Trending

உங்களில் ஒருவன் - மு.க.ஸ்டாலின் (சிறு பகுதி)

 உங்களில் ஒருவன்

உங்களில் ஒருவன் - மு.க.ஸ்டாலின்

1976 ஜனவரி 31 ம் தேதி தமிழகத்தில் கழக ஆட்சி கலைக்கப்பட்டது. அடுத்த சில மணி நேரத்தில் கோபாலபுரம் வீட்டில் போலீஸ் குவிக்கப்பட்டது. தன்னைத்தான் கைது செய்யப்போகிறார்கள் என்று எதிர்பார்த்திருந்த தலைவருக்கு, அங்கு வந்த போலீசார், 'உங்கள் மகன் ஸ்டாலின் எங்கே?' என்று கேட்டபோது, தலைவரே ஒருகணம் அதிர்ந்துவிட்டார். மறுநாள் காலை, நான் கோபாலபுரம் வீட்டுக்கு வந்தபோது வீடே பதட்டமாக இருந்தது. முந்தைய நாள் இரவு அண்ணன் மாறனைக் கைது செய்து விட்டார்கள். அடுத்து நானும் கைது செய்யப்படலாம் என்று நினைத்தார்கள். என்னைப் பார்த்ததும் அம்மாவும் துர்காவும் அழத் தொடங்கி விட்டார்கள்.


அமைதிப்படுத்திய ஆவேசக்குரல்


அப்போது தான் "பொதுவாழ்க்கைக்கு வந்தால் எல்லாவித தியாகத்துக்கும் தயாராக இருக்க வேண்டும்" என்று உணர்ச்சி வசப்பட்ட நிலையில் ஒரு குரல் ஆவேசமாக கிளம்பியது. தலைவரின் அந்த குரல் தான் எல்லோரையும் அமைதிப்படுத்தியது.


"போலீஸ் உன்னை தேடுகிறது. அதனால் நீ தயாராக இரு" என்று தலைவர் என்னிடம் சொன்னார்கள். எப்போதும் அவர் பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவன். அவர் சிந்தனைக்கு மாற்றுச் சிந்தனைகூட சிந்திக்காதவன் நான். அவர் என்ன சொன்னார் என்பதை உணர்வதற்கு முன்னால் நான் தலையை ஆட்டினேன்.


கோபாலபுரம் வீட்டில் எங்களுக்கு என இருக்கும் தனி அறைக்கு சென்றேன். துர்கா அங்கு அழுதபடி உட்கார்ந்திருந்தார். "நான் சீக்கரமாக வந்துவிடுவேன். தேர்தல் பிரச்சாரத்திற்காக வெளியூருக்கு போயிருப்பதாக நினைத்துக் கொள்" என்று ஆறுதல் கூறி தேற்றிட நினைத்து வாய்க்கு வந்த வார்த்தைகளை நான் சொன்னேன்.


துறவியை போல


குளியல் அறைக்கு சென்றேன். தலை குளிர குளித்தேன். எனது உடுப்புகளில் எனக்கு பிடித்த உடுப்பை எடுத்து அணிந்து கொண்டேன். ஒரு பெட்டியை எடுத்து, அது பிடிக்கும் அளவுக்கு எனது துணிகளை எடுத்து வைத்து கொண்டேன். துர்காவிடம் என் அன்பு முழுவதையும் வெளிப்படுத்தி விடை பெற்றேன்.


தலைவரை பார்த்தேன். படாரென்று அவர் காலில் விழுந்து வணங்கினேன். என்னை பிடித்து தூக்கினார். "பொது வாழ்க்கை என்றால் எல்லாம் சேர்ந்தது தான்" என்றார். தொலைபேசி அருகே போனார் தலைவர். அதை எடுத்து எண்களை சுழற்றினார். "ஸ்டாலின் வந்து விட்டான்" என்று சொல்லிவிட்டு வைத்து விட்டார். என்னை பார்த்தார். அவரது எண்ணங்கள் எங்கெங்கோ சுழன்றிருக்கும்.


கோபாலபுரம் வீட்டு வாசலுக்கு போலீஸ் வாகனம் வந்துவிட்டது. "இதோ ஸ்டாலின் அழைத்து செல்லுங்கள்" என்று அடையாளம் காட்டி அனுப்பி வைக்கிறார் தலைவர். இரண்டு நாட்களுக்கு முன்பு வரை முதல்வர். இந்த நாட்டில் 8 ஆண்டுகளாக அந்த நாற்காலியில் அமர்ந்திருந்து அதிகாரம் செலுத்தியவர். ஆனாலும் அந்த அதிகாரத்தின் சுவடு இல்லாமல் ஒரு லட்சிய தந்தையாக தனது மகனை சிறைக்கு அனுப்பும் போது ஒரு துறவியை போல எந்த பற்றும் இல்லாமல் அனுப்பி வைத்தார்.


தன் மகன் சிறைக்கு செல்கிறான் என்ற வருத்தம் துளிகூட இல்லாமல் திமுகவின் எத்தனையோ தொண்டர்கள் சிறைக்குப் போவதைபோல, எத்தனையோ வீட்டு புதல்வர்கள் சிறைக்கு செல்வதைப் போல ஸ்டாலினும் செல்கிறான் என்பது போலவே அவர் முகம் இருந்தது.


வேறு ஒரு ஸ்டாலினாக


போலீசார், கோபாலபுரம் வீட்டுக்கு வருவதற்கு முன்புவரை எனது உள்ளத்தின் ஓரத்தில் லேசான பயம்கூட இருந்தது. ஆனால், போலீசார் இரண்டு பக்கமும் இருந்து என்னை அழைத்து செல்லும் போது என்னை அறியாமல் வேறு ஒரு ஸ்டாலினாக நான் மாறத்தொடங்கினேன்.


வாசலின் படிகட்டுகளில் இறங்கும்போது வேறு ஒரு மனிதனாக மாறத்தொடங்கினேன். வேனில் உட்காருகிறேன். என்னை அறியாமல் என் கை உயர்கிறது. தலைவரை நோக்கி கை காட்டுகிறேன். அனைவரிடமும் கை தூக்கி போய் வருகிறேன் என்று சொல்கிறேன்.


வாகனம் புறப்படவில்லை. போக முடியவில்லை. வாகனத்தை மறித்துக் கொண்டு தொண்டர்கள் உட்கார்ந்து விட்டார்கள். வழிவிட முடியாது என்கிறார்கள் அவர்கள். வாகனத்திற்கு வழிவிட சொல்கிறார் தலைவர். மனமில்லாமல் தொண்டர்கள் இடம் தருகிறார்கள். எல்லோருக்கும் புன்னகை பூத்த முகத்துடன் நான் விடை தருகிறேன். கோபாலபுரம் சாலையை வாகனம் கடக்கும் வரை, பின்னால் திரும்பி கை ஆட்டியபடியே உட்கார்ந்து இருக்கிறேன். கோபாலபுரம் வீடு, புள்ளியாக மறைகிறது. ஏற்கப்போகும் சிறைவாசம் குறித்து பல்வேறுபட்ட சிந்தனைகளுடன் அந்த வேனில் அமர்ந்து இருந்தேன்.


மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை


"மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை"


என்ற பாரதிதாசன் பாடலை நினைத்து நெஞ்சில் உரமேற்றிக் கொண்டேன்.


பொதுவாக, சிறை செல்பவர்கள் 3 மாதம், 6 மாதம் என்று கால அளவோடு தண்டனை பெற்று சிறை செல்வார்கள். மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதால், எனது தண்டனை காலம் எவ்வளவு என்பது தெரியாமலேயே சிறைச்சாலையை நோக்கி பயணமானேன்.


சென்னை சிறைச்சாலை முன், என்னை அழைத்து சென்ற வாகனம் நின்றது. சிறை வாசல் வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு. எங்கும் ஆயுதம் தாங்கிய போலீசார் அணிவகுத்து நின்றனர். அந்த காட்சியை காண்போருக்கு ஏதோ பயங்கரவாதியை பிடித்து வந்து சிறைக்கு அனுப்புவதைப் போலத் தோன்றிடும். அந்த நிலையில், சிறைச்சாலைக் கதவைத் திறந்து என்னை போலீசார் உள்ளே அழைத்து சென்றனர்


அதன்பிறகு நடந்தது அய்யகோ


இன்று நினைத்தாலும் இதயம் சிறிது நேரம் நின்று துடிக்கிறது. அங்கே நான் எண்ணி வந்தபடி மாங்குயிலின் இனிய கீதம் கேட்கவில்லை. மரண ஓலங்கள் கேட்டன.


சிறைச்சாலை சித்ரவதைக் கூடாரமாக நடத்தப்பட்ட கொடுமைகள் அத்தனையும் பதைபதைக்க வைக்கும் நிகழ்ச்சிகள் என்றாலும், அவை ஒரு கொள்கை வீரனுக்கு எதையும் தாங்கும் சக்தியை உருவாக்கியது. ஒவ்வொரு வலியும் ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது. ஒவ்வொரு பாடமும் அவன் பாதையை தீர்மானிக்கிறது என்பதைப் போல!


மரண ஓலத்தின் சாட்சியங்கள்


எதையும் எதிர்கொள்ளும் வலிமையை அன்று பெற்றேன். அந்த நினைவுகளைப் பற்றி பின்னர் விரிவாகச் சொல்கிறேன். சிறைக்கு கொண்டு செல்லும் முன் நடத்த வேண்டிய வழக்கமான பதிவுகளை சிறை அதிகாரிகள் செய்து கொண்டிருந்தனர்.


சிறைக்குள் உங்களையும் அழைத்து செல்கிறேன்.


இதோ சிறை வாசலில் நான் காத்திருக்கிறேன்.


நீங்களும் காத்திருங்கள்.


அந்த மரண ஓலத்தில் ரத்தம் உறைய வைக்கும் சாட்சிகளை இரண்டாம் பாகத்தில் சொல்கிறேன்.


இவ்வாறாக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் சுயசரிதமான "உங்களில் ஒருவன் - முதற் பாகம்" முடிவடைகிறது.


புத்தக ப்ரீயர்கள் ஸ்டாலின் அவர்களின் நடை எவ்வாறு இருக்குமென்ற சந்தேகத்துடன் வாங்கலாமா? வேண்டாமா? என்று குழம்ப வேண்டாம்.


அவர் கலைஞரின் மகன் அல்லவா!

👇 இன்றைய இதழை முழுமையாக படித்திடுங்கள் 👇
தென்றல் இதழ் 41

1 Comments

  1. தென்றலில் அவ்வப்போது கட்டுரைகளை வெளியிடவும்

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு