Trending

அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை

 

அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை

Download PDF 

முன்னுரை | அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை


அண்ணா… இந்த மூன்றெழுத்து 1939 க்கு முன்பு ஒரு குடும்பத்தின் மூத்த சகோதரனைக் குறிப்பதற்கு மட்டுமே பயன்பட்ட உறவுச்சொல். பின்னர் தமிழக அரசியலில் ஓர் உயிர்ப்புச் சக்தியாக, மந்திரச் சொல்லாக மாறிவிட்ட பெருமைக்கு உரிய சொல்லானது. அரசியல்வாதிகளில் திறமைசாலிகளாகவும் அறிஞர்களாகவும் இருப்பவர்கள் ஒரு சிலரே. அவர்களில் உயர்ந்தவர் பேரறிஞர் அண்ணா. மனிதாபிமானமிக்க தலைவராக, மக்கள் தொண்டராக திகழ்ந்த அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை இந்த பதிவின் கருபொருளாகிறது.


பிறப்பு | அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை


அறிஞர் அண்ணா 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் பட்டு தொழிலுக்கு பெயர் போன காஞ்சி மாநகரத்தில் பிறந்தார். தந்தை நடராசர். தாயார் பங்காரு அம்மாள். ஆரம்ப கல்வியையும், உயர்நிலை படிப்பையும் காஞ்சியிலே படித்தார். பின்னர் பட்டப்படிப்பை சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் படித்தார். சிறுவயதிலே பல்வேறு எழுத்தாளர்களின் அறிவார்ந்த நூல்களை எளிதாக படிக்கும் திறனை அறிஞர் அண்ணா கொண்டிருந்தார். அண்ணாவை அன்போடு சீராட்டி வளர்த்தவர் இராசாமணி அம்மையார் ஆவார். 


இளமை பருவம் | அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை


அண்ணாவின் அம்மா பங்காரு அம்மாள் அண்ணாவின் சிறுவயதிலே இறந்துவிட்டமையால் அண்ணாவின் தந்தை நடராசன் இராசாமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இராசாமணி அம்மையார் அவர்கள் அறிஞர் அண்ணாவை 'தொத்தா' என அன்போடு அழைத்தார். அறிஞர் அண்ணா தனது விருப்பப்படியே இருபத்தி ஒன்றாம் வயதில் இராணி அம்மையாரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் குழந்தை பிறக்காத காரணத்தால் தனது சகோதரியின் பேர குழந்தைகளையே தன் குழந்தைகளை போல் வளர்த்தனர் அண்ணாவும் இராணி அம்மையாரும். 


கல்வி மற்றும் பணி | அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை


1934ல் இளங்கலை பொருளியில் சில வருடங்களிலேயே முதுகலை பொருளியலிலும் செம்மாந்த அறிவுடன் தேர்ந்தார் அண்ணா. இந்த படிப்பு பிற்காலத்தில் அண்ணாவுக்கு நாட்டை நிதி தேவைகளில் வளமாக்க பெரிதும் உதவியது. சென்னை பச்சயப்பன் கல்லூரியில் அறிஞர் அண்ணா அரசியல் துறை சார்ந்த பட்ட படிப்பினை படித்து தேர்ந்தார். பின்பு பச்சயப்பன் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். எழுத்து துறையிலும் கலை ஆர்வத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அண்ணா தனது ஆசிரியர் பணியை விட்டுவிட்டு தமிழ் உலகிற்குள் காலடி எடுத்து வைத்தார். 


பெரியார் சந்திப்பு | அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை


1935 ஆம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற சமூக சீர்த்திருத்த மாநாட்டில் பெரியாரை சந்தித்து பேசினார். அண்ணாவின் தமிழ் பேச்சாற்றல், தன்னடக்கம், பணிவு பெரியாரை பெரிதும் கவர்ந்தது. அண்ணாவை தன்னுடைய வாரிசாக ஏற்றுக்கொண்டார் பெரியார். அத்துடன் தான் நடத்தி வந்த 'குடியரசு' இதழின் ஆசிரியராக அண்ணாவை நியமனம் செய்தார். பகுத்தறிவு மணம் பரப்பும் கட்டுரைகள், கவிதை, கேலிச்சித்திரங்களை அண்ணா குடியரசு இதழிலில் தீட்டினார்.


சினிமாத்துறை | அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை


அண்ணா ஒரு மாபெரும் தலைமை பண்பு மிக்கவராக இருந்தாலும் அவரது அடிப்படை ஆர்வம் தமிழே. எழுத்து உலகில் அண்ணா படைத்த சாதனை அளப்பரியது. அண்ணாவின் புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட போது அண்ணாவின் புத்தகங்களுக்கு அரசு 75 லட்சம் ரூபாய் தந்தது. இதுவரை நாட்டுடமை செய்யப்பட்ட எந்த எழுத்தாளருக்கும் தரப்படாத தொகையானது அண்ணாவுக்கு தரப்பட்டது. அண்ணா பல முற்போக்கு நாடகங்களை எழுதி இருக்கிறார். நடித்தும் இருக்கிறார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியதோடு இல்லாமல் அதில் அரசியல் கருத்துகளை பரப்பிய முதல் மனிதர் அறிஞர் அண்ணா தான்.


பெரியார் அண்ணா விரிசல் | அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை


நீதிக்கட்சியிலிருந்து விலகி பெரியார் திராவிடர் கழகத்தை உருவாக்கினார். அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் பெரியாரோடு இணைந்து பயணித்தார்கள். திராவிடர் கழகத்தவர்கள் "கருப்பு சட்டை மட்டுமே அணிய வேண்டும்" என்று பெரியார் கட்டளை இட்டார். இதை அண்ணா ஏற்கவில்லை. தூய வெள்ளை கைத்தறி ஆடைகளையே அணிந்தார்.


தேர்தல் அரசியலில் திராவிடர் கழகம் ஈடுபடாது என பெரியார் அறிவித்தார். தேர்தலில் ஈடுபட்ட நீதிக்கட்சி வெற்றி பெற்று, அதிகாரத்துக்கு வந்ததால் இட ஒதுக்கீடு, ஏழைகளுக்கு கல்வி, மதிய உணவு போன்ற நன்மைகள் மக்களுக்கு கிடைத்தது. அதனால் தேர்தலில் போட்டியிட்டு, அதிகாரத்துக்கு வருவதே சரியென அண்ணா நினைத்தார்.  அதனால் பெரியாரின் இந்தக் கருத்தையும் அண்ணா ஏற்கவில்லை.


"பிரிட்டிஷ்காரனிடம் இருந்து மீண்டு, வட தேசத்து, ஆரியனுக்கு அடிமை ஆவோம்" என எண்ணிய பெரியார் இந்தியா விடுதலை பெற்ற திருநாளை துக்க நாளாக அறிவித்தார். இந்திய விடுதலை போரில் பாரதி, வ.உ.சி, திருப்பூர் குமரன், பூலித்தேவன் போன்ற தமிழக மக்களும் பங்கெடுத்து இருப்பதால், பெரியாரின் துக்க நாள் அறிவிப்பை அண்ணா எதிர்த்தார்.


எல்லாவற்றுக்கும் மேலாக பெண் உரிமை பேசிய பெரியார் எழுபது வயதில், தன்னை விட நாற்பது வயது குறைவான மணியம்மையை, மணந்ததால் எதிர்கட்சிகளின் கேலிக்கு உள்ளானார்.


அண்ணாவுக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டது. "இந்தத் திருமணம் வேண்டாம்" என அண்ணா பெரியாரிடம் சொல்லிப்பார்த்தார். பெரியார் கேட்கவில்லை.  அதனால் பெரியாரை விட்டு பிரிந்து, 1949 ஆம் ஆண்டு சென்னை ராபின்ஸன் பூங்காவில்," திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற தனிக்கட்சியை அண்ணா தொடங்கினார்.


அண்ணாவின் ஆட்சி | அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை


1956 - ஆம் ஆண்டு திருச்சியில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தனது கட்சி வருகிற பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டுமா? வேண்டாமா? என்று வாக்களித்து தீர்ப்பு கூறும்படியாக வந்திருந்த அனைவரையும் கேட்டுக் கொண்டார். கூடியிருந்த மக்கள் 1957 பொதுத் தேர்தலில் கழகம் நேரடியாகப் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அப்போது நடைபெற்ற தேர்தலில் அண்ணா காஞ்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


பின், 1962 தேர்தலில் அண்ணா காஞ்சி தொகுதியில் தோல்வி அடைந்தபோதிலும் 51 உறுப்பினர்களைப் பெற்று அவருடைய கட்சி பலம் வாய்ந்த எதிர்க்கட்சி ஆனது. அண்ணா மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். அவரது பேச்சு அப்போதைய பிரதமர் முதல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் கவர்ந்தது. 1967 - ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 138 இடங்களில் இவரது கட்சி வெற்றி பெற்றது இதனால் ஆட்சியைப் பிடித்தார் அண்ணா. எல்லா கட்சித் தலைவர்களையும் சந்தித்து அவர்களின் வாழ்த்தினைப் பெற்றார். எளிமை, இனிமை, கனிவு, பாசம், மாற்றாரை மதிக்கும் மகத்தான பண்பு மனித நேயம் இவற்றைக் கொண்டு அறிஞர் அண்ணா சிறந்த பண்பாளராக விளங்கினார்.


அறிஞர் அண்ணாவின் சாதனைகள் | அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை


புரோகிதர்களை வைத்து புரியாத மொழியில் மந்திரத்தை ஒதி, பெண்ணை பெற்றவரை கடனாளியாக்கும் திருமண முறைக்கு மாற்றாக, மாலைகளை மாற்றி, உறுதி மொழி ஏற்று, செலவில்லாமல் திருமணம் செய்யும் சீர்த்திருத்த திருமண முறைக்கு, சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுத்தார்.


தமிழை விழுங்கத் துடித்த இந்திக்கு கடிவாளம் போட, இருமொழிக் கொள்கையை உருவாக்கினார்.


"பட்டினியாக கிடந்தால், எலியை பிடித்து திண்ணுங்கள்" என அறிவுரை கூறிய பக்தவசலத்துக்கு, பதிலடியாக படி அரிசி திட்டத்தை சென்னையிலும், கோவையிலும் கொண்டு வந்தார்.


இலாப நோக்கோடு நடத்தப்பட்ட தனியார் பஸ் போக்குவரத்து சேவைகளை அரசுடைமை ஆக்கினார். அமைச்சர்களின் ஊதியத்தை பாதியாக குறைத்தார்.


ஒரு தனி நபர் 15 ஏக்கர் மட்டுமே நிலம் வைத்திருக்கலாம் என்ற நில உச்சவரம்பு சட்டத்தின் மூலம், 1,79,000 ஏக்கர் நிலத்தை  ஏழைகளுக்கு பிரித்து கொடுத்தார்.


தமிழ் புலவர்களுக்கு கடற்கரையில்  சிலை வைத்தார். பேருந்துகளில் திருக்குறளை எழுதி வைத்தார். பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நம் தமிழ் மொழியில், பாலில் நஞ்சை கலப்பது போல் வடமொழி கலக்க ஆரம்பித்தது. அதனால் தமிழ், தன் பொலிவை இழக்கத் தொடங்கியது.


சரியான நேரத்தில் ஆட்சிக்கு வந்த அண்ணாவால் தமிழ் ஏற்றம் பெறத் தொடங்கியது. இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு அண்ணாவால் நடத்தப்பட்டது.


மறைமலை அடிகள், தேவநேய பாவாணர், பரிதிமாற் கலைஞர் வழியில் தனித்தமிழ் கோலோச்சத்  தொடங்கியது.

  • பஞ்சாயத்து சமிதி ஊராட்சி ஒன்றியம் ஆனது. 
  • காரியக்கமிட்டி செயற்குழு ஆனது.
  • அக்கிரசேனார் அவைத்தலைவர் ஆனார்.
  • மந்திரி எல்லாம் அமைச்சர் ஆனார்.
  • ஜார்ஜ் கோட்டையில் உள்ள செகரெட்டரியேட்,  தலைமைச் செயலகம் ஆனது.
  • சட்டசபை சட்டப்பேரவை ஆனது.
  • அபேட்சகர் வேட்பாளர் ஆனார்
  • சத்யமேவ ஜெயதே, வாய்மையே வெல்லும் என மாற்றப்பட்டது.
  • ரோடு சாலையாகவும், பஸ் பேருந்தாகவும் உரு மாறியது.

அண்ணாவால் ஏற்பட்ட வேகமான வளர்ச்சியால் எதிர்கட்சியினரே திகைத்து நின்றார்கள்.


அண்ணாவின் பேச்சாற்றல் | அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை


ஒரு முறை தமிழையும் தேசிய மொழி ஆக்க வேண்டும் என அண்ணா பேசினார். "இந்திதான் அதிகமான பேரால் பேசப்படுகிறது. அதனால் இந்திதான் தேசிய மொழி ஆகும் தகுதி உள்ளது" என பதில் கூறப்பட்டது. அதற்கு அண்ணா "நாட்டில் காக்கைகள் தானே அதிகம் உள்ளது அதை விட்டு விட்டு, மயிலை ஏன் தேசிய பறவை ஆக்கினீர்கள்? என கேட்டார்.


மெட்ராஸ் ஸ்டேட்டை தமிழ்நாடு என பெயர் மாற்றும் தீர்மானத்தில் பேசிய போது, காங்கிரஸ் அமைச்சர் எழுந்து "மெட்ராஸை தமிழ்நாடு என மாற்றுவதால் என்ன பயன் அடைய போகிறீர்கள்?" என கேட்டார். அதற்கு அண்ணா "பார்லிமென்டை லோக்சபா என்றும் கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸ் என்பதை இராஜ்யசபா என்றும் பெயர் மாற்றி என்ன பலனை கண்டீர்கள்?" என அண்ணா கேட்டார். சபையே அதிர்ந்தது.


ஆங்கில மொழிப்புலமை | அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை


தமிழில் மிகுந்த ஆர்வமும் புலமையும் கொண்ட அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் அளவிட முடியாத புலமையினை கொண்டிருந்தார்.


ஒரு முறை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவிடம் சென்று, because ("ஏனென்றால்") என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி உங்களால் வாக்கியம் கூற முடியுமா என்று கேட்டனர். அதற்கு அவர்,


"No sentence can end with 'because', because, because is a conjunction."


எந்த ஒரு தொடரின் இறுதியிலும் வராத சொல் 'ஏனென்றால்', ஏனென்றால் 'ஏனென்றால்' என்பது ஒரு இணைப்புச்சொல்.


என்று உடனே பதிலளித்தார். ஆங்கிலத்தில் அதீத புலமை பெற்ற இங்கிலாந்து மாணவர்களே அண்ணாவின் பதிலை கேட்டு வியந்தனர்


அண்ணாவின் பொன்மொழிகள் | அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை


"அடக்கு முறைக்கு எதிராக திரண்டெழுந்த சமுதாயத்தின் வரலாறு மட்டுமே பேசப்பெறும். அதுவே உயிர்த்துடிப்பாகும்."


"நம்மவர் வாழ்ந்த விதம் காண்போம். அவ்விதம் நாமும் வாழ்வோம். அதற்கு தடையாக உள்ளனவற்றை தகர்த்தெறிவோம். நம்மை உணர்வோம். உண்மை உருவினை தெரிந்து கொள்வோம்."


"நாங்கள் ஒன்றும் எங்களை சகலகலா வல்லவர்கள் என்றோ, புலவர்கள், பண்டிதர்கள் என்றோ பறைச்சாற்றி கொள்ளவில்லை. அறிவுக்கு அறம் என்று பட்டதை அழுத்தம் திருத்தமாக கூறுகிறோம்."


"தீய குணம் எப்படி தன்னால் மடிந்து ஒழியும்? கடவுள் அதனை ஒரு நாள் ஒழித்தே தீருவார் என்று எண்ணிப்பயன் இல்லை. தீய குணத்தை ஒழித்திட நாம் தீவிரமாக பணியாற்றி தீர வேண்டும்."


முடிவுரை | அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை


அண்ணா சிறுவயதில் இருந்தே தொடர்ந்து கொண்டிருந்த மூக்கு பொடி பழக்கம் புற்று நோயாக மாறியது. 1969, ஜனவரி 22 அன்று அண்ணாவின் உடல் நிலை மோசமடைந்தது. 25 ஆம் நாள் அடையாறு புற்றுநோய் கழகத்தில் அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் அண்ணா. பிப்ரவரி மாதம் 2 ஆம் நாள் நள்ளிரவில் அண்ணா தன் இன்னுயிரை நீத்தார். பிப்ரவரி 4 ஆம் நாள் அவரது இறுதி ஊர்வலத்தில் ஒரு கோடிக்கும் மேலான தமிழக மக்கள் கலந்து கொண்டதே இன்றளவும் அதிக நபர் கலந்து கொண்ட தனிநபர் இறுதி ஊர்வலமாக கின்னஸ் ரெக்கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தகைய, தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் தலைவரே அறிஞர் அண்ணா. 

இவற்றையும் காண்க

அறிஞர் அண்ணாவின் சாதனைகள்

அறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு