Trending

வள்ளுவர் சொல்லும் வாழ்வியல் துறவு - குறள்மகன்

எனக்கு தெரிந்த இரண்டு நபர்கள் இருக்கின்றார்கள்.

அவர்கள் இருவரும் ஒவ்வொரு விதம். ஒருவருக்கு மது,மாது,சூது போன்ற அனைத்து தீய பழக்கங்களும் உண்டு. மற்றொருவருக்கு அதில் ஒரு பழக்கத்தின் மீதும் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. இப்படி இருக்க, எல்லா தீய பழக்கங்களும் உடையவர் பல்வேறு விதமான நோயை பெற்றார்.

நோயினை குணப்படுத்த அதிகமாக செலவு செய்து வறுமையுற்றும், தன்னுடைய இருபத்து ஐந்தாவது வயதிலே இறந்தும் விட்டார். ஆனால் எந்த தீய பழக்கமும் இல்லாத இன்னொருவரோ தன்னுடைய இருபத்து ஐந்தாவது வயதில் ஆரோக்கியமாக, செல்வங்கள் நிறைந்த வாழ்வை வாழ்ந்து வருகிறார். தீய பழக்கங்கள் மீது, அவருக்கு எந்த விருப்பமும் இல்லாததால் அவரது வாழ்வு எந்த வித தீங்கும் இன்றி சுகமாக சென்றது.

simple monk tamil
Copyright Free Image from PIXABAYயாதெனின் யாதெனின் நீங்குயான் நோதல் அதனின் அதனின் இலன். (குறள்- 341)


எந்தெந்த செயல்கள் மீது ஒருவனுக்கு ஆசை இல்லையோ அந்தந்த செயல்களினால் வரும் தீய வினை அவனுக்கு இல்லை.


நாம் வாழ்கின்ற இந்த வாழ்க்கையே  முற்பிறவியில் நாம் செய்த தீய செயல்கள் தான் காரணம் இல்லையென்றால் இந்த பிறவி நமக்கு இல்லாமல் நிம்மதியாக இருந்திருக்கலாம். ஏனென்றால் இந்த வாழ்வு நமக்கு விடையல்ல. கடல் சூழ்ந்த இந்த உலகில் பிறக்காமல் இருப்பதே சரியான விடையாகும். அப்படிப்பட்ட இந்த பிறவியில் நாம் பிறந்துவிட்டு பல்வேறு விதமான மாயைகளிடம் சிக்கிக்கொண்டு எல்லாவற்றின் மீதும் ஆசை கொண்டு அடுத்த பிறவியை அடைய வழிவகுக்கின்றோம். உண்மையாக நாம் அடுத்த பிறவி எடுக்காமல் இருப்பதே நம் ஆத்மாவின் பலன். இப்படி இருக்க மனிதனாக பிறந்து சிறு வயதிலிருந்தே ஆசைகளுக்கு தன்னை அடிமையாக்கிக் கொண்டு ஆசையின் அடிப்படையில் பல்வேறு தீய பழக்கங்களில் ஈடுபட்டு வாழ்வும் முடியால், துன்பமும் முடியாமல் தேவையில்லாமல் தன் வாழ்க்கையினை அர்த்தமற்ற வாழ்வாக மாற்றி பலர் வீணடிக்கிறார்கள். 


அடுத்த பிறவி வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த பிறவியில் தன் உடம்பே பாரமாகும். அப்படி இருக்க மற்ற பொருட்கள் மீது ஆசை எதற்காக?.. உடல் பாரம் என்பதை அதை பேணுவதற்காக நாம் செய்யும் செயல்கள், பேணாமல் வரும் நோய்கள், வாழ்வதற்காக செய்யும் பணிகள், அதனால் வரும் இன்னல்கள் போன்றவற்றின் மூலம் அறியலாம்.


மற்றும் தொடர்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை. (குறள்- 345)


சிலர் வாழ்க்கையில் செல்வம் மிக்கவராகவும் நோயற்ற வாழ்க்கையும் வாழ்ந்து வருவார்கள். ஆனால் அவர்களிடம் மன அமைதி இல்லாமல் இருக்கும் அதற்கு காரணம் அவர்களின் ஏதோ ஒரு ஆசை நிறைவேறாமல் இருப்பதே. இதற்காக தான் கேட்கிறேன். ஆசை நிறைவேறாமல் இருந்தால்தானே மன அமைதி இல்லாமல் போகும் அப்படிப்பட்ட ஆசையே இல்லாமல் இருந்தால்?..


மன அமைதி வேண்டுமானால் எல்லாவற்றிலுமான ஆசைகளை விட்டுவிடவேண்டும் அதன்பிறகுதான் துறவு நிலை காண நன்மைகள் கிடைக்கும்.


வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின் ஈண்டியற் பால பல. (குறள்- 342)


ஆசைகளை விடாமல் தன் அருகிலே வைத்திருப்பவர்களை துன்பம் எப்போதும் தன் அருகிலேயே வைத்துக் கொள்ளுமாம். சனி என்ற ஒன்று தன் அருகிலே இருந்தால் தனக்கு துன்பம் வந்துகொண்டே இருக்கும் என்று கேட்டு இருக்கிறேன். ஆனால் அது சனியல்ல ஆசை என்பதனை கீழே உள்ள திருக்குறளை படித்த பின்பு உணர்கிறேன்.


பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு.  (குறள்- 347)


தவத்தை மேற்கொள்வோர் தவம் மேற்கொள்ளும் போது அதாவது தவம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்வது அல்ல ஏதோ ஒரு விரதம் குறிப்பாக அசைவ உணவு உண்ணாமல் இருப்பது, தீய பழக்கங்கள் அதாவது மது பழக்கம், புகைப்பழக்கம் போன்ற பழக்கங்கள் இவற்றை மேற்கொள்ளாமல் இருப்பது போன்றவையும் தவம் என கூறலாம். அதை விரதம் என்றும் கூறலாம், சுயதர்மம் என்றும் கூறலாம். தங்களின் பயன்களுக்காக செய்வதை விரதம் எனலாம். பலனே வேண்டாமென இருப்பதை தவம், சுயதர்மம் எனலாம்.


அப்படிப்பட்ட தவத்தை நாம் மேற்கொள்ளும் போது சின்ன ஒரு செயல் மீதும் ஆசை கொள்ளக் கூடாது. அதாவது மது பழக்கம் இல்லாமல் இருப்பவர்கள் புகைப் பழக்கம் என்ற சிறிய ஆசையை கொள்வோம் என்று இருக்கக்கூடாது ஏனென்றால் இந்த சின்ன ஆசை மது என்ற பேராசைக்கு வழிவகுக்கும். பிணி என்னும் இன்னலுக்கு உள்ளாக்கும்.


இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து. (குறள்- 344)


வாழ்க்கையை சரியாக அனுபவிக்காமல், பெற்றோர்கள் பேச்சை புறக்கணித்து விட்டு, அவர்கள் மனம் வருந்தும் படி துறவு படி வாழ்வது சரிதானா? என்ற கேள்வி பலரும் கேட்டிருப்பர்


சரியல்ல தான், ஆனால் உங்கள் மனதிற்கு விரோதமாக வாழக்கூடாது. தந்தை திருடு என்கிறார். மகனின் மனம் திருட வேண்டாம் என்கிறது. எதை கேட்பது?


புனிதமான மனது நன்மையை பிரித்தெடுக்கிறது. அதற்கு பொய்கள் பிடிக்காது, இன்னொரு உயிருக்கு துன்பம் செய்ய பிடிக்காது, நேர்மை தவறி நடக்க பிடிக்காது, காதல் பிடித்தாலும் காமம் பிடிக்காது. 


எல்லோர் மனதும் துறவை ஏற்காது. அதன்படி வாழ்தலும் மிகச்சிரமம், ஆனால் அதன் நெறிமுறை சிலவற்றை கடைபிடிக்கலாம். உண்மை மட்டும் பேசலாம், உயிர்களை கொல்லாது வாழலாம், இருப்பதை கொண்டே இயங்கலாம், அதிகம் வந்தால் இல்லாதோருக்கு வழங்கலாம், ஆசை எனும் போதையை விட்டொழிக்கலாம், நம் உடலுக்கு நாமே விதிமுறை விதிக்கலாம். ஆசை பெரிதானால் உங்களையே கொல்லும், துறவு சிறிதானாலும் உலகத்தையே வெல்லும்.


-குறள்மகன்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு