Trending

மணிபல்லவம் - ஒரு பார்வை

 

மணிபல்லவம்

"அன்பின் முடிவும் கண்ணீர், கருணையின் தொடக்கமும் கண்ணீர்"


மணிபல்லவத்தை படித்து முடித்த மாத்திரத்தில் எனக்குள் எதிரொலித்த வரிகள் இதுவே.


காலச்சக்கரத்தை சுழற்றும் நாவல்கள் கண்ணீரில் முடிவடையும் போது தான் மனத்தில் நீங்காத இடத்தைப் பிடிக்கின்றன.


மணிபல்லவம் நா.பார்த்தசாரதியின் இரண்டாவது சரித்திர நாவல். சரித்திர நாவல்களில் இஃதோர் புதுமை. எல்லா சரித்திர நாவல்களும் பெரும்பங்கு உண்மையை அடிப்படையாக்கி புனையப்படுவது ஆனால் மணிபல்லவம் நூலானது கதைக் களத்தை தவிர்த்து மீதி அனைத்துமே கற்பனை ரூபங்களால் நிறைந்தது. மணிப்பல்லவத்தில் வரும் அனைத்து கதை மாந்தர்களும் கற்பனையே! புத்தத்தரை தவிர.


சங்கம் மருவிய காலத்தின் தமிழக பண்பாட்டை விளக்கவே பார்த்த சாரதி அவர்கள் மணிப்பல்லவத்தை எழுதி இருக்கிறார். அதிலவர் வெற்றியும் கண்டார்.


இளங்குமரன் என்னுமோர் அழகிய இளைஞன் அருட்செல்வர் என்னும் அறநெறி துறவியின் அடைக்கலத்தில் வளர்கிறான். தனது தாய் தந்தையைப் பற்றி அறிய அவனெடுக்கும் முயற்சிகள் வீணாகிப் போக ஒருகட்டத்தில் அந்த ஆசையே இல்லாதவனாகிறான்.


காப்பியத்தில் நிறுவப்படும் தலைமகனுக்கு உரிய அனைத்து நலன்களையும் இளங்குமரன் பெற்றிருக்கிறான். 


சித்திரை மாதத்தில் சோழர்களின் களி பண்டிகையான இந்திரவிழாவில் மல்யுத்த போட்டிக்கு சவால்விடும் யவன மல்லர்களை பந்தாடிவிட்டு இளங்குமரன் நகருகையில் அனைத்தையும் பல்லக்கில் அமர்ந்து கொண்டு இன்நகையோடு காண்கிறாள் ஒரு இளநங்கை, அவளே சுரமஞ்சரி. மணிபல்லவத்தின் எத்தனை முக்கியமான பாத்திரம் அவள். ஆனால் இளங்குமரனோ சுரமஞ்சரியை முதல் சந்திப்பிலே சுலபமாய் தவிர்க்கிறான்.


உலக இன்பங்களே ஏக்கம் கொள்ளும் அளவிற்கு எழில் படைத்த இளங்குமரனுக்கு அவ்வுலக இன்பத்தின் மீது பற்றில்லாது போவதே நாவலின் மூலக்கரு.  அனைவராலும் விரும்பப்படும் ஓர் அழகிய இளைஞன் துறவியாக விரும்பினால் என்னவாகும்?


கேட்கவே சுவாரஸ்யமாக இருக்கும் இந்த கரு தான் கதையை நகர்த்துகிறது ஆனால் தானொரு மாண்பு மிகுந்த மனிதனாகப் போகிறோமென்பதை கதைத் தலைவனே அறியாதபடி அக்கதை செல்கிறது. இன்னும் ஒருபடி மேல் சென்று தான் யாரென்றே தெரியாத ஒருவன் தன்னை தேடும் பயணத்தில் ஈடுபடுத்திக் கொள்கிறான்.


இந்தக் கதையில் அனைவரையும் ஒருங்கே கவர்கிற சுரமஞ்சரி, வீரத்தையே ஒரு தவமாகச் செய்யும் நீலநாகர், பிடிவாதமாக அன்பு செய்து தளரும் முல்லை, தீமைகளின் எல்லையில் போய் நிற்கும் நகை வேழம்பர், நயமிகு ஓவியன் மணிமார்பன், நல்லவற்றிற்கு இலக்கணமாகத் திகழும் அருட்செல்வர் எனப்பல கதாபாத்திரங்கள் நடனமாடுகின்றனர் என பூம்புகார் பதிப்பகத்தார் தரும் பதிப்புரை உவமையே அழகாய் ஒரு பாத்திர முன்னுரையை அளிக்கின்றது.


காருண்யம் தவழும் இந்த புத்தகத்தில் திருநாங்கூர் அடிகளின் வருகை ஞானப்பசியை தூண்டும். இளங்குமரனின் வாதங்கள் சமயத் தெளிவினை நல்கும். 


முன்னைய நம் தமிழகம் எத்தனை ஆற்றல் மிக துறைகளையும் திறனாளர்களையும் வெளிப்படுத்தி இருக்கிறது என்பதற்கு மணிபல்லவம் ஒரு வெளிச்சம்.


நா.பா குறிப்பிட்டுள்ள அனைத்து சங்க வழக்கத்திற்கும் புறமகம் பா ஆதாரமுண்டு. ஊர் பெயர், இறை பெயர், வணக்க முறை, பழக்கம், படையல் என ஆசிரியர் குறிப்பிட்ட அனைத்துமே சங்க இலக்கிய பாடல் குறிப்புகளில் இருந்து செய்யப்பட்டது என்பதை அறிந்து கொண்ட போது மலைத்து போய் விட்டேன். காரணம், சங்க இலக்கியத்தின் அனைத்து பாடலையுமே நினைவில் கொண்டாலொழிய இது சாத்தியம் இல்லை.


நீலநாகரும் திருநாங்கூர் அடிகளும் ஞானத்திலே அடக்கத்தை தந்து சென்றபின் முல்லையும் சுரமஞ்சரியும் அழுகையைத் தருவார்கள். அதுவும் சுரமஞ்சரியின் தியாக உணர்வை அளவிடும் போது இராஜராஜனின் மணிமகுடத் தியாகம் எனக்கு பெரிதாகப்படவில்லை. முல்லையின் பேதைத் தனமும் படிப்போர் கண்களை குளமாக்குகின்றன.


என்னதான் கற்பனை கதையாக இருந்தாலும் ஒவ்வொரு புத்தகமும் ஒரு பயண அனுபவத்தை அளிப்பதாகவே உணர்கிறேன். அதிலும் மணிபல்லவப் பயணம் ஆபுத்திரன் அடைந்ததைப் போன்றே ஒரு ஞானப்பயணம்.


இறுதியாக, நா.பார்த்தசாரதியின் இந்த நாவல் 'நாவலோ நாவல்'


தீசன்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு