Trending

ராமரின் ராசி | கம்பர் என்றொரு மானுடன்

கம்பர் என்றொரு மானுடன்

ராமரின் ராசி....!




சோதிடம் ஒரு வானியல் கணிதமாகும். தொல்குடி தமிழர்களும்... இந்தோ-ஆரியர்களும், மாயன் பழங்குடிகளும், சுமேரியர்களும் , சீனர்களும் கூட அதை தெரிந்து வைத்திருந்தனர்.. (ஒவ்வொருவர் கணக்கீடும் சற்றே மாறுபடும்)

தொடக்கத்தில் பருவங்களை கணிக்கவும், விவசாய பயன்பாட்டிற்காகவும் காலநிலையை சோதித்த சோதிடம் நாளடைவில் மனித குணபேதங்களையும் வாழ்வியல் போக்கினையும் கிரக சஞ்சாரங்களை கொண்டு தீர்மானிக்க முயன்றது... ,, முயன்றுகொண்டிருக்கிறது..!


9 கோள் மீன்களையும்(கிரகம்)

 27 நாள் மீன்களையும்(நட்சத்திரம்)

  12 ஓரைகளையும் (ராசி)


வைத்துக்கொண்டு வட்டமாக கட்டம்கட்டி.... சதுரங்கப்பலகையில் ஒரு சூதாட்டம் ஆடுகிறார்கள் என்பதை தாண்டி அதிகம் சொல்வதற்கில்லை...!


இராமர் & பிரதர்ஸ் பிறப்பை தெரிவிப்பதற்கும் நாள் கோள் அளவீடு கம்பனுக்கு தேவைப்பட்டிருக்கிறது...!




பாலகாண்டம்.....


(திருஅவதார படலம்)



"யாமறிந்த புலவரிலே.." என பாரதி கூறுகிற பாணியில்.. கிட்டத்தட்ட வள்ளுவரும்

"யாமறிந்த பேற்றினிலே.." என ஒன்றை கூறுகிறார்....! (லேசாக கொஞ்சம் மாற்றி...) "பெறுமவற்றுள் யாமறிவது இல்லை.. அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற"


அயோத்தி அரசன் தசரதன் அதன் வலி உணர்ந்தவன். அவனிடம் எல்லாம் இருக்கிறது.. இல்லாத பொருள் என்று எதுவுமில்லை..!


ஆனால் அவனுக்கு தெரியாதா என்ன..? உண்மையில்  "தம்பொருள் என்ப தம்மக்கள்" என்று..!


அந்த 'மக்கட்செல்வம்' அவனுக்கு இன்னும் வாய்க்கவில்லை. எண்ணி எண்ணி வருந்தினான். மன்னனுக்கு வாரிசை வழங்க இயலாமல் பட்டத்துஅரசிகள் மூவரும் உடன் வருந்துகின்றனர். குலகுரு வஷிஸ்டர் முதலான பல ரிஷிமுனிகளை கலந்தாலோசித்து புத்திரபேறு நல்கும் யாகத்தை நடத்துகிறான். அதன் பலன் விரைவில் வெளிப்படுகிறது.. தெய்வம் கொடுத்தால் அள்ளிக்கொடுக்கும்! ஒரு பிள்ளைக்கு வழியின்றிருந்தவனின்  தேவிமார் மூவரும் அடுத்தடுத்து கருவுற்றனர்...!



இனி கம்பனை கேளுங்கள்...,,



ஆயிடை, பருவம் வந்(து)

                     அடைந்த எல்லையின்,


மா இரு மண்மகள் 

                               மகிழ்வின் ஓங்கிட,


வேய் புனர்பூசமும், 

                            விண்ணுளோர்களும்,


தூய கற்கடகமும், 

                            எழுந்து துள்ளவே.....!




(பொருளுணர...)



உரிய பருவம் வந்தடைந்த வேளையில்..,, மாபெரும் மண்மகள் மகிழ்ச்சியில்  திளைத்தாளாம்..., 


அன்றைய தின வானில்..,

மூங்கில் ஒத்த புனர்பூச நட்சத்திரமும் ஏனைய விண்ணவர்களும் தூய கற்கடக ராசியும் எழுந்து துள்ளியதாம்...!!


(ஏன்.....? ஏன்......?)



"சித்தரும், இயக்கரும்,                                                         தெரிவைமார்களும்,


வித்தக முனிவரும்,                                                            விண்ணுளோர்களும்,


நித்தரும் முறை முறை                                                         நெருங்கிஆர்ப்புற,


தத்துறல் ஒழிந்து நீள் 

                                தருமம் ஓங்கவே. "



(பொருளுணர..)


சித்தர்களும், யக்ஷர்களும், தெரிவை = பெண்(யக்ஷினிகளும்),

வித்தக முனிவர்களும், வானோர்களும் அவர்களினும் உயர்ந்த நித்திய சூரிகளும் அடிக்கடி ஒருவரை ஒருவர் நெருங்கி வந்து தம்மகிழ்ச்சியை ஆர்ப்பரித்து தெரிவித்து கொண்டார்களாம்..!


வாழ்நாளில் இவர்களில் ஒருவரை காண்பதே  'குதிரை கொம்பு' எனும்பட்சத்தில் இவர்களெல்லாம் ஒன்றாக கூடி சஞ்சரிக்கிறார்கள் என்றால் ஏதோ முக்கிய நிகழ்வு அரங்கேறபோவதாகதானே அர்த்தம்..? (வானில் ஒரு அரிய நிகழ்வு ... கோள்கள் ஒன்றாக நேர்கோட்டில் தோன்றுகின்றன! -- என செய்திகளில் கேட்டிருக்கிறீர்களா..?)


இதுவரை தட்டுத்தடுமாறி காப்பாற்ற பட்டுவந்த தருமம் இனி இடையூறு இன்றி நீண்டு ஓங்கி சிறப்புற போகிறதாம்...!


(ஆஹா! எப்படி? எவ்வாறு? எதனால்?? )


மிக அற்புதமான இந்த அடுத்த பாடலை பாருங்கள்...



"ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து,


அரு மறைக்கு உணர்வு அரும் அவனை, -- அஞ்சனக்


கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை,


திரு உறப் பயந்தனள்,, திறம் கொள் கோசலை!!"




(பொருளுணர...)


அன்றொரு நாள் பிரபஞ்சம் பிளந்ததால் தோன்றிய எல்லா உலகங்களையும் தன் உதரத்தில்(வயிறு) அடக்கியவனும், விவரிக்க முடியாத அரிய வேதங்களாலேயே அறிய முடியாதவனுமான அவனை..., அந்த பரம்பொருளை..!



தானும்உலகும் மங்கலம் எய்த (திரு உற)


கோசலை பெற்றெடுத்தாள்!!


கோசலை யின் சமகாலத்தில் எத்தனையோ தெய்வமகளிர் பூவுலகில் உலாவந்தபோதிலும் இராமனை ஈன்றெடுக்கும் திறத்தை இயற்கை கோசலைக்குதானே வழங்கியிருக்கிறது..! அதான் அவள் 'திறம்கொள்' கோசலை..!


மாவிலை/வேப்பிலை முதலியவற்றின் கொழுந்து இலைகள் ஒருவித செம்பழுப்பு நிறம் உடையவை. ஆனால் குழந்தை ராமனோ பிறக்கும்போதில் கண்-மை (அஞ்சனம்) அளவு கருப்பாக இருந்தானாம்... அதற்காக கம்பன் சொன்ன உவமைக்கு கோடி பொன் பரிசளிக்கலாம்.. "கருமுகில் கொழுந்து....!"  (கருமேகக்கொழுந்தாம்.) அட! அட..! அட.! என்ன ஒரு கவிபுனைவு...


குழந்தை வெள்ளையா பிறக்கலையே ! சிவப்பாக பிறக்கலையே ! என குறைபட்டு குங்குமப் பூவை தேடிக் கொண்டிருக்கும் முட்டாள்களுக்கு எங்கே தெரியப்போகிறது..?

இந்த "கார்முகில் கொழுந்து எழில் காட்டும் சோதி"யின் பேரழகை பற்றி...!



****. *****.   *****. ****. *****


சரி,, கோசலை தாயாகிவிட்டாள். மற்ற இருதேவியர் நிலை..?


அதையும் கம்பரிடமே கேளுங்கள்,,



"ஆசையும், விசும்பும், நின்று அமரர் ஆர்த்து எழ,


வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துற,


பூசமும் மீனமும் பொலிய, நல்கினாள்,


மாசு அறு கேகயன்மாது மைந்தனை. "



(பொருளுணர....)


ஆ..சையும் = (All side ம்) எல்லா திசைகளும்...


விசும்பு ம் = வானமும்


நின்று தேவ அமர்கள் ஆர்த்து எழ


வாசவன் = வசுக்களின் தலைவன் (இந்திரன்) முதலானோர் வணங்கி வாழ்த்திட,,,


வானில் மீன ராசியினில் பூச நட்சத்திரம் பொலிந்து கொண்டிருக்க,,


குற்றமற்ற கேகேய மாமன்னன் மகளாகிய(மாது) கைகேயி தன் மைந்தனை ஈன்றாள்.


கைகேயி குறித்து கூட விமர்சனம் உண்டு ஆனா அவளது தந்தை கேகேய மாமன்னன் மதிப்புமிக்கவர். பரதனின் நற்குணங்களுக்கும் அவரே காரணம்.


ராமாயணம் திரைப்படமாக்கப்பட்டபோது நடிகர் திலகம் தனக்கு பரதன் பாத்திரம் தான் வேணுமென விரும்பி ஏற்றுநடித்து அதற்காக ராஜாஜி யின் பாராட்டையும் பெற்றார் என்பது தனிக்கதை!


******.   ******. ******.    ******


அடுத்ததாக  மூவருள் இளையதேவியாராம் சுமித்திரை யிடம் வருவோம்...,,


கம்பா ! ம்.. தொடங்கு,,,



"தளை அவிழ் தருவுடைச்                                                           சயிலகோபனும்,


கிளையும் அந்தரமிசைக் கெழுமி                                                           ஆர்ப்புற,


அளை புகும் அரவினோடு 

                                  அலவன் வாழ்வுற,


இளையவற் பயந்தனள்  

                       இளைய மென்கொடி...!"



(பொருளுணர....)


தளை = கட்டு/கோரு (யாப்பு/எழுத்து/அசை/சீர்/தளை/அடி/தொடை.... ஞாபகம் இருக்கிறதா..)


தளை அவிழ் தரு = மொட்டுஅவிழ்ந்த மலர்களுடைய மரம்..


சயில கோபன் = சயிலம்/அசலம் என்றால் மலை! மலைகளின் எதிரி யார் தெரியுமா? மழை!!

மழைதானே மலைகளை அரித்து மணலாக்குகிறது! கோபம் கொண்டு இடி இடித்து நிலங்களை பெயர்க்கிறது.

மழையின் அதிபதி இந்திரன்.

ஆக சயிலகோபன் என்பது இந்திரனின் பட்டப்பெயர்.



தருஉடை இந்திரன் என்றதால் அந்த தரு இந்திரலோக மரமாகிய கற்பகத்தை சுட்டும்.


கிளை = உறவினர் (இந்திரனின் உறவு யார்? முப்பத்து முக்கோடி தேவர்கள்)


மொட்டவிழ் கற்பகதரு உடைய இந்திரனும் தேவர்களும் அந்தரத்தில் வந்து திரண்டு வாழ்தி ஆர்ப்புறுகின்றனராம்...!


ஏன்..? இளைய மென்கொடி சுமித்திரை இளம் மகவை (இலக்குவன்) ஈன்றெடுத்தாள்..!


சரி இவனுக்கு ராசி? நட்சத்திரம்?


அளை புகும் பாம்பின் வடிவமாகிய "ஆயில்ய " நட்சத்திரம். கடக ராசி!

(அலவன் = நண்டு)


இருங்கள்...! இருங்கள்..! காட்சி முடியவில்லை.. 


சினிமா ல இரட்டை பிள்ளைகளை அடுத்தடுத்து பிரசவிக்கும் தாய்மார்களுக்கு முன்னோடியாக,,

சுமித்திரை மறுபடியும் வலியெடுத்து பிரசவித்ததை படியுங்கள்...,,



"படம் கிளர் பல்தலைப் பாந்தள் ஏந்து பார்...



நடம் கிளர்தர, மறை நவில நாடகம்,



மடங்கலும் மகமுமே வாழ்வின்

                 ‌                                       ஓங்கிட,


விடம் கிளர் விழியினாள், 

                                மீட்டும் ஈன்றனள்.!!"



படமெடுத்தாடும் பல்தலை நாகமான(பாந்தள்) ஆதிசேடன் தலையில் ஏந்திய உலகமும் கிளர்ந்து ஆடுகிறதாம்.. வேதமறைகள் ஏதோ நாடகம் போல ஒலிக்கப்படுகிறதாம்!!


சிம்ம ராசியில் (மடங்கல்= சிங்கம்)

மகம் நட்சத்திரத்தில் 


விஷம் கிளர் விழியாள் ஆன சுமத்திரை மீண்டும் ஒரு மகவை (சத்ருகணன்) பெற்றாள்..!


(இந்த குறிப்பிட்ட  ராசி நட்சத்திரம்

ராஜலட்சணம் பொருந்தியது.

'மகத்தில் பிறந்தோர் ஜகத்தை ஆள்வர்' என ஒரு சோதிட வழக்குண்டு.. ராம லக்ஷ்மணர் காடுபுகுந்திட... பரதன் நாடாளும் வாய்ப்பிருந்தும் அதை ஏற்க மறுத்திட.. கடைக்குட்டி சத்ருகணன் அப்படிஏதும் அவலநிலையில் சிக்காததை இங்கு நோக்குக..)



"விடம் கிளர் விழியினாள்" என கம்பன் வருணித்ததில் எனக்கு ஏனைய மொத்த ராமாயண மகளிருள்ளும் சுமித்திரையே நிகரற்ற

பேரழகியென தோன்றுகிறாள்...!


( உப தகவல்.....)



ராமரின் ஜனன ஜாதக ராசிகுறித்து ஏராளமான பட்டிமன்ற விவாதங்கள் நடந்தேறியுள்ளன..


புனர்பூச நட்சத்திரம் மிதுனராசிக்கு உரியது. அது நான்கு பாகங்களை உடையது அதில் மூன்று மிதுனத்திலும் எஞ்சிய ஒன்று கடகத்திலும் உதிக்கும்!


ராமர் இந்த இரண்டும்கெட்டான் நேரத்தில் அவதரித்துவிட்டார். சாஸ்திரப்படி அது கடைசி பாகமான கடகத்துக்கு உரித்தாகி விடுவதால்..., கம்பரும் "கற்கடகம் துள்ளவே" என அதை அசத்தலாக காட்சிப்படுத்திட்டார்.


புனர்பூசத்திலோ /கடக ராசியிலோ பிறக்கும் பிள்ளைகளுக்கு இன்றும்கூட ராம நாமம் சூட்டுவது மரபு!!


இலக்குவனும் அதே கடக ராசிதான் அதனால் தான் அவன் ராமனோடு திரிந்து சுகதுக்கங்களை அனுபவித்தான். 


என் வாழ்வில் எனக்கு பிடித்த சுபாவம் உடைய நெருக்கமான நண்பர்கள் எல்லாம் எனது ராசிகாரர்களாக இருந்ததை அறிந்து வியந்தேன். நீங்களும் உங்கள் நண்பர்களை கேட்டுப்பாருங்களேன்...! 


(நண்பர்களிடம் சாதி தான் கேட்ககூடாது.. அது தவறு! ராசி கேட்கலாம்..அல்லவா?)


-சூரியராஜ்

2 Comments

  1. எனக்கு ராமாயணத்தில் பிடித்த HERO: அனுமன். முடிந்தால், அவரை கம்பர் எப்படி தனது கவியில் அலங்காரம் செய்துள்ளார். அல்லது அவரை பற்றிய சிறந்த நிகழ்வு கம்பராமாயணதில் உள்ளது என்பதை நீங்கள் விரும்பியவையை ஒரு கட்டுரையாக போடுங்களேன்!.

    ReplyDelete
    Replies
    1. கம்பரசத்தில்...

      தமிழுலகத்தில் நீண்ட நாள் எழுந்த விவாத பாடல் ஒன்று உள்ளது,

      அதில் கம்பர், ஆரிய சீதை என்று குறிப்பிட்டதாய் ஒரு சாரரும்

      ஆருயிர் சீதை என்று குறிப்பிட்டதாய் இன்னொரு சாரரும் கூறுகிறார்கள்.

      வாதம் வேண்டி அல்ல...
      நான் அந்த பாடலை உங்களது எழுத்துகளால் அறிய ஆவல் கொள்கிறேன்..

      கம்ப காவியத்தில் ஆழ்ந்திருக்கும் நீங்கள் எனக்கிந்த வரத்தை தந்தருளுமாரு வேண்டுகிறேன்..

      Delete
முந்தைய பதிவு அடுத்த பதிவு