Trending

அஞ்சிலே ஒன்று பெற்றான் | கம்பன் என்றொரு மானுடன்

 கம்பன் என்றொரு மானுடன்


இந்து மத புராணங்கள் ஏனைய பிற எந்த மத புராணங்களைவிடவும்  நம்பமுடியாத கற்பனை கதைகளையும் அளக்க முடியாத கிளை கதைகளையும் 

சந்தேகத்துக்கு இடமின்றி மிக அதிகமாக கொண்டுள்ளன!


நடைமுறைக்கு ஒவ்வாத சம்பிரதாயங்களையும் காட்டுமிராண்டிதனமான கலாச்சாரத்தையும் அதன் பல கதைகளில் அநேக இடங்களில் கொண்டிருந்தாலும் கூட ஏதோ ஒரு மந்திர ஜாலத்தால் அது காலங்கள் பலகடந்தும் செழித்தோங்கி நிற்கிறது..!


ஒரு இனமோ மொழியோ பண்பாடோ நாளடைவில் சரிவை எதிர்கொண்டு பிறகு மீண்டும்  கால ஓட்டத்திற்கேற்ப தன்னை புதிதாக பரிணமித்துக்கொண்டு புத்துயிர் பெற்று எழுவதை 'மறுமலர்ச்சி' என்ற பதத்தால் குறிப்பிடுகிறார்கள்.


வேதகாலத்தில் இருந்த சடங்கு சம்பிரதாயங்கள் வெறுமனே சனாதன தருமமாக காணாமல் போய்விட... அதற்கு மறுமலர்ச்சி ஊட்டியவர்கள்... சிவனும் விஷ்ணுவும் தான்..!  இவர்களால் தான் சைவம் வைணவம் என இரு பெரும் சமயமாக அது வீறுகொண்டெழுந்து மேலும் தொடர்ந்தது..


கிபி 1000 ஆவது ஆண்டில் அந்நிய படையெடுப்பாளர்களால் பரதகண்டம் கைப்பற்றபட்டபோது அவர்கள் இந்த கண்டத்தின் அனைத்து தேசங்களுக்கும் 'இந்துஸ்தானம்' என பொதுபெயரிட்டனர். கூடவே இங்கு நிலவிய எல்லா மதங்களும் 'இந்து மதம்' என்று ஆனது..!


பிரிட்டிஷ் ஆட்சியில் நவீன கல்வி புகுத்த பட்டபிறகு இந்துக்களாலேயே இந்துமதம் ஏராளமான கேலிகிண்டல்களுக்கு 

உள்ளாக்கப்பட்டு நொடிந்து போகபார்த்தது..  ஆனால் அப்படி நொடிந்து போய்விடாமல்,, வெகுஜனங்கள் மனதில் ராஜகம்பீர அரியணை போட்டு அமரசெய்த மாயாஜாலம் மறுபடி நிகழ்ந்தது. அதை நிகழ்த்தியவர்கள் இரு சுத்த பிரம்மச்சாரிகள்..!


அதில் முதலாமவர் விநாயகர்!


அடுத்தவர் அனுமான்...!


கிருஷ்ணர் முருகன் என வசீகரிக்கும் தெய்வங்கள் பலர் இருந்தாலும்.... எவ்வித குறுகிய நோக்குமின்றி பிரிவுபேதமின்றி எல்லா இந்து சமய மக்களாலும் வணங்கிபோற்றபடுகிற தெய்வமாக பிள்ளையாரும் அனுமாரும் மட்டும்தான் இன்றுவரை இருக்கிறார்கள்..!



இருவருமே விசித்திர உருவம் கொண்டவர்கள்.. முன்னவர் யானை முகன்.. பின்னவர் வானர வீரன்! 



குழந்தைகளையும் இளைஞர்களையும் எவர் அதிகம் கவருகிறார்களோ அவர்களுக்கு செல்வாக்கும் ஒளிமயமான எதிர்காலமும் மற்றவரை காட்டிலும் அதிகம் வாய்க்கும்!


நம்ம ஊரு சூப்பர் ஸ்டார், சீனாவின் ஜாக்கி சான், கார்டூன்களின் கடவுள் டிஸ்னி, காமிக்ஸ் உலகின் காட்பாதர்  மார்வெல் ஸ்டூடியோஸ் என ஏகப்பட்ட உதாரணங்களை இதற்கு கூற முடியும். பிள்ளையாரும் அனுமானும் அந்தவகையில் முன்தோன்றி வந்த இந்திய புராணங்களின் சூப்பர் ஹீரோக்கள்...!


இந்திய விடுதலை போராட்டத்திற்கும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு..

இந்துத்வா இயக்கங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டதே பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலந்தான்..! அந்த வகையில் விநாயகரும் என்றோ அரசியலில் குதித்துவிட்டார். (மேலும் விவரங்களுக்கு வரலாற்றை புரட்டுங்கள்/Google ஐ கேளுங்கள்)


சரி விநாயகர் விட்டுவிடுவோம்..!  நாம் அனுமனை கொஞ்சம் அதிகம் அலசவேண்டி இருப்பதால் அடுத்த சில தொடர்வரிசையிலும் ஹனுமானுக்கே அதிக இடஒதுக்கீடு வழங்க வேண்டி இருக்கிறது..!


ராமாயண கதாநாயகன் ராமன் அல்ல.... அனுமன் தான்!! அவரிடம் தானே 'கதா ஆயுதம்' இருக்கிறது!

ஆதலால் அவரே 'கதா' நாயகன் என்பர் வேடிக்கையாக..

ஆனால் உண்மையில் ஹனுமன் மாதிரி ஒரு கதாபாத்திரத்தை ஈரேழு பதினான்கு லோக இலக்கியங்களை ஆராய்ந்தாலும் கண்டெடுக்க முடியாது!!


அனுமனை ஒத்த பயில்வான் கூட ஏனைய இலக்கியங்களில் ஒருவேளை இருக்கலாம்..


ஆனால்,


அனுமன் மாதிரி ஒரு குணவான் எங்குதேடினாலும் கிடைக்கமாட்டான்..!




அனுமன் என்றவுடனே பலருக்கும் முதலில் இந்த பிரபலமான பாடல் நினைவுக்கு வந்துவிடும்..


உண்மையாகவே அது தமிழுக்கு வாய்த்த நிகரற்ற கவிச்சித்திரம்தான்.. ஐயமில்லை!



"அஞ்சிலே ஒன்று பெற்றான்


அஞ்சிலே ஒன்றைத் தாவி


அஞ்சிலே ஒன்றுஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி,


அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்...


அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்!!"



(பொருள் விளக்கம் காணும் முன் ஒன்றை தெரிந்துகொள்ள வேணும்...)


அற்புதமான இந்த கவிச்சித்திரம் முதலில் கம்ப சித்திரமா? என்பதே பெருங்குழப்பத்திற்குரியது. !!!


 ரசிகமணி டி.கே.சி முதலான கம்பனை கரைத்துக்குடித்த பல பண்டிதர்கள்,, ஒரு செய்யுளை பார்த்த/கேட்ட மாத்திரத்தில்... ' இது கம்பன் கைவண்ணம்...'     ' இது பிறகுவந்த இடைச்சொருகல்' என பிரித்து மேய வல்லவர்கள்...


அக்காலத்தில் இத்தனை பெரும் இதிகாசங்களை ஒரே ஒருவரால்  படிஎடுக்கவோ எழுதிவைக்கவோ இயலாத காரணத்தால் வேலையை பிரித்துக்கொண்டு பல பண்டிதர்கள்  பல பாகங்களை தனித்தனியே சுவடிகளில் பிரதி எடுப்பது (like... xerox copy) வழக்கம்.. அவர்களின் மாணவர்கள் அவர்களிடமிருந்து பிறகு படியெடுத்துக்கொள்வர். அப்படி எடுக்கும்போது கம்பன் கவியை தினம் தினம் படித்து படித்து கவிதை 'போதை' தலைக்கு ஏறி பித்துப்பிடித்து... தாங்களும் தமிழில் கவிபுனைந்து அதையும் ஓலைகளில் எழுதி இதனோடு வைத்துவிடுவர்.. பின்னாள் வரும் சந்ததிகள் விவரம் தெரியாமல் இந்த திடீர்செய்யுளையும் கம்பனோடு சேர்த்து 'ஈ அடிச்சான் காப்பி' யாக படியெடுத்து எழுதிவிட....  நம் கைகளில் இப்போது இவை யாவும் கலந்த பஞ்சாமிர்த (fruit mixer) காப்பியமாக கம்ப காவியம் உலவுகிறது..!!


கம்பனில் இருந்து அப்படி பிரித்தெடுத்த பலநூறு அழகிய செய்யுள்கள் யாவும் தூக்கிஎறியவும் துணிவின்றி, சேர்த்துக்கொள்ளவும் மனமின்றி "மிகைப்பாடல்கள்" என்ற தனி தலைப்பில் ஒவ்வொரு படலத்திலுமே வீற்றிருக்கின்றன...!


அவ்வகையில் மேற்கண்ட இந்த பாடல் கம்பன்,,  "பாயிரம்" பாடும்போதே கடவுள்வாழ்த்து போல அநுமனை வேண்டிக்கொள்வதாக  அமைந்திருக்கிறது!!


சரி,, இனி..


பொருளுணர.....


"அஞ்சிலே ஒன்று " (1/5) என அடுத்தடுத்து ஐந்து (1/5)  வருவதால் 5 × (1/5) = 5 என மொத்தம் ஒரு முழு ஐந்து கிடைக்கிறது. 


ஐந்து என்பது பஞ்ச பூதங்களை  குறித்து வருகிறது.


நிலம் நீர் தீ வளி வெளி என ஐந்தும் கலந்த மயக்கம்தானே உலகம்.! (தொல்காப்பியம்)


அனுமன் வாழ்வை எத்தனை அழகாக இந்த செய்யுள் பஞ்சபூதங்களுடன் ஒன்றாட வைக்கிறது பாருங்கள்...! 


அஞ்சிலே ஒன்று பெற்றான். =


பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயு வுக்கு பிறந்தவர்...!(வாயு புத்திரன்)


அஞ்சிலே ஒன்றைத் தாவி. =


நீர் பூதமாகிய சமுத்திரத்தை ஒரே பாய்ச்சலில் தாவியவர்..!


அஞ்சிலே ஒன்று ஆறாக ஆருயிர் காக்க ஏகி. / அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி =


பூதங்களில் முதலாவதான ஆகாயத்தை பாதையாக கொண்டு தன் ஆருயிர் ராமனுக்காக ஏகியவர்.

{ ஆருயிர் வாசகர் ஒருவரும் இந்த இடத்தில் ஆருயிரா ஆரியரா என தெளிவுபடுத்த கேட்டிருந்தார். 


உறுதிபட எதுவும் உரைப்பதற்கில்லை..! அநேக ஏடுகளில்.. வாய்மொழி வழக்கில்.. 'ஆரியர்க்காக ஏகி' என்றே சொல்லப்படுகிறது...! ஆரிய என்ற சொல் ஆரிய இனத்தை குறித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பல பாடல்களிலும் ஆரிய என்ற குறிப்பு வருகிறது..


ஒருகாலத்தில்

இந்திய நிலப்பரப்பை இரண்டாக பிரிக்கும் விந்தியமலைக்கு வடக்கே இருந்தவர்களை ஆரியர் என்றும் தெற்கில் இருந்தவர்கள் திராவிடர் எனவும் அழைக்கப்பட்டனர். வர்ணகட்டுப்பாடு மீதிருந்த தீவிரம், இனங்களின் மீது அவ்வளவாக இல்லை.. ஆதலால் ஆரியதிராவிட திருமண பந்தங்கள் ராஜாங்க உறவுரீதியில் நடந்தேறி இருக்கலாம். கோசலநாடும் அயோத்தி மாநகரும் ஆரிய பூமியில் இருப்பதால் அதை ஆண்ட மன்னர்களை ஆரியர் என அழைப்பதில் தவறுஇல்லை. 



இங்கு ஒரு அழகிய முரண் எதுவெனில்..,

ராமனை ஆரிய சத்ரியனாக கருதினால் ராவணனை திராவிட பிராமணனாக கருத நேரிடும்!

(ராவணன் பிராமணனாக இருந்ததால் தான் அவனை வதம்செய்த ராமனுக்கு 'பிரம்மஹத்தி' தோஷம் உண்டானது! )


இதிலிருந்து இனபேதம் வேறு வர்ணாசிரம பேதம் வேறு என உணரலாம். ஆக எல்லா பிராமணர்களும் ஆரியரல்ல..! ஆரியர் அனைவருமே பிராமணரும் அல்ல..! 


ராமன் ஆரியனா திராவிடனா என்கிற சர்ச்சைக்கு இவ்வரிகள் இட்டுச்செல்வதால் தமிழாய்ந்த நம்மவர்கள் 'ஆருயிர் காக்க ஏகி' என்கிற வரிகளுக்கே அங்கீகாரம் தந்திருக்கிறார்கள்...


அனுமனின் ஆருயிரான ராமபிரானின் ஆருயிர்... சீதை! அவள் இருக்குமிடம் தெரியாமல் ராமனின் உயிர் மெல்ல மெல்ல மடிவதால் அதை காக்கும் பொருட்டு அனுமன் வானில் விரைகிறான்..


வரி எதுவாயினும் பொருள் பெரிதாக மாறவில்லை..}



அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கு கண்டு. =


பொறுமைக்கு பெயர்போன நில பூதமான பூ மகள் பெற்றெடுத்த 

பெண்மகள் சீதையை தேடி கண்டுபிடித்தவர்..!

(எங்கு..?)


அயலார் ஊரில்...= இலங்கை மாநகரில்.. ( அயல் நாட்டில்..?)


அஞ்சிலே ஒன்றை வைத்தான்.=


நெருப்பை வைத்து லங்காபுரியை தீக்கிரையாக்கியவன்..!


(சரி இதெல்லாம் யார்..?)


அவன்..! = அவன் தான் அனுமன்!


எம்மை அளித்துக் காப்பான் =


நமக்கு வேண்டியவற்றை எல்லாம் அளித்து காப்பான்.. குறிப்பாக ராமகாவியத்தை அரங்கேற்ற போகிற எம்மை (கம்பனை) காப்பான்..!!


இதை புனைந்தது யாராகிலும் அவர் வனைந்தது தமிழ்குழைத்து என்பதால் தமிழ்கூறும் நல்லுலகம் காலம்கடந்தும் இதை மந்திர பாடலாக பாராயணம் செய்கிறது..!

 சிறு குழந்தை கூட எளிதாக இப்பாடலை மனனம் செய்துவிடும்.


நாம் அதிகார பூர்வமாக அனுமன் குறித்து கம்பன் நடத்திய கவி ராஜபாட்டை...யை அடுத்துவரும் தொடர்களிலும் காண்போம்..


ஜெய்... ஸ்ரீ ராம்..!!!


சூரியராஜ்


 மேலும் படிக்க

1 Comments

  1. சிறப்பு! அடுத்து வரும் தொடர்களுக்கு ஆவலுடன் உள்ளோம்.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு