Trending

தந்திர உலகம் - 9.காவல் மரங்கள்

 ( முதல் பாகம் ) புகைக்கூண்டு

09. காவல் மரங்கள்
மேற்கு மலைகளை கடந்துவந்து வீசும் ஈரம்சிறிதுமற்ற காய்ந்த காற்றானது, கிழக்கிலிருந்து படையெடுத்த திட்டுத்திட்டான மேகங்களை தடுத்தாட்கொண்டதால்,, வந்த மேகங்கள் யாவும் வடமேற்காக பயணிக்க வேண்டியிருந்தது. திரண்ட பெரு மேகம் மேலே உலாபோகும்போது கீழே அதன் நிழல் இருளை கடத்திக்கொண்டு கடந்துபோவது போலிருந்தது.. காலை கதிரொளியில் தன்மேனி மிளிர  பசும்பொன் நிறத்தில் காண்போர் கண்ணைக்குளிர்விக்கும் வனத்தின் வனப்பு, இந்த மேகநிழல் மூடும்போது மட்டும் சற்று பொலிவுகுன்றி காட்சிதரும்..!


மலைச்சரிவுகளில் அடர்ந்தும், நெடுகநீண்டும், கூம்புகூம்பாக உயர்ந்திருந்த மரங்கள்.. அடிவாரத்தில் சற்றே கும்பல் கும்பலாக செழித்து படர்ந்திருந்தன.. ஆங்காங்கே மரங்கள் ஏதுமில்லா பெரும் பள்ளங்கள்இருந்தன.. ஆறு ஓடி அரித்த இடைவெளிகள் இருந்தன.. இடையே சிறு சிறு குன்றுகளும் எழும்பி எட்டிப் பார்த்தன... பரந்த புல்வெளி பரப்புகள் ஒருபுறம்.. பூச்சிகள் கூட பிரவேசிக்க முடியாத புதர்கள் ஒருபுறம்  என அந்த பீட பூமியின் நிலப்பரப்பு ஒரு சமமற்ற போக்கை தோற்றத்தில் கொண்டிருந்தது.. என்னதான் மேடும் பள்ளமும் குண்டும்குழியுமாய் இருந்தாலும் அதை கடந்து போகிற மேக நிழலானது,, தெளிந்த சலனமுற்ற தடாகத்தில் நீரலைகளின் ஊடே நீந்திவிரைகிற மீனைப்போல மிக இலகுவாக கடந்துசென்றது!


பச்சைமரங்கள் படர்ந்திருந்த செறிவனத்தில் அந்த ஓரிடத்தில் மட்டும் சற்றே மர அடர்வு குறைந்திருந்தது. நல்ல இடைவெளியோடு பாதைகள் அமைய... காற்றோட்டமும் ஒளியூட்டமும் நிரம்பபெற்ற புதுஇடம் ஒன்று புலப்பட்டது..! சற்றே கீழ்இறங்கி நெருங்கி சென்று பார்ப்போமேயானால்  அங்கு ஒரு அறுபது எழுபது குடில்களை சேர்ந்தும் தனித்தும் ஒன்றின் மேல் ஒன்றெனவும், சில மட்டும் மரமோடுபிணைந்தும் என ஒழுங்கற்ற போக்கில் எல்லா திசைகளிலும் அமைந்து கிடப்பதை கண்கூடாக காணலாம்.

அவற்றின் கூரைகள்.., மூங்கில் கழியால் கட்டப்பட்டு கோரைப்புற்களால்  வேயப்பெற்றவை. சில வைக்கோல் கொண்டும் ஒருசில ஈச்ச மர பனைமர ஓலைகள் கொண்டும் மூடப்பட்டிருந்தன. அநேக குடில்களின் வாயிலருகே பாறைகற்கள், கற்கோடரிகள் , நீர் நிரம்பிய களிமண்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு குடிலின் பின்புறமும் கற்களை கொண்டு அடுப்பு ஏற்படுத்தபட்டிருந்தது. ஒருசில அடுப்புகள் எரிந்தன.. சிலரது  அடுப்புகள் புகைந்தன. எதுவுமே இல்லாத போதிலும் குறைந்தபட்சம் கனலாவது இருந்தன. ஆதலால் அவ்விடம் உயிர்ப்போடு இருந்தது.

வயதான கிழவிகளும், கூன்விழுந்த கிழவர்களும் உக்காந்தபடியே சில வேலைகளில் ஈடுபட்டிருக்க,, கைக்குழந்தைகளை மடியில் ஏந்தியும் பாலூட்டிய வண்ணமும் சில தாய்மார்கள் உலாவி கொண்டிருந்தனர். ஒரு குடிலின் வாசலில் ஆடவர் ஒருவர் பெரிய மரத்துண்டை கற்கருவி உதவியோடு செதுக்கியபடி இருந்தார்.. இன்னொரு இடத்தில் சிலர் களிமண்ணில் பானை செய்து வெயிலில் காயவைத்தனர்..

 பாதைகளில் அவ்வபோது உயரமான மனிதர்கள் கையில் ஆயுதமேந்தியும், குழுவாக சேர்ந்து எதையோ தூக்கிக்கொண்டும் நடந்துபோயினர். சிறிது தூரம் கடந்தால் நிழலார்ந்த ஓரிடம்,, பாதை ஓரமாக தென்படும்..

அந்த இடம் அவ்வளவு அமைதியாக இல்லை..! 

கிளைபரப்பி வளர்ந்திருந்த அநேக மரங்களில் குரங்கு குட்டிகளைபோல மனித குழந்தைகள் ஏறி அமர்ந்து குதித்து விளையாடி தொங்கிக்கொண்டிருந்தன. அந்த சிறுபிள்ளைகளுக்கு ஏதுவாக அம்மரங்களும் தாழ்வாகவே கிளைத்து சாய்ந்து வளர்ந்திருந்தன. எட்டு வயதினை தாண்டிய ஒரு பயலும் அதில் இருக்கவில்லை..! அதிலும் அவர்கள் மூன்று குழுவாக மூன்று மரங்களில் பிரிந்துகொண்டு ஒவ்வொருவரும் தங்கள் மரத்திலிருந்துகொண்டு மாற்று மரத்துகாரர்களோடு சண்டை போட்டுக்கொண்டு இருந்தனர். யுத்தத்திற்கு ஆயுதம் எதுவெனில் கனிவிதைகள்...! கொப்பு குச்சிகள்.! பெயரறிய முடியாத அந்த மரத்தின் பழத்தை பறித்து ருசித்துவிட்டு விதைகளை அடுத்தவர் மீது ஓங்கி வீசுவது... தான் விதிமுறை. சிறுவர் சிறுமியர் என இருபாலரும் அதில் அடக்கம். சிறுமியர்மட்டும் கழுத்திலிருந்து வயிறுவரை தொங்கும் நுண்ணிய மணிமாலைகளை ஆபரணமாய்

அணிந்திருந்தனர். இருபாலருமே காதணிகள் விதவிதமாய் கொண்டிருந்தனர். வாழை நாரிழையும் சில கொடிவகை தாவர காய்ந்த தண்டிழைகளையும் இறுக நெய்து இடையில் உடையென உடுத்தியிருந்தனர். இரண்டுமரங்கள் பாதையின் ஒருபக்கத்தில் அருகருகேவும் இன்னொரு மரம் மட்டும் எதிரிலும் இருந்ததால்.. அருகருகே இருந்த மரத்தின் சிறுவீரர்கள் குச்சிகளை ஏந்திகூட யுத்தம் செய்ய முடிந்தது.

எதிர்மரத்து காரர்களுக்குதான் விதை குண்டுகள் தேவைப்பட்டன.


முன்னொரு காலத்தில் அந்த மூன்றுமரங்களும் ராஜமரியாதையோடு நடத்தப்பட்டன. மாலை மரியாதை.. சடங்கு பலி வேள்வி என ஏததோ அதன் அடியில் நடந்திருக்கிறது. எத்தனையோ மகளிர் அம்மூன்று மரங்களை நூற்றுக்கணக்கான தடவை சுற்றி வந்திருக்கின்றனர்.


ஆண்களிடையேயான

வீரவிளையாட்டு போட்டிகளில் இம்மரம் முக்கிய பங்காற்றி இருக்கிறது.. ஏழு எட்டு தலைமுறைகளின் வாழ்வை கண்டு கடந்திருக்கிறது அந்த மரம்..! அந்த குடியிருப்பின் கௌரவமாக... எல்லையாக.. காவலாக இருந்த  அதனை பாதுகாப்பதற்கென்றே ஒருகாலத்தில் தனிவீரர்படை இருந்திருக்கிறது..! இப்போது அதன் அவல நிலை தனி...!அவ்வழியே போய்வருகிற வளர்ந்த மனிதர்களுக்கு இது ஏதோ நண்டுசிண்டுகளின் நவீன விளையாட்டாக காட்சிதந்தாலும்,,, விளையாடும் அந்த 17 வாலில்லா வானரங்களின் மனோரதத்திலும் இது தன்மானத்துக்கு விடப்பட்ட சவாலாகவும் தங்கள் அணியின் வெற்றிக்காக மும்முரமாக மோதுகிற யுத்தகளமுமாகவே தோன்றின. புற உலகை மறந்து எல்லையில்லா உவகையோடு எதிரணி காரனை எவ்விதம் வீழ்த்துவது என மேலேயிருந்துகொண்டு தீவிரமான மனக்கணக்கில் ஈடுபட்டிருந்த அவர்களின் செயலை,  கீழே இருந்து அதட்டல்தொனியில் வந்த ஒரு குரல் அப்படியே ஸ்தம்பிக்க செய்தது.


"ஏய் கழுத...! அங்க என்ன பண்ற? "


(பொதுவான இந்த வசைபாடல் அங்கிருந்த பல சிறுவண்டுகளையும் தம்மைதான் அழைக்கிறார்களோ..? என்று ஒருகணம் திடுக்கிட செய்தது.. ஆனால் மற்றவரை காட்டிலும் 'மீனுகுட்டி' க்கு அந்த அதட்டிய குரலும்கூட வெகுபரீட்சயமாக தோன்றியதால் அவள் சற்றுஅதிகமாகவே திடுக்கிட்டாள்..! அவளது நடுக்கம் நியாயம்தான். கீழே அவளது அப்பா நின்றிருந்தார்..! அவரது தோளில் ஒரு நீண்ட மூங்கில் கம்பு..  அதன் மற்றொரு முனையை 'நபி மாமா' ஏந்தியிருந்தார். இருவருமாய் அதில் வேட்டையாடப்பட்ட பன்றியைபோன்றதொரு கொழுகொழு பிராணியை கட்டித்தூக்கிச்செல்கிறார்கள் என்று தெரிகிறது. )


"ஏய் மீனு உன்னத்தான் ! ஏன் முழிக்கிற..? இது என்ன மரத்து மேல லாம் ஏறிகிட்டு.. மாத்திமாத்தி அடிச்சிகிறீங்க.. கையில என்ன குச்சி?"


"இல்லப்பா..! எதிரிங்ககிட்டேந்து எங்க மரத்த காப்பாத்துறோம்....! அவங்க தாக்குதல முறியடிக்கினும்ல.. அதுக்குதான் இந்த குச்சி...."


(மீனுகுட்டியின் சற்றே மழலைக்கு மிஞ்சிய சொற்களை கேட்டு நபி மாமா சிரித்துவிட்டார்!)


"பாத்தியா நபி, இந்த குட்டி இப்பவே என்னலாம் பேசுதுனு.." 


"பேசாதா பின்ன..! கோமுகன் பொண்ணா கொக்கா? "


"அட நீ வேற.. இது அவ ஆயா வோட வாயிப்பா..!"


"யாரு தடங்கண்ணி ய சொல்றியா.?. என்னப்பா நம்ம குடியிருப்புலேயே அமைதியான பொண்ணு உன் மனையாள் தடங்கண்ணி தானப்பா..! உனக்காவ சொல்றேனு நினைக்காத நீ யாருகிட்ட வேணுனாலும் கேளேன்.."


"ஆ..ம்..! வெளியில லாம் அமைதியாதான் நடந்துகுவா.. வீட்டுல எப்பவாது வாக்குவாதம் எழுந்துட்டா அவளோட பேச்சுக்கு மறுப்பே சொல்ல முடியாது.. அப்படி கேட்பா.. தெரியுமா..?"


(நபி மறுமொழி ஒன்றும் சொல்ல வில்லை.. முன்னும் பின்னுமாக அவர்கள் தோளில் மூங்கில் கழியை  சுமப்பதால் ஒருவரை ஒருவர் முகம்பார்த்து பேசமுடியவில்லை.. ! நடக்கும்போது தெரியாத சுமை.. இப்போது மரத்தின் அருகே சிறிது நிற்கவும் பாரமாக தோன்றியது.

கோமுகன் தன்மகளோடு பேசியதால் நபி அங்கேயே நின்றுவிட்டார்..)


"சரி புறப்படுவோமாப்பா..? தோள்பட்டை வலிக்குது...." நபி கனத்த குரலில் கேட்டார்.


"இதோ ஒரே ஒரு சேதி.. சொல்லிபுட்டு வந்துடுறேன்.." என்றவர் மீனுகுட்டியை பார்த்து..

"ஏய் மீனு..! சென்னி வந்தான்..னா.., அப்பா "கூலக்கூறு" க்கு போறேன்னு சொல்லி.., அங்க வரச்சொல்லு..! அப்படியே அம்மாகிட்டயும் சொல்லிரு.."


"சரிப்பா... விளையாடிமுடிச்சதும் போயி சொல்லிடறேன்..."


"சரியா போச்சு..ஏய் கழுத..! முதல்ல கீழ இறங்கு..! நீ ஆடுனது போதும். இது என்ன விளையாட்டா.. ? ஏய் உங்க எல்லாரையும்தான்..கேக்குறேன்.. ஒழுங்கா எல்லாரும்கீழ உக்காந்து ஆடுங்க..! மேலே ஏறி தொங்கிட்டு இருக்கிற பாத்தா திரும்பி வந்து உதைப்பேன் ஜாக்கிரதை..!" என்று கோமுகன் ஆவேசமாய் கூறிவிட்டு, பின்பு நபி யை நோக்கி, 


" நீ புறப்படுப்பா நபி..., நாழி ஆவுது சீக்கிரம் போவோம்!!" என்று ஆயத்தம் செய்தார்..மெல்ல நடக்கத் தொடங்கிய நபி,

"ஏம்..ப்பா கோமுகா! உனக்கே நல்லாருக்கா சின்னபுள்ளைங்க ஏதோ புடிச்சத விளையாடுது அதுங்கள போயி மிரட்டுறியே.."


"என்ன நீயும் இதை விளையாட்டுங்குற.. நம்ம காலத்துல எப்படிலாம் விளையாடினோம்..? மலை ஏறுவது, ஓடுவது, கயிறு சுற்றுவது, ஈட்டி எறிவது, அம்பு எய்வது, அதிக பாரமான கல்லை தூக்கிகாட்டுவது, குளத்தில் நீந்தி மூழ்கி அடிமண் எடுப்பது.... என இப்படி தனித்திறமைய காட்டுவோமே தவிர,, அடுத்தவன எப்பவாது தேவையின்றி சீண்டுவோமா? இதுங்க இப்பவே கூட்டணி அமைச்சி ஒருத்தர ஒருத்தர் அடிச்சுகிதுங்க.. இதுங்கள இப்படியே வளரவிட்டா அப்பறம் இந்த இடத்தையும் விட்டுட்டு வேற இடம்தேடி நகரவேண்டியதான்...!"


"ம்ம்.. அதுலாம் நம்ம காலம்.. ஏன் அப்பகூட நம்ம அப்பா, தாத்தாக்கள் வந்து நம்மல கண்டிக்கலயா என்ன?"


"ஆமா நபி!  அப்போலாம் இந்த மரத்தை தெய்வமா வேற வணங்குனாங்க..! அது பக்கத்துல நின்னு பொய்பேசவே எனக்கு பயமா இருக்கும்!! ஒரு தடவ ஏதோ தெரியாம விளையாட்டா அந்த மரத்துல ஒருகால ஊன்றி மிதிச்சுகிட்டு நின்னுருந்தேன்.. எங்க அப்பா அதுக்கே என் தோலை உரிச்சிட்டாரு..! "


"அதுவந்து கோமுகா.., அப்போலாம் இந்தமரம் குடியிருப்புக்கு தூரமா எல்லையா இருந்துது.. அதான் மதிச்சாங்க..! இப்ப குடியிருப்பே இத சுத்திதான் இருக்கு.. எதுவுமே பக்கத்துல இருந்தா அதன் அருமை தெரியாது இல்லயா..! மேலும் அவங்க காலத்துல வேலை அதிகம் விளையாடுறது குறைவு.."


"ஆமா..மாம்..! எங்க தாத்தாவுக்கு கூட ஒண்ணு வேகமா மலை ஏறனும் இல்லாட்டி போனா தண்ணில மூச்சு அடக்கி நிக்கனும் இதவிட்டா வேற எதுவும் தெரியாது..! இதையே செய்ய சொல்லி பாடா படுத்துவாரு..! அவருகாலத்துல அதுதான் ரொம்ப அதிசயமான விளையாட்டா இருக்கும் போல..!"


  " ம்.... இருக்கும்.. இருக்கும்..! ஆனா ஒண்ணு மட்டும் உறுதி.. கோ முகா! சிறுபிள்ளையில நாம எந்த விளையாட்டு விளையாடினாலும்.. வளர்ந்தபிறகு கட்டாயம் அது ஏதோ ஒரு விதத்துல பயனுள்ளதா இருக்கும்.. ! இதோ நம்பள பாரு,, நாம சின்ன புள்ளைல யாரு அதிக எடைய தூக்குறா னு போட்டி போடுவோம்.. அதுதான் இப்ப இத சுமக்குறத்துக்கு உதவுது..!"


"ஹா..ஹா.. சரியா சொன்ன நபி..! இந்நேரம் மத்த ஆளுங்களா இருந்தா இந்த மிருகத்த வேண்டிய அளவு வெட்டி எடுத்துகிட்டு மிச்சத்த அங்கேயே போட்டுட்டு போயிருவானுங்க.. இல்லாட்டி அங்கேயே வர மத்த ஆளுங்களோட பங்குபோடணும்.. ஏதோ நாமதான் உருப்படியா இவ்ளோ தூரம் எடுத்துட்டு வரோம்..!"


"அதுசரி... சென்னியை ஏன் வரச்சொன்ன ?.., " முன்னே மூங்கிலை ஏந்தியபடி போய்கொண்டே நபி கேட்டார்,


"அவனும் இங்க வந்து நாலுவிஷயம் தெரிஞ்சுக்க தான்..

எப்ப பாரு அந்த ஊமை பையனையும் இன்னும் ரெண்டுபேரை யும் கூட்டிகிட்டு ஆத்தங்கரை லயே  போயி கதினு கிடக்குறான்.. " 


"அட.. அவன் நல்லா பிரமாதமா வேட்டையாடுறான் னு கேள்விபட்டேன்..ப்பா... அந்த பசங்களும் கூட நல்ல புள்ளைங்க தாம்பா.."


"வேட்டை செய்றான்தான்.. ஆனா வேட்டையாடுனா மட்டும் இப்பலாம் போதுமா..? வேட்டையாடினத கொண்டுவந்து விலைபேச கத்துக்கணும்ல...இல்லனா இவன் திறமைய வெச்சி இன்னொருத்தன் தின்னுட்டு போயிருவான்..! அதான் இப்பவே கூட இருந்து பார்த்து கத்துகட்டும்..னு..!"


"ஆஹா.. ரொம்ப சரியா சொன்ன.. அடுத்தவாட்டிலேந்து நானும் என் மவன அழைச்சிட்டு வரேன்..!!"


..........(இவ்விதமாக பேசிக்கொண்டே நடந்து வெகு தூரம் சென்று மறைந்தனர்...)


இவர்கள் சென்ற பிறகு மரத்திலிருந்த மூன்றடிஉயர வீரமறவர்களின் சங்கம் ஏகமனதாக முடிவெடுத்து மீனுக்குட்டியை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க முடிவெடுத்தது. அவளது அப்பாவால் தங்கள் பாதுகாப்பு பணிக்கு இடையூறு விளையும் என அவர்கள் கருதினர். அவள் மரத்திலிருந்து இறங்கினாள். ஏமாற்றமும் சோகமும் அவள் முகத்திலேயே தெரிந்தது.  வேகமாக வீடு நோக்கி நடந்தாள்.


தன் பிரியமிகு தோழி போவதை கண்டு 'வேணு'வும் இறங்கி அவளோடு ஓடி சேர்ந்தாள்..


"ஏய் மீனு! கொஞ்சம் நில்லடி..! நானும் வரேன்..!"


திரும்பி பார்த்து புன்முறுவல் பூத்தாள் மீனுகுட்டி.

" ஏன் வேணு.. உன்னையும் விரட்டுனாங்களா..?"


"ச்சீ.. ச்சீ.! உங்க அப்பா சொன்ன மாதிரி எனக்கு நிஜமாவே இந்த விளையாட்டு பிடிக்கலடி.. ஏதோ நீ இருக்கியேனுதான் வந்தேன்.. நீயே கிளம்பிட்ட,, அப்பறம் எனக்கென்ன அங்க வேலை?? அதோட எனக்கு அந்த பக்கத்துமரத்து "பைசாந்தன்" பயல பாத்தாலே பிடிக்காது.. அவன் தான் உன்னைய விரட்டிவிட சொல்லி எல்லாரையும் தூண்டிவிட்டான்..!" 


"ஆமாடி.. ! என்னமோ அந்த மரமே அவனுக்குதான் சொந்தம்னு ஒரு நினைப்பு.. அவன்தான்டி எப்போ பாத்தாலும் நம்ம மரத்துபுள்ளைங்க கிட்ட வம்பு பண்ணிட்டே இருக்கான்..! ஒத்துமையா ஆடிபாடி விளையாடிட்டு இருந்த நம்மள இப்படி அடிபுடி விளையாட்டுக்கு மாத்தினதே அவன்தான்.."


"பேசாம உங்க அப்பா கிட்ட அவன மாட்டி விட்டுட்டா என்ன..?"

வேணு விழிஅகல ஆவலோடு கேட்டாள்...


" ஐய..ரொம்ப சமத்துதான்..! அவனும் அவங்க அப்பாகிட்ட போயி பதிலுக்கு நம்மள மாட்டி விட்டா என்ன பண்ணுவ.. அவரு இங்க வந்தா குடியிருப்புல எல்லாருமே பயப்படுவாங்க.. மேலும் அவன் சொன்னா எல்லா பசங்களும் அவனுக்குதான் வக்காளத்து வாங்குவாங்க.. நம்ம பேச்சு சபைல எடுபடாதுடி.."


"அப்படினா இன்னொரு வழி சொல்றேன் கேளு.. உன் அண்ணன் சென்னிகிட்ட போய் சொல்லுவோம்... சென்னியண்ணாவும் அந்த பைசாந்தனோட அண்ணாவும் கூட்டாளிங்கதான்.. அவங்க அண்ணன் மூலமா இந்த படுவாபயல கண்டிக்க சொல்வோம்.. எப்படி..?"


"ஆ..! இது கூட நல்ல யோசனைதான். அவன் அண்ணனுக்கு மட்டுந்தான்..டி அவன் பயப்படுவான்..சரி.சரி... சென்னி வரட்டும். வைச்சிக்கலாம்.. " என மீனு குட்டி சொல்லி முடிக்க சற்று சத்தமாக வேணு உரைத்தாள்..,


 "ஏ.. மீனு..!  அங்க பாருடி..!"


வேணு விரல் உயர்த்திய திசையில் சில அடி தொலைவில் எதிரே படு சுறுசுறுப்பாக சென்னி போய்கொண்டிருந்தான்..!


"கூப்பிடுடி....!" வேணு மீனுவை தூண்டினாள்."அண்ணே....இங்க பாரு..!"


மீனு குட்டி பூனைக்குட்டியை போல கத்தினாள்..

சட்டென நின்று பக்கவாட்டில் குரல்வந்த திக்கில் பார்த்த சென்னி.. புன்னகை தவழ்ந்த முகத்தோடு இருவரையும் நோக்கினான். கையை காட்டி அழைத்தான்...


 (இரு சிறுமிகளும் தங்கள் சிறுமணிகளும் காதணிகளும் குலுங்க ஓடி வந்தனர். )


"இதென்ன கையில்..?" அருகில் வந்ததும் மீனு கேட்டாள்.


சென்னி தன் முதுகுக்கு பின்னால் இருந்து கையை எடுக்க, அவன் கரம் ஒரு பேரழகு முயல் குட்டியின் காதுமடல்களை பற்றி இருந்தது.

அச்சத்தில் வெளிறிய முகத்தில் அந்த வெள்ளைமுயல் இருண்ட தனது உருண்டை விழியால் மீனுவை நோக்கியது..!


"ஐ..! முயல்..முயல்..!" 


மகிழ்ச்சியில் மான்குட்டிபோல  துள்ளியவாறு கைதட்டினாள் மீனு.

சென்னி அதை அவளது கைகளில் தந்தான். அவளும் அவனைப்போலவே அதன் காதுமடலை  பிடிக்க பார்த்தாள் ஆனால் அவளது பிஞ்சு கரம் போதவில்லை..! ஆதலால் உடலோடு சேர்த்து அணைத்து ஏந்திகொண்டாள்.


"எங்கு கிடைத்தது சென்னியண்ணா..? ஒன்றுதான் இருந்ததா..?" வேணு கேட்டாள்.


"வரும்வழியில் யாரோ வைத்த சுருக்கு வலையில் சிக்கி இருந்தது. பாவமாய் இருந்தது குட்டிமுயல் அல்லவா? அதான் மீட்டு கொண்டுவந்துட்டேன்..."


"அப்படினா இதை நீங்கள் வளர்க்க போகிறீர்களா அண்ணா.?"


"இல்லை.. வேணு அதுமுடியாது. எங்கள் வீட்டில் அப்பாவோ அம்மாவோ, முயல்- தரையில் குதிப்பதை விட குழம்பில் கொதிப்பதை தான் அதிகம் விரும்புவார்கள்..வேணும்னா ஒண்ணு செய்யலாம் இத நீ எடுத்துபோய் வளர்த்தாலென்ன?"


சென்னி யின் இக்கூற்று வேணுவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அதேநேரம் மீனு குட்டி பொறாமையும் ஏமாற்றமும் அடைந்தாள். எனினும் தன் வீட்டின் நிஜநிலைமை கருதி அவளும் அதற்கு உடன்பட்டாள்.


பிறகு மூவரும் குடிலை நோக்கி நடந்தனர். வழியில் இருந்த சில குடிலில் வாசலில் நின்றிருந்த பெண்கள் இவர்களை நோக்கினர்..


ஒரு குடிலின் வேலிஓரமாக நின்று தன் குழந்தைக்கு வேடிக்கை காட்டி அமுதூட்டிய அன்னை ஒருத்தி,, "ஏய் இங்க பாரு வேணு போறா.. சென்னி போறான்.. மீனு குட்டி போறா.. கையில வேற ஏதோ தூக்கிட்டு போறா..! " என தன் குழந்தையை பார்க்க சொல்லி வாயில் உணவை ஊட்டினாள்.


அதை கேட்டு சென்னி சிரித்தவாறு கடந்திட.. மீனு தன் கையில் இருந்த முயலை பெருமிதமோடு நன்றாக அவர்களிடம் தூக்கிகாட்டினாள்..


"அட..! முயலு.. அங்கபார்.. அங்கபாரு.. மீனு என்ன வெச்சிருக்கா?? முயல் ! வெள்ளை முயல்!... ஆ சொல்லு.!"

என்று வேடிக்கை காட்டி இன்னொரு வாயும் ஊட்டினாள் அந்த அன்னை.மூவரும் சென்னி யின் குடிலை அடைந்தனர்.. சென்னி மீனுவிடம் "நீங்கள் இருவரும் உள்ளே வரவேணாம்! இங்கேயே இருங்கள்!" என கூறிவிட்டு சென்றான்.


முயலை கண்டதும் முதலில் தாங்கள் முறையிட நினைத்ததை முற்றிலும் மறந்து அதற்கு பெயரிடும் முனைப்பில் இருசிறுமிகளும் வாயிலருகேயே உக்காந்துவிட்டனர்.


உள்ளே நுழைந்ததும் குடிலைதாங்கி இருந்த ஒரு தூண்கம்பத்தில் சுற்றி கட்டியிருந்த கயிறை அவிழ்த்து அதை பிடித்தபடி மேலே பரணியில் ஏறினான் சென்னி. ஒரே ஒட்டடை..! தூசி..! அங்கிருந்த ஒரு கூடையில் தோல்பையில் சுற்றி வைத்திருந்த மரகத கற்களை எடுத்து பிரித்து எண்ணி பார்த்தான்... பிறகு மறுபடி அதேபோல கட்டிசுருட்டி தன் இடையில் சொருகிகொண்டு மெதுவாக கீழே குதித்தான். சரியாக அந்தநேரம் அன்னை தடங்கண்ணி வந்துவிட்டாள்.


"வாடா வானர ஜென்மமே! வந்ததும் வராததுமா மேலே ஏறி குதிக்கிறியே அறிவு இருக்கா..?"

அன்னையின் அன்றாட வசைபாடலை வாங்கிக்கொண்டு,


 "அப்பா எங்க? " என்றான் சென்னி.


"தெரியாது..! விடிகாலையில் நபிமாமா வந்து அழைச்சுட்டு போனார்..இன்னும் வந்தபாடில்லை!  நான் அடுப்பில் வேலையா இருக்கேன்... சமைத்துமுடிக்க போறேன்.. இஷ்டமிருந்தா இருந்து தின்னு இல்லாட்டி எங்காவது போய் தொலை..!"


"ஏம்மா ! உனக்கு வேற வேலையே இல்லயா? எப்ப பாத்தாலும் அடுப்பு எரித்து கொண்டே இருக்கியே..?"


"ம்ம்..! ஏன் கேட்க மாட்ட..! மனுஷங்க வயிறு பசியால எரியும்வரை இந்த அடுப்பும் எரிந்து கொண்டுதான் இருக்கும். போடா அங்குட்டு..!"


" அதுதான் ஏன் சமைக்கிறீங்க..னு கேக்குறேன்..  பச்சையா பறித்து சாப்பிட இந்த காடு எவ்ளோ உணவுகளை அள்ளித்தருது... அநாவசியமா  போய் மிருகங்களை வேட்டையாடி கொன்னு சமைச்சி திங்கிறீங்களே ! ஏன்?"


( சென்னி வேண்டுமென்றே விளையாட்டாகதான் அன்னையிடம் தர்க்கம் செய்தான்.. அது அவன் அன்னைக்கும் தெரியும்... உண்மையில் சென்னிக்கு நிகரான வேட்டையாடி அந்த குடியிருப்பிலேயே இன்னொருவர் கிடையாது! )


"நீ இன்னும் எங்க தாத்தா காலத்துலேயே இரு.. அப்போது இருந்த சொற்ப ஜனங்களுக்கு இந்த காடு அள்ளி வழங்கியது என்னமோ நிஜம்தான். ஆனா இப்பலாம் யார்யாரோ வர ஆரம்பிச்சிட்டாங்க.. வடக்கிலும் கிழக்கிலும் ஏராளமான புதுக்குடியிருப்புங்க பெருகிடுச்சு. ஒவ்வொருவரும் எல்லை வகுத்துக்கொண்டு இது உன் இடம்,, இது என் இடம்னு பிரிச்சு மேயுறாங்க..! கிடைக்கிற உணவு போதுமானதா இல்ல.. புலிகளை நாம உயிருக்கு பயந்து விரட்டி விடுறதால அது வேட்டையாடி இருக்க வேண்டிய மான்களும் ஆடுகளும் அளவுக்கு அதிகமா பெருகி காட்டை அதிகமா மேய்ந்து...நம்முடனேயே உணவுபோட்டிக்கு வந்திடுது... புலியை எந்த கடமையிலேந்து தடுத்தோமோ அதையும் நாமே செய்துதான் சரி பண்ணனும் எப்பவோ.. பருவத்தில் காய்க்கும் பழமரங்களை நம்பி வருஷம் பூரா வயித்தை காய போட முடியாது. கிடைக்கிறத அப்பப்போ சாப்பிட்டு தான் வாழனும்.. !"


"......   சரி அப்படியே வெச்சுகுவோம். உணவு கிட்டாத போது எண்ணிக்கைல அதிகமா சின்ன சின்னதா இருக்குதே... மீன், நண்டு, நத்தை, பறவைங்க..கோழி,காடை மடையான், ஆடு இதுங்களோட நிறுத்திக்க கூடாதா..? பெரிய பெரிய அரிய ஜீவராசிகளை கொன்னு தான் நாம பொழைக்கனுமா என்ன..?


"இவ்வளவு கேக்குறியே பொழுதுக்கும் ஆத்தங்கரையையே சுத்துற நீ ஒரு நாளாவது மீன் புடிச்சிட்டு வந்துருக்கியா..? "


"அது ...அதுவந்து.. அன்னக்கி.."

(சென்னி தனக்கு மின்சார மீனுடன் நேர்ந்த அதிர்ச்சி சம்பவத்தை சொல்ல வாயெடுத்தான் ஆனால் முடியவில்லை..)


"சும்மா இன்னக்கி நாளைக்கினு ஏமாத்தாத.. இதுல நீ பெரிய வேட்டைகாரன்னு.. வேற எல்லாரும் சிபாரிசு  செய்றாங்க..!ஹி..ஹி..ஹி.."


"உனக்கு இப்ப என்ன... மீன் தான வேணும் இதோ வரேன்..இரு."


விருட்டென வெளியே போனவன் நொடியில் திரும்பி வந்தான் தங்கை மீனுகுட்டியை தூக்கிக்கொண்டு...,,,


"இந்தாம்மா நீ கேட்ட மீனு..! எப்படியும் 'ஐந்துதேங்காய்' எடை இருக்கும்!! "

என்றவன்..மேலும், மீனுவை பார்த்து.., "என்ன மீனு.. சரிதான..?"

என்றான்..


"...உம்.... உன் மூஞ்சி..! ப்பே..!"

என்று ஏசி விட்டு அவளாகவே அவன்பிடியிலிருந்து விலகி துள்ளி குதித்து அன்னையிடம் ஓடினாள்.


அன்னை அவளை வாஞ்சையோடு அள்ளி...தூக்கிஅணைத்து ஒரு முத்தமிட்டாள்.


பிறகு மீனு சொன்னாள்.., " அம்மா! அப்பாவும் நபி மாமாவும் எங்கேயோ 'கொலக்கூறு'க்கு போறாங்களாம்..!

அண்ணனையும் அங்கு வரச்சொல்லி சொல்ல சொன்னாங்க."


"என்ன..! அப்படியா.. எப்போ பாத்த நீ..?"


"நாங்க எல்லாரும் காவல் மரத்தடில விளையாடிட்டு இருந்தோமா....

அப்போ அவங்க இரண்டு பேரும் பெரிய மூங்கி கம்புல கரடியும் பன்னியும் ஒன்னா கலந்தமாதிரி ஒரு மிருகத்த கட்டித்தூக்கிட்டு போனாங்களா.... அப்பதான்...!"

என மீனு குட்டி தன் பிஞ்சுமொழியில் விளக்கிக்கொண்டிருக்க..., இடைமறித்த சென்னி,


"ஓ..! கூலக்கூறு நோக்கிபோறாங்களா... பேசாம இவ சொல்ற மாதிரிஅதுக்கு 'கொலைக்கூறு' னே பேருவெச்சிருக்கலாம்.. வேட்டையாடின மிருகத்த வெட்டி கூறுபோட்டு விலைபேசுற கேவலமான இடமாச்சே.. அங்கயாவது.., நானாவது.., போறதா..வது..,,ஹ..ஹா..!!"


"அப்படி இல்லடா சென்னி..., முந்திலாம் நம்ம மூதாதைங்க உணவு சேகரிக்க தனித்தனியா குழு குழுவாலாம் போவாங்க.. எல்லாருக்கும் ஒரே மாதிரி  கிடைக்காது.. வெவ்வேறு அளவுல காய்கள், பழங்கள், தானியங்கள், கீரைகள் ,பருப்புகள்.. ஒருத்தருக்கு நிறையாவும் ஒருத்தருக்கு குறைவாகவும் கிடைக்கும். மேலும் அதுல நல்லதாகவும்.. சீக்கிரம் கெட்டுபோயிடுற மாதிரியுமா என ஆளாளுக்கு ஒவ்வொருதினுசா கொண்டுவருவாங்க..


கொண்டுவர எல்லா கூலத்தையும் குடியிருப்போட வயதான தலைவர் குடிலுக்கு முன்னாடி கொட்டி ,, வகை பிரிச்சு அப்பறமா கூறு போடுவாங்க.... யாருக்கு எதை எவ்வளவு குடுக்கனும்னு அவங்கவங்க தேவைய பொருத்து தலைவர்தான் தீர்மானிப்பாரு.. ! வாங்கிட்டுபோற அளவுக்கு ஏற்ப அவங்க குடும்பத்துக்கு தனியான வேலையயும் செய்யச்சொல்லி உத்தரவு வரும்..! பெரும்பாலும் அது பாதை அமைக்கிறதாவோ, கூரை வேயுறதாவோ, களிமண் கொண்டுவந்து பானை செய்றதாவோ மாதிரி.. பொதுவான காரியமா இருக்கும்..! இப்படி கூலங்களை(தானியம்) கூறு(பங்கு) போட்ட இடம்-ங்கிற தால அதை 'கூலக்கூறு'னு சொல்றாங்க.... ஆனா இப்ப யாரும் உணவு சேகரிக்க போறதில்ல.. கண்ணுல படுறத அடிச்சி சாப்புடுறது.. இல்லனா யாராவது இதுமாதிரி பெருசா புடிக்கிறத பேரம்பேசி எதையாவது குடுத்துட்டு வாங்கிக்கிறது.. இப்படியான இடமா அது மாறிடுச்சு.. நீ நேர்ல போனினா இன்னும் வேடிக்கை யா இருக்கும்..!""...ம்.ஹூம்.. இல்ல இல்ல! நீ என்ன கதை சொன்னாலும் சரி நான் அங்க போறதா இல்ல. எனக்கு வேற முக்கிய வேலை இருக்கு மா..!

அவசரமா இப்ப போயாகணும்..

அதுபோக அப்பா வந்தாருனா.. 

நாளைக்கு நாங்கலாம் வனத்தை தாண்டி போறோம்.. போயிட்டு திரும்பி வர குறைந்தது ஒருவாரம் ஆகும்னு சொல்லிரு..!"


"என்ன விளையாடுறியா..? நாளை மறுநாள் நிலவு விழா தொடங்குது தெரியுமுல...?"


"ஓ..! நல்லா தெரியுமே.. நான் போறதே அதுக்காகதான்.. இங்கய விட பெருமணல் தீவுல இன்னும் விஷேஷமா இருக்குறதா செய்தி கிடைச்சது.... அதுனால நாங்க நால்வரும்.. முடிந்தால் ஐவராக அங்கு போகிறோம்!"


"பெருமணல் தீவா? அடப்பாவிகளா..? அங்க புல் பூண்டு கூட விளையாதே..!  நீ இதற்கு முன்பு கடல் ஐ கண்ணால்கூட கண்டதில்லை..வீணா அங்க போயி பட்டினிகிடந்துட்டு திரும்பி வரப்போற...பாரு! சொன்னால் கேளு சென்னி, இங்கேயே இரு.. ! இயற்கையா பாத்து நல்லசமயத்துல நமக்கு உதவிஇருக்கு.. அப்பா போதுமான பொருளோடு வருவார். அதை கொண்டு நிறைய பண்டங்களை நிலவுவிழா சந்தையில் வாங்கலாம்..  குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ச்சியை அநுபவிக்கும் வாய்ப்பை இழந்துவிடாதே.. பின்னாளில் நீ வேண்டினாலும் அது கிட்டாது!"சொல்லி முடித்துவிட்டாய் அல்லவா? சரி.. மிக்க மகிழ்ச்சி! இப்போ நான் கிளம்பட்டுமா..? மிச்சத்த இரவு வந்து பேசிக்கலாம்.  வருகிறேன்..!!"


"ஆ..! அண்ணா நிஜமாவே போறீயா..? அப்போ....எனக்கு...."


"கட்டாயம் நீ அதிசயிக்ககூடிய ஒரு பொருளை வாங்கி வருகிறேன்.. மீனுகுட்டி..!  ம்.... அம்மா உனக்கு ஏதும்...?"


தடங்கண்ணி ஏதும் பதில் சொல்லாமல் வெடுக்கென குடிலின் பின்புறம் சென்று அடுப்பில் கலனை வைத்தாள்... விறகுகளை திணித்து தீயை நன்றாக மூளச் செய்தாள்.. எனினும் அவளது உள்ளக்கனல் அதையும்விஞ்சி இருந்தது!!


இதை எதிர்பார்த்தவன் போல அவசர அவசரமாக தனக்கு வேண்டிய பொருள்களை எல்லாம் அள்ளி ஒரு வலைபோன்ற கயிற்றுப்பையில் போட்டு மூட்டையாக கட்டிக்கொண்டு  சென்னி புறப்பட்டான்.. வாசலில் இருந்த ஈட்டி யை எடுத்துக்கொண்டு நேராக வீறுநடை போட்டான். 


சற்றுமுன்புவரை மனித தேனீக்கள் மொய்த்திருந்த அந்த காவல் மரங்களின் அருகில் வந்தான். இப்போது அம்மூன்று மரங்களும் தனிமையில் தங்கள் கிளைகரங்களால் ஒன்றை ஒன்று தழுவியபடி அமைதியில் நலம் விசாரித்தவண்ணம் இருந்தன.


நெருங்கிவந்ததும் அம்மரத்தில் ஒன்றிடம் போய் நெற்றியை வைத்து முட்டிக்கொண்டு கண்மூடி நின்றான். பிறகு தரையில் விழுந்து வணங்கினான். மூட்டையை கீழே வைத்துவிட்டு  என்ன நினைத்தானோ,, சரசரவென மேலே ஏறி உச்சியை அடைந்தான். அதிலொரு பொந்து இருந்தது.. அதனுள் கையை விட்டு துழாவினான்.. எதுவுமில்லை.. மறுபடியும் நன்றாக துழாவினான். நெற்றிபுருவம் சுருங்க குழப்பத்திலும் கவலையிலும் உறைந்தான்.. கீழே இறங்கி குதித்து மரத்தடியில் சுற்றி சுற்றி எதையோ தேடினான்..


"இதை தேடுகிறீர்களா சென்னி அண்ணா??"


குரலை கேட்டதும் தூக்கி வாரி போட திரும்பிபார்த்தால் அங்கே எதிர் மரத்தின் கிளையில் ஜம் என்று அமர்ந்தபடி இரண்டரை அடி உயர "பைசாந்தியன்" காட்சிதந்தான். அவன் கையில் அரிதானதும் பழமையானதுமான கூரிய கற்கத்தி இருந்தது. அளவில் அது கையடக்க அளவுதான் எனினும் அந்த சிறுவனுக்கு அது கர நீள கழி  போல இருந்தது.


"ஆகா..! அதுதான்.. இது உன்னிடத்து எப்படி... பைசாந்தியா..!"


"விளையாடும்போது எதேச்சையாக எடுத்தேண்ணா..! இந்தாங்க.. "


சென்னி அவனிடம் சென்று கற்கத்தியை  பெற்றுகொண்டான்


"நீ தனியாகவா இங்கு விளையாடிக்கொண்டு இருக்கிறாய்..?"


"இல்லையே.. தேனீ பூச்சிகள் போல பலரும் இங்கு நீண்ட நேரமாக மரத்திலேறி விளையாடியிருந்தோம்..! உங்கள் தங்கை உட்பட.. ஆனால் சற்றுமுன்பு உங்கள் பாசத்திற்குரிய தந்தை வந்து இந்த தேன்கூட்டில் கல்லெறிந்துவிட்டு போய்விட்டார்..!"


"அச்சச்சோ... அதற்காக நான் வருந்துகிறேன் பைசாந்தியா.. !"


"சரி விடுங்க சென்னியண்ணா..!

என் அண்ணன் உங்களுடன் அங்கதான் இருக்கானா?"


"ம்.. இருக்கிறான்..!  அவனது உயிர்த்தோழன் நன்னன் தான்! அவனோடு இருக்கிறான்.."


"ஓ.. அதுசரி சற்றுமுன் அந்த மரத்திடம் ஏதோ பேசினமாதிரி இருந்துதே..!"


" அது வேறொன்றுமில்லை..! நான் உன்போல இருந்தபோது இந்த மரம்தான் எனக்கு பால்ய நண்பன். பிறகு தான் உன் அண்ணன் அறிமுகமானான்.. மேலும் இம்மரம் நமது காவல் மரமும் கூட... முக்கிய வேலையாக போகும் முன்பு இதனிடம் ஆசிபெறுவது என் வாடிக்கை..!"


"காவல் மரத்தை தாண்டி போகவே..கூடாதுனு பெரியவங்க சொல்றாங்களே.. பின்ன நீங்கலாம் மட்டும் தினம் தினம் எல்லைதாண்டி போறீங்க..அதுஏன்??""எனக்கு இந்த காட்டின் எல்லாமரமும் காவல்மரம்தான்... பைசாந்தியா..!"


"ஓ..! அப்ப நிஜமாகவே தினமும் அருவிக்கரை வரையிலும் போயிட்டுதான் வரானா என் அண்ணன்..?"


. "ஆமாம்..பைசாந்தியா.! நானும் அங்கதான் இப்ப போறேன்..!.. சரி..பிறகு பார்க்கலாம்..!!" 


சென்னி மூட்டையோடு புறப்பட்டான். அவன் சில அடி கடந்ததும் பைசாந்தியன் அங்கிருந்தபடியே ஒரு எச்சரிக்கை விடுத்தான்..


"சென்னி அண்ணா..! உங்கள தேடி சில முன்பின் தெரியாத ஆளுங்க நேத்து இங்கு வந்து விசாரிச்சாங்க.. யாரு என்னனு சரியா தெரில.. பாத்து கவனமா போங்க...!"


சென்னி அதை காதில் வாங்கியபடி கையை உயர்த்தி சைகை செய்துவிட்டு

திரும்பி பாராமல் நடந்தான்..


அடர்வனத்தினுள்.. வெகுதூரம் பிரவேசித்தபிறகு.. அவனுக்கு உள்ளுணர்வு ஏதோ எச்சரிக்கை செய்தது.. ஒரு கையில்மூட்டையும் ஒரு கையில் ஈட்டியுமாய் விரைந்துபோக சிரமமாயிருக்க.., திடீரென அவன் சற்றும் எதிர்பாராமல்.. ஏற்கனவே அவன் பார்த்த அந்த வானரம் அவ்விடம் வந்தது..! 


"ச்சூ..! ச்சூ..! ஓடு..!" சென்னி விரட்டினான்.


அந்த குரங்கு நேர்த்தியாக அவன் இடையிலிருந்த தோல்பை முடிப்பை உருவி எடுத்துகொண்டு மரத்திலேறி தாவி ஓடியது.


என்ன நடந்தது என சுதாரித்துகொள்ள சென்னி சற்றே திக்குமுக்காடினான்.. எனினும் நிதானமாக தன் இடையிலிருந்த கயிறை அவிழ்த்து அதில் ஏதோ  கவைபோல ஒன்றை இணைத்துகட்டி.. கணநேரத்தில் வேகமாக சுழற்றி குரங்கை நோக்கி வீசினான்.. 


அட.. அது சொல்லிஅடிப்பது போல 

துல்லியமாக சென்று அந்த வானரத்தை தாக்கி சுற்றிகொள்ள.. மரத்திலிருந்து பொத்தென கீழே விழுந்தது வானரம்..


சென்னி விரைந்து சென்று அதனிடமிருந்த தோல்பையை பறித்தான்..


இப்போது திடீரென அபயகுரல் எழுப்பியபடி படபடவென ஏதோ வேகமாக சிறகடித்துவந்து அவன் முதுகில் மோதியது.. !!


அது... அந்த பஞ்சவர்ணகிளி தான்!

அது மீண்டும் படபடத்தது "ஓடு! ஓடு! ஆபத்து..!" என்பதாக இருந்தது!சென்னி திகைத்தான்.. பிறகு எதுவும் யோசிக்காமல்  கிளியை பறக்கசொல்லிவிட்டு..,, மூட்டையோடு வேகவேக வேக மாய் ஓடினான்..!


அவன் ஓட ஓட பலபேர் அவனை துரத்துவதாக உணர்ந்தான்.. சட்டென நின்று

திரும்பி பார்த்தபோது..


ஆஜானு பாகுவான ஏழடி உயர கருநிற மாந்தர்கள் மூன்று பேர் கயிற்றை சுழற்றியபடி அவனை துரத்திக்கொண்டு வந்தனர்....!


-சூரியராஜ்

2 Comments

 1. "நவின்றோர்க்கு இனிமை, நன்மொழி புணர்தல்" எனும் நன்னூல் வாக்கை 'தந்தர உலக' எழுத்தாளர் சூரியராஜ் கச்சிதமாக கையாளுகிறார்.

  நேரம் சென்றதே தெரியவில்லை

  எழில் கொஞ்சும் இயற்கையழகை காட்டி, இடையில் தோழமை, பரிவு, உணர்ச்சி என பலவகையான சாரத்தை புகுத்தி,

  இறுதியில் நம்மை படபடக்க வைக்கும் இவரது தொனியே, அடுத்த அத்தியாயத்திற்கான ஆவலை அதிகமாக்குகிறது.

  ReplyDelete
  Replies
  1. ஊக்கந்தரும் உங்கள் சொற்களால் என் உள்ளமும் ஊதியம் பெற்றது...!

   Delete
முந்தைய பதிவு அடுத்த பதிவு