Trending

நான் விரும்பும் சுதந்திர போராட்ட வீரர்

நான் விரும்பும் சுதந்திர போராட்ட வீரர்


போட்டிக்கு கட்டுரையை 
அனுப்ப வேண்டிய  சரியான முகவரி கீழே

முன்னுரை


உடல்மேல் அடிபட்டாலும் கொடியை விடாது பிடித்து உயிர்விட்ட கொடிகாத்த குமரன், சிறையிலே வதைப்பட்ட பின்பும் செங்குருதி ஒழுகி செக்கிழுத்த சிதம்பரம் பிள்ளை, காகிதம் ஒன்றையே ஆயுதமாக்கி தழல்கவி பல படைத்த பாரதியார், வாழ்வையே விலையாக தந்து வாடாத புகழேற்ற வாஞ்சிநாதன், நம் மண்ணை பறித்த வெள்ளையனுக்கு மரணத்தை காட்டிய பூலித்தேவன், கயத்தாற்றில் தூக்கு கயிற்றை முத்தமிட்ட கட்டபொம்மன் என ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்க்க நம் தமிழ் தாய் வீரமென்னும் வித்தை கொண்டு பெற்றெடுத்த பிள்ளைகள் பலர்.


அம்மாமனிதர்களின் வியர்வை மற்றும் குருதியின் வாசமே இன்றைய நமது சுதந்திர சுவாசம் என்றால் அது மிகை அல்ல.


இக்கட்டுரை இந்தியாவின் மறுமை வெள்ளத்திலிருந்து நம்மை மீட்டெடுத்த மாமனிதர்களை பற்றிய ஒரு தொகுப்பு. நான் விரும்பும் சுதந்திர போராட்ட வீரர் பற்றிய மகத்தான நிகழ்வுத் தொகுப்பு.


மகாத்மா காந்தி


இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் கடைசி பாகம் மகாத்மா காந்தியாலேயே நிரப்பப்பட்டது எனலாம். அவர் எந்தவொரு இந்திய வரலாற்று ஆய்வாளராலும் தவிர்க்க முடியாத ஓர் இடத்தில் உள்ளார். வெள்ளையர்களை வாள் கொண்டு எதிர்த்த பூலித்தேவன் முதல் அத்தியாயம் என்றால் அருள் கொண்டு எதிர்த்த காந்தியடிகளே இறுதி அத்தியாயம்.


"கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்"


கவிஞர் வெ.இராமலிங்கனார் வேதை உப்பு சத்தியாகிரகத்தின் போது உரக்க உரைத்த இவ்வரிகளை கேட்டு வெள்ளையர்களே நடுங்கினர் என்கிறார் எழுத்தாளர் ராகவன் அவர்கள். ஆம், உலகப்புரட்சிகளின் விந்தையே இந்திய சுதந்திர போராட்டம். 


காந்தியடிகளும் அவரது போராட்டமும் பாமர மக்களின் அறிவுக்கு அப்பாற்பட்டதாகவும் அவர்களின் உணர்வுகளுடன் மிக நெருக்கமாகவும் இருந்தது.


"இந்த தள்ளாத வயதிலும், ஒரு கிழவர் நாட்டின் விடுதலைக்காக இத்தனை அயராது பாடுபடுகையில் நாம் நமது இந்திய நாட்டிற்கு செய்யவிருக்கும் உபகாரம் வேறென்ன இருக்க முடியும்?"


என்று காந்தியடிகளின் அறப்போராட்டங்கள் வாயிலாக எழுச்சி பெற்ற துடிப்புள்ள இளைஞர்கள் பலர். அதில் நேதாஜி சுபாஷ் சந்தரபோஸ் ஒருவராவார். காந்திய கொள்கையிலிருந்து நேர் எதிர்மறையான கொள்கையை தழுவிய அவரும் கூட விடுதலை போராட்ட உணர்வினை காந்தியடிகளின் வாயிலாகவே பெற்றார் என்பது பலரும் அறியாத தகவல்.


காந்தியம்


ஒருமுறை காந்தியடிகளை ஆங்கிலேயன் ஒருவன் தனது பூட்ஸ் காலால் ஓங்கி உதைத்த போது அவரது முன் பற்கள் இரண்டும் விழுந்தது. இரத்தத்தோடு எழுந்த காந்தி அந்த நிலையிலும் சொன்ன வார்த்தைகள்,


"ஒரு கருப்பன் உதைத்து இரு வெள்ளையன் விழுந்தான்"


என்பது தான். காந்தியடிகளின் கொள்கை அஹிம்சை. அது இராமலிங்க அடிகளாரின் ஜீவகாருண்ய நெறியை ஒத்தது.


உலக நாடுகள் அனைத்தும் காந்தி இந்திய விடுதலைக்காக முன்னெடுத்த சத்தியாகிரக போராட்டத்தை வியந்து போற்றியதன் காரணம். அப்போராட்டத்தில் எவ்வித வன்முறையும் இல்லாதே ஆகும்.


"அஹிம்சை மனோநிலையை அடைவதற்கு மிகவும் கடுமையான பயிற்சி தேவையாய் உள்ளது. ஒரு ராணுவ வீரனின் வாழ்க்கையைப் போன்று அது ஒரு நியமத்துடன் கூடிய வாழ்க்கையாகும் - காந்தி"


காந்தி இறந்த பிறகு அன்றைய பெரும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்கிறார்,


'நிஜமாகவே இப்படி ஒரு மனிதர் ரத்தமும் சதையுமாக நம்மிடையே வாழ்ந்தார் என்பதை எதிர்கால சந்ததிகள் நம்ப மறுக்கும்'


சர்தார் வல்லபாய் பட்டேல்


இன்று நாம் வாழும் நவீன இந்தியாவினை ஒருங்கிணைத்த சிற்பி, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலே ஆவார். நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்தது தான் வல்லபாய் படேலின் மகத்தான சாதனைகளில் ஒன்றாக இன்றும் கருதப்படுகிறது.


குஜராத் மாநிலத்தில் பிறந்த இவர் காந்தியடிகளை போன்றே வழக்கறிஞராய் பணியாற்றி ஆங்கிலேயர்களை அறவழியில் எதிர்த்து போராட்டம் நடத்தியவர்.


தேசப்பற்று


1909ம் ஆண்டு வல்லபாய் படேலின் மனைவி புற்றுநோய்க்கான முக்கிய அறுவை சிகிச்சை செய்ய பம்பாயில் (மும்பை) உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தும் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் மருத்துவமனையிலேயே அவர் உயிரிழந்தார்.


மனைவி இறந்த சமயத்தில் வல்லபாய் படேல் நீதிமன்றத்தில் மூன்று பேர் சம்பந்தப்பட்ட ஒரு மரண தண்டனை வழக்கில் சாட்சியை குறுக்கு விசாரணை செய்துகொண்டிருந்தார். அவரிடம் மனைவி இறந்தது பற்றி ஒரு துண்டு சீட்டில் குறிப்பு  கொடுக்கப்பட்டது. 


அதை படித்து தனது பாக்கெட்டில் வைத்துவிட்டு குறுக்கு விசாரணையை தொடர்ந்தார். அந்த வழக்கில் வெற்றியும் பெற்றார்.


பின் நீதிபதி இடையில் வந்த குறிப்பு என்னவென்று படேலிடம் கேட்டபோது தான் தனது மனைவி இறந்தவிட்ட செய்தியை தெரிவித்தார்.


நீதிமன்றத்தில் இருந்தோர் அதிர்ச்சியடைந்தனர்.


"மனைவி இறந்த செய்தியை விடவுமா இந்த வழக்கு முக்கியம்?" என்று நீதிபதி கேட்க 


"என் மனைவியை என்னால் காக்க முடியவில்லை, உண்மை தான். ஆனால் தவறான நீதியிடமிருந்து மூன்று பேரை என்னால் காக்க முடிந்தது" என்றார் படேல்


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்


"எல்லோருமே வரலாற்று ஏடுகளில் வாழ்வதில்லை, வரலாற்றில் வாழ்பவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை"


மக்களால் நேதாஜி என்று அழைக்கப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் அதில் ஒருவர்.


1600-களில் விதேசியாக வந்த ஆங்கிலேயன் சுதேசியாக தன்னை மாற்றி கொண்டு அச்சுதேச மக்களையே ஆள்வதாய் எண்ணி கொண்டிருக்க அவ்வாதிக்க மனநிலையை அடக்கவே நம் வீர மண் சில தீர பிள்ளைகளை ஈன்றது.


சுபாஷ் சந்திர போஸ் 1915 ஆம் ஆண்டு கொல்கத்தா மாநில கல்லூரியில் பயின்ற போது அச்சமயத்தில் இனவெறி ஏறிய வரலாற்று ஆசிரியரான சி.எஃப்.ஓட்டன் என்ற ஆங்கிலேயர் இந்தியர்களை அவமதிக்கும் படியும் கேலி செய்து மகிழ்ந்தும் பாடங்கள் நடத்துவிப்பதில் பெரிதும் மகிழ்ந்தார். அதே கல்லூரியின் இன்னொரு ஆங்கிலேய ஆசிரியரான வீடினின் செயல்பாடுகள் இந்திய மாணவர்களை ஆத்திரமடைய செய்தது.


சுபாஷ் சந்திரபோஷ் அவர்களின் குடும்பம் 27 தலைமுறைகளாக வங்க மன்னர்களின் படை தலைவர்களாக செயல்படும் மரபுவழி பாரம்பரியத்தை கொண்டது.


கல்லூரியில் நிகழும் அநீதிகளை பொறுக்காத சுபாஷ் சந்திரபோஸ் தன் தலைமையிலான மாணவர் படை ஒன்றினை நிறுவினார். ஆங்கிலேயே ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் எதிர்க்கும் படியாக ஒரு பெரிய கல்லூரி நிர்வாகத்துடனே சொற்ப மாணவர்களுடன் போராட்டத்தை நடத்தினார்


கல்லூரி நிர்வாகம் ஸ்தம்பித்து போனது. சுபாஷ் மற்றும் அவரது போராட்டத்தில் ஈடுபட்ட நண்பர்கள் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார்கள். இருப்பினும் பிறகு ஸ்காட்டிஷ் கல்லூரியில் சேர்ந்து தனது கல்லூரி படிப்பை தொடர்ந்தார்.


இந்த இளம்பருவ நிகழ்வே பின்நாளில் Indian National Army (INA) அமைப்பை உருவாக்கவும் 'நேதாஜி' - 'சரியான பாதைக்கு அழைத்து செல்லும் உத்தம தலைவர்' என்ற பட்டத்தையும் பெற்று தந்தது எனலாம்.


1941 இல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கி, ஆசாத்ஹிந்த் என்ற வானொலிச் சேவையையும் உருவாக்கி, விடுதலைத் தாகத்தை, அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார்.


இன்றைக்கு நாம் பள்ளிகள், கல்லூரிகள், கூட்டங்கள் தோறும் இசைக்கும் ரவீந்திரநாத் தாகூரின் 'ஜன கண மன' நாட்டுப்பண் பாடலை முதன் முதலில் இந்திய தேசிய நாட்டுப்பண் பாடலாக அறிவித்த பெருமை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூக்கே சேரும்.


இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஜெர்மனியின் உதவி கிடைக்காது என சுபாஷூக்கு தெரிந்த பிற்பாடு நீர்மூழ்கி கப்பல் மூலமே இந்தியாவிலிருந்து ஜப்பான் சென்று இராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். 


நேதாஜி பதிலடி


இந்திய விடுதலைப் போரில் இந்திய தேசிய இராணுவத்தில் அதிகம் மலேசிய இரப்பர் தோட்ட தமிழ்த் தொழிலாளார்கள் சேர்ந்தார்கள். அதை ஏளனப்படுத்தும் விதமாக ஆங்கிலேயரான வின்சுடன் சர்ச்சில் பின்வருமாறு கூறினார்.


"மலேசிய தோட்டத்தில் இரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உரைந்து உள்ளது"


அதற்கு நேதாஜி பின்வருமாறு பதிலடி கொடுத்தார்.


"அந்த தமிழர்கள் தான் நாளை ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இரத்தத்தை குடிப்பார்கள்"


பகத்சிங்


தனது 24 வது வயதிலே தூக்கு கயிற்றை தழுவிய பகத் சிங் பல லட்ச இந்திய இளைஞர்களின் இந்திய சுதந்திர போராட்ட எழுச்சிக்கு காரணமாவார்.


பிரிட்டீஷ் ஆட்சிக்கெதிராக போராடிய குடும்பமொன்றிலே பகத் சிங் பிறந்தார். இவர் விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்ட சீக்கியக் குடும்பத்திலே பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராகவே வளர்ந்தார். இளம் வயதிலேயே கம்யூனிச சித்தாந்தத்தில் அதிகம் ஈர்க்கப்பட்டு பொதுவுடமை கொள்கையில் பெரிய நாட்டம் கொண்டிருந்தார். இதனால் ஐரோப்பிய புரட்சி இயக்கங்களோடு பகத்சிங்-க்கு தொடர்பு அதிகமானது. விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பின் தலைவராகவும் ஆனார் பகத்சிங். 


ஆங்கிலேயே அரசின் சிறைகளில் கூட ஆங்கிலேய கைதிகளுக்கு ஒரு வகையிலும் இந்திய கைதிகளுக்கு ஒரு வகையிலும் தண்டனையும் சலுகையும் அளிக்கப்படுவதை வெறுத்த பகத்சிங் இந்திய கைதிகளும் பிரிட்டீஷ் கைதிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று தனது 63 நாள் சிறைவாசத்திலே உண்ணாநோன்பு இருந்தது மக்கள் மத்தியில் அவ்வீர புருஷரை அறிமுகப்படுத்தியது


பழி வாங்க சபதம்


இந்தியாவின் அரசியல் நிலைமையைப் பற்றி அறிக்கையளிக்க ஆங்கிலேய அரசு, சைமன் ஆணையக்குழுவை 1928இல் நிறுவியது. ஆனால் இக்குழுவில் ஒரு இந்திய உறுப்பினர் கூட இல்லாததால் இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இதனை புறக்கணித்தன. 


அவ்வாணையத்திற்கு எதிராக லாலா லஜபதி ராய் அவர்கள் அகிம்சை வழியில் ஓர் அமைதியான போராட்டத்தை நிகழ்த்தினார். ஆனால் ஆங்கிலேயே காவலர்கள் அமைதியாக இல்லை. 


லஜபதி ராயின் அமைதி அணிவகுப்பை ஆங்கிலேய காவலர்கள் வன்முறை கொண்டு அடக்க பார்த்தனர். காவல் மேலதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட் காவலர்களை தடியடி நடத்த ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல் தானாகவே லாலா லஜபதி ராயை தாக்கினார். இதனால் கடுமையாக தாக்கப்பட்ட லாலா லஜபதி ராய் 17 நவம்பர் 1928 ஆம் ஆண்டு இறந்தார்


இந்த சம்பவத்தை பகத்சிங் நேரில் காணவில்லை இருப்பினும் லாலா லஜபதி ராயின் மரணத்திற்கு காரணமாய் இருந்தோர்களை பழி வாங்க சபதம் ஏற்றார் பகத்சிங்.


இதனால் பகத்சிங் சக புரட்சியாளர்களான சிவராம் ராஜ்குரு, சுக்தேவ் தபர் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோருடன் ஆங்கில அதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட்டைக் கொல்லக் கூட்டு சேர்ந்தார்.


ஸ்காட்டை கொல்ல சென்ற இக்குழு சமிக்ஞை புரிதலில் ஏற்பட்ட பிழையால் தவறுதலாக துணை காவல் மேலதிகாரியான சாண்டர்ஸை சுட்டு கொன்றது. 


தூக்கு தண்டனை


மகாத்மா காந்தி இக்கொலைச்சம்பவத்தைக் கண்டனம் செய்தார். பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுகதேவ் ஆகியோருக்கு ஆங்கிலேய அரசால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.


பகத்சிங்கின் தூக்குத்தண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குத்தண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டார். இந்த சம்பவம் இன்றளவும் மக்கள் மனதில் நிற்பதாலே பலரால் காந்தியடிகளை இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவராக ஏற்க முடிவதில்லை


லாகூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து பகத்சிங் மற்றும் இருவர் தூக்கு மேடைக்கு அழைத்து செல்லப்படும் போது பஞ்சாப் காங்கிரஸின் தலைவர் பீம்சேன் சச்சர் உரத்தக் குரலில் பகத்சிங்கிடம் கேட்டார்


"நீயும், உன் நண்பர்களும், லாகூர் சதி வழக்கில், தவறு செய்யவில்லை என்று ஏன் நீதிமன்றத்தில் முறையிடவில்லை?" 


அதற்கு பகத்சிங் தந்த பதில்,


"போராட்டக்காரர்கள் என்றாவது ஒரு நாள் இறந்துதான் ஆகவேண்டும், அவர்களின் உயிர்த் தியாகம்தான் அமைப்பை வலுவாக்கும். நீதிமன்றத்தில் முறையிடுவதால் மட்டுமே அமைப்பு ஒருபோதும் வலுவாகாது"


கொடிகாத்த குமரன்


1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டவர் தான் திருப்பூர் குமரன் என்ற கொடிகாத்த குமரன்.


காந்திய கொள்கையில் அதிகம் ஈடுபாடு கொண்ட திருப்பூர் குமரன் காந்தியடிகள் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் தவறாது கலந்து கொண்டவர். பள்ளி படிப்பை குடும்ப வறுமை காரணமாக பாதியிலே விட்ட திருப்பூர் குமரன் கைதறி நெசவு தொழிலில் தேர்ந்தவரானார்


1932 ஆம் ஆண்டு ஜனவரி 10 அன்று நடந்த ஆங்கிலேய அரசுக்கான எதிர்ப்புப் போராட்டத்தில் திருப்பூர் குமரன் கலந்து கொண்டார்.


தொண்டர்ப்படை சென்ற வீதியில்தான் போலீஸ் நிலையம் அமைந்திருந்தது. தேசியக் கொடி பிடித்துச் சென்ற தொண்டர்ப் படையைக் கண்டதும், சுமார் முப்பது போலீஸ்காரர்களும் இரண்டு அதிகாரிகளும் தடிபிடித்து நிலையத்தை விட்டுப் பாய்ந்தோடி வந்தனர். தொண்டர்ப் படையின் அருகில் வந்ததும் கண்மூடித்தனமாக வீரர்களைத் தடியால் அடிக்கத் தொடங்கினார்கள். 'கொடி பிடித்துக்கொண்டு போவது சட்ட விரோதமாகும் என்று அறிவித்திருக்கின்றோம். ஆகையால், அணிவகுத்துச் செல்வதைத் தடை செய்கின்றோம். கலைந்து போய்விடுங்கள் இல்லையென்றால் வன்முறையைக் கையாண்டு உங்களைக் கலைக்க முற்படுவோம்' என்று எச்சரிக்கை செய்ய வேண்டியதுதான் அப்போலீஸ் காரர்களுக்குரிய முறை. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. 


அனைத்து தொண்டர்களையும் தடியால் அடித்தார்கள்.  அவர்கள் எச்சரிக்கை செய்து இருந்தாலும் தொண்டர்கள் கலைந்து போக தயாராக இல்லை.


என்னே! வீரம்


பொதுவாகத் திருப்பூர் எதிலுமே உச்ச வரம்பைக் கடந்து செல்வதுதான் வழக்கம். ஆகையால் அவ்வூர்ப் போலீசாரும் உச்ச நிலையைக் கடந்து வெறி நாயை அடிப்பது போலத் தொண்டர்களை அடித்தனர். அடித்ததோடு, தொண்டர்களின் கையிலிருந்த தேசியக் கொடிகளைப் பிடுங்கி எறிந்தனர். இந்த இரண்டு செயல்களைத் தான் போலீசார் செய்தனர். அவ்வாறு கொடிகளைப் பிடுங்கும்பொழுது, முன்னால் சென்ற திருப்பூர் குமரனின் மீது முப்பத்திரண்டு போலீசாரின் முனைப்பும் சென்றது. ஆகையால், முதல் அடி குமரனுக்கே விழுந்தது. அந்த அடி சாதாரண அடி அல்ல. கொடுமையான இராட்சச அடியாகும். அந்த அடியால் குமரனின் இடதுபுறம் காதுக்கு நேராக மண்டை உடைந்து பிளந்து விட்டது. மேலும் மேலும் அவ்விடத்திலேயே பல அடிகள் விழுந்தன. ஆகையால் மண்டை பிளந்த இடத்தில் சுமார் இரண்டங்குல நீளமும் ஒன்றரை அங்குல அகலமும் கொண்ட மண்டை ஓடு துண்டானது. இதனால் திருப்பூர் குமரனின் மூளை செயல் இழந்தது.


"மூளையே செயலற்று போன அந்நிலையிலும் திருப்பூர் குமரன் தன் கையில் இருந்த தேசிய கொடியை விடவில்லை"


அவரது வலது கையில் இருந்த தேசிய கொடியை போலீஸார் பிடுங்கி எறிந்தனர். போராட்டம் முடிந்த பிற்பாடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட திருப்பூர் குமரன் பரிதாபமாக மரணத்தை எய்தினார்.


குமரனின் தியாகத்தால் திருப்பூர் பூமி - தியாக பூமி ஆனது. குமரன் அமரன் ஆனார்.


பாரதியார்


இந்திய விடுதலைப்போரில் மகாகவி பாரதியாரின் பங்கு பற்றி மேலும் அறிய


இந்திய விடுதலைப்போரில் மகாகவி பாரதியாரின் பங்கு அளவிட முடியாதது. இந்திய திருநாட்டில் அடிமை இருள் சூழ்ந்திருந்த நேரத்தில் சொல்லரிய ஒளிச்சுடராய் தோன்றியவரே மகாகவி சுப்ரமணிய பாரதியார்.


தென்னாட்டில் மகாகவி பாரதியார் என்றால் வட நாட்டில் ரவீந்தரநாத் தாகூர் ஆவார்.


"பாரதி மட்டும் வடநாட்டில் பிறந்திருந்தால் நோபல் பரிசு தாகூரிக்கு கிடைத்திருக்காது - கண்ணதாசன்"


பாரதி இன்றைக்கும் எவராலும் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒரு விசித்ர கவி. திலகரின் தீவிரவாதத்திற்கும் ஆதரவாக குரல் கொடுத்தார்.


"வீர மிக்க மராட்டியர் ஆதர

மேவிப் பாரத தேவிதிருநுதல்

ஆரவைத்த திலக மெனத்திகழ்

ஐய னல்லிசைப் பாலகங் காதரன்"


காந்தியடிகளின் அகிம்சை பிரச்சாரத்திற்கும் ஆதரவாக குரல் கொடுத்தார், 


"வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்

தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்

பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை

வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!"


பாரதியின் இளமை பருவம் தனிமை நிறைந்தது. அவரது தாயும் தந்தையும் பாரதியின் குழந்தை பருவத்திலே இறந்தனர். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்த போது பாரதிக்கு வயது 15.


மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் மாதம் 17 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். சென்னையில் "தேசமித்திரன்" பத்திரிகை நடத்தி வந்த சுப்பிரமணிய அய்யர் மதுரை வந்திருந்தார். அவருக்கு பாரதியின் அறிமுகம் கிடைத்தது. பாரதியாரின் திறமையைக் கண்டு வியந்த சுப்பிரமணிய அய்யர் சுதேசமித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராக நியமனம் செய்தார். 


1905 - ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினை கிளர்ச்சி, 'சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்ற திலகரின் வீர முழக்கம் பாரதியைப் புரட்சி வீரராக மாற்றியது. எழுத்தாளராகவும், புரட்சி வீரராகவும் மட்டுமல்லாமல் மேடைப் பேச்சாளராகவும் விளங்கினார். பாரதி "சக்கரவர்த்தினி" என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் விளங்கினார். இந்தப் பத்திரிகை பெண்கள் விடுதலை, பெண்கள் முன்னேற்றம் இவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு நடத்தப்பட்டது. பின்னர் பாரதி 'இந்தியா' பத்திரிகையின் பொறுப்பாசிரியர் ஆனார்.


அடிமை இந்தியாவில் அஞ்சி அஞ்சி வாழ்வதை விடவும், சிறைப்பட்டு சித்திரவதைப்படுவதை விடவும் வெளியே இருந்து, விடுதலை வேள்வியைத் தொடருவது புத்திசாலித்தனம் என்று எண்ணினார். 1908 - ஆம் ஆண்டு புதுவைக்கு காலடி எடுத்து வைத்தார். "இந்தியா” பத்திரிகையும், புதுச்சேரியிலிருந்து புயலாக வெள்ளையர் ஆட்சிக்கு எதிராகப் பாய்ந்தது.


காந்தி கருத்து


1908 - ஆம் ஆண்டு முதல் 1918 - ஆம் ஆண்டு வரை பாரதியார் புரட்சிக் குயிலாய், பதுமைக் கனலாய் கவி மழை பொழிந்தார். 'கண்ணன் பாட்டு', 'குயில் பாட்டு','பாஞ்சாலி சபதம்' போன்ற படைப்புகளை இயற்றினார். 1918 - ஆம் ஆண்டு புதுவையை விட்டுக் கிளம்பிய பாரதியார் கடலூரில் கைதாகி விடுதலையானார். தமிழ்நாட்டில் நீண்ட காலம் சுற்றுப்பயணம் செய்த பாரதி 1919 - ஆம் ஆண்டு காந்தியடிகளைச் சந்தித்தார். பாரதியின் துணிவையும், நேர்மையையும், வீரத்தையும் கண்ட காந்தியடிகள் அருகில் இருந்த ராஜாஜியிடம்,


இவர் ஓர் அபூர்வ மனிதர். இவரைப் பொக்கிஷம் போல பாதுகாக்க வேண்டியது தமிழர்கள் கடமை என்றார்.


வ.உ.சிதம்பரனார்


வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை எனும் இயற்பெயரை கொண்டவரே மக்களால் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி என்று அழைக்கப்பட்டவராவார்.


இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் பிரிட்டீஷ் கப்பல்களுக்குப் இணையாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தை தொடங்கினார். அந்த நீராவி கப்பல்கள் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழி போக்குவரத்தை நிகழ்த்தியது. 


சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி தொடங்க காரணம் மக்களுக்கு சுதேச மனப்பான்மையை கொண்டுவருவதற்காகவே அன்றி வேறில்லை. 


சுதேசி கப்பலின் வளர்ச்சி நாளுக்கு நாள் தீவிரமானது. இதனால் ஆங்கிலேயர்கள் எரிச்சலடைந்தனர். வ.உ.சி-யை எவ்வகையிலாவது வெல்ல அவர்கள் சந்தர்ப்பத்தை தேடி கொண்டிருந்தனர்.


வ.உ.சி. வெளி நாட்டுப் பொருட்களை வாங்கவும் பயன்படுத்தவும் புறக்கணித்தார். மக்களும் புறக்கணித்தார்கள். அந்த காலகட்டத்தில் வின்ச் தான் மாவட்ட ஆட்சியர். ஆனால் மக்கள் கலெக்டரை காட்டிலும் வ.உ.சி. யின் சொற்களையே அதிகம் மதித்தனர்.


பிபின் சந்திரபால் எனும் வங்க சுதந்திர போராட்ட வீரர் 1908 ஆம் ஆண்டு விடுதலையாக இருந்ததை வ.உ.சி அவர்கள் ஒரு விழாவாக நடந்த எண்ணினார். அந்த விழா நடைப்பெற்றால் வ.உ.சி மக்களிடையே உரையாற்றுவார் அதனால் பெரிய கிளர்ச்சி உண்டாகலாம் என்று அஞ்சிய கலெக்டர் ஆஷ் துரை திருநெல்வேலிக்கு வந்து தன்னை சந்திக்கும் படி வ.உ.சி-க்கு செய்தி அனுப்பினார்.


வ.உ.சி தனது நண்பரான சுப்ரமணிய சிவாவுடன் மாவட்ட ஆட்சியரை சந்திக்க சென்ற போது, கலெக்டர் வ.உ.சியிடம் "திருநெல்வேலியை விட்டு நீங்கள் வெளியேற வேண்டும்" என்று கேட்டு கொண்டார். 


வ.உ.சி அதை ஏற்க மறுத்தார். அதனால் வ.உ.சி.யும் சுப்ரமணிய சிவாவும் 1908-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் நாள் கைது செய்யப்பட்டனர்.


நீதிமன்ற தீர்ப்பும் விளைவும்


வ.உ.சி சிறையில் அடைக்கப்பட்ட செய்தி தெரியவந்த உடனே திருநெல்வேலி முழுதும் கடைகள் அடைக்கப்பட்டன. அனைத்து துறை பணியாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர்.


"இவ்வேலை நிறுத்தம் 1908 மார்ச் 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடந்தது. இதுவே இந்தியாவின் முதல் அரசியல் வேலை நிறுத்தம் ஆகும்."


காவல் துறையினரே வ.உ.சி.க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.


  1. வ.உ.சி. ஆங்கில அரசுக்கு எதிராக சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.(பிரிவு 123-அ)
  2. வ.உ.சி. சுப்ரமண்ய சிவாவிற்கு அடைக்கலம் கொடுத்தார்.(பிரிவு 153-அ)


இரண்டு மாதங்கள் நடந்த இந்த வழக்கு விவரங்களை இந்தியா முழுவதும் மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்தனர். நீதிபதி திரு. பின்ஹே தீர்ப்பு வழங்கினார். 


தீர்ப்பு விவரம்


ஆங்கில அரசுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும்படி மக்களைத் தூண்டிவிட்டதற்காக 20 ஆண்டு தீவாந்திரத் தண்டனை.

சிவாவுக்கு ஆதரவு அளித்ததற்காக மற்றுமொரு 20 ஆண்டு தீவாந்திரத் தண்டனை. சுப்பிரமணிய சிவாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை.


40 ஆண்டுகள் தீவாந்திர சிறை தண்டனை என்பது இந்தியாவிலே யாருக்குமே கொடுக்கப்படாத தண்டனை ஆகும். ஆங்கிலேய அரசு வ.உ.சியை அடக்கினால் ஒழிய நம்மால் நிம்மதியாக அரசை நடத்த முடியாது என்பதை அறிந்தே வ.உ.சிக்கு 40 ஆண்டு சிறை தண்டனையை விதித்தது. அப்போது வ.உ.சிக்கு வயது வெறும் 36 தான்


இந்தக் கொடிய தீர்ப்பைக் கேட்டு இந்திய மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். வங்காளி, அமிர்த பஜார், சுதேசமித்திரன், இந்தியா, ஸ்வராஜ்யா மற்றும் பல செய்தித்தாள்கள் இத்தீர்ப்பைக் கண்டித்தன. ஆங்கில இதழான "ஸ்டேட்ஸ் மேன்" இத்தீர்ப்பு நியாயமற்றது என்றும் வ.உ.சி.யின் தியாகம் போற்றத்தக்கது என்றும் குறிப்பிட்டது


பின் மேல் முறையீடு செய்ததில் 10 ஆண்டு தீவாந்திர தண்டனையாக குறைக்கப்பட்டு அந்தமான் அனுப்ப முடியாத காரணத்தினால் கோவை சிறையில் அடைக்கப்பட்டார் வ.உ.சிதம்பரம் பிள்ளை. அங்கேயே அவருக்கு மாடுகள் இழுக்கும் செக்கை இழுக்கச்சொல்லி கொடுமையான தண்டனைகள் தரப்பட்டது. அதனாலே அவர் செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்படுகிறார்.


வ.உ.சிதம்பரனாருக்குத் சிறைத்தண்டனை தரக் காரணமாக இருந்ததால் ஆட்சியர் ஆஷ் துரையை வீர வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார்


வாஞ்சிநாதன்


செங்கோட்டை இரகுபதி ஐயரின் மகனான வாஞ்சிநாதன் திருவிதாங்கூரிலுள்ள புனலூரில் அரசாங்கக் காட்டிலாகாவில் பணிபுரிந்துவந்தார். வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா போன்ற தூய்மையான தேசியவாதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளால் வெள்ளை அதிகாரிகளுக்கெதிராக வெறுப்பையும், வஞ்சத்தையும் வளர்த்துக்கொண்டார் வாஞ்சிநாதன். அரசாங்க அடக்குமுறைக்குக் காரணமான நெல்லை மாவட்டக் கலெக்டர் ராபர்ட் வில்லியம் ஆஷ் (Robert William D.Eticourt Ashe) என்ற அதிகாரியைக் கொல்லத் திட்டமிட்டார். புதுவையிலிருந்த நீலகண்ட பிரம்மச்சாரியை சந்தித்தார். வ.வே.சு.ஐயரிடம் துப்பாக்கி சுட பயிற்சி பெற்றார். 1911 ஜுன் 17 ஆம் தேதி கொடைக்கானலுக்குச் செல்வதற்காக நெல்லையிலிருந்து புகைவண்டியில் தன்மனைவியுடன் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்த ஆஷை மணியாச்சி புகைவண்டி நிலையத்தில் 'பிரௌனிங்' கைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தன்னையும் சுட்டுக்கொண்டு உயிர் தியாகம் செய்தார் வாஞ்சிநாதன். இதைப்பற்றி 


பாரதியாரின் கருத்து


"ஒரு தூதிருஷ்டமான சம்பவம். இதை எதிர்பாராத விபத்து என்று சொல்லட்டுமா? ஏனென்றால், இம்மாதிரியான மற்றொரு சம்பவம் நமது ராஜதானியில் நடந்ததே இல்லை... இது மகத்தான சோக சம்பவம்"


வ.உ.சி கருத்து


ஆஷ் கொலை செய்யப்பட்ட போது வ.உ.சிதம்பரனார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஆஷ் கொலையுண்ட செய்தி கேட்ட பின்பு சிறைச்சாலையின் துணை மருத்துவரிடம் சொன்னாராம்,


"நல்லதோர் செய்தி" என்று


உஷா மேத்தா


உஷா மேத்தா பற்றிய மேலும் விவரங்களுக்கு


இந்திய சுதந்திர போராட்டம் தனது இறுதிக்கு வந்திருந்த காலம். ஜின்னா பாகிஸ்தானை பிரித்து கொடு என்று முழங்கி கொண்டிருந்த போது நாட்டில் நடக்கும் இடமெல்லாம் பிரச்சனை.


எல்லா தலைவர்களும் கைது செய்யப்படப்போகிறார்கள் என்பதை முன்பே அறிந்த காந்தி, மும்மையில் உரை நிகழ்த்திய போது, "இந்த போராட்டத்தில் உங்களுக்கு நீங்கள் தான் தலைவர்" என்று கூறினார்.


அதை கூட்டத்தில் ஒருவராய் இருந்து தழல் தெறிக்கும் கண்களுடன் கேட்டுக்கொண்டிருந்தார் கல்லூரி மாணவி உஷா மேத்தா.


உஷா மேத்தா ஒரு கல்லூரி மாணவியாக இருந்தாலும் நாட்டிற்காக உழைக்கும் வீர புருஷர்களை போன்று தானும் ஏதும் செய்ய வேண்டுமென்ற எண்ணத்துடன் எழுச்சி பெற்றிருந்தார்.


அப்போது all India radioவை சுதந்திர வேட்கை உள்ள மக்கள் anti india radio என்று அழைப்பார்கள். காரணம், அந்த நிறுவனம் ஆங்கில அரசுக்கு சாதகமான செய்தியை மட்டுமே வழங்கும்.


உஷா மேத்தா தானும் ஒரு வானொலியை தொடங்க திட்டமிட்டார். ஆங்கில அரசுக்கு நேரடி கீழாக AIR செயல்பட்டதால், ஆதிக்கத்திற்கு எதிராக குரல்கொடுக்கவென்று ஒரு வானொலியும் பாரதத்தில் இல்லை.


உஷா மேத்தா தன் தாயிடம் இருந்து தங்க சங்கிலி ஒன்றினை பெற்று கொண்டு "டிரான்ஸ்மீட்டர்" ஒன்றை வாங்கினார்.


1942 ஆகஸ்ட் 27 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு, "This is Congress Radio Calling on 42.34 meters Somewhere in India என்று உஷா மேத்தா தன் காந்தக்குரலால் இந்தியாவையே செவிமடுக்க வைத்தார்


உஷா மேத்தா இந்த சுதேசி வானொலியை 88 நாட்கள் தொடர்ந்து நடத்தினார். 


இந்திய வானொலியின் உதவியுடன் உஷா மேத்தாவின் இருப்பிடத்தை ஆங்கிலேய அரசு கண்டுபிடித்தது.


உஷா மேத்தாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.


இருந்தாலும் சுதேசி வானொலி 88 நாட்கள் இயங்கி மக்களுக்கு தீராத சுதந்திர தாகத்தை மேலும் அதிகப்படுத்திவிட்டிருந்தது.


பாலகங்காதர திலகர்


பாலகங்காதர திலகர் தமிழக மக்களுக்கு மகாகவி பாரதியாராலும் வ.உ. சிதம்பரனாராலும் அதிகம் தெரியப்படுத்தப்பட்டவர் ஆவார்.


பாலகங்காதர திலகரின் முக்கிய சீடர்களின் ஒருவரான வ.உ.சி 'தென்னாட்டு திலகர்' என்று அழைக்கப்பட்டார்.


பாலகங்காதர திலகர் உயர்நிலைப்படிப்பில் தேர்ச்சி பெற்ற போது கணித பிரிவில் மிக சிறப்பான மதிப்பெண்ணை பெற்று இருந்தார். அதன்பிறகு சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயில விண்ணப்பித்தார். அவனுடைய தகுதியை ஆராய்ந்தறிந்த கல்லூரி முதல்வரும் பேராசிரியர்கள் அடங்கிய தேர்வுக் குழுவும் திலகருக்கு பதில் கடிதம் எழுதினார்கள்.


கல்லூரி திலகருக்கு எழுதிய கடிதம்


"அன்பு மாணவனே! நீ கணிதத்தில் மிகவும் திறமை பெற்றிருப்பது தெரிகின்றது. நீ கணிதப் பிரிவில் சேர்ந்து கணிதத்தையே சிறப்புப் பாடமாகக் கற்பாயாகில், நீ மிகவும் மேலாம் நிலையினை அடைவாய். அதன் மூலம் உனக்கு ஒளிமிகுந்த எதிர் காலம் அமையும். அதற்கு மாறாக நீ சட்டம் படிப்பாயானால் நீ அடையும் பயன் குறைவாகவே இருக்கும். நீ யோசித்து உன்முடிவைச் சொல்"


திலகர் பதில்


"ஐயன்மீர்! தாங்கள் கூறிய அனைத்தும் சரிதான். ஆனால், என் நாடு அடிமைப்பட்டுக் துன்புற்றுக் கிடக்கின்றது. சுதந்திர தாகத்தால் தவிக்கும் என் மக்கள் அன்னிய ஆதிக்கத்தால் சட்டமல்லாத சட்டத்தின் கீழ் அடிக்கடி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு வாடுகின்றனர். அவர்களுக்காக வாதாடி அவர்களை விடுவிக்கத் தக்கவர்களான தேச பக்தி மிகுந்த வழக்குறிஞர்களை என் நாடு எதிர்பார்க்கிறது. என் மக்களையும், தேசத்தையும் காப்பாற்றவேண்டுமானால் நான் சட்ட நுணுக்கங்களையெல்லாம் கற்ற சட்ட நிபுணனாக வேண்டும். அந்த ஒரே காரணத்துக்காகவே நான் சட்டம் பயில வந்தேன். அதற்கு, பெரியீர் தாங்கள் தாம் என்மீது அன்பும், கருணையும் கொண்டு உதவிகளைச் செய்யவேண்டும்."


என்று தனது இந்திய நாட்டின் மீதுள்ள பற்றை வெளிப்படுத்தி அதன் வகை வாழவும் செய்தார்


முடிவுரை


'சுதந்திர இந்தியா' என்னும் வரலாறு இரத்தத்தில் தொடங்கி சட்டத்தால் முடிந்தது எனலாம். ஜான்ஸி ராணி, பூலி தேவன், கட்டபொம்மன் போன்ற வீர பெருந்தகைகளாலே நம்மால் முற்கால ஆங்கிலேய அடக்குமுறைகளை கடக்க முடிந்தது. 


நாம் சுதந்திர போராட்ட வீரர் என்னும் பட்டியலை தொகுக்கத் தொடங்கினால் இந்திய தாய் வீர வித்தோடு பெற்றெடுத்த அனைத்து பிள்ளைகளின் பெயர்களையும் குறிப்பிட வேண்டி இருக்கும். 


கருணை உள்ள வெள்ளையனை கருணை கொண்டும் கருணை அற்ற வெள்ளையனை அறனை கொண்டும் எதிர்த்த நம் முன்னோர்களாலே இன்றைய நம் இந்தியா 75ஆவது சுதந்திர சுவாசத்தை நிம்மதி பெரு மூச்சோடு சுதந்திரமாக சுவாசிக்கிறது.


அவர்களுக்கு நம் வந்தனங்கள் என்றும் உரித்தாவன. அவர்களின் செங்குருதிக்கு நம் வாழ்வு என்றும் காணிக்கை ஆக்கப்படுவன.


நான் விரும்பும் இந்தியாவில், நான் விரும்பும் சுதந்திர போராட்ட வீரர்கள் இவர்கள் மட்டுமல்ல. அந்த பட்டியல் டாக்டர். அம்பேத்கர், கோபால கிருஷ்ண கோகலே, லால் பகதூர் சாஸ்திரி, பெருந்தலைவர் காமராஜர், டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி, மொரார்ஜி தேசாய், வ.வே.சு அய்யர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்று நீண்டு கொண்டே இருக்கும்.


1947 இல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி விடுதலையாக்கப்பட்ட இந்த பறவை 75 ஆண்டுகளாக சுதந்திர காற்றல் தவழ்ந்து சிறகடிப்பதை வரலாறுகளில் வாழ்ந்து கண்டு களிப்படையும் சுதந்திர போராட்ட வீரர்களுக்காக அன்று எங்கள் பாரதி பாடியதை மகத்தான இந்த 75ஆவது ஆண்டிலும் பாடி மகிழ்வோம்


"ஆடுவோமே பள்ளு பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று

ஆடுவோமே பள்ளு பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று"


அனுப்ப வேண்டிய முகவரி


தமிழ் கட்டுரைகள் இயக்குனர்,

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,

செம்மொழிச்சாலை,

பெரும்பாக்கம்,

சென்னை - 100

2 Comments

  1. கட்டுரைகள் சிறப்பாக உள்ளது. நடையும் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  2. ஷேவாக் ஓபனிங் ஆடி

    சச்சினும் கங்குலியும் பார்ட்னர் ஷிப் போட்டு

    இடையிடையே டிராவிட் கொஞ்சம் தடுத்து ஆடி

    கடைசியில் தோணியும், முகமது கைஃப்பும் வந்து மேட்ச்ச முடிச்சுவைச்சது மாதிரி இருக்கிறது

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு