Trending

எதிர்பாராத பரிசு - சிறுகதை

 

தமிழ் சிறுகதைகள்

"மனமகிழ் மன்றம்" மதுபான பாரில் ஓர் அறையில் தனியாக அமர்ந்து இரண்டாவது குவார்ட்டரை குடித்து கொண்டு இருந்தார் ஹெட் கான்ஸ்டபிள் சுப்பையா. சின்ன வயசிலேயே தன் திறமையால் பெரிய பதவிக்கு வந்தவர் முத்தையா.


டூட்டி ஏட்டு என்பதால் சைட் டிஷ்கள் கேட்காமலேயே வந்தன. விளக்குகள் அணைக்கப்பட்டு டிம்லைட்டில் இருந்தது அந்த அறை. யாருக்கும் தெரியாமல் குடிப்பவர்களுக்கு அந்த அறையை ஒதுக்குவார்கள்.


அப்போது அந்த அறைக்கு நான்கு  பேர் ஒரு ஃபுல் பாட்டிலுடன் வந்தார்கள். அவரவர் சீட்டில் அமர்ந்து, பாட்டிலை திறந்து, ராவாகவே கப்களில் ஊற்றினார்கள். அந்த அறையின் பாதியிருட்டில் சுப்பையாவை அவர்கள் கவனிக்கவில்லை. ஆனால் சுப்பையா மெதுவாக பார்வையை திருப்பினார்.


"அட நம்ம கோடாரி கோபாலு".


என்ன பேசுகிறார்கள் என்று கூர்ந்து கவனித்தார். கோபால் மற்றவர்களிடம் கூறினான், "இன்னும் முப்பது நிமிடத்தில் முருகன் கபே முதலாளி ஓட்டலை பூட்டும் நேரம் வந்துவிடும். ஓட்டலில் வேலை செய்பவர்கள் போய்விடுவார்கள். சாப்பிட போவது போல் விசாரித்து கொண்டே ஒரே நேரத்தில்  எல்லோரும் அரிவாளால் வெட்டி அவர் கதையை முடிக்கவேண்டும். தப்பிச்செல்ல வேண்டிய கார் ஓட்டல் வாசலில் இருக்கும். முருகன் கபேக்கு போட்டியாக தொழில் நடத்தும் உமா கபே ஓனர் நம்மிடம் அஞ்சு லட்சம் பேசி இந்த பொறுப்பை நம்மிடம் கொடுத்து உள்ளார். கவனமாக முடிக்க வேண்டும்" என்று கூறியபடியே அரிவாளை மறைத்துக் கொண்டு  எழுந்து சென்றார்கள்.


ஏட்டு முத்தையாவுக்கு ஆஃப் அடித்து இருந்தாலும் அவர்கள் பேசியதை கேட்டதும் போதை தெளிந்துவிட்டது.  உடனே போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்தார்  விஷயத்தை சொல்லி ஃபோர்சுடன் முருகன் கபேக்கு  விரைவாக போக சொன்னார்.


விறுவிறுவென வேலைகள் நடந்தன. சிறிது நேரத்தில் ஜீப்புகள் பாய்ந்து செல்லும் ஓசை கேட்டது.   ஓட்டல் வாசலில்,  கோபாலும் மற்ற மூவரும் அரிவாளை முருகன் கபே முதலாளி கனகசபையை நோக்கி  ஓங்கும்போது, போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.


தன்னை கொலை செய்ய நடந்த சதித்திட்டத்தை கேட்டு, முருகன் கபே ஓனர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.  மாவட்டத்தில் ஒரு கொலை நடப்பதை தடுத்து, தகவல் கொடுத்த ஏட்டு முத்தையாவுக்கு எஸ்.பி ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கினார். உயிரைக்காப்பாற்றிய ஏட்டு முத்தையாவுக்கு முருகன் கபே ஓனர் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தார். எல்லா சம்பவங்களும் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பானது. முததையா பெருமிதத்துடன் வீட்டுக்கு வந்தார்.


வீட்டு வாசலில் ஓர் அதிர்ச்சி. முத்தையா மனைவி அவளுடைய அம்மா வீட்டுக்கு செல்ல ஆட்டோவில் ஏறிக்கொண்டு இருந்தாள்.


"ஏய் என்னாச்சு? எங்கே போற? டீவிய பார்த்தியா? இல்லையா? இந்தப் பாரு!  இரண்டு லட்சத்தோடு வந்திருக்கேன்" என்றார் முத்தையா.


"போன வாரம் என்ன சொன்னீங்க?  குடிச்சா உங்களோடு வாழமாட்டேன்னு நான் சொன்னதுக்கு,  இனிமே குடிக்க மாட்டேன்னு சத்தியம் செஞ்சீங்க! ஆனா என்னை ஏமாற்றிவிட்டு குடிக்க ஒயின்ஷாப் போயிருக்கீங்க. உங்க வண்டவாளம் எல்லாத்தையும் அதே டீவில மொத்தமா  சொல்லிவிட்டான். உங்க இரண்டு லட்சம் யாருக்கு வேணும். குடிகாரனோடு வாழறதுக்கு எங்க அப்பா வீட்டிலேயே இருந்துட்டு போறேன். நீ எடுப்பா வண்டிய" என்றாள் ஆட்டோ டிரைவரிடம் முத்தையா மனைவி.


ஜெ மாரிமுத்து

2 Comments

  1. தலைவரின் கதை என்றுமே தனிச்சிறப்பு கொண்டது. அருமை

    ReplyDelete
  2. இப்படி ஒரு பரிசை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை... கிளைமேக்ஸ் டிவிஸ்டில் கதையின் கருத்தை நுழைக்கும் வித்தை தனி கலை!

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு