Trending

வேலி இல்லா பலா - குறுந்தொகை 18 சிறுகதை

குறுந்தொகை 18

வேலி இல்லா பலா                                        

பனி சூழ் காலைநேரம், அந்த வெண்ணிற பனியில்;வானுயர் இருந்த மலை தேவதை மறைந்தே போனாள். குளிர்ந்த அந்த சூழலில், கனகா சூடான தக்காளி சாதத்தை கையளவே உள்ள டிபன் பாக்ஸில் அழுத்தினாள்."சூடோட வைக்காதம்மா… நீர்த்து ஊசி போயிரும். ஆறவைத்து மூடிக்க" என்று அம்மா கூற. அதை கேளாமல் டிபன் பாக்ஸை கை பையில் வைத்துக்கொண்டு அன்ன நடை போடாது விரைவாக நடந்தாள் பேருந்து நிறுத்தத்தை நோக்கி.


பேருந்தும் இரு கண்களின் வெளிச்சத்தை வைத்து பனிசூழ்ந்த பாதையை அறிந்து இவள் அருகில் வந்து நின்றது. பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தாள்‌. நடத்துனரிடம் பயண சீட்டை பெற்றுக்கொண்டு பாதுகாப்பாக மடித்து பையில் வைத்துக்கொண்டாள். பின் அவள் மனதில் வேறேதோ நினைத்திருக்க கண்கள் மட்டும் வழக்கம் போல் வேடிக்கை பார்த்து வந்தது. கரிய நிறம் ஆனாலும் தெய்வக்கலை பொருந்திய முகம். குணமும் ஒன்றும் குறைந்தது அல்ல. வயது இருபத்தி ஆறு தாண்டிய நிலையிலும் இன்னும் கழுத்தில் மஞ்சள் கயிற்றை சுமக்கவில்லை‌. கனகா கன்னி பெண்ணாக இருந்து வந்தாள்.


அடுத்த நிறுத்தத்தில் பேருந்து நின்று மக்களை ஏற்றிக்கொண்டு மீண்டும் கிளம்பியது. "அம்மாடி கனகா..?" என்ற மொழியுடன் ஒரு கிழ பருவ கரம் கனகாவின் தோளில் கைவைத்தது. சட்டென தலை திருப்பி பார்த்தாள். தெரிந்த கிழ நண்பி தான்-பெயர் ராஜம். அதே ஊர்காரி.தோற்றத்தில் முதுமை ஓங்கினாலும் குரலிலும் தோரணையிலும் இளமை மீதி இருந்தது. கனகாவின் அருகில் அமர்ந்தாள். பயணச்சீட்டை பெற்றுக்கொண்டு. கனகாவை நோக்கி "ஏம்மா… நானும் பார்த்துக்கிட்டு வாறேன்! எதையோ நனைச்சிக்கிட்டு வேடிக்கை பாத்துக்கிட்டு வாற?"


"இல்லமா ஒன்னும் இல்ல"


"ஆமா… நானும் உன் கூட ஒரு மாசமா இதே பஸ்ல வேலைக்கு வாறேன். எனக்கு தெரியாதா? குடும்பத்துக்காக வேலைக்கு போற, அதெல்லாம் சரிதான். காலாங்காலத்துல கல்யாணத்த பண்ணிபுடு! அதுக்கப்புறமா உன் குடும்பத்துக்கு உழைச்சிகொட்டு, உன்னையும் உன் குடும்பத்துயும் புரிஞ்சிகிடுற மாப்பிளையா புடிச்சிக்க!


என்ன சரிதான?" இவ்வாறாக ராஜம் பாட்டி உரத்த குரலில் பேச, அருகில் அமர்ந்திருப்பவர்களுக்கு ஒட்டுக் கேட்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. 'எப்பதான் இந்த பாட்டி இந்த பேச்சு நிறுத்துமோ' என கனகா மனதில் நினைத்தது ராஜத்திற்கு கேட்டது போல் "நான் வேற எதையாவது பேசிக்கிட்டே வருவேன்" என்ற புலம்பலுடன் ராஜம் உரையாடலை முடித்தாள். கனகாவுக்கு துணையாக ஒரு தோழி போலவே ராஜம் பழகி வந்தாலும் இந்த கல்யாண பேச்சு மட்டும் கனகாவுக்கு பிடிக்கவில்லை. மற்றபடி  ஒரு நட்புணர்வு இருவருக்குள்ளும் இருந்தது. உரையாடலை முடித்த கையுடன் பழுப்பு நிற பழைய நெகிழி பையில் இருந்து இரு பச்சிளம் வெற்றிலையில் சுண்ணாம்பிட்டு அதில் சீவலையும் புகையிலையையும் வைத்து மடித்து கடவாய் பற்களில் சொறுகி அசைபோட ஆரம்பித்தாள் ராஜம் பாட்டி. சிறிது நேரம் கழித்து இறங்க வேண்டிய இடமும் வந்தது.


ராஜம் பாட்டியை கைபிடித்து இறக்க வேண்டிய அவசியம் இல்லை. அவளுக்கு ஏறி இறங்கும் திராணி இருந்தது. விறுவிறுவென ராஜம் பேருந்தை விட்டு கீழே இறங்கினாள். அதை தொடர்ந்து கனகாவும் இறங்கினாள். இருவரும் ஒன்றாக அரை கிலோமீட்டர் தூரம்  நடந்து சென்று, அகண்டு நீண்டிருந்த அடுக்குமாடிகளை கொண்ட பிரபல துணிக்கடையில் நுழைந்தனர். வேலையும் ஆரம்பமானது. மதிய நேரம் இருவரும் ஒருவர் உணவை ஒருவர் பறிமாறிக் கொண்டு பசியை நோக்கினர். மாலை நேரம் கடை முதலாளியின் மகன் கடைக்கு வர, பணியாளர்கள் அனைவரும் தங்களையும் கடையையும் ஒழுங்குபடுத்தி கொண்டனர். முதலாளி மகனின் கண்ணில் ராஜம் பாட்டி பட, அவர் ராஜத்தை நெருங்கினார்.


"என்ன பாட்டி வேலையெல்லாம் கஸ்டமா இருக்கா?"


"இல்லங்கையா… உங்க புண்ணியத்துல" என்றாள். பிறகு ராஜத்தின் அருகில் நின்று கொண்டிருந்த கனகாவை ஒரு கணம் தான் பார்த்தார். அவள் விழி இவருக்கு ஆயிரம் செய்திகள் சொன்னது போல இருந்தது. அவர் சென்ற பின் கனகாவை நோக்கி ராஜம் " ரொம்ப நல்ல பையன். எப்புடி விசாரிக்குது பாரு!"


"ம்ம்…"


"ஒரு மாசத்துக்கு முன்னாடி இவர் ட சொல்லி வேலைக்கு சேத்து உட்ட, அப்ப வந்தவர், இப்ப தான் கடைக்கு வாறாரு" இப்படியாக மக்களுக்கு துணிகளை விற்றும் மக்கள் இல்லாத நேரத்தில் ஊர் கதைகளையும் பேசுவதுமாக இருக்க வேலை நேரம் முடிந்தது. ராஜம் பாட்டி பேருந்தை பிடிப்பது வீட்டுக்கு செல்வதற்காக ஆயத்தம் ஆகி கனகாவை அழைத்தாள்.


"இல்லமா, நீங்க போங்க நான் லாஸ்ட் பஸ்க்கு வரேன்"


"ஏன் அம்மாடி?"


"இல்ல பார்சல்ல வந்த துணிய பிரிச்சி வைக்க வேண்டிய வேலை  இருக்கு"


"அப்ப நானும் லேட்டாவே போறேன்"


"இல்ல… இல்ல… நீங்க போங்க!"


"சரி, பஸ்ச விட்டுடாதா அப்பறம் கஸ்டம்!. பத்தரமா வீடு வந்து சேரு" என்று கூறி ராஜம் பாட்டி கிளம்பினாள்.


அவர் சென்ற பிறகு கடையில் இருந்து வெளி வந்த கனகா சிறிது தூரம் நடக்க அங்கு ஒர் மரத்தின் கீழ் ஆடம்பர இரு சக்கர வாகனத்தில் ஒர் ஆடவன் இவள் வருகையை எண்ணி வழி முழுதும் விழி செலுத்தி பார்த்துக்கொண்டிருக்க இவள் வருகை அவனுக்கு  மகிழ்ச்சி தந்தது. மூன்று வருடமாக காதலித்துக் கொண்டிருந்தாலும் இந்த ஒரு மாதம் ஒருவரை ஒருவர் காணாமல் இருந்தது காதல் வலியை மேலும் வலுப்படுத்தியது‌. அவளை அவன் காண வராததை எண்ணி அவள் கோவிக்க இவன் சமாதானம் செய்ய அப்புடியே காதல் சமாச்சாரம் சில நிமிடங்கள் நீடித்தது.பின் அவளை வண்டியில் ஏற்றிக்கொண்டு பேருந்து நிறுத்தத்திற்கு சற்று முன்னதாகவே இறக்கிவிட்டான். பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ராஜம் பாட்டிக்கும் அது துணிகடை முதலாளியின் மகன் கபிலன் தான் என்று தெரிந்தது. கனகா பேருந்து நிறுத்தத்திற்கு வந்தாள். ராஜம் பாட்டி நிற்பதை கண்ட‌ அவளுக்கு 'பக்' என்றது. சட்டென ராஜத்தை நோக்கி "ஏம்மா பஸ்ச விட்டுடிங்களா?"


"ஆமாம்மா… நான் வாரத்துக்குள்ள பஸ் போயிடுச்சி அதான் இங்கனையே காத்துகிட்டு நிக்கிறேன்!, ஆமா முதலாளி பையன் தான் உன்ன இறக்கிவுட்டது?" என புலன் விசாரணையை ராஜம் தொடங்கினாள்.


"ம்ம்.. ஆமாம்மா. அது… அது வந்து.. ரொம்ப லேட் ஆகிட்டுனு சொன்னேன் அதான் அவரே வந்து இறக்கிவிட்டுட்டு போறாரு"


"சரிமா… சரிமா" என்று வாய் மொழி விசாரணையை நிறுத்தினாலும், ராஜம் - சிந்தையில் விசாரணையை விரைவாக்கினாள். பேருந்தும் பெருத்த ஒலியை எழுப்பிக் கொண்டு வந்து நிக்க இவரும் ஏறினர்.


ராஜம் பாட்டி கனகாவின் நடவடிக்கைகளை ஆராய ஆரம்பித்தாள். ஒரு மாத கால முடிவில் கனகாவும் கபிலனும் பல வருடங்களாக காதலிக்கின்றனர் என்பதை முழுமையாக அறிகிறாள். ஆனாலும் உரியவர்களிடம் இருந்து உண்மையை பெற வேண்டி ஒரு வழியாக கனகா வாயிலிருந்தே அனைத்து செய்தியையும் அறிந்து கொண்டாள். ஆனால் இதை பற்றி கபிலனிடம் ஏதும் கேட்க வேண்டாம் என்றும் இந்த விசயத்தை யாரிடமும் கூற வேண்டாம் என்றும் வேண்டிக்கொண்டாள் கனகா. 


மற்ற கிழவிகளை போல புரளி  பேசும் பழக்கம் ராஜம் பாட்டியிடம்  இல்லாததால் இந்த விசயம் ஊருக்குள் காட்டுத்தீ போல் பரவாமல் ராஜத்தின் இடையே மட்டும் புகைவிட்டுக்கொண்டிருந்தது‌.


இப்படியே பல மாதங்கள் சென்றது. ஆனால் இவர்கள் காதல் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவில்லை (அதாவது திருமணத்தை நோக்கி).இவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வது நம் கடமை எனக் கொண்டாள் ராஜம் பாட்டி.


ஒர் நாள், கனகா அவரை சந்தித்த பிறகு தான் வருவேன் என்று கூற ராஜமும் வழக்கம் போல தனியே ஊருக்கு செல்ல பேருந்து நிறுத்தத்தை நோக்கி சென்றாள். ராஜம் சென்ற பிறகு கனகா காதலனுடன்  உரையாடி விட்டு கடைசி பேருந்தை பிடிக்க கபிலனுடனே வந்திறங்கினாள். கபிலனும் அவளை இறக்கி விட்டு திருப்பினான். சிறிது தூரம் செல்ல அவனது பைக்கை நோக்கி ஒர் கை நிறுத்தும் சைகையை ஒர் உருவம் காட்டியது; ஆம் அது ராஜம் பாட்டி தான். கனகாவின் வேண்டுகொளையும் மீறி கபிலனிடம் பேச வந்தாள். கபிலன் வண்டியை நிறுத்தினான்.


"தம்பி உங்களோட கொஞ்சம் பேசனும்"


"சொல்லுங்க பாட்டி"


"தம்பி உங்க காதல் சமாச்சாரம் எனக்கு தெரியும்" இதை கேட்ட கபிலன் பெரிதாக அதிர்ச்சி அடையவில்லை. இந்த செய்தி தன் தந்தைக்கு தெரிந்தாலே கவலை கொள்ளமாட்டான். யாரோ ஒரு கிழவிக்கு தெரிந்ததால் ஒன்றும் பாதகமில்லை. சாதாரணமாக "ம்" என்றான்.


"பல வருசமா காதலிக்கிறீங்க, சட்டுபுட்டுனு அவள கல்யாணத்தை பண்ணி புட வேண்டியது தான?"


"இல்ல பாட்டி, அது நான் சொந்தமா பிஸ்னஸ் பண்ணி முன்னுக்கு வந்து செட்டில் ஆன பிறகு தான் மேரேஜ் பண்ணனும்னு முடிவு பண்ணி இருக்கேன்! அதெல்லாம் உங்களுக்கு புரியாது"


"கண்ணு, நான் ஒன்னு சொன்னா என் மேல வருத்தபடகூடாது!?. கனகாவுக்கு தெரிஞ்சவங்குற முறையில சொல்லுறன்"


"சொல்லுங்க"


" நீ ஆம்பள பைய!, எத்தன வயசுல வேணாலும் கல்யாணம் பண்ணிகலாம். ஏன் பண்ணாம கூட இருக்கலாம். நீ சிட்டில இருக்குறவன். ஆனா அவ அப்படி இல்ல. வயசு கல்யாண வயச தாண்ட போகுது. ஊர் வாய் ஒவ்வொரு மாதிரி பேசிக்கும்!. போறவ வரவ வாயில எல்லாம் பூந்துபுறப்பட வேண்டியதா இருக்கும். சீக்கிரம் ஒரு நல்ல முடிவா எடு" என்றாள்.


அமைதியுடன் கேட்டவன் சிந்தனை செய்ய ஆரம்பித்தான்.


"அப்பாடி, கடைசியா ஒன்னு சொல்லுறன். அவ வேலி இல்லாத பலா பழம் மாதிரி! யாரு கண்ணுல பட்டாளும் ஆபத்து. யாரும் கண்டுக்காம இருந்தாலும் ஆபத்து! சிந்தன பண்ணி பாரு?" என்று சொல்லி ராஜம் பாட்டி புறப்பட்டாள். ராஜம், கனகாவின் நிலையை உவமையாக கூறினாலும் கபிலனுக்கு உண்மை புரியும் படி கூறிச்சென்றுவிட்டாள்.


குகன்


குறுந்தொகை 18 பாடல்


வேரல் வேலி வேர் கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே? சாரல்
சிறு கோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே

கபிலர்  பாடல் 

5 Comments

 1. நான் ரசித்த இடங்கள்,

  "பேருந்தும் இரு கண்களின் வெளிச்சை வைத்து பனிசூழ்ந்த பாதையை அறிந்து இவள் அருகில் வந்து நின்றது."

  "மற்ற கிழவிகளை போல புரளி பேசும் பழக்கம் ராஜம் பாட்டியிடம் இல்லாததால் இந்த விசயம் ஊருக்குள் காட்டுத்தீ போல் பரவாமல் ராஜத்தின் இடையே மட்டும் புகைவிட்டுக் கொண்டிருந்தது

  "ஊர் வாய் ஒவ்வொரு மாதிரி பேசிக்கும்!. போறவ வரவ வாயில எல்லாம் பூந்துபுறப்பட வேண்டியதா இருக்கும். சீக்கிரம் ஒரு நல்ல முடிவா எடு"

  இலக்கிய கதைகளுக்கென்று ஓர் இலக்கணம் இருந்தால் அது இந்த கதையை தான் உதாரணமாகக் கொண்டிருக்கும்

  சுருங்கக்கூறின்; அருமை

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. கபிலர் குறிஞ்சித் திணை பாடுவதில் வல்லவர்.

  குகனார் குறிஞ்சிக் கதை புனைவதில் வல்லவர்.

  சமீபகால தமிழ் படங்களில் மதுபானபுட்டிலை திறக்கும்காட்சிகளைமட்டுமே ஏகபோக கலாச்சாரமாக காட்டி வருகிற வெறுக்கத்தக்க நிலையில்...


  ஏறத்தாழ மறைந்து வருகிற மரபு வழக்கமான
  ராஜம் பாட்டி வெற்றிலைபோடுகிற காட்சியை காட்டிய பாங்கு,, தாம்பூலம் தரித்து பழகாதோரையும் ஒருதடவை போட்டு பார்க்க ஆவலூட்டிவிடும்.

  ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு