Trending

தொட்டில் பழக்கம் சிறுகதை


எங்கள் ஜவுளிக் கடையில் வேலை பார்க்கும் சேல்ஸ் கேர்ள் அனிதாவுக்கு கும்பகோணத்தில் திருமணம். நான் மேனேஜர் என்பதால் எனக்கு கல்யாண  பத்திரிகை கொடுத்து இருந்தாள். மற்றவர்களுக்கு உள்ளூரில் வரவேற்பு பத்திரிகை. எனக்கு மதிப்பு கொடுத்து பத்திரிகை கொடுத்திருப்பதால் கும்பகோணம் போவதுதான் முறை.


கும்பகோணம் என்றதும் என்னோடு படித்த அசோக்குமார் நினைவு வந்தது. அங்குதான் பி டி ஓ ஆக இருக்கிறான். என்னை கும்பகோணம் வந்தால், வந்து பார்க்கும்படி பல முறை கூறி இருக்கிறான். அங்கு போக வாயப்பு ஏற்படவில்லை.


முதலாளியிடம் சொல்லி திருமணத்துக்கு போக  லீவு வாங்கிவிட்டேன். செல் தொலைந்த போது, அசோக்குமார் நம்பரும் தொலைந்து போய்விட்டது. இருந்தாலும் தேடி பிடித்து அவன் நம்பரை எடுத்துவிட்டேன். போன் செய்தேன்.


"அசோக்! நான் மூர்த்தி பேசுறேன்"


"மாப்ள! எப்படி இருக்கே? இன்னமும் அந்த ஜவுளிகடையிலதான் இருக்கியா?" என்றான்.


"ஆமாம்டா" என்றேன். டா என்ற வார்த்தையை பயன்படுத்திய பிறகு என்ன நினைப்பானோ என்று பல்லைக் கடித்துக் கொண்டேன். அவன் எழுபது என்பதாயிரம் வாங்கும் ஆபீசர். நான் மேனேஜர் என்ற பதவியில் இருந்தாலும் பத்தாயிரம் சம்பளம் வாங்கும் சாதாரண ஊழியன்.


கும்பகோணம் வருவது பற்றி சொன்னேன்.


"நீ கல்யாணம் முடிந்ததும் ஆபிஸுக்கு வந்துடறியா?" இல்ல நான் ஆபீஸ் ஜீப்பை எடுத்துக் கொண்டு வந்து உன்ன பிக்கப்  பண்ணிக்கவா?" என்று கேட்டான்.


"இல்ல இல்ல நானே வந்துடறேன்". அவசரம் அவசரமாக மறுத்தேன். அவன் அப்படி கேட்டதே எனக்கு பெருமையாக இருந்தது.


கும்பகோணம் பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன். திருமணத்தைப் பற்றிய நினைவுகளை விட அசோக்குமாரோடு இருந்த சின்ன வயசு நினைவுகள் நெஞ்சில் நிழலாடியது.


ஒன்றாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகத்தான் படித்தோம். கிராமத்து பள்ளி என்றாலும் எங்கள் வீட்டில் இருந்து மூன்று கிலோமீட்டர் நடந்துதான் செல்வோம். ஒரு மாமரத்தை வழியில் பார்த்தாலும் விடமாட்டான். எப்படி ஏறினான் எப்படி இறங்கினான் என்று யோசிப்பதற்குள் மாங்காயை பறித்துவிடுவான். எனக்கு பயமாக இருக்கும்.


வழியில் கடையில் பத்து பைசாவுக்கு கடலை வாங்குவதற்குள் இருபது பைசா மிட்டாய்களை எடுத்து விடுவான். பள்ளிப் பிள்ளைகள் தவறு செய்வார்கள் எனக் கடைக்காரர் நினைத்து கூட பார்க்க மாட்டார். அதனால் அவனுக்கு பிரச்சனை ஏற்பட்டது இல்லை. சில சமயம் அவனோடு கூட போகவே பயமாயிருக்கும்.


ஆனால் அப்போதே என்னை விட நன்றாக படிப்பான்.  அதனால் அரசு தேர்வு எழுதி அலுவலக உதவியாளராக சேர்ந்து இன்று படிப்படியாக முன்னேறி பி டி ஓ ஆகிவிட்டான். அதையெல்லாம் இப்போது நினைக்கும் போது வேடிக்கையாக உள்ளது.


திருமணம் முடிந்து விட்டது. நான் நேரில் வந்ததில் அனிதாவுக்கு ரொம்ப சந்தோஷம். நேராக புறப்பட்டு அசோக் அலுவலகம் வந்தேன். அவன் அறை எங்கிருக்கும் என தேடிக் கொண்டே வந்தேன்.


"சார் நீங்க மூர்த்திதானே? நான் இந்த ஆபீஸ் பீயூன்தான். அய்யா உங்கள அழைத்து வர சொன்னாரு"


அவர் பின்னே நடந்து வந்தேன். அவர் காட்டிய அறையில் நுழைந்தேன். அசோக்குமார் கம்பீரமாக உட்கார்ந்து இருந்தான். அவனைச் சுற்றி பல கிராமத்து பஞ்சாயத்து தலைவர்கள் ஏதேதோ உதவி கேட்டு அவனை சூழ்ந்து நின்றார்கள். அவர்களுக்கு தேவையான உதவி செய்வதாகவும் பக்கத்து அறையில் உள்ள கிளார்க்கிடம் எழுதி கொடுத்து விட்டு செல்லுங்கள் என்றான். கட்சிக்காரர்கள் சிலரும் சூழ்ந்து நின்றார்கள்.


அவனுக்கு எதிரில் உள்ள சீட்டில் என்னை உட்கார சொன்னான். நான் அந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தேன்.

"அசோக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்" பெயர் பொறிக்கப்பட்ட பலகை சுவரில் மாட்டப்பட்டு இருந்தது. அதன் அருகில் இன்னொரு அறிவிப்பு பலகை. அதில்


"லஞ்சம் வாங்குவது குற்றம் இவ்வலுவலுகத்தில் உள்ளவர்கள் தவறு செய்தால் புகார் செய்ய வேண்டிய செல் நெ  9080XXXX76"

என்ற அறிவிப்பு ஒரு தொலைபேசி எண்ணுடன் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதைப் பார்த்தபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. "எவ்வளவு மாறிவிட்டான்" மனதுக்குள் நினைத்து கொண்டேன்.


எல்லோரையும் அவசரம் அவசரமாக பேசி அனுப்பிவிட்டு பியூனை கூப்பிட்டான்.


"இன்னும் பதினைந்து நிமிடத்துக்கு யாரையும் உள்ளை விடாதே. யாரும் கேட்டால் மீட்டிங்கில் இருக்கேன்னு சொல்லு." என்றான்


"அசோக் எப்படி இருக்கே! உன்னை இந்த பெரிய பதவியில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அரசு அலுவலகம் என்றாலே லஞ்சம்தான் நினைவுக்கு வரும். நீ இந்த போர்டை மாட்டி, எல்லோருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறாய்.


லஞ்சம் வாங்க மாட்டேன்னு, தென்காசி விஏஓ அப்துல் அலியும், ஆனைமாலை பெண் விஏஓ முத்துமாரியும் அவங்க  அலுவலகத்தில் ஒரு அறிவிப்பு வச்சு இருந்தாங்க. அது பத்திரிகையில் செய்தியாக வந்தது. பதினைந்தாயிரம் விஏஓ இருந்தாலும் ஒன்னு, ரெண்டு பேராவது, இப்படி லஞ்சம் வாங்காமல் இருக்கிறாங்களேன்னு நான் சந்தோசப்பட்டேன். அது போல நீ இந்த போர்ட வச்சிருக்கே. உண்மையிலேயே ஒன்ன நினைச்சா பெருமையாக இருக்கு" என்றேன். தலைகுனிந்து என் பாராட்டுகளை ஏற்றுக் கொண்டான்.


அப்போது அறைக்குள் நுழைந்த ஒருவர் பரபரப்பாக உள்ளே வந்து "திருமண உதவித்திட்டத்தில் செக் வாங்க வந்தேன். அதைக் கொடுப்பதற்கு ஐயாயிரம் பணம் கேட்கிறார் சார்" என்று புகார் சொன்னார்.


அதற்கு அசோக் "சார் உங்க அப்ளிகேஷன் பத்து டேபிளுக்கு போயிட்டுதான், எங்களுக்கு வருது. எங்கள் ஆபிஸ்ல யாரும் காசு கேட்க மாட்டாங்க. மேலே உள்ளவங்களுக்காக கேட்டு இருப்பாங்க. இருந்தாலும் விசாரிக்கிறேன். நீங்க போங்க" என்றான். உடனே அசோக் பக்கத்து அறைக்கு போன் செய்து ஏதோ ரகசியமாக கூறினான்.


புகார் சொன்னவர் அறையிலிருந்து வெளிவந்தவுடன், பக்கத்து அறை கிளார்க் வேகமாக வெளியே வந்து,  செக்கை அவசரம் அவசரமாக அவர் கையில் திணித்தார்.


"ஏன் சார் அவரிடம் கம்ப்ளெய்ண்ட் பன்றீங்க. காசு இல்லைன்னா என்னிடம் சொல்ல வேண்டியது தானே"


"காசு இல்லைன்னு நான் சொல்லல. உங்களுக்கு கொடுக்க ஆயிரம் ரூபாய் எடுத்துகிட்டுதான் வந்தேன். நீங்க ஐயாயிரம் கேட்டதால்தான் பிரச்சனை. அதனால்தான்  புகார் செய்யற மாதிரி ஆயிட்டு. நான் மனசாட்சி இல்லாதவன் இல்ல. இந்தாங்க பிடிங்க உங்களுக்காக கொண்டு வந்த ஆயிரம்"


இது நடந்து கொண்டிருந்த போது வெளியே வந்த அசோக் "வசந்த பவன் வரை போயிட்டு வந்துடறேன்" என்று பியூனிடம் சொல்லி விட்டு என்னை அருகில் உள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்றான்.


அசோக்கை பார்த்ததும் எழுந்து நின்ற ஓட்டல் உரிமையாளர், "வாங்க வாங்க" என கல்யாண வீட்டில் வரவேற்பது போல வரவேற்றார். நாங்கள் உட்கார்ந்த டேபிலுக்கு இரண்டு சர்வர்கள் எங்களை கவனிக்க வந்தார்கள். அசோக்குமாருக்கு உள்ள செல்வாக்கு என்னை ஆச்சரியப்படுத்தியது. இலை முழுவதும் கூட்டும், பொறியலும், வறுவலும், அவியலும்  அணிவகுத்து இருந்தது.


நான் ஒரு சிறிய டிபன் பாக்ஸில் மதிய சாப்பாடு சாப்பிடுபவன். இவ்வளவு பெரிய விருந்து சாப்பாட்டை எப்படி சாப்பிடுவேன்? முக்கால்வாசி உணவு வீணாகாத்தான் போனது. சாப்பிட்டு விட்டு கல்லா அருகே சென்று கடை முதலாளியிடம் ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டினான் அசோக். கடைசி வரை வாங்க மறுத்துவிட்டார் ஓட்டல் முதலாளி.


வாசல் வரை வந்து எங்களை வழியனுப்பி வைத்த ஓட்டல் முதலாளி "சார் அந்த ஃபுட் செக்யூரிட்டி ஆபிஸர் அடிக்கடி எங்கள் கடைக்கு வந்து தொல்லை கொடுக்கிறார். கொஞ்சம் சொல்லி வையுங்க" பணிவாக சொன்னார். "நான் பாத்துக்கிறேன்" என்ற  அசோக் சாப்பாட்டுக்காக எடுத்த அந்த ஐநூறு ரூபாய் நோட்டை, மீண்டும் தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். நான் அசோக்கிற்கு நன்றி சொல்லிவிட்டு,  பஸ்ஸ்டாண்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.


கூட்டமாக இருந்ததால் கொஞ்சம் வெயிட்பண்ணி அடுத்த பஸ்ஸில் ஏறினேன். அடித்து பிடித்து ஒரு இடத்தில் உட்கார்ந்த  போது ஓர் ஆச்சரியம், என்னோடு படித்த இன்னொரு நண்பன் காசி அங்கு அமர்ந்து இருந்தான். நலம் விசாரித்துக் கொண்டோம். பத்திரப் பதிவு அலுவலக வாசலில் பத்திரம் எழுதிக் கொடுத்து, வாழ்க்கையை ஓட்டுகிறானாம்.


ஜவுளிக் கடைக்கு உள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டிருந்த எனக்கு ஒரே நாளில் இரண்டு நண்பர்களை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. பல செய்திகளை பேசிய பிறகு அவனுடைய செல்போன் எண்னை  கேட்டேன். அவன் சொன்ன நெம்பர் 9080XXXX76.


இந்த நெம்பரை கேட்டதும் எனக்கு குழப்பம் அதிகமானது.

"இந்த நெம்பரை எங்கேயோ பார்த்திருக்கிறேனே! அட நம்ம அசோக்குமார் அறையில் எழுதப்பட்டிருந்த நெம்பர்"

"காசி! இந்த நெம்பரை அசோக் அறையில் பார்த்தேன். நீ சொல்லும் உனது செல் நெம்பர் சரிதானா?" என்றேன்.


நான் கேட்டவுடன் காசி சிரித்தான்.


"அசோக் அறையில் உள்ளது எனது நம்பர்தான். அந்த ஆபிசில் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு ரேட் உண்டு. அதைக் கொடுக்க விரும்பாதவர்கள், லஞ்ச ஒழிப்புத்துறை என நினைத்து என் நெம்பருக்கு போன் அடிப்பார்கள். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் சொல்லிவிட்டு, அசோக்கிடம் விபரத்தை சொல்லிவிடுவேன். அவர்களுக்கு மட்டும் காசு வாங்காமல் உத்தரவு போட்டுவிடுவான்.


எதுவும் பேசாமல் கொடுப்பவர்களிடம் வாங்கி கொள்வான். இந்த சேவைக்கு எனக்கு மாதம் மூவாயிரம் எனக்கு கமிஷன் கொடுக்கிறான். வெளியில் சொல்லிக் கொண்டு அலையாதே" என்றான்.


"படுபாவி! அவன் வாங்கி கொடுத்த சாப்பாடு கூட லஞ்சக் காசில் கொடுத்ததுதானா?"


காலையில் இருநூறு ரூபாய் மொய் எழுதிவிட்டு கல்யாணத்தில் சாப்பிட்டேன். செரித்து விட்டது. மதியம் இவன் வாங்கி கொடுத்தது செரிக்குமா? அப்துல் கலாம் சொன்னது உண்மைதான் போலிருக்கிறது"


"அப்துல் கலாம் என்ன சொன்னார்?"ஆர்வமுடன் கேட்டான் காசி.


"ஒரு பள்ளியில் இளம் மாணவர்களுடன் ஒருமுறை அப்துல்கலாம் கலந்துரையாடினார். "லஞ்சம் எப்போது ஒழியும்" என்று ஒரு மாணவன் கேட்டான். அதற்கு அப்துல் கலாம் என்ன சொன்னார் தெரியுமா?

"இந்தத் தலைமுறையைத் சேர்ந்த அரசு அலுவலர்கள் இருக்கும் வரை லஞ்சம் ஒழியாது. ஏனென்றால் அவர்கள் ஊழலில் ஊறித் திளைத்துவிட்டார்கள். எப்போது லஞ்சம் ஒழியும் என்றால் உங்களை போல் கேள்வி கேட்கும் இளம் சிறார்கள் பொறுப்புக்கு வரும்போதுதான் லஞ்சம் ஒழியும்" என்றார். லஞ்சப்பணம் என்பது தொழுநோய் உள்ளவன் கையில் உள்ள வெண்ணெயை வழித்து நக்குவதற்கு சமம்.


"அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதற்கு பதில் பிச்சை எடுத்து சாப்பிடலாம்" என மதுரை ஹைகோர்ட்டே சொல்லி உள்ளதே!"


"எல்லாம் தெரிந்தும்தான் அவர்கள் அப்படி இருக்கிறார்கள். நாய் வாலை உன் போன்றவர்களால் நிமிர்த்த முடியாது"


பேசிக் கொண்டு வந்த போதே நான் இறங்கும் இடம் வந்து விட்டது. இறங்கிவிட்டேன். கொஞ்சமாக சம்பாதித்தாலும் "மானம் மரியாதையோடு வாழ்கிறோம்" அது போதும் என நினைத்துக் கொண்டேன்.


ஆறு மாதம் ஆகியிருக்கும்.


ஒரு நாள் டீக்கடையில் டீயும் வடையும் சாப்பிட்டேன். வடை மடித்த பழைய தினத்தந்தி பேப்பரில் ஒரு செய்தி.


"கும்பகோனத்தில் பயங்கர சாலை விபத்து!

பிடிஓ கால் முறிந்தது!"


அவசரம் அவசரமாக பெயரை படித்தேன். அசோக்குமார் என இருந்தது. தேதியை பார்த்தால் சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. யாரும் சொல்லவில்லை. எனக்கும் தெரியவில்லை. அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருந்தது. அவனை பார்க்க வேண்டும் போல இருந்தது. என்ன இருந்தாலும் என் பழைய கால நண்பன் அல்லவா?


மதியம் கும்பகோணம் விரைந்தேன். அசோக் வீடு தெரியாததால் ஆபிஸில் விசாரித்தேன். அலுவலகத்துக்கு வந்த ஒருவர் "அவரை ஏன் சார் தேடுறீங்க! அந்த ஆளு பெரிய பை சார். இப்ப வந்துள்ள பிடிஓ சின்ன பையன். நமக்கு பத்து காசு செலவு இல்லாம காரியம் நடக்குது" என்றார்.


அலுவலகத்தில் முகவரியை வாங்கி கொண்டு அவன் வீட்டுக்கு போனேன். வீட்டை பிரம்மாண்டமாக கட்டி இருந்தான். கால் முழுவதும் பேன்டேஜ் கட்டி படுக்கையில் சாய்ந்து கிடந்தான். பக்கத்தில் மனைவி.


எப்படி நடந்தது என விசாரித்தேன். சொன்னான்.

"சென்னையில் "காலை எடுப்பதைத்  தவிர வேறு வழியில்லை" என்று சொல்லிவிட்டார்கள் ஆனால் மும்பையில் காலை எடுக்காமலே அதிநவீன சிகிச்சை செய்து காப்பாற்றிவிட்டார்கள். ஒரு வருடத்தில் நடக்க ஆரம்பித்துவிடுவேன். என்ன, செலவுதான் இருபது லட்சம் ஆகிவிட்டது" என்றான்.


"நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே! அசோக். தப்பான வழியில் பணம் சேர்ந்தா, அது சேர்ந்த மாதிரியே போய்விடும். ஏழைகளின் வயிற்றெறிச்சல், நமக்கு செலவா வரும். தப்பான வழியில் பணம் சேர்ந்தா, அம்பது லட்சமானாலும், ஒரு நிமிடத்தில் போய்விடும். செலவு வராவிட்டாலும், குடும்பத்தில் நிம்மதி போற மாதிரி ஏதாவது காரியம் நடந்திடும். பணம் இருப்பதால் பத்து பிளேட் சாப்பாட்டை ஒரு வேளைல சாப்பிட முடியுமா? பத்து வீடு கட்டினாலும் ஒரு வீட்லதானே படுக்க முடியும்? பணத்தை அடுக்கி அத மெத்தை ஆக்கி படுக்க முடியுமா? என்னை போல பத்தாயிரம் சம்பளம் வாங்குறவனே நேர்மையாக இருக்கும்போது, உன்னால் ஏன் நேர்மையாக இருக்க முடியாது?

நீ ஒரு வருஷம் மெடிக்கல் லீவு போட்டாலும், உனக்கு சம்பளம் கொடுக்கிற அரசுக்கு துரோகம் செய்யலாமா?. நேர்மையா சம்பாதிக்கிற காசுலேயே பத்துல ஒரு பங்கு இல்லாதவங்களுக்கு கொடுக்கனும்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க. இதுவரை தவறாக சம்பாதிச்ச காசு எதுவும்  உன்னிடம் இருந்தா, அத ஏழைங்க,  இல்லாதவங்களுக்கு கொடுத்துடு. நீ செஞ்ச பாவம் போயிடும். இந்த மாதிரி செலவ கடவுள் இனி உனக்கு கொடுக்க மாட்டார்"


பேசிக்கொண்டே போன என்னை தடுத்தான் அசோக்.


"ஒன்னோட லெக்சர முடிச்சிட்டியா?  நீ சொல்ற எந்த செய்திக்காவது, சயின்டிஃபிக்கா ஏதாவது ஆதாரம் இருக்கா? பணம் இருந்தால்தான் இந்த உலகம் உன்னை திரும்பி பார்க்கும். இல்லானை இல்லாளும் வேண்டாள்னு நீ படிச்சதில்லையா? இந்த இருபது லட்சம் என்னிடம் இல்லேன்னா ஒரு காலே எனக்கு இருக்காது தெரியுமா? காசு எனக்கு பெருசுல்ல. ஒரு வருடத்துல வேலைக்கு போயிட்டேன்னா, இந்த இருபது லட்சத்த ஆறு மாசத்துல எப்படியோ திரும்ப எடுத்துடுவேன். நான் ஒன்னு சொல்றேன்னு வருத்தப்படாதே. இப்படி எல்லாம் பேசிகிட்டு இனி என் வீட்டுக்கு வராதே" என்றான்.


அமைதியாக அவன் வீட்டை விட்டு வெளியே வந்தேன். இவனை மாற்ற முடியாது. இது அவனது தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை தொடரும். ஒட்டுமொத்த சமுதாயமும் மாறும் வரை ஊழலை ஒழிக்க முடியாது


ஜெ மாரிமுத்து

1 Comments

  1. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு