Trending

நாடகம் சொன்ன பாடம் சிறுகதை

 


"மாட பாக்காம அங்க என்னடா வெட்டி முறிக்குற" ஆத்திரமுடன் கேட்டார் சாமி கண்ணு


"ஐ….ஐயா… இதோ வந்துட்டங்க" காதில் இருந்த போனை இடையில் சொருகிக்கொண்டு வேகமாக வந்தான் பண்ணை வீட்டு வேலைக்காரன் கோவிந்தன்.


"எலே கோவிந்தா… உன்ன நம்புனா என் பால் வியாபாரம் மொத்தமா கோவிந்தா ஆகிடும் போலயேடா" சாமி கண்ணு சிரித்தார்


"ஐயா என்ன மன்னிக்கனுங்க… நாளைக்கு அவ வீட்டு ஆளுங்க சீர் வைக்க வராக… பழம் ஸ்வீட்டு காய்கறிலாம் வாங்கியாற சொல்றா… பணம் இல்லிங்க…. அததான் சொல்லிகிட்டு இருந்தேன்…. வட்டிக்கு வாங்க சொல்றா"


"நீ யான்டா வட்டிக்கு வாங்குற… நம்ப 'பொடி'பய சாத்துகிட்ட போ… நா ஜொன்னேன்னு ஆயிரம் வாங்கிக்கிக்க…. நாளைக்கு மச்சான அசத்து… போதும்ல" சாமி கண்ணு மீசையை வருடிக் காட்டினார்


"போதும்கய்யா… ரொம்ப நன்றிங்க" கோவிந்தன் கூனி கும்பிடு போட்டான்


சாமி கண்ணு ஊர் பெரியவர். ஊரில் ஏதும் தப்பு தண்டா நடந்தால் கூட காவல் நிலையத்திற்கு பதில் பண்ணையார் வீடு தான் ஆஜர் இடம். அத்தனை சுத்தமானவர், நியாயஸ்த்தர். எந்த பிரச்சனையாய் இருந்தாலும் 10 நிமிடம் தான். அதும் பணம் விஷயமாக இருந்தால் கொஞ்சம் கூட தாமதம் இருக்காது. அள்ளி கொடுத்து அப்போதே பிரச்சனையை தீர்ப்பார்.


"அண்ணா… அண்ணா… இங்க இருக்கீயா"


அப்போது கொல்லை புறம் நின்று கொண்டிருந்த இருவருக்கும் சின்ன பண்ணையார் மாணிக்கத்தின் குரல் கேட்டது.


"யார்ரா… தம்பீயா" சாமி கண்ணு குரலை உயர்த்தினார்.


கோவிந்தன் பணிவாக அருகில் வந்து 'ஆமாங்கய்யா அவர்தான்' என்றான்.


"ஏன்டா அங்கீயே நிக்குற… உள்ள வா" மீண்டும் குரலை உயர்த்தி கூறினார் சாமி கண்ணு.


வேலியை நகர்த்தி வைத்துவிட்டு கொல்லையுள் நுழைந்தார் மாணிக்கம்.


மாணிக்கம் நெருங்க நெருங்க மாட்டை கவனிப்பதுபோல் அவ்விடத்தை விட்டு அகன்றான் கோவிந்தன்.


"என்னாச்சு மாணிக்கோம் மூஞ்சி வாடிருக்கு"


"ஏமாத்திட்டாங்கண்ணா…. ஏமாத்திட்டான்"


"யாரு என்ன ஏமாத்துனா விரிய சொல்லு"


"முக்கு தெருவுல இருக்கானே… அந்த காதரு வெளங்காத பய… அவந்தாண்ண நம்பள ஏமாத்திட்டான்"


"கடன் வாங்கி இருந்தானே அவனா"


"அவனே தான்ண… அந்த அயோக்கிய பய தான்"


"ச்சே… நிறுத்துடா… சும்மா பேசிகிட்டே போற… அவன் தான் உனக்கு அந்த பணத்த தரதா சொல்லிட்டானாம்ல… அப்பறம் என்ன கேடு"


"என்ன அண்ண நீயும் வெளங்காம பேசுற….நம்ப அப்பன் அவனுக்கு இருபது வருசத்துக்கு முன்னாடி பத்தாயிரம் கடன் கொடுத்துருக்குறாரு… ஆனா இப்பவும் அவன் நமக்கு பத்தாயிரம் தான் தரதா சொல்றான்… நீ வேற" 


"வட்டியாடா போடுற" சாமி கண்ணு ஆத்திரமடைந்தார்.


"அண்ண… சும்மா சும்மா கோபப்படாத… நா சொல்றத கொஞ்சம் கேளு… நம்ப அப்பன் அவனுக்கு பத்தாயிரம் ரூபா கடன் கொடுத்தார். அந்த பணத்த வச்சி அப்போவே அவன் செல்லக்கண்ணு தோட்டத்துல ஒரு பெரிய பாகத்த வாங்கி போட்டான். இப்ப அந்த லேண்டோட ரேட் என்னா தெரியுமா?"


"என்னடா?"


"இருபது லட்ச ரூபா"


சாமி கண்ணு அதிர்ந்து போனார்.


"இது மட்டுமா…. இப்ப நம்ப ஊருல தியேட்டரே இல்ல… ஏதோ வெளியூர்லேந்து வந்த ஒரு பைத்தியக்காரன்… இந்த எடம் தான் அமைவா இருக்கு… இந்த எடத்த எனக்கே கொடுங்க… எவ்ளோ வேணாலும் தரேன்னு காதர் வீட்டு வாசலாண்டையே குதியா குதிச்சுகிட்டு இருக்கானாம்… அதுக்கு அந்த பாய் துரை என்ன தெரியுமா சொல்லி இருக்காரு"


"என்னடா சொன்னான்?"


"நிலத்தை யெல்லாம் தரமுடியாது…. வேணா தியேட்டர கட்டிக்கோங்க… மாசமாசம் வாடகைய கொடுத்துடுங்கன்றானாம்"


"எவ்ளோடா வாடகை கேக்குறானாம்"


"அம்பதாயிரமாம்"


"அநியாயம்டா மாணிக்கம்… அநியாயம்"


"இப்ப புரியுதா…நான் என்ன சொல்றேனு…. அப்போவே நம்ப அந்த பத்தாயிரத்த வச்சி ஒரு தியேட்டர கட்டி போட்டுருந்தோம்னா… இந்நேரம் நம்ப கோடீஸ்வரனாகி இருந்துருப்போம்… இத்தன நாளா அந்த பத்தாயிரத்துக்கு ஈடான பணத்த கொடுக்காம நம்ம குடும்பத்தோட வளர்ச்சியையே கெடுத்துபுட்டான் அந்த காதரு"


சாமி கண்ணு கொஞ்ச நேரம் யோசிக்கலானார்


"சரிடா தம்பி… இப்போ நா என்னா செய்யனும்… அத சொல்லு"


"அப்புடி கேளு… இதுக்குத்தான் நா ஒரு வக்கீலுகிட்ட போனேன்…. நடந்த கதையெல்லாம் சொன்னேன்… அவரு உங்க அப்பா காலத்துல பத்தாயிரம்னா அதோட மதிப்பு இப்ப ஒரு லட்ச ரூபா இருக்கும்னு சொன்னாரு…. அப்றம் ஏதோ ப்ராமிசரி நோட்டாமே…. பத்தாயிரம் கொடுத்துபுட்டு அவங்கிட்டேந்து நம்ப பணம் ஒரு லட்சத்த வாங்க முடியாது பாரு…. அதனால இதுல ஒரு லட்ச ரூபாய் தான் தந்துருக்கோம்னு எழுதியிருக்கு… நீ நாம கொடுத்ததுக்கு ஒரு சாட்சி சைன் மட்டும் போடு போறும்"


"டேய் மாணிக்கோம்… ஏதேதோ சொல்ற… அவனும் நம்மள ஏமாத்திபுட்டானுதான் எனக்கும் படுது…. நீ சொல்றேன்னு சைன போடுறேன்…. ஆனா பின்னாள கோர்ட் கேஸ்னு ஏதும் வந்தா நா அலையமாட்டேன் பாத்துக்க"


"அதெல்லாம் ஒன்னும் வராது…. நியாயம் நம்ம பக்கம் இருக்குறப்ப நீ ஏண்ணா பயப்புடுற…. போடுண்ண போடு"


மனமே இல்லாமல் சாமி கண்ணு ப்ராமிசரி நோட்டில் சாட்சி கையெழுத்து போட்டார். மாணிக்கமும் அதை வாங்கி கொண்டு வேக வேகமாக அவ்விடத்தை விட்டு அகன்றார்.


கோவிந்தனும் மாட்டுக்கு வைக்கோல் போட்டு விட்டு தண்ணீர் காட்டிவிட்டு மீண்டும் பண்ணையாரை பார்க்க வந்தார்.


"ஐயா…. நா போகட்டும்களா?"


"ம்..ஆ...வா வா… கோவிந்தா… கொஞ்சம் இங்க வந்து உட்கார்… பேசுவோம்"


கோவிந்தனும் தன் இடையில் கட்டியிருந்த சிகப்பு துண்டை மணல் மேல் விரித்து போட்டு அமர்ந்து கொண்டான்.


"டேய் கோவிந்தா… என் தம்பி நல்லவன் தான்டா… ஆனா பணத்தாசையால பாவமும் பண்றானு தோணுது… மறைக்காம சொல்லு…. என் தம்பி ஊருக்குள்ள வட்டிக்கு விட்டு வாங்குறான்ல"


கோவிந்தன் லேசாக தயக்கமடைந்தான்.


"அ..அ..ஆமாங்கய்யா… நா கூட நாளைய செலவுக்கு அவர்கிட்ட தான் வாங்கலாம்னு இருந்தேன்" 


"எங்க அப்பாவும் வட்டிக்கு விட்டவரு தான்டா… இப்ப இவனும் செய்யுறான்… பாவம் டா இது"


சாமி கண்ணு ஒரு பெருமூச்சு விட்டார்.


"ஐயா… நா சொல்றேனு தப்பா நினைக்காதீங்க…. இவ்ளோ நேரம் நீங்க பேசிகிட்டு இருந்தத கேக்காம இருக்க முடியல… எனக்கென்னமோ இன்னிக்கி பாவம் செஞ்சது உங்க தம்பீனு தோணல… நீங்க தான்"


பண்ணையாரின் கண்கள் விரிந்தன


"என்னடா சொல்ற கோவிந்தா… நா பாவம் பண்ணவனா?"


கோவிந்தன் சட்டென எழுந்து கூனி கைகளை கூப்பினான்.


"ஐயா… என்ன மன்னிக்கனும்… எனக்கு என்னமோ அப்புடிதானுங்க தோணுது"


"எப்புடி தோணுது… சொல்லு சொல்லு" ஆத்திரமுடன் கேட்டார் சாமிகண்ணு


"ஐயா… நேத்தி கவிதா சபால மகாபாரதம் நாடகம் போட்டாங்க ஐயா…, அதுல பாஞ்சாலி புடவைய துரியோதன துச்சாதனன உருவ சொல்றாங்க"


"இந்த கதைலாம் எனக்கும் தெரியும்… இதை ஏன் இப்ப சொல்ற"


"ஐயா சொல்றேனுங்க… துரியோதனன் தரப்புலேந்து பாத்தா அவங்கிட்ட தர்மம் இருக்குங்க… அதே மாதிரி அர்ஜூன தரப்புலேந்தும் பாத்தா அவங்கிட்டயும் தர்மம் இருக்குங்க… ஆனா துரியோதன தரப்புல ஆண்டவன் இல்லைங்க…"


"யோவ்… கோவிந்தா… இதுக்கும் நா பாவம் பண்ணதா நீ சொன்னதுக்கும் என்னயா சம்மந்தம்"


"ஐயா சொல்றேனுங்க… சூதாட்ட மண்டபத்துல பீஷ்மர் இருந்தாருங்களா…. நடக்குறது தப்புனு அவருக்கு நல்லாவே தெரியும்ங்க…. ஆனா அந்த தப்பை அவர் தடுத்து நிறுத்தல…."


சாமி கண்ணுவின் கண்கள் சுருங்கியது.


"ஐயா?" கோவிந்தன் மேல் வினவ, தொடரு என்றபடியான கை சைகையை காட்டினார் சாமி கண்ணு.


"இல்லிங்கையா… இப்போ நீங்களும்… இதே தப்ப தான்யா பண்ணி இருக்கீங்க…. உங்க தம்பி பண்றது தப்புனு உங்களுக்கு தெரிஞ்சும்… அத தடுக்காம அதுக்கு தொண போய்ட்டீங்களே ஐயா"


"கோவிந்தா… இல்லப்பா நா தொண போகலப்பா… அவன் புறப்படும் போது கூட ஏதாவது கோர்ட் கேஸ் வந்தா நா வர மாட்டேன்னு சொல்லி தான்யா அனுப்ச்சியிருக்கேன்"


"ஐயா நீங்க பின்னாடி நடக்க போறத பத்தி யோசிக்கிறீங்க…. நான் இப்போ நடக்கப் போறத சொல்றேன்… நீங்க ஒரு லட்சம் தான் கொடுத்தோம்னு சாட்சிக்கு கையெழுத்து போட்டதால… உங்க தம்பி ஒரு லட்சம் தான் கொடுத்தோம்னு சாதிப்பாரு…. காதரும் எங்க நீங்க கோர்ட்டுக்குலாம் வந்து சாட்சி சொல்லிடுவீங்களோனு பயந்து… ஒரு லட்ச ரூபாயும் கொடுத்துட்டா… ஐயா சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க… அந்த பாவ காசு தான் உங்க தம்பிக்கு போகும்… பாவமெல்லாம் உங்களுக்குத்தான் வரும்…."


"என்னப்பா… இப்புடி சொல்ற… என்னதான் இருந்தாலும் தம்பிகிட்டயும் விரோதமா நடந்துக்க கூடாதுல"


"ஐயா… உங்க தம்பிகிட்ட நீங்க நீ பண்றது தப்புயானு சொல்றது விரோதமாகாதுங்க…. ஊரே உங்ககிட்ட வந்தா நியாயங் கிடைக்கும்னு நம்புறாங்க… உங்க தம்பிகிட்ட விரோதம் ஆகக்கூடாதுனு… உண்மைக்கு விரோதம் ஆகலாங்களா… இது நியாயமா எனக்கு படலைங்க"


சாமி கண்ணுவின் முகம் வாடிப்போனது. ஒரு நெடிய பெரு மூச்சே அந்த நிசப்தத்தில் கேட்கலாயின. கோவிந்தன் தொடர்ந்தான்,


"ஐயா… இப்பவும் ஒன்னும் சங்கடம் நடந்து போய்டலைங்க… உங்க தம்பி கிட்ட போயி இதெல்லாம் தப்புனு எடுத்து சொல்லுங்க… பத்தாயிரம் கொடுத்துட்டு ஒரு லட்சம் கொடுத்ததா பத்திர பதிவு பண்ணி கவர்மெண்ட்ட ஏமாத்தலாம்ங்க… ஆண்டவன முடியாது…"


சாமி கண்ணு எழுந்தார். கோவிந்தனை ஒரு கணம் ஏற இறங்க பார்த்தார்.


"கோவிந்தா… அடுத்தமுறை நீ ஏதும் நாடகம் பாக்க போனா என்னையும் உன்னோட கூட்டிட்டுப்போ…. இப்போ நா காதர் வீட்டுக்கு போறேன்"


சாமி கண்ணு கைகளை பின்னே கட்டிக்கொண்டு முக்கு தெரு பக்கம் நடக்கலானார்.


கோவிந்தனும் சாத்தனிடம் ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு காய்கறி கடைப்பக்கம் சென்று கொண்டிருந்தான். அதற்கு அடுத்த தெருவில் உள்ள கவிதா நாடக சபாவில் அடுத்த வார நாடகத்திற்கான ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. அங்கே,


உண்மைக்கு விரோதமில்லாத மார்க்கண்டேயனுக்கு முன்னே எமன் கைகூப்பி மண்டியிட்டு அமர்ந்திருந்தான். பின்னே ஈசன் புன்னகையோடு நின்று கொண்டிருந்தார்.


தீசன்

தென்றல் இதழ் 35

1 Comments

  1. ந்ல்ல கதை படிக்க உண்மை உணர்ந்தேன்.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு