Trending

நீட் தேர்வு பற்றி பலருக்கு தெரியாத ரகசியங்கள்

நீட் தேர்வு பற்றி பலருக்கு தெரியாத ரகசியங்கள்


MBBS, BDS போன்ற மருத்துவம் சார்ந்த படிப்பில் சேர இந்தியா முழுமைக்கும் பொதுவான ஒரு தேர்வு முறை NEET (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) 2013 மே மாதம் முதல் கொண்டு வரப்பட்டது.  இதை NTA ( National testing  Agency) நடத்துகிறது. சாதி மத பாகுபாடின்றி திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என நீட் வந்த போது அறிவிக்கப்பட்டது.


அவர்கள் நீட் கொண்டுவந்த போது ஒட்டு மொத்த இந்தியாவுக்கும்  பொதுவான ஒரு தேர்வு அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்வுக்கான கேள்விகள் தயாரிக்கும் பொறுப்பு CBSE (Central board of school education)  வசம் ஒப்படைக்கப்பட்டது.  NCERT சிலபஸ் முறையில் கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த கல்வி முறை பல மாநிலங்களில் நடைமுறையில் இல்லாத ஒரு கல்வி முறை ஆகும்.


மொத்தம் 180 கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு மதிப்பெண்கள். அறிவியல் பாடங்களான இயற்பியல், வேதியல், விலங்கியல், தாவரவியல் மூலம் தலா 45 கேள்விகள் கேட்கப்படும். தவறான விடைக்கு மைனஸ் மதிப்பெண் ஒன்று உண்டு.


டாக்டர் தொழில் என்பது உயிரைக் காப்பாற்றும் ஒரு சேவை என்பதால் சாதி மற்றும் மத அடிப்படையில்  எந்த சலுகையும் காட்டப்படாது என அறிவிக்கப்பட்டது.


இதில் எதையாவது அவர்கள் கடைபிடித்திருக்கிறார்களா?


இந்த கட்டுரை இதற்கு விடை சொல்லும்.


நீட் தேர்வு முறை வந்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் நெருங்கிவிட்டது.


இதன் விளைவுகள் என்ன?


நீட் தேர்விற்கு பாஸ் மார்க் என்ற ஒன்றே கிடையாது என்பது யாருக்காவது தெரியுமா?


நீட் தேர்வு எழுதிய 110 பேர்,  வேதியலில் ஜீரோ மதிப்பெண் எடுத்தும், இயற்பியலில் ஜீரோ மதிப்பெண் எடுத்தும்  2017ல் தேர்வாகி டாக்டராகிவிட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?


நீட் தேர்வில் ஒவ்வொரு சப்ஜெக்டிலும் ஐம்பது சதவிகிதம் எடுக்க வேண்டும் என்ற விதியை அவர்களே வாபஸ் வாங்கிக் கொண்டார்கள் என்பது யாருக்காவது தெரியுமா?


இட ஒதுக்கீடு கிடையாது என்றவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு  கொண்டு வந்தது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?


உயர் ஜாதியினரை உள்ளே புகுத்த அவர்கள் கொண்டு வந்த தந்திரமே இட ஒதுக்கீடு.


உயர்ஜாதியில் பிறந்த ஏழைகளுக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.


உயர்ஜாதியில் ஏழைகளை அவர்கள் எப்படி கணக்கிட்டார்கள்?


வருடத்துக்கு எட்டு லட்சம்  சம்பாதிக்கும் ஒருவன் ஏழையாம். அதாவது மாதம் 66000 சம்பாதிக்கும் ஒருவன் ஏழையாம். இந்த இட ஒதுக்கீட்டு முறையில் சுமார் ஏழாயிரம்  டாக்டர்கள் உருவாகிறார்கள் என்பது யாருக்காவது தெரியுமா?


இந்த பத்து சதவிகிதம் இட ஒதுக்கீட்டில் டாக்டர் ஆனவர்கள் எடுத்த மதிப்பெண்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எடுத்த மதிப்பெண்ணை விட குறைவானது என்பது யாருக்காவது தெரியுமா?


இந்த நீட் தேர்வு எல்லாம் JIPMER, AIIMS போன்ற மருத்துவக்கல்லூரிகளுக்கு கிடையாது என்பது யாருக்காவது தெரியுமா?


நீட் தேர்வு வருவதற்கு முன்பே இந்தியாவில் உள்ள டாக்டர்களில் எட்டில் ஒருவர் அதாவது 12% பேர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதை 2019ல் நாடாளுமன்றத்தில் மத்திய  சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தனே ஒப்புக்கொண்டார் என்பது உங்களுக்கு தெரியுமா?


அமெரிக்கா கனடாவில் பணிபுரியும் இந்திய டாக்டர்களில் பாதி பேர் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்கள்தான்  என்பது தெரியுமா?


ஆறுதலுக்காக அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு என தமிழக அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. இதன் மூலம் சுமார் 400 பேருக்கு MBBS கிடைத்தது. சாதாரணமான நீட் தேர்வு எழுதி 720க்கு 550 கட்ஆப் பெற்றவர்களுக்கு  2021ல் டாக்டர் சீட் கிடைக்கவில்லை.


ஆனால் இட ஒதுக்கீட்டில் வந்த அரசு பள்ளி மாணவர்கள் பெற்ற கட்ஆப் வெறும் 200 மார்க் மட்டுமே


நீட் எழுதி 550 மதிப்பெண் பெற்றவனுக்கு சீட் இல்லை. ஆனால் 200 மதிப்பெண் பெற்றவனுக்கு இட ஒதுக்கீட்டில் சீட் கிடைக்கிறது. இது என்ன கல்வி முறை? அப்படி உள்ளே நுழைந்தவன்,பாடத்தை உள்வாங்கி படித்து, டாக்டர் ஆக முடியுமா?


720 மதிப்பெண்ணுக்கு தேர்வு எழுதினால் அதில் பாதியாவது அதாவது 360 மதிப்பெண்ணாவது பாஸ் மார்க் என வைக்க வேண்டும்.


ஆனால் ஒரு லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினால், அதில் சரி பாதியாவது நபர், அதாவது ஐம்பதாயிரம் தர வரிசை பெற்ற ஒருவர், பெற்ற  மதிப்பெண்ணே பாஸ் மார்க் என கருதப்படுகிறது. இதைவிட முட்டாள்தனம் என்ன இருக்க முடியும்?


இந்த முறையில் 720 க்கு வெறும் 110 எடுத்தவர் கூட நீட்டில் தேர்ச்சி பெற்று விடுகிறார். அதாவது 15% மார்க் எடுத்தவர்கள் நீட்டில் தேர்ச்சி பெற முடியும்.


தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்தி படிப்பவர்களை,நீட் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய கேரள அரசு தனியார் சீட்டுகளை அரசிடம் ஒப்படைக்க கோரியது. ஆனால் அதை தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக கேரள ஹைகோர்ட் தடை செய்துவிட்டது.


இந்த தீர்ப்பு கல்விக் கொள்ளையர்களுக்கு கொள்ளையடிக்க சட்ட அங்கீகாரம் கொடுத்தது போல் ஆகிவிட்டது.


பள்ளிப்படிப்புக்கு கூட 35% பாஸ் மார்க் என ஒரு அளவீடு உள்ளது. நீட்டுக்கு அப்படி பாஸ் மார்க் உள்ளதா?


720க்கு 110, 120 என கேவலமான மதிப்பெண் பெற்றவர்கள் தனியார் மருத்துவக்கல்லூரிகளிலும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் ஐம்பது லட்சம் முதல் ஒரு கோடி வரை லஞ்சம் அதாவது CAPITATION FEES பெற்றுக் கொண்டு டாக்டர் ஆக்கப்படுகிறார்கள் என்றால் இதற்குத்தான் நீட் கொண்டு வந்தார்களா?


நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் MBBS தேர்வு முடிவை அவர்களே போட்டுக்கொள்ள அதிகாரத்தை வாங்கி வைத்திருக்கிறார்கள் என்பது, எத்தனை பேருக்கு தெரியும்? இதை விட வேறு அநியாயம் எதுவும் உள்ளதா?


இப்படி 110, 120 என பாஸ்மார்க் வைத்துள்ளதால் நீட் எழுதி பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி பாட்டனி இம்மூன்றிலும் ZERO மார்க் எடுத்தால் கூட ஸ்வாலஜியில் 30 கேள்வி சரியாக எழுதி 120 மார்க் எடுத்து தனியாரிடம் கோடிகளை கொடுத்து டாக்டராக முடிகிறது. இதைவிட வெட்கக்கேடு வேறு என்ன இருக்க முடியும்?


தனியாரிடம் முப்பதாயிரம் சீட்டுகள் உள்ளன. இதன் மூலம் இருபதாயிரம் கோடி கருப்பு பணம் புழங்கும் தொழிலாக, மருத்துவம் மாறிவிட்டது.


மேல்நிலைப் பள்ளி பாடப்புத்தகங்கள் மூலம் தான் நீட்டில் கேள்வி கேட்கப்படுகிறது. மேல் நிலைப் பள்ளி கல்விக்கு தனியாரிடம் TUITION வைத்தால் கூட அதிகப்பட்சம் இருபதாயிரம் ரூபாய்தான் செலவு ஏற்படும். ஆனால் இதே பாடத்தை சொல்லிக் கொடுக்கும் நீட் கோச்சிங் சென்டர்கள் 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை கட்டணம் வாங்குகிறார்களே இது எப்படி?


மூன்று முறைதான் எழுதலாம் அதுவும் இருபத்து ஐந்து வயதுக்குள் மட்டுமே எழுதலாம் என நீட் விதி கூறுகிறது. இதனால் பல லட்சம் செலவு செய்தும் தேர்வு ஆக முடியாத மாணவர்கள் மன அழுத்தத்தால் தற்கொலையை நோக்கி செல்கிறார்கள்.


66000 பேர் நீட் தேர்வு மூலம் டாக்டர் ஆனார்கள் என்றால் அதில்  60000 பேர் லட்சங்களை கட்டி படித்த கோச்சிங் சென்டர் மாணவர்கள் என புள்ளிவிபரம் கூறுகிறது. இது எப்படி சம வாய்ப்பான கல்வி முறையாக இருக்கக்கூடும்?


அரசு மருத்துவக் கல்லூரிகள் ஒரு வருடத்துக்கு வாங்கும் கட்டணம் 13 ஆயிரம் மட்டுமே. தனியார் கல்லூரிகள் வாங்கும் ஆண்டு  கட்டணம் 15 லட்சம். பதிமூன்றாயிரம் எங்கே? பதினைந்து லட்சம் எங்கே?


மாநிலங்கள் விரும்பினால் மட்டுமே நீட் கொண்டு வர முடியும் என கருணாநிதி நிபந்தனை விதித்து சட்டத்தை நிறைவேற்றியதால் கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை நீட்டால் தமிழகத்தில் நுழைய முடியவில்லை.


2013 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் காலத்தில் சுப்ரீம் கோர்ட்டால் செல்லாது என அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு முறை, மோடி காலத்தில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செயயப்பட்டு நீட் செல்லும் என அறிவிக்கப்பட்டது.


இதில் ஓரு வேதனையான வேடிக்கை என்னவென்றால் ஏ.ஆர்.தேவ் என்ற நீதிபதி மூல வழக்கில் நீட் செல்லாது என தீர்ப்பு கூறிவிட்டு, சீராய்வு மனு வந்த போது நீட் செல்லும் என அறிவித்த வினோதம் நடந்தது. மூல வழக்கில் உள்ள நீதிபதி அப்பீல் வழக்கையும் விசாரிக்க எந்த சட்டம் அனுமதி கொடுத்தது?


ஆனால் நீட்டை குஜராத் முதல்வராக இருந்த போது எதிர்த்த மோடி, தான் பிரதமராக இருந்த போது கட்டாயமாக்கி சட்டம் கொண்டு வந்தார். அப்போது மூன்று உறுப்பினர்களை கொண்ட திமுக எதிர்த்து வாக்களித்தது.


ஆனால் இரு அவைகளிலும் நாற்பது உறுப்பினர்களை கொண்ட அதிமுக, வெளிநடப்பு செய்து மறைமுகமாக சட்டம் நிறைவேற காரணமாகிவிட்டது. குதிரையை அவிழ்த்து விட்டவர்களே, அதை இப்போது தேடி அலைகிறார்கள்.


தனியார் மருத்துவ கல்லூரிகள்  தங்களது ஐம்பது சதவிகித இடங்களை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும். மாநில அரசு நீட் மதிப்பெண்படி மாணவர்களை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்படுவதில்லை என்பது யாருக்காவது தெரியுமா?


இந்த அநியாயத்தை கேட்க துணிவில்லாத சுப்ரீம் கோர்ட் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு ஒரு கோடி அபராதம் மட்டும் விதித்து  தீர்ப்பு கூறி ஒதுங்கி கொண்டு, தனியார் கொள்ளைக்கு துணை போனது எத்தனை பேருக்கு தெரியும்?


பத்தாயிரம் கோடி வருமானத்தை பார்த்துவிட்டு ஒரு கோடி ரூபாய் அபராதம் செலுத்திவிடுகிறார்கள்.


சராசரியாக இந்திய மாணவர்களிடம் நீட் பயிற்ச்சிக்காக வாங்கும் கட்டணம் ரூ 2,94.000. இந்தியாவில் முன்னிலையில் உள்ள ஐந்து பயிற்சி மையங்களில் படித்தவர்கள் மட்டுமே 90% இடங்களை பிடிக்கிறார்கள். இதிலிருந்தே இது ஏழைகளுக்கான கல்வி முறை இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.


இந்தியாவில் வளர்ச்சி அடையாத மாநிலங்கள் பல உள்ளன. அங்கு CBSE பாடத் திட்டமே இல்லை. தமிழ்நாட்டிலேயே ஸ்டேட் போர்டு பாடத்திட்டம் 90% என்றால் சிபிஎஸ்இ பாடத்திட்டம் 10% கூட இல்லை. படிக்காத பாடத்திட்டத்தில் நீட் கேள்விகள் இருப்பதால்தான் 1200க்கு  1150 எடுத்த அனிதா கூட நீட்டில் 720க்கு 150 மார்க் எடுக்க முடியவில்லை.


மகாபாரதத்தை நடத்திவிட்டு, இராமாயானத்தில் கேள்வி கேட்டு என்ன பயன்?


புற்றீசல் போல் தோன்றும் நீட் பயிற்சி மையங்களில் கட்டணமாக பெறப்படும் தொகை ஓராண்டுக்கு 70000 கோடி என்பது யாருக்காவது தெரியுமா?


நான்கு லட்சம் ரூபாய் கட்டணம் வாங்கும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் தங்கள் மாணவர்கள் தேர்ச்சி பெற கேள்வித்தாளையே பல கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்குவதாக ஒரு பிரிவினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். அதில் உண்மை இல்லாமல் இருக்குமா?


நீட் தேர்வு எழுதிக் கொடுக்க பல கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு, பிராக்சி முறையில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதி கொடுப்பவர்களை மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பயிற்சி மையங்களே ஏற்பாடு செய்கின்றன.


2017ல்  தமிழகத்தில் எட்டு லட்சம் மேல்நிலை பள்ளி மாணவர்களில் 10 பேருக்குதான் எம்பிபிஎஸ் கிடைத்தது.  2019ல் தமிழகத்தில் 19680 பேர் நீட் எழுதியதில், ஒரே ஒருவருக்குதான் நீட் மூலம் டாக்டர் சீட் கிடைத்தது. பள்ளிகளில் நீட் தேர்வுக்கு பயிற்சி எடுத்த பதினேழாயிரம் பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்றால் தவறு யார் மீது?


பத்தாயிரம் பேர் படிக்கும் அளவுக்கு பல கோடி செலவு செய்து அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கிய தமிழகத்துக்கு நீட்டால் எவ்வளவு பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது?


பத்தாயிரம் பேர் படிக்கும் அளவுக்கு தனது நிதியால் வளர்ந்த தமிழ்நாடு அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 15% அதாவது 1500 சீட் கொடுக்க வேண்டும். இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாடு இருப்பதால் இந்த தியாகத்தை தமிழகம் செய்ய வேண்டி உள்ளது.


தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதியவர்களுக்கு, கேரளாவிலும் இராஜஸ்தானிலும் எக்ஸாம் சென்டர் போட்ட அவலமும் நடந்தது.


மூக்குத்தி போடாதே! தோடு போடாதே! மானத்தை மறைக்கும் தாவணி போடாதே! சால் போடாதே! வாட்ச் கட்டாதே! என்பது போன்ற தேவையற்ற கட்டுப்பாடுகளும்  தேர்வு மையத்தில் விதிக்கப்பட்டது.


தாலியை கழற்றி கொடுத்துவிட்டு நீட் எழுதிய அநீதியும் நடந்தது.


இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 69 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அதில் 10375 MBBS சீட்டுகள் உள்ளன. இதில் 37 அரசு கல்லூரிகள் ஆகும். அரசு கல்லூரிகளில் மட்டும் 5125 சீட்டுகள் உள்ளன. இந்தியா முழுவதும் 70000 மெடிக்கல் சீட்டுகளில் 10000 சீட்டுகள் தமிழ் நாட்டில் இருப்பதைக் கொண்டே தமிழகத்தின் முக்கியத்துவத்தை உணரலாம்.


இதில் 10% அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக 1500 சீட்டுகள் மற்ற மாநிலங்களுக்கு தாரைவார்க்க வேண்டி உள்ளது.


2021-22 மருத்துவ மாணவர் சேர்க்கையில் 70000 சீட்டுகள் உள்ள மருத்துவ படிப்பில் ஒன்பது லட்சத்து பதினெட்டாயிரம் தர வரிசை பெற்ற 720க்கு 108 மதிப்பெண் ஒருவருக்கு கோயம்பேட்டில் உள்ள நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. பணம் பாதாளம் வரை பாயும் என்பது இதுதானா?


கல்வி என்பது மாநில பட்டியலிலும் உள்ளது. மத்திய பட்டியலிலும் உள்ளது. அதாவது பொதுப் பட்டியலில் உள்ளது.  தன் பிள்ளைக்கு என்ன வேண்டும் என்பது பெற்ற தாய்க்குதான் தெரியும். தமிழ்நாட்டுக்கு தேவையான கல்வி முறையை தமிழ்நாடுதான் வகுக்க வேண்டும்.


இந்தியாவின் முதல் மருத்துவக்கல்லூரி சென்னையில் 1850ல் தொடங்கப்பட்ட "மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்" என்பது பலருக்கு தெரியாது.


நம்மைவிட அறிவாளிகள் புத்தி சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். மருத்துவம் என்றால் என்ன என்று அமெரிக்காவுக்கே கற்று கொடுத்த தமிழர்களுக்கு ஆணையிட இவர்கள் யார்?


ஏ.கே. ராஜன் கமிட்டி மூலம் நீட்டின் தீமைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழக சட்ட மன்றமும் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி உள்ளது. கவர்னரும் அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார். குடியரசு மாளிகையில் தமிழக மசோதா தூங்குகிறது.


குடியரசுத் தலைவரும் தன்னைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு  தலையாட்டும் பொம்மையாக செயல்பட்டால், குடியரசு தலைவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவதை தவிர தமிழகத்துக்கு வேறு வழி இல்லை.


ஜெ மாரிமுத்து 

2 Comments

  1. நீட் விவகாரத்தில் வாதாடப்பட போகும் வழக்குரைஞர்கள்-நீதிபதிகள் கண்முன்வைக்க வேண்டிய பத்திரமான பதிவு இது. பாமரர்களும் அறியக்கூடிய பட்டவர்த்தனமான பதிவும் கூட

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு