Trending

மலச்சிக்கல் தீர எளிய வழிகள்

மலச்சிக்கல் தீர எளிய வழிகள்


மலச்சிக்கல் என்பது பல நோய்களுக்கு மூலக்காரணமாக அமைகிறது. வெளியேறாத, தேங்கிய, இறுகிய மலத்தில் குடற்பூச்சிகள் உருவாகின்றன. குடற்பூச்சிகள் நமக்கு தேவையான ஊட்டச்சத்துகளை உறிஞ்சி எடுத்து வாழ்கிறது.


முக்கி மலத்தினை கழிப்பதால், மலவாய் தோல்களில் அழற்சி மற்றும் வெடிப்பு ஏற்பட்டு, மூல நோய் உண்டாகிறது. மூலம் போன்ற கொடுமையான நோய்களில் இருந்து தப்பி வாழ வேண்டுமானால், மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


மலச்சிக்கல் வயிறு உப்புதல், வாய்வுக் கோளாறு, அஜீரணம் போன்ற அசௌகரியங்களை உருவாக்குகிறது.


மருந்து மாத்திரை இல்லாமல் இதை எளிய வாழ்க்கை முறையிலேயே சரி செய்யலாம். அதை இக்கட்டுரையில் காண்போம்.


என்ன செய்ய வேண்டும்?


தினமும்  காலை, இரவு என இருமுறை மலம் கழிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.


காலை எழுந்தவுடன், குறைந்தது அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை வெது வெதுப்பான தண்ணீர் குடிக்க வேண்டும்.

அந்தத் தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு, சில துளிகள் கலந்து குடிக்கலாம்.


தண்ணீர் குடித்த பிறகும் வெளியே போகும் உணர்வு தோன்றவில்லை என்றால், பத்து நிமிடம் சமதளப் பரப்பில் சீரான நடைப் பயிற்சி மேற்கொள்ளலாம்.


முதல் நாள் தண்ணீரில் ஊறவைத்த உலர் திராட்சையை, காலையில் சிறிது சாப்பிடலாம்.


சீரான குடல் இயக்கத்துக்கு உடல் அதிக வெப்பம் இல்லாமல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கு இரவு ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடலாம். இது நார்ச்சத்தும் மிகுந்தது ஆகும்.


சீரகம், மல்லி கலந்த தண்ணீரையும் குடிக்கலாம்.


சூடான காபி குடிக்கலாம். பால், சீனி குறைவாக சேர்ப்பது நல்லது.


காலை நேரத்தில் இளம் வெயில் உடலில் படுமாறு, நாற்பத்தைந்து நிமிடம் வியர்வை உண்டாகும் அளவுக்கு, வேகமான  நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி என்பது ஆப்ஷனல் அல்ல. கண்டிப்பாக செய்ய வேண்டும்.


> உடற்பயிற்சி செய்யாமலே உடல் எடை குறைக்கலாம்


சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பது, மிகவும் முக்கியமானது ஆகும்.


மருந்தகங்களில் கடுக்காய் பொடி வாங்கி வைத்துக் கொண்டு, இரவில் ஒரு ஸ்பூன் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.


நார்ச்சத்து மிகுந்த  உலர்ந்த அத்திப்பழம் உண்ணலாம்.


இரவு படுக்கப் போகுமுன் கால் டம்ளர் நீரில், அரை ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து குடிக்கலாம்.


உணவு முறை


உணவில் காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


அதுவும் நார்ச்சத்து நிறைந்த கத்திரிக்காய், அவரைக்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், முருங்கைக்காய்,  பாகற்காய், கொத்தவரங்காய், பீன்ஸ், கேரட், பீட்ரூட், முட்டை கோஸ், காலிபிளவர், தக்காளி, கருணைக்கிழங்கு, முள்ளங்கி, வாழைத்தண்டு  போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


அரிசி சாதத்தை ஒரு பங்கும், காய்களை மூன்று பங்கும் உண்பது, மலச்சிக்கலுக்கு ஒரு தீர்வாக அமையும்.


பசி ஏற்படும் நேரங்களில் ஒரு பிடி, வறுத்த வேர்க்கடலை சாப்பிடலாம்.


கொண்டைக் கடலை,  கடலை பருப்பு, பட்டாணி சுண்டல் சாப்பிடலாம்.


தயிரை மோராக்கி 300 மி.லி குடிப்பது சீரான குடலியக்கத்துக்கு நல்லது.


கேரட், பீட்ரூட், வெண்டிக்காய், வெங்காயம், பீன்ஸ் போன்றவற்றை பச்சையாக வெட்டிப்போட்டு, தயிர் சேர்த்து வெஜிடபில் சாலட்டாக உண்ணலாம்.


கேழ்வரகு, கம்பு, வரகு, சாமை, சோளம் போன்றவற்றில் செய்த சிறுதானிய உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.


> பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி காரணமும் தீர்வும்


முளைக்கீரை, முருங்கைக் கீரை, பசலைக்கீரை,  அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி, குப்பைக்கீரை போன்ற எதாவது ஒரு கீரையை அவசியம் தினமும்  உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


வருடம் முழுவதும் எளிதில் கிடைக்கும் கொய்யாப் பழம், மலச்சிக்கலுக்கு ஒரு மாமருந்தாகும். இதில் வைட்டமின் சி நிறைந்து உள்ளதால், சளி, ஜுரத்துக்கு எதிரான எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.


பப்பாளிப் பழமும் ஜீரனத்தை எளிமைப் படுத்தி மலச்சிக்கலை தடுக்கும் ஒரு பழமாகும். ஆப்பில், ஆரஞ்சு, மாதுளை, சப்போட்டா,  சாத்துக்குடி, பலா, மாம்பழம் சாப்பிடலாம்.


மலச்சிக்கலுக்கு காலம் காலமாக உள்ள ஒரு வைத்தியம் வாழைப்பழம்.  இரவு உணவுக்கு முன் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். பிரச்சனை தீவிரமாக உள்ளவர்கள் மூன்று வேளையும் உணவுக்கு முன் வாழைப் பழம் சாப்பிடலாம்.


பூவம்பழம், ரஸ்தாளி, கற்பூரவள்ளி, மொந்தம்பழம், செவ்வாழை எல்லாமே உடலுக்கும் குடலுக்கும் நன்மை செய்பவைதான். நீரிழிவு நோய் உள்ளவர்கள் மட்டும் எதை உண்பதற்கும் டாக்டரின் அனுமதி வேண்டும்.


வெள்ளரிக்காய் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து, நார்ச்சத்து மட்டுமின்றி மலத்தை இலகுவாக்கும் திறனும் உள்ளது.


குடல் ஆரோக்யமாக இருக்க இஞ்சி சாறில் தேன் கலந்து குடிக்கலாம். கொதிக்கும் நீரில் ஆவாரம்பூவை போட்டு குடிக்கலாம். ஆளி விதைகளை பொடி செய்து நீரில் கலந்து குடிக்கலாம். இதனால் நச்சுக்கள் வெளியேறி குடல் சிறப்பாக இயங்கும்.


துத்தி இலைச்சாறு அருந்தலாம்  அல்லது துத்தி இலை பொடியை  தண்ணீருடன் கலந்து பருகலாம். மலக்கட்டு குணமாகும்.


தினமும் மூன்று வேளையும், சரியான நேரத்தில் உணவு உண்ண வேண்டும். இரவு 9 மணிக்குள், இரவு உணவை உண்டு முடிக்க வேண்டும். பின்னர் ஒரு மணி நேரம் இயல்பான வேளைகளில் ஈடுபட வேண்டும். பின்னர் 10 மணியிலிருந்து 11 மணிக்குள் உறங்கச் செல்ல வேண்டும்.


குறைந்த பட்சம் ஏழு மணி நேரம் தூங்க வேண்டும். இவ்வழக்கமானது, உணவு செரித்து சீரண உறுப்புகள் சிறப்பாக செயல்பட்டு,  நோய்களில் இருந்து நம்மை காக்கிறது.


நார்ச்சத்தும், வைட்டமின்களும், இரும்புச்சத்தும் நிறைந்த சோளக்கதிரை அவித்து சாப்பிடலாம். மரவள்ளிக் கிழங்கு கூட நார்ச்சத்து நிறைந்ததுதான்.


எல்லா வயதினருக்கும், ஆவியில் வேக வைக்கப்பட்ட இட்லி மற்றும் இடியாப்பம் நல்லது.


இரவு சாப்பிட்டவுடன், உடனே படுக்கச் செல்லக்கூடாது. அப்படி படுத்தால் சாப்பிட்ட உணவு சரியாக செரிமானம் ஆகாமல் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கிறது.


அலோபதி மருத்துவமுறையில் DULCOFLEX என்ற மாத்திரை மலமிலக்கியாக செயல்படுகிறது.


எது சேர்க்கக் கூடாது


மைதாவில் தயாரிக்கப்பட்ட எதையும் சாப்பிடக் கூடாது. மைதா கோதுமையில் இருந்து தயாரிக்கப்பட்டாலும், அதில் உள்ள நார்ச்சத்து நீக்கப்பட்டு மாவுப் பொருள் மட்டும் கொண்ட மைதா தயாரிக்கப்படுகிறது.


இளமஞ்சள் நிறத்திலிருக்கும் கோதுமை மாவு, பென்ஸாயில் பெரோஸைடு என்ற வேதிப் பொருள் மூலம் வெண்மையாக்கப்பட்டு மைதாவாகிறது. மைதாவை மிருதுவாக்க சாயப்பட்றைகளில் பயன்படும் அல்லோக்ஸன் என்ற வேதிப் பொருள் சேர்க்கப்படுகிறது.


மைதாவில் தயாரிக்கப்படும் பரோட்டா, சம்சா, பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்றவை மலச்சிக்கலை தீவிரப்படுத்தும் உணவுகளாகும். அதனால் இப்பிரச்சனைகள் உள்ளவர்கள் இவ்வுணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


எண்ணெயில் பொறித்த, வறுத்த உணவுகள் அறவே கூடாது. எண்ணெயில் பொறித்த பிசுபிசுப்பான உணவுகள் மலம் எளிதாக வெளியேறுவதை தடை செய்கின்றன.


புளி சேர்த்து தயாரிக்கப்படும் குழம்பு வகைகள், புளி சாதம், ஊறுகாய் போன்றவை குறைவாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.


அது போல காரமான உணவுகளையும் எடுத்துக்கொள்ள கூடாது.


பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட, எந்த உணவுப் பொருளையும் உண்ணக்கூடாது.


நிறத்துக்காகவும், சுவைக்காகவும், வேதிப்பொருள் சேர்க்கப்பட்ட எந்தப் பொருளையும் உணவாக எடுத்துக்கொள்ளக் கூடாது.


> சுடுநீரில் தேன் கலந்து குடித்தால் உண்மையிலே உடல் எடை குறையுமா?


கடைகளில் விற்கப்படும் பிராண்டடு கம்பெனி பிஸ்கட்களில் கூட, மைதாவும், பாமாயிலும், செயற்கையான சுவை கூட்டும் வேதிப் பொருட்களும் கலந்தே விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை தவிர்ப்பது நல்லது.


வெள்ளை சர்க்கரை கல்லீரல் கணையத்துக்கு தீங்கானது.  இவை சரியாக செயல்படாவிட்டால் சரியாக செரிமானம் ஆகாது. சரியாக செரிமானம் ஆகாவிட்டால் வாந்தி மற்றும் மலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்.


மலச்சிக்கல் உள்ளவர்கள் பால், பாலாடை, பனீர், சீஸ் தவிர்க்க வேண்டும். ஆனால் தயிரை சேர்க்கலாம்.


இனிப்புகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.


பிரெட், கேக் போன்ற நார்ச்சத்து இல்லாத மாவுப் பொருளாலான பேக்கரி அயிட்டங்களை தவிர்க்க வேண்டும்.


ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவுகள் கொழுப்பும், வேதிப் பொருளும் அடங்கியது. அதனால் அதை உண்ணக்கூடாது. மதுபானம் கூடவே கூடாது.


முடிவுரை


சுருக்கமாக சொன்னால், போதுமான இடைவெளியில்  தண்ணீரை குடித்து, சரியான நேரத்தில்,  மூன்று வேளையும் சாப்பிட்டு,  எண்ணெய் சார்ந்த கொழுப்பு உணவுகளை தவிர்த்து, கீரைகளையும் நார்ச்சத்து கொண்ட காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்த்து, சரியான நேரத்தில் தூங்கி, சரியான நேரத்தில் எழுபவர்களுக்கு மலச்சிக்கலே வராது.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு