Trending

கோடியக்காடு - சிறுகதை

கோடியக்காடு - தீசன்

சென்ற வருடம் மே மாதம் மதியம் மூனுமணி இருக்கும் . நல்ல வெயில் ,  எல்லா வருடமும் ' இந்த முறை காட்டின் உள் வரை செல்ல வேண்டும் ' என்று வாய் பேச்சோடு நிறுத்தி விடுவோம் . இன்று கிளம்பி விட்டோம் . 

இரண்டு வண்டி , என்னோடு மொத்தம் நாலு பேர் , கோடியக்காடு தான் எங்கள் இலக்கு . வேதையிலிருந்து கோடியக்காடு பதிமூன்று கிலோமீட்டர் தான் வெறும் இருபது நிமிட பயணம் , தமிழக வரைபடத்தில் மூக்கு போன்ற பகுதி தான் கோடியக்காடு அதை தாண்டினால் கோடியக்கரை பின் வங்காள விரிகுடா , பொன்னியின் செல்வனில் இரண்டு - மூன்றாம் பாகக் கதை கோடியக் கரையிலேயே தான் நகரும் , ராமர் முதன் முதலாக இலங்கையை கண்டது இவ்வூர் வழியாகத் தான் . அப்பர் கோவில் கதவினை திறந்து சம்பந்தர் கதவினை மூடிய திருமறைக் காடென்பதும் இவ்வூர் தான் . செய்தி தாள் படிப்போருக்கு இது பழக்கப்பட்ட ஊர் இங்கு போதை பொருள் கடத்துவதும் கரை ஒதுங்குவதும் வழக்கம்  எப்படியோ கண் எரிச்சல் தரும் உப்பளத்தை தாண்டி கோடிய காட்டினுள் நுழைந்து விட்டோம் . காட்டின் தொடக்கத்தில் ராமர் பாதம் . ராமர் இங்கிருந்து தான் இலங்கையை கண்டதாக அவரது பாதம் பொறிக்கப்பட்டு இருக்கும் . ராமர் நல்ல உயரம் போல , எனக்கு இதுவரையில் அங்கிருந்து இலங்கை தெரிந்ததே இல்லை ... ராமரே இவ்வழியே சென்றுள்ளார் என்றால் அவர் படையும் அவ்வழியில் தானே வந்திருக்கும். அந்த காடு முழுதும் குரங்குகள் தான் , குரங்குகள் என்றால் பத்து இருபது அல்ல நூறு இருநூறு இருக்கும் . வண்டியில் ஏதாவது விட்டு சென்றுவிட்டால் அதை மறக்க வேண்டியது தான் . திருட்டு குரங்குகள் . சில சமயம் பைக் சீட்டுகளே இருக்காது . இதனால் சாக்கையும் கையோடு கொண்டு சென்று விட்டோம் . ஒரு மறைவான இடத்தில் வண்டியை நிறுத்தி சாக்கை போட்டு மூடிய பின்பே காட்டுக்குள் நடக்க தொடங்கினோம் . 

கோடிய காடு ஒரு மூலிகை வனம் ஊரின் காற்றோடு இங்கு குளிர்ச்சியாகவும் நறுமனமாகவும் இருப்பதை உணரலாம் . இலக்குவனின் காயத்தை குணப்படுத்த அனுமார் தூக்கி வந்த மூலிகை நிரம்பிய சஞ்சிவி மலையின் ஒரு பகுதி இங்கு விழுந்ததாகவும் , அந்த பகுதியே கோடிய காடென்றும் இந்த ஊர் மக்கள் சொல்கின்றனர் . அது மட்டுமல்ல இந்த மூலிகை காட்டின் மத்தியில் இருக்கும் ஓரு வினோத மரத்தின் வாடை நம் மனதினை குழப்பி பழைய நினைவுகளையும் அழித்து விடும் என்றும் கூறுகின்றனர் . இதெல்லாம் கட்டுகதை என்று மனதை தேற்றி கொண்டாலும் அவர்கள் சொன்னபடியே இங்கு மன நலம் பாதிக்கப் பட்டோரை பல இடங்களில் காணலாம் . காட்டிலுள் நடப்பதற்கு வழி போடப்பட்டிருக்கும் ஆனால் அது குறிப்பிட்ட தூரம் தான் , வழித்தடம் முடியும் பகுதி ஒரு பாழடைந்த மண்டபம் அந்த மண்டபத்தை பெரிய பூதாகரமான ஆலமர விழுதுகள் சிதைந்து வைத்திருக்கும் . காட்டுப் பகுதியில் இருப்பதால் அந்த ஆலமரம் ஒரு அரக்க தனமான வளர்ச்சியை அடைந்திருந்தது . இதுவரையில் தான் மனிதர்களையும் குரங்குகளையும் நாம் காணலாம் . இதற்கு பிறகு மனித நடமாட்டமே இல்லாத மூலிகைகளையும் முட்புதர்களையும் சதுப்பு நிலங்களையும் மான்கள் நரிகள் காட்டுப்பன்றிகள் விசித்திரமான பறவைகள் ஆழத்தெரியாத புதைக்குழிகளையும் உள்ளடக்கிய ஆறாயிர ஏக்கர் கொண்ட வனாந்திரம் மட்டுமே . கோடியக்காட்டில் எங்கள் கால்தடம் பல முறை பட்டிருந்தாலும் , அது அந்த பாழடைந்த மண்டபம் வரையில் தான் . முதன் முதலாக மண்டபத்தை கடந்தோம் . குரங்கு ஒன்று எங்கள் தண்ணீர் பாட்டிலை பார்த்தபடியே வரவேற்றது . அதன் பிறகு ஒரு குரங்கு கூட கண்ணில் படாதது எங்களுக்கு ஆச்சர்யத்தை தந்தது . கொஞ்ச தூரம் நடந்த உடனே அழகான கானக குளம் ஒன்று கண்ணில் பட்டது . 

இங்கேயே சிறிது நேரம் நின்றோமானால் மான்களை பார்க்கலாம் என்று சூரியா சொல்ல 

கூடவே நரியும் வரும் என்றேன்

எல்லோரும் கடகடவென குளத்தை தாண்டி நடக்க தொங்கினோம் மணி அப்போது நாலு இருக்கும் . காட்டில் அங்கும் இங்கும் அலைந்த மிருகங்கள் இந்த நேரத்தில் தான் இளைப்பாற குளங்களுக்கு வரும் . அந்த நேரத்தில் அதற்கு இடைஞ்சல்  தந்தால் நமக்கு தான் பிரச்சனை . போகும் வழியே பல மான்களை கண்டோம் எங்களை கண்ட உடன் பதறி ஓடின . சில மான்கள் மேய்ந்து கொண்டே நகர்ந்தது . நாங்களும் அதை பார்த்து கொண்டே நகர்ந்தோம் .

இப்படியே மான்களை பார்த்து நின்று கொண்டிருந்தால் காட்டின் கடைசிக்கு போவதற்குள் இருட்டி விடும் . என்றான் ராஜி . 

அதுவும் சரியாகத்தான் பட்டது காட்டினுள் நுழையும் வரை எங்கள் திட்டம் நடக்கும் தூரம் வரை நடந்து விட்டு திரும்புவதாகத்தான் இருந்தது . ஆனால் காட்டின் உள் செல்ல செல்ல எங்கள் மனம் மாறியது காட்டின் கடைசியை காண வேண்டும் பின் கரையினை பார்த்து அதன் வழியே சென்று கிராமத்தை அடைந்து அப்படியே திரும்புவது என்று எங்கள் திட்டமே மாறியது . இதற்கு காரணம் அந்த மனதை குழப்பும் மூலிகை மரமாக கூட இருக்கலாம் . இனி மான்களை பார்த்து நிற்க கூடாது என்னும் முடிவு எடுத்தபின் எங்கள் கண்ணில் ஒரு மான் கூட சிக்கவில்லை . சுவர்கோழியின் கீச்சு நாலாப்பக்கத்திலிருந்தும் வந்து வனம் முழுதும் நிறைந்து இருந்தது . எங்களின் குரலை எங்களுக்கே கேட்க விடாமல் செய்தது அந்த சத்தம் . இதுவரை விலங்குகள் ஏற்படுத்திய வழிகளில் வேகமாக சென்று கொண்டிருந்தோம் ஆனால் இப்போது தான் எங்களுக்கு பிரச்சனையே தொடங்கியது . 

பாதை இரண்டாக பிரிந்தது . ஒரு பாதையில் குதிரை சாணமாகவும் அங்கிருந்த  ஒரு மரத்தில் அழகான மஞ்சள் நிற வண்டுகள் கூட்டமாக மொய்த்திருந்தது . பூச்சிகளில் எது நிறம் செறிந்ததாக இருக்கிறதோ அது விச பூச்சாகத் தான் இருக்கும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும் அதனால் அந்த பாதை வேண்டாமென முடிவெடுத்தோம் . இரண்டாவது பாதையை இயற்கையே மரக்கிளைகளால் பின்னி வேலி போட்டது போல் அடைத்து இருந்தது . அந்த அமைப்பு 'அபாயம் , யாரும் செல்ல வேண்டாம்' எனும் எச்சரிக்கை போல் எனக்கு தோன்றியது . மரகிளை அடைப்பின் கீழ் இருக்கும் இடைவெளியை பயன்படுத்தி நால்வரும் பாதையினுள் நுழைந்தோம் அடந்த காட்டுப் பயணத்தில் நாங்கள் செய்த முதல் தவறு இது தான் . 

அந்த வழி ஏதோ ஒரு வலைக்குள் புகுந்தது போல் இருந்தது . எங்கு பார்த்தாலும் கிளை பின்னல்கள் . சில மெலிந்த கிளைகள் எங்களது ஆடைகளை பிடித்திழுத்து 'போகாதே நில்' என்று தடுத்தது . அவற்றை எல்லாம் முறித்து விட்டு நகர்ந்து கொண்டே இருந்தோம் . நடக்கும் போது அலுப்பு தெரியாமல் இருக்க ஏதாவது பேசிக் கொண்டே வருவோம் ஆனால் இப்போது எங்கள் காலில் மிதிபடும் காய்ந்த சறுகுகள் நொறுங்கும் சத்தம் மட்டுந்தான் கேட்டது , யாருமே வாய் திறக்க வில்லை . மணி ஐந்தாகி விட்டது . நீண்ட நேரம் நடந்து விட்டோம் ' அஞ்சு நிமிசம் ப்ரேக் விட்டுகலாம் ' . என்றேன் அந்த சறுகு குவியலிலே அமர்ந்து ஆளுக்கொரு வாய் தண்ணீர் குடித்தோம் . ஐந்து நிமிடத்தை தாண்டியது , நடப்பதற்காக எழுந்த அந்த சமயத்தில் பெருமூச்சுடன் கூடிய காலடி சத்தம் கேட்டது . சத்தம் வந்த திசையை கிளைகள் மறைத்து இருந்தது . காலடி சத்தம் அதிகமானது. மானாக இருக்க வாய்ப்பில்லை . மான் இப்படி பெருமூச்ச விட்டு கொண்டே நடக்காது . சத்தம் நெருங்க நெருங்க கிளை இடுக்கு வழியே ஒரு கறுப்பு உருவம் புலப்பட்டது. அது காட்டுப்பன்றி . பன்றியும் எங்களை பார்த்து விட்டது . பட்டென திரும்பி வந்த வழியே ஓடியது. உண்மையில் நரியை விட காட்டு பன்றிக்கு தான் நாங்கள் அதிகம் பயப்பட்டோம் . நரிகள் நாய்களை மாதிரி தான் . அதை பயமுறுத்தும் பட்சத்தில் அங்கிருந்து ஓடிவிடும் காட்டுப்பன்றி அப்படி  இல்லை குறிப்பாக பெண் காட்டுப்பன்றி தன் குட்டிகளை மறைவான பகுதிகளில் பத்திரபடுத்திருக்கும் தப்பி தவறி அதன் அருகில் சென்று விட்டோமானால் தீடீர் என வந்து நம்மை மூர்க்கத்தனமாக தாக்கும் இதையெல்லாம் கருதிற்கொண்டு நடக்கலானோம் . 

போக போக புற்களே இல்லாத காலி இடம் கண்ணில் பட்டது . ' கரை தெரியுது ' என கூறி கொண்டே காட்டை விட்டு வெளியே வந்தால் அது ஒரு வற்றிப்போன குளம் . குளத்தின் மறுபக்கத்தில் மரங்கள் தெரிந்தது . இதை தாண்டினால் என்ன வருமோ ? என்ற திகைப்போடு அப்படியே நின்றோம் .

என்ன போவோமா ? என்றான் ஸ்ரீராம்
இவ்வளவு தூரம் வந்துட்டு கரைய பாக்காம போறது வேஸ்ட் என கூறிக் கொண்டே குளத்தில் நடக்க தொடங்கினான் ராஜி . 

நாங்களும் போனோம் . தண்ணீர் இல்லாத குளம் ஆனாலும் ஈரப்பதம் போகவில்லை ஒவ்வொரு அடியிலும் காலை மெதுவாக இழுத்தது அந்த மண் .  நல்ல எடை கொண்ட ஒருவன் அந்த இடத்தில் ஆடாமல் அசையாமல் ஒரு முப்பது நிமிடம் நின்றான் எனில் அவன் காணாமல் போய் விடுவான் . ஆபத்தான இடந்தான் ஆனால் இதெல்லாம் ஒரு விசியமாகவே எங்களுக்கு தெரியவில்லை படபடவென நடந்து மறுபக்கம் வந்து விட்டோம் . எங்கள் கால் தடம் பட்ட இடமெல்லாம் நீர் சுரந்து வந்து கொண்டிருந்தது . 

இனி செல்லப்போகும் இடத்திற்கு நாங்கள் மிருகமாகவே மாறவேண்டியதாயிற்று . அந்த காட்டில் இருந்த மரங்கள் ஒன்றை ஒன்று தழுவி கொண்டு ஒரு சின்ன இடை வெளியை மட்டுமே விட்டிருந்தது . அதனை கடக்க கைகளையும் கால்களாக மாற்றி ஒரு மிருகமாகவே மாறினோம் . இப்படி மனிதனாகவும் மிருகமாகவும் மாறி மாறி வந்த பதினைந்து நிமிட பயணத்திற்கு பின் , ஒரு வழியாக காடு முடிவடைந்து கரை கண்ணில் பட்டது . காட்டை கடந்த சந்தோசம் ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு விசயம் எங்களுக்கு பயங்கரமான ஆச்சரியத்தை தந்தது . கண்ணுக் கெட்டிய தூரம் வரை அங்கு கரை மட்டுந்தான் தெரிந்தது .


ஆமா ... கடல் எங்க ? என்று நான் கேட்டதற்கு 

அது தான் கடல் என கிழக்கு திசை நோக்கி கை நீட்டினான் ஸ்ரீராம் .

சில நொடிகளின் யோசனையிலே கடலை நோக்கி புறப்பட்டோம் . இனி எங்களுக்கு வரபோகும் சங்கடங்களை காணமுடியாதவராய் சூரியனும் புறப்பட்டார் . இந்த மண்ணும் கொஞ்சம் ஈரப்பதமாகத்தான் இருந்தது . நடந்து போவதில் எந்த தடையும் இல்லை . வெயில் காலம் என்பதால் சூரியன் மறைந்த பின்னும் வெளிச்சம் இருந்தது . ' இத்தோடு நிறுத்திக் கொள் ' என்று கால்கள் சுதறும் அளவு நடந்து விட்டோம் , சூரியன் இல்லாத வெளிச்சமும் மங்க தொடங்கிய போது தான் எங்களின் மிகப்பெரிய முட்டாள் தனத்தை உணர்ந்தோம் . இவ்வளவு நேரம் நாங்கள் கடலென கருதியது கடலே இல்லை வெறும் அடி வானந்தான் . இன்னுமும் கண்ணுக் கெட்டிய தூரம் வரை மணல் தான் தெரிந்தது . பின்னாடி திரும்பி பார்த்தபோது நாங்கள் கடந்து வந்த காடு புற்கள் போல தெரிந்தது . 

' கடல் காத்து வருது அப்ப அங்க கடல் இருக்கு' என்று சூரியா சொன்ன உடனே ' லோக்கேசனை பார்த்தால் தெரிந்துவிடும் ' என சொல்லி கொண்டே செல்போனை எடுத்தேன் . அடர்ந்த கோடிய காட்டு பயணம் எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்தது . சுத்தமாக டவர் இல்லை . அவர்களது செல்போனுக்கும் அதே கதி தான் ஒரு நிமிடம் அந்த மணல் பரப்பை பார்த்தபடியே நின்றோம்.

' போயிடலாம் ' என்றான் ஸ்ரீராம் 

ராஜி , திரும்ப போகலாம் ஆனா வந்த வழியா போகமுடியாது . 

ஏன் என்றேன் . 

ராஜி , நாம நாலு மணிக்கு நடக்க ஆரமிச்சோம் , மணி இப்ப ஏழாகப் போகுது , திரும்ப காட்டு வழியா நடந்து போனா போயி சேர பத்தாகிடும் வழியில் ஏதாவது பூச்சோ பாம்போ கடிச்சிட்டா கூட இருட்டுல என்ன ஏதுனு தெரியாது .... அதுவும் இந்த நைட் டைம்ல நரிலாம் பாத்த உடனே தொரத்த ஆரமிச்சிடும் , கண்டிப்பா நம்ப நாலு பேருல ஒருத்தவனையாவது கடிக்காம உடாது . 

இவன் இப்படி முடிக்கும் போதே நாங்கள் பயத்தில் உறைந்திருந்தோம் . இப்போது நிற்கும் இடத்தில் இருந்து இடது பக்கமாக சென்று கொண்டே இருந்தால் உப்பளம் வருமென நாங்களாவே முடிவெடுத்து நடக்க தொடங்கினோம் . மணி ஏழு - ஐ தொட்டது . நாலா புறமும் மணலால் பரந்திருந்த இடம் இப்போது இருளால் மூழ்கி இருந்தது . கோடிய கரையின் கலங்கரை விளக்கொளி மட்டும் எங்களுக்கு பயன்படாமல் சுற்றி கொண்டிருந்தது . 

தொடர்ச்சியாக நடக்க முடியவில்லை சிறிது நேரம் ஓய்வெடுத்த பின் நடந்தோம் . இப்படியே நாலைந்து முறை செய்தோம் . அலுப்பு தெரியாமல் இருக்க இதற்கு முன் கோடியக்காட்டிற்கு வந்த போது என்னவெல்லாம் நடந்தது என்று பேசிக் கொண்டோம் . அதுபோலவே நேரம் போனதே தெரியாமல் மணி ஒன்பதை நெருங்கியது . இப்படியே போனால் உப்பளம் வரும் என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை . தாகத்தின் போது மட்டும் தண்ணீரை குடித்து கொண்டதால் இரண்டு பாட்டிலிலும் ஒரு விரல் அளவு தண்ணீர் மீதம் இருந்தது . வெறும் மணல் பரப்பில் இப்போது பாதி கிழிந்த துணிகள் உடைந்து போன பாத்திரங்கள் மூட்டைகள் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத பொருட்களென பல பொருட்கள் முழுவதுமாக புதையாமல் இருந்தது . இந்த பொருட்களை தாண்டி ஒரு கவிழ்ந்த படகு பாதி புதைந்த நிலையிலிருந்தது . இதெல்லாம் 2004 சுனாமி விட்டுச் சென்ற அடையாளங்கள் . இயற்கையாகவே இந்த இடம் கொஞ்சம் மேடாக இருந்தது . சுனாமி கொண்டு வந்த டொருட்கள் இந்த மேடான பகுதியில் தட்டுப்பட்டு புதைந்திருக்கும் . மனித நடமாட்டமே இல்லாததால் பொருட்கள் மண்ணிடமே உள்ளது. 

' இனி என்னால் முடியாது ' என்று அந்த படகருகே சென்று படுத்தான் சூரியா  

' என்ன ரெஸ்ட் எடுத்துட்டு போலாங்குறியா ' என்று கேட்டேன் 

சூரியா , ' இல்ல இங்கேயே தூங்கிடுவோம் விடிஞ்சதும் போகலாம் ' என்றான் 
எங்களுக்கு தூக்கி வாரி போட்டது . 

வீட்ல தேடமாட்டாங்களா எந்திரி என்றான் ராஜி.
சூரியாவின் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லை கண்ணை மூடி படுத்தே இருந்தான்.

ராஜி , ' நீ வேணும்னா தூங்கு நாங்க கிளம்புறோம் .... வாங்கடா ' என சொல்லிவிட்டு நடந்தான் . 

அப்போது மெதுவாக எழுந்து ' இங்க பாரு உட்பளத்த நெருங்கிட்டோம்னா மணல் ஈரமாகிடும் , பொதகுழி கூட இருக்கலாம் இந்த நேரத்துல நீ அதுல மாட்டிகிட்டனா உன்ன காப்பாத்துற அளவுக்கு தெம்பு என்ட இல்ல ' என்று சொல்லி விட்டு மீண்டும் படுத்தான் . 

ராஜி என்ன நினைத்தானோ எதுவுமே சொல்லாமல் வந்து படுத்துவிட்டான் . நாங்களும் போய் படுத்து விட்டோம் . பசி இருந்தாலும் அந்த பால் போன்ற நிலவொளியை பார்த்துக் கொண்டே நித்திரையில் ஆழ்ந்தோம் . எனக்கு வெறுந்தரையில் படுத்து பழக்கமில்லை அதனால் தூக்கமே வரவில்லை கண்ணை மூடி படுத்தே இருந்தேன் . அந்த குளிர்ச்சியான காற்றினாலும் நடந்த கலைப்பினாலும் என்னை அறியாமலே தூங்கினேன் . 

திடீர் என்று ஒரு ஒலக்குரல் தூக்கத்தை கலைக்கும் விதமாக இருந்தது அந்த குரல் . மணி மூனு இருக்கும் . நால்வருமே குரல் வந்த திசையை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தோம் ஓரிரு நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் அந்த ஓலக்குரல் வந்தது ஆனால் இந்த முறை அது மயில் அகவும் சத்தந்தான் என எங்களை நாங்களே சமாதானம் செய்து கொண்டோம் . 

அந்த குழப்பமான குரல் எதனுடையதாக இருக்கும் என்று நான் யோசித்து கொண்டிருக்கையில்
' அப்ப காடு இந்த பக்கந்தான் இருக்கு , காலைல எந்துரிச்ச உடனே இப்புடியே நடக்க வேண்டியதான் என்றான் ராஜி . 

மீண்டும் அந்த மர்மத்தை  எண்ணிய படியே கண்ணை மூடினேன் . கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் வந்தது . நான் தான் முதலில் எழுந்தேன் . பின் எல்லோரும் எழுந்து மிச்சம் இருந்த நீரினால் கண்ணை மட்டும் துடைத்துக் கொண்டு கிளம்பினோம் . நடக்க நடக்க தூரத்தில் வாட்ச் டவர் இருப்பதை கண்டோம் . காட்டின் மேற்பரப்பை காணவும் வழியினைக் கண்டறியவும் இது பயன்படும் . வேகமாக அந்த டவருக்கு சென்று பார்த்த போது , காட்டையும் உப்பளத்தையும் பிரிக்கும் விதமாக மதில் ஒன்று புலப்பட்டது , அது சாலையில் தொடங்கி காட்டின் எல்லை மாதிரி அமைந்து முடிந்திருந்தது . மதிலை பார்த்தபடியே நடக்க தொடங்கினோம் . சூரியா சொன்னது நூத்துக்கு நூறு சரி . அங்கு ஒரு புதைக்குழி இருந்தது . முன்பு அந்த குளத்தில் பார்த்தது போல் இல்லை இது . சகதி குமிழ்களோடு இருந்தது ஆழம் அறிய ஒரு பெரிய குச்சை குழியில் சொருகிப் பார்த்தோம் . என் கண்ணை என்னாலே நம்ப முடியவில்லை அடுத்த நொடியே குச்சை வைத்த தடயம் கூட இல்லை . தப்பி தவறி இதில் நாம் காலை வைத்தோம் .. தீர்ந்தோம் என்று எண்ணியபடியே அங்கிருந்து நகர்ந்தோம் .

பெரிய மதில் அது . ஏறுவதற்கு சிரமந்தான் இருந்தும் ஏறிவிட்டோம் . கால் வழுக்கி எந்த பக்கம் விழுந்தாலும் கட்டு போட வேண்டியது தான் ஆனால் நடப்பதற்கு ஏதுவாக மதில் அகன்றே இருந்தது . நடக்க நடக்க சாலை தெரிந்தது . மதில் பயணம் முடிவடையும் போது கோடியக் காட்டின் பெயர் பலகையின் மேல் குரங்குகள் இருப்பதை பார்த்தோம். 

இப்படியாக எங்களின் கொடிய காட்டுப்பயணம் முடிவுக்கு வந்தது. உண்மையில் கோடியக்காடு அயல்நாட்டுப்பறவைகள், பலவிதமான மான்கள், கூட்டம் கூட்டமாக குரங்குகள், செழிப்பான மரங்கள்,  மருத்துவ குணமிக்க மூலிகைகள், எழில் மிகுந்த இடங்களென ரம்மியமான தோற்றத்தை கொண்டிருந்தாலும் . முட்புதர்கள், விசப்பூச்சிகள், பாம்புகள், வழுக்கும் இடங்கள், ஆழந்தெரியாத புதைக்குழிகள், நரிகள், காட்டுப்பன்றிகள், நன்னீரே கிடைக்காத இடமென கொடிய பலவற்றை தன்னுள்ளே அடக்கி உள்ளது .சூரியன் உதயமான அந்த நேரத்தில் நேற்று மாலை நாங்கள் போட்ட திட்டத்தை நினைத்து சிரித்துக்கொண்டே வீடுதிரும்பினோம்…


-தீசன்

1 Comments

  1. சிறுகதையில் இதை சேர்க்கக்கூடாது. பயண கட்டுரையாக வெளியிட வேண்டும். பயணக்கட்டுரையிலும் ADVENTURE TRIPல் சேர்க்கலாம்.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு