Trending

கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும் - துமி என்றொரு பதம் உண்டோ?

 துமி என்றொரு பதம் உண்டோ?
எத்தனையோ பெரும்புலவர்களை காலந்தோறும் தமிழகம் கண்டபோதிலும் கம்பனை மட்டும் ஏன் கவிச்சக்கரவர்த்தி என அழைக்கிறோம்?


மற்றவர்கள் அவரவர் வாழ்ந்த காலத்தில் தனியராய் கோலோச்சினர்.. 


ஆனால் கம்பன் வாழ்ந்த அதே காலத்தில் தான்.. 


கவிராட்சஸன் ஒட்டகூத்தரும்..


 கலிங்கத்துபரணி கண்ட ஜெயங்கொண்டாரும்..


வெண்பாவிற்கோர் புகழேந்தியும்..


மூதுரை மொழிந்த மூதாட்டி..

அகரவரிசையில் ஆத்திச்சூடி தொகுத்த ஔவை பிராட்டியும் 


இன்னும் பல ஜாம்பவான்களும் வலம்வந்து வீறுநடை போட்டனர்..


எனினும் அவர்களையெலாம் தன்கவித்திறனால் குறுநிலமன்னர்களாக்கி...., மன்னாதி மன்னனாக... கம்பன்  திகழ்ந்தான்..!

அதனால்தான் அவன் கவிச்சக்கரவர்த்தி!துமி என்றொரு பதம் உண்டோ?

---------------------------------------------------------

பழந்தமிழர் அளவுமுறைகள்...

பலவற்றை இன்று மறந்திருக்கிறோம்....


கணக்கதிகாரம் என்ற நூலில் சில நுட்பமான அளவீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன...


சாண்,முழம்,விரற்கடை முதலியன நமக்கு என்றோ பரீட்சயமானவை.


நில அளவுமுறைகளில் கூட இன்றும்.. ஒருமா...,

 நூறு குழி, கால் வீசம் அரைவீசம் போன்றவை பயன்பாட்டில் உள்ளன...


காணி நிலம் வேண்டும்! பராசக்தி காணிநிலம் வேண்டும்! என பாரதி வேண்டியதில்  "காணி" என்பதும் ஒரு அளவீடுதான்.....


படி , மரக்கால் போன்றவை இன்றளவும் கிராமவீடுகளில் உயிரோடு இருக்கிறது..


என்  தாத்தா பேசும்போது அடிக்கடி  மிகக்குறைந்த.. என்ற பொருள்தொனிக்கும் வகையில்..


 "ரவை அளவுகூட இல்லை..!"


"இம்மி  கூட நகரல..!"


"இம்மி பிசகாமல் பார்த்து எழுது..!"


என்று பயன்படுத்த கேட்டிருக்கிறேன்...!


சிறுபிள்ளைகளுக்கு உணவூட்டும் தாய்மார்கள் "இந்தா கடைசியா ஒரேஒரு வாய் வாங்கிக்க!" என்பார்கள்.. இதில் ஒரு வாய் என்பதும் ஒரு அளவீடு தான்!


"ஒரே ஒரு சொட்டு.... இத்துணூண்டு...தம்மாந்துண்டு.. ஒருகடி.." போன்ற மழலை மொழி அளவீடுகளை நம்மில் (before 2k kids generation) பலரும் பேசிதான் வளர்ந்திருப்போம்...!


அப்படியாக மக்கள்வழங்கும் ஒருஅளவு சொல்லை கம்பன் தன் கவிதையில் போட்டுவிட்டு பட்டபாடு ஒரு தனிகதை...!


****   **** ****.  ****. ****


சோழமன்னன் ஸ்ரீ ராமாயண காவியத்தை தமிழில் பாடும்படி  கூத்தருக்கும் கம்பருக்கும் போட்டி வைக்கிறான்..


நம்ம கம்பன் ஒரு சோம்பேறி போலும்.. உத்தரவை மதியாமல் காலம்தாழ்த்துகிறான்.. ஆனால் ஒட்டகூத்தர் 'கடற்காணும் படலம்' வரை இயற்றிவிட்டார். அதோடு நில்லாமல் 'கம்பர் இன்னும் கடவுள்வாழ்த்து கூட எழுதியபாடில்லை' என மன்னரிடம் போட்டும் குடுத்துட்டார்!


அரசன் அவையை கூட்டி இரு புலவரையும் அழைத்து  இருவரது 

காவியபடைப்பும் எந்தநிலையில் இருக்கிறது? என வினவ.. கம்பீரமாக எழுந்த ஒட்டகூத்தர் தான் ஐந்து காண்டங்களை முடித்து.. ஆறாவது காண்டத்தில் கடற்காண்படலம் ஆக்கிவருவதாக மொழிந்தார். அரசன் அடுத்து கம்பரை நோக்க..

 வீட்டுப்பாடம் செய்யாமல் வகுப்பிற்குவந்த மாணவன் போல

திருதிருவென விழித்த கம்பன்

சும்மா ஒரு பொய்யை அவிழ்த்து விட்டான்.. அதுவும் ஒட்டகூத்தரை விட ஒன்று அதிகமாக இயற்றியதாக கூறி.. திருவணைப்படலம் (சேது பந்தன படலம்)வரை இயற்றியுள்ளதாக கூறினார். அரசர் உடனே "எங்கே அதிலிருந்து சில பாடலை பாடு..!" என ஏவ..


நாமாக இருந்தால் நடுங்கிவிழுந்திருப்போம்...ஆனால் கம்பன் வரகவி அல்லவா..? தொடுத்தான் பாருங்கள்.. விருத்தங்களை.. அடுத்தடுத்து,,,

கவிமழை பொழிந்து நிலைமையை சமாளித்தான். ஒட்டகூத்தன் உட்பட ஒட்டுமொத்த அவையுமே வாயைப்பிளந்துவிட்டது!


உண்மையாகவே கம்பரசம் தனித்து தெரிகிற 'தடால் புடால் ' பாடல்களாக சேதுபந்தன படலம் இருக்கும். அதில் வருகிற கற்பனை காட்சிகளை கண்முன்கொண்டுவர இன்றைய விஞ்ஞான திரைகலைஞர்களாலும் இயலவே இயலாது..!


133 அதிகாரங்களில் படைச்செருக்கு என்ற அதிகாரத்தின் பத்து பாடல்களும் வள்ளுவனை "இவன் சரியான திமிர்பிடித்த புலவனாக இருப்பானோ ?" என கருத வைப்பதுபோல... இங்கு கம்பனின் திமிரையும் காணலாம்.


சூரியபுத்திரன் சுக்ரீவன் ஆணையேற்று வானர தச்சன் நளன் வந்து பரந்த கடலின்மீது பாலம்கட்ட plan போடுறான்..


பெரும் பெரும் மரங்களையும் மேருநிகர்த்த மலைகளையும் சிகரங்களையும் வேருடன் பெயர்த்துவந்து கடலில்புதைத்து வானரங்கள் பாலம் எழுப்பின...!


(அந்த ஒப்பற்ற மற்ற பாடல்களை அடுத்தவாட்டி பார்ப்போம்..)


அதிலும் குமுதன் என்கிற வானரவீரன் என்னசெய்தான் தெரியுமா..?

கால்பந்தாட்டத்தில் தன் சகவீரர்களிடம் பந்தை கடத்தாமல் இருந்த இடத்திலிருந்தே சரியாக goal போடும் வீரனைபோல நின்ற இடத்திலிருந்து மலைகளை பெயர்த்து வீச அவை கடலில் போய் விழுந்து,, தில்லையில் கூத்தாடும் நடராஜரைபோல 'தகதிமி தகதிமித'

என ஜதிக்கு ஏற்ப நடனமாடி திரைகடலை திரித்து உலுக்கியதாம்..! இதனால் 'சுனாமி' போல கடல்கொந்தளித்து  தெறித்த நீர்த்துளிகள் விண்ணுலகம் வரை சென்று அங்கு சஞ்சரிக்கும் தேவர்களின் முகத்தில் பட்டதாம்!

அந்த தேவாதிதேவர்களும் "ஆஹா..யாரோ பாற்கடலை மீண்டும் கடைகிறார்கள் போல.. அப்படியானால் மறுபடியும் நமக்கு அமிர்தம் கிட்டப்போகிறது !"என்று பேராவல் கொண்டனராம்... குறிப்பிட்ட இந்த ஒரு பாடல் இதோ....
"குமுதனிட்ட குலவரை கூத்தரின்


திமிதமிட்டுத் திரியும் திரைக்கடல்


துமிதம் ஊர்புக வானவர் துள்ளினார்..,


அமுதம் இன்னும் எழுமெனும் ஆசையால்..!"பாடி முடித்ததும் இடைமறித்த கூத்தன்.., "யோவ் கம்பா! நிறுத்துமய்யா உன் பிதற்றலை..! எதுகை வரணும்னா எதுவேணா போடுவியா..? Rhyming மட்டும் போதாதுயா.. meaning வேணும்..!"


கம்பர் திடுக்கிட்டார்..


கூத்தர் தொடர்ந்தார்.., " என்ன முழிக்கிற?  'துமிதம்' னா என்ன...பொருள்? துமி னு ஒரு வார்த்தை இருக்கா தமிழ்ல...?"


"அது.. அது வந்து...."


"ம்.... சொல்.. ! துளி என்கிற சொல்லுக்கு பதிலாக துமி என உளறிவிட்டாய்...! சொல்குற்றத்தை ஒப்புக்கொள்..!"


"இல்லை... துமி என்பது மக்கள் வழக்கு சொல்..துளி என்ற பொருளில் புழக்கத்தில் உள்ளது !"


"மன்னா..! இந்த புலவன் புளுகுகிறான் நம்பாதீர்கள்..!"


மன்னர் கம்பரை பரிதாபமாக பார்த்தார்.. ஒரு பொழுது அவகாசம் தந்து அதற்குள் நிரூபிக்க சொன்னார்..  அன்று மாலை கம்பர், கூத்தர், மன்னர் மூவரும் மாறுவேடம் பூண்டு நகர்வலம் வந்தனர்.. ஒரு வீட்டுத்திண்ணையில் அமர்ந்தபோது உள்ளே ஒரு ஆயர்மகள் தயிர்கடைந்து கொண்டிருந்தாள்...


தயிர்க்கடையும் மத்தைக் கொண்டு சிலிர்ப்பும்போது  சிதறிவிழும் துளிகள் அவள்அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் மீது தெறித்தன..

"ஏய் புள்ளைங்களா அந்தாண்ட போங்க..! மோர் சிலிர்க்கிறேன்ல துமி வந்து மேல தெறிக்குது பாருங்க.. !" என அதட்டினாள்..


அதை கேட்டமாத்திரத்தில் மன்னரும் கம்பரும் ஆனந்தம் கொண்டனர்.. ஒட்டகூத்தர் வெட்கமுற்றார். 


திரவங்களை மத்து மாதிரியான ஏதேனும் பொருளால் வேகமாக இயக்கும்போது அதிலிருந்து சாரலாக தெறிக்கும் நீர்த்தாரைகளை 'துமி' என கூறலாம்.


தயிரைக்கடைந்து தெறித்தால் என்ன?

பாற்கடலை கடைந்துதெறித்தால் என்ன? துமி..துமிதான். கம்பன் சொன்னது சரிதான் என மன்னர் தீர்ப்பளித்தார்!


ஆயர்மகளாக வந்தது சாட்ஷாத் சரஸ்வதிதேவி யே என்பர் சிலர்..!


வஷிஸ்டர் வாயாலேயே 'பிரம்மரிஷி' பட்டம் பெறுவதை போல..


கூத்தர் வாயாலேயே கம்பர் கவிச்சக்கரவர்த்தி பட்டமும் பெற்றுவிட்டார்.!


சூரியராஜ்


கம்பராமாயணம் உரைநடை வடிவ PDF பெற இங்கே தொடவும்....

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு