Trending

அத்தையே தோழி - குறுந்தொகை 22 | இலக்கிய கதை

 குறுந்தொகை 22

அத்தையே தோழி

kurunthogai-22-short-story-tamil


காலை ஐந்து மணிக்கெல்லாம் ஜோசப் பரிசுத்த பனிமலை மாதா பேராலயத்திற்கு புறப்பட்டான். அவன் வசிக்கும் பீட்டர் கோவில் தெருவில் இருந்து அந்த தேவாலாயம் சுமார் முன்னூறு மீட்டர் இருக்கும். அதனால் கால்நடையாகவே சென்றான். ஒர் அரைமணி நேரம் ஜெபத்தினை முடித்தவுடன்  தேவாலயத்தில் இருந்து எதிரே பரந்து விரிந்த கடற்கரை நோக்கி வந்தான். சூரியன் கடலில் முங்கி எழுவது போல தோன்றிய காட்சி அவனது மனதை சற்றே இதமாக்கியது. அந்த கடலை குறித்து அழகிய வர்ணனைக் காட்சிகள் மனதில் எழுந்தாலும் மீண்டும் மீண்டும் மனமோ வருத்தத்தையே நாடியது. சில நிமிடங்கள் கடற்கரை மணலில் நடந்துவிட்டு வீட்டை நோக்கி புறப்பட்டான். வீட்டின் உள் இவன் நுழையும் போது கடிக்காரம் மணி ஆறைக் காட்டியது. உள்ளே தனது அறையை நோக்கினான், அவன் மனைவி எபிரேயாள் இன்னும் கண்விழிக்காமல் தூங்கிக் கொண்டிருந்தாள். ஒர் அசட்டு சிரிப்பு சிரித்து விட்டு கொல்லைப்புறத்தை நெருங்க அங்கு அவன் தாய் மேரி விறகு அடுப்பை எரிய வைத்துக்கொண்டு புகையினால் இருமிய படியே ஜோசப்பை பார்த்து "இருப்பா காபி போட்டு எடுத்துட்டு வாறேன்" என்றாள்.


"ம்ம்.." என்று படியே உள்ளே சென்றான். கூடத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். இரவு நடந்த சண்டையை பற்றி நினைத்தான். அதற்காக வருந்தினாலும் இன்னும் எபிரேயாள் நன்றாக உறங்கிக்கொண்டிருப்பது அவனுக்கு எரிச்சல் மூட்டியது.  தன் கூரிய நகத்தை வைத்து அந்த நாற்காலியில் கீறல்கள் போட்டான். 


ஜோசப், திருவாரூர் மாவட்டத்தில் - ஒர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறான். அந்த கிராமத்திலேயே ஒர் வாடகை வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று பணிபுரிகிறான். அவன் தன் மாவட்டமான தூத்துக்குடியில் வேலை கிடைக்க முயற்சி செய்தும் அவனுக்கு அது கிடைக்கவில்லை. மாதம் ஒருமுறை தன் ஊருக்கு வந்து தாய் தந்தையை பார்த்து செல்வான். ஆனால், கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடியதால், தற்போது பல மாதங்களாக தன் சொந்த வீட்டிலேயே தான் இருக்கிறான்.  வயது முப்பது ஒன்பதாகியும் திருமணம் நடைபெறாமல் இருந்த இவன் வாழ்க்கையில் ஒரு மாதத்திற்கு முன் தான் எபிரேயாளுடன் திருமணம் நடந்தது. எபிரேயாள் பட்டபடிப்பு வரை படித்தவள். இவளுக்கு வயது முப்பது. வேகுகாலம் திருமணமாகாமல் இருந்த இவளுக்கு இந்த கொரோனா காலத்தில் தான் திருமணம் நடந்தது. இவளது தாயார் இவள் சிறுவயதாக இருக்கும் போதே இறந்துவிட்டார். இவளுக்கு தந்தை மட்டுமே துணயாகி இருந்தார். அவரும் இரண்டு வாரத்திற்கு முன் தான் மாரடைப்பால் காலமானார். அந்த துக்கத்தினாலே, இவள் சிந்தனை ஒன்றும் செயல் ஒன்றுமாக இருக்கிறது. எபிரேயாளின் நிலை அறிந்து ஜோசப்பின் தாய் மேரி அவள் செய்கைகளை பொருட்படுத்தாது இருந்தாள்.


"தம்பி இந்தாப்பா" என்று மேரி காப்பியை நீட்ட, அதை வாங்கி ஜோசப் குடித்தான். ஜோசப்பின் தந்தை சகாயம் அந்நேரம் வீட்டிற்கு நுழைந்தார். அவன் அருகில் இருந்த மற்றொரு நாற்காலியில் அமர்ந்து "ஏளா, வர ஒன்னாந்தேதி பள்ளி கூடம் தொறக்க போரானுவோளாமே?." 


"ஆமா அப்பா அடுத்த வாரம் ஞாயித்து கிழமை கிளம்புறேன்"


"ம்ம்.. அது சரி நேத்து…" என்று சகாயம் ஏதோ  கேட்க வருவதற்குள் மேரி இடைமறித்து "அவன் காபி சாப்பிடட்டும்… அப்பறமா பேசலாம்" என்று கூறினாள். தன் மனைவி மேரியின் முகத்தை சகாயம் நோக்க மேரியோ தலையை வலதும் இடதுமாக ஆட்டினாள். உடனே ஏதும் கூறாமல் சகாயம் எழுந்து சென்றுவிட்டார். 


ஜோசப் ஏதோ சிந்தனை செய்தபடியே  காபி அருந்திக்கொண்டிருந்தான். சில நிமிடங்கள் கழித்து நண்பர்களை பார்க்க வெளியே கிளம்பினான்.


அவன் கிளம்பிய சில நிமிடங்களில் எபிரேயாள் தூக்கத்தில் இருந்து கண்விழித்தாள். அவள் கண்கள் ஏதோ இரவு முழுவதும் தூங்காதது போல சிவந்து காணப்பட்டது.  


உடனே எழுந்து குளியலறைக்கு சென்று குளித்து விட்டு ஏதும் நடவாதது போல தன் வேலைகளை தொடங்கினாள். 


காலை உணவருந்த ஜோசப் வந்தான். அவனுக்கு எபிரேயாள் பறிமாறினாள். ஆனால் ஏதும் பேசவில்லை. அவனும் இவளிடம் பேசவில்லை. இதை ஜோசப்பின் தாய் மேரி கவனித்தார். ஆனால் ஏதும் தன் மகனிடமோ, மருமகளிடமோ கேட்டுக்கொள்ளவில்லை.


சில நாட்கள் சென்றது… 


ஜோசபிற்கும், ஏபிரேயாளுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் இன்னும் தீராமலே இருந்தது.  அன்று சனிக்கிழமை இரவு நேரம் வீட்டில் ஜோசப் இல்லை பள்ளிகள் திறப்பதால் பணிக்கு செல்ல நாளை மதியம் கிளம்புகிறான், அதனால் தன் நண்பர்களை காண சென்றுவிட்டான். சகாயம் எங்கோ வெளியே சென்றுவிட்டார். எபிரேயாளோ தன் அறையில் கதவை தாளிட்டு கொண்டு கண்ணீர்வடித்துக் கொண்டிருந்தாள்.  அறையின் கதவை மேரி தட்டினாள். உடனே கண்களில் வழிந்த கண்ணீர் பெருக்கை கைகளை வைத்து அடியோடு துடைத்தாள். பின் கதவை திறந்து "ஏன் அத்த?" என்று கேட்டாள்.


"அம்மாடி உன் கிட்ட கொஞ்சம் பேசணும்!"


"சொல்லுங்க அத்த?'


"இல்லமா, உங்க அப்பா இறந்ததிலிருந்து  நீ ரொம்பவே கவலையா இருக்கனு தெரியுது. ஆனா இப்புடியே இருந்தினா உங்க வாழ்க்க சரியா அமையாது, சண்ட சச்சரவா தான் இருக்கும், அது மறக்க முயற்சி பண்ணு. நானும் பாத்தேன் அன்னக்கி நைட்டு நீங்க சண்ட போட்டதுலேந்து ரெண்டு பேரும் இப்ப வரையும் பேசிகறது இல்ல!"


"ஆமா அத்த, எங்ககுள்ள சண்ட தான் ஆனா அதுக்கு காரணம் நான், எங்க அப்பா இறந்த துக்கத்துல இருக்குறது இல்ல, அவரு அன்னக்கி நைட்டு ; அடுத்த வாரம் ஸ்கூள் துறக்குறாங்க நான் போறேன், நீ அம்மா‌ அப்பாவ பத்தரமா பாத்துக்கணும்னு சொன்னாரு. நான் சொன்னேன், நானும் உங்க கூடத்தான் வரேனேனு. அவரு இல்ல நீ இங்கத் தான் இருக்கனும்னு திரும்ப சொல்ல, அதனால தான் எங்ககுள்ள சண்ட! அவரு கூட இல்லைனா எனக்கு ஏதோ அநாதை ஆன மாதிரி இருக்கும். நான் சொல்ல வேண்டியது இல்ல... அத்த உங்களுக்கே தெரியும்" என்று கண்ணீர் சொறிந்தாள்.


"நீ அழாதமா, அவன் ஒரு விவரம் கெட்டவன்!. உன்னோட இந்த நிலமைல அவன் கூட நீ இருந்தாதான் சரி வரும். அது அவனுக்கு புரியல, என்ன தான் அவன் வாத்தியார் வேலை பார்த்தாலும், நாப்பது வயசு ஆகியும் கல்யாணம் ஆகலையே! அப்புடினு ஊரும் உறவும் என்னென்னமோ பேசுச்சு, உன்ன கல்யாணம் பண்ணதுக்கு அப்பறம் தான் அவனுக்கு மரியாதையே, உன்னால தான் அவனுக்கு இப்ப பெருமை! நாங்க எத்தனையோ வருசம் இங்க தானியா இருந்துருக்கோம்  இப்ப என்ன அவனுக்கு புது கரிசனம்!?"


"அவர் சொல்லுறதுலையும் நியாயம் இருக்குது…"


"என்ன இருந்தாலும் அவன விட்டு கொடுக்க மாட்டுற! நீ இல்லாம அவன் போகமாட்டான் உன்னையும் கூட்டிக்கிட்டு தான் போவான் நீ கவலைப்படாதே!" என்று மாமியார் என்ற உறவு திரிந்து ஒர் தோழி போல மேரி தன் மருமகள் எபிரேயாளுக்கு ஆறுதல் தேற்றினாள்.


குகன்


குறுந்தொகை 22


நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய,

யாரோ பிரிகிற்பவரே?-சாரல்

சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து

வேனில் அம் சினை கமழும்

தேம் ஊர் ஒண்ணுதல்! நின்னொடும், செலவே.


சேரமான் எந்தை பாடல்

தென்றல் இதழ் 23

2 Comments

  1. குறுந்தொகை பாடலின் பொருளையும் சேர்த்து கொடுக்கலாம்.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு