Trending

DR. ஜோர்ஜ் புல்ஹர் இந்துச்சட்டவியலுக்கு ஆற்றிய பங்களிப்பு


அறிமுகம்

இந்துக் கற்கைகள் பற்றியும் இந்தியவியல் தொடர்பிலும் மேலைத்தேய அறிவுப் புலத்துக்கு ஒளிபாய்ச்சிய பத்தொன்பதாம் நூற்றாண்டு மேலைத்தேச அறிஞர்களுள் ஜேர்மனிய அறிஞர்களின் வகிபங்கு காத்திரமானதாகும்.

மக்ஸ்முல்லர், ஜோர்ஜ் புல்ஹர், ஹென்றிச் சிம்மர். ஜீலியஸ் ஜொலி, ரூடோல்ப் றொத், ஹெய்மன் ஒல்டன்பேர்க், ஹெய்ம் ஜெகோபி. பெற்ரிஹெய்மன், வோல்ரர்றுபென் போன்றவர்கள் இவ்வகையில் மிகப்பிரபல்யமாக அறியப்பட்ட அறிஞர்களாவர். இவர்களைத் தவிர இன்னும் எழுபத்தைந்துக்கு மேற்பட்ட ஜேர்மனிய அறிஞர்கள் குறித்த ஆய்வுப் புலத்தில் காத்திரமான பங்களிப்புக்களை காலனித்துவக் கால கட்டத்தில் வழங்கியிருந்தனர்.

இவர்கள் யாவருள்ளும் மக்ஸ்முல்லருக்கு அடுத்த நிலையில் சிறப்போடு நினைவு கூரப்படுபவராக Dr.ஜோர்ஜ் புல்ஹர் விளங்குகிறார். ஏனைய ஜேர்மன் இந்தியவியல் ஆய்வாளருக்கு இல்லாத சிறப்பு இவரிடமுண்டு. அது யாதெனில் இவர் கல்வெட்டியல், சுவடியியல், ஒப்பீட்டு மொழியியல், மெய்யியல் ஆகிய துறைகளில் ஏககாலத்தில் துறைதோய்ந்து விளங்கியமை ஆகும்.


வாழ்க்கைச் சுவடுகள்

ஜேர்மனியின் ஹனோவர் மாநிலத்தில் உள்ள போஸ்ரல் என்ற இடத்தில் 19. ஜூலை. 1837ஆம் ஆண்டில் ஜோர்ஜ் புல்ஹர் பிறந்தார். இவருடைய தந்தையாரான ஜோன் புல்ஹர் ஒரு மதபோதகராவார். 

தனது இடைநிலைக் கல்வியை ஜிம்னேசியம் எனப்படுகின்ற ஜேர்மனிய அரச கல்விக் கூடத்தில் பயின்ற புல்ஹர் 1855இல் கொ(G)ரிங்கன் (Gottingen) பல்கலைக்கழகத்துக்குத் தெரிவானார்.


பல்கலைக்கழகக் கல்வி

மொழிப்பிறப்பியல் (Philology), இறையியல் (Theology), மெய்யியல் (Philosophy) ஆகிய பாடங்களைக் கற்ற புல்ஹர் Classical Philology இல் ஆழமான ஈடுபாடு கொண்டிருந்தார். இது தொடர்பில் சம்ஸ்கிருதம், பாரசீகம். அரபு ஆர்மீனியா ஆகிய மொழிகளினை ஆழ்ந்துகற்றார். தொல்லியலும், இவருடைய விருப்பத்துக்குரிய கற்கைப் புலமாயிற்று.


கலாநிதிப் பட்டம்

தனது கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வினைக் கிரேக்க இலக்கணம் தொடர்பில் மேற்கொண்ட புல்ஹர் தனது இருபத்தொராவது வயதில் (1858) கலாநிதிப்பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்"Das griechische Secundarsuffix The Ein Beitrag zurlehre Von Der Wortbildung” என்ற தலைப்பில் ஜேர்மனிய மொழியில் எழுதப்பட்ட அந்த ஆய்வேடு அன்றைய காலகட்ட ஐரோப்பிய மொழிநிலை ஆய்வுகளில் மிகுந்த கவனத்தையீர்த்த ஒன்றாகத் திகழ்ந்தது.


வேதங்களைக் கற்பதில் நாட்டம்

பல்கலைக்கழகக் கற்றற் காலத்தில் பேராசிரியர் தியோடர் பென்(க)வி (Theodor Benfey) என்பவர் புல்ஹரின் ஆதர்ச ஆசிரியராகத் திகழ்ந்தார். அவர் மொழியியல் மற்றும் நாட்டார் மரபுசார் கற்கைகளில் ஆழ்ந்த புலமையுள்ளவராகத் திகழ்ந்தார். 

சம்ஸ்கிருத அறிவுக்கான உண்மையான அத்திவாரம் வேதங்களைக் கற்பதன் மூலம் இடப்படுகிறது என்ற தனது ஆசிரியரின் அறிவுறுத்தலே தன்னை வேதங்களைக் கற்கவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடும் புல்ஹர்

'அவருடைய உள்ளுணர்வுகள் அவருடைய அறிவியல் கருத்தமைவுகளை விடவும் அற்புதமானது. அவற்றின் மூலமே அவர் என்னையும் வழிநடத்தினார்'

எனத் தியோடர் பென்(க)வி யைப் பற்றிப் பிற்காலத்தில் புகழ்ந்துரைத் திருப்பதும் இங்கு நோக்கற்பாலது.


உதவி நூலகர்

புல்ஹர் தனது பேராசிரியருடைய அறிவுறுத்தலைப் பின்பற்றி வேதங்களைக் கற்கவும் வாய்ப்பிருந்தால் வேதச் சுவடிகளைப் படியெடுத்து ஒப்புநோக்கி ஆய்வு செய்வதற்காகவும் பரிஸ், ஒக்ஸ்போர்ட், லண்டன் ஆகிய நகரங்களில் உள்ள புகழ்பெற்ற நூல்நிலையங்களை நாடிச் சென்றார்.

இவ்வாறான முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கும் காலத்தில் 1859 இல் லண்டனில் பேராசிரியர் மக்ஸ்முல்லரின் அறிமுகம் கிடைத்தது. லண்டனில் புல்ஹர் உதவிநூலகராகப் பணியாற்றிய சந்தர்ப்பத்தில் மக்ஸ்முல்லரின் வேண்டுகோளினை ஏற்று அவருடைய சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு (History of Sanskrit Literature ) என்ற நூலுக்குரிய சுட்டியைத் (Index) தயாரித்து  வழங்கினார்.

இச்சந்திப்பு அவர்கள் இருவருடைய வாழ்விலும் மிகுந்த முக்கியத்துவம் உடையது மட்டுமன்றி இந்தியவியல் ஆய்வுகளின் செல்நெறியிலும் முக்கிய ஒரு வரலாற்றுப் புள்ளியாக அமைந்தது.

இங்கிலாந்தின் வின்சரிலுள்ள றோயல் நூல்நிலையத்தில் உதவி நூலகராகப் பணியாற்றிக் கொண்டிருந்த புல்ஹர் மூன்று வருடங்களின் பின்னர் தனது பதவியை இராஜினாமாச் செய்து விட்டு மீண்டும் தாய்நாடு சென்று தான் கல்விகற்ற கொரிங்ரன் (Gottingen) பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் உதவிநூலகராக இணைந்து கொண்டார்.

மூன்று வருடங்கள் லண்டனில் பணிபுரிந்த காலத்தில் தனது ஓய்வுநேரத்தை வேதஇலக்கியச் சுவடிகளைக் கற்பதிலே செலவிட்டார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் போடிலியான் (Bodleian) நூலகத்திலும் பிரித்தானியாவிலுள்ள இந்திய நூலகப்பிரிவிலும் (Indian office) உள்ள வேதச் சுவடிகளை ஆழ்ந்து கற்றார்.

“கிழக்குலகின் ஒளியாகக் கருதப்படும் வேத இலக்கியங்களின் செழுமையையும் இந்துக்களின் சமய பண்பாட்டு மரபுகளையும் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும்"

என்ற ஆர்வம் கிளர்ந்தெழுவதற்கு லண்டன் மாநகரம் எனக் குதவிற்று 

எனப் பிற்காலத்தில் புல்ஹர் குறிப்பிடுவதில் இருந்து இங்கிலாந்தின் பணி அனுபவம் அவரை இந்தியவியல் ஆய்வுகளை நோக்கிப் புடம் போட்டமை தெளிவாகிறது.


இந்திய விஜயம்

சொந்த நாடான ஜேர்மனியில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்த போதிலும் புல்ஹரின் மனம் இந்தியாவுக்குச் சென்று இந்திய புனித நூல்களைக் கற்க வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருந்தது.

இதற்காக அவர் மக்ஸ்முல்லரைத் தொடர்பு கொண்டார். மக்ஸ்முல்லர் தனது நண்பரான ஹவர்ட் (Howard) என்ற ஆளுநர் மூலமாக பம்பாய் கல்விச் சேவையில் புல்ஹருக்கு ஒரு பணியைப் பெற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். ஆயினும் அந்த நியமனம் கைநழுவிப் போயிற்று. அளவற்ற நம்பிக்கையோடு இந்தியாவில் கால்பதித்த புல்ஹருக்கு இச்சம்பவம் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. ஆயினும் மக்ஸ்முல்லரின் இன்னொரு நண்பராகிய சேர். அலெக்சான்டர் கிறான்ட் (Sir Alexander grant ) என்பவர்; தான் அதிபராகப் பணியாற்றிய பம்பாய் எல்பின்ஸ்ரோன்ற் (Elphinstone) கல்லூரியில் புல்ஹரை கீழைத்தேய மொழிகளுக்கான பேராசிரியராக (10.02.1863) நியமித்தார்.

1863 இலிருந்து 1880 வரைபுல்ஹர் கல்லூரிப் பேராசிரியர். கல்விப் பரிசோதகர், இந்தியவியல் சுவடிகளைத் தேடும் அரச செயற்றிட்டத்துக்கான பொறுப்பாளர் எனப் பல்வேறு பொறுப்பு வாய்ந்த பதவிகளை ஏககாலத்தில் வகித்தார். மேலும் வில்லியம்ஸ் ஜோன்ஸ் அவர்களால் 1784இல் கீழைத்தேசவியல் மற்றும் இந்தியவியல் ஆய்வுகளுக்காக வங்காளத்தில் நிறுவப்பட்ட ஆசியக்கழகத்தின் (Asiatic society) பம்பாய் கிளையின் (Bombay Brance of the Royal Asiatic Socicty ) அங்கத்தவராயும் புல்ஹர் இருந்துள்ளார். 

புல்ஹரின் தனிப்பட்ட வாழ்க்கை அதிக சுவாரசியங்கள் ஏதுமற்ற வெறுமையானதாகவே அறியப்பட்டிருக்கிறது. இந்தியாவில் சுவடிகளைத் தேடுவதிலும் தொல்பொருட் சின்னங்களை நாடிப் பயணிப்பதிலும் அவருடைய நாட்டம் முழுதும் இருந்தமையினால் தனது தேகாரோக்கியம் குறித்து அக்கறை கொள்ளவில்லை. இந்தியாவின் கடும் வெப்பமுடைய காலநிலையும் புல்ஹரின் ஆரோக்கியத்தை அடிக்கடி பாதித்தது. ஈரல் அழற்சி நோயும், புல்ஹரைப் பீடித்த நிலையில் 1877 - 1879 காலப்பகுதியில் விடுமுறை பெற்றுக்கொண்டு சிகிச்சைக்காக ஐரோப்பாவுக்கு மீண்ட புல்ஹர் 1878இல் சுவிற்சர்லாந்து பெண்ணான மதல்டி போர்ரர் (Mathilde Former) என்பவரை மணந்தார். 1879 காலப்பகுதியில் மீண்டும் இந்தியாவுக்கு வருகைதந்தார். ஆயினும் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. 1880இல் பம்பாய் எல்பின்ஸ்ரோன் (Elphinstone) கல்லூரிப் பேராசிரியர் பதவியிலிருந்து தனது ஓய்வை அறிவித்துவிட்டு புல்ஹர் ஐரோப்பா திரும்பினார்.

புல்ஹரின் இந்தியவியல் ஆய்வணுகுமுறை

தனக்குச் சமகாலத்தில் இந்தியவியல் பற்றி ஆய்வுசெய்ய முனைந்தசில அறிஞர்களைப் போலில்லாமல் புல்ஹர் மரபுவழி இந்தியப் பண்டிதமரபை மதித்தார். இந்திய சாஸ்திரங்கள் குறித்த எத்தகைய நவீன ஆய்வுகளும் பண்டிதமரபினை உதறித்தள்ளிவிட்டு மேற்கொள்ளப்பட முடியாது என்பதில் அவருக்கு இரண்டு கருத்திருந்ததில்லை.

'சாஸ்திரிகள் எனப்படுபவர்களே பாரம்பரிய இந்தியாவின் அறிவுப் பரம்பலின் முக்கிய பிரதிநிதிகளாக உள்ளனர். பாரம்பரிய முறைகளிற் பயிற்சிபெற்ற இப்பண்டித மரபினரை பேராசிரியர்களுக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் துணைசெய்யும் வகையில் பயன்படுத்த வேண்டும்"

இவ்வாறாக ஐரோப்பியக் கல்வி முறையுடன் பாரம்பரிய இந்துப் போதனை முறைகளை இணைத்து நோக்குவதே இந்தியவியல் குறித்த ஆய்வுகளுக்கான பொருத்தமான அணுகுமுறையாக அமையும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். தனது இந்த நிலைப்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் விதமாக புல்ஹர் மேற்கொண்ட முக்கிய செயற்றிட்டமாக அமைவது மும்பாய் சம்ஸ்கிருதப் பனுவல்களின் தொடர் (Bombay Sanskrit series ) எனப்படும் நூல்வெளியீட்டுத் திட்டமாகும். இத்திட்டம் 1865 - 1866 காலப்பகுதியில் புனேயிலிருந்த பேராசிரியர் ஹீல்ஹார்ன் (Kielhom) என்பவருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

“இதன் நோக்கம் சுதேசக் கல்வியாளர்களுக்கு ஐரோப்பிய விமர்சன முறைகளைக் கற்றுக்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை அளிப்பதும் இந்தியப் பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் பயன்படுத்துவதற்காக தரமானதும் விலை மலிவானதுமான சம்ஸ்கிருத நூல்களைப் பெற்றுக்கொள்ள உதவுவதுமாகும்”

இவ்வாறு தனது நோக்கத்தை புல்ஹர் வெளிப்படுத்தியிருப்பினும் மும்பாய் சமஸ்கிருதப் பனுவல்களின் தொடர் (Bombay Sanskrit series ) பற்றிப் புகழ்பெற்ற பிறிதொரு இந்தியவியல் ஆய்வாளரான வின்ரநிட்ஸ் (Wintemitz) கருத்தோ இன்னொரு பரிமாணத்தைப் புலப்படுத்துகின்றது.

“ஐரோப்பிய நாடுகளில் இந்தியப் பண்பாடு குறித்த அருட்டுணர்வு கூர்மையடைவதற்கு மும்பாய் சமஸ்கிருதப் பனுவல்களின் தொடர் (Bombay Sanskrit series ) பதிப்பித்து வெளியிட்டபனுவல்களின் வகிபங்கு முக்கிய இடத்தைவகித்தது”

மேற்படிச் செயற்றிட்டத்தில் 1868 - 1880 காலப்பகுதியில் பத்திராதிபராகச் செயற்பட்ட புல்ஹர் அனேக பனுவல்களைச் சுவடிகளில் இருந்து நூலுருவாக்கினார். பலவற்றை ஆங்கிலமொழிக் குறிப்புரைகளுடன் பதிப்பித்து வெளியிட்டார். பஞ்சதந்திரத் தொகுதிகள் நான்கு, தண்டி இயற்றிய தசகுமாரசரிதத்தின் முதலாவது பகுதி ஆகியவற்றை மேற்படி தொடர்களில் பதிப்பித்ததுடன் 1875 இல் தானே சுவடி ஆய்வின் மூலம் பெற்றிருந்த காஷ்மீர் கவிஞர் பில்ஹணரின் புகழ்பெற்ற பனுவலாகிய விக்கிரமன் கதேவ சரிதத்தையும் பதிப்பித்து வெளியிட்டார்.


இந்துச் சட்டமூலங்கள் பற்றிய ஆய்வுகள்

இந்துச் சட்டங்கள் பற்றி ஆய்வு செய்த மேலைநாட்டவர்களுள் புல்ஹர் முக்கியமானவர். அன்றைய காலகட்டத்தில் பிரித்தானியாவின் காலனித்துவ நாடாக விளங்கிய இந்தியாவினைப் பரிபாலனம் செய்வதில் இந்திய மரபு வழிச் சட்டங்கள் பற்றிய அறிவு ஆங்கிலத் தேசாதி பதிகளுக்கும் நீதிபதிகளுக்கும் இன்றியமையாதிருந்தது.

குறிப்பாகச் சுதேசிய இந்தியர்களின் குடியியல் மற்றும் குற்றவியல் வழக்குகளைத் தீர்ப்பதற்கு தர்ம சாஸ்திரங்கள் பற்றிய தெளிவு அவசியமாக இருந்தது. குறிப்பாக குடியியல் சார் வழக்குகளில் சமூக நடைமுறைகள் என்ற வகையில் தர்மசாஸ்திரங்கள் விதித்த வழிமுறைகள் மக்களிடையே அதிகம் பயின்றுவந்துள்ளன.

புல்ஹரின் (Bulher) காலத்தில் இந்தியாவில் நடைபெற்ற வழக்குகளில் நீதிபதிகள் புராதன இந்துச் சட்ட மூலங்கள் பற்றி எதுவும் அறிந்திராத நிலையில் சாஸ்திரிகள் சிலரின் உதவியையும் ஆலோசனையையும் பெற்றே வழக்குகளைத் தீர்க்க வேண்டியிருந்தது.

இத்தகைய நெருக்கடியை நிவர்த்தி செய்யும் பொருட்டு புல்ஹர் இந்துச் சட்டம் பற்றிய திரட்டு ஒன்றை உருவாக்கும்படி வேண்டப்பட்டார். இதனை ஏற்று 1867இல் சேர் றேமன்ற் வெஸ்ற் (Sir Raymond West) என்ற அதிகாரியின் ஒத்துழைப்புடன் இந்துச் (Digest of Hindu Law ) சட்டத்திரட்டை உருவாக்கினார். மக்ஸ்முல்லரும் தனது கிழக்குலகின் புனித நூல்கள் (Sacred books of the east ) என்ற புகழ்பெற்ற தொகுதியில் தர்மசாஸ்திரங்கள் கூறும் நீதிநடைமுறைகளைத் தொகுக்கும்படி புல்ஹரிடமே வேண்டியிருந்தார்.

புல்ஸரும் ஆபஸ்தம்பஸ்மிருதி, கௌதமஸ்மிருதி, வசிட்டஸ்மிருதி. பௌதாயனஸ்மிருதி ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பதிப்பித்தார். இவற்றிற்கு அவர் எழுதிய விளக்கக் குறிப்புக்கள் பிரசித்தமானவை.

இவை யாவும் ஆரியர்களின் புனித சட்டங்கள் என்ற தலைப்பில் முறையே இரண்டு தொகுதிகளாக 1879 இலும் 1882 இலும் வெளிவந்தன. (The sacred Laws of the Aryas ) மக்ஸ்முல்லரின் கிழக்குலகின் புனிதநூல்கள் திரட்டிலும் (sacred Books of the east ) இவை 1897 இல் இடம்பெற்றன. 

ஸ்மிருதிகளில் அதிகம் பிரபல்யமானதும் நவீனகாலத்தில் அதிக விமர்சனங்களை எதிர்நோக்கியதுமான மனுஸ்மிருதியினை 1886 இல் புல்ஹர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

புல்ஹரின் ஸ்மிருதி மொழிபெயர்ப்புக்களின் மூலம் அக்கால நீதி மன்றங்களில் நிகழ்ந்த மாற்றங்கள் பற்றி கார்லோஸ் பென்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“இந்து சமுதாய நடைமுறைகளின் அடிப்படைகளைப் பிரதிபலிக்கின்ற ஸ்மிருதிகளே ஆதிதொட்டு இந்தியர்களின் சட்ட நூல்களாகத் திகழ்ந்து வந்துள்ளன. வழக்குகளின் பின்னணியை ஒவ்வொரு நீதியாளரும் விளங்கிக் கொள்வதற்கு அதன் சமூகப் பின்னணியைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் சமூக வழக்காறுகளே பல சமூகங்களில் சட்டங்களாகப் பரிணமிக்கின்றன. தர்மசாஸ்திரங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்ட பின்னரே ஆங்கில நீதிபதிகளுக்கு யாருடைய தயவுமின்றி இந்தியக் குடிமக்களின் வழக்குகளின் பின்னணியை அறிந்துணர முடிந்தது. இதற்கு வழிகோலிய Dr.புல்ஹர் கோல்புறூக் போன்றவர்களின் பணிகள் காலத்தால் என்றும் நினைவுகூரப்பட வேண்டியவை

புல்ஹர் இந்துத் திருமணம், தத்தெடுத்தல், சொத்துரிமை, விவாகரத்து. பாகப் பிரிவினை ஆகியவை தொடர்பில் ஸ்மிருதிகள் பலவற்றை ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரைகளையும் விரிவுரைத் தொடர்களையும் நிகழ்த்தியிருக்கிறார். புகழ்பெற்ற ஆசியக் கழகத்தில் 1863இல் அளிக்கை செய்யப்பட்ட “இந்துக்களின் பால்யதிருமணங்கள் பற்றி” (On the Early Marriages of the Hindus) என்ற தலைப்பில் அமைந்த ஆய்வுக் கட்டுரை இதற்குத் தக்கசான்று பகிர்வதாக அமையும். இக்கட்டுரை மதராஸ் இலக்கிய அறிவியற் சஞ்சிகையிலும் 1864 இல் வெளிவந்தது.

மயூகஸ்மிருதியின் வியவஹாரப் பகுதியில் இடம்பெறும் கடுந்தேர்வு முறைகள் பற்றி விவரிக்கும் அத்தியாயம் ஒன்றையும் 1866 இல் புல்ஹர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அதனைத் தனது ஆய்வுக் கட்டுரையின் பொருளமைதியாக்கினார்.

இக்கட்டுரையும் வங்காள ஆசியக்கழகத்தின் ஆய்வுச் சஞ்சிகையில் வெளியானது.

ஸ்மிருதிகள்; ஆசாரம், வியவஹாரம், பிராயச்சித்தம் என்ற அடிப்படைப் பிரிவுகளையுடையன. வியவஹாரப் பகுதி குற்றங்கள் அவற்றுக்கான தண்டனைகள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய பகுதியாகும்.

கடுந்தேர்வு என்பது குற்றஞ்சாட்டப்பட்டவரை நெருப்பு/நீர்ஃ/விஷம் முதலியவற்றின் முன் சத்திய பரிசோதனைக்காக நிறுத்துதல் ஆகும். 

உதாரணம்:- ஒருவன் தீயைக் கையில் ஏந்தியபடிதான் குற்றம் செய்யவில்லை எனச் சத்தியம் செய்யும்போது அவன் கூறியது சத்தியமெனில் தீ அவனைச் சுடாது என்ற நம்பிக்கை. இப்படிப் பலவிதமான கடுந்தேர்வுமுறைகள் தர்மசாஸ்திரங்களின் வியவஹாரப் பகுதியில் விபரிக்கப்பட்டுள்ளன.

ஆசியக் கழகத்தின் ஆய்வுச் சஞ்சிகையில் சௌனகிய ஸ்மிருதி தொடர்பாக புல்ஹரால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரையும் வெளிவந்தது.

மேலும் பதினெண் புராணங்களில் ஆங்காங்கே சிதறிக் கிடந்த நீதி நூற் கருத்துக்களை ஒன்றுதிரட்டி அவற்றுள் ஆபஸ்தம்ப ஸ்மிருதியுடன் தொடர்புபடுத்தக் கூடிய நீதிநெறி முறைகளை இனங்கண்டு “புராணங்களில் ஆபஸ்தம்பரின் மேற்கோள்கள்” என்ற தலைப்பில் ஒர் விபரணக் கட்டுரையை எழுதினார். இது 1896 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

பதினெண் ஸ்மிருதிகளில் மனுஸ்மிருதிக்கு அடுத்த நிலை மிகுந்த கவனத்துக்குரியதாகக் கருதப்படுவது யாக்ஞவல்கிய ஸ்மிருதியாகும். மிதிலையைச் சேர்ந்த ரிஷி யாக்ஞவல்கியரால் இது தோற்றுவிக்கப்பட்டது. கிபி 3-5 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தோற்றம் பெற்ற இது ஆசாரம், வியவஹாரம், பிராயச்சித்தம் என்ற மூன்று பிரிவுகளில் ஆயிரத்துப் பத்து சுலோகங்களைக் கொண்டமைந்துள்ளது. நீதிமன்றங்கள் தொடர்பிலும் ஏனைய அனைத்து ஸ்மிருதிகளைவிடவும் இதுவே சிறப்பான விடயங்களை முன்வைத்துள்ளதாக ஆய்வாளர் கருதுவர்.

யாக்ஞவல்கிய ஸ்மிருதிக்கு விஞ்ஞானேசுவரர் செய்த வியாக்கியானமே “மிதாச்சரம்” என்று அழைக்கப்படுகின்றது. மூலத்தை விடவும் இந்த உரையின் கீர்த்தி பிற்காலத்தில் பெருவழக்காகிச் சிறப்புற்றது. பிற்கால இந்து சமுதாய வழக்காறுகளில் மிதாச்சரத்தின் செல்வாக்கு மேலோங்கிக் காணப்பட்டது.

மிதாச்சரத்தை எழுதிய விஞ்ஞானேசுவரர் வாழ்ந்த காலகட்டம் குறித்து யாதொரு துலக்கமும் அறியப்படாத சூழ்நிலையில் புல்ஹர் இது குறித்து சிந்தித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக மிதாக்ஷரா ஆசிரியரின் காலம் பற்றியகுறிப்பு (A Note on the Age of the Author of the Mithakshara) என்ற ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார்.

மேலும் வசிட்டஸ்மிருதியில் விபரிக்கப்படும் இந்துச்சட்ட நடைமுறைகள் தொடர்பிலும் ஆபஸ்தம்பஸ்மிருதி பற்றியும் இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் ஜேர்மன் மொழியில் புல்ஹரால் எழுதப்பட்டன. இவை முறையே 1885 மற்றும் 1886 களில் வெளிவந்தன.

புல்ஹர் இது மட்டுமல்லாமல் தனது சொந்த முயற்சியால் இந்தியாவின் பல பாகங்களுக்கு சென்று 2300க்கும் மேற்பட்ட ஏட்டுச் சுவடிகளை சேகரித்துள்ளார். இவற்றினை இந்தியாவை விட்டுச் செல்லும் போது அரசாங்க ஆவணக் காப்பகத்தில் சேர்ப்பித்திருந்தார். இச்சுவடிகளை அவர் பெறுவதற்கு இந்தியச் சமயங்கள் மீது அவருக்கிருந்த மரியாதையும் சமஸ்கிருத, பிராகிருத மொழிகளில் கொண்டிருந்த ஆழ்ந்த புலமையும் பிரதான காரணங்களாயின. ஏனெனில் வைதிக சமயத் தலைவர்களும் அவைதிக மதப் பெரியவர்களும் தம்மிடையே பொக்கிஷங்களைப் போலப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த தத்தமது சமய ஏடுகளை வேற்று நாட்டவரிடம் எந்தச் சந்தர்ப்பத்திலும் கையளிக்கத் தயாராய் இல்லை. எந்த விலைக்கும் அவற்றை விற்பதற்கோ படியெடுக்கவோ ஏன் ஒருமுறை காண்பிப்பது கூடப் பாவம் என்ற நிலைப்பாட்டில் இருந்த புனிதச் சுவடிகளாகவே அவை கருதப்பட்டிருந்தன.  இவற்றை புல்ஹரால் பெற்றுக்கொள்ள முடிந்தமைக்கான பிரதான காரணம் அவர் இந்தியச் சமயங்களின் மீதும் சம்பிரதாயங்களின் மீதும் கொண்டிருந்த மரியாதையேயாகும்.

இச்செயற்பாடுகளின் மூலமாக புல்ஹர் இந்திய பாரம்பரிய சட்ட நூல்களை மொழிபெயர்த்ததுடன், பல அரிய வகையான ஏட்டுச்சுவகளையும் கண்டுபிடித்து தந்ததுடன் இந்துப் பண்பாட்டுக் கற்கைகள் மேலைத்தேச ஆய்வறிவியல் சட்டகத்துடன் இயைந்து உலக அரங்கிற்குத் கொண்டு செல்வதற்கும். நவீன இந்துசமய சீர்திருத்த சிந்தனையாளர்கள். தோன்றவும், வங்காள மறுமலர்ச்சி ஏற்படவும் மேலைத்தேசத்தவர்களின் இத்தகைய செயற்பாடுகளே துணைக்காரணிகளாயின. மேலைத்தேச அறிஞரான புல்ஹர் என்றும் நன்றியுடன் நினைவுகூரப்பட வேண்டியவரே.


திருஞானசம்பந்தர் குறிஞ்சி

நான்காம் வருடம் 

(இந்துநாகரிகத் துறை),

கிழக்குப் பல்கலைக்கழகம்,

இலங்கை.

2 Comments

  1. இந்து மதம் பற்றி தெரியாத பல செய்திகளை தந்ததற்கு நன்றி

    ReplyDelete
  2. Good information...

    Manikandan, Thiruvarur

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு