Trending

களவரங்கம் - சிறுகதை

 களவரங்கம்



அன்று மார்ச் 21. உலக கவிதைகள் தினம். காஞ்சிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஓர் பெரிய வசதிமிக்க அரங்கத்தில் அன்று 'கவியரங்கத்திற்கு' ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


சுமார் இரண்டாயிரம் பேர் அமரக்கூடிய அந்த அரங்கமானது, அன்று கவியரங்கமானதால் காற்று வாங்கிக் கொண்டிருந்தது.


விழாவை ஏற்பாடு செய்திருந்த புலவர். கா. துரைவேலன்  அரங்கத்தின் வெளியே நின்று கொண்டு அலட்சியமாய் சாலையில் அலைந்து கொண்டிருப்போரை 'டீ வடையை' காட்டி உள்ளே இழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்.


கவியரங்கம் தொடங்க இன்னும் சில நிமிடங்களே இருந்தது. தலைப்பு: 'பாவம்' ஆகும்.


கோகுலக்கவிஞர். கல்யாணராமன் அரங்கத்தின் நடுவர் மற்றும் தலைவர் பொறுப்பை ஏற்று, நாற்காலி அவையின் மத்தியில் ராஜாவாக அமர்ந்திருந்தார்.


மேடையின் வலது புறத்தில் இரண்டு நாற்காலிகளும் இடது புறத்தில் இரண்டு நாற்காலிகளும் போடப்பட்டிருந்தது. 


அந்நாற்காலிகளில் முறையே, 

'பொய்' என்ற தலைப்பில் தமிழ்வேனி சகி.கலா அவர்களும், 'காமம்' என்ற தலைப்பில் புது கவிஞர் பவளச்சிப்பி அவர்களும், 'துரோகம்' என்ற தலைப்பில் இயக்குநர் நந்தரும் அமர்ந்திருந்தார்கள்.


அவையோர் மட்டுமல்லாமல் அந்த நான்காவது நாற்காலியும், தன் மேல் அமர்ந்து கவிபாட வருவோருக்காக காத்துக் கொண்டிருந்தது.


'பளிச் க்ளிச்' என்ற கேமராவின் ஒளி(லி)களுடன் அரங்கினுள்ளே ஒர் அரசியல்வாதி நுழைந்தார். நாற்பது வயது இருக்கக்கூடிய அவர் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டியுடன் இடக்கையில் ஒரு சிறிய கை துண்டையும், வலக்கையில் ஒரு சிறிய காகித துண்டையும் வைத்திருந்தார்.


மடையை உடைத்த வெள்ளம் போன்று அரங்கில் நுழைந்த அவர், திடுதிடுவென மேடையின் முன்னே வந்து நின்று கைகளை கூப்பிய வண்ணம்,


"ஐயா...காலதாமதமாக வந்ததற்கு மன்னித்துவிடுங்கள்" என்றார் நடுவரை பார்த்து.


மெல்ல சிரித்த கவிஞர் கல்யாணராமன், 'மன்னித்தோம், உங்கள் இருக்கையில் அமருங்கள்' என்றார்.


மேடையின் கீழே நின்றுக்கொண்டிருந்த அந்த அரசியல்வாதி, கணநேரத்தில் வந்த கனமழை போல படி மேல் ஏறி, கூடியிருந்த மக்களை கண்டு கைகளை தலைமேல் தூக்கி, பெரியதொரு வணக்கத்தை வைத்து 'களவு' என்று குறிப்பிடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.


'அமிர்த நாதனும் வந்துவிட்டார் கவியரங்கத்தை தொடங்குங்கள்' கூட்டத்திலிருந்து ஒரு கூச்சல் வந்தது.


கவியரங்கம் தொடங்கியது. பொய்யினை பாடவந்த சகி.கலா அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பை மிக நேர்த்தியாக கையாண்டார்கள்.


கவிஞர் பவளச்சிப்பியோ, மன்மதனே தோற்குமளவிற்கு 'காமத்தை' பாடி அமர்ந்தார்.


இயக்குநர் நந்தர் 'துரோகம்' என்ற தலைப்பினை பயன்படுத்திக்கொண்டு சமீபத்தில் அமிர்த நாதன் தன் தாய்கழகத்திலிருந்து தற்போது தலைவனான தந்தைகழகத்திற்கு மாறி துரோகம் செய்ததை 'இலை மறை, காய் மறை' யாக பாடினார்.


இயக்குநர் நந்தர் மறைமுகமாக அமிர்த நாதனை தாக்கும் போதெல்லாம், மெல்லிய புன்னகையோடு நடுவர் அமிர்தநாதரை நோக்கினார்.


அமிர்த நாதனோ 'இடி விழுகும் இடத்தினிலே செவியில்லா செவிடு' போல் சலனமின்றி, அரசியல்வாதிகளுக்கே உள்ள அந்தஸ்தோடு அமர்ந்திருந்தார்.


"அடுத்து, களவென்ற தலைப்பினிலே கவிபாட வருகிறார் நம் அமிர்தம்" கோகுலகவிஞர் அறிவித்தார்.


கையில் மடக்கி வைத்திருந்த துண்டு சீட்டை பிரித்துக் கொண்டே களவு பாட எழுந்தார் அமிர்த நாதன்.


நடுவினில் அமர்ந்திருந்த நடுவர் தன் மூக்குக் கண்ணாடியை நிமிர்த்தியபடியே நாதன் பிரிக்கும் சீட்டை தன் கடைக் கண்ணால் கண்டார். ஆச்சரியம்; காரணம், அச்சீட்டில் பிள்ளையார் சுழியைத் தவிர வேறொன்றும் இல்லை.


ஒன்றுமில்லாத வெற்று வெள்ளைத்தாளை விரித்துக் கொண்டே கவிபாட வந்துவிட்டார் அமிர்த நாதன். நடுவரின் கண்கள் விரிந்த அக்கணத்திலே தன் கவிதையையும் தொடங்கிவிட்டார்,

___________


கலைவாணி அருள்கொண்ட

களவாணிகள் மத்தியிலே

கவிபாட வந்த

நானுமோர் களவாணி


இங்கு கவிபாட வந்துவிட்டான்

களவாணி - காண

கலைவாணி; சற்றே

களம் வா நீ!


பொய்பாட பதுமையொன்று

புறப்பட்டு வந்ததென்று

கட்டுண்ட பகீரதனே

அதிரதன் போல் வந்தானாம்!


அது கட்டுகட்டாய்

கட்டிவிட்ட

கட்டுகளை

கேட்டுவிட்டு

காதுகளே புளிக்கிறது

என்றானாம்


கல்யாணராமனே….

அதுவே கவிக்களவு!

________


சிப்பிக்குள்ளே நல்ல

முத்துவுண்டு!

நல் சிப்பியே

பவளமாய் பார்த்ததுண்டோ?


கலவிக்குள்ளும் நல்ல

களவு உண்டு - அதை

கூறவே இந்த கவிஞன்

வந்தான்


களவுக் கலவியை

கேட்டதுண்டா?

அதை குறுந்தொகை

கண்முன்னே காட்டிவிடும்


காதலின் போதே

களவு வரும் - அது

கண்ணாலே கோதையை

திருடிவிடும்!


மாதர்கள் கூட

களவு செய்வர்

உள்ள காதலை

இல்லென்று கூறிடுவர்


காமனை தோழிகள்

கண்டிடினும் - காதல்

மூடிமறைப்பதில் 

வென்றிடுவர்


அனுமதியின்றி

அள்ளப்படும்

அனைத்துமே

களவினில்

சேர்க்கப்படும்


அதில் 

அரிவையின் காதலும்

அடங்கிவிட்டால்

காமமும் களவாய்

ஆகிவிடும்!

__________


துரோகத்திற்கென்றே

ஒருவர் வந்தார்

அவர் சொன்னதை

எல்லாம் நானறிவேன்


நேருக்கு நேரே

மோதிவிட்டார் - அவரை

'ஆணவர்' என்று

சொல்லலாமா?


திரைப்படம் என்பதே

பெருந்திரட்டு - அதை

திரட்டியவன் பெறுகிறான்

கைத்தட்டு


அதிலும் நடக்குது

சில திருட்டு

அந்த திருடனும்

பெறுகிறான்

பாராட்டு….


நிற்க……


தமிழ் மணம் வீசும்

இம் மாநிலத்தில்

அறமே அகிலம்

வெல்கிறது!


அவ்வறங்கள் கூட

சொல்கிறது,

களவை கயமை

என்கிறது!


அதன்படி,


காரிய களவு

தந்திரமாம்

களவே காரியம்

தரித்திரமாம்


களவே காரியம்

கேவலமாம்

அதை செய்தவன்

தினம் தினம்

சாகனுமாம்!


பாவத்தில்

உயர்ந்ததை

பாடவந்தேன்!

அந்த பாவத்தை

உயர்வாக்க

எண்ணமில்லை….


கேடிலும் கேடு நான்

களவு என்பேன்! - சிறு

துளியானாலும் அதை

தவறு என்பேன்!


வள்ளுவம் சொல்லும்

களவு வேண்டாம் - நல்ல

வாய்மையும் சொல்லும்

களவு வேண்டாம் - தெள்ள

தமிழனும் சொல்வான்

களவு வேண்டாம் - உள்ள

நெஞ்சமும் சொல்லும்

களவு வேண்டாம்!


மேலும்,


தொழில்

களவை விரும்பும்

தகையோர்க்கு,

தண் தமிழை விரும்ப

தகுதியில்லை


அதை

மறுப்போன் சொல்லை

குறை சொல்ல

என் மனதிற்கென்றும்

விருப்பமில்லை


இறுதியாக,


குறுங்களவோ

பெருங்களவோ

களவில் அளவு

இல்லை!


இருப்பவனோ

இரப்பவனோ

திருட்டு என்றும்

வேண்டாம்!

________


தாமதத்தின்

தண்டனையாய்

கடை வாய்ப்பை

தந்தாலும்


கவியாலே

கலா செய்து,

பவள சிப்பி

கோகுலமென

நந்தனம் புரிந்தாலும்


தமிழென்ற அமிழ்தம்,

எனக்கென்றும் 

அமிர்தமே…..!


நன்றி!

_____________


அமிர்தநாதனின் இக்கவிதையை கேட்ட அரங்கமே பெருத்த கைத்தட்டி கூச்சல் போட்டது. கையில் இருந்த காகிதத்தை மடித்தபடியே, இருக்கையில் வந்து அமர்ந்தார் அமிர்தநாதன்.


நடுவர் கல்யாணராமன் பேசத்தொடங்கினார்,


"இது ஆணவக்கவிதை, இந்த ஆணவக்கவிதை பலரின் கொட்டுக்கு சரியான குட்டு வைத்து விட்டது, இருப்பவனோ இரப்பவனோ திருட்டு என்றும் வேண்டாம் என்னும் வரிகள் இந்த கவிதைக்கு மட்டுமல்ல அரசியல் தலைவரான உங்களுக்கும் அழகு சேர்க்கிறது. வாழ்க! வாழ்க!" 


மேலும் நடுவர் கவியாலே ஆன ஒரு நீண்ட முடிவுரையை கூறி கவியரங்கத்தை முடிவு செய்தார்.


கூட்டங்கள் கலைந்தது. அமிர்தநாதனும் கட்சி வேலையாக காஞ்சி அலுவலகத்திற்கு சென்றுவிட்டு மதியம் மூன்று மணி போல களைப்புடனே தனது வீடு வந்து சேர்ந்தார்.


"அடியேய்….ரேவதி, மதியம் என்ன? சீக்கரம் கொண்டா… பசி வகுத்த கிள்ளுது"


அமிர்தநாதனின் மனைவி ரேவதி, சமையல் வேலையில் ஆழ்ந்திருந்ததால் நாதனின் இக்குரலை அலட்சியம் செய்தார். அதே வேளையில் வெளிய சென்றிருந்த அவரது மகன் காந்தி வீட்டினுள் நுழைந்தான்.


"காந்தி, உன் லேப்டாப்ப எடுத்துவா...எதாவது புது படம் பாப்போம்"


"அதெல்லாம் முடியாதுப்பா Subscription விலைலாம் ரொம்ப அதிகம்"


"Subscription-ஆ? எவன் இப்ப காசு கட்டி பாக்க போறதா சொன்னா? என் கூட்டாளி ஒருத்தன் காசு கட்டாம நெட்டுலேந்து எப்புடி படத்த திருட்டுத்தனமா டவுன்லோடு பண்ணுறதுனு எனக்கு சொல்லி கொடுத்துருக்கான்… நீ கொண்டா நான் ஏத்துறேன்" என்ற அமிர்தநாதன் தன் மகன் முன்னே ஓர் சாதனையாளனாகவே கருதிக்கொண்டார்.


அரங்கத்தில் தன் தந்தை பேசிய அறத்தை எல்லாம் அறியாத அந்த பிள்ளை, புதுப்படம் பார்க்கப் போகின்ற ஆவலில் தன் கணினியை எடுக்க துள்ளிக்கொண்டோடியது.


தீசன்

👇 இன்றைய இதழை முழுமையாக படித்திடுங்கள் 👇
தென்றல் இதழ் 41

3 Comments

  1. எல்லாரும் அப்புடி தான் பாக்குறாங்க! இதெல்லாம் ஒரு தப்பா?(பல மாதங்களுக்கு முன்பு நானே கேட்டு இருக்கிறேன். தற்போது திருட்டு தனமாக படம் பார்ப்பதில்லை; நண்பனின் அறிவுரையினால்)என்று கேட்பார்கள். பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தாலும் ஆபத்து தான் ஒரு லிட்டர் விஷம் கலந்தாலும் ஆபத்துதான். இது போல இந்த களவும் களவுதான் என்று உங்கள் சிறுகதை மூலம் சிறப்பாக சொன்னீர்.

    ReplyDelete
  2. நேருக்கு நேரே மோதிவிட்டார் அவரை "ஆணவர்" என்று சொல்லலாமா?




    மறுப்போன் சொல்லை குறைகூற என் மனதிற்கென்றும் விருப்பமில்லை!

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு