Trending

நான் விரும்பும் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி

நான் விரும்பும் சுதந்திர போராட்ட வீரர்

{tocify} $title={பொருளடக்கம்}

முன்னுரை


வாழ வழி இல்லாமல் பஞ்சம் பிழைக்க வந்த வெள்ளைக்காரர்கள், கிழக்கிந்திய கம்பெனி என்ற வியாபார நிறுவனத்தை இந்தியாவில்  தொடங்கினார்கள். அக்காலத்தில் சிதறு தேங்காய் போல சிதறி கிடந்த சமஸ்தானங்களையும், குறு நில மன்னர்களையும் தங்களது வஞ்சகத்தால் வளைத்து போட்டு பிரித்தாளும் சூழ்ச்சியால் இந்த நாட்டையே தங்கள் அதிகார எல்லைக்குள் கொண்டு வந்தார்கள்.


ஆண்டவர்களை அடக்கி ஆண்டார்கள். சிலர் கூலிக்கு விலை போனார்கள். பலர் அடக்குமுறைக்கு எதிராக  சிங்கமென சிலிர்த்தெழுந்து பரங்கியர் கூட்டத்தை பந்தாடினார்கள்.


வாளும், வேலும், யானையும், குதிரையும் வைத்து போராடிய இந்திய குறுநில மன்னர்களால்  ஆங்கிலேயரின் துப்பாக்கித் தோட்டக்களுக்கும், பீரங்கி குண்டுகளுக்கும் ஈடு கொடுக்க முடியவில்லை.


உயிர் போகும் எனத் தெரிந்தும் விடுதலை வேள்வியில் தங்களை விதையாக்கி மடிந்தவர்கள் எத்தனையோ ஆயிரம் பேர். அதில் ஒருவர்தான் கடலில் கப்பல் கம்பெனி  நடத்தி ஆங்கிலேயனையே அலறவிட்ட வ.உ.சிதம்பரனார். அவரது தியாக வரலாறு இதோ.


இளமைக் காலம்


செல்வச் செழிப்பு மிகுந்த, சைவ வெள்ளாளர் மரபில், வழக்கறிஞர் உலகநாத பிள்ளைக்கும் பரமாயி அம்மாளுக்கும் மூத்த மகனாக 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரத்தில் பிறந்தார் சிதம்பரனார்.


வசதி வாய்ப்பு இருந்தமையால் வீர பெருமாளிடம் தமிழ் கல்வியும், அரசு அலுவலர் கிருஷ்ணனிடம் ஆங்கிலமும் கற்றார். பின்னர் புனித சேவியர் பள்ளியில் உயர்நிலை கல்வியையும் திருநெல்வேலி இந்து கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்தார். பின்னர் திருச்சியில் கணபதி அய்யர் உதவியுடன் சட்டம் பயின்று 1895ல் ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழில் தொடங்கினார்.


குற்றவியல் வழக்கறிஞராக புகழ் பெற்றாலும், வழக்கு நடத்தாமல் சமாதானம் செய்து வைப்பதையை விரும்பினார். அவரது அறிவு ஆற்றல் நேர்மை நீதிபதிகளையே கவர்ந்தது.


காவலர்களால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், சிதம்பரனாரின் திறமையான வாதத்தால் விடுதலை பெற்றதால் போலிசாரின் கோபத்துக்கு ஆளானார். பின்னர் தூத்துக்குடியில் புகழ் பெற்ற வழக்கறிஞர் ஆனார்.


திருமணம்


1895 ஆம் ஆண்டு வள்ளி அம்மையாரை திருமணம் செய்தார். வள்ளியம்மையார் குழந்தை பெற்றெடுக்கும் போது இறந்து விடவே 1901 ஆம் ஆண்டு மீனாட்சி அம்மையாரை மணந்தார்.


தேசப்பற்று


விடுதலைக் கவி பாரதியார் சிதம்பரனார் ஊருக்கு பக்கத்து ஊர்காரர். பாரதியார் எட்டையபுரம். சிதம்பரனார் ஒட்டப்பிடாரம். சிதம்பரனார் சென்னை செல்லும்போது பாரதியாரை சந்திப்பது வழக்கம். சதா சர்வ காலமும் பாராதியாரிடம் தேச விடுதலை பற்றிய சிந்தனை ஓங்கியிருந்ததால் அவ்வுணர்ச்சி சிதம்பரனாருக்கும் ஒட்டிக் கொண்டது.


ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தின் துறவி சசி மகராஜை சந்தித்தபின் சிதம்பரனார் உள்ளத்தில் சுதேச எண்ணங்கள் தோன்றத் துவங்கின.


அதனால் சுதேசி பிரச்சார சபை, தூத்துக்குடி சங்க நெசவு சாலை, தூத்துக்குடி கைத்தொழில் சங்கம், சுதேசிய பண்டகசாலை, வேளாண் சங்கம் போன்றவை துவங்கி திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தார்.


திலகரின் அனல் பறக்கும் உரைகளால் கவரப்பட்ட சிதம்பரனார் விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபத்தி கொண்டார்.


சுதேச கப்பல் கம்பெனி


ஆங்கிலேயர் வணிகம் செய்யவே இந்தியாவுக்கு வந்தனர். ஆனால் ஆட்சியை கைப்பற்றி நமது நாட்டின் வளங்களை, செல்வங்களை கொள்ளையடித்தனர். இச்செயல் சிதம்பரனாரின் உள்ளத்தை பாதித்தது.


தூத்துக்குடியில் அனைத்துவிதமான  தொழில்களிலும் ஆங்கிலேயரின் ஆதிக்கம் தலைவிரித்தாடியது. தூத்துக்குடி வர்த்தகர்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்டு மூடும் ஆங்கிலேயர்களின் அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டு வர சிதம்பரனார் விரும்பினார்.


அப்போது ஆங்கிலேயர் "பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி" ஒன்றை நடத்தினர். இந்தியா இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தை அது கையாண்டது. அது ஆங்கிலேயரின் வணிகத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தது.


அதனால் இந்தியர்களுக்கென ஒரு கப்பல் கம்பெனி தொங்க முடிவு செய்தார் சிதம்பரனார். 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற நிறுவனத்தை பதிவு செய்தார். அந்த காலகட்டத்திலேயே கப்பல் கம்பெனி தொடங்க பத்து லட்சம் தேவைப்பட்டது. கப்பல் கம்பெனியின் தலைவராக மதுரைத் தமிழ் சங்கத் தலைவர் வள்ளல் பாண்டித் துரைத்தேவரும் சட்ட ஆலோசகராக சேலம் விஜய ராகவாச்சாரியும் இருந்தனர்.


பத்து லட்ச ரூபாயை திரட்ட 25 ரூபாய் மதிப்புள்ள 40000 பங்குகள் வெளியிடப்பட்டன. ஆசிரியர்கள், வக்கீல்கள், வங்கியர்கள் அதில் பங்குதாரர்கள் ஆயினர். அப்படியும் தொகை சேரவில்லை. அதனால் கப்பலை வாடகைக்கு எடுத்து தொழிலை தொடங்கினார் சிதம்பரனார். "ஷாலேன் ஸ்டீமர்ஸ்" கம்பெனியில் கப்பல் வாடகைக்கு எடுக்கப்பட்டது.


இதை அறிந்த பிரிட்டிஷ் கம்பெனி ஷாலேனை மிரட்டி வாடகைக்கு கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைத்தது.


அஞ்சவில்லை சிதம்பரனார். இலங்கை  கொழும்புவுக்கு சென்று, ஒரு கப்பலை வாடகைக்கு எடுத்து போக்குவரத்தை தொடங்கினார்.


சொந்தக் கப்பல் இல்லாததால் லாபம் முழுதும் வாடகைக்கே போய்விட்டது. அதனால் சொந்த கப்பல் வாங்க நிதி சேர்க்க மும்பைக்கும் கல்கத்தாவுக்கும் பயணமானார். "திரும்பினால் கப்பலோடு வருவேன். இல்லையேல் கடலிலேயே விழுந்து மாண்டு போவேன்" என்ற உறுதியுடன் புறப்பட்டார். திலகர், பாரதியார் போன்றோரது ஒத்துழைப்புடன் சபதத்தை நிறைவேற்றி காட்டினார் சிதம்பரனார்.


எஸ்.எஸ்.காலியா என்ற கப்பலுடன் புறப்பட்டார். 42 முதல் வகுப்பு இருக்கைகள், 24 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் மற்றும் 4000 கோனி சாக்கு மூட்டைகளை ஏற்றி செல்லும் திறனுடன் அந்த கப்பல் இருந்தது. அவரது நன்பர்  எஸ்.எஸ்.வேதமூர்த்தி பிரான்ஸ் சென்று எஸ்.எஸ்.லாவோ என்ற இன்னொரு கப்பலையும் வாங்கினார். இரண்டு நீராவி படகுகளும் வாங்கப்பட்டன. இந்திய இலங்கை சுதேசி கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. கட்டணமாக 4 அனா மட்டும் வசூலிக்கப்பட்டது.


பிரிட்டிஷ் நிறுவனம் சிதம்பரனாரோடு போட்டி போட முடியாமல் தினறியது. கட்டணத்தை குறைத்து பார்த்தது. அரசு சார்பில் இலங்கைக்கு அனுப்பும் பொருட்களை பிரிட்டிஷ் கப்பல்கள் மூலமே அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டு பார்த்தது. கடைசியில் பொதுமக்களை இலவசமாக அழைத்து செல்வதாக கூட கூறி பார்த்தது. பிரிட்டிஷ் கம்பெனியின் நயவஞ்சகத்தை புரிந்து கொண்ட மக்கள், இலவச பயணத்தை தவிர்த்து, சிதம்பரனாரின் கப்பலில் கட்டணம் செலுத்தி சென்றனர்.


இறுதி கட்டமாக "ஒரு லட்சம் தருகிறோம் சுதேசி கப்பல் கம்பெனியை விட்டு சென்று விடு" என சிதம்பரானரிடம் பிரிட்டிஷ் கம்பெனி கையூட்டு ஆசை காட்டி பார்த்தது. பணத்துக்கு மயங்குபவரா நம் சிதம்பரனார்? நடுக்கடலில் சுதேசி கப்பல் பிரிட்டிஷ் கப்பலோடு மோத வந்ததாக பொய் வழக்கு போட்டும் பார்த்தது. கிரிமினல் லாயரான சிதம்பரனாரிடம் அதுவும் எடுபடவில்லை.


சுங்க அதிகாரிகள், அரசு அலுவலர்கள், மருத்துவ அதிகாரிகள் போன்றோரை கொண்டு எத்தனையோ தொல்லைகள் சிதம்பரனாருக்கு கொடுத்தாலும் சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை


நூற்பாலை வேலை நிறுத்தம்


லார்டு ராய் என்கிற ஆங்கில அரசின் இந்திய அதிகாரி லன்டனில் தொழில் அதிபர்கள் கூட்டத்தை கூட்டி "இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள். இந்தியர்களுக்கு எவ்வளவு கேவலமான ஊதியம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள். பன்னிரண்டு மணி நேர வேலை வாங்கினாலும் செய்வார்கள்" என்று பேசினான்.


அதற்கு தகுந்தாற்போல தூத்துக்குடியில் கோரல் நூற்பாலையில் குறைவான ஊதியம் கொடுத்து அதிக நேரம் வேலை வாங்கினார்கள். வார விடுமுறையும் கிடையாது. இதைக் கண்ட சிதம்பரனார் அவர்களை வேலை நிறுத்தம் செய்யத் தூண்டினார். இதை ஆதரித்து சுப்பிரமணிய சிவாவும் சொற்பொழிவு ஆற்றினார். 1908 பிப்ரவரியில் வேலை நிறுத்தம் தொடங்கியது. கூலி உயர்வும் வார விடுமுறையும் கோரிக்கைகள். ஆங்கில அரசு காவலர்களை குவித்து மிரட்டி பார்த்தது.


நீண்ட நாட்கள் போராட்டம் நடந்தால் பசி பட்டினியால் வேலைக்கு திரும்பி விடுவார்கள் என ஆங்கில அரசு திட்டம் போட்டது. ஆனால் சிதம்பரனார் தன் சொத்துக்களை விற்று ஊழியர்களுக்கு கொடுத்து போராட்டத்தை நடத்தினார். இறுதியில் ஆங்கில அரசு பணிந்து கோரிக்கைகளை ஏற்றது.


ஆங்கில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி முதன் முறையாக சாதித்து காட்டியது சிதம்பரனார்தான். இதனால் ஆத்திரமடைந்த ஆங்கில அரசு சிதம்பரனாரை கைது செய்து சிறையில் அடைக்க தகுந்த நேரம் பார்த்து காத்திருந்தது.


சிதம்பரனார் கைது


வங்கத்தின் சுதந்தர போராட்ட வீரர் பிபின் சந்திர பால் 1908ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆனார். அதை ஒரு விழாவாக கொண்டாட சிதம்பரனார் எண்ணினார். விழா நடந்தால் சிதம்பரனார் அரசுக்கு எதிராக பேசுவார் என்பதால் ஆங்கில அரசு அதை விரும்பவில்லை. அதனால் அவ்விழாவுக்கு தடை விதித்து சிதம்பரனாரை கைது செய்ய முடிவு செய்தனர்.


தூத்துக்குடியில் கைது செய்தால் கலவரம் ஏற்படும் என திருநெல்வேலி கலெக்டரை சந்திக்கும்படி ஆணை அனுப்பினர். திருநெல்வேலி சென்றால் கைது செய்வார்கள் என்பதால்  அங்கு போக வேண்டாம் என நன்பர்கள் தடுத்தார்கள். இருந்தாலலும் ஆத்ம நன்பர், ஆங்கில புலமை பெற்ற சுப்பிரமணிய சிவாவுடன் கலெக்டரை சந்தித்தார் சிதம்பரனார்.


கலெக்டர், திருநெல்வேலியை விட்டு வெளியேற வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதித்து அதற்கு சம்மதித்து கையெழுத்து போட கட்டாயப்படுத்தினார். சிதம்பரனார் சம்மதிக்கவில்லை. அதனால் 1908 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் நாள் சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டனர்.


வ.உ.சிதம்பரனார் கைது செய்து அறிந்து திருநெல்வேலியில் தூத்துக்குடியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.  அனைத்து கடைகளும்  அடைக்கப்பட்டன. பள்ளி கல்லூரிகள் சேதப்படுத்தப்பட்டன. தினமும் தடையை மீறி  ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டதில் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர் .


நீதிமன்ற தீர்ப்பு


காவல்துறையினர் வ.உ.சிதம்பரனாருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். முதல் குற்றச்சாட்டு அரசுக்கு எதிராக மக்களை தூண்டியது. இரண்டாவது குற்றச்சாட்டு சுப்பிரமணிய சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்தது.


வழக்கு நேர்மையாக நடைபெறவில்லை என்பதால்  வழக்கில் வ.உ.சி பங்கேற்க மறுத்துவிட்டார். இரண்டு மாதத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.


நீதிபதி பின்ஹே அளித்த தீர்ப்பு


மக்களை விடுதலை போராட்டத்துக்கு தூண்டி விட்ட குற்றத்துக்கு 20 வருட தீவாந்திர தண்டனை.


சுப்பிரமணிய சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கு மற்றுமொரு 20 வருட தீவாந்திர தண்டனை.


40 ஆண்டு தீவாந்திர தண்டனை என்பது அக்காலத்தில் யாருக்கும் கொடுக்காத தண்டனை. தீவாந்திர தண்டனை பெற்றவர்கள், வெளிநாட்டு சிறையில் இருக்க வேண்டும். உறவினர்கள் கூட பார்க்க முடியாது. 36 வயதில் தண்டனை பெற்ற சிதம்பரனார் 76 வயதில்தான் வெளிவர முடியும்.


இந்த தீர்ப்பை கேட்டு இந்தியாவே அதிர்ச்சி அடைந்தது. வங்காளி, அமிர்த பஜார், சுதேசமித்ரன், ஸ்வராஜ்யா போன்ற பத்திரிக்கைகள் கண்டித்தன. ஸ்டேட்ஸ்மேன் ஆங்கில பத்திரிகை இந்த தீர்ப்பை எதிர்த்து தலையங்கமே எழுதியது.


ஆங்கில அமைச்சர் லார்டு மார்லி இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் லார்டு மன்றோவுக்கு கடிதம் எழுதினார். பின்னர் சென்னை  உயர்நீதிமன்ற மேல் முறையீட்டில் தீவாந்திர தண்டனை 10 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. அதன் பின்னரும்  நல்ல உள்ளங்கள், லன்டன் பிரிவியூ கவுன்சிலில் முறையிட்டதில்  6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சிதம்பரனாருக்கு கடும் தன்டனை பெற்றுத் தந்த ஆஷ் துரை வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


சிறைக் கொடுமை


தீவாந்திர தண்டனை கொடுத்தாலும் அந்தமானுக்கு அனுப்ப முடியாததால் சிதம்பரனார் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கேரள கண்ணனூர் சிறையில் அடைக்கப்பட்டார்.


செல்வந்தராக சுவையான உணவு உண்ட சிதம்பராருக்கு, கல்லும், மண்ணும் கலந்த கூழ் கொடுக்கப்பட்டது. ஆறிய கூழில் சில சமயம் புழு நெளிந்தது. கரடு முரடான சிறை ஆடைகள் உடம்பை குத்தின. தலை மொட்டை அடிக்கப்பட்டது. கை கால்களில் விலங்கு மாட்டப்பட்டு இருந்தது.


நூல் நூற்பது போல சனலை நூற்க கட்டளையிடப்பட்டது. உள்ளங்கையில் ரத்தம் கொட்டியது. கல் உடைத்தார். புகழ் பெற்ற வழக்கறிஞரான சிதம்பரனாருக்கு  மாட்டுக்கு பதில் மனிதனை கொண்டு  இழுக்கும்  செக்கிழுக்கும் வேலை தரப்பட்டது. மாடு போல் உழைத்தார்.


சரியான உணவில்லாமல் உடல் மெலிந்தது. பரிசோதனைக்கு வந்த அரசு மருத்துவர் "இவரை விடுதலை செய்யாவிட்டால் இறந்து விடுவார்" என எழுதி வைத்துவிட்டு சென்றுவிட்டார். அதனால் நீதிபதி சிதம்பரனாரை, இரண்டு ஆண்டு முன்னதாக 1912 ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று விடுதலை செய்தார்.


சிறையிலிருந்து வந்த பின்னர் வக்கீல் தொழில் நடத்த தடையிருந்ததால் பெட்டிக் கடை கூட வைத்து நடத்தி பார்த்தார். வருமானம் இல்லை. பின்னர் வக்கீல் தொழில் நடத்த அனுமதி கோரி ஆங்கில அரசிடம் விண்ணப்பித்தார். வ.உ.சியின் நேர்மையை அறிந்த ஆங்கில அதிகாரி E.H. வாலேஸ் அவருக்கு வக்கீல் தொழில் செய்ய அனுமதி கொடுத்தார். அவருக்கு நன்றி கடனாக தன் கடைசி மகனுக்கு "வாலேசுவரன்" என பெயர் வைத்தார்.


முடிவுரை


"தண்ணீர் விட்டோ வளர்த்தோம்! சர்வேசா! இப்பயிரை கண்ணீரால் காத்தோம்.

கருகத் திருவுளமோ?" என்றார் பாரதியார். கல்லும், மண்ணும், சுண்ணாம்பும் கலந்து கட்டிடத்தை கட்டிவிடலாம். ஆனால் எலும்பும் சதையும்  செங்குருதியும்  கலந்த உடலையும், உயிரையும், கொடுத்து நமக்கு  நம் முன்னோர் வாங்கி தந்த விடுதலையை போற்றி காப்போம்.


ஜெ மாரிமுத்து

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு