Trending

ஞானரதம் | அத்தியாயம் 4

 

"மன்மதனுடைய பிம்பத்துக்கருகே ரதி பிம்பத்தைக் காணோமே?" என்று கேட்டேன்.


"அது கந்தர்வ உலக ரகசியம். உன்னிடத்தில் சொல்லக் கூடாது" என்றாள்.


"நானும் தற்காலத்திற்கு கந்தர்வனென்பதை நீ மறந்து விடுகிறாய்!"


"அப்படியானால், நீ யோசனை செய்யும் விஷயத்தில் உனக்கே விளங்கும். அது போகட்டும். சற்றுக் கீழே இறங்கி நான்றாக எல்லாவற்றையும் பார்ப்போம், வா. இங்கிருந்து பேசிக் கொண்டிருப்பதை விட அங்கே போய்ப் பார்ப்பது நலம்" என்றாள். சற்றுக் கீழேயிறங்கி அத்திருவிழாவின் வினோதங்களையெல்லாம் பார்த்தோம். இப்புறம், மன்மத சிலைக்குப் பூஜைகள் நடந்து கொண்டிருந்தன; அப்புறத்திலே மன்மதன் தகன கதை, அவன் திரும்பவும் உயிர்த்தெழுந்த பருவம் வரை, சிலை வடிவ காட்சிகளாலும், சித்திரக் காட்சிகளாலும் நன்கு விளக்கப்பட்டிருந்தது.


வசந்த காலம் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். யதார்த்தத்திலேயே கந்தர்வ நாட்டில் அப்போது வசந்த காலம். அதுபற்றியே காமன் திருவிழாக் கொண்டாடினார்கள். எனவே, கந்தர்வச் சிற்பர்களின் அற்புதத் தொழிலுக்குப் கலை தேவியும் துணைபுரிவாளாயினள்.


பாடுகின்ற குயில்கள், மலர் புனைந்த மரங்கள், வாவி, கூடி விளையாடும் மான்கள், வண்டுகள் முதலாகத் தென்றல் கொண்டு வரும் மெல்லிய மகரந்தத்தூள் வரை, வசந்த காலத்தின் காட்சிகளெல்லாம் உண்மையினும் உண்மையாகத் தோன்றின. அங்கு, தேவதாரு மரங்களால் அமைக்கப்பட்ட ஒரு பெரிய மண்டபத்தில் சூரிய காந்தக் கல் மேடையில் உட்கார்ந்து, சித்தத்தை அடக்கிய நிலையில் நிறுத்தி, முக்கண்களின் பார்வைகளையும் மூக்கின் நுனியிலே செலுத்தி அலையோய்ந்த சமுத்திரம் போல அசைவற்றிருந்த சிவபெருமானின் உருவச்சிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.


எதிரே, தவத்தால் மெலிந்த அழகிய தேவதை வந்து நிற்பது போல, தவவேடங் கொண்ட பார்வதிதேவி நின்று அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள். அவளுக்குப் பின் பக்கத்திலே மதனன் தனது கரும்பு வில்லில் நாணேற்றிப் மலர் பாணம் தொடுத்துக் காத்து நிற்பதுபோல ஓர் உருவம் நின்றது.


மற்றொரு திசையிலே, மன்மத தகனம் சித்திரித்துக் காட்டப்பட்டிருந்தது. பின்புறமாகத் திரும்பி, சத்திய தேவதை கொடுங் கோபத்தில் நிற்பது போலப் பரமசிவன் முகத்திலே கோபத்தழல் பொங்க நிற்பதும், அவனது நெற்றியிலுள்ள 'ஞான' விழியினின்றும் தீ வெள்ளமாகப் பாய்ந்து மன்மதனுடைய உருவில் நெருப்புப் பற்றி எரியும் காட்சியும் எழுதியிருந்ததைப் பார்த்து என் மனதிலே நடுக்கமுண்டாயிற்று. பர்வதகுமாரியின் கையோடு கோத்திருந்த எனது கையைப் படீரென்று பிடுங்கிக் கொண்டேன்.


பர்வதகுமாரி கடகடவென்று நகைத்து, "சித்திரத்துக்கு அஞ்சுகிறாய்!" என்றாள். அது வெறுஞ் சித்திரந்தான் என்று என் மனதில் உறுதி செய்துகொள்ள முடியவில்லை. கோயிலிடையில் மதன வடிவத்தில் அருகே ரதி உருவம் காணாவிடினும், இங்கே அவனது எரியும் உடலருகே ரதிதேவி, ஆ!! என்று கதறி நிற்பதுபோல எழுதியிருந்தது. அவள் முகத்தில் - உடல் முற்றிலும் - காணப்பட்ட சோகத்தையும் பரிதாபத்தையும் என்னால் வருணிக்க முடியாது. கந்தர்வச் சிற்பனுடைய சித்திர கருவி எங்கே? எனது பேதை எழுதுகோலெங்கே? எத்தனைக் கெத்தனை!


மற்றொரு திசைதனில், சிவனுக்கும் விவாகம் முடிந்து பார்வதி பாகனாக விளங்குகிறார். ரதிதேவி வந்து வணங்கி நிற்கின்றாள். சிவன் புன்னகை பூத்து அருள் புரிய, மதனன் சாம்பலிலிருந்து மீண்டும் உயிருடன் எழுந்து சிவனையும் பார்வதியையும் முடியால் வணங்கிக்கொண்டு கையினால் அவ்விருவரின் மீதும் அம்புகள் தொடுக்கின்றான். பார்வதி ஐயனைத் தழுவிக்கொள்ளுகின்றாள். இவ்வாறு மதனன் கோயிலிலே இருக்கும் ஒவ்வொரு காட்சியின் முன்னேயும் கந்தர்வ மக்கள் வந்து பலவாறாகத் தொழுது கொண்டிருந்தனர்.


சில பெண்கள் கையில் யாழ் வைத்துக்கொண்டு பாடினர். ஒரு பக்கத்தில் வாலிபரும் மாதர்களும் இணையிணையாகப் பலவிதக் கூத்துக்களாடி ஓர் வளையமாகச் சுற்றிக் கொண்டிருந்தனர்.


ஒரு திசையில் ஒரு வாலிபனும் யுவதியும் ஒருவரை ஒருவர் நோக்கி அப்படியே மயங்கிப் பொம்மைகளைப் போல நின்று கொண்டிருந்தார்கள். இஃதன்றிப் பல பல காட்சிகள். இன்னுமோர் புறத்திலே 'பறவைக் கூத்து' நடைபெற்றது. அவர்கள் அந்தரத்திலே ஆயிரம் விதமாக ஒருவரை யொருவர் சுழற்றிக்கொண்டு, அத்தனையிலும் இசை நெறி தவறாமல் கூத்திட்ட விந்தை சிறிதன்று, அக் கூத்துகளிலே ஒன்று மிகவும் நயமாயிருந்தது. இடையில் ஓர் யுவதி. அவளினின்று நான்கு முழுத் தொலை இடையிட்டு இரண்டு வாலிபர்கள் வண்டிச் சக்கரம் தனது குடத்தைச் சுற்றுவதுபோல மேலுங் கீழுமாய் வட்டமிடுவார்கள். ஒருவன் உச்சிமீது நிற்கும்போது மற்றொருவன் தாளின் கீழ் நிற்பான். இவளது கை திசையிலே அவ்வளவே தொலையிட்டு இரண்டு சுந்தரிகள் முளையைச் சுற்றித் திரிகை சுழல்வது போலச் சுழன்று கொண்டிருப்பார்கள். ஒருத்தி இடக்கைக்கு நேரே வரும்போது மற்றொருத்தி வலக்கைக்கு நேரே இருப்பாள். இங்ஙனம் சுற்றும்போது ஒவ்வொரு சுழற்சியிலும் இவ்விரண்டு சந்தி இடங்கள் ஏற்படுமல்லவா? அப்போது அவர்கள் முத்தமிடுவதுபோல இதழ்த்தொனி செய்வது, இடையில் நிற்பவள் வாசிக்கும் புள்ளாங்குழல் கீதங்களுக்குத் தாளமாகும். இப்படி ஆயிரம் சேர்ந்து ஒரு பெரிய வளையம்! அரைநாழிகை கழிந்தவுடனே, இந்தப் பாணி கழிந்து மற்றோர் பாணி.


"நேரமாய் விட்டது. நாம் கடற்கரைக்குப் போகலாம்" என்றாள் பர்வதகுமாரி. எனக்கு அந்தத் திருவிழாவை விட்டுப் பிரிந்து செல்ல மனமே இல்லை. ஆனால் பர்வதகுமாரியின் சொல்லைத் தட்ட யாருக்கேனும் மனம் வருமா?


பறந்து பறந்து கடலுக்கருகே வந்து சேர்ந்தோம். நெருங்கி வரவே, உள்ளுயிரிலே புகுந்து இனிய சலனங்கள் தருவதும், காரமில்லாத தழதழத்த இயற்கையுடையதுமான மனோகரத்தன்மை கொண்டதோர் சுகந்தம் புலப்பட்டது. குமாரி சொல்லியிருந்த சுகந்த மாளிகை சமீபித்து விட்டதென்பதை அறிந்து கொண்டேன். "இம் மாளிகைக்கு இத்தனை இனிய சுகம் எப்படி ஏற்பட்டது?" என்று நான் கேட்க வாயெடுக்கு முன்பாகவே அவள், எனது உள்ளக் கருத்தைத் தெரிந்து கொண்டு பின்வருமாறு கூறலாயினள்:-


"கஸ்தூரிக் கற்களாலும், தேவ சந்தன மரத்தாலும் இம்மாளிகை ஆக்கப்பட்டிருக்கிறது. அன்றியும், இதைச் சூழ்ந்துள்ள பூங்காவனத்திலே உங்கள் உலகத்தில் கண்டறியாத அதிக சுகந்தமுடைய பலவித மலர்ச்செடிகள் இருக்கின்றன" என்றாள்.


இங்ஙனம் பேசிக்கொண்டே, சுகந்த மாளிகையின் உச்சிமேடையில் போயிறங்கினோம். எங்களைப் போலவே இணையிணையாகப் பலர் அங்கே வந்திருந்து கடற்காட்சியை நோக்கிக் களித்துக் கொண்டிருப்பது கண்டேன். ஓர் ஓரத்திலே போடப்பட்டிருந்த இரண்டு ஆசனங்களில் போய் இளைப்பாற  சாய்ந்து கொண்டோம். அவ்வாசனங்கள் இலவம் பஞ்சுபோன்ற யாதோ ஒரு பொருள் பொதிந்தனவாய், வெண்பட்டால் மறைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சாய்ந்தவுடனே, தாயின் மடியிலே சாய்ந்ததுபோல உள்ளத்திற்கு ஆறுதல் உண்டாயிற்று.


எதிரே கடல், சந்திர கிரணங்களால் ஜோதியுயிர் கொடுக்கப் பெற்ற அலைகள். வெள்ளை மலர்கள் புனைந்து, மலர்க்குன்றுகள் கிடப்பது போலத் தோன்றிய கப்பல்கள். தூரத்திலே, அன்னங்கள் மிதப்பதுபோல மிதந்த இன்பப் படகுகள். மேலே, சந்திரன், வெள்ளி மேகங்கள்; இம் மேகங்களிலே சில வலைகள் பரப்பி யிருப்பதுபோலத் தோன்றும்; சில அலைகளடிப்பது போலிருக்கும்; ஒன்று பூச் சிதறியதுபோலத் தோன்றும்; கீழே மிதக்கும் படகுகளுக்கு வானக்கண்ணாடியிலே தோன்றும் சாயைகள் போலச் சில மிதந்து செல்லும். இனி, நட்சத்திரங்கள்! வானக் கடலிலே வெடித்தெழுந்த வயிரங்கள்! சிதறுண்ட இன்பங்கள்! வானப் பொய்கையிலே மனமெனும் சிறிய வண்டுபோல் ஒளித் தேன் குடிப்பதற்கமைந்த எண்ணில்லாத மலர்கள்! திசையென்ற அநந்த பொருளுடன், ஈசனறிவு என்ற அநந்த பொருள் தாக்கியபோது பொறித்தெழுந்த சுடர்ப் பொறிகள்.


படகுகளிலே இணையிணையாக கந்தர்வ இளைஞர்களும் பெண்களும், சிலர் பாட்டிலும், சிலர் ஆட்டத்திலும், சிலர் வாத்தியங்கள் வாசிப்பதிலும், களிப்பவராகி அலை முழக்கமாகிய இயற்கை பேரிகைக்கு இவர்கள் பலவிதங்களிலே துணை செய்வாராயினர். சந்திர கிரணங்களும் இவற்றிடையே மாறாப் புதுமை கொண்ட பொன் வண்டொலியிசைத்துக் கொண்டிருந்தன. கடற்காற்றோ, பர்வதகுமாரியின் நெற்றிமீதுள்ள குழற் சுருள்களுடன் விளையாடிக் கொண்டிருந்தது.


ஆ! உருவம் காந்தர்வமாக மாறிவிட்ட போதிலும், எனது ஜீவன் மானிட ஜீவனாதலால் இத்தனை இன்ப மிகுதியை என்னால் பொறுக்க முடியவில்லை. புலன்கள் திகைத்துப் போய் விட்டன. அறிவு மயங்கிவிட்டது. இன்பமாகிய கடலின் அலைகளிலே எனதுயிர் சிறிய நுரைபோல எற்றுண்பதாயிற்று. இன்பமாகிய புயற்காற்றிலே எனதுயிர் சிறு துரும்புபோலச் சுழல்வதாயிற்று. என்ன சுகந்தம்! என்ன இசை! என்ன காட்சி! பர்வதகுமாரியுடன் நான் ஏதேதோ, தொடர்பற்ற மொழிகள் பேசுவேனாயினேன். இன்பங்கள் அறிவினை அமிழ்த்தி விடவே, நா, கடிவாள மிழந்த காட்டுக் குதிரை போல, கண்ட கண்ட இடங்களில் செல்வதாயிற்று. இன்பம் தெவிட்டிப் போய்விட்ட தென்று நான் சொல்லவில்லை. நான் போக்தா (அனுபவிப்பவன்) ஆக இருந்தது போய், அது போக்தாவாகி என்னை விழுங்கித் தீர்த்து விட்டது. பேசிக் கொண்டிருந்தபடியே கண்ணயர்ந்து விட்டேன்.


சில பொழுது கழிந்ததின் பிறகு, விழிப்படைந்தேன். சூரிய உதய காலம். கடலும் வானும் கூடித் தழுவிய இடத்தில், அவற்றின் கூட்டத்திலே தோன்றிய ஜோதிக் குழந்தை போலப் பரிதி வட்டம் பிறந்தது; கிழக்குத் திசையில் வானமெங்கும் நெருப்புக் குழம்பு பறந்திருந்தது. தீப்பட்டெரியும் தீவுகள் போல மேகங்கள் காணப்பட்டன. மேகங்களுக்கு மனித புத்தி யுண்டென்று நினைக்கிறேன். தமது இருளியற்கையை மாற்றித் தம்மை ஒளியுடையனவாகச் செய்யும் சூரியனை இவைகள் அமுக்கிக் கொன்றுவிடப் போகின்றன.


"ஒருவருக்கொருவர் அன்போடு வாழுங்கள்" - "அன்பே சிவம்" - என்ற பெருந் தர்மத்தைக் கூறி யூத சாதியாரை ஒளிபெறச் செய்ய வேண்டுமென்று நாடிய கிறிஸ்து முனியை - தான் பிறந்ததால் யூத சாதிக்கே ஓர் புகழும் மாண்புங் கொடுத்த கிறிஸ்து முனியை யூத சாதியார் பகைத்துக் கொல்லவில்லையா? அதாவது, கொல்ல முயன்றார்கள்; அவர்களால் கொல்ல முடியவில்லை. கிறிஸ்து முனி இன்று வரை உயிரோடிருக்கிறார். தர்மத்தின் பொருட்டாகவும், மக்கள் மீதுள்ள அன்பின் பொருட்டாகவும், உலகத்தாரின் தூற்றுதல், உலகத்தார் செய்யும் இடையூறு என்ற சிலுவையில் ஏற்றுண்டு வருந்தும் ஒவ்வொரு மனிதனிடத்தேயும் கிறிஸ்துவே விளங்குகின்றார்.


எனக்கு அந்த மேகங்களைப் பார்க்கும்போது பாரிசேயர்கள் முதலிய யூதக் குருக்களின் நினைப்பு வந்தது. கணப்பொழுது. பின்பு அந்த ஜோதிக் கோளம் மேலெழுவதாயிற்று. இந்திரனின் வஜ்ராயுதங்கள் போலத் தோன்றிய தனது கிரணங்களால் அம் மேகங்களை உடைத்துச் சிதறி, எற்றி, அசைத்துக் குழப்பிப் புரட்டி ஓட்டித் தொலைத்துவிட்டு, பால சூரியன், மிகுந்த வெற்றிக் கோலத்துடன் கிரணங்களை உலக முழுவதிலும் பரப்பி. விடுதலை பெற்ற ஓர் பேருண்மை போல ஒளி வீசுவானாயினன். உலகம் மகிழ்ச்சி பெற்றது. கந்தர்வ மாதர்களெல்லாம் பூபாள ராகத்தில் காயத்ரி பாடித் துதித்தார்கள். (தொடரும்)


பாரதியார் 

தென்றல் இதழ் 29

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு