Trending

ஏசியின் தீமைகள்: தயவுசெய்து ஏசியை வாங்காதீர்கள்

 ஏசியின் தீமைகள்

ஏசியின் தீமைகள்

"சத்யாவுக்கு போவோம் புது ஏசியத்தான், வாங்குவோம்" என்ற பாட்டை போட்டு போட்டு கோடைகால கொண்டாட்டமாக ஏசியை விற்கத்தொடங்கி விட்டார்கள். 


ஒரு ஏசி வாங்கினால் ஒரு குக்கர் FREE, இரண்டு ஏசி வாங்கினால் பெட்டி போன்று இருக்குமல்லவா அந்த Air Cooler Free, மூன்று ஏசி வாங்கினால் சமையல் கட்டுக்கு வைக்கும் புகைப்போக்கி Free என்ற வாயை பிளக்கும் அளவில் அத்தனை ஆஃபர்களை அள்ளி இறைக்கிறது எலக்ட்ரானிக் உலகம்.


ஒரு AC சராசரியாக 24,000 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. இதனை மறுவிற்பனை (Resell) செய்து தருபவருக்கே 1,000 - 1,500 கமிஷன் தொகை கிடைக்கும். அப்படியெனில் விற்பனை செய்பவருக்கு நல்ல லாபம் தரும் எலக்ட்ரானிக் பொருளில் ஒன்று தான் குளிரூட்டி. அதனால் தான் அதுக்கு இத்தனை விளம்பரங்கள். 


சாலையில் நடந்து போகையில் எதார்த்தமாக கீழே கிடக்கும் வெள்ளைத்தாளை திருப்பி பார்த்தால் 'ஏசி விளம்பரம்'.


பணம் கிடைக்கிறதென்று மனிதன் இயற்கை வளத்தை எவ்வாறெல்லாம் சுரண்டுகிறான் என்பதற்கு இந்த ஏசி விற்பனை சாட்சி.


சராசரியாக மாதம் 20,000 சம்பாதிக்கும் ஒருவர் கூட வீட்டில் ஏசியை EMIயில் வாங்கி வைக்க ஆசைப்படுகிறார். பின் கரெண்ட் பில் அதிகமாக வருகிறதே என்று அல்லல் படுகிறார்.


ஏசியை ஏன் பயன்படுத்த கூடாது என்பதற்கு எல்லோரும் போன்று நிமோனியா வரும், சைனஸ் வரும், கருவுறும் தன்மை இல்லாமல் போகும், வைட்டமின் D கிடைக்காமல் போகும், இதயநோய் வரும் என்றெல்லாம் நமது உடல் சார்ந்த தீமைகளை நான் அடுக்க போவதில்லை.


மனிதன் எவ்வாறு தன்னை கவனித்து கொள்கிறானோ அதே போல் தன்னை தாங்கும் இவ்வையகத்தையும் கவனிக்க வேண்டுமல்லவா?


சமீபத்தில் "எக்கனாமிக் டைம்ஸ்" ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தது. அது, 'இவ்வுலகத்தின் அடுத்த சவால் ஏசி தான்' என்று விளக்கி இருந்தது.


உலகம் வெப்பமாக வெப்பமாக ஏசியை பயன்படுத்த வேண்டுமென்று மக்களுக்கு தோன்றுகிறது. ஆனால் அந்த ஏசியை பயன்படுத்துவதால் தான் உலகமே வெப்பமயமாகிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை.


அனைத்து துறைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இரும்புத்திரை சீனா இந்த உலகவெப்பயமாதலில் கோட்டை விட்டது. உலகிலேயே அதிக அளவில் ஏசியை பயன்படுத்தும் மக்கள் சீனாவிலும் அமெரிக்காவிலும் தான் உள்ளார்கள். அந்த வகையில் இந்திய மக்களாகிய நாம் ஏழைகளாகவே இருப்பது நல்லது.


கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனாவில் இரண்டு மடங்கு அதிகமாக ஏசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் எட்டு மடங்குக்கும் மேலாக விற்கப்பட்டுள்ளது. 


இதனால் உலகளாவிய கார்பன் உமிழ்வு 2% அதிகரித்து உள்ளது.


நாம் இப்போது ஒரு நல்ல இயற்கை வனப்பு மிகுந்த தலைமுறையில் வாழ்கிறோம். எவ்வித சிதைவும் இன்றி வருங்கால உலகிற்கும் அஃதை நாம் செம்மைபடவே வழங்க வேண்டுமல்லவா? 


உலகளாவிய வெப்பத்தை 25,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருள் கூட்டுகிறதென்றால் அது நமக்கு தேவையா? கொஞ்சம் யோசியுங்கள்.


கடல் மட்டம் உயர்வதில் இருந்து அம்மை போன்ற நோய்கள் வருவதற்கு கூட ஏசி ஒரு காரணகர்த்தா ஆகிறது.


இதுமட்டுமல்லாமல், 'லிஜினல்லா நிமோபிலியா' என்னும் தீநுண்ணுயிரி பெருகவும் ஏசி பயன்பாடே காரணமாகும்.


மனிதனால் 42.3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியும். சராசரியாக நம் நாட்டில் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையானது நிலவுகிறது.


அதையுமே பொருத்துகொள்ள முடியாத மனிதன் 24 டிகிரி செல்சியஸிலே வாழ விரும்புகிறான். அவன் அனுபவிக்க வேண்டிய வெப்பத்தை வீட்டிலிருந்து வெளியேற்றி நாட்டை கெடுப்பதே ஏசியின் வேலை.


எல்லா பருவ காலங்களும் மனிதனுக்கு தேவையானதே. அதை அந்தந்த காலங்களுக்கு ஏற்ப அனுபவிக்கும் போதே உடலின் எதிர்ப்பு சக்திகள் கூடுகிறது. எப்போது மனிதன் இயற்கை தருவதற்கு எதிராக வாழத்தொடங்கினானோ அன்றிலிருந்தே நோய்களும் தொடங்கியிருக்கும்.


இவ்வாறாக குளிர்தருவதால் ஏசியில் இருந்து வெளியாகும் குளோரோ ஃபுளோரோ கார்பன் (CFC) வளிமண்டலத்தை அடைந்து புவியின் ஓசோன் படலத்தை சிதைக்கிறது. இதனால் சூரியனில் இருந்து வெளிவரும் புறஊதா கதிர்கள் சரியாக வடிகட்டப்படாமல் பூமியுனுள் நுழையக்கூடும்.


வளிமண்டலத்தில் இருந்து வரும் புற ஊதாக்கதிர் வடிகட்டப்படாவிட்டால், பூமியில் வாழும் உயிர்னங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று Reference Solar Spectral Irradiance: Air Mass ஆய்வுகள் கூறுகிறது.


சூரியனில் இருந்து வெளிவரும் புறஊதா கதிர்கள் வடிகட்டப்படாமல் லேசாக மனித தோலின் மேல் படுவதன் விளைவே, தோல் புற்று நோய் வரையில் தரக்கூடும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


அதனால் உடலிற்கும் உலகத்திற்கும் இத்தனை இன்னலை தரும் ஏசியை யாரும் வாங்காதீர்கள். முடிந்த வகையில் அதன் பயன்பாட்டை குறையுங்கள். 


வியர்வை தானே, வந்தால் வரட்டும். பருவ காலங்களை அனுபவியுங்கள். வெப்பமயமாதலை விடவும் பெரும் அபாயம் வேறெதுவும் இல்லை.


தீசன்


1 Comments

  1. 2000 ரூபாய் EMI கட்டினாலே AC வைத்துவிடலாம் என்பதே மனிதனை வாங்கத் தூண்டுகிறது.AC வைப்பதை பெருமையாகவும் சிலர் கருதுகிறார்கள். தீமைகளை தெரிந்து கொண்டால் கொஞ்சம் சிந்திப்பார்கள் என கருதுகிறேன்.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு