Trending

பொன்னியின் செல்வன் 2: ஒரு விமர்சனம் - ஓர் ஒப்பீடு - ஒரு நப்பாசை

 

விமர்சனம்


PS 2.. அஃதாவது, பொன்னியின் செல்வன் பாகம் 2..,


ஒரு திரைப்படத்தின் பெயர் தமிழில் இருந்து, அஃது இரண்டு சொற்களை தொட்டுவிட்டாலே அதை முழுதாக உச்சரிக்காமல் அதன் பெயரின் ஆங்கில முதலெழுத்து சுருக்கத்தை மட்டும் சொல்வது.. என்கிறதொரு ஈன வழக்கு.. (அஃதாவது டிரெண்ட்) நிலவுகிற காலம் இது.


குறிப்பிட்ட துறைசார் தொழிலாளர்கள் வசதிநோக்கில் தங்கள் குழுவுக்கு இடையில் மட்டும் பேசிக்கொள்கிற குறியீட்டு பெயரை எதற்காக பொதுமக்களும் வலைதளவாசிகளும் பயன்படுத்த ஆசைபடுகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படி சுருக்கி கூறி விநியோகம் செய்தால்தான் 'இளசு'களை சென்று சேரும்.. என்று சில 'லூசு'கள் சொல்வதை தயவுசெய்து யாரும் ஏற்காதீர்கள்.

நல்ல தமிழில் படங்களின் பெயர் வந்தால் முழுதாக உச்சரிக்க பழகுங்கள். இன்றைய நாளில் இதுகூட தமிழ் வளர்க்கும் பெருந்தொண்டு தான்..!


திரையரங்கம் போக வேணாம். OTT யிலோ.. sun TV யிலோ படத்தை பார்த்துக்கலாம் என்று சிலர் எண்ணி இருப்பர்.. அவர்கள் செலவழிக்க போகும் மூன்று மணிநேரத்துக்கான ஒரு முன்னோட்டம் இது..


சரி.. படத்துக்குள் நுழைவோம்.


முதல் காட்சியில் பொன்னி நதியில் இளவயது (பேதை/பெதும்பை) நந்தினி நீராடி எழுகிறாள்.. இறுதிக்கட்டத்தில் பழுவூர் அரசியாக அவள் (மங்கை/மடந்தை) அதேநதியில் மூழ்கிப்போகிறாள்..! இடையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. 


முதல் பாக தொடர்ச்சி என்பதால்..  கடலில் விழுந்த சோழ இளவரசன் பொன்னியின் செல்வனை ஊமைராணி காப்பாற்றுவதும், ஜூரத்தில் தவிக்கும் அவனை பூங்குழலியும் அமுதனும் படகுமூலமாக மீட்டு சூடாமணி விஹார புத்த பிக்குகளிடம் சேர்ப்பதும்.. அதை தெரிந்துகொண்ட பாண்டிய சதி கும்பல், கிழட்டுப்புலி சுந்தர சோழனையும்.. சூரப்புலி ஆதித்த கரிகாலனையும்.. குட்டிப்புலி அருண்மொழிவர்மனையும்

ஏக காலத்தில் தீர்த்துக்கட்ட நந்தினி தலைமையில் திட்டம் தீட்டுவதும்.. அந்த சதியை முறியடிக்க வந்தியத்தேவன் ஒருபக்கமும்  ஊமைராணி ஒருபக்கமும் சென்று போராடுவதும் என.. உள்ளபடியே.. கதையானது வடிவம் கொண்டுள்ளது. இன்னொருபுறம் மணிமுடிக்காக மல்லுக்கட்டும் மதுராந்தகனும்..  நந்தினியின் பிறப்பு ரகசியத்தை தேடித்துருவி கண்டறியும் குந்தவையும் என கதை மேலும் செறிவு பெறுகிறது.


இவ்வளவும் கல்கியின் கைவண்ணம் தான்.. இதற்கு மேலும்கூட கல்கி விளையாடி வைத்திருப்பார்.. ஆனால் அதை அப்படியே சாறுபிழிந்து சிறு திரைக்கதை ஆக்குகிறேன் பார், என்ற பெயரில் மணியும், மோகனும் சேர்ந்து 'கானமயில் ஆடக்கண்டிருந்த வான்கோழி' என கூத்தாடி குழப்பி வைத்திருக்கிறார்கள்.


வேறுமாதிரி சொல்வதானால்,

தமிழ் பரீட்சையில், "சிறுகதையை சுருக்கி ஒரு கட்டுரை வரைக" என்ற கடைசிகேள்விக்கு நேரம் போதாத சமயத்தில், அவசர அவசரமாக  எதையாவது எழுதி கிறுக்கி தள்ளிவிட்டு போவோமே அது போல பண்ணியிருக்கிறார்கள்.


மாசு மறு அற்ற தெள்ளத் தெளிவான காட்சிகளால் திரையரங்க பார்வையாளர்களை இந்த படம் ஓரளவு ஈர்த்து கட்டிப்போடுகிறது.

மற்றபடி நாவல் படிக்காத மனிதர்கள் அரங்கத்தினுள் இருந்து எய்தும் பயன் ஏதும் இல்லை.


விக்ரம் தோன்றும் காட்சிகளில் மிடுக்கான ராஜா காலத்து கம்பீரம் இருக்கிறது. ஆனால் குரலில்/ வசனத்தில் இது மணிரத்னம் படம்தான் என்பதை காட்டிக்கொடுக்கிறது. கரிகாலனுக்கும் நந்தினிக்குமான காதல் கதைதான் படத்தில் பிரதானமாக ஊடாடுகிறது.


வந்தியத்தேவன் மற்றும் ஆழ்வார்க்கடியான் நம்பி இடையிலான நடிப்போட்டம் அருமையாக இருக்கிறது. முதல் பாகம் போல் ஏமாற்றாமல் இம்முறை இருவரும் இணையும் போதெல்லாம் புன்முறுவலை வரவழைக்கிறார்கள். மொத்த படத்திலும் தன் பாத்திரத்தை செவ்வனே செய்திருந்த ஒரே ஆள் நம்பி(ஜெயராம்) மட்டும் தான்.


ஆரம்ப காட்சியில் கிடாபூஜையில் வெட்டுப்பட்ட ஆடுபோல கொற்றவை கோயிலில் குருதி ஒழுக கிடக்கும் வந்தியத் தேவன் அடுத்த காட்சியிலேயே அட்டகாசமாய் உலவுவதும்.. கடைசி கட்டத்தில்  கரிகாலனை கொன்ற பழியை சுமந்து கால்கள் நைந்திட சங்கிலியால் பிணைக்கப்பட்டு சுந்தரசோழன் அவைக்கு தத்தி தத்தி வரும் வந்தியத்தேவன், மறுநொடியே போர்க்களம் புகுந்து குதிரையிலேறி பராக்கிரமம் காட்டுவதும் வீரமாக இல்லை வேடிக்கையாக இருக்கிறது.


பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபுவுக்கு கணிசமான காட்சி வருகிறது. பரவாயில்லை ரகம். இருந்தாலும் கரிகாலனின் இருதோள்களாக முதல் பாகத்தில் காட்டப்பட்ட வல்லத்து அரசனும் இந்த பல்லவ அரசனும் தங்கள் 'தல' இறந்த பிறகு எதிரிகள் ஆனதற்கான காரணத்தை இன்னும் அழுத்தி சொல்லியிருக்கலாம்.


மதுராந்தகனாக ரகுமான் முதல் பாகத்தை விட இந்த பாகத்தில் ரவுண்டு கட்டி ஆடுகிறார்.


சுந்தர சோழ பிரகாஷ் ராஜ் இயக்குநரின் கைப்பாவை.

முக்கிய கட்டத்தில் அரசவையில் தன் மகனின் மரண விசாரணையில் முகபாவனையிலே பேசுகிறார்.


ஜெயம் ரவி பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

அவரை சொல்லி குற்றமில்லை. திரைக்கதையிலும் வசனத்திலும் அவருக்கு துளியேனும் கனம் தந்திருக்க வேண்டும். இரண்டு பாகத்திலும் அவர் ஒரு யானை பாகனாக நடிக்கிறார். படத்தின் பெயரை தாங்கி நிற்கும் பாத்திரம் என்பதால் மரியாதை நிமித்தமாக கடைசியில் அவருக்கு ஒரு சண்டை காட்சியும் வைத்திருக்கிறார்கள். மற்றபடி அவர் ஒரு 'ஒப்புக்கு சப்பாணி'.!


நந்தினியாக ஐஸ்வர்யா ராய் தன் முகத்தை ஒரே பாவனையில் காட்டி காட்டி சலிப்பு தட்டுகிறார். ஆனால் ஊமைராணி பாத்திரத்தில் புதுமை செய்கிறார். குந்தவை என்ற பெயரில் திரிஷா அங்கங்கே வந்துவிட்டு போவார். 

ஆனால் இந்த பாகத்தில், 'வா..ம்மா..! மின்னல்..!' என்பது போல விநாடி நேரம் மட்டுமே திரையில் தோன்றி மறையும் ராஷ்டிரகூட இளவரசியின் (ஸ்ரீமா) அலங்கார தோற்றம் மொத்த திரைப்படத்தையும் எங்கோ ஓரம் கட்டிவிடுகிறது!


கொடும்பாளூர் வேளிர் (பிரபு),

வானதி (சோபிதா), செம்பியன் மாதேவி (ஜெயசித்ரா) ஆகியோர் ஓரிரு காட்சியே தோன்றினாலும் மனதில் நிற்பர்.


ரஜினி நடிக்க ஆசைப்பட்ட பெரிய பழுவேட்டரையர் பாத்திரம் கல்கியின் கதையில் உள்ளது. மணிரத்னம் கதையில் வருவது வேறு ஏதோ ஒரு ஜந்து.(சரத்குமாரும் ஏமாந்து விட்டார்).


பூங்குழலி, சேந்தன் அமுதன், கந்தமாறன், சிறிய பழுவேட்டரையர் ஆகியோர் ஒரு பைசாவுக்கு பிரயோஜனமின்றி வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.


தமிழ் சினிமா சம்பிரதாய படி கிளைமாக்ஸ் காட்சி சண்டையில் முடிகிறது. (அதை  போர் என்றுகூட சிலர் சொல்லுகிறார்கள்)


முதல் பாகம் வெளியான பிறகு வலைதளத்தில் பலர் .. இரண்டாம் பாகத்தின் கதை சுருக்கம் இதுதான் என வரிந்து கட்டி கொண்டு கதைசொன்னார்கள். ஆனால் மணி எல்லாரையும் April Fool ஆக்கிவிட்டார்.


திரைக்கதையில் செய்த வினோதங்கள் சில சர்ச்சை ஆகின..


நந்தினியின் பிறப்பின் பூர்வீக மர்மத்தை கல்கி தன் மூலக்கதையில் மூன்று இடங்களில் அரசல்புரசலாக சொல்லி இலைமறை காயாகவே விட்டிருப்பார். வாசகர்கள் அதை தனித்தனியாக நம்பினாலும் சரி.. அல்லது மூன்றையும் இணைத்து நோக்கினாலும் சரி.. கதைக்கு பாதகமில்லை! மணி இதில் இரண்டாவது வகையை கையில் எடுத்துள்ளார் தவறில்லை.


கல்கியின் கதைப்படி, சேந்தன் அமுதனே உண்மையான உத்தமசோழன்! மதுராந்தகனாக காட்டப்படுபவன் சோழ வாரிசு இல்லை. ஆனால் இந்த திடீர் திருப்பத்தை மணி & Co என்ன காரணத்தினாலோ ஏற்கவில்லை. அவர்கள் அந்த பல்லக்கில் உலவும்  மதுராந்தகனையே கண்டராதித்யரின் மகவாக காட்டி கதையை தொடர்ந்து நகர்த்தி செல்கின்றனர். இருப்பினும் இது கதையை பெரிதாக பாதிக்கவில்லை.


ஆனால் பிறகு எதற்காக சேந்தன் அமுதன் பாத்திரத்தை அநாவசியமாக வைத்திருக்கவேண்டும் ? என்பதுதான் விளங்கவில்லை.

மணிமேகலை, குடந்தை சோதிடர் ஆகியோரை தவிர்த்தது போல அமுதனையும் கதையை விட்டே அகற்றி இருக்கலாமே?

நாவல் படித்த வாசகர்களை திட்டமிட்டு ஏய்க்கிற வேலை இது என்று எண்ணத் தோன்றுகிறது.


ஆனால் ஒன்றுநிச்சயம், நாகை சூடாமணி விஹாரத்தில், ஆதித்த கரிகாலனும், குந்தவை பிராட்டியும், அருண்மொழிவர்மனும் சந்தித்து ஆரத்தழுவி சகோதர பாசம் பொழிவதை, அமரர் கல்கி மட்டும் பார்த்திருந்தால்.. அவரே ஒரு கணம் அசந்துபோய் "அடேங்கப்பா..! இது நம்ம லிஸ்ட் லயே இல்லையே" என வியந்திருப்பார்.


சென்றபாகத்தில் வந்துபோன வால்மீன் கூட இந்த முறை அவ்வளவாக இல்லை.


ஆனால் ஊர்மக்கள், வீதிகள், வீர சைவ அகோரிகள் என்று காட்சி விரியும் போது படம் பிரம்மாண்டத்தின் சாயலை தொட்டு செல்கிறது.


நாகப்பட்டினம் சூடாமணி புத்த விஹாரமும், கோடியக்கரை கலங்கரை விளக்க பின்னணியும், திருமறைக்காடு பாழடைந்த மண்டபமும், கடம்பூர் சம்புவரையர் மாளிகையும், தஞ்சை கோட்டை நிலவறை ரகசிய சுரங்கமும் என்றாக நாவல் படித்த வாசகர்கள் தம் மனக்கண்ணில் கண்ட காட்சிகளை நிஜ கண்களுக்கு விருந்தாக படைத்திருக்கிறார் கலை இயக்குநர் தோட்டாதரணி. 


யானை தன் தலையில் தானே மண்ணைவாரி தூற்றுவதுபோல... படத்தின் ஆகப்பெரும் பலங்களில் ஒன்றான ரஹ்மான் பாடல்களை அவர்களே கண்டமேனிக்கு வெட்டி எறிந்துவிட்டார்கள்.

முதல் பாகம் அளவுக்கு பின்னணி இசை பெரிதாக இல்லை. ஆனால் பாடல்களுக்கான உயர்ரக இசை பின்னணியில் BGM ஆக ஒலிக்கிறது.


புது பாடலாசிரியர் இளங்கோ-வின் 

"வீரா ராஜ வீர..!.." பாடலை தமிழ்நாடு பாடநூல்களில் கூட இடம்பெற செய்யலாம். நறுந்தமிழ் வரிகள் அவை..! 

ரஹ்மான் இசையில் அப்பாடல் you tube ல் வெளியானபோது கேட்க கேட்க மெய்சிலிர்த்தது. ராஜ ராஜ சோழனுக்கு இப்பாடலை போடுவார்கள் என்று எதிர்பார்த்தேன் ஏமாந்தேன். ஆதித்த கரிகாலனுக்கு அதிலும் ஒட்டடை குச்சி போல காட்டுகிற இளவயது கரிகாலனுக்கு பாதிபாடலை போட்டு வீணடித்தனர். பிறகு விக்ரம் இறந்த பிறகான இறுதி ஊர்வலத்தில் மீதம் ஒலிக்கிறது. பாடல்வரிக்கும் காட்சிப்படுத்தியதற்கும் ஒரு மைக்ரோ விநாடி கூட பொருத்தமில்லை.!


"மறவர்கள் வீரம் காண, சமுத்திரம் வெறுவி போகும்..!

உருவிய வாளைக்கண்டு,

பிறைமதி நாணிப்போகும்..! எதிரிகள் உதிரம் சேர்ந்து, குதிகடல் வண்ணம் மாறும்..!

உதிர்ந்திடும் பகைவர் தேகம் கடலுக்கு அன்னம் ஆகும்...!

புலிமகன் வீரம் கண்டு,

பகைபுலம் சிதறி ஓடும்..!

சரமழை பெய்தல் கண்டு,

கடல் அலை கரைக்கு ஓடும்..!


அடடா பெரும் வீர!

எடடா துடிவாளை!

தொடடா சரமாலை! 

அடுடா பகைவோரை! "


தேசிய விருதுக்கு உரித்தான வரிகள் இவை. தமிழக அரசேனும் கௌரவிக்க வேணும்.


ஆண்டாளின் ஆழிமழைக்கண்ணாவுக்கு இசையும் சூழலும் பொருந்தி பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால் புறநானூற்று சோக பாடலான 

"இளையோர் சூடார்..

வளையோர் கொய்யார்.. "

இடம் பார்த்து சொருகிவிட்டார்கள்!! பாராட்டலாம்.


ஒட்டுமொத்தத்தில், எந்தெந்த காரணங்களுக்காக முந்தைய நம் ஜாம்பவான்கள் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க தயங்கினார்களோ (தொழில்நுட்பம், பொருட்செலவு) அந்த மாதிரி தடைகள் இன்றைய திரையுலகில் இல்லை என்பதை இந்த திரைப்படம் நிறுவி இருக்கிறது. 


ஆனால் அதேவேளை, அவர்கள் எந்த நம்பிக்கையில் பொன்னியின் செல்வனை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார்களோ (திரைக்கதை, வசனம், நடிப்பு) அதெல்லாம் கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டன என்பதையும் அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது இப்படம்.


தளபதி, ராவணன் படங்கள் வாயிலாக இதிகாச கதைகளிலேயே 'இல்லுமினாட்டி' வேலைகளை செய்தவரல்லவா இயக்குநர் மணிரத்னம். அவரிடம் போய் நாவல் - புதினத்தை தந்தால் என்ன செய்வார் பாவம்.!
ஒப்பீடு


பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பு "யாத்திசை" என்றொரு திரைப்படம் வெளியானது. தமிழில் அதுநாள் வரை வெளியாகிருந்த வரலாற்று படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமான அணுகுமுறையை "யாத்திசை" கையாண்டிருந்தது. 

ஆடம்பரம் /பகட்டு/ மிகைப்படுத்தப்பட்ட போலி திணிவுகளை புறந்தள்ளி,

பழங்கால ஓவியம், சிற்பம், வெளிநாட்டு பயணிகளின் குறிப்புகள் மற்றும் இலக்கிய வர்ணனைகளை அலசி ஆராய்ந்து உண்மைக்கு நெருக்கமான நம் முன்னோர் வாழ்வை அப்படியே சித்தரிக்க முயன்றிருந்தார் பட இயக்குநர். அபாரமான துணிச்சல் அது! ஏறத்தாழ நினைத்ததை சாதித்திருக்கிறார்.

பொன்னியின் செல்வனை விட 'யாத்திசை' தக்க தாக்கத்தை தமிழ் திரையுலகில் கட்டாயம் நிகழ்த்தும்.


ஒருசமயம்..ரணதீரன் என்ற பாண்டிய மன்னன் ஆடிய யுத்தகள ருத்ர தாண்டவத்தில் அன்றைய தென்னகத்தின் முடிவேந்தர்களும் பல்வேறு வேளிர் குலங்களும் திசையெங்கும் சிதறியோடி சின்னாபின்னமாகின. சிறுகுடிகள் பலவும் தங்கள் நில புல வளம் இழந்து தொழிலையும் தொலைத்துவிட்டு காட்டிலும் மேட்டிலும் பதுங்கி விட்டனர்.

அதில் ஒன்று 'எயினர்' குடி. எயினர் குல வீரன் ஒருவன் சிறுபடை ஒன்றை திரட்டி யாத்திசையின் எமனாக விளங்கும் பாண்டியனை எதிர்பாரா பொழுதில் தாக்கி கோட்டையை கைப்பற்றுகிறான். அதை அவன் தக்க வைக்க முடிந்ததா என்பதே கதை.


கதை படமாக்கப்பட்ட விதம் முற்றிலும் புதுமை..


பெரும்பாலான வசனங்கள் தொல்தமிழ் வழக்காக உள்ளது. தன் மொழிக்கு தானே Subtitle வைத்த பெருமை தமிழுக்கே உண்டு.


இந்த படத்தில் கூட சில வசனங்கள் திருக்குறள்/ பழமொழி/எதுகை மோனை/பன்ச் டயலாக் அமைய கவனம் பெறுகிறது. ஆனால் பொன்னியின் செல்வன் படத்தின் வசனம்.. பாழ்.!


இதில்,,


வீரர்கள் உடம்பில் உள்ள வீர விழுப்புண் வடு படம் முடியும்வரை மறையாதிருப்பதும்..


போர்க்களம் என்பது ஷுட்டிங் எடுக்கவென்றே உருவாக்கப்பட்ட மைதானமாக இல்லாமல்.. போரானது உண்மைக்கு நெருக்கமான காடு,மேடு, தோப்பு, துரவு, ஆற்றுப்படுகை என  சாத்தியமான பழங்கால பகுதிகளில் நடப்பதும்..


மன்னனை காத்து வரும் படைவீரர்கள், குதிரை, ரதம் இன்றி நடந்து போவதும்,


மாந்திரீகம் செய்கிற பூசாரிகள் தனியே குகைகளில் வாழ்வதும்


இயல்பான அழகில் நாயகிகள் உலவுவதும் 


நடிகர்கள் சிரத்தையோடு பொறுப்புணர்ந்து கதையோடு ஒன்றி நடிப்பதும்..


தமிழ்ப்படங்களின் தரத்தை பலமடங்கு உயர வழிவகுத்துள்ளது.


எனினும் இந்த படத்திலும் பல முரண்பாடுகள் உள்ளன..


போரிடும்போது தமிழர்களால் கடைபிடிக்கப்பட்ட சில சம்பிரதாயங்கள், அறநெறிகளை படம் பதிவு செய்யவில்லை. 


மன்னர் அரண்மனைகளின் புறத்தோற்றம் வெகு போலியானது! ஆலயங்களை விட பெரிதாக அடுக்கு மாளிகையாக இருக்கிறது.

தென்னக கட்டிடகலை.. இன்றைய கேரள பாணியில்.. ஓடு/கூரை வேயப்பட்டதாகவே இருந்திருக்ககூடும். (சான்று : செட்டிநாட்டு வீடுகள்)


பச்சை ஊனை அருவெறுக்கத்தக்க வகையில் உண்கிறார்கள். இயல்பான மேனரிசம் என்ற பெயரில் நாயகன் அடிக்கடி காரி காரி உமிழ்கிறான்.


வஞ்சக பிராமணன் ஒருவனை நாயகன் அவமதிக்கும் காட்சியானது ஒரு வீரத்தமிழனை தரம்தாழ்த்துகிற மாதிரிதான் தெரிகிறது. கீழ்த்தனமான செயல்கள் அதை செய்பவரை தாழ்த்துமே அன்றி செய்யப்படுவோரை தாழ்த்தாது.  


ஆடை அணிகலன்கள் பரவாயில்லை. கற்கருவி ஆயுதங்களில் கவனம் செலுத்தியதும் சிறப்பு. இருந்தாலும் பழங்காலத்தில் புழங்கிய எத்தனையோ ஆயிரம் பொருட்களில் ஒரு பத்து பதினைந்து ஜாமான்களையாவது காட்டியிருக்கவேணும். கதையில் இடம் இல்லையோ? காட்சிப்படுத்த ஏதும் கிடைக்கவில்லையோ? இயக்குநர்தான் அறிவார்.


இசையும் மெச்சும்படி இல்லை.


புறமும் மறமும் மட்டுமே படம் பூராவும் நிரம்பி வழிகிறது.

அதிலும் பெருகிவரும் குருதிப்புனலில் திரையே ஊறிநனைந்து போகிறது. (Wrong turn/ final destination/war of the world/saw முதலான வெளிநாட்டு படங்களைவிட இது கொடூரமான காட்சிகளை கொண்டுள்ளது..!) 


உண்மைக்கு நெருக்கமாக காட்டுகிறேன் என்றபெயரில்,,

நாகரீகங்களின் முன்னோடிகளான தமிழ்க்குடிகளை...., பஞ்சபராரிகளாக, வெறிபிடித்த மூர்க்கர்களாக,

பண்பற்றவர்களாக, ஒழுங்கான இல்வாழ்க்கை இல்லாதவர்களாக சித்தரிப்பது.. ஒருபோதும் வரவேற்பை பெறாது. வரவேற்கவும் முடியாது. 


அரவான், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படக்குழுவினரும் இதே தவறை முன்பு செய்ததாலேயே அவர்களின் உன்னத முயற்சி வீண்போனது.


வரலாற்று படங்களில், 'நவகண்டம்' முதலான நரபலி சடங்குகளை திரும்ப திரும்ப காட்டி பதிவு செய்வது நன்றாக படவில்லை. இந்த இயக்குநர்களுக்கு அதிலென்ன அப்படி ஒரு ஈர்ப்பு?


வீரம் மட்டுமல்ல கொடையும் கருணையும் கூட புறப்பொருள் தான் என்பது நம்மவர்களுக்கு எப்போது புரியும்?


இறுதியாக இயக்குநர் தோழருக்கு, 'நான் நிறைய கதைவைத்திருக்கிறேன்.. அதை அடுத்தடுத்த பாகத்தில் சொல்கிறேன்' என்பது சரியான அணுகுமுறை அல்ல. சொல்லவந்த கதையை போதுமான திணிவுடன்(stuff)

நயமுடன் சொல்லிவிடவேணும்.

கதைகளத்தை இன்னும் விஸ்தரியுங்கள்.


நப்பாசை


களிப்பூட்டுவதே திரைப்படத்தின் பிரதான நோக்கம் என்றாலும் மக்களின் மகிழ்ச்சியின் தரம் கூடிட அது வழிசெய்யும்படி இருக்கனும்.


பெருமையாக சொல்லிக்கொள்ளும் படி ஒரு நல்ல வரலாற்று படம் தமிழில் வரவேணும். விவரம் தெரிந்த குழந்தைக்கு கூட புரியும்/பிடிக்கும் கதை அமைந்திருக்க, மேதாவிகள் பாராட்டும் வண்ணம் உத்திகள் பொதிந்த திரைக்கதையும் அமைந்திடனும். நடிக்க தெரிந்த நடிகர்களை கொண்டு பாத்திரங்களுக்கு உயிரூட்டவேண்டும்.

படம் அனைத்து தரப்பினர் ஆதரவையும் பெற்றிட வேண்டும்.

இசை கூடுமானவரை செவ்வியல்/பழந்தமிழ் பண் சார்ந்து அமையனும்.  பாடல்கள் காலம் கடந்தும் நினைக்கப்படவேண்டும்.

வசனங்கள் அரசமிடுக்குடன் மொழிவளம் மெருகேறி கேட்பவருக்கு உத்வேகத்தை வாரிவழங்குவதாக இருக்கவேண்டும்.


பணம் தந்து பொழுது ஒதுக்கி பார்க்கும் ரசிகர்கள் மனம் நிறைந்து அகண்ட அறிவுடன் திரும்ப வேண்டும். 


அந்த படமும் விமர்சிக்கப்படும். சந்தேகமில்லை. ஆனால் அந்த விமர்சனமே படத்தின் உள்ளடக்கத்தை பறைசாற்றுவதாக அமையும். அப்படி ஒருபடம் இதுவரை வரவில்லை. ஒருநாள் நிச்சயம் வரும். 


ஆவலுடன்,

தமிழ்த் திரைப்பட 

ரசிகப் பெருமக்கள்.


சூரியராஜ்


ஆசிரியரது இன்ன பிற கட்டுரைகள்


பொன்னியின் செல்வன் பாகம் 1 விமர்சனம்

பெயரதிகாரம் - ஒரு பார்வை

ஆழக்கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா..!

1 Comments

 1. 'சிலக் காட்சிகளின் மாற்றம் கதையைப் பெரிதும் பாதிக்கவில்லை' என்று ஆசிரியர் குறிப்பிட்டதை ஏற்கக்கூடாது.

  இலக்கியமென்பது சமூகத்தை பிரதிபலிப்பது. அது ஒரு ideology. எழுத்தாளர் ஆக்கும் கதாப்பாத்திரங்களை தனது சுதந்திர எல்லையின் உச்சத்தில் நிறுத்தியே கதையைச் சமைப்பார், அப்போதே அது இலக்கியத்தரத்தினைத் தொடுகிறது.

  சங்க இலக்கியத்தில் ஏதும் ஒரேயொருப் பாடலை எடுத்துக்கொண்டு அதிலுள்ள ஏதும் ஒரேயொரு உருபன் அல்லது சொல்லை நீக்கி படித்துப் பார்த்தால் அது கவிதையாகவே இருக்காது.

  கவிதை சிதைந்து ஊசலாட்டம் காட்டும். செவ்வியல் என்பது அது தான். அது ஒரு கட்டமைப்பு. unreal ஆக அடுக்கி வைக்கப்பட்டப் பிரமிடு. அதிலிருந்து ஒருக்கல்லை உருவினாலும் அது தன் செவ்வியல்பை இழக்கும்.

  கல்கி, திரு.வி.க வின் மாணவர். சமத்துவத்தை சொல்லாத இலக்கியத்தை இலக்கியமென ஏற்காதார். சேந்தன் அமுதன் உண்மையில் செம்பியன் மாதேவியின் மகனாக இருந்தாலும் அடிப்படையில் அவனொரு கைங்கரிய தாசன் தான். சோழநாட்டின் அடிப்பொடி.

  கதையில் அவனை அதிகாரத்திற்கு கட்டுண்ட அப்பாவி அடிமையாக காட்டி சடாரென வெண்கொற்றக்குடையின் கீழ் சோழவளத்திருநாட்டின் அரசனாய் நிறுத்துவார் கல்கி.

  இதிலிருந்து, சேந்தன் அமுதன் ஒரு குறியீடாக எனக்குத் தெரிகிறான்.

  குறியீட்டைச் சிதைப்பது எப்படி கதையை பாதிக்காது இருக்கும்?

  அக்கால சமூகப்பின்னணியை சொல்லாமல் சொல்கிறது அக்குறியீடு. எழுத்தாளரின் மீவியல்பு சிந்தனையே அரசனை ஆண்டியாக்கி ஆண்டியை அரசனாக்கிக் காட்டி சமூக முரணை அப்பட்டமாக்குகிறது.

  உண்மையை அப்படியே சொன்னால் செருப்படி தான் கிட்டும். கல்கி சாமர்த்தியர். சேந்தன் அமுதன் தான் கதையின் உயிர். வேறு வழியே இன்றி அவனாலே கதை மூச்சிட்டது.

  விமர்சனத்தை படித்தபோது அதிர்ச்சியாய் இருந்தது.

  கதையின் aesthetic value (அழகியல் மதிப்பு) பூஜ்ஜியத்திற்கு வந்துவிட்டது.

  சேத்தன் அமுதனும் கதையும் கல்கியும் செத்துவிட்டார்கள்

  ஆசிரியர் Trend எனும் சொல்லாடலுக்கு "ஈன வழக்கு" என்ற பதத்தினைப் பயன்படுத்தி இருக்கிறார்.

  அவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. Trend என்பதற்கான சிறப்பான கலைச் சொல் இது தான். வேறொன்றை அதோடு நிறுத்த முடியாது.

  ஆசிரியர் விளையாட்டாக ஒரு செவ்வியல் கலைச்சொல்லை ஆக்கிவிட்டார்.

  தமிழ்நாடு சொற்பிறப்பியல் பேரகராதிக்கு அனுப்பி வைப்போம்.

  அந்த ஈன வழக்கு தான் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டாக அரங்கேறியுள்ளது.

  ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு