அண்மை

நவரசா (2005): பண்பாட்டுத் திரையியலில் திருநங்கை அரசியல் - குறள்மகன்


பெண்கள் குடும்ப அமைப்பில் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்ற அமைப்புமுறையை நம்மில் பலர் புரிந்து கொள்வதால், அந்த அமைப்பைவிட்டு வெளியே வர முயல்கிறோம். ஆனால் குடும்ப அமைப்பில் திருநங்கைகள் எவ்வாறு தங்களை விடுவித்துக்கொள்கிறார்கள் என்பதை நவரசா திரைப்படத்தின் வாயிலாக விளங்கலாம். இப்படம் 2005ஆம் ஆண்டு சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது. சுவேதா என்ற சிறுமியை மையமிட்டதாகத் தொடங்கி, குடும்ப அமைப்பில் பெண்களுக்கான கட்டமைப்புகளைப் பெண்ணுடலே ஏற்கும் அல்லது செயல்படுத்தும் உண்மை நிலையை உணர்த்துவதாவும் பெண்கள் பருவம் எய்துவதற்கு முன்பும் அதன் பின்னரும் எதிர்கொள்ளும் பண்பாட்டு இறுக்கங்களைத் தெளிவுப்படுத்துவதாகவும் இதன் கதைமுறை அமைக்கப்பட்டுள்ளது. 

சுவேதாவுக்குச் சித்தப்பா ஒருவர் இருக்கிறார். அவர் அமைதி மற்றும் அச்சம் என்ற இரு உணர்நிலைகளோடு இருப்பதாகக் காட்சிப் படுத்தப்படுகிறார். சுவேதாவுக்குத் தன்னுடைய சித்தப்பா ஒரு திருநங்கை என்பது தெரிய வருகிறது. விருப்பமற்று கௌதமாக வாழும் அவர், கௌதமியாகக் கூவாகம் சென்று திருமணச் சடங்கு செய்யப்போவதை அறிந்து அவரை மீட்கப் பின்தொடர்கிறாள் சுவேதா. பெண்களின் விடுதலையாக வழக்கமான பெண்வாழ்வு மறுப்பும், திருநங்கைகளின் விடுதலையாகப் பெண்மையின் ஏற்பும் இதன்வழியாக நாம் விளங்கலாம். கூவாகம் செல்லவும் தனது சித்தப்பாவைக் கண்டுபிடிக்கவும் பாபி (Boby) என்ற திருநங்கை உதவுகிறார். திருநங்கைகளின் அழகிப் போட்டிக்காகச் செல்லும் பாபிக்கு சுவேதா நல்ல நண்பராக மாறிவிடுகிறாள்.

சுவேதாவிற்கு எந்தப் பேருந்து எங்கு செல்லும் என்பது கூடத் தெரியாது, இது பெண்கள் வாழ்வு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கியிருப்பதைக் காட்டுகிறது. திருநர்கள் என்பவர்களை நாம் எவ்வாறு புரிந்து வைத்துள்ளோம் என்ற கண்ணோட்டத்தை பார்த்தோமானால் அது பொது ஊடகம் வாயிலாகவோ அல்லது அவர்களை இழிவோடு நடத்தியவர்களின் மூலமாகவோ தான். இப்படியான இடத்தில் பொதுபுத்தியின் வன்முறையை நாமும் ஏற்க வேண்டி இருந்திருக்கிறது. திருநர்களின் வலியை என்றாவது நாம் நேரடியாகக் கேட்டிருப்போமா? அப்படிக் கேட்டிருந்தால் இவ்வாறான ஒடுக்குமுறைகள் அவர்களுக்கு நிகழுமா? 

குடும்பத்தில் ஒரு ஆண், ஆண்தன்மையில் இருந்து நீங்கினாலே வீட்டில் உள்ள அம்மா, அப்பா, அண்ணன், தம்பி என்ற உறவுகள் எல்லாம் காணாமல் போகின்றன. வாழ வழித் தேடி வழியில்லாது பிச்சை எடுக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால் பொதுபுத்தியில் நாம் சுலபமாகக் கூறிவிடுகிறோம், ‘அவர்கள் பிச்சை தான் எடுப்பார்கள்’ என்று. மேலே ஒருபடி சென்று அவர்களை உதாரணம் சொல்ல பிச்சையைத் தான் குறிக்கிறோம். தங்குவதற்கு வீடு கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை. தொழில் செய்ய நினைத்தாலும் அதனை இந்த சமூகம் ஏற்பதில்லை. என்றாவது அவர்களின் நிலையில் நம்மை வைத்து சிந்தித்திருப்போமா? நான் கருணை காட்ட வேண்டும் என்று கூறவில்லை. கருணை என்றது ஏற்றத்தாழ்வு கருத்தை ஏற்பதால் வருவது. சமமாக மதித்து நடப்பது தான் அறம். தவறேதும் செய்யாத அவர்களை அகதிகளை விடவும் மோசமாக நாம் நடத்துகிறோம். பெண் பெண்ணாக நடந்துகொண்டால், குடும்ப அமைப்பின் அங்கீகாரம் கிடைக்கும், இதே ஒரு ஆண் பெண்ணாகி திருநங்கையாக அந்த அமைப்பைச் செயல்படுத்தினால் சமூகமே அதற்கு முரணாகச் செயல்படுகிறது.

திருநங்கை வாழ குடும்பம் என்பது முதல் கட்டமாக இருந்தாலும், சமூகம் அவர்களை எவ்வாறு பிரதிபலிக்கிறது அல்லது அணுகுகிறது என்பது அடுத்த கட்டமாக இருக்கிறது. திருநங்கையைச் சுலபமாகத் தன்னுடைய பாலியல் இச்சைக்குத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற காம வெறியர்களின் மனவோட்டம், அவர்களுக்கென யார் வருவார்கள் என்ற திமிர்த்தனத்தைத்தான் காட்டுகிறது. மொழி என்பதும் பொதுபுத்தியால் திருநங்கைகளுக்கு எதிரானதாகக் கட்டமைக்கப்பட்ட ஓர் அமைப்பே.‌ அலி, அரவானி, ஒம்போது போன்ற சொற்கள் பிறக்க காரணம் என்ன? ஒரு மேடைப் பேச்சாளர் சொல்கிறார், “குடி மற்றும் போதைப் பழக்கம் கொண்ட ஆண்களுக்கு யாரும் பெண் தராதீர்கள் அவர்கள் ஆண்மை இழந்த ஒம்போது” என்கிறார். இதைவிட கேவலமான சொல்லாடல்கள் தமிழைத்தவிர வேறெதிலும் இருக்க முடியாது. இதனால் தான் பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி பாசை என்றார் போலும். இப்படத்தில் அரவானி என்ற சொல்லாடல் பல இடங்களில் வரக்காரணம், திருநங்கை என்ற பெயர் மாற்றம் அப்போது நிகழ்ந்திருக்கவில்லை. 

பள்ளியில் எல்லா குழந்தைகளையும்போல படிப்பதற்கான சூழல் அவர்களுக்கு இருப்பதில்லை. சக மாணவர்களான நாமே அதற்கு காரணமாகிறோம். பள்ளிப்பருவத்தைக்கூட அவர்களால் கடக்க முடியவில்லை‌ என்பது நம்மைத் தலைகுனிய வைக்கும் செயலாகும். இதுபோன்ற திரைப்படங்களை நாம் பார்க்க மறுக்கிறோம். காரணம், படம் என்றாலே ஒரு தனிமனித நாயக பிம்பத்தை உருவாக்குபவையாகவும் அல்லது காதலில் மிதப்பவையாகவும் அல்லது பெண்ணை நுகர்வுப் பொருளாகக் காட்டும் ஆடல்பாடல் நிறைந்ததாகவும் அல்லது யார் கொலையாளி என்ற விறுவிறுப்பான காட்சி அமைப்புகளைக் கொண்டதையுமே நாம் படங்களாக ஏற்கிறோம். நம் மனமும் அதையே தான் விரும்புகிறது. ஆண் செய்யும் தவறுகளை ஏற்கும் குடும்பம் மற்றும் சமூக அமைப்பு ஏன் திருநரின் தவறற்ற வாழ்வை ஏற்க மறுக்கிறது என்று நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது இப்படம்.‌ அதன்பின்னான பண்பாட்டுக் கருத்தாக்க இயக்கத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களிலும் சிலர் தவறான மனம் கொண்டவராக இருக்கலாம் என்பது கூட நம்முடைய கண்ணோட்டம் தான். ஆனால் அதற்காக ஒட்டுமொத்த திருநர்களையும்‌ தவறானவர்கள் என்று ஏன் சித்திரிக்க வேண்டும்? அதையே ஏன் ஆண் பாலினத்திற்குச் செய்வதில்லை இந்த வெகுஜன ஊடகங்கள்? என்ற கேள்வி சிந்திக்கத் தூண்டும் என நம்புகிறேன். 

பிறருக்கு நிகழ்ந்தால் அதனை ஏற்றுக்கொள்கிறோம் ஆனால் தன் குடும்பத்தில் நிகழ்ந்தால் அதனை எதிர்க்கிறோம். இதுபோன்ற நுண்பாசிஸ்ட்டுகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஆணவக்கொலைகளைப் போலவே இதுவும் பிடுங்கி எரிய வேண்டிய களையாகும். சாதி ஆணவக் கொலைகளைப் போலவே திருநங்கைகள் மீது நிகழ்த்தப்பெறும் பாலின ஆணவக்கொலைகள் பெரிதாக வெளிவருவதில்லை. அதனை கேள்வி கேட்கக் கூட யாருமில்லை என்பது துயரநிலை. பெண்களுக்குக் கிடைக்கும் சிறிய இடம் கூட திருநர்களுக்குக் குடும்பமோ, சமூகமோ அளிப்பதில்லை. நான் முன்பு கூறியது போல திருநங்கைகள் மேல் எவ்வித பரிதாபமோ அல்லது அவர்களை கடவுளாக மாற்றுவதோ தேவையற்றது. அவர்களை அவர்களாக, சகமனிதராக மதித்து நடப்பதே நாம் செய்யும் அறமாகவும் சமத்துவமாகவும் இருக்கும் என்பதை இப்படம் உணர்த்தியது. 

கூவாகம் செல்லும் திருநங்கைகள் அரவானைத் திருமணம் செய்து கொள்வதையோ அங்கேயே வளையலை உடைத்து தங்களை விதவைகளாக எண்ணிக்கொள்வதையோ பிற்போக்குத்தனமாக நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. காரணம், சமூகத்தில் பெண்ணுடலே பண்பாட்டினை ஏற்று நடக்கும் விதமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணுடல் பண்பாட்டுச் சடங்குகளை நிகழ்த்துவதற்கும், ஒரு ஆணுடல் பெண்ணாகி அவற்றை நிகழ்த்திப் பார்ப்பதற்குமான பாலின அரசியல் அங்கே பேசப்படுகிறது. அதுதான் அவர்களின் விடுதலை அரசியலும் கூட. நவரசா என்ற இப்படத்தின் பெயரிலும், சில காட்சி அமைப்புகளிலும் விமர்சனங்கள் இருந்தாலும் இருபதாண்டுகள் தாண்டியும் கட்டாயம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய படமாக இருப்பது வியப்பாக இல்லை. அது சமூகத்தின் அவலம். ‌

1 கருத்துகள்

  1. இரு நண்பர்கள் வழக்கம் போல கல்லூரிக்கு போகின்றார்கள் போகும் சிறியது நேரத்தில் திரைப்படம் பார்க்க போகலாம் என்று ஒருவர் சொல்ல அதை மற்றோருவர் ஒப்பு கொள்கிறார் இருவரும் சில மணி நேரம் கடந்து ஒரு வழியாக திரை அரங்கத்தில் அமர்கின்றார்கள் இரண்டு மணி நேரம் கடந்து இருவரும் இரு வேறு திசையில் போகின்றார்கள் அவர்கள் பார்த்த திரைப்படத்தின் தலைப்பும் அதில் அமைந்த கதை வசனம் நிகழ்வுகள் என்று பல கருத்துக்கள் அவர்களை இரு வேறு திசைகளில் நோக்கி செல்ல வைக்கின்றது திரை படம் என்பது இரண்டு மணி நேரம் காலா போக்கிற்கு மட்டும் இன்றி ஒருவரை மாற்றும் என்றால் அவை சிறந்த ஒரு திரைக்கதையாக அமைகின்றது மாற்றத்தை உருவாக்கும் எந்த ஒரு படைப்பும் மறுமுறை மலர்கின்றது

    பதிலளிநீக்கு
புதியது பழையவை