Trending

பகவத் கீதை - அனைத்து யோகமும் எளிய நடையில்

 பகவத் கீதை எளிய நடையில்

பகவத் கீதை

கீதை யோகங்களால் ஆனது. சென்ற ஆன்மீக பதிவில் கர்மயோகத்தையும் சாங்கிய யோகத்தையும் பற்றி பார்த்தோம். அதில் சாங்கிய யோகம் பலராலும் படிக்கப்பட்டதை எண்ணி சந்தோஷிக்கிறேன். இதை ஒவ்வொரு அத்தியாயமாக எடுத்து பகுத்து ஆய்ந்து எளிய நடையில் எழுதுவதற்கு ஆவலாக இருந்தாலும், அதற்குரிய அவகாசம் கிடைக்காததால் கீதை சொன்ன அனைத்து யோகத்தையும் இந்த ஒரே பதிவிலே எளிய நடையில் கூற முயல்கிறேன். இந்த மேலோட்ட கருத்துகள் நேரடியாக கீதையை படிப்பது போல் இல்லாமல் சொல்லப்பட்ட யோகங்களின் சாரத்தை விளக்கும் படியாக இருக்கும். 


ஒவ்வொரு புனித நூலும் இறுதியாக மனதடக்கத்தையே வலியுறுத்துகிறது. அதன்படி வாழும் போது உடலும் உள்ளமும் பாதுகாக்கப்படுவதாய் நான் உணர்கிறேன். ஒருமுறை நானும் என் அண்ணனும் இரவு நடை உலா செய்யும் போது ஒர் உணவகத்தை பார்த்தோம். அதன் பெயர் பலகையில் பலவகையான உணவுகளின் படங்கள் கவர்ச்சிகரமாக வரையப்பட்டிருந்தது. அதை பார்த்த என் அண்ணன் 'இதை வாங்கி சாப்பிடுவோமா?' என்றான். நாங்கள் இருவருமே எங்களது இரவு நேர உணவை எடுக்கவில்லை, இருந்தாலும் நான் வேண்டாம் என்றேன். என் அண்ணன் 'அதை பார்க்கும் போதே சாப்பிடத்தோன்றுகிறது' என்றான். இதை கேட்ட உடனே சுமார் ஒர் இருபது நொடி அந்த பலகையை பார்த்தேன். எனக்கப்படி தோன்றவில்லை. இப்போது காரணத்தை யோசித்து பார்க்கிறேன். அது கீதையினாலே வந்த நாவடக்கம்.


கீதை காட்டும்

பாதை - அதில்

பேதை ஆவான்

மேதை…!


1.அர்ஜூன விஷாத யோகம்


இந்த முதல் அத்தியாயத்தை அர்ஜூனனின் சந்தேகம்/குழப்பம்/துன்பம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். கீதை குழப்பத்திலிருந்து தொடங்குகிறது. ஞானத்தின் தொடக்கம் கேள்வி, கேள்வியின் தொடக்கம் குழப்பம். 


குருநிலத்தில் போர் துவங்க உள்ளது. அர்ஜூனன் தனது காண்டீபத்தோடும் கண்ணனோடும் இருக்கிறார். எதிரே வரும் கௌரவ கொற்றத்தார்கள் யாவரும் அவனது சுற்றத்தார்களாவே இருக்கிறார்கள். அர்ஜூனன் குழம்புகிறான்.


இவர்களை வீழ்த்தியா நாம் வாழ வேண்டும்? இது மூடத்தனம் இல்லையா? நம் குடும்பத்தை நாமே கொல்வதா? யாரோ ஒருவர் நாட்டை ஆண்டால் தான் என்ன? அழியும் நமக்கு அழியப்போகும் இந்த நிலம் தேவை தானா? இதற்கு இந்த போர் தேவையா?


வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் குழப்பம் வரும். மனது ஒருமுனையாக இருக்கும் போது குழப்பம் ஏற்படுவதில்லை. இரு வேறுபட்ட சிக்கலோ-உணர்ச்சியோ ஏற்படும் போது குழப்பம் வருகிறது.


அந்த குழப்பத்தை கண்ணனிடம் பார்த்தன் எடுத்துரைப்பதே அர்ஜூன விஷாத யோகமாகும்.


2.சாங்கிய யோகம்


பார்த்தனின் குழப்பத்திற்கான விடையே இந்த சாங்கிய யோகம். (இதை விரிவாக தெரிந்து கொள்ள இங்கே தொடவும்). 


அர்ஜூனன் கேட்ட கேள்விக்கு கண்ணன் இந்த அத்தியாயத்திலே விடை கூறி விடுவார். அதாவது பரந்த அறிவுடையோர்களுக்கு கீதை என்னும் பெரிய புத்தகம் தேவையில்லை 'சாங்கி யோகம்' என்னும் இந்த குறைவான காகிதங்களே போதுமானது. 


தெளிவான அறிவே சாங்கியமாகும். கீதையை ஒரு வரியில் சொல்வதென்றால் 'கடமையை செய், பலனை எதிர்பாராதே' என்பார்கள். அதன் விரிவே சாங்கிய யோகமாகும். 


போவதை கண்டு கலங்காமல், வருவதை கண்டு மயங்காமல், கோபத்திலே குதிக்காமல் எவன் இருக்கிறானோ அவனே உண்மையான அறிவுடையவனாவான். 


ஒரு பக்கம் நன்மை, ஒரு பக்கம் தீமை வரும் போது இரண்டிலும் வீழ்ச்சியடையாவதனாய், என்ன என்ன என்று ஆவல் கொள்ளாதவனாய், வெறுப்பு கோபம் இல்லாதவனாய் எவன் இருக்கிறானோ அவனே நிலையானவன். 


இதுவே சாங்கிய யோகம் சொல்லும் மூலக்கருத்தாகும். அர்ஜூனனுக்கு இந்த அத்தியாயம் புரிந்திருந்திருந்தால் தொழிலை பற்றியதான அடுத்த அத்தியாயம் பிறந்திருக்காது.


3.கர்ம யோகம்


'வருவது வரட்டும், போவது போகட்டும்' என்று கண்ணன் சொன்னதும், அப்படியானால் நான் செய்வது சரிதானே என்று அர்ஜூனனுக்கு தோன்றும்.


தெளிவான அறிவு தான் வேண்டுமென்றால், என் தெளிவான அறிவு போர் செய்யாதே என்கிறது என்பான் அர்ஜூனன். 


அறிவா? செயலா? என்னும் குழப்பத்தின் விடை தான் கர்மயோகம்.


ஒருவன் தொழிலே செய்யாமல் இருப்பதால் செயலற்ற நிலையை அடைந்துவிடுவதும் இல்லை, இன்னொருவன் துறவியாதலால் ஈடேறுவதும் இல்லை. உனக்கு எந்த தொழில் விதிக்கப்பட்டிருக்கிறதோ அதை செய், அதில் பாவமே இல்லை. தொழிலே செய்யாமல் இருப்பதை விட தொழில் செய்வது சிறந்தது அல்லவா? 

பற்றில்லாமல் செய்யப்படும் தொழிலை தவிர மற்ற தொழில் அனைத்தும் மனிதனுக்கு விலங்கு.


ஒரு விஷயத்தில் பற்று வைக்கும் போது தான் அங்கு கோபப்படுவதற்கான சாத்தியம் அதிகமாகிறது. கோபத்தின் காரணத்திலே குழப்பமும் ஒட்டிக் கொள்கிறது. பற்றை நீக்கி கடமையென தொழிலை நினைத்தால் அதனால் வரும் பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.


தொழிலின் பற்றை நீக்குதல் என்பது செய்யும் வேலையிலிருந்து பற்றை நீக்குதல் என்னும் அர்த்தத்தில் வராது. 


அழகாக குருநாதர் கண்ணதாசன் அவர்கள் கூறுவார், 'நூறு எதிர்பார்த்து ஐம்பது கிடைத்தால் ஏமாற்றம், எதுவுமே எதிர்பார்க்காது பத்து கிடைத்தாலும் சந்தோஷம்'


இந்த பற்றை தான் நீக்க வேண்டும். நான் இவ்வளவு படித்து இருக்கிறேன். எனக்கு இவ்வளவு தகுதி உள்ளது. நான் இவ்வளவு சம்பளம் தரும் வேலையில் தான் சேருவேன் என்று ஒற்றைக் காலில் நிற்பவனுக்கு தான் இந்த கர்மயோகம் அவசியம் தேவைப்படும். 


எது கிடைக்கிறதோ அதை ஏற்றுக் கொள், உன்னால் முடியும் அதை கொண்டு வாழ். அதிகம் என்று நினைக்கிறாயா? மூன்று வேளை உணவுக்கு சிரமப்படும் எளியோர்கள் நாட்டில் அதிகமப்பா! அவர்களுக்கு கொடுத்துவிடு. 


ஒவ்வொரு லௌகீக மனிதனுக்கும் அவசியம் தேவைப்படும் அத்தியாயம் இந்த கர்மயோகமாகும்.


4.ஞானகர்ம சந்யாச யோகம் 


இயக்கத்தில் இயங்காமை, இயங்காமையில் இயக்கம் என்று ஒன்று உண்டு. ஒரு மனிதனின் பூரண ஆயுள் 120 ஆகும். அதற்கும் அதிகமாக வாழ்வோர்களும் உண்டு. அதுபோல ஞானத்தின் பூரண நிலை தான் இந்த இயக்கத்தில் இயங்காமை, இயங்காமையில் இயக்கம். 


ஆசையே இல்லாமல் எவன் செயல்களை செய்கிறானோ அவனுடைய செயல்களே ஞான அஃனியில் போட்டு எடுக்கப்பட்டவை ஆகும்.


உண்மையில் ஒரு சாதாரண லௌகீக மனிதனுக்கு இது புரியாது. 'ஆசையே இல்லாத செயலா?' அப்படி ஏதும் உண்டா? என்பார்கள். அதனால் தான் ஒரு மிகு பெரும் தலைவர் கூட 'துறவிக்கும் ஆசை உண்டு' என்று கூறினார்.


ஒரு செயலை செய்கிறான் எனிலே அதில் ஆசை வைத்துள்ளான் என்று தானே அர்த்தம் என்பதே அவர்களின் வாதம்.


ஒரு பறவை வானில் யாருடைய விதிக்கும் உட்படாமல் உயர உயர பறக்கிறது. தன் தேவையினை பூர்த்தி செய்து பசிக்கும் போது உண்கிறது. அதே வகையில் இந்த உலகத்தையே காக்கிறது. இதையே அந்த பறவையின் கடமையாக கொள்க. 


இதையே ஒரு மனிதன் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் இயற்கை நியதிப்படி செய்தால், அவனே இயக்கத்தில் இயங்காதவன்.


அந்த இயக்கம் தேவைக்கேற்ற வகையில் மட்டுமே இருக்கும் அல்லது அதைவிட குறைவாக இருக்கும்.


இந்த அளவான வாழ்க்கை முறையே ஞானகர்மத்தின் திறவுகோலாகும். நான் முன்னே சொன்னது போல் லௌகீக மனதுடையோர்களால் இவ்வத்தியாயம் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் இருக்கும்.


ஒரு செயலானது எவ்வாறு அமைதல் வேண்டும் என வள்ளுவர் வழி தெளிந்த அறிவோடு குறள்மகன் விளக்கியிருப்பார். (அதை படிக்க இங்கே தொடவும்)


ஏறத்தாழ ஞானகர்ம சந்நியாச யோகமும் இதையே தான் சொல்கிறது.


5.சந்நியாச யோகம்


ஐம்புலன் பற்றை நீக்குதலே சந்நியாச யோகமாகும். மிக மிக கடினமான யோக நெறிகளில் இதுவும் ஒன்று. 


பிரம்மச்சரிய விரதம் என்று ஒன்று உண்டு. அதை மேற்கொள்பவர்கள் உடலாலும் மனத்தாலும் கூட எதிர்பாலினத்தாரை தவறாக எண்ணக் கூடாது.


மகாத்மா காந்தியடிகள் இந்த விரதத்தை பூண்டிருந்தார். மெய் என்னும் உடலாசையின் இச்சையை தீர்க்க பயன்படும் விரதங்களில் முக்கியமானதே இந்த பிரம்மச்சரிய விரதமாகும். 


காந்தியடிகள் தனது இறுதி காலங்களில் ஒரு முழுமையான சந்நியாசிக்குரிய அனைத்து தகுதியினையும் பெற்றிருந்தார்.


இல்லறத்தில் ஈடுபட்ட லௌகீக மனிதர்களுக்கு இந்த அத்தியாயமும் அர்த்தமற்றதாகவே தெரியும்.


மனதை கட்டுபடுத்த நினைக்கும் அனைவருக்கும் சந்நியாச யோகம் பயன்படும். அதை எப்படி செய்வது என்பதற்கான வழிமுறையே அடுத்த அத்தியாயமாகும்.


6.தியான யோகம்


தியான யோகத்திற்காக கண்ணதாசன் அவர்கள் ஒரு சுருக்க கவிதை யொன்றை இயற்றி இருப்பார். அதுவே தியானத்தின் சிறப்பை கூறும்


தமதென ஏதும் இன்றித்

தமக்கென நினையா ராகி

அமைவுறும் ஆன்மா வோடு

அசைவிலா திருப்போ ரெல்லாம்

சுமையென ஏதும் இல்லார்

சுகமென எதையும் எண்ணார்

சமநிலை பெறுவா ரென்பார்

தத்துவ பகவா னென்பார்


இந்த அத்தியாயம் முழுவதிலும் தியானத்தினை எவ்வாறு செய்தல் வேண்டும் என்பதையும் அதனால் கிடைக்கும் யோக வலிமையையும் கண்ணன் கூறுவார்.


நமக்கது வலிமையாக தெரிந்தாலும் அதை பெறுவோர்கள் அவற்றை பெரிதாக பயன்படுத்துவதில்லை என்பதை யுக்தேஷ்வர் கிரி போன்ற யோகியரின் வாழ்க்கையை படிக்கும் போது தெரியவருகிறது.


சந்நியாச யோகம் மனதை அடக்க சொல்லும், தியான யோகம் அடக்கும் வழியை சொல்லும்.


இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்ட தியான முறையும் க்ரியா யோக முறையும் ஒன்று தான்.


7.ஞான விஞ்ஞான யோகம்


'அறிவினால் அறியுமோர் ஆன்மீக ஞானம், அனுபவம் காட்டுமோர் அகண்ட விஞ்ஞானம்' என்பார் கவிஞர் கண்ணதாசன்.


அட்டமாசித்திகளில் அனிமா, லகிமா, கரிமா, ப்ராப்தி, பிராகாமியம் போன்ற சித்துகள் உண்டு. உடலை விரித்தல், சுருக்குதல், உடல் விட்டு உடல் பாய்தல் போன்றவைகளை பற்றி அவை கூறும்.


1900-களில் குவாண்டம் கொள்கை என்னும் ஒரு புதிய சட்டம் அறிவியல் உலகினுள் புகுந்தது. அது பல்வேறு ஆச்சரியமான ஒப்புக்கொள்ளவே முடியாத விநோதங்களையும் 'முடியும்' என்றது. 


ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற மிக பெரிய அறிவியல் வல்லுநர்களும் அந்த குவாண்டம் அறிவியலை ஏற்றுக்கொண்டார்கள்.


அந்த புதிய கொள்கை சொல்கிறது, 'மனிதனால் தன் உடலை சுருக்க முடியும்' என்று.


சமீபத்தில் ஒரு அறிவியல் அறிஞர் உடல் நரம்புகளின் இயக்கங்கள் மூலம் இன்னொருவரின் உடல் நரம்புகளை இயக்க முடியும் என்பதை நேரடியாக கூட்டத்திலிருந்து இருவரை அழைத்து விளக்கிக்காட்டினார். அந்நிகழ்ச்சியில் ஒருவரது உடலை இன்னொருவர் கட்டுபடுத்துவதை கண்டு உலகமே வியந்துப்போனது.


இதையே தான் அன்றைய சித்தர்கள் அனிமா என்றும் பிராகாமியம் என்றும் அழைத்தார்கள்.


ஹபுள் என்பவர் ஒளி அலைநீளத்தைக் கொண்டு அண்டமானது விரிவடைகிறது என்பதை 1850-களில் கண்டறிந்தார். அதன்பிறகு விண்வெளி அறிவியலில் பல்வேறு மாற்றங்கள் நுழைந்தது.


ஆனால் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் 'நூற்றொரு கோடியில் மேற்பட விரிந்தன' என்று அண்டமானது விரிவடைகிறது என்பதை 900-களிலே கூறிவிட்டார்.


இவையெல்லாம் எப்படி?


ஞானம் அன்றே இயற்கையாக கண்டறிந்த விஷயங்களை, விஞ்ஞானம் இன்று செயற்கையாக கண்டறிகிறது. அது இயற்கைக்கும் பாதகம் செய்வதாய் அமைகிறது.


கீதையின் இந்த ஞான விஞ்ஞான யோகம், மயக்கத்திலிருந்து விடுபட்டு உண்மையை அறிவதை பற்றி எடுத்துரைக்கிறது. இந்த யோகத்தை குழப்பமில்லாது அறிபவனையே கீதை அறிஞன் என்கிறது.


8.அக்ஷரப் பிரம்ம யோகம்


நான் உண்மை சொல்வதையே விரும்புகிறேன். இந்த அத்தியாயம் சொல்லும் கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை


இவ்வத்தியாயத்தின் இறுதியில் கண்ணன் சொல்வார், 'இதுவரை நான் சொன்னவற்றை புரிந்துகொண்டவன் நன்மையெல்லாம் ஒருங்கே பெற்றவனாகிறான், அந்த காரணத்தினாலே அவன் பரம்பொருளை அடைகிறான்'


ஆனால் பாருங்கள் இந்த அத்தியாயம் பெரும்பாலானோர்களுக்கு புரிவதில்லை; அடியேனும் அதில் அடக்கமாவேன்.


9.ராஜ வித்தியா ராஜ குஹ்ய யோகம்


என்னை அறிந்தால்

எல்லா உயிரும்

எனதென்றே அறிந்துகொள்கின்றாய்


இது தான் ராஜ வித்தியா ராஜ குஹ்ய யோகம். 


அனைத்துமே ஒரு ஆதிமூலமே என்னும் ஓர் எண்ணமது. இப்போது உங்கள் கைகளில் இருக்கும் கைபேசியோ அல்லது எதிரே இருக்கும் கணினியோ ஒரு செயற்கை பொருளாக இருந்தாலும் கூட அதுவும் இயற்கை மூலப்பொருட்களால் ஆனது தான். 


இயற்கையிலிருந்து வந்த செயற்கை அவைகள். அப்படி பார்க்கும் போது இந்த உலகில் உள்ள அனைத்துமே இயற்கையால் உருவானது தான். அதாவது அனைத்துமே ஒன்றிலிருந்து வந்த வேறொன்று ஆகும்.


கண்ணன் தன்னையே அண்டம் என்பார். அண்டமே தன்னுள் என்பார். கண்ணனை ஒரு தனி மனித கடவுளாக காணாமல் பிரபஞ்ச வடிவமாக கண்டால், அவர் சொல்லும் 'நான்' என்பதின் நியாயம் தெரியும்.


ஏகம் ஏவா திதியம்


என்னும் யோக மந்திரம் கூட 'எல்லாம் ஒன்றே' என்று கூறித்தான் தொடங்குகிறது. இந்த யோகமும் அதையே சொல்கிறது.


10.விபூதி யோகம்


எல்லாம் நீயே… எல்லாம் நீயே என்கிறாயே, முதலில் நீ யார்? என்று அர்ஜூனன் பகவானை பார்த்து கேட்பார்.


அதற்கு கண்ணன், காசிப முனிவருக்கு அதிதி தேவியிடம் பிறந்த பன்னிரண்டு புதல்வர்களில், குணத்தில் சிறந்தவனான விஷ்ணு நான் என்பார்.


பின் தன்னை பற்றி ஒரு பெரிய விளக்கவுரை கொடுத்துவிட்டு, பலவகைபட்ட திறனை உடைய என்னை அறிவதால் உனக்கு என்ன பயன் அர்ஜூனா? உன்னை நீ அறியப் பார்! என்பார்.


11.விஸ்பரூப தரிசனம்


அர்ஜூனன் மேலும் சொல்வார், நீ சொன்னவை உண்மை தான் கண்ணா. இருந்தாலும் எங்கும் இருந்து படைத்தல் காத்தல் அழித்தல் தொழிலை செய்யும் உன் உண்மையை எனக்கு காட்டு, பார்த்தன் அதனை பார்க்கலாம் என்றால் விரைந்து அதனை காட்டு


கண்ணன் தன் விஸ்பரூப தரிசனத்தை பார்த்தனுக்கு காட்டுவார்.


12.பக்தி யோகம்


ஒரு மனிதனுக்கு தன் தாய் தந்தையிடமிருந்து பக்தி துவங்குகிறது. அதை மரியாதை கலந்த அன்பு எனலாம்.


யோக நெறி, கர்ம நெறியை தவிர்த்து பக்தி நெறியாலும் ஒருவன் தன்னை அறியலாம் என்று கூறுவதே இந்த பக்தி யோகமாகும்.


ஒரு சீடனுக்கு குருவின் மீதிருக்கும் பக்தி, அவன் வாழ்க்கையையே ஒழுங்குப்படுத்துகிறது. அதுபோலவே தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் இயல்பாகவே ஒருவன் கருணையையும் அறிவையும் பெறுகிறான் எனில் பக்தியினால் அவனுக்கு அடக்கமும் சாத்தியமாகிறது.


தரையில் கிடக்கும் காகிதத்தின் மீது கால்பட்டவுடன், குனிந்து அதை தொட்டு வணங்கும் பக்தி(மரியாதை) எல்லோருக்கும் அமைவதில்லை. கல்வியின் மீதிருக்கும் இயல்பான பக்தி அதை செய்ய வைக்கிறது.


எழுதுகோலின் மீதும் காகிதத்தின் மீதும் இருக்கும் இயல்பான பக்தி அவற்றை தொடும் போதெல்லாம் காலணியை கழட்டச் செய்கிறது.


சாதாரண கல்லின் மீது கூட ஒருவனுக்கு பக்தி தோன்றலாம் அது அவனக்கு அடக்கத்தை கொடுத்து குவளய கொடுமையிலிருந்து காக்கும் என்பதே பக்தி யோகமாகும்.


13.க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்


க்ஷேத்திரம் என்பது இடத்தையும், க்ஷேத்ரக்ஞ என்பது அதை இயக்குவோனையும் குறிக்கும்.


அதன்படி, கீதையில் சொல்லப்பட்ட க்ஷேத்திரம் என்பது உடலையும், க்ஷேத்ரக்ஞ என்பது அந்த உடலை இயக்கும் உயிரையும் குறிக்கும்.


உடல் மற்றும் உயிர் பற்றிய புரிதலே இந்த யோகத்தின் மூலமாகும். உடல் ஆசைவயப்பட்டதென்றும் உயிர் நிலையானதென்றும் கண்ணன் இவ்வத்தியாயத்தில் விளக்குவார்.


துவைதம், அத்துவைதம் என்று சொல்லக்கூடிய உடல் மனக்கொள்கை போன்று இந்த யோகமும் உடலையும் உயிரையும் பற்றி கூறி அலைபாயும் மனதிடமிருந்து உடலை எப்படி சிக்காது பாதுகாப்பது என்பதை பற்றி கூறும்.


14.குணத்ரய விபாக யோகம்


குணங்களை பற்றிய யோகமிது. சாத்வீகம் ரஜோ தமோ என்று சொல்லக்கூடிய மூன்று குணங்களைக் கொண்டோர் தான் இந்த வையகம் முழுதும் நிரம்பியுள்ளார்கள்.


சாந்தமானவன், அமைதியை விரும்புபவன், ஆசை இல்லா வாழ்வை மேற்கொள்பவன் அவனே சாத்வீகன். 


பற்றுதல் வைத்து தொழில் செய்பவன் 'இது செய்தால் அது கிடைக்கும்' என்னும் மனநிலை கொண்டவன், என்றும் புகழை விரும்புபவன் அவனே ரஜோ குணத்தன். 


சும்மாவே இருந்து நாட்களை கடத்துபவன், கடமையோ தொழிலோ எதிலுமே ஈடுபடாதவன். மொத்தத்தில் உலகிற்கே பயனில்லாதவன் அவனே தமோ குணத்தான்.


உலகில் ரஜோ குணத்தவர்கள் தான் அதிகம். ராஜோ-தமோ ஆவதும் தமோ-ரஜோ ஆவதும் இயல்பான ஒன்று.


சாத்வீக நிலையை எய்துவது அவ்வளவு இயல்பான காரியமல்ல. இந்த உலகிலேயே கடினமான காரியம் ஒன்றை சொல்? என்றென்னிடம் கேட்டால், நான் 'புலனடக்கத்தையே' கூறுவேன். அது அவ்வளவு எளிதானதல்ல. சாத்வீக வாதிகள் அதில் சாதனையாளர்களாய் இருப்பர். அதனால் அவர்களின் நிலை என்பது மிகவும் போற்றக்கூடியதே.


திராவிடவாதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் இன்றும் காஞ்சி மகாபெரியவரை 'அவன்..இவன்' என்கிறார்கள்.


மரகத கல்லையே மண் உருண்டையாக நினைத்தவர், கூழாங்கல்லின் கூச்சல்களை எப்படி எடுத்துக் கொண்டிருப்பார் என்று நினைத்துப் பாருங்கள். அதுவே சாத்வீகம்.


அதனால் நமக்கு பிடித்தவரை ஒருவர் மரியாதை குறைவாக பேசினால், அவரிடமிருந்து பேசாமல் விலகிவிடுவது நல்லது. அதுவே சாத்வீக நெறி.


15.புருஷோத்தம யோகம்


பைபிளில் சொல்லப்பட்ட ஆதாம் ஏவாள் கதையில் ஒளிந்துள்ள மர்மம், குர்ஆனில் சொல்லப்பட்ட ஆதாம் ஹவ்வா கதையின் மர்மம் இந்த அத்தியாயத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. அது அந்த மரத்தையும் பழத்தையும் பற்றியது.


கண்ணன் அந்த உவமைகளை கொண்டு அர்ஜூனனிடம் ஆகமமாய் பிறப்பு கூறித்த ரகசியத்தை தெளிவுபடுத்த முயல்கிறார்.


இறுதியில் அர்ஜூனா, இது பரம ரகசியம். இதை அறிந்து கொள்பவனே பிறப்பினை அறிகிறான் என்று முடிக்கிறார். உண்மையிலே இந்த யோகப் பகுதி ஒரு மர்மம் தான்.


16.தெய்வாஸூர ஸம்பத் விபாக யோகம்


ஆசை கோபம் களவு கொண்டவன் பேச தெரிந்த மிருகம்

அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்


என்பார் கவிஞர் கண்ணதாசன். மனிதனின் தெய்வீக நிலையை உணர்த்துவதே இந்த தெய்வாஸூர யோகமாகும்.


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 

தெய்வத்துள் வைக்கப் படும்


என்கிறது தமிழ் மறை. இதில் வாழ்வாங்கு என்பதை 'அதிக நாட்கள் வாழ்ந்தவன்' என்ற பொருளில் எடுத்துக் கொள்ள கூடாது. உடல் வாக்கு மனம் ஆகியவற்றில் சத்தியத்தை விதைத்து, புலனடக்கத்தில் உயர்ந்து, ஓர் அமைதி நெறிக்குட்பட்ட சாத்வீக வாழ்க்கையை ஏற்று வாழ்ந்தவனே தெய்வீக நிலையை அடைகிறான் என பொருள் கொள்ளுதல் வேண்டும்.


யாரையெல்லாம் கீதை தெய்வ குணத்தோர் என்று கூறுகிறது தெரியுமா?


அகிம்சை கொண்டு, சத்தியம் நின்று, ஆத்திரம் வென்று அமைதியை காப்பான். புகழ்பெறு தியாகமும் புலன்களில் அடக்கமும் பழி சொல் இல்லாமையும் பல்லுயிர் காத்தலும் அவனது இயல்பு. பேராசை என்னும் பேயிலா திருத்தலும் ஆணவமில்லாது ஆண்டி போல் அலைவதும் அவனது உயர்வு. மறுநாள் சாவு என்றாலும் கூட மறந்தும் கர்மம் அவன் தவிர்ப்பதில்லை. இந்நொடியே அவனிடம் சாவு வந்தாலும் மனத்தினில் என்றும் சஞ்சலமில்லை.


இத்தகைய குணத்தை கொண்டவனே தெய்வ நிலையை எய்தியவனாவான். 


யாரை கீதை அசுரர்கள் என்கிறது தெரியுமா?


உயர்குல பிறவி நான்

உன்னத சீமான் நான்

ஆயிரம் யாகம்

அடிக்கடி செய்தவன் நான்

என்று சொல்பவன்

அசுரன் ஆவான்


தன்னை தானே அளக்க நினைத்து 

அதுவே சரியென ஆசையில் திளைத்து

குலத்திமிர் கொண்டு

கூட்டம் சேர்த்து

பணத்திமிரால் ஆடுபவனே

அசுரன் ஆவான்


ஆணவத்தோடு ஆதிக்கம் செலுத்தி

காம குரோதமும் பஞ்சமா பாவமும்

இயல்பிலே கொண்ட அற்பனே

அசுரன் ஆவான்


இத்தகைய குணங்களை கொண்டோர்களை கீதை அசுரர்களாக காண்கிறது. அதன்படி அவனியில் இவர்களே அதிகமாவர்.


'தான் உயர் குலத்தான்' என தற்பெருமை அடிப்போரை கீதையே கடிந்து கொள்ளும் போது அதுவா உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற நோக்கில் வருண அமைப்பை கொண்டுவந்திருக்கும்?


கீதை சொன்ன வருண அமைப்பில் உயர்ந்தோன் தாழ்ந்தோன் இல்லை. என்பார்வையில், அன்று பாரதத்தில் இருந்த பல்வேறு சாதி கூட்டங்களை அது நான்காக சுருக்க பார்த்திருக்கிறது. அதுவும்,


ஒழுக்கத்தை கொண்டு தர்மத்தை போதிப்பவன், பிராமணன்.


தர்மத்தை செயல்படுத்துவன் மற்றும் காப்பவன், சத்ரியன்.


பொருட்களை முதலாக கொண்டு வாழ்க்கையை நடத்துபவன், வைசியன்


அனுபவத்தை முதலாக கொண்டு வாழ்க்கையை நடத்துபவன், சூத்திரன்


கீதை சொன்னபடி இவை எதுவுமே பிறப்பால் வருவதல்ல. எவரவர்கள் எத்தகைய தன்மை கொண்ட வேலையை செய்கிறார்களோ அத்தகைய வருண அமைப்பிற்குள் அவர்கள் வந்திடுவர்.


"குலனருள் தெய்வக் கொள்கை மேன்மை" என்று நன்னூல் சொன்னபடி ஒருவர் பணியாற்றினால், அவர் பிறப்பால் எந்த சாதியாக இருந்தாலும் முதலாம் வருணமான பிராமணியத்தினுள் நுழைந்திடுவார்.


கீதை ஒரு நல்ல நோக்கத்தோடு இதை கூறி இருந்தாலும், பிற்காலத்தில் இது முற்றிலும் தவறாகிப்போனது. நான்கு என்பது கூட நான்கு விதமான பிரிவை ஏற்படுத்தவல்லது. எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டுமென்பதே சரியாக இருக்கும்.


ஒற்றுமை என்னும் உணர்வு இன்று ஒருவரிடத்திலும் இல்லை. 


எனக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் சாதிகளை பற்றி மிக நீண்ட நேரம் என்னோடு உரையாடிக் கொண்டிருந்தார்.


'இந்த உலகம் நாம் என்ன சொல்கிறோம் என்று பார்க்காது, சொல்பவர் யார் என்று தான் பார்க்கும்- நாம் அதிலிருந்து தெளிய வேண்டும்' என்ற நல்ல வார்த்தையை சொன்னார் அவர்.


நீண்ட நேரம் நாங்கள் பேசிக் கொண்டே இருக்கையில், ஒருகட்டத்தில் திருக்குறளுக்குள் புகுந்தோம்.


'பல உரைகளை படித்து விட்டேன், பரிமேலழகர் உரை போன்று எதுவும் திருப்தி தரவில்லை' என்றேன் நான்.


உடனே அவர், 'நீ பள்ளி காலத்தில் பரிமேலழகர் உரை சிறப்பானது என்று படித்திருப்பாய் அதற்கு காரணம் பூணூல் காரர்கள்' என்றார்.


நான் முன்பு அவர் சொன்ன அறிவுரையை நினைத்துக் கொண்டேன், 'இந்த உலகம் நாம் என்ன சொல்கிறோம் என்று பார்க்காது, சொல்பவர் யார் என்று தான் பார்க்கும்- நாம் அதிலிருந்து தெளிய வேண்டும்'


எனக்கு ஒன்று புரியவில்லை. சத்தியமான வார்த்தைகள் நம் மனதிற்கு தெரியாதா என்ன? இந்த சாதிக் காரன் சொல்கிறான் என்று அவைகளை ஒதுக்கிவிடுவது தான் சரியா?


பரிமேலழகர் உரையிலும் தேவநேயபாவாணர் உரையிலும் மட்டும் தான் திருக்குறளின் மிக பக்குவமாய் சொல்லப்பட்ட கருத்துக்கள் அதிகாரத்திற்கு பொருத்தும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் எனக்கு இவர் சொல்லித்தான் பரிமேலழகர் பிராமணர் என்றே தெரிய வந்தது.


யார் சொல்கிறார்கள் என்பது தேவையில்லாதது. சொல்லப்பட்ட கருத்து யாது என்பதை நோக்குக. மெய்ப்பொருள் காண்பதற்கு யார்யார் வாய்ச் சொல்லை தான் கேட்க வேண்டும், முகத்தையோ பிறப்பையோ நோக்க வேண்டியதில்லை.


கீதையும் அப்படியே. கடவுள் சொல்கிறான் என்று கதை கட்டினால் நம்பி விடுவதா? என்கிறார்கள்.


எனக்கு கீதை கடவுள் வாக்காக தோன்றவில்லை. கண்ணன் என்றொருவர் வாழ்ந்தாரா என்பதும் எனக்கு தெரியவில்லை. ஆனால் அதில் சொல்லப்பட்ட கருத்துகள் ஏதோ ஓர் வகையில் உங்கள் வாழ்வில் பாதிப்பை தரும்.


அந்த பாதிப்பால் நீங்கள் முன்பிருந்ததை விட பன்மடங்கு தெளிவடைவீர்கள் என்பதே சத்தியம்.


இந்த அத்தியாயத்தின் கருத்தை சீராக விளக்காமல் என் மனதில் தோன்றியதை அதிகம் சொன்னதற்கு என்னை மன்னிக்கவும்.


17.சிரத்தாத்ர விபாக யோகம்


நம்பிக்கையை பற்றி கூறுதலே இந்த யோகமாகும். ஞானத்தின்பால் நம்பிக்கை வைப்பவர்கள் தூய அறிவுடையவர்களாகின்றர் அல்லது சாத்வீக நெறிக்கு தள்ளப்படுகின்றர்.


ஆசையின் பால் நம்பிக்கை வைப்போர் (இதை செய்தால் அது கிடைக்கும் என்ற அற்ப நம்பிக்கை) ரஜோ குணத்திற்கு தள்ளப்படுகின்றார்கள்.


காமத்தின் மேலும் இச்சைகளின் மேலும் மட்டும் நம்பிக்கை கொள்வோர் (புலனாசையிலே திளைத்திருப்போர்) தமோ குணத்திற்கு தள்ளப்படுகின்றர்.


தெளிந்த உள்ளம் கொண்டோரையும், பரம சாதுவையும், மௌனத்தையே தாய் மொழியாக கொண்டோரையும் பற்றி இந்த யோகம் புகழ்கிறது.


18.மோக்ஷ சந்யாச யோகம்


இதுவே இறுதி யோகமாகும். துறவறத்தின் சிறப்பினை கூறி கண்ணன் இவ்வத்தியாயத்தோடு கீதையினை முடிப்பார்.


ஒரு லௌகீக மனிதனுக்கு கீதை 100 சதவீதம் உதவவில்லையானாலும், நிம்மதியாக வாழ்வதற்கு தேவையான சூத்திரத்தினை அது எடுத்துரைக்கிறது.


கண்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் நடந்து கொண்டிருந்த இவ்வுரையாடலை கேட்டுக் கொண்டிருந்த சஞ்சயனும் திருதராஷ்டிரனும் போர் துவங்கும் முன்பே ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.


'கண்ணன் இருக்கும் இடத்தில் அவன் கருத்து செயல்படும் இடத்தில் ஜெயம் இருக்கும்; அவர்களே வெல்வார்கள்'


வார்த்தைகளின் அர்த்தத்தை நாம் எப்படி அகராதியில் தேடுகிறோமோ அதுபோல, மனித வாழ்க்கைக்கு தேவையான அர்த்தத்தை நாம் கீதையில் தேடலாம் - மகாத்மா காந்தி


எல்லோரும் வாழ்க்கையில் ஒரே ஒருமுறையாவது கீதையோ, குர்ஆனோ, பைபிளோ படியுங்கள், நீங்களே வியக்கும் வண்ணம் ஏதாவதொரு வகையில் அது அதன் எதிரொலியை நிச்சயம் உங்களிடத்தினில் காட்டும்.


-ஈசதாசன்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு