Trending

மனிதநேயம் ஓங்கட்டும் மதவெறி நீங்கட்டும்

 

மனிதநேயம் ஓங்கட்டும் மதவெறி நீங்கட்டும்

மக்கள் நலத்துக்கு மதமா? அன்றி

மதத்தின் நலத்துக்கு மக்களா சொல்வீர்!


திக்கெட்டும் உள்ளவர் யாரும் – ஒன்று

சேராது செய்வதே மதமாகுமானால்

பொய்க்கட்டு நீக்குதல் வேண்டும் – அப்

பொல்லாங்கில் எல்லாரும் நீங்குதல் வேண்டும்.


எக்கட்சி எம்மதத்தாரும் – இங்கு

எல்லாம் உறவினர் என்றெண்ண வேண்டும்.


எல்லா மதங்களும் ஒன்றே – அவை

எல்லாரும் இன்புற்று வாழ்வீர்கள் என்றே

சொல்லால் முழங்குவது கண்டீர் – அவை

துன்புற்று வாழ்ந்திடச் சொல்லியதும் உண்டோ?

------------------------------------------


"ஆன்மீகம் என்ற விருட்சத்தை மையமாக கொண்ட காட்டில் மனிதன் மதம் என்ற வழியை உண்டு செய்து அதை அடைய துணிந்தான். ஓவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்தமான வழியினை செய்து கொண்டார்கள். ஆன்மீகத்தை அடைந்தார்கள். அதனால் தான் மதத்திற்கு மார்க்கம் என்ற சொல்லும் பயன்பாட்டில் உள்ளது. ஆன்மீகத்தை அடைந்தவன் இன்னொரு வழியினை கேலி செய்வதில்லை"


இது தென்றல் இதழின் மதம் மதத்தை தருவதில்லை கட்டுரையில் வெளிவந்த ஒரு துணுக்கு


நான் பள்ளி பயிலும் போது மதநல்லிணக்க நாள் என்றொரு நாளை கடைப்பிடிப்பார்கள். அந்த நாளில் இந்துகள் இஸ்லாமியர் கிறிஸ்தவர் என அனைவோரும் அவரவர்களது மதங்களுக்கேற்ற பாடல்களை பாடி மகிழ்வோம்.


எங்களுக்குள் எந்த மதச்சண்டையும் வந்ததில்லை. "என் சாமி தான் பெருசு… என் சாமி தான் பெருசு" என்று விளையாடும் வயதிலேயும் விளையாட்டாக கூட சண்டைப் போட்டு கொண்டது கிடையாது.


பள்ளியில் பயிலும் எல்லோரும் அத்தனை நெருக்கமாக இருக்கமாட்டோம் தான். இருந்தாலும் பரஸ்பரம் ஒரு சின்ன மரியாதையும் ஒரு புன்னகையும் எங்களுக்குள் பரிமாறி கொண்டே தான் இருக்கும்.


பிரச்சனைகள் வருமேயொழிய நீளாது. அதெல்லாம் பெரும்பாலும் மறக்கும்படியான சண்டைகளாகத்தான் இருக்கும்.


ஆனால் நான் சமீபத்தில் சமூக பிரச்சனைகளாக செவிமடுப்பதில் பத்தில் மூன்று மதப்பிரச்சனையாக தான் இருக்கிறது.


அர்த்தமுள்ள இந்து மதத்தின் அர்த்தம் புரியாத அல்லது புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாத அல்லது புரிந்து கொள்ள அறிவே இல்லாத இந்துகளே நாட்டில் அதிகமாய் உள்ளார்கள் என்பதே எனக்கு சமீபத்தில் தான் விளங்கியது.


உண்மையில் இதனால் எனக்கு கோபமாகவும் வெறுப்பாகவுமே உள்ளது. 


இஸ்லாமியர்கள் தங்கள் ஆண் பெண்களின் கண்ணியத்திற்காக ஏற்பாடு செய்தது தான் ஹிஜாப். ஆம்! ஆண்களுக்கும் தான்


குர்ஆன் (அத்தியாயம் 24, வசனம் 31) ஆண்களுக்கு அடக்கத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்துகிறது: "நம்பிக்கை கொண்ட ஆண்களிடம் அவர்கள் தங்கள் கண்களைக் கட்டுப்படுத்தி, உறுப்புகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கூறுங்கள். அது அவர்களுக்கு மிகவும் தூய்மையானது. நிச்சயமாக, அல்லாஹ் எதைப் பற்றியும் நன்கு அறிவான்"


"உமது மனைவியருக்கும், மகள்களுக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும், அவர்கள் (வெளிநாட்டில் இருக்கும் போது கூட) தங்கள் ஆடைகளை (வெளிநாட்டில்) அணிய வேண்டும் என்று கூறுங்கள்.  மேலும் அல்லாஹ் மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன்."


இஸ்லாமியர்கள் இருக்கும் வீட்டின் பக்கம் நடந்து செல்லும் போதுகூட நம்மை கண்டவுடன் அவ்வீட்டு பெண்கள் ஹிஜாப்பை அணிந்து கொள்வார்கள்.


இரண்டு விஷயங்களை இச்செயல் விளங்க வைக்கிறது. 


ஒன்று, இவள் அடக்கமாக இருக்கிறாள் என்று அந்த பெண் நமக்கு அவள் செயல் மூலம் விளங்க வைப்பாள். இரண்டு, உன் கண்களை கண்ணியத்துடன் அடக்கமாக்கி கொள்க என்பதை ஹிஜாப் நமக்கு உணர்த்தும்.


கோவிலில் தேங்காய் உடைப்பதற்கு எப்படி அறிஞர் பலர் ஆயிரம் காரணங்களை சொல்கிறார்களோ அதுபோலவே ஹிஜாப்பிற்கும் உண்டு.


இது அவரவர் நம்பிக்கை. காலங்காலமாய் வந்துவிட்டால், இது அவரவர் உரிமை.


இதை தடுக்க எவருக்கும் அதிகாரம் கிடையாது. குறிப்பாக எதிர் மதத்தவற்கு கிடையவே கிடையாது.


இந்துகளிலேயே ராஜஸ்தானி இந்துகளிடம் ஒரு பழக்கமுண்டு. வீட்டில் அவர்கள் புடவையுடன் மட்டும் இருக்கலாம் ஆனால் வீட்டாள் அல்லாத வெளிநபர் ஒருவர் புதிதாக வீட்டிற்கு வந்தாலோ அல்லது வீட்டை விட்டு வெளியே சென்றாலோ தங்களது தலையை புடவையால் அவர்கள் முக்காடிட வேண்டும்


தமிழர்களாகிய நீங்களே சில ஹிந்தி-கார பெண்களை முக்காடிட்டு அலைவதை பார்த்திருப்பீர்கள். அவ்வளவு ஏன்! உலக ஞானி ஸ்ரீ கிருஷ்ணனை பெற்ற தேவகி முக்காடிட்டு தான் இருப்பார்.


இதெல்லாம் ஒரு பிரச்சனையாகவே எனக்கு தெரியவில்லை.


'அல்லா ஹு அக்பர்' என்ற முழக்கத்தை எழுப்பிய மாணவி முஸ்கான் கூட மிகவும் தெளிவாக சொன்னார்,


"அந்த பெரும் கூட்டத்தில் அவர்களது காவி துண்டை பார்த்தோ ஜெய் ஸ்ரீராம் முழக்கத்தை கேட்டோ கூட நான் பயப்படவில்லை, அவர்கள் பிரிவினை வாதத்தை தூண்டுகிறார்கள்... அது தான் எனக்கு அச்சத்தை தந்தது.. அச்சம் என்னை விட்டு நீங்கவே 'அல்லா ஹு அக்பர்' என்று முழக்கமிட்டேன்.. அவர்களை எதிர்பது என் நோக்கமில்லை" என்றார்


இந்த சிறிய பக்குவம் பல லட்ச இந்துகளுக்கும் காவி துண்டை மாணவர்கள் தோளில் சாத்திய ஆளுமைகளுக்கும் ஏன் இல்லாமல் போனதோ? 


இந்த சின்ன பிரச்சனைகள் எல்லாம் போக நான் அதிகம் வெறுப்படைந்ததன் காரணமே இந்துத்துவா என்கிற RSS தான்.


கர்நாடக கல்லூரி மாணவர்களையும் பள்ளி மாணவர்களையும் போரட்டத்தில் ஈடுபத்த அதிகம் ஆர்வம் காட்டியது என்னவோ RSS அமைப்புகள் தான்.


உண்மையில் பிஜேபி இன்னும் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தது என்றால், நாட்டில் இஸ்லாமியர்களும் கிறஸ்தவர்களும் சுதந்திரமாக வெளியே நடமாட கூட அஞ்ச வேண்டிய நிலைமை வந்துவிடுமோ என்றும் எனக்கு தோன்றுகிறது.


பெரும்பான்மை மக்களின் மனநிலையை மாற்றினால் நன்றை விதைப்பது எளிதில் சாத்தியம்.


இந்து-முஸ்லீம் என்று பார்வையில் இருக்கும் பிரிவை நீக்கி விட்டால் எல்லோருக்கும் நலம். அதை விடுத்து இவன் நம்பிக்கையை அவன் பழிப்பதும், அவன் நம்பிக்கையை இவன் பழிப்பதுமாகி போனால் சமூகத்தின் ஒருவனுக்கும் நன்மை உண்டாகாது.


இந்த எண்ணத்திற்கு பெரும் நாசினியாய் பிஜேபி இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. பெரும் இனக்குழுவின் ஆதரவு. தனக்கு பிடித்ததை திணிக்கும் எண்ணம். ஒரு துளி கூட ஆன்மீகம் இல்லாத முற்றிலுமான மத வேடம். இதெல்லாம் இவர்களின் வேகமான வளர்ச்சிக்கு இதுவரை துணையானது.


பெரும் இனக்குழுவின் ஆதரவால் இவர்களது கொடும் எண்ணமும் வளர்ச்சியும் இன்னும் அதிகமாகும் என்றெண்ண வேண்டாம்.


'வலியவன் வாழ்வான்' என்ற கூற்று ஒரு மடத்தனமான உண்மை. அதாவது மூடர்களுக்கே அது உண்மை கருத்தாகும்.


'என்னால் யாரும் வீழக்கூடாது' என்று ஒருவன் நினைத்து அது படி வாழ்ந்தாலும் இந்த ஒட்டுமொத்த கூற்றும் பொய்யாகும்.


அதை பொய்யாக்க பிறந்தவர்களாகுக!


இந்து-முஸ்லீம்-கிறிஸ்தவர்கள் மதத்தால் வேறுபடுத்த பட்டிருந்தாலும் இனத்தால் அவர்களும் நம்மவர்களே. 


ஒரு இனக்குழுவின் செயல் தவறுகளை எதிர்க்க வேண்டி அவர்களது நம்பிக்கையையும் நடத்தையையும் மேலும் மேலும் பழித்து விரோதித்தால் அவர்களுக்கு உங்களின் மேல் எரிச்சல் தான் மேலிடுமே தவிர அவர்கள் திருந்த ஒருவழியும் ஏற்படாது அதனால் யாரையும் எதிர்காதீர்கள். 


இந்துத்துவாவினரையும் எதிர்க்க வேண்டியதில்லை. இந்து நெறியிலிருந்து தவறியவர்களை பிற மதத்தினை தாக்கி பேசுவோரை, தாங்கள் தங்களை ஒரு குழுவாக செய்து பிறரை பழித்து நடப்போரை எவ்வாறாவது அவர்களின் அறியாமையிலிருந்து நீக்க பாருங்கள். நாமெல்லாம் ஓரே இனத்தவர்கள் என்று புரிய வைக்க முயலுங்கள்.


குறிப்பாக இந்நிகழ்வை தங்களது தனிப்பட்ட மதச்சண்டையாக்கி ஆங்காங்கே இணையத்தில் குழு குழுவாய் பிரிந்து சண்டையிட்டு கொள்வோர்க்கு இதை சொல்கிறேன்.


கடைசியாக சுவாமி விவேகானத்தர் சொன்னதையும் நினைவு படுத்துகிறேன், 


"நாம் எல்லோரும் இறைவனின் பிள்ளைகள். ஆதலால் எதையும் செய்யக் கூடிய ஆற்றல் நம்மிடம் இருக்கிறது"


தீசன்

தென்றல் இதழ் 37

6 Comments

  1. எவ்வளவு உண்மை நிறைந்த கட்டுரை.இவைகளை புரிந்துகொள்ளாத அந்த புத்தி கெட்ட கூட்டத்தை என்ன தான் செய்வது? - நம் இந்திய நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமை இருக்கிறதே தவிர ஒற்றுமையில் வேற்றுமைகள் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. இந்த விவகாரத்தில் அநியாயம் புரிந்தது.. யாரென்றால்..,, கர்நாடக உயர்நீதிமன்றமும்.. இந்திய உச்ச நீதிமன்றமும் தான்.
    பார்த்தவுடன் தெரிகிற பச்சை தவறை கூட கண்டிக்காமல் விட்டு.. பூசி மெழுகி சமாளிக்க முனைகிறார்கள்..


    பைந்தமிழ் தேர்பாகன் சொன்னது நினைவிருக்கட்டும்..

    படித்தவன் சூதும் பாவமும் பண்ணிணால் ,,
    போவான்.! போவான்..! ஐயோவென்று போவான்!

    ReplyDelete
    Replies
    1. அவர்களும் bjp தான்

      Delete
  3. பெண்ணின் அழகு ஆண் மனதில் சலனத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதால் ஹிஜாப் எனும் மறைவு உடையை அணிந்து கொள்ள நபிகள் வற்புறுத்தினார். இதில் அவர்கள் SAFTY அடங்கியுள்ளது. ஆண்களையும் தவறு செய்ய தூண்டாத மனநிலையை உண்டாக்குகிறது. இதில் காவிக்கு இங்கு என்ன வேலை? தெற்கு மாநிலங்கள் எல்லாம் அந்த கட்சியை உள்ளே விடாமல் தப்பித்து விட்டன. கர்நாடகம் மட்டும் இன்னும் திருந்தாத கர்நாடகமாகவே உள்ளது.

    ReplyDelete
  4. நாம் எல்லோரும் இறைவனின் பிள்ளைகள். ஆதலால் எதையும் செய்யக் கூடிய ஆற்றல் நம்மிடம் இருக்கிறது.... இந்த வரியே என்னை அமைதி ஆக்கியது

    ReplyDelete
  5. இந்த நாட்டய் நாசம் செய்வதே இந்த மதவாதிகள் தான் ��

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு