Trending

முதலிரவு சிறுகதை - ஜெ மாரிமுத்து

முதலிரவு சிறுகதை


புதிதாக ஒரு என்ஃபீல்டு பைக் ஒன்று வாங்கியிருந்தேன். அதை எல்லோரிடமும் காட்ட வேண்டும் அல்லவா? அதனால் பைக்கை எடுத்துக் கொண்டு டவுன் பக்கம் கிளம்பினேன்.


பஸ் ஸ்டாப்பில் குமார் நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும்,

"மகேஷ்! ஒரு நிமிஷம் நில்லுடா" என்று வழிமறித்தான். குமார் என்னோடு காலேஜில் படித்தவன். காலேஜில் படித்தவன் என்று சொல்வதைவிட காலேஜுக்கு கூட வந்தவன் என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது காலேஜில் யார் படிக்கிறார்கள்?


"என்ன மாப்ளே இங்க நிக்கிறே" என்றேன்.


"நாளை சென்னைக்கு டயர் கம்பெனி இன்டர்வியூ ஒன்றுக்கு போறேன்டா. எங்க மாமா பிங்க் கலர் ஷர்ட் போட்டுட்டு போ. நிச்சயம் செலக்ட் ஆயிடுவேன்னு சொல்றார். அதனால் திருவாரூர் வரைக்கும் போகனும். என்னோட வண்டிய பாபு இரவல் வாங்கி, பத்து நிமிஷத்திலே வந்துடுறேன்னு எடுத்து போனான். இன்னும் வரவில்லை. வா "பிரதீப் மென் வியர்" வரைக்கும் போய் வருவோம்" என்றான்.


"பிங்க் கலர் சட்டை போட்டால் வேலையா? பரவாயில்லையே இது தெரியாம வேஸ்டா படிச்சுட்டியேடா" என்று அனுதாபப்பட்ட நான் "இது ஒனக்கு ஓவரா தெரியல" என்றேன்.


"என்னடா பன்றது. சென்னை போகவே மாமாகிட்டதான் காசு வாங்கனும். அப்புறம் அவர் சொல்றதை கேட்காம என்ன செய்ய முடியும்? நாளைக்கு அந்த வேலைக் கெடக்கிலேன்னா நான் சொன்ன டிரஸ்ஸ போட்டியான்னு கேட்பார். எதற்கு வீண்  வம்பு?"என்றான்.


கடைசி வரை நான் வாங்கிய புது வண்டிய பற்றி  கேட்கவேயில்லை. இவனுக்கெல்லாம் எவன்தான்  வேலை கொடுப்பானோ என்று மனதில் நினைத்து கொண்டேன்.


பிரதீப் மென்வியர் வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு சென்றோம். கடை பெயர்தான் மென்வியர். ஸ்டாஃப் எல்லாம் லேடீஸாக இருந்தார்கள். கடையில் கூட்டம் இல்லை. நாங்கள் உள்ளே நுழைந்ததும் ஒரே நேரத்தில் எல்லாரும் எழுந்து என்ன வேண்டும் என்பது போல் நின்றார்கள்.


என் கண்கள் அழகாக உயரமாக எடுப்பாக இருந்த ஒரு பெண்ணை நோக்கியது. கால்கள் அவள் பக்கம் நடந்தது. இவ்வளவு அழகாகவும்  ஒருபெண் இருப்பாளா? என் மனம் என்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டது.


"என்ன சார் வேண்டும்?" என்றாள். "என்ன வாங்க வந்தோம்" என்பதே ஒரு வினாடி மறந்துவிட்டது. அவளது அலைபாயும் சுழலும் கண்களைக் காண என்னால் முடியவில்லை. கொஞ்சம் குனிந்து கொண்டேன்.


"மென்ஸ் கேஷுவல் வேணும். கலர் பிங்க்" தட்டுத்தடுமாறி சொன்னேன்.


"இங்கே எல்லாமே மென்ஸ்தான். உங்களுக்கு என்ன வேணும்?" கேட்டுவிட்டு கலகல என சிரித்தாள்.  ஷர்ட் என்றேன். சைஸ் தெரியுமா நானே பார்த்துக்கவா? என என் இரண்டு தோல்பட்டையிலும் கையை வைத்தாள்.


"ஏய் மகேஷ்! என்னடா இதெல்லாம். இண்டர்வியூ எனக்கா? இல்லை உனக்கா?" குமாரின் கோபமான குரல் என்னை ஒரு புதிய உலகத்தில் இருந்த என்னை, பழைய உலகத்துக்கு கொண்டு வந்தது.


"இல்ல மேடம், எனக்கு இல்ல, இவனுக்குதான், எடுத்து போடுங்க. கலர் மட்டும் பிங்க் ஆக இருக்கட்டும்" என்றேன்.


"என்னை ஏன் மேடம்னு சொல்றீங்க. நான் என்ன மேடம் மாதிரியா இருக்கேன்" என்றாள்.


அவசரம் அவசரமாக "அப்படியெல்லாம் நான் சொல்லல" என்று மறுத்தேன். மேடம் என்பதற்கு வேறு ஏதாவது அர்த்தம் இருக்குமோ? பார்த்தால் நன்றாக படித்தவள் போலத்தான் தெரிகிறாள்.  காரணம் இல்லாமல் சொல்லமாட்டாளே! நானும் டிகிரி படித்துதான் இருக்கிறேன். இந்த வார்த்தைக்கு இதைவிட வேறு அர்த்தம் எதுவும் எனக்கு தெரியல. நம்ம படிப்பே அரைகுறை தானே" ஒரு நிமிடத்தில் இவ்வளவு சிந்தனைகள் மனதில் தோன்றி மறைந்தன.


ஷர்டுகளை எடுத்து போட்டாள். "அதோ,  அதோ அதை எடுத்து காட்டுங்க" என்றான் குமார். நகர்ந்து கொண்டிருக்கும் ரயிலை பிடிப்பவள் போல அவன் காட்டிய திசையில் ஓடினாள். ரோலிங் சேர் சுழல்வது போல அவள் சுழன்று சுழன்று எடுத்து போடுவதை பார்த்து கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது. அவன், அவனுக்கு, சட்டையை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருந்தான். அதற்குள் நான் அவளைத் தேர்ந்தெடுத்தே விட்டேன்.


"ஏய் ஸ்வேதா! ஒரு ஷர்டுக்கு இவ்வளவு நேரமா? என்ன காட்டுறே நீ" என்று அதட்டினாள் பக்கத்து கவுன்டரை பார்க்கும் அனிதா. இரண்டு அழகான வாலிபர்களோடு அரை மணி நேரம் ஒருத்தி  பொழுதை போக்கினால் எந்த பெண்ணுக்குதான் பொறுக்கும்?


"ஸ்வேதா உங்கள் பெயரா? ஸ்வீட் நேம்" என்றேன். எல்லோரும் இப்படித்தான் சொல்வார்கள். நான் கொஞ்சம் மாற்றி சொல்லியிருக்கலாம். பெண்ணை பார்த்தால் சிலருக்கு கவிதை வரும். எனக்குத்தான் வார்த்தையே வரவில்லையே! என்ன செய்வது?


உங்களுக்கு ஸ்வீட் புடிக்குமா? என்றாள். ஸ்வீட் பிடிக்குதோ இல்லையோ உங்களை பிடிக்குது என்றேன்.


அதற்குள் இந்த கன்றாவியை எல்லாம் பார்க்க விரும்பாத குமார், அவன் எடுத்த ஷர்ட்டுக்கான பில்லுக்கு பணம் கட்டிக்கொண்டு இருந்தான். அவசரமாக நான் வரேன் என்று சொல்லிக்கொண்டே கவுண்டர் பக்கம் ஓட பார்த்தேன்.


"ஹலோ நீங்க ஒன்னுமே வாங்கலியே! இந்தாங்க இந்த லைட் புளூ ஷர்ட உங்களுக்கு சூப்பரா இருக்கும்" என நான் சம்மதிக்கும் முன்பே பில்லரிடம் கொடுத்துவிட்டாள். எனக்கு மறுக்க முடியவில்லை. அவள் நினைவாக நான், என் பணத்தில், பில் கட்டி வாங்கி வைத்துக் கொண்டேன்.


வந்த வேலை முடிந்து விட்டது. நானும் குமாரும் பைக்கில் புறப்பட்டோம். "ஏன்டா அந்த ஒட்டடைகுச்சி பொண்ணுகிட்ட ரொம்ப வழியற" என்றான் குமார். எனக்கு அவன் அப்படி சொன்னதும் கோபம் வந்துவிட்டது. வருவது ஓசி வண்டி இதில் என் தேவதையை பற்றி என்ன வார்த்தை சொல்கிறான்?. வண்டியை நிறுத்தினேன். "குமாரு எனக்கு கொஞ்சம் கடைத்தெருவில வேலை இருக்கு. பார்த்து வீட்டுக்கு  போயிரு" என வழியிலேயே இறக்கிவிட்டு வந்துவிட்டேன்.


ஜவுளிக்கடையில் என்ன மிஞ்சிபோனால் ஆறாயிரம் ஏழாயிரம் சம்பளம் கொடுப்பார்கள். ஏழைப் பெண்ணாகத்தான் இருக்கும். என்னுடைய அப்பா காண்ட்ராக்டர் என்பதால் பணம் காசை எதிர்பார்கமாட்டார். வீட்டை கண்டுபிடித்து பெண் கேட்டால் முடிந்துவிடும். யோசித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.


அவள் கொடுத்த ஷர்ட்டை பூவை எடுப்பது போல எடுத்தேன். பிரித்து போட்டேன். எனக்காகவே அளவெடுத்து தைத்தது போல இருந்தது. கனகச்சிதமாக இருந்தது. நான் எடுத்திருந்தால் கூட இவ்வளவு சரியாக இருந்திருக்காது. அந்த உடை என் உடலில் இருக்கும்போது அவளே என் அருகில் இருப்பது போல் உணர்ந்தேன். டிரஸ்ஸை பொருத்தமாக எடுத்து  கொடுத்தவள்,  வாழ்க்கைக்கும் பொருத்தமாக இருப்பாள் என நம்பினேன்.


ஸ்வேதா, யார் வீட்டு பெண், அவள் எங்கிருந்து வருகிறாள் என்பதை அறிய என்னோடு காலேஜில் படித்து வெட்டியாக சுற்றி கொண்டிருக்கும் ஓர் ஒற்றர் படையை ஏவினேன்.


ஒரே நாளில் பதில் வந்து விட்டது. பதில் நான் எதிர்பார்த்தது போல் இல்லை. சுவேதா கணக்கு வாத்யார் வீட்டு பொண்ணாம். எம்.காம் படித்தவளாம். படித்து விட்டு வெட்டியாக வீட்டில் இருப்பது அவளுக்கு பிடிக்காதாம். அதனால்தான் வேலைக்கு போகிறாளாம்.


முதல்கட்ட நிலவரம் கொஞ்சம் கலவரமாகத்தான் உள்ளது. கணக்கே வராத எனக்கு கணக்கு வாத்தியார் பொண்ணு செட்டாகுமா?


சாட்சிக்காரன் காலில் விழுவதற்கு சண்டைக்காரன் காலிலேயே விழுந்து விடலாம் என்பது போல் துணி எடுக்கும் சாக்கில் இரண்டு மூன்று நாள் அவளைப் போய்  பார்த்து வந்தேன்.


ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உங்களோடு தனியாக ஐந்து நிமிடம் பேசலாமா? என்று கேட்டேன். "இப்பக் கூட தனியாகத்தானே இருக்கிறேன்" என்றாள். என் மீது அவளுக்கும் இருபது பர்சென்டாவது ஈர்ப்பு இருக்கும் என நினைக்கிறேன். இயல்பாகவே பேசினாள். நீங்கள் என்ன சொல்லப்போறீங்கன்னு எனக்கு தெரியும். எத்தனை படம் பார்த்திருக்கிறேன், லவ்வுதானே  என்றாள்.  என்னைப் பற்றி சுருக்கமாக சொன்னேன்.


"நமக்கு கல்யாணம் ஆனா எப்படி குடும்பம் நடத்துவீங்க? என்ன வேலை பார்க்குறீங்க?"  என்றாள். பணத்துக்கு பஞ்சம் இல்லை அப்பா காண்ட்ராக்டர் என்றேன். "நான் உங்க அப்பாவைக் கட்டிக்க போவதில்லையே" என்றாள்.


"உத்தியோகம் புருஷ லட்சனம்னு சொல்வாங்க. பணம் தேவை இல்லாத நானே வேலைக்கு போய் சம்பாதிக்கிறேன். ஏதாவது ஒரு வேலையில சேருங்க அப்புறம் என்ன பொண்ணு கேளுங்க" கிழவியை போல பேசினாள். முதல் முறையாக அவள் மீது கோபம் வந்தது.


எப்படியோ திருமணத்துக்குள் வேலைக்கு போவதாக சொல்லி அவள் அப்பாவிடம் என் அப்பாவை வைத்து பேசி திருமணத்துக்கு சம்மதம் வாங்கிவிட்டேன். என் அப்பாவே நூறு பேருக்கு வேலை கொடுக்கிறார். அவரிடம் வேலை செய்ய விருப்பம் இல்லை. பைக்கை எடுத்துக் கொண்டு கெத்தாக சுற்றி வந்ததால் என்னை எல்லோரும் பெரிய ஆளாக நினைக்கிறார்கள். அப்படி இருக்கும்போது உள்ளூரில் ஒருவனிடம் அடிமையாக வேலை செய்யவும் விருப்பம் இல்லை. இதையெல்லாம் புரிந்து கொண்ட, கணக்கு வாத்தியார் சம்மதித்துவிட்டார்.


ஆயிரம் பத்திரிகைகள் கொடுத்து, இரண்டு வீடும் வசதி என்பதால் சிறப்பாக திருமணம் நடந்தது. நடக்குமா என்று நினைத்த திருமணம் நடந்து முடிந்ததை என்னாலேயே நம்ப முடியவில்லை.


எதிர்ப்பார்த்து காத்து இருந்த இரவும் வந்தது. முதலிரவு. பூக்கள் அலங்காரம் பால் பழங்களுக்கு குறைவில்லை. அருகில் சென்று ஆதரவாக அவளைத் தொட்டேன். பால் ஃபார்மாலிடீஸ் எல்லாம் முறைப்படி முடிந்தது. முறைப்படி நடக்க வேண்டியது நடக்கவில்லை.  என் ஏமாற்றத்தை  புரிந்து கொண்டு அவளே பேசினாள்.


"வேலைக்கு போன பிறகுதான் திருமணம் என்றேன். ஆனால் நீங்கள் அப்பாவிடம் சொல்லி திருமணத்தை முடித்து விட்டீர்கள். நம் லட்சியத்திலிருந்து பின்வாங்கக் கூடாது. வேலை கிடைத்த பின்தான்  முதலிரவு. சம்மதந்தானே"  என்றாள்.


நீ சொல்வது சரிதான். ஆனால் நாளை முதல் இந்த சிஸ்டத்தை கடைபிடித்தால் என்ன என்றேன்.


"அதெல்லாம் சரிபடாது நான் சொன்னால் சொன்னதுதான்" கறாராக சொல்லிவிட்டு போர்வையை இழுத்து போர்த்திகொண்டு படுத்துவிட்டாள்.


கிணற்று நீரை ஆற்று வெள்ளம் கொண்டு போக போவதில்லை. என்ன இருந்தாலும் இது என்னுடைய பொருள். அதனால் கவலை இல்லை. அவள் ஆசையையும் நிறைவேற்றுவோமே என மனதில் நினைத்தவாறு நானும் படுத்துவிட்டேன். எனக்கு போர்வை தேவைப்படவில்லை.


பிங்க் கலர் ராசியோ என்னவோ குமார் சென்னை வேலையில் சேர்ந்து விட்டான். அவனுக்கு போன் அடித்து எனக்கும் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்ய சொன்னேன். நான் வருவதில் அவனுக்கு மகிழ்ச்சி. நண்பனல்லவா? அவனும் அவன் டீம் லீடரிடம் பேசி எனக்கு உடனே ஒரு ஏற்பாடு செய்து விட்டான். திங்கள் கிழமை வரச் சொல்லிவிட்டான்.


ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை புறப்பட்டேன். வேலைக்கு போவதில் ஸ்வேதாவுக்கு மகிழ்ச்சி. எனக்கும் மகிழ்ச்சிதான். என்னை நானே ஒரு ஆம்பிளையாக உணரத் தொடங்கினேன்.


சென்னை வேலை ஒன்றும் கடினமாக இல்லை. ஆனால் மேனேஜர் அந்த வாரம் லீவு தர மறுத்துவிட்டார். அதனால் அடுத்த வாரம்தான் லீவு கொடுத்தார்கள். மறுவாரம் அவளுக்கு பிடித்ததெல்லாம் வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.


என்னைக் கட்டி அணுத்துக் கொண்டு அழுதாள். "என்னால்தானே உங்களுக்கு இந்த கஷ்டம்"என்றாள். உன்னால்தான் நான் மனிதனாக பிறந்ததையே உணருகிறேன் என்று அவள் கூந்தலை ஒதுக்கிவிட்டேன்.


வழக்கத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாகவே படுக்கைக்கு சென்றுவிட்டோம். இன்று பாலும் இல்லை பழமும் இல்லை. பஞ்சாமிர்தமும் இல்லை ஆனால் இவை எல்லாவற்றையும்  அந்த இரவு எங்களுக்கு கொடுத்துவிட்டது. முதலிரவில் போர்வையை போர்த்தியவள் இன்று என்னையே போர்த்திக் கொண்டாள்.  எப்போது தூங்கினோம் என்று எங்களுக்கே தெரியாது.


காலையில் குளித்து முடித்து உடை மாற்றி வந்த ஸ்வேதாவின் அழகு, மகிழ்ச்சியில் பல மடங்கு கூடியிருந்தது. ஸ்வேதா எனக்கு கிடைக்க நான் எதுவும் செய்யாவிட்டாலும் என் முன்னோர்கள் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்.


காலையில் சாப்பிட உட்காரந்ததும் ஸ்வேதா "என்னங்க! நான் ஒண்ணு சொன்னா கேட்பீங்களா?" என்றாள்.


"சொல்லு நீ சொல்வதைதானே கேட்டுவருகிறேன்" என்றேன்.


"இனிமேல் நீங்க வேலைக்கு போக வேண்டாம். உங்களை விட்டுவிட்டு என்னால் இனி இருக்க முடியாது"


திகைத்து நின்றேன். இதனால்தான் பெண்களின் மனதை யாராலும் புரிந்து கொள்ளமுடியாது என சொல்கிறார்களோ?


ஜெ மாரிமுத்து

4 Comments

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. சிரிப்பதா சிந்திப்பதா என்றே விளங்கல 😂🤔 அருமை❤️🔥

  ReplyDelete
  Replies
  1. அதே... அதே... 😂அருமையான சிறுகதை 👌

   Delete
முந்தைய பதிவு அடுத்த பதிவு