Trending

காலத்தினால் செய்த முதலுதவி

 


அன்று கல்லூரியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு மாணவிக்கு வலிப்பு வந்தது. உடனே அவர் அருகில் இருந்த சக மாணவர்கள் அவரை தாங்கி பிடித்தனர். என் பின்னே அமர்ந்திருந்த மாணவரை துறை தலைவரை அழைக்கும்படி ஆசிரியர் ஆணையிட அவரும் ஓடிச்சென்று துறைத்தலைவரை அழைத்து வந்தார். அதற்கிடையில் அவசர ஊர்திக்கும் (108) அழைப்பு செய்யப்பட்டுவிட்டது. வந்த துறை தலைவர் அந்த மாணவியை சூழ்ந்த மாணவிகளை அப்புறப்படுத்தாது அவரும் காற்றை விடாமல் அடைத்துக்கொண்டு நின்று அந்த மாணவிக்கு பால் கொடுக்க வேண்டும் என்றார். பின் யாராவது ஒருவர் கையை அந்த மாணவியின் பல்லுக்கிடையில் வையுங்கள் அப்போது தான் பல்லு கட்டிக்கொள்ளாமல் இருக்கும் என்றார். நான் அருகில் இருந்த என் நண்பனிடம் எனக்கு தெரிந்த வகையில் 'என்னடா காத்த விடாம அடைச்சிக்கிட்டு நிக்கிறாங்க?' என்று ஒரு ஊகமாகவே கேட்டேன். 'அதனால என்ன? சரி ஏன் பல்லுக்கு இடையில கைவைக்க சொல்லுறாங்க?' என்று அவர் என்னை நோக்கி கேள்வி கேட்டார். இதற்கிடையில் அவசர ஊர்தியும் வந்து அந்த மாணவியை அழைத்து சென்றது. அப்போது தான் நான் ஒன்றினை கவனித்தேன். எதை எதையோ பற்றி ஒருவாறு தெரிந்து வைத்திருக்கும் நாம் முதலுதவி செய்வது பற்றி ஒன்று கூட தெரியாமல் இருக்கிறோமே! என்று என்னையே நான் வருத்திக் கொண்டேன். அதனால் உங்களுடன் சேர்ந்து முதலுதவியை பற்றி அறிவதே இந்த கட்டுரை… 


முதலுதவி செய்யாமல் இருப்பதாலும், தவறாக முதலுதவி செய்வதாலும் தான் ஒர் உயிரை காப்பாற்ற முடியாமல் போகிறது என்று பல அவசர சிகிச்சை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், முதலுதவியில் எப்படி செய்ய வேண்டும். எப்படியெல்லாம்  செய்யக்கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.


தீடீர் மாரடைப்பு ஏற்பட்டால்?


மாரடைப்பு ஏற்பட்டு மயக்க நிலையில் இருப்பவரை முதலில் சம தள தரையில் படுக்கவைக்க வேண்டும்.  பொது இடத்தினில் யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டு மயக்கநிலையில் விழுந்தால் கூட்டத்தை கூட விடாமல் செய்வது நன்று. அருகில் இருப்பவரை அவசர ஊர்தி எண்ணுக்கு அழைக்கும் படி கூறிவிட்டு. பின் அவருக்கு இன்னும் இதய துடிப்பு இருக்கிறதா? என்பதை அறிய உங்கள் கையின் இடை மூன்று விரல்களை பாதிக்கப்பட்டவரின் முன்கழுத்தில் உள்ள எலும்புக்கு அருகில் உயிர்நாடியில் வைத்து குறைந்தது 5 நொடிகள் - அதிகபட்சமாக 10 நொடிகளுக்கு கீழ் எவ்வாறு இதயதுடிப்பு இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அப்படி இதய துடிப்பும் மூச்சும் இல்லை எனில், உங்கள் ஒரு கை மீது இன்னொரு கையை வைத்து அவர் நெஞ்சின் நடுப்பகுதியில் நம் முழு பலத்தையும் போட்டு அழுத்த வேண்டும். அழுத்தும் போது மிகவும் வேகமாகவும் அங்கும் இங்கும் கையை நகத்தாமல் 30 முறை அழுத்தினாலே அவர் இதயத்தை நீங்கள் இயக்க வைத்து அவர் உயிர் பிழைக்க செய்ய முடியும். நினைவு திரும்பிய அவரை சுவரில் சாய்த்து அவரின் பதட்டத்தை போக்கும் வகையில் பேசி நம்பிக்கை அளிக்க வேண்டும். அப்படி ஒருவேளை அவர் எழவில்லை என்றால் தொடர்ந்து நெஞ்சில் கைவைத்து அழுத்த வேண்டும். 30 அழுத்திற்கு பிறகு அவருக்கு மூச்சு கொடுக்க அவர் வாயில் உங்கள் வாயினை கொண்டு மூச்சு கொடுக்க வேண்டும் பின் திரும்பவும்  அழுத்த  வேண்டும். அருகில் ஒருவர் துணைக்கு இருப்பின் அவரை  செய்ய சொல்லிவிட்டு நீங்கள் தொடர்ந்து அழுத்த வேண்டும்.  1 நிமிடத்திற்கு 120 முறை அழுத்த வேண்டும் அவர் மூச்சு வந்த உடன் தான் அழுத்துவதை நிறுத்த வேண்டும். இந்த சிகிச்சை முறையை CPR என்று அழைக்கின்றனர். மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு 15 நிமிடங்களுக்குள் முதலுதவி சிகிச்சை தொடங்கினால் அவரை காப்பாற்ற மிக‌ அதிக வாய்ப்பு உள்ளது. 15நிமிடமோ அல்லது அதை தாண்டி 30 நிமிடமோ ஆகி  சிகிச்சை செய்தால் காப்பற்ற வாய்ப்பு குறைவு என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.


வலிப்புக்கு முதலுதவி செய்வது எப்படி?


வலிப்பு வந்தவரை அவர் எங்கும் அருகில் இடித்துக்கொள்ளாதவாறு திறந்த இடத்தினில் கொண்டு வந்து அவரை ஒரு புறமாக சாய்த்து படுக்கவைக்க வேண்டும். உடனடியாக அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்துவிடவும் ,  அவர் கையில் சாவியோ அல்லது இருப்பு பொருள் எதுவும் கொடுக்கவே கூடாது. அவர் வாயில் எதாவது மரகட்டையை துணியில் சுற்றி, அவர் மூச்சு விடுவதை பாதிக்காத வண்ணம் மேல் கீழ் பல் வரிசைக்கு இடையில் வைக்கலாம். உங்கள் கையை வைக்க கூடாது. அப்படி வைத்தால் அவர் உங்கள் கையை கடித்து உங்களுக்கு காயம் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. வலிப்பு நிற்கும் வரை கூட்டம் கூடாது காற்றோட்டமான நிலையில் வைத்து அவரை கவனித்து கொண்டே இருக்க வேண்டும். வலிப்பு நிற்க 5 நிமிடம் கூட ஆகலாம். வலிப்பு நின்றதும் அவரை தைரிய படுத்தும் வகையில் பேச வேண்டும். அவருக்கு தண்ணீரோ அல்லது உணவோ மருத்துவரின் ஆலோசனை கேட்ட பின்னே தர வேண்டும். அவர் நினைவு திரும்பாமல் இதய துடிப்பு நிற்க்கும் சூழ்நிலை ஏற்பட்டால் மாரடைப்புக்கு  சொன்ன CPR சிகிச்சை முறையை செய்யவும்.


தீ காயம் ஏற்பட்டால்?


தீ காயம் ஏற்பட்டால் அந்த காயப்பட்ட இடத்தினில் தண்ணீரை கொண்டு குளிர வைக்க வேண்டும். Ink, மஞ்சள் தூள், தோசை மாவு ஆகியவற்றை எல்லாம் வைக்க கூடாது!. அது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்கிறனர் மருத்துவர்கள். சூடான தண்ணீரோ அல்லது எண்ணெய் பட்டாலோ தண்ணீர் கொண்டு முதலில் அந்த இடத்தை குளிரவைத்துவிட்டு பின் மருத்துவரிடம் உடனே செல்ல வேண்டும்.


பாம்பு கடித்தால்?


பாம்பு கடித்தவுடன் சினிமாவில் வருவது போல கடித்த இடத்தில் உறிஞ்சி விசத்தை எல்லாம் எடுக்க முடியாது!. கடிபட்ட இடத்தின் மேல் கயிரோ அல்லது வேறு எதை வைத்தும் கட்டக்கூடாது!.  கடிப்பட்ட இடத்தினை அசைக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதே நல்லது.


விபத்து ஏற்பட்டால்?


முதலில் அவசர ஊர்தி எண்ணுக்கு தகவல் தெரிவித்த பின்னர், அடிபட்டவர் வாகனத்தின் கீழ் சிக்கிக்கொண்டு இருந்தால் முதலில் வாகனம் இயக்க நிலையில் இருந்தால் அதன் இயக்கத்தை நிறுத்த வேண்டும். பிறகு அவரை பலவந்தமாக இழுக்காமல் தலையில் ஒரு கையும், அவர் பின்னங்கழுத்தில் ஒரு கையும், அவர் இடுப்பின் கீழ் ஒரு கையும், கெண்டைக்காலுக்கு இடையில் ஒரு கையுமாக நாலு பேர் தூக்கி அவரை ஒரு துணியின் மீது படுக்க வைக்க வேண்டும். அவருக்கு எலும்பு முறிவுகள் இருப்பின் அந்த இடங்களை தொடாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அவருக்கு அது மிகுந்த வலியை ஏற்படுத்தும். ரத்த போக்கு அதிகம் ஏற்பட்டால் அதை நிறுத்த துணியை வைத்து கட்டு போடலாம். அவர் மயக்கம் அடைந்து இதய துடிப்பு நின்றால் CPR சிகிச்சையை முயற்சி செய்ய வேண்டும். அவருக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பேச வேண்டும்.


"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது"


ஆதலால் முதலுதவியை கூச்சம், அச்சம் இன்றி காலத்தால் செய்து ஒர் உயிரை காப்பாற்றுவோம்!.


குகன்

தென்றல் இதழ் 29

2 Comments

  1. பெரும்பாலானவர்கள் அறியாத கருத்தை அறிய வைத்தமைக்கு பாராட்டுக்கள்.முயற்சி தொடரட்டும்.

    ReplyDelete
  2. அருமையான தகவல்

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு