Trending

உலகத்தை மாற்ற விரும்பினால், முதலில் உன்னை மாற்று

உலகத்தை மாற்ற விரும்பினால், முதலில் உன்னை மாற்று


        மது அருந்துவதை நிறுத்திவிட்டால் மது கடைக்களுக்கு வேலை இல்லை. புகைப்பிடிப்பதை நிறுத்தி விட்டால் சிகரெட் விற்பனையை நிறுத்திவிடலாம்.


        எனில், ஏன் பொருட்களை தடை செய்ய வேணும்.! குடிப்பதையும் புகைப்பதையும் குற்றமென்று அறிவித்தாலே போதுமே. 


        "எல்லோரையும் குடிப்பதையும் புகைப்பதையும் நிறுத்த சொல்லுங்கள் நாங்கள் விற்பதை நிறுத்துகிறோம்".


        இது தான் வணிகர்களின் வாதம்.


        "விற்பதை நிறுத்த சொல்லுங்கள் நாங்கள் வாங்குவதை நிறுத்துகிறோம்" இது குடிமகனின் வாதம்.


        எதற்கும் தீர்ப்பை எடுத்த எடுப்பிலே வழங்கிவிட முடியாது. கொஞ்சம் தீர விசாரிக்க தான் வேணும். அதற்கு இனி நாம் மூன்றாம் நபரின் குரலையும் கேட்டாக வேண்டும்.


        "அது எப்படி! எல்லோரும் எங்களையே குறை சொல்கிறார்கள்? அரசாங்கம் விற்கிறது அதனால் எல்லோரும் குடிக்கிறார்கள். எல்லோருக்கும் குடிக்க வேண்டும் போலிருக்கிறது அதனாலும் குடிக்கிறார்கள். விற்பதால் குடிக்கிறார்கள், குடிப்பதால் விற்கிறார்கள். இவைகளை எல்லாம் விற்பதால் தானே குடிக்கிறார்கள். அதனால் தானே நாங்களும் நடிக்கிறோம். இவைகள் இல்லை எனில் நாங்கள் ஏன் நடிக்கப் போகிறோம்? நாங்கள் நடிக்காவிட்டாலும் இவர்கள் குடிக்கத்தான் போகிறார்கள். முதலில் மது, புகை, சூது இவைகளை அரசாங்கம் நிறுத்தட்டும் பிறகு நாங்களும் இவற்றின் விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்துகிறோம்"


        இது தான் நடிகர்களின் வாதம்.


        அவரவர்களுக்கு அவரவர் நியாயம், அவரவர் தர்மம். 


        "விற்பது என் தொழில், நான் விற்பேன். நடிப்பது என் தொழில், நான் நடிப்பேன். குடிப்பது என் தொழில், நான் குடிப்பேன்."


        சுருக்கமாக சொன்னால், இம்மூவரின் மொத்த வாதமே இதுதான்.


        சூதாடுவது சத்ரிய தர்மம். அதனாலே தர்மன், சூதாட்டத்தை தர்மமென எண்ணி சூதாடினான். அதனால் நடந்தது என்னவோ?


        தர்மம் என்பது நன்மை செய்வது. நன்மை பக்கமிருப்பது. உண்மை என்பது சொல்லால் ஆவது. மெய்ம்மை என்பது மனம், வாக்கு, உடலால் ஆவது. சிறு நேர மகிழ்ச்சிக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு சமுதாயத்தை கெடுக்கும் இவர்களால் ஆன பயன் என்ன? இவர்களின் வெளிக்குரல் 'தடை செய்ய'க் கூறும். உள் மனம் தடை செய்தால் அழும்.


        என்றுமே புகையையோ மதுவையோ அரசாங்கத்தால் ஒழிக்க முடியாது. அரசாங்கமே ஒழித்தாலும் அது ஒழியாது. சில தடை செய்யப்பட்ட பொருட்கள் பல கடைகளில் விற்பனை செய்யப்படுவதைத்தான் காண்கிறோமே!


        தனிமனித ஒழுக்கத்தை கல்வியாலொழிய வேறு எவராலும் திருத்த முடியாது, என்பது என் துணிபு. கல்வியும் நம் தமிழ்நாட்டில் நல்ல நிலையில் இருக்கிறது. அல்லவா?


        சூதாட்ட நடிகர், நடிகைகள்  சொன்னது அனைத்தும் சரியே. அவர்கள் நடிக்காவிட்டாலும் இவர்கள் ஒன்றும் திருந்த போவதில்லை. நிச்சயமாக சூதாடுவார்கள். 


        சிகரெட்டுக்கு நீங்கள் விளம்பரத்தை பார்த்ததுண்டா? உலகிலேயே அதிகம் விற்கும் பொருள் பட்டியலில் முதலைந்து இடத்தில் சிகரெட்டும் உண்டு.


        நிலை இப்படி இருக்க.. சூதாட்ட விளம்பரங்களில் நடித்த நடிகர்களால் தான் சூதாட்டமே படைக்கப்பட்டது போல் அவர்களை திட்டித்தீர்ப்பது கொஞ்சம் அதிகம் தான்.


        நடிகர்கள் விளம்பரத்தில் வருவதால் தான் சூது ஆடப்படுகிறது என்பதல்ல, நடிகர்களின் விளம்ரத்தால் 'சூது' அறியப்படாதவராலும் அறியப்படுகிறது.


        மழைப்பெய்ய யார் காரணம்? எனும் கேள்விக்கு விடையறிவது போல் தான் புகை, மது, சூது இவைகளின் வளர்ச்சிக் காரணத்தை அறிவதும். 


        ஆனால் ஒன்று, உங்களை நீங்கள் திருத்திக் கொள்ளலாம். இவர்களை திருத்த முடியாது என்ற மனநிலைக்கு வந்து விடுங்கள்.


        ஒரு கடைக்காரரிடம் சென்று சிகரெட்-மது விற்பனையை நிறுத்த சொல்லி கேட்பது வீண்.


        ஒரு குடிகாரரிடம் சென்று குடியை விடச்சொல்லி வேண்டுவதும் வீண்.


        சமூக நலன் விரும்பும் அறிவு இல்லாத நடிகர் நடிகையிடம் இதைப்பற்றிய கேள்வியே வீண்.


        நம் தேச நலனின் மீது அக்கறை உள்ளோர்க்கு ஒன்று உரைக்கின்றேன், "இந்த நாட்டை நலம் செய்ய எவனது துணையும் நமக்கு அவசியம் இல்லை. எந்த கட்சி காரனின் உதவியும் நமக்கு வேண்டியதன்று. இந்த நாட்டை நலம் செய்ய தனி நபரின் மன உறுதி ஒன்றே போதுமானது. 'என்னால் முடியும்' எனும் வார்த்தையினால் ஆகாதது ஒன்றும் இல்லை. நான் ஒருபோதும் புகைப்பிடிக்க மாட்டேன். நான் ஒருபோதும் மது அருந்த மாட்டேன். நான் ஒருபோதும் நம் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு தவறான உதாரணமாக இருக்க மாட்டேன். தீமையின் வழி என்னிடம் பணம் சேர்ந்தால் அதை பெரிதும் அவமானமாய் கருதுவேன். நான் இந்த உலகத்தை அறப்பாதைக்கு மாற்ற துடிக்கிறேன். அதனால் என்னை அதுப்படியே அறவோனாய் மாற்றி கொள்கிறேன். உங்களுக்கும் நானுரைப்பது இதுவே,


        அடுத்தவர்களை எதிர்ப்பார்த்து கிடக்க வேண்டாம். உலகத்தை மாற்ற விரும்பினால், முதலில் உன்னை மாற்று


தீசன்

2 Comments

  1. Sarathkumar thaakkappattar 🤣🤣🤣

    ReplyDelete
  2. மிகவும் சரியாக சொன்னீர்கள் தீசன். பெரிய முட்டாள் தனம் அடுத்தவர்க்காக காத்திருப்பது தான். - பாபு

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு