Trending

பாரதியாரின் சந்திரத்தீவு எளிய நடையில்

சந்திரத்தீவு சிறுகதை


மகாகவி பாரதியார் 1910ஆம் ஆண்டு முதல் 1920 வரை சுதேசமித்ரனில் எழுதி வெளிவந்த எழுத்தாக்கங்களில் ஒன்று "சந்திரத்தீவு" சிறுகதை. சற்றேறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன் அவரது மனிதநேய சிந்தனைகள் எப்படி இருந்தன என்பதை காட்டவே இந்தச் சிறுகதை. அக்காலத்தில் வடமொழி கலந்த தமிழில் இது எழுதப்பட்டது. அந்த தமிழ் படிப்பதற்கு ஆனந்தமாகத்தான் இருக்கும் என்றாலும் இக்காலத்தவருக்கு ஏற்ற நடையில் பொருள் மாறாது தருகிறேன் பாரதியின் எழுத்தை என் எழுத்தில். 


சந்திரத்தீவு


மலேசியத் தீவு கூட்டங்களிலே ஒரு தீவு பூலோ பூலாங் என்பது. மலேய மொழியில் இதன் பொருள் சந்திரன் உதிக்கும் தீவு என்பதாகும். எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இத்தீவில் கங்காபுத்ரன் எனும் இந்து ராஜா ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு ஆண் மகவு கிடையாது. பல தவங்களுக்கும் வேள்விகளுக்கும் பின்னர் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு சந்திரிகை என பெயரிட்டு வளர்த்து வந்தான்.

 

சந்திரிகையின் அறிவும் அழகும் வர்ணிக்க இயலாத ஒன்றாகும். கப்பல் வியாபாரிகள் மூலம் அவளுடைய புகழ் இந்த பூ மண்டலம் முழுவதும் பரவியிருந்தது. அப்போது காசி மாநகரத்தை ஆட்சி செய்தவன் வித்யா புத்ரன் எனும் பிராமண இராஜா ஆவான். அவன் சந்திரிகையின் கீர்த்தியை உனர்ந்து அவளை மணம் செய்ய விரும்பி சண்டிகை என்ற பெயருடைய அவனுடைய பெரிய தாயையும் தனது மந்திரி சுதாமனையும், பெண் கேட்டு சந்திரத்தீவுக்கு அனுப்பினான்.


அவ்விருவரும் பூக்கள் பழங்கள் இனிப்புக்கள் போன்ற வரிசைப் பொருட்களுடன் தங்கம் வெள்ளி ஆபரணங்களோடும் பரிவாரங்களோடும் சந்திரத்தீவில்  இறங்கி காசி ராஜனின் விருப்பத்தை கங்காபுத்ரனிடம் தெரிவித்தார்கள்.


சந்திரிகை பதினேழு வயதுடையவள். சந்திரிகை பகலில் ஓரிடம் வந்தால் பகலவனின் ஒளி மங்கி நிலவொளி போல் பேரொளி வீசும் பேரழகு வாயந்தவள். அவளுக்கினையான பேரழகி இப்பூவுலகில் இல்லையாதலால் தகுதி இல்லாதவர்க்கு தன் மகளை கொடுத்திடக் கூடாது என தகுந்த வரன் பார்த்து காத்திருந்தான் கங்காபுத்ரன்.

காசிராஜனின் வேண்டுகோளை கேட்டதும் கங்காபுத்ரனுக்கு அவனுக்கே மகளைக் கொடுக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. ராணியும் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாள். ஆனால் இதில் ஒரு பிரச்சினை, சந்திரிகைக்கு நாட்டமில்லை. காசிராஜனின் அமைச்சன் சுதாமனின் பேச்சு திறமையையும் ஆளுமையையும் அவன் தோரனையையும் பார்த்ததில் இருந்து அவன் மீது மோகம் கொண்டுவிட்டாள். அவனையே தனக்கு மணமுடிக்க வேண்டி பிடிவாதம் செய்தாள்.


மறுநாள் கங்காபுத்ரன் தனது மந்திரி இராஜகோவிந்தனையும் காசி தேசத்து மந்திரி சுதாமனையும் வேடர் பரிவாரங்களையும் சேர்த்து கொண்டு யானை வேட்டைக்கு சென்றான். வேட்டையிலே இரண்டு ஆண் யானைகள் வேட்டையாடப்பட்டு உயிரை விட்டது. வேட்டை முடிந்து குளித்து, உணவு உண்டபின் அங்கு ஒரு ஆல மர நிழலில் கோவிந்தன் சுதாமன் கங்காபுத்ரன் மூவரும் சாஸ்திர சம்மந்தமான உரையாடலில் ஈடுபட்டனர்.


அப்போது சந்திர தேசத்து அரசன் "இன்று காலை இரண்டு யானைகளை கொன்றோமே அது பாவமில்லையா? எவ்வளவு பொறுமையான அழகான நேர்த்தியான மிருகங்கள் ! எவ்வளவு பெருந்தன்மையான, வீரமான மிருகங்கள் அவற்றை கொன்றுவிட்டோமே! இது பெரும் பாவம் இல்லையா?" என்றான். அதற்கு காசி மந்திரி சுதாமன் "ஆர்ய புத்திரனே! யானைகளை கொல்வது மட்டுமா பாவம்? ஆடு மாடு கோழிகளை அழித்து உண்ணுகிறோமே! அது பாவமில்லையா?" என்றான். "அதுவும் பாவம்தான்" என்றான் கங்காபுத்ரன்.


சுதாமன் சொல்கிறான், "மிருகங்களை அடித்து உண்பது மிருகங்களுக்கு இயற்கை. அதனால் அது பாவமாகாது.  மனிதன் மாத்திரம் தானா மாமிசம் தின்கிறான்? மனிதனை புலி தின்னவில்லையா? சிங்கம் புலி கரடி நாய் நரி எல்லாம் ஒன்றை ஒன்று அடித்து உண்ணவில்லையா? அஹிம்சா விரதமா இருக்கின்றன? கொக்கு மீனை தின்னவில்லையா? பெரிய மீன் சிறிய மீனை விழுங்கவில்லையா? பருந்து கோழியை தின்னவில்லையா? காக்கை பூச்சிகளையும் குருவி புழுக்களையும் உன்னவில்லையா?" என்று கேட்டான். அதற்கு இராஜவர்மன் "ஜீவனை இம்சிப்பதை பொது நியாயமாக சொல்லாதீர்கள். யானை மாமிசத்தை தின்னாது, குரங்கு தின்னாது, குதிரை தின்னாது, ஓட்டகம் தின்னாது,  கழுதை தின்னாது" என்றான்.


அதற்கு கங்காபுத்ரன் "சிங்கம் புலி நம்மை தின்னுமென்றால் அதை பழிவாங்க நாம் அதை வேட்டையாடலாம். அப்படி யாரும் இங்கில்லை. யாதொரு தீமையும் எவ்வுயிருக்கும் செய்யாத ஆட்டையும் பசுவையும் மானையும் மனிதன் தின்பது நியாயமா?" என்றான். அதற்கு சுதாமன் சொல்கிறான், மனிதர்களான நாம் மிருகங்கள் மீது இரக்கம் கொண்டு விவாதம் செய்கிறோம். ஆனால் மனிதனை மனிதன் கொல்லுதலை பார்த்தும் சும்மா இருக்கிறோம். போர்களில் எந்த பாவம் அறியாத லட்சக்கணக்கான மனிதர்களை கொன்று குவிக்கிறோம். ஆடு மாடுகள் உண்பதற்காவது பயன்படுகிறது. நாகரீக மனிதர் தின்னப் பயன்படுத்தாத மனிதரை கொன்று பாவத்தை சேர்க்கிறார்கள்" என்றான்.


அதற்கு சுதாமன் "உயிர்களை அடிமைப்படுத்தும் வழக்கம் மிருகங்களுக்கு இல்லை. மனிதன் இன்னொரு மனிதனை அடிமையாக வைத்து கொள்கிறான். ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தை அடிமையாக வைத்துக்கொள்வதில்லை. ஒரு சிங்கம் தனது அடிமையாக புலியையோ கரடியையோ நாயையோ நரியையோ ஏன் ஒரு முயலைக் கூட வைத்துக்கொள்வது இல்லை. ஆனால் மனிதனோ யானை குதிரை மாடு ஆடு கழுதை ஒட்டகம் போன்றவற்றை அடிமைப்படுத்தி வேலை வாங்குகிறான்" என்றான்.


"ஆணுக்கு ஆண் அடிமைப்பட்டு இருப்பதை காட்டிலும் பெண்ணை அடிமைப்படுத்துதல் பெரும்பாவம்" என்றான் இராஜ கோவிந்தன். அடிமைப்படுத்துதல் என்பது சாத்தியம்தான் எனக் கூறிய கங்காபுத்ரன், ஆடவர்களில் செல்வம் உள்ளவர்கள் செல்வம் இல்லாதவர்களை அடிமைப்படுத்தல் சகஜம்தான் என்கிறார். பெண்கள் சரீர பலம் இல்லாததாலும் குழந்தை பேறு கொண்டவர்களாக இருப்பதாலும் துஷ்டர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள இயலாமல் இருப்பதாலும் ஆண்களை நம்பி சோற்றுக்கு இருப்பதாலும் ஆண் அவளை அடிமைப்படுத்த நேர்வதாக கங்காபுத்ரன் கூறினார். அதற்கு சுதாமன் "ஆண்களை விட பெண்கள் வீட்டை நிர்வகிப்பதிலும் உழவு வேலைகளிலும் திறமை காட்டுகிறார்கள். மேலை நாடுகளில் பெண்கள் காரியம் செய்து ஆண்களுக்கு சோறு போடுகிறார்கள். இருந்தாலும் அடிமைப்படுத்துதல் என்பது எங்கும் ஒன்றாகவே உள்ளது. காளையை விட பசு பலம் குறைந்தது, சேவலைக் காட்டிலும் கோழி பலம் குறைந்தது, சிங்கம் புலி நாய் நரி அனைத்துக்கும் ஒரே நிலைதான். பலம் உள்ளவை பலம் குறைந்தவற்றை துன்பப் படுத்தலாம் என்பது எல்லா உயிரினத்திலும் ஒன்றாக உள்ளது" என்றான். உடனே கங்காபுத்ரன்  "அப்படியானால் பெண்ணை ஆண் அடிமையாக நடத்துவதும், புலி மானைத் தின்பதும், ஆட்டை மனிதன் தின்பதும், பள்ளனை சிறுக் கோபத்திற்காக மன்னன் தலையைத்துண்டித்து சிரச்சேதம் செய்வதும் ஒன்றுதானா?" எனக்கேட்டான்.

அதற்கு சுதாமன் "காக்கை குருவிகளுக்கு நெல்லும் பழமும் கொடுத்து திருத்த முயற்சிக்கலாம். சிங்கம் புலிகளுக்கு கீரையையும் வாழைப்பழத்தையும் கொடுத்து திருத்த முடியமா? சகல புழுக்களுக்கும் பூச்சி இனத்துக்கும் அரிசியும், தானியமும் கொடுப்பது சாத்தியமாகுமா? நாம் அந்த வலிமையை பெற்று உள்ளோமா என்றால் இல்லை.


அப்போது இராஜகோவிந்தன் "காட்டு விலங்குகளை நம்மால் கட்டுப்படுத்த இயலாவிட்டாலும் பிற உயிர்களை மனிதன் உண்ணாமல் கட்டுப்படுத்த வழி உண்டு" என்றான். எப்படி என கங்காபுத்ரன் கேட்க சுதாமனே ஒரு யோசனை சொன்னான்," அரசன் எப்படியோ, அப்படியே மண்ணுயிர் என்பதால் பெண்கள் உள்பட அனைவரையும் அடிமையாக நடத்தாமல் சமமாக நடத்த மன்னனே தொடங்க வேண்டும். ஆகாரம் உள்பட அனைத்தும் மன்னன் உள்பட அனைவருக்கும் சமமாதல் வேண்டும். இரண்டு லட்சம் பேர் கொண்ட இந்த தேசத்தில் தொடங்கும் பழக்கம் எல்லா தேசங்களுக்கும் பரவும்.


"இங்குள்ள மக்கள் யாவரும் மாமிசம் உண்பதில்லை என்ற உறுதி எடுப்போம். பாரத தேசம் போன்ற அயல் தேசங்களுக்கு அனுப்பப்படும் இரண்டு லட்சம் சாக்கு தேங்காய்களையும் மூன்று லட்சம் சாக்கு பழங்களையும் அனுப்பாமல் நம் மக்கள் இரண்டு லட்சம் பேருக்கும் பிரித்துக் கொடுப்போம். இங்கு விளைகிற நெல் புல் கிழங்கு காய் கனி எதுவும் வெளியில் போக வேண்டாம். பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரும் உழுதல், பயிரிடல், தோட்டஞ் செய்தல், துணி செய்தல், மனை கட்டுதல் எனப் பிரித்து கொள்வோம். வீடு விளக்கலும், சோறு ஆக்கலும், குழந்தை வளர்த்தலும், பெண்களின் தொழிலாகக் கொள்வோம். எத்தனை கிழங்குண்டோ, எத்தனை கனியுண்டோ, எத்தனை தானியம் உண்டோ அத்தனையையும் இரண்டு லட்சம் மக்களுக்கும் சமமாக பிரிப்போம். பெண்களை அடிமைப்படுத்துதல் என இனி வேண்டாம்.


காசிராஜனின் பெரிய தாயாராகிய சண்டிகையை,  அவள் கொண்டு வந்த வரிசை பொருட்களை ஒன்றுக்கு இரண்டு மடங்காக்கி, பாரதத்தின் காசிக்கு பரிவாரங்களுடன் கப்பலில் அனுப்பிவிடுவோம். சந்திரிகை விருப்பப்படி சுதாமனுக்கு மணம் செய்து கொடுத்து விடுவோம். சுதாமன் காசிக்கு செல்லாமல் எனக்கு துணையாக ஆட்சியை நடத்தட்டும். சுதாமா! எங்களோடு தங்க உணக்கு சம்மதமா?" என்றான் கங்காபுத்ரன்.


அதற்கு சுதாமன் "நான் தீவில் தங்குவதற்கு சம்மதிக்கிறேன். மன்னனான நீயும் நல்லவன், இந்த மக்களும் நல்லவர்கள், இந்த தீவும் அழகியது, உன் மகளோ என் நெஞ்சில் நிறைந்தவள். காசி ராஜனிடம் விபரத்தை சொன்னால் கோபப்படமாட்டான். அங்கு என் தம்பியை மன்னனுக்கு உதவியாக நியமித்து கொள்ள ஏற்பாடு செய்யலாம்." என்றான்.


சுதாமனுக்கும் சந்திரிகைக்கும் இனிதே திருமணம் நடந்தது. மன்னனும் குடிமக்களும் அண்ணன் தம்பிகள் போல யாருக்கும் பசியில்லாமல், யாருக்கும் நோயில்லாமல், யாருக்கும் வறுமை இல்லாமல், யாருக்கும் பகையில்லாமல், துன்பமில்லாத ஆட்சி நடைபெற்றது. சுதாமன் மற்றும் இராஜகோவிந்தன் என்ற இரண்டு மந்திரிகளுடன் நல்லாட்சி செய்து கங்காபுத்ரன் சுகமுடன் பல்லாண்டு காலம் வாழ்ந்தான்.

தென்றல் இதழ் 37

1 Comments

  1. பாரதியின் இந்த காவிய உலகில் சஞ்சரித்துவிட்டு வந்த பாரதிதாசன் திடீரென நம்மூரின் நிஜ உலகில் வந்துமாட்டிக்கொண்ட கோபத்தில்தான் எழுதினார் போலும்...


    வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா?
    மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா?..

    உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு