Trending

காமராஜர் ஆட்சி முறை

 

காமராஜர் ஆட்சி முறை


 

  குறிப்புச்சட்டகம்

 • முன்னுரை
 • கல்விப்பணி
 • தொழிற்சாலைகள்
 • நீர்ப்பாசனம்
 • திறமைக்கு மரியாதை
 • கிங் மேக்கர்
 • முடிவுரை


முன்னுரை


"நான் பள்ளி சென்று வரலாற்றை படிக்கவில்லை. ஆனால் இந்த தமிழ்நாட்டின் ஆயிரம் ஆண்டு வரலாறு எனக்கு தெரியும். நான் பள்ளி சென்று பூலோகத்தை படிக்கவில்லை, ஆனால் தமிழ்நாட்டில் எத்தனை நதிகள்  உள்ளது, எத்தனை குளம் குட்டைகள் உள்ளது என்பது எனக்கு தெரியும். அது எத்தனை ஏக்கருக்கு பாசனத்தை தருகிறது என்பதும் எனக்கு தெரியும். எந்த மாவட்டத்தில் எத்தகைய மண் உள்ளது என்பது எனக்கு தெரியும்.  எந்த மண்ணில் எதை விளைய வைக்கலாம் என்பதும் எனக்கு தெரியும். விளையாத நிலத்திலும் கூட எந்த தொழிலை தொடங்கலாம்  என்ற வித்தையை கற்று வைத்திருக்கிறேன்" என்பார் நம் காமராஜர்.


ஆறாம் வகுப்பு தாண்டாதவர்தான், ஆனால் அவர் ஆட்சி செய்த முறையை அறிந்தவர்கள் அசந்து தான் போனார்கள்.


"கற்றலின் கேட்டலே நன்று" என்று பழமொழி நானூறில் சொல்லி இருப்பாரே முன்றுறை அரையனார் அதுபோல வல்லுனர்களின் வாய் வார்த்தை கேட்டே மனதில் உள்வாங்கி நம் நாட்டை வளம் காண வைத்தவர் நம் காமராஜர்.


கல்விப் பணி


நம் நாடு விடுதலை அடைந்த போது எழுத படிக்க தெரிந்தவர்கள் 27% கூட இல்லை.


பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு எந்த பேருந்து எந்த ஊருக்கு செல்லும் என்பதை கூட அறியாத பாமரமக்கள் இருந்தார்கள். அதில் செல்வந்தர்களும் உண்டு.


வெளியூர் சென்ற கணவன் ஆசையாக தன் அன்பு மனைவிக்கு எழுதிய கடிதத்தை படித்து காட்ட, ஒரு படித்தவனை தேடும் ஒரு பரிதாப நிலை இருந்தது.


படிப்பறிவு இல்லா மக்களிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாக கைநாட்டு (கைரேகை அல்லது சையிஞ்ஞை) வாங்கி கொண்டு நூறு ரூபாய் கொடுத்து ஏமாற்றும் லேவாதேவி (கந்துவட்டி) காரர்கள் அக்காலத்திலும் இருந்ததுண்டு.


"கல்வி இல்லாத பெண் களர் நிலம்

அங்கு புல் விளைந்திடலாம் நல்ல

புதல்வர்கள் விளைதல் இல்லை" என்றார் பாவேந்தர் பாரதிதாசன். "பிச்சை புகினும் கற்கை நன்றே"  என்பார் அவ்வையார்.


"ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்" என்ற பாரதி,

"வயிற்றுக்கு சோறிடல் வேண்டும், இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்" என்றார்.


சோறு எப்படி போட முடியும்? அடுத்த வரியில் அதற்கு வகை சொல்கிறார்,

"பயிற்றி பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும் "என்கிறார். அதற்கு "பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்" என்றார்.


இதையெல்லாம் செவிச் செல்வத்தால் அறிந்த காமராஜர் கல்வியை அளிப்பதையே தனது  ஆட்சியின் முதல் கடமையாக கொண்டார்.


பொருளாதார நெருக்கடியால் மெட்ராஸ் மாகாண முதலமைச்சர் இராஜாஜியால் மூடப்பட்ட ஆறாயிரம் பள்ளிகளை திறந்தார். அவருடைய ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் 14000 புதிய பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடக்க நிலை கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 13 லட்சம் என்ற அளவில் இருந்து 48 லட்சமாக உயர்ந்தது. உயர்நிலை பள்ளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்தது.


பள்ளிகள் திறந்தாலும் பட்டினியால் தினம் ஒட்டிய வயிற்றில் பாடம் ஏறாது என உணர்ந்த காமராஜர், பிரதமர் நேருவே பாராட்டிய, மதிய உணவு திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்திற்கு கொண்டு வந்தார். தொழில் வளம் பெருக தொழிற் சார்ந்த கல்லூரிகள் பெருமளவில் முதன் முறையாக தொடங்கப்பட்டன.


பத்தாம் வகுப்பு வரை இலவசக் கல்வியும் இலவசப் பாடப் புத்தகங்களும் ஏழை மாணவர்களுக்கு வழங்கினார்.


பிற்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிரதமர் நேருவிடம் தனக்குரிய செல்வாக்கை பயன்படுத்தி முதன் முறையாக இந்திய அரசியல் சட்டத்தை திருத்தி, இட ஒதுக்கீடு முறையை கொண்டு வந்தார்.


தொழிற்சாலைகள்


தொழில் வளம் பெருகினால் மட்டுமே வளர்ச்சியும் வருமானமும் நம் மக்களுக்கு கிடைக்கும் என்பதை உணர்ந்து அதற்கு தக்கபடி பல திட்டங்களை  கொண்டு வந்தார்.


நெய்வேலியில் இயற்கையாக கிடைக்கும் நிலக்கரியை வெட்டி விற்பனை செய்யும் தொழிற்சாலையையும், அந்த நிலக்கரியை கொண்டே மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையம் ஒன்றையும் மத்திய அரசிடம் போராடி கொண்டு வந்தார். அன்று காமராஜரால் தொடங்கப்பட்ட "நெய்வேலி பழுப்பு நிலக்கரி அனல் மின் நிலையம்" இன்று எட்டாயிரம் மெகாவாட் உற்பத்தித் திறனுடன் தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களின் தேவையை பூர்த்தி செய்கிறது.


காமராஜரால் 1955ல் பெரம்பூர் இரயில் பெட்டி தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இங்கு 170 வகையான இரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.  இந்திய இரயில்வே பயன்பாடுகள் தவிர, வியட்நாம் பங்களாதேஷ், தாய்லாந்து, தைவான், மியான்மர், உகாண்டா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகி வேலை செய்பவர்களுக்கு வருமானத்தையும், நாட்டுக்கு அந்நிய செலவானியையும் ஈட்டித்தருகிறது.


அதிவேக இரயிலை உலகுக்கு அறிமுகப்படுத்திய பிரான்ஸ் நாடு, பெரம்பூர் ICFல்தான் இரயில் பெட்டியை தயாரித்து வாங்கியது என்பது இந்தியர்கள் நாம் அனைவரும் பெருமை கொள்ளும் ஒரு செய்தியாகும்.


திருச்சி திருவெறும்பூரில் உள்ள BHEL தொழிற்சாலை 1956 ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சியில் பாரத பிரதமர் நேருவால் தொடங்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் கொதிகலன் (BOILER) 70 நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. சிறிய அளவில் தொடங்கப்பட்ட இத்தொழிற்சாலையில் இன்று ஒரு லட்சம் பேர் வேலை செய்கிறார்கள்.


இங்கு மிகப் பெரிய அளவிலான பாய்லர்கள்,  டர்போ ஜெனரேட்டர்கள், சிமெண்ட் மற்றும் எண்ணெய் தூய்மைப்படுத்தும் நிலையங்களுக்கான துணைக் கருவிகள் மற்றும் டர்பைன்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு லட்சம் கோடி வருமானம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களில் இதுவும் ஒன்று.


அது மட்டும் அல்லாது கல்பாக்கம் அனு மின்நிலையம், ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை, சேலம் இரும்பு உருக்கு ஆலை, கிண்டி டெலி பிரிண்டர் தொழிற்சாலை  போன்றவை தொடங்கப்பட்டன.


TI சைக்கிள் கம்பெனி, சிம்சன் நிறுவனம், ஆவடி டேங்க் தொழிற்சாலை போன்றவையும் காமராஜ் ஆட்சியில் தொடங்கப்பட்டவைதான்.


20 ஆயிரம் டன் காகிதக் கூழ் தயாரிக்கும் காகித ஆலை ஈரோடு பள்ளிப் பாளையத்தில் அமைக்கப்பட்டது.


டால்மியாபுரம் உள்ளிட்ட நான்கு இடங்களில் சிமெண்ட் ஆலைகள் அமைக்கப்பட்டன.


பதினான்கு சர்க்கரை ஆலைகளும் 149 நூற்பாலைகளும் தொடங்கப்பட்டன.


காமராஜர் ஆட்சியில் பல வட மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழகம் தொழிற்துறையில் இரண்டாம் இடம் பிடித்தது.


நீர்பாசனம்


தமிழகத்தை பொருத்தவரை விவசாயம், நெசவுத் தொழில் ஆகிய இரண்டு மட்டுமே பெரும்பாண்மை மக்களின் தொழிலாகும். ஏனென்றால் படிப்பறிவு குறைவான மக்களும் இத்தொழிலில் ஈடுபட்டு வருமானம் ஈட்டலாம். விவசாயத்துக்கு அடிப்படை தேவை தண்ணீர்.


தடையில்லாமல் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டால் உழவு செழிக்கும் என உறுதியாக நம்பினார் காமராஜர்.


அதனால் நீர்பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைய அணைகளை ஏற்படுத்தினார்.


 1. மேட்டூர் கால்வாய் திட்டம்
 2. பவானி ஆற்று நீர் திட்டம்
 3. காவிரி டெல்டா வடிகால் திட்டம்
 4. வைகை அணை
 5. சாத்தனூர் அணை
 6. மணிமுத்தாறு அணை 
 7. அமராவதி அணை 
 8. கிருஷ்ணகிரி அணை ஆரணியாற்று அணை 

போன்ற நீர்ப்பாசன திட்டங்கள் உருவாக்கப்பட்டன. 


மொழிவாரி மாநிலங்கள் பிரிக்காதபோது கேரளா மலம்பழாவில் காமராஜரால் கட்டப்பட்ட அணையால் இன்றும் பாலக்காட்டை சுற்றி உள்ள மக்கள் பயனடைகிறார்கள்.


திறமைக்கு மரியாதை


முதல் அமைச்சரான போது தன்னை எதிர்த்து அப்பதவிக்கு போட்டியிட்ட சி. சுப்பிரமணியத்தை தன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு கல்வி அமைச்சர் பொறுப்பை வழங்கினார். முன்னால் குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமன்தான் தொழில் அமைச்சர். 1963 ஆம் ஆண்டு காங்கிரஸ் முதிய  தலைவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு, இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் காமராஜரால் K. PLAN திட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு தாமே எடுத்துக்காட்டாக தனது பதவியை ராஜினாமா செய்த காமராஜர் அப்பதவியை பக்தவசலத்திடம் ஒப்படைத்தார். எதிர்கட்சி வரிசையில் இருந்த இராமசாமி படையாட்சியாரை தன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார்.


கிங் மேக்கர்


முதல்வர் பதவியை இராஜினாமா செய்தாலும் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட காமராஜர், நேருவுக்கு பிறகு பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை தேர்ந்தெடுத்த போதும், சாஸ்திரிக்கு பிறகு  இந்திராவை பிரதமராக்கிய போதும் பொறுப்புடன் செயல்பட்டு கிங் மேக்கராக திகழ்ந்தார்.


முடிவுரை


"சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலம்தான் பொற்காலம் என எல்லோரும் சொல்கிறார்கள். அது உண்மை அல்ல. காமராஜர் ஆட்சி செய்த ஒன்பது ஆண்டுகள்தான் தமிழகத்தின் பொற்காலம்" இதை சொன்னவர் யார் தெரியுமா? காலம் முழுவதும் காங்கிரஸை எதிர்த்த தந்தை பெரியார் சொன்ன வார்த்தைகளே இவை. ஏறக்குறைய நூறு கோடி ரூபாயை வைத்துக்கொண்டு, இந்த சாதனையை தனது ஆட்சி முறையில் ஏற்படுத்தினார் என்றால்  உண்மையிலேயே காமராஜர் ஒரு படிக்காத மேதை தான்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு