, என் மீது நம்பிக்கை இருந்தால் எங்கு வேண்டுமானாலும் இந்த பயிற்சியை கற்றுக்கொள்ளலாம்" என்று கூறி அவனை அனுப்பினார். 


அவரிடம் இருந்து விடைப்பெற்றுக்கொண்ட ஏகலைவனும் துரோணர் போல ஒரு சிலையை செய்து அதற்கு முன் நின்று தனியே வில் வித்தையை கற்க ஆரம்பித்தான். ஒரு நாள் அவனது கவனத்தை சிதறடிக்கும் வகையில் நாய் ஒன்று குரைத்துக்கொண்டே இருக்க, அவன் வில்லினால் அம்புகளை செலுத்தி நாயின் வாயை தைத்துவிட்டான். அந்த நாயை பார்த்த துரோணர் இப்படி செய்தவன் மிகுந்த திறமை சாலியாக இருக்க வேண்டும் என்று நினைத்து பாண்டவர்களுடன் ஏகவலன் இருந்த இடத்தை நெருங்கினார். ஏகலைவன் அவர் காலில் விழுந்து வணங்கினான்.


துரோணர் நாயை நோக்கி கையை காட்டி  "இதை யார் உனக்கு கற்றுத் தந்தது?" என்று ஆச்சிரியமாக கேட்டார். "நீங்கள் தான்! ஆனால் நேரில் வந்து கற்றுத்தரவில்லை என்றாலும், ஆசி வழங்கி என்னுள் இருந்து எனக்கு கற்றுத் தந்தீர்கள்" என்றான் ஏகலைவன். துரோணர் அர்ச்சுனனைப் பார்த்தார், அவனை உலகிலேயே மிகச் சிறந்த வில் வீரனாக ஆக்குவேன் என்று சொல்லியது நினைவுக்கு வந்தது. உடனே ஏகலைவன் பக்கம் திரும்பி "என்னால் வில் வித்தைக் கற்றுக்கொண்டதால் நீ எனக்கு குருதட்சிணை தந்தாக வேண்டும்" என்றுச்சொல்ல ஏகலைவனும்  ஒப்புக்கொண்டான். அவர் அவனது சுண்டு விரலை கேட்க அவனும் அதனை தட்சணையாக தந்தான்.  அப்போது மட்டும் தூரோணரின் குருகுலத்தில் வேட்டுவ இனத்தவருக்கென்று ஒர் இட ஒதுக்கீடு இருந்திருந்தால், ஏகலைவனின் அசாத்திய வில் வித்தையை அகிலம் கண்டிருக்கும். இது வெறும் கதை என்று சொன்னாலும், அது சொல்ல வருவது ஒடுக்கப்படவரின் நிலமையையே. இதனால் தான் இட ஒதுக்கீடு என்ற ஒன்று அவசியம் என்கிறேன்.


இப்போது தான் சாதி முறையில் மக்களுக்கு பாகுபாடு என்ற ஒன்றே இல்லையே? அது மட்டும் இல்லாமல் இப்போது உயர் சாதியினர் ஏழையாகவும், தாழ்த்தப்பட்டவராக கருதப்படும் சாதியினர் பணக்காரனாகவும் ஆகிவிட்டனர். இந்த சூழலில், பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டியது தானே?  என்று கேட்டபோருக்கு…. ஒரு தனி மனிதனின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஒருமுறை இல்லை, என்னை கேட்டால் அது மாதத்துக்கு ஒருமுறை மாற்றம் அடைகிறது என்பேன். ஒரு மனிதனின் பொருளாதார நிலையை குறிக்கும் வருமான சான்றிதழ் கூட சரியான முறையில் விவரங்களை சேகரித்து வழங்கப்படுவதன்று.  அதனால் பொருளாதாரத்தை வைத்து இட ஒதுக்கீடு கொடுப்பதும் மிகுந்த சர்ச்சையை தூண்டும். 


அம்பேத்கர் 10 ஆண்டுகள் மட்டுமே இட ஒதுக்கீட்டை நடைமுறை படுத்த  சொன்னார்  என்ற கருத்து உண்மை. ஆயினும் அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை அந்த ஆண்டுக்குள் மாறாமல் இருப்பின் அதுவே அடுத்தத் தடுத்த ஆண்டுகளுக்கு தொடரும் வகையில் இட ஒதுக்கீட்டின் காலவரம்பை நீட்டிப்பு செய்ய அரசியல் அமைப்பில்  ஏற்பாடு செய்தார். 


வரலாற்றில் முக்கியமான உடன்படிக்கை 'பூனா உடன்படிக்கை' இந்த ஒப்பந்தத்தில் தான் அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியது.


> பௌத்தத்தை நோக்கி அம்பேத்கரும் காந்தியடிகளும்பூனா உடன்படிக்கை


இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் இந்திய ஒன்றியத்தின் அரசியல் அமைப்பை முடிவு செய்ய, மக்கள் பிரதிநிதிகளுக்காக நடத்தப்படும் தேர்தலில் வகுப்புவாத பிரதிநிதித்துவம் அமைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்து அதில் ஆதிக்க சாதிப்பிரிவினர் மற்றும் ஐரோப்பியர் ஆங்கிலோ இந்தியர்கள் என அனைத்து வகை மக்களுக்கும் தனி தொகுதிகள் வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.  தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தனித் தொகுதிகளை கொடுக்க பிரிட்டிசு அரசு முன் வந்தபோது, அந்த இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்ட அம்பேத்கர் அந்தத் திட்டத்தை வரவேற்றார். இதை காந்தி கடுமையாக எதிர்த்தார். 'இந்துக்கள் தீண்டத் தகாதவர்கள் என்றும் சாதி இந்துக்கள் என்றும் பிளவு படுவதைத் தாம் விரும்பவில்லை' என்று கூறினார். எரவாடா சிறையில் இருந்த காந்தி 18.9.1932-ல்  சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கினார். காந்தி உடல் நிலை மோசமானதால் அந்த உண்ணாவிரதத்தை நிறுத்திக் காந்தியின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தில் அம்பேத்கரும் பிற இந்து தலைவர்களும் பூனாவில் கூடிப் பேசினர். காந்தியின் உயிரை காப்பாற்ற வேண்டிய நிலையும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை உயர்த்தும் நிலையும் அம்பேத்கரை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது.


இறுதியில் பூனா ஒப்பந்தத்தின் படி மாகாணச் சட்ட அவைகளில், நூற்று நாற்பது எட்டு இடங்களைத் தீண்டத் தகாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிப்பது என்று முடிவு ஆனது. பிரிட்டிசு இந்தியாவில் மத்தியச் சட்ட அவையில் இந்துக்களுக்காக உள்ள மொத்த இடங்களில் 10 சதவீதமாகத் தீண்டத் தகாதவர்களுக்கு ஒதுக்கீடு செய்வது என்றும் தீர்மானித்தார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாக அம்பேத்கரும், சாதி இந்துக்களின் சார்பாகப் பண்டித மதன் மோகன் மாளவியாவும் கையெழுத்து இட்டனர். இதனால் காந்தி தன் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார்‌.   இந்த ஒப்பந்தம் நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அம்பேத்கர் தாழ்த்தப்பட்டோரின் சாதிய தலைவராகவும், காந்தி தாழ்த்தப்பட்டோருக்கு எதிரி போலவும் சித்தரிக்கப்பட்டனர். இட ஒதுக்கீடு என்பது பிரிவினையை ஏற்படுத்தும் என்ற காந்தியின் கருத்து சரி! ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை உயர இட ஒதுக்கீடு முக்கியம் என்றே அம்பேத்கர் தன் இட ஒதுக்கீடு கருத்தினை முன் வைத்தார்.


அமெரிக்காவிலும் நிறம், புலம்பெயர்ந்தவர்கள் என்ற வகையில் இட ஒதுக்கீடு என்பது வழங்கப்படுகிறது. அதேபோல கனடா போன்ற நாடுகளும் இட ஒதுக்கீடு வழங்குகின்றது. வளர்ச்சி அடைந்த நாடுகளே இட ஒதுக்கீடு முறையை பின்பற்றும் போது அந்த இட ஒதுக்கீடு முறை இந்தியாவில் இருப்பது குற்றம் ஆகாது. இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அது அவசியம் தேவை‌‌.


நம் நாட்டில் இட ஒதுக்கீடு இல்லாமல் திறமையை வைத்து மட்டுமே அனைத்து துறையையும் செயல்பட்டால் நன்றாகத்தான் இருக்கும். நாடும் நல்ல திறமையான நாடாக வரும். ஆனால் மேற்பதவியில் இருக்கும் நபரால் சாதி பார்க்கப்படுமானால் அதன் விளைவு துன்பமே!. சாதிய பாகுபாடு என்ற ஒன்றே முற்றிலுமாக இல்லாத சூழலில் இட ஒதுக்கீடு என்பதே வேண்டாம்! 


ஆனால் இன்றைய காலகட்டத்தில் இட ஒதுக்கீடு என்ற ஒன்றே இல்லை என்றால் ஒதுக்கப்படோர் அல்லது சிறுபான்மையினர் என்றும் ஒடுக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். 


இப்போது தமிழக்கத்தில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு முறை உள்ளது. முன்பு, காமராஜர் ஆட்சி காலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 25 சதவீதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 16 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.  பின்பு  திமுக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 31 சதவீத இட ஒதுக்கீடும், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீத இட ஒதுக்கீடும் உயர்த்தி வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அதிகரித்து வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் வன்னியர் சமூகத்தினர் தங்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். அதன்பின் ஆட்சிக்கு வந்த திமுக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை, இரண்டாகப் பிரித்துப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவீதமும் இட ஒதுக்கீட்டை வழங்கினர். அதே திருத்தத்தின் போது தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து 18 சதவீதமும், பழங்குடி மக்களுக்கு என்று தனியாக 1 சதவீதமும் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.  இவ்வாறாக 69  சதவீத இட ஒதுக்கீடு என்பது உருவானது. மீதம் 31 சதவீதம் பொது பிரிவாக ஆனது.  ஆகவே முன்பு  இருந்த இட ஒதுக்கீடு முறையை விட அதிகரித்துக்கொண்டே வந்து இப்போது 69 சதவீதமாக இருக்கிறது.  ஆகவே இது ஒடுக்கப்பட்டோரின் நிலையை  நோக்கில் கொண்டது மட்டும் அல்லாமல் அனைவரின் நிலையை நோக்கில் கொண்டே தொடர்ந்து இட ஒதுக்கீடு அதிகப்படுத்தப்பட்டுள்ளது என்பது புரிகிறது.


இனி இட ஒதுக்கீடு எப்படி அமையவேண்டும் என்று ஆலோசிப்பதே சரியாகும்.


மகாத்மா காந்தி, ஒரு சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு சலுகை என்பது ஒரு தலைமுறைக்குத் தான் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்‌. அதற்கு காரணம் அந்த தலைமுறைக்கு ஒரு சமுதாயம் உயரும் பின்பு அடுத்த தலைமுறைக்கு அடுத்த சமுதாயம், என ஒரு வகையில் அனைவரும் சம நிலையை எய்தி 'ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட' என்ற சொல்லுக்கே இடம் இல்லாத நிலை ஏற்படும்.


இட ஒதுக்கீட்டை ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டும். திறமையை வைத்தும், எந்த ஒரு சமூகத்தையும் ஒதுக்காமலும் கல்வி, அரசியல் உள்ளிட்ட அனைத்து துறையிலும் சரியான முறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்.  பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு என்பதை கொண்டு வந்தாலும் அதுவும் ஒரு வகையில் திறமையை பொருட்படுத்தாத நிலையையே ஏற்படுத்தும்.


எப்படியும் எல்லோரும் இங்கு ஒரு கருத்தை 100% ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவரவர் நிலை பொறுத்து 'கருத்து' என்பது மாறுபடும். இட ஒதுக்கீடும் அப்படியே. ஆனால் பெரும்பாலானோர் கருத்தை கொண்டு இட ஒதுக்கீடுகளை பரிசோதித்து அமைத்தால் அது நன்று‌.


எப்போது சாதி என்ற பாகுபாடு அனைத்து ஜிவன்களிடம் அணுவளவும் தோன்றவில்லையோ அப்போது இட ஒதுக்கீடு என்ற ஒன்றே தேவை படாது.  திறமை வைத்தே அவரவர் தங்கள் நிலையை அமைத்துக்கொள்ளலாம். நாடும் நல்ல திறமை மிகுந்த நாடாக ஆகும். ஆனால் இப்போது நிலவும் காலத்தை கொண்டு இனி வரும் காலங்களை யூகித்து பார்த்தால் இந்த இட ஒதுக்கீடு என்பது அவசியம் நம் நாட்டில் தேவைப்பட்டுக் கொண்டே தான் இருக்கும் என்று தோன்றுகிறது.


குகன்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு