Trending

பாபா திரைப்படம் மறு வெளியீடு ஏன்?

பாபா திரைப்படம் மறு வெளியீடு ஏன்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான திரைப்படம் பாபா. இமய மலையில் இன்றளவும் ஒளி வடிவமாக வாழ்வதாக கூறப்படும் மகா அவதார் பாபாஜி அவர்களின் சக்திகளை வெளிப்படுத்தும் நோக்கோடு இப்படம் தயாரிக்கப்பட்டது. 


பாட்ஷா, அண்ணாமலை போன்ற படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாதான் இயக்குனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருப்பார். ரஜினியே கதை, திரைக்கதை எழுதியிருந்தார்.


இப்போது பாபா படத்தை நவீன தொழில்நுட்பத்தில் கலர் கிரேடிங் செய்து மறு வெளியீடு செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் செதுக்கப்பபடுகிறது.


"டிப்பு டிப்பு" "மாயா மாயா" "இராஜ்யமா" "சக்தி கொடு" போன்ற பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான் இசையில் மீண்டும் ரீமிக்ஸ் செய்யப்பட்டு வருகிறது. மக்களுக்கு போரடித்த காட்சிகள் நீக்கப்பட்டு புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டு வருகின்றன.


புதிய காட்சிகளில் நடிப்பதற்காகவும், டப்பிங் பேசும்  பணிகளுக்காகவும் ரஜினி பதினைந்து நாள் கால்ஷீட் கொடுத்து உள்ளார். "டால்பி அட்மாஸ்" மியூசிக் மிக்ஸ் மூலம் படம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஆரம்பக் காட்சி முதல் படம் முடியும் வரை புதிதாக எடிட் செய்து  தொகுக்கப்பட்டுள்ளது.


வரும் டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினி பிறந்த நாளில் படம் திரையிட வேலைகள் நடந்து வருகின்றன.


பாட்ஷா, படையப்பா போல எவ்வளவோ படம் இருக்க, பாபாவை மட்டும் ரீ ரிலிஸ் செய்ய வேண்டிய அவசியம் ரஜினிக்கு ஏன் வந்தது?


ரஜினிகாந்த் தனது ஆத்ம திருப்திக்காக நூறாவது படமாக  நடித்த படம் ஸ்ரீராகவேந்ரா. தனது குருநாதர் பாலச்சந்தர்தான் தயாரிப்பாளர். அந்தப் படம்  வெளியாகி ஓடாமல் ஒரே வாரத்தில் படப் பெட்டிகள் திரும்பி வந்தது. பூஜை அறைக்கு சென்ற ரஜினிகாந்த் "இது நியாமா?" என்று ஸ்ரீராகவேந்திரரிடமே முறையிட்டார். என்ன ஆச்சர்யம்? மறுவாரம் முதல், தூக்கிய தியேட்டர்களில் எல்லாம் மீண்டும் பக்தர்களின் வேண்டுகோளால் படம் ஓடத் தொடங்கியது.


ரஜினி ஒரு முறை வெளிநாடு சென்ற போது விமான நிலையத்தில் உள்ள ஒரு புத்தகக் கடைக்கு சென்றிருந்தார். கடையில் உள்ள ஒரு புத்தகத்தின் அட்டைப் படத்தில் உள்ள ஒரு யோகியின் படம் அவரையே பார்ப்பது போல் இருந்தது. அது ஒரு சுயசரிதை புத்தகம்.


ஆணா? பெண்ணா? என அடையாளம் அறிய முடியாத அந்த யோகியின் பார்வை, அப்புத்தகத்தை அவரை வாங்கச் சொல்லித் தூண்டியது. உடனே அந்தப் புத்தகத்தை வாங்கிப் போட்ட ரஜினிகாந்த், அதை இருபது ஆண்டுகள் வரை படிக்கவே இல்லை.


விமான நிலையத்தில் அவர் வாங்கிய புத்தகம் என்ன தெரியுமா? "ஒரு யோகியின் சுயசரிதை" எனப்படும் பரமஹம்ச யோகானந்தரின் சுயசரிதை புத்தகம். ஒரு சுயசரிதை புத்தகம் உலகத்திலேயே விற்பனையில் முதலிடம் பிடித்தது என்றால் அது இந்தப் புத்தகம் தான்.


இருபது ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை வெளிநாடு செல்லும்போது, அவரே, அவரை அறியாமல்  அந்தப்புத்தகத்தை அவரது தோல் பையில் எடுத்து சென்றுள்ளார். ஓட்டல் அறையில் பொழுது போகாமல் இருந்த போது, அந்த புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கி உள்ளார். படிக்கத் தொடங்கியதும், அந்தப் புத்தகத்தை படிக்காமல் விட்டு விட்டு, வேறு எந்த வேலையையும் அவரால் செய்ய முடியவில்லை.


படிக்கும் போது திடீர் திடீர் என்று டார்ச் லைட் அடித்தால் வரும் ஒளி போன்ற ஒரு ஸ்பார்க் மீண்டும் மீண்டும் வந்துள்ளது. பின்னர் அந்த ஒளி அவர் உடலில் புகுந்தது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது. இதை யாரிடமாவது சொல்ல வேண்டும் என நினைத்தாலும், நம்பாமல் கேலி செய்வார்களே என ரஜினி நினைத்தார்.


அவரை அறியாமலேயே அந்த சுயசரிதையை பல முறை படித்தார். இமயமலையில் மகான்களும், யோகிகளும் மட்டுமே செய்து வந்த கிரியா யோக முறைகளை, சாதாரண மனிதர்களும், சம்சாரிகளும் அடையும் வழி அதில் கூறப்பட்டு இருப்பதை உணர்ந்தார்.


பின்னர் யோகி சச்சிதானந்தர் மூலம் யோகங்களின் ஒவ்வொரு நிலையையும் அறியத் தொடங்கினார். உடல் ஓர் ஆலயம் என்பதையும், அந்த உடலில் மறைந்திருக்கும் ஆனந்தங்களை அறியும் திறவு கோலாக, யோகங்கள் அமைந்திருப்பதையும் படித்து உணர்ந்தார்.  


பணி படர்ந்த இமய மலையில், யார் கண்ணுக்கும் எளிதில் தெரியாத பாபாவின் ஓளி வடிவத்தை காணும் பாக்யம் ரஜினிக்கு கிடைத்தது. இத்தனை வயதில் கிடைக்காத, புத்துணர்ச்சியும், ஆனந்த அனுபவங்களும் அவரது வாழ்க்கையில் ஏற்பட்டது.


இதன்பின்னர் அவர் உடலில் 'ஆயிரம் அதிசயம்' ஏற்பட்டது. மதுவாலும், மாதுவாலும், கல்லீரலும், சிறுநீரகமும் கெட்டுப்போன அந்த உடலை வைத்துக் கொண்டு படத்ததுக்கு நூறு கோடி வாங்கும் அளவுக்கு எழுபது வயதிலும் நடிக்கும் ஆற்றல் கிடைத்தது. அந்தக் குதிரையின் ஓட்டத்தை யாராலும் நிறுத்த முடியவில்லை.


பாபாவின் அதிசயங்களை உலகறியச் செய்யும் நோக்கத்தில் பாபா திரைப்படத்தை தொடங்கினார் ரஜினி.


அதில் ஆரம்பத்தில் நாத்திகவாதியாக நடிக்கும் ரஜினிக்கு, சிகரெட் பிடிப்பது போல ஒரு காட்சி இருந்தது. அதை நீக்கச் சொல்லி பா.ம.க தலைவர் இராமதாஸ் ஒரு போராட்டத்தை அறிவித்தார்.


அது வன்முறையாக மாறி, பாபா படப்பெட்டிகள் களவாடப்பட்டன. வன்னியர் பெல்டில் படம் போடவே தியேட்டர்காரர்கள் அஞ்சினார்கள். இதனால் வசூல் பாதித்தது. முப்பது நாள் படம் ஓடினாலும், தியேட்டர்காரர்கள் தங்களுக்கு நட்டம் ஏற்பட்டதாக ணக்கு காட்டினார்கள். 17 கோடிக்கு விற்கப்பட்ட படம் 3 கோடி மட்டுமே வசூலித்ததாக கணக்கு காட்டி ரஜினியிடம் நஷ்ட ஈடு கேட்டு வாங்கினார்கள்.


பாபா படம் தோல்வி அடைந்ததாக கூறப்பட்டாலும், சிறுவர்களுக்கான விருப்பப்படமாக அது அமைந்தது. ரஜினியின் பாபா முத்திரையும், "கதம் கதம்" என்ற பஞ்ச் டயலாக்கும் ஐந்து வருடங்களுக்கு மேலும் ஒலித்துக் கொண்டுதான் இருந்தது.


சன் டிவியில் அந்தப் படம் எப்போது ஒளிபரப்பினாலும், எத்தனை முறை ஒளிபரப்பினாலும், TRP ரேட்டிங்கில் அதுதான் முதலிடத்தை பிடிக்கிறது.


தனது ஞான குருவைப் பற்றி எடுத்தப் படம் எல்லோரையும் கவர்ந்து இருந்தாலும், பார்வையாளர் மத்தியில் தோல்வியடைந்ததால், அது ரஜினியின் நெஞ்சில் முள்ளாக தைத்துக் கொண்டே இருந்தது.


"காந்தாரா" போன்ற பேண்டசி படங்கள் இப்போது வெற்றி பெறுவதால், இந்த தலைமுறையினர் ரசிக்க பாபாவை மீண்டும் வெளியிட முடிவு செய்தார் ரஜினி.


ரஜினி பாபா படத்தை தயாரித்து இருந்தாலும், அதை மறு வெளியீடு செய்து, அதில் காசு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு  இல்லை.


ரஜினி ஒரு முறை மங்களூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று இருந்தார். அம்மனை தரிசித்த ஒரு பெண்மணி யாசகர்களுக்கு பிச்சையிட்டு வந்த போது, ரஜினியையும் ஒரு பிச்சைக்காரராக கருதி பத்து ரூபாய் நோட்டு ஒன்றை  பிச்சையிட்டார். ரஜினி அதை வாங்கிக் கொண்டு கடந்து சென்றுவிட்டார்.


அருகில் இருந்தவர்கள், அந்த அம்மாவிடம், "நீங்கள் பிச்சையிட்டது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு" என்று சொன்னார்கள். பதறிய அந்த பெண்மணி, ரஜினியிடம் ஓடிச்சென்று மன்னிப்பு கேட்டதுடன் தான் கொடுத்த பத்து ரூபாயை தன்னிடமே கொடுத்து விடுமாறு கேட்டார்.


அதற்கு ரஜினி என்ன சொன்னார் தெரியுமா? 


"நான் அந்த பத்து ரூபாயை உங்களுக்கு தர மாட்டேன். ஏன் தெரியுமா? என்னிடம் கோடிக்கணக்கில் பணம் இருக்கலாம், ஆனால் கடவுளின் சந்நிதியில் "நீ ஒரு பிச்சைக்காரன்" என்பதை அந்தக் கடவுள் எனக்கு உணர வைத்த நாள் இது என்று சொன்னார்.


அதனால் பணம் காசு ரஜினிக்கு பெரிதல்ல. மனிதன் தோற்கலாம். மகான் தோற்கக் கூடாது என்ற எண்ணத்திலேயே பாபாவை வெளியிடுகிறார்.


தனது படத்திற்கு ஏற்பட்ட தோல்வியாக ரஜினி அதைக் கருதவில்லை. பாபாவின் சிந்தாந்தத்துக்கு ஏற்பட்ட தோல்வியாக அது அவரது மனதை உறுத்துவதால், மீண்டும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற உறுதியோடு புறப்பட்டுள்ளார் ரஜினி.


அதனால் பாபாவை மீண்டும் மறு வெளியீடு செய்ய முடிவெடுத்துள்ளார்.


பாபா அதிசயம் நிகழ்த்துவாரா? இந்த மாதம் தெரிந்துவிடும்.


ஜெ மாரிமுத்து

1 Comments

  1. சூரியராஜ்December 2, 2022 at 7:57 PM

    ரஜினி நடிப்பில் எனக்கு மிகமிக பிடித்த " ரஜினி படம் " பாபா தான். ரஜினி நடித்த எல்லா படமும் ரஜினி படம் ஆயிடாது. ரஜினி மேனரிசம்.. ரஜினி ஸ்டைல்.. ரஜினி பன்ச் மூன்றுமே அட்டகாசமாய் மிளிரும் ஒரே ரஜினி படம் அதுதான். அதுமட்டும் தான்.

    படையப்பா பாட்ஷா கூட இரண்டாம் பட்சம் தான்.

    பாபா படத்தினை வானொலியில் ஒருவாரம் கொஞ்சம் கொஞ்சம் நேரம் வசனமாகவே ஒலிபரப்பினார்கள்.. அதன் பிறகு தான் சினிமா வில் வசனங்களை தனியாக ரசிக்க கற்றுக்கொண்டேன்

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு