Trending

குறள் குரல் - நட்பு

 


"நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் உந்தன் சிறகு"  என்ற பாடல் வரிகள் பாடவும் சரியாக இருக்க வேண்டும் பழகவும் சரியாக இருக்க வேண்டும். நட்பு என்ற ஒன்று வாழ்வில் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் அது சரியாக இருக்கிறதா? அல்லது தவறாக இருக்கிறதா? என்பது தான் மாறுபாடாக உள்ளது. 


"உன்‌ நண்பன் யாரென்று சொல். நீ யாரென்று‌ சொல்கிறேன்"


பலரது வாழ்வு நட்பின் வழியே மாற்றம் அடைந்ததை நான் கண்டதுண்டு. இது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் தான். இன்று நாம்‌ செய்திகளில் காண்கிறோம். வகுப்பில் மது அருந்தி கல்லூரியில் மாட்டிக்கொண்ட‌ மாணவிகள். இதற்கு மூல காரணம் நட்பு. அந்த கூட்டத்தில் யாரேனும் ஒரு தோழி இந்த பழக்கம் தவறு என‌ சரியான முறையில் கூறியிருந்தால் அது நடந்திருக்காது. 


பெற்றோரிடம் நாம் சொல்ல முடியாத விசயங்களை நட்பிடம் தான் கூறுகிறோம். அப்படி இருக்க நட்பு வாழ்வில் எத்தனை முக்கியமான உறவு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நட்பான பிறகு அவர் எப்படியானவர் என தெரிந்து கொள்வது எளிது ஆனால் நட்பாகா முன்பே அவரை அறிந்து அவரிடம் நட்பு கொள்ளலாமா? வேண்டாமா? என்பதை வள்ளுவர் அழகாக 80-வது அதிகாரமான நட்பாராய்தலில் கூறியுள்ளார்.


குணம் என்பதே மனிதனின் வாழ்க்கை சான்று. முதலில் அவரின் குணத்தை நன்கு அறிய வேண்டும். அவரின் செயலை‌ வைத்தே அதனை அறியலாம், பின்‌ அவரின் குடும்பத்தை அறிய வேண்டும் அதுவே‌ அவர் நல்ல நிலையிலே இருப்பார் என்பதை உணர்த்தும், அவர் செய்கின்ற தவறுகளை கவனிக்க வேண்டும்‌, அவரிடம் ஏற்கனவே பழகிக்கொண்டிப்பவர்களையும் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை எல்லாம் சரியான முறையில் இருக்குமேயானால் அவரின் நிலை சரியே. அவரிடம் நட்புக்கொள்ள தயங்க வேண்டியதில்லை. இதில் முக்கியமான ஒன்று அவரிடம் பழகலாம் ஆனால் நட்பு கொள்ளாமல் தான் இத்தனை தகுதிகளையும் ஆராய வேண்டும். சரியாக ஆராய்ந்த பின்பே ஒளிவு மறைவு இல்லாத நட்பினை தொடரலாம். இதனை வள்ளுவர்,


"குணமும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு."   - (793)


எந்த காரணம்‌ கொண்டும், ஆராயாமல் நட்பு கொண்டு‌ தன் ரகசியங்களை கூறிய பின், தவறான நட்பு‌ என உணர்ந்து அந்த நட்பை விட‌ கூடாது. அது முறையும் கிடையாது. பழகும் சில நாட்களிலேயே அதனை அறிய வேண்டும். இதற்கு நானே உதாரணம். என் நண்பன் ஒருவன் இருக்கிறான். பெயர்‌ கூற‌ விரும்பவில்லை. பிரச்சினை என்றால் எனக்காக வந்து நிற்பவன் தான் ஆனால், அவனின் பிற செயல்கள் சரி கிடையாது. அவனிடம் நட்பு கொண்டு‌விட்டதால் அவனிடம் இருந்து விலகவும் முடியாமல், நெருங்கவும் முடியாமல் தவிக்கிறேன். இது போன்று‌ பலர் இருப்பதையும் கண்டிருக்கிறேன். இது அவசரத்தின் விளைவு. அதே போன்று நாம் தவறான நட்பை தேர்வு செய்து விட்டால்‌ அது சாகும்‌ வரை‌ துன்பத்தையே கொடுக்கும். அதையும் நாம் செய்த‌ தவறுக்காக தாங்கித்தான் ஆக வேண்டும். வள்ளுவரும்,


"ஆய்ந்தாய்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம்‌ தரும்." - (792)


என் அப்பா நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் என் அப்பாவிடம் பணம் அதிகமாக இருந்தபோது நன்றாக பேசி நல்ல நட்பாக இருந்தார். ஆனால் வியாபார வீழ்ச்சியால் அப்பாவிடம் பணப்புழக்கம் குறைந்தது. பின் அவரின் நட்பும் தானாக குறைந்தது. என்னால் நம்ப முடியவில்லை. இவர் இப்படி இருப்பவரில்லையே என எண்ணிக்கொண்டே இருப்பேன். சிலரிடம் எத்தனை நாட்கள் பழகினாலும் அவர்களை புரிந்து கொள்வது மிக கடினம். அவர்களை அறியவே நம்‌ வாழ்வில் பல துன்ப சூழ்நிலைகளை‌ கையாள வேண்டும். துன்ப‌ காலம் வருவதும் நன்மையே.. அது இது போன்ற மனிதர்களை அறிய நான் அளக்கும் அளவுகோல் போல உதவியாய்‌ இருக்கும். அதனை பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். 


"கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்" - (796)


எதையும் பாராமல் தவறான நட்பை தேர்ந்தெடுத்துவிட்டால் என்ன செய்வது? இருக்கு... அதுக்கும் வழி இருக்கு.‌ இக்காலத்தில் பல காதல் முறிவுகளில் இதை நாம் கண்டிருப்போம். அவர்களின் நினைவுகளைத் தரக்கூடிய பொருட்களைத் கொடுத்து பிரியும் நகைச்சுவையான காட்சி போலத்தான் இதுவும். ஆனால் நினைவுகளைத் தரக்கூடிய பொருள் அல்ல எதைக் கொடுத்தால் அவர்களை‌ விட்டு செல்வார்களோ அதை அவர்களிடம் கொடுத்து பிரிவது சிறப்பு. 


"மருவுக மாசற்றார் கேண்மை ஒன்றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு" -(800)‌


எனது நண்பனின் உறவுக்காரன் ஒருவனைச் சந்தித்தேன். அவனுக்கு‌ நண்பன் என்று ஒருவன் கூட கிடையாது. அவனின் குணமும் அருமை. எந்த தீய பழக்கமும் இல்லை. கடவுள் பக்தி அதிகம். இதைப் பார்த்த போது எனக்கு வியப்பாகவும் இருந்தது, கவலையாகவும் இருந்தது. இப்படிப்பட்ட‌ ஒருவனை யாருமே‌ நட்பாக்கிக் கொள்ள விரும்பவில்லையே. முதல் நட்பாக நான் இணைத்துக் கொண்டேன். 


நல்லவர்களை நட்பாகக் கொள்வதை பெருமையாக எண்ண வேண்டும். வெட்கமாக எண்ணக்கூடாது. நட்பின் வழியே இன்றும் பலர் சாதனையாலராக உள்ளனர். 


நல்ல நட்பை நாடி.. தீய நட்பை ஒழித்து.. வாழ்வில் உயர்வோம்.


குறள் மகன்

2 Comments

  1. கட்டுரை சிறப்பாக உள்ளது. குறள் மகன் குறளை மட்டும் சார்ந்து எழுதாமல் மற்ற இலக்கியங்களிலும் கவனம் செலுத்தலாம்.

    ReplyDelete
  2. Super sir. Well said

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு