Trending

5G என்றால் என்ன? 5G போன் வாங்கலாமா?

 What is 5G 

what is 5G? 5G என்றால் என்ன?

சமீபத்தில் நடந்து முடிந்த 2022-23 நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் காவிரி-பெண்ணாறு இணைப்பு திட்டம் பற்றிய அறிவிப்பு தென்னிந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது,  அதேபோன்று மற்றொரு அறிவிப்பு ஒட்டுமொத்த பாரதத்தின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றியது.  அதுதான் 5G பற்றிய அறிவிப்பு!

நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனால் பட்ஜெட்டில்  5G அலைக்கற்றை ஏலம் விடப்படும் என்ற அறிவிப்பு ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் ஹோம், விர்ச்சுவல் கேமிங் போன்றவற்றைப் பயன்படுத்தும் நவீன இந்தியர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.


5G என்றால் என்ன?


தொலைத்தொடர்பு என்பது ரேடியோ அலைகளால் வேலை செய்கிறது என நமக்கு தெரியும் இந்த கண்ணுக்குத் தெரியாத ரேடியோ வேவ் (அ) ரேடியேசன் பல அவதாரங்களை எடுத்துள்ளது.  அதைத்தான் (Generation) தலைமுறை என்கிறோம்.  முதன்முதலில் உருவாக்கப்பட்ட போனில் பயன்படுத்தப்பட்ட ரேடியேசன் 1G அல்லது 1st Generation என்கிறோம். தொழில்நுட்பம் வளர வளர 2G, 3G, 4G என அடுத்தடுத்து பரிமாற்றங்களை கொண்டு தொலைத்தொடர்பு தன்னை மேம்படுத்திக் கொண்டது. இந்த வகையில் இந்த வயர்லெஸ் கம்யூனிகேஷன் எடுக்கப்போகும் அடுத்த அவதாரம் தான் 5G.


5G எப்படி செயல்படுகிறது?


இந்த வயர்லெஸ் டெக்னாலஜி அல்லது எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேசன் எப்படி இயங்குகிறது என்பதை பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.  எலக்ட்ரோ மேக்னடிக் வேவ் கண்ணுக்குத் தெரியாது ஆனால் ஒளியின் வேகத்தில் பயணிக்கும்.  இந்த அலைகளை இரண்டு வழியில் புரிந்துணரலாம்.


1) WAVELENGTH

2) FREQUENCY


வேவ் லென்த் என்பது அலைநீளம்,

ஒரு நொடியில் எத்தனை அலைகளை ஏற்படுத்தலாமோ அதுவே Frequency இதை Hz எனப்படும் அலகு மூலம் அளக்கலாம். ஒரு நொடியில் ஒரு அலை உருவானால் ஒரு Hz என்ற அளவீடு பொருந்தும்.

 ஒரு Hz என்பது ஒரு தகவல் என்றால் அதிக தகவலை ஒரு நொடியில் அனுப்ப Frequency அளவை அதிகரித்து ஒரு நொடியில் பல தகவல்களை அனுப்பி, இணைய வேகத்தை அதிகரிக்க செய்ய முடியும். 

இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால் இப்படி Frequency-யை அதிகப்படுத்தி ஒரு நொடியில் பல தகவலை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்பலாம்.


ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் டேட்டா(Kb,Mb,Gb) அளவு போலவே

Hz -ம் Khz- Kilohedz

Mhz- Megahedz

Ghz-Gigahedz என வகைப்படுத்தப்படுகிறது.


1Khz = 1000 Hz

1Mhz = 1000 Khz

1Ghz = 1000 Mhz


அந்த காலத்தில் பயன்படுத்திய ரேடியோவில் 540 to 1600 Khz பயன்படுத்தப்பட்டது. அடுத்து வந்த நவீன FM ரேடியோவில் 88 to 108 Mhz பயன்படுத்தப்பட்டது.   இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்ட Frequency இப்போது 5G அவதாரத்துக்கு 600 Mhz to 28 Ghz  வரை பயன்படுத்தப்பட உள்ளது. ஆனால் இதில் ஒரு நடைமுறை சிக்கல் உள்ளது.


அறிவியல் விதிப்படி, அலைநீளம் அதிகமானால் இடப்பெயர்வு குறையும், அலைநீளம் குறைந்தால் இடப்பெயர்வு அதிகரிக்கும். 5G யில்  அதிக தகவலை உள்ளடக்கிய அதிக எடையுள்ள ஒரு தகவல்-அலை குறைந்தளவு தூரமே பயணிக்கும் இதற்காக இப்போது உள்ளது போல பல சிறிய ரக செல்போன் டவர்களை அமைக்க வேண்டியிருக்கும்.


உலக இணையம் பற்றிய கதைகளில்  இந்தியாவின் கதையே வேறு 2009ஆம் ஆண்டே உலகிற்கு 4G  அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது.  ஆனால் முதன்முதலாக இந்தியாவுக்கு வந்தது 2012ல் தான் அதுவும்  அறிமுகம் மட்டுமே.  இன்றுவரை பிஎஸ்என்எல் இந்தியாவின் பல பகுதிகளில் 4G-யையே அறிமுகம் செய்யவில்லை. இதற்கு காரணம் இந்தியாவில் ARPU (Average Revenue Per User) குறைவாக உள்ளது தான் என டெலிகாம் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.


4G வரைக்கும் இந்தியா, மற்ற நாடுகளிடம்  தான் தொழில்நுட்பங்களை பெற்றது.  ஆனால் 5G அப்படியல்ல. தற்போது இந்தியாவில்  5G-க்கான சந்தை மிகப்பெரியது. ARPU-வும் அதிகமாகிவிட்டது. 


வெளிநாட்டிலிருந்து தொழில்நுட்பங்களை வாங்குவதால் காப்புரிமைத் தொகை அதிகமாக செலுத்த வேண்டி உள்ளது.   இதை தவிர்க்க இந்தியாவிற்கான 5G  தொழில்நுட்பத்தை இந்தியாவே  உருவாக்குகிறது.  ஆம், இதற்காக MIMO (Multi Input Multi Output), ஸ்மால் செல் டெக்னாலஜி, மில்லிமீட்டர் அலைகள் மூலம் இந்தியா இலக்கை அடைய முயற்சிக்கிறது.  இந்த அலைகள் மூலம் குறுகிய தூரத்திற்கு மட்டுமே தகவல்களை அனுப்ப முடியும்.  இதனால் மேற்சொன்னது போல பல சிறிய ரக டவர்களை அமைக்க வேண்டி வரும். இதற்கான ஆராய்ச்சி 2018 ஆம் ஆண்டு முதல் சென்னை ஐஐடி, கான்பூர் ஐஐடி போன்ற நிறுவன மின்னியல் துறை ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, குருகிராம், சண்டிகர், டெல்லி, ஜாம்நகர், அகமதாபாத், ஹைதராபாத், லக்னோ, புனே, காந்திநகர் ஆகிய 13 பகுதிகளில் ஆராய்ச்சி செய்யப்பட்டு,  நிறுவ தயார் நிலையில் உள்ளது.


இந்தியாவிற்கு 5G தேவையா?


இன்றளவும் 2G பியுசர் போனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ளனர். ஆனால், 4G ஸ்மார்ட்போன் வந்த சமயத்தில் இன்னொரு தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்தது.  அதுதான் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IOT) , கேட்ஜெட்ஸ், எலக்ட்ரானிக் பொருட்கள், மின்னணு இயந்திரங்கள் அனைத்தையுமே, இணையத்தின் வாயிலாக இயக்கும் புதிய தொழில்நுட்பம். எடுத்துக்காட்டாக ஸ்மார்ட்ஹோமைச்  சொல்லலாம்.  ஸ்மார்ட்போன் போல இவை  குறைவான டேட்டாவை பயன்படுத்துவதில்லை. ஒரு நொடியில் அதிக டேட்டாவை வழங்கினால் மட்டுமே மிக சரியாக இயங்கும்.  


ஓட்டுனர் இல்லாத கார், தானாகவே இயங்கும் வேளாண் கருவிகள், ரோபோட்-அதை சார்ந்து இயங்கும் பொருட்கள், விர்ச்சுவல் கேமிங் போன்ற மனித இனத்தின் இணைய வேகத்தின் அடுத்த தேவைதான் 5G.


5G போன் வாங்கலாமா?


5G ஒன்றும் புதிய தொழில்நுட்பம் கிடையாது.  4Gயின்  மெருகேறிய வடிவம் தான் 5G அதையும் இந்தியாவுக்கு இந்தியாவே தயாரிப்பதுதான் இங்கு ஹைலைட்.   5G-யின் தரத்தை உறுதி செய்ய சர்வதேச தகவல் தொடர்பு யூனியன் (ITU) உள்ளது.   இது 5G அலையானது ஒரு நொடியில் 10GB தரவுகளை (DATA) பெற்றிருக்க வேண்டும் என சொன்னால், அந்த அளவை இந்தியாவில் கொண்டுவர தெருவுக்கு குறைந்தது இரண்டு சிறிய ரக டவரையாவது வைக்கவேண்டும்.  


இந்திய சந்தைகளில் பல சீன, கொரிய நிறுவனங்கள் தங்களது 5G ஸ்மார்ட் போன்களை ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டன.  எனினும் மேற்சொன்ன 13 நகரை தவிர கடைகோடி இந்தியாவையும் 5G சென்றடைய இன்னும் காலம் பிடிக்கும்.   எனவே 5G  ஸ்மார்ட்போன் வாங்க துடிக்கும் ஆர்வலர்கள் கொஞ்சம் சிந்தித்து செயல்படவும்.

👇 இன்றைய இதழை முழுமையாக படித்திடுங்கள் 👇
தென்றல் இதழ் 39

1 Comments

  1. பயனுள்ள புதிய தகவல்கள்.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு