Trending

நீட் வேண்டுமா? வேண்டாமா? தென்றல் கருத்து

 


ஒரு ஐஸ்கிரீம் கடைக்கு மூன்று நண்பர்கள் போய் ஆளுக்கொரு நிறத்தில் (சிவப்பு மஞ்சள் பச்சை) ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டனர்.


பணம் கொடுக்க வேண்டிய இடத்தில் 'கேள்விக்கு சரியான பதில் கூறும் புத்திசாலிகளுக்கு இன்னொன்று இலவசம்'. என்று எழுதிபோட்டிருந்தார் கடைகாரர்.


அதைப்பற்றி அவரிடம் கேட்டபோது.. மூவருக்கும் தனித்தனியே ஒரு துண்டு சீட்டும் பேனாவும் தந்து

படித்து பார்த்து பதிலளிக்க சொல்லினார்.


அதில் "மஞ்சள் நிற ஐஸ்கிரீம் என்ன சுவை ? " என்று கேட்கப்பட்டிருந்தது.


உடனே மஞ்சள் நிற ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டவர் சரியான பதிலை எழுதி கடைகாரரிடம் நீட்டினார். 


சொன்னபடி அவருக்கு இன்னொன்று இலவசமாக கிடைத்தது! பெற்றுக்கொண்டு சென்று விட்டார்.


மற்ற இருவரும் திருதிருவென விழித்தனர். காரணம் அவர்களிடமும் அதே கேள்விதான் கேட்டிருந்தார் கடைக்காரர்..!


அவர்கள் சாப்பிடாத ஐஸ்கிரீம் சுவையை எப்படி சரியாக சொல்ல முடியும்??


ஏதோ குருட்டாம்போக்கில் ஒன்றை சொல்லலாமே தவிர சரியானதை உணர்ந்து சொல்லமுடியுமா?


மஞ்சள் நிற ஐஸ்கிரீம் சாப்பிட்டவருக்கு ஏதோ அன்று அதிர்ஷ்டம்! அவ்வளவுதான். 


கடைக்காரர் வைத்தது திறமையை நிரூபிக்கும் போட்டியா? அதிர்ஷ்டத்தை பரிசோதிக்கும் போட்டியா?


இந்திய திருநாட்டில் 28 மாநிலங்களில் மாநிலத்துக்கு ஒரு பாடத்திட்டமும் அதுதவிர்த்து தேசிய அளவில் மூன்று/நான்கு விதமான பாடத்திட்டங்களும் இன்னும் பிறவும் உலவுகின்றன..


அப்படி இருக்க ஏதோ ஒரு பாடத்திட்டம் சார்ந்து நாடுதழுவிய அளவில் கேள்வி எழுப்பப்பட்டால் அந்த குறிப்பிட்ட பாடத்திட்டத்தில் பயிலாத பிறருக்கு எப்படி பதிலளிக்க முடியும்?


கல்வி சமமில்லாத ஒரு நாட்டில் தேர்வு சமமாக நடத்துவது அநியாயம்! 

ஒருதலைபட்சம்!


12 வகுப்புகளை கடந்துவரும் பிள்ளைகளுக்கு 

நுழைவுத்தேர்வு என்பது 13வது வகுப்பாக மேலும் ஒரு வருடத்தை வீணடிக்கிறது.


ஒரு மாநிலம் தன் சொந்த வரிப்பணத்தில் தன் மக்களைகொண்டு தன்மக்களின் தேவைக்காக காலங்காலமாய் உருவாக்கி வைத்திருக்கும் மருத்துவ கட்டமைப்பை , ஒன்றிய அரசு நோகாமல் வந்து அப்படியே  தூக்கி வைத்து தன் இஷ்டப்படி பங்கு போடுவது ஈனச்செயல்!


வேண்டுமானால் ஒன்றிய அரசு தன்தரத்திற்கு ஒரு மருத்துவ கட்டமைப்பை புதிதாக தனியாக உருவாக்கி கொள்ளட்டும். மத்திய அரசு ஊழியர்.. மாநில அரசு ஊழியர் என்று இருப்பது போல...


மத்திய அரசு மருத்துவர்..

மாநில அரசு மருத்துவர்..

என்று இருந்து விட்டு போகட்டும்!


அப்போது தெரிந்துவிடும் யார் தரமான மருத்துவர் ? தரமான கல்வி கற்றவர் என்று...


படித்ததை சோதிக்கத்தான் தேர்வு வேண்டுமே தவிர..  படிப்பதற்கே ஒரு தகுதிவேண்டும் என்று ஆகிவிடக்கூடாது..

ஆதலால் நுழைவுத்தேர்வு முறை முற்றாக ஒழித்தே தீர வேண்டும்.


படிக்கும் காலமும் புத்திசாலிதனமும் பருவங்களை போல மாறிமாறி வரும்..

எல்லாரும் எல்லா நேரங்களிலும் சோபிக்கமுடியாது. சோபிக்காதவர்கள் எல்லாம் சொத்தையும் கிடையாது.


ஒரு மாணவனின் 9 முதல் 12 வரையிலான எல்லா பள்ளிப்பாட மதிப்பெண்களின் சராசரியையும் அவனுக்கான சமூக இட ஒதுக்கீடு நிலையையும் கொண்டே  நாட்டின் எந்த ஒரு  உயர்கல்வி படிப்புக்கும் அனுமதி வழங்கலாம்.


ஒரு நல்ல நாடு அதையும் கூட இலவசமாகத்தான் தரவேண்டும்.


"நாட வளம் தரும் நாடு, நாடே அல்ல!" என்பது வள்ளுவர் முடிவு.


 நீட் தேர்வு என்பது ஓட்டை விழுந்த சல்லடை..!

அதில் எதையும் முறையாக வடிகட்டவே முடியாது.


ஏழைகளுக்கும் அது பலன்தரவில்லை..

திறமைசாலிகளுக்கும் அது முழு பலன்தரவில்லை..

தத்தமது பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும் அது பலன்தரவில்லை..


நாட்டில் தேவையில்லாத குழப்பத்தை மட்டுமே உண்டு பண்ணியிருக்கிறது.


அது ஒரு தகுதிதேர்வே அல்ல!


அது ஒரு போட்டித்தேர்வும் கூட அல்ல!


✓பாடத்திட்டமே சமமாய் இல்லை.

✓பயிற்சி மையங்கள் மட்டுமே பணம் சம்பாதிக்கின்றன.

✓பள்ளிகளின் பாடமுறையும் தேர்வுமுறையும் மதிப்பெண் சான்றும் மதிப்பிழந்து போகிறது.

✓குறைந்தபட்ச தேர்ச்சி முறையால் தேர்வாகிற செல்வந்த வீட்டுப்பிள்ளை கல்லூரியில் சேர்வான். ஆனால் தேர்ச்சி பெற்ற ஏழை பிள்ளை பணம் இல்லாமல் கல்லூரிக்குள் நுழைய முடியாது.

✓நீண்டகால மருத்துவ படிப்பு,, நீட் நுழைவுத்தேர்வினால் மேலும் ஓரிரு வருடங்கள் நீளுகிறது. இதனால்  ஒரு தசாப்த காலம் இயல்பான மனிதவாழ்வின் விழுமியங்களை மருத்துவமாணவர்கள் இழக்க நேரிடுகிறது.


பயிற்சி மையங்கள் எல்லாமே படிக்கிற பிள்ளைகளை பந்தைய குதிரைகளாக்கி பணம்பெற்றுகொண்டு சூதுசெய்கிற சூதாட்ட மையங்களே அன்றி அவை கல்வி நிலையங்கள் அல்ல என்பதை பெற்றோர்கள் முதலில் உணரவேண்டும்.


பணம் கொடுத்தால் பணம் கட்டினால் எந்த பட்டமும் வாங்க முடிகிற ஒரு நாட்டில்.. அதை ஒழிக்கிற வழிகளை தேடாமல் 

சும்மா தேர்வு வைக்கிறேன் தரமான ஆட்களை தேர்ந்தெடுக்கிறேன் என்பதெல்லாம் பூச்சாண்டி காட்டுகிற வேலை.


ராணுவம்...

உள்கட்டமைப்பு..

இவற்றுக்கு நிகராக இன்னும் சொல்லப்போனால் இவற்றைவிட அதிகமாகவே கல்வித்துறைக்கு செலவுசெய்தும்கூட

அதன் முடிவு தரமில்லை.. ஆதலால் நுழைவுத்தேர்வு வைத்து தரப்பரிசோதனை செய்கிறோம் என்றால்.. பின் எதற்கு அந்ததுறைக்கு கோடிக்கணக்கில் முதலீடு?


கல்வித்துறையை சீர்திருத்தம் செய்யுங்கள்..!

பாடங்களை அல்ல..


ஆசிரியர்களை தரமாக்குங்கள்..!

அவர்களின் சம்பளங்களை அல்ல.


தேர்ச்சி விழுக்காட்டை அதிகரியுங்கள்..!

தேர்வுகளை அல்ல..


அதிகாரத்தை பரவலாக்குங்கள்..!

அடக்குமுறையை அல்ல.


ஒற்றுமையை வளர்த்தெடுங்கள்..!

ஒற்றைத்தன்மையை அல்ல.


சூரியராஜ்

தென்றல் இதழ் 32

1 Comments

  1. 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு நீட்டுக்காக இரண்டு வருடம் பயிற்சி மையத்தில் பல லட்சம் கொடுத்து படிக்க வேண்டும். அப்படி படித்தவர்களுக்கும் டாக்டர் சீட் உறுதி இல்லை. இரண்டு வருட செலவுக்கு பிறகு மீண்டும் டிகிரி படிக்கும் 4 பேரை என் வாழ்க்கையிலேயே பார்த்து இருக்கிறேன். இது எல்லாம் தேவையா?.மாநில பட்டியலில் உள்ள கல்வியை மத்திய அரசு கபளீகரம் செய்ய அனுமதிக்க கூடாது.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு