Trending

கடவுள் தந்த ஓய்வு - சிறுகதை

கடவுள் தந்த ஓய்வு - சிறுகதை


காலை 11 மணி இருக்கும். "காபி சாப்பிடுங்க மாமா" என்று மருமகள் லதா அன்போடு காபியை என்னிடம்  நீட்டீனாள். அப்படி அவளாகவே காபி கொடுக்கிறாள் என்றால் இன்னும் பத்து நிமிடத்தில் எனக்கு ஏதோ ஒரு வேலை கொடுக்க போகிறாள் என்று அர்த்தம். ரிட்டையரான மூன்று வருடத்தில் நான் தெரிந்து கொண்ட விஷயங்களில் இதுவும் ஒன்று.  சீட்டு கம்பெனி மேனேஜராக வேலை செய்த போது ஒரு நாளைக்கு பத்து காபி வரும். மனைவி இறந்த பிறகு உரிமையாக யாரிடமும் காபி வேண்டும் என்று நான் கேட்டதில்லை. கொடுக்கும்போது குடிப்பேன். "ஒரு காபி போட இவ்வளவு நேரமா?" என்று என் மனைவியை அதிகாரம் செலுத்தியதையும் அதற்கு அந்த வயதிலும் அவள் பயந்து நடுங்கியவாறு காபி கொண்டு வந்து கொடுத்ததையும் இப்போது நினைத்து பார்க்கிறேன். கண்கள் குளமாகின்றன. எவ்வளவு கொடூர மனம் படைத்தவனாக இருந்திருக்கிறேன்.


"மாமா! வசந்தி இப்பத்தான் போன் செஞ்சா. ரேஷன் கடையிலே கூட்டமே இல்லையாம். செத்த போய் கொடுக்கிறதை வாங்கியாங்க. சும்மா தானே இருக்கீங்க" என்று ஒரு அட்டையையும் இரண்டு பையையும் 105 ரூபாய் பணத்தையும் என் கையில் திணித்தாள் லதா. சைக்கிளை தள்ளி கொண்டே அங்காடிக்கு சென்றேன். குறைந்தது 50 பேராவது கியூவில் நின்றார்கள். நானும் கியூவில் சேர்ந்து கொண்டேன். அரை மணி நேர காத்திருப்புக்கு பிறகு என் முறை வந்தது. அட்டையை கொடுத்தேன். "என்ன இராமசாமி அண்ணேன், ஸ்மார்ட் கார்டுக்கு பதில் பான் கார்டை கொடுக்கிறீங்க" என்றான் ரேசன் கடை வேலு. அட்டையை மாற்றி கொடுத்து இருக்கிறாள். இப்போதுதான் நானே பார்க்கிறேன்.


வெயிலில் கால் கடுக்க நின்றதால் மருமகள் மீது கோபம் கோபமாக வந்தது. மகனிடம் சொன்னாலும் பரவாயில்லை, இன்று அவளை திட்டாமல் விடக்கூடாது என்று வேகமாக சைக்கிளை தள்ளிக்கொண்டே வீட்டுக்கு வந்தேன்.  நான் உள்ளே நுழைவதற்கு முன் அவளே அர்ச்சனையை தொடங்கி விட்டாள். "நான்தான் விபரம் இல்லாம அட்டையை மாத்தி கொடுத்திட்டேன். உங்களுக்கு அறிவு வேண்டாமா? எப்படித்தான் உங்கள மேனேஜரா வைச்சிருந்தானுங்களோ" என்று தலையலடித்துக் கொண்டாள். பின்னர் ஸ்மார்ட் கார்டை கையில் கொடுத்தாள். எனக்கு பென்ஷன் கிடையாது. அதனால் கோபம் வரவில்லை. என் மகனிடம் இதை சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. ஏனென்றால் என் மகனுக்கு பாஸ் அவன் மனைவிதான் என்பது எனக்கு தெரியும். எப்போது போனாலும் நான் தானே ரேசன் கடைக்கு போக வேண்டும்? அதனால் அங்காடி வேலையை அப்போதே முடித்துவிட்டேன். நல்ல வேளை நான் மீண்டும் போன போது கூட்டமில்லை.


சம்பளம் வாங்கும் போது என் மகன் ஆயிரம் ரூபாய் என் செலவுக்கு பணம் கொடுப்பான். பென்ஷன் இல்லாததால் அதை வாங்க வேண்டிய நிலை. சவரக்கடைக்கு போய் இருக்கின்ற கொஞ்ச நஞ்ச முடியையும் வெட்டிக் கொண்டு வந்தேன். சாப்பாடு ரெடியாக இருந்தது. மருமளுக்கு அவள் "கடமையை" நேரத்துக்கு முடிக்க வேண்டும். சாப்பிட்டதால் கொஞ்ச நேரம் படுக்க வேண்டும் போல் இருந்தது.


அப்போது மருமகளுக்கு ஒரு போன் வந்தது. "ஹரிஷுக்கு இன்னைக்கு ஸ்கூல் மூனு மணியோட முடிஞ்சுச்சாம். அவனை கொஞ்சம் போய் கூட்டிட்டு வாங்களேன். நான் வேலையா இருக்கேன். நீங்க சும்மாதானே இருக்கீங்க. வேணும்னா என் ஸ்கூட்டிய எடுத்துட்டு போங்க" என்றாள் லதா. பக்கத்தில்தான் ஸ்கூல். அங்குதான் ஹரிஷ் ஃபர்ஸ்ட் ஸ்டான்டர்டு படிக்கிறான். ஸ்கூட்டியை எடுத்து கொண்டு ஸ்கூலுக்கு சென்றேன். நான் தேடாமலேயே என் அருகில் வந்து விட்டான். என் மகனை போலவே அவனும் புத்திசாலி. அவனை உட்கார வைத்து மெதுவாக வீட்டுக்கு புறப்பட்டேன். ஐஸ்கிரீம் கடையை கிராஸ் செய்யும்போது "தாத்தா ஐஸ்கிரீம்" என்றான். "உன் அம்மா திட்டுவாளேடா" என்றேன். "நான் இங்கேயே சாப்பிடுறேன், வீட்டுக்கு எடுத்துட்டு வரல" என்றான். சரி என்று ஒரு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தேன். அப்படியே என்னை கட்டி கொண்டான்.


பேரனை பொறுமையாக அழைத்து கொண்டு வந்து வீட்டில் விட்டேன்.  அம்மாவை பார்த்ததும் ஓடிச் சென்று அவள் முந்தானையில் முகத்தை துடைத்த ஹரிஷ் "நான் ஐஸ்கிரீம் சாப்பிட்டேனே! தாத்தா வாங்கி கொடுத்தாங்களே!" என்று குதித்து குதித்து ஆட்டம் போட்டான். ஒரு நிமிடத்தில் காளியாகி விட்டாள் லதா. "உங்க கிட்ட எத்தனை முறை சொல்வது? வரும்போது ஏதாவது கண்டதையும் வாங்கிக் கொடுக்காதீங்கன்னு. இருபது ரூபாய்க்கு ஐஸ்கிரிம் வாங்கி கொடுத்துடுவீங்க. நாளைக்கு காய்ச்சல் கழிச்சல்னா யார் பார்க்குறது. இரண்டாயிரம் ரூபாய் இல்லாம எந்த டாக்டராவது நம்மை விடுவானா? இனிமே புள்ளய அழைக்க நீங்க போக வேணாம். அதையும் நானே பார்த்துக்கிறேன்" என்றாள். இடையில் புகுந்த ஹரிஷ் "நீ வர வேணாம். தாத்தாதான் வரனும்" என்றான். அவன் முதுகில் ஒரு தட்டு தட்டிய லதா "ரூமுக்கு போய் படி" என்று அதட்டினாள்.


மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து விட்டேன். பையன் முருகவேலு என் அருகில் வந்தான். "அப்பா, நம்ம வாத்தியார் சீனிவாசன் பையனுக்கு வெள்ளிக்கிழமை  திருவண்ணாமலையில் கல்யாணம், நமக்கு பத்திரிகை வச்சிருக்காரு. எனக்கு உள்ளூரிலேயே மூனு கல்யானத்துக்கு போக வேண்டி இருக்கு. நீங்க சுமமாதானே இருக்கீங்க. கொஞ்சம் அந்த கல்யாணத்துக்கு போயிட்டு வந்துடுங்க. என்னைவிட உங்களைத்தான் அவங்களுக்கு ரொம்ப தெரியும். பஸ்ல ஏறி உட்கார்ந்தா திருவண்ணாமலை. திரும்ப ஏறி உட்கார்ந்தா நம்ம ஊரு. என்ன சரியா? இரண்டு வேலை கல்யாணத்திலேயே  சாப்பிடலாம். விருப்பம் இருந்தா அந்த அருணாச்சலேசுவரரையும் பார்த்து வரலாம். என்ன சொல்றீங்க" என்றான். "நீங்க எது சொன்னாலும்தான் நான்  செய்யிறேனேப்பா.  அப்புறம் ஏன் சும்மா இருக்கேன், சும்மா இருக்கேன் என்று நூறு தடவ சொல்றீங்க" என்றேன்.


வெள்ளிக்கிழமை கல்யாணத்துக்கு வியாழக்கிழமை புறப்பட்டேன். பஸ் டிக்கெட், காபி, டீ, மொய் பணம் எல்லாம் கணக்கு போட்டு ஒரு தொகையை கொடுத்தான். அவனை இதற்காக குறை சொல்ல முடியாது. ஏனென்றால் கணக்கு போடும் பழக்கத்தை நான் தான் அவனுக்கு கற்றுக் கொடுத்தேன். பஸ்ஸில் நீண்ட நேரம் காலை நீட்டி உட்கார முடியவில்லை. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் கழிக்க வேண்டும். பஸ்ஸில் அதெல்லாம் முடியுமா? மரண அவஸ்தை. என்ன செய்வது? நானும் போகவில்லை என்றால் என் பிள்ளைக்குதான் இந்த கஷ்டம். அவனுக்காக பொறுத்துக் கொண்டேன். ஒரு வழியாக கல்யாணத்தை முடித்துக் கொண்டு திரும்ப ஊருக்கு வந்துவிட்டேன்.


வீட்டில் சும்மா இருந்தால் ஏதாவது ஒரு வேலை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். அதனால் நான் வேலை பார்த்த கம்பெனியில் ஏதாவது ஒரு வேலைக்கு போகலாம் என்று நினைத்தேன். புது மேனேஜரிடம் இது பற்றி பேசினேன். "செக்யூரிட்டிக்குதான் இப்போது ஆள் தேவைப்படுகிறது. இரவு மட்டும் தான் வேலை. வருகிறீர்களா" என்றார். கலெக்டராக வேலை பார்த்தவன் அந்த ஆபிஸில் பீயூனாக வேலை செய்ய முடியுமா? மனசாட்சி இடம் கொடுக்க வில்லை. அதனால் அந்த வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.


சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்து வந்த போது என் மனைவியை நினைத்துக் கொண்டேன். நல்ல வேளை அந்த புண்ணியவதி எனக்கு முன்னேயே போய்விட்டாள். கொஞ்ச சம்பளத்தில், கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, ஒரு வீட்டை கட்டினேன். பின்பு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பையனை சேர்க்க கட்சிக்காரர்களுக்கு கொஞ்சம் செலவாகி விட்டது. அடுத்தது பையனோட திருமண செலவு. நல்ல சாப்பாடு சாப்பிடாமலேயே,  நல்ல துணி போடாமலேயே எல்லாக் காசும் போய்விட்டது. ரிட்டையர் ஆன போது வெறும் கையோடுதான் வீட்டுக்கு வந்தேன். "உங்களுக்கு என்று கொஞ்சம் சேர்த்து வையுங்க" என்று என் மனைவிதான் அடிக்கடி சொல்லுவா, அதையும் கேட்கவில்லை. ரிட்டையர் ஆனபோது "கம்பெனிக்கு ஓய்வு இல்லாமல் உழைத்து விட்டீர்கள். இனியாவது ஓய்வாக இருங்கள்"  என்று வாழ்த்தி அனுப்பினார்கள். ஆனால் இன்று என் நிலை?


பல யோசனைகளோடு வந்த என்னை ஒரு லாரிக்காரன் தட்டிவிட்டான். தடுமாறி விழுந்ததுதான் தெரியும். பிடரியில் நல்ல அடி. பிறகு ஆஸ்பத்திரியில் இருந்தேன். இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. மயக்க நிலையில் இருந்தாலும் சுற்றி நடப்பதை என்னால் யூகிக்க முடிந்தது. "வேளா வேளைக்கு சோறு போடுறோம். அதை தின்னுட்டு கிடக்காம கிழம் ஊரை சுத்தி வந்து எங்களுக்கு செலவை உண்டாக்கி வச்சிருக்கு. கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கலாம். தர்மாஸ்பத்திரியில் சேர்த்தோம்னு கொற வரும். அதனால் இந்த  செலவ பண்ணி தொலைக்க வேண்டியிருக்கு" என்று தன் அம்மாவிடம் புலம்பினாள் லதா.  அதைக் கேட்டவுடன் "கடவுளே என்னை உன்னிடம் அழச்சுக்க" என்று அந்த  நிலையிலும் கடவுளை வேண்டினேன்.


ஒரு வாரம் ஆகிவிட்டது.  வெளி உலகை பொருத்தவரை நான்  கோமாவில் இருந்தேன். டாக்டர் என் மகனை அழைத்து "ஒன்னும் டெவலப்மென்ட் இல்லை. இன்னும் சில மணி நேரத்தில் மூளை "சாவு" நிலையை அடைந்துவிடும். நீங்கள் சம்மதித்தால் உடல் உறுப்புகளை, தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கலாம். கொஞ்சம் காசு கிடைக்கும்.  டிஸ்சார்ஜ் செலவாவது அட்ஜஸ்ட் ஆகும்.  நல்ல முடிவா எடுங்க" என்றார் டாக்டர். டாக்டர் சொல்றபடி செய்யலாமுங்க என்றாள் மருமகள். என் இறுதி முடிவை நினைத்து கதறி அழுதான் என் மகன். "வாழ்நாள் முழுவதும் என் அப்பா எங்களுக்காக உயிரையும் உடலையும் கொடுத்து விட்டார். தனக்கென எதையும் கேட்டதில்லை. அவர் உடலுக்கு விலை வச்சு கேட்காதீங்க. அவர் யார் உடம்பில் வேண்டுமானாலும் வாழட்டும். அதற்கு விலை போடாதீங்க" என்று தேம்பி தேம்பி அழுதான்.


இந்த உலகத்தில் என்னை நேசிக்க யாருமே இல்லையோ என ஏங்கி தவித்தேன். என் மகனின் இந்த வார்த்தைகளை கேட்டதும் என் மனம் சாந்தி அடைந்தது. என் உயிர் என்னை விட்டு பிரிவதை என்னால் உணர முடிகிறது. இதை விட பெரிய ஓய்வை கடவுளைத் தவிர வேறு யாராலும் எனக்கு கொடுக்க முடியாது.


ஜெ மாரிமுத்து


தென்றல் இதழ் 38

2 Comments

  1. இந்த சிறுகதையில் இருந்து என்னால் மீள முடியவில்லை‌...

    ReplyDelete
  2. பலரது வாழக்கை நிலையின் கதைக்களம்.‌😢❤️

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு