Trending

மதிய உணவு தந்த மாற்றம் - சிறுகதை

 

மதிய உணவு தந்த மாற்றம்

பாரதி, பதினொரு வயது சிறுவன். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறான். அவன் அந்த பள்ளியில் சேர்ந்து ஒன்பது மாதங்கள் ஆகிறது. இதற்கு முன்பு அவன் தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில மொழிவழியில் பயின்று வந்தான். பணவசதி இன்மை காரணமாக அவனது பெற்றோர் அவனை அரசு பள்ளியில் சேர்த்தனர்.  அந்த பள்ளியில் பாரதி ஆங்கிலத்தில் புகுந்து விளையாடுவதை கண்டு மற்ற மாணவர்கள் இவனை அதியசயமாகவே பார்ப்பார்கள். இவனோ, தமிழில் மற்ற மாணவர்கள் பிழையின்றி எழுதுவதையும் வாசிப்பதையும் கண்டு ஆச்சரியம் கொள்வான். எப்படியாவது தமிழிலும் நாம் பிழையின்றி வாசித்து எழுத பழகிக்கொள்ள நினைத்தான். அதனாலேயே தமிழின் மீது ஒரு காதல் ஏற்பட்டது. அது சாதாரண காதல் அல்லாது, 'தமிழ் கூறும் நல்லுலகம்'  சொல்லும் அனைத்து நல்லொழுக்கத்தையும் கடைப்பிடித்து வாழ நினைக்கும் ஒர் உன்னத காதல்!. அவன் இவ்வாறு  தமிழ் மீது பற்றுக்கொள்ள, அவன் தமிழ் ஆசிரியர் 'முரளியும்' ஓரு காரணம். திருமணம் ஆகாத முப்பத்து ஜந்து வயது இளைஞர். அவர் பாடத்தை தாண்டி வாழ்வியல் கூறுகளையும் சொல்லி பாடம் எடுப்பார். சின்ன சின்ன கதைகள், சிறு நிகழ்வு போன்றவற்றை மேற்கோள்காட்டி பாடத்தின் கருத்தினை மாணவர் சிந்தையில் சேர்ந்திட செய்யும் வல்லவர். 


இதுவரையில் அவர் பள்ளிக்கு அருகிலே வாடகை வீடு எடுத்து தங்கி இருந்தார். இப்போது ஒரு மாதமாக அவர் பாரதி வசிக்கும் ராஜாமணியம்மாள் காலனியில், பாரதியின் வீட்டுக்கு எதிர் வீட்டில் தங்கி இருக்கிறார்.


அவருடன் நெருக்கமாகிக்கொள்ள பாரதிக்கு ஆசை, ஆனால் அவனுக்கு கூச்ச சுபாவம் மிக அதிகம். அதனால் அவரிடம் அவன் நெருங்கி பழகவில்லை என்பதை விட அவன் பழகவே இல்லை என்பது பொருந்தும்.


அன்று ஒரு நாள், பாரதியின் அம்மா விஜயலெக்ஷ்மி - முரளி ஆசிரியரின் வீட்டில் தலை நரைத்த ஒரு மதிக்கத்தக்க பெண்மணி வாசலில் அமர்ந்திருப்பதை பார்த்தாள். 


"நீங்க யாரு? சாரோட அம்மாவா?"


"ஆமாம்மா"


"நல்லா இருக்கீங்களா?"


"நல்லா இருக்கேன்மா"


"எப்ப வந்தீங்க?'


"நேத்து நைட்டும்மா"


"ஓஹோ, நான் சொல்றனேனு தப்பா எடுத்துக்காதீங்க! சார் பாவம், தினமும் கடைல தான் சாப்பிடுறாரு… இல்லைனா தனியா எதையாவது வாங்கி சமச்சிகிறாரு. சீக்கிரம் ஒரு கல்யாணத்த பண்ணுங்க"


"எங்க அவன் என் பேச்ச காதுகொடுத்து கேக்குறான்!, நீங்க சாப்பாடுனு சொன்ன உடனையே தான்மா நியாபகம் வருது, கடைத்தெருவுக்கு போய் கொஞ்சம் சாமான் வாங்கனும்"


"ஏன்? என்ன வாங்கனும்?"


"இல்ல, அவனுக்கு எதையாவது சமச்சி வைக்கலாம்னுதான். மதிய பஸ்சுக்கு கிளம்புறேன், அங்க, எங்க வீட்டுகாரு தனியா இருப்பாரு அவருக்கு உடம்பு வேற சரியில்ல"


"எப்போதும் நான் தான் கடைக்கு போவேன் இன்னக்கி அவுங்க சாமன வாங்கிட்டு வரேனு சொல்லி போயிருக்காங்க."


"சரிமா, அப்ப நான் முரளி பள்ளிகூடத்துக்கு போகும்போது அவன் கூட பைக்குல போயிடுறேன்"


"அம்மா நான் குளிச்சிட்டேன்… பசிக்கிது சாப்பாடு போடு..." உள்ளிருந்து பாரதியின் குரல்.


"யாரும்மா உங்க பையனா?" 


"ஆமா, ஸ்கூலுக்கு கிளம்புறான். சார்ட தான் படிக்கிறான்"


"ம்ம் படிக்கிற புள்ள கிளம்பிட்டு, பாடம் நடத்துற வாத்தியாரு உள்ள இழுத்து போத்திக்கிட்டு  தூங்குது..‌."


"வாத்தியார் ஸ்கூலுக்கு லேட்டா போனா யாரு அடிக்கப்போறா?" என்று சொல்லி சிரித்தபடியே விஜயா உள்ளே செல்ல முரளியின் அம்மாவும் வீட்டுக்குள் சென்றார். 


பாரதி சாப்பிட்டுவிட்டு தன் புத்தகமூட்டையையின் பாரத்தை தாங்கியபடியே கடைதெருவுகளை தாண்டி மூன்று மைல் தூரம் கடந்து, காமராசர் காலத்தில் காமராசரால் திறக்கப்பட்ட அந்ந நடுநிலைப்பள்ளியை அடைந்தான். அன்று முதல் வகுப்பே கணித வகுப்பு. அது சற்று கடின வகுப்பாகவே அனைத்து மாணவர்களுக்கும் அமைந்தது. அடுத்து அறிவியல் வகுப்பு நடந்தது அதன் பின்னர் சமூக‌ அறிவியல் வகுப்பும் ஒருவழியாக முடிவுக்கு வந்து, அனைவரும் எதிர்பார்த்த முரளியின் தமிழ் வகுப்பு வந்தது.


முரளியும் வந்தார்.


"வணக்கம் ஐயா…"


"வணக்கம் உட்காருங்கப்பா"


"இன்னக்கி இயல் ஒன்பது தொடங்குறோமா?"


"ஆமா, ஐயா…"


"சரி, 'ஆசிய ஜோதி' பாடத்த எடுத்துக்குங்க" (மாணவர்கள் புத்தகத்தின் பக்கங்களை புரட்டும் சடசட சத்தம் மெல்ல அதிகரித்து பின் குறைந்தது‌)


"பிம்பிசார மன்னன்னு ஒருத்தன் இருக்கான் அவன் என்ன பண்றான். அவன் பாவங்கள் எல்லாம் போக்க ஆடுகள பலிக்கொடுக்குற யாகத்த நடத்துறான். அதுகாக ஆடுகளை அரசவைக்கு கொண்டு போறப்ப  ஒரு ஆட்டுக்கு கால்ல அடிபட்டுடுது. அத பாத்த புத்தர், ஆட தூக்கி தோளில் போட்டுக்கிட்டு அரசவைக்கு போறாரு. அங்க போய் அரசனுக்கு அறிவுரை சொல்லுறாரு அவரு என்னென்ன சொல்லி அரசனுக்கு புத்தி புகட்டுறாருனு கவிதை வடிவுல கவிமணி தேசிக விநாயகனார் சொல்றாரு, அம்மா எந்திருச்சு அந்த பாடல படி"


ஒரு மாணவி எழுந்து 


வாழும் உயிரை வாங்கிவிடல் - இந்த

மண்ணில் எவர்க்கும் எளிதாகும்;

வீழும் உடலை எழுப்புதலோ - ஒரு

வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா!

…. ……. ……. ……

…. …….. ……. ……


அம்புவி மீதில்இவ் ஆடுகளும் - உம்மை

அண்டிப் பிழைக்கும் உயிரலவோ?

நம்பி இருப்பவர் கும்பி எரிந்திடல்

நன்மை உமக்கு வருமோ ஐயா?

……. …… …… ……

……. …… ……. ……


"கவிமணிதேசிய விநாயகனார்" என்று முடித்தாள்.


"புத்தர் அரசவைக்கு போய் நின்ன உடனே எல்லாரும் அப்புடியே நடுங்கி போயிட்டாங்களாம். அப்ப அவர் வந்து அந்த மன்னனை நோக்கி இப்புடி சொல்றாரு, ஒரு உயிர எடுக்குறது யாராலையும் முடியும்!. ஆனா போன உயிர கொடுக்குறது எந்த அரசனாலையும் முடியாது!. அடுத்தா ஒன்னு சொல்றாரு பாருங்க, எறும்புக்கு கூட அதோட உயிர் முக்கியம். அது அதோட உயிர காப்பாத்திக்க அவ்வளவு முயற்சி எடுக்கும்!. ஆடுகள் எல்லாம் நம்மல நம்பி இருக்கிற ஜீவன். அந்த வாயில்லா ஜீவன கொன்னு அது வயிறு எரிய வைக்குறது தப்புனு சொல்றாரு இத கேட்ட மன்னன் மனம் திருந்துறான். புத்தர் மூலமாக உயிர்க்கொலை தடுக்கப்படுது. இதேபோல் தான் நான் அன்னக்கி ஒரு நாளு ரோட்ல நடந்தது போயிட்டு இருந்தேன், அப்ப நம்ம தினேசு வேலியோரமா உக்கார்ந்து இருந்தான். என்னடானு கேட்டேன், ஓணானுக்கு சுருக்கு போடுறேன்னு சொன்னான். எதுக்குன்னு கேட்டேன் அதுக்கு அவன் சொல்றான்… ஓணான சுருக்கு போட்டு, அத கல்லுல கட்டிவச்சி அடிச்சா தான் ஓணான் ஓடாது. அப்பதான் அத கரட்டா கல்லால அடிக்க முடியும்னு சொல்றான்"


"சார் அதுமட்டும் இல்ல சார்... அவன் குருவி, காக்கா இதெல்லாம் பறக்குறப்ப கூட கல்லால கரக்டா அடிப்பான் சார்!" தினேசுவின் நண்பன் சத்தம் போட்டான்


(அனைத்து மாணவர்களும் சிரித்தனர்) 


"ஏன்டா குருவிய எல்லாம் அடிக்கிற?"


"சார் அத அவன் சமைச்சி சாப்புடுவான் சார் - 'டே வாய மூடுடா'"


"தம்பி தீனேஷ்சு... அது போலலாம் செய்ய கூடாது!. புரியுதா?" என்றார் முரளி. இப்படியாக வகுப்பு சுவாரசியமாக செல்ல மதிய உணவுக்கான தொடர் மணியோசை ஒலித்தது. பாரதி புத்தகத்தை பையில் வைத்துவிட்டு மதிய உணவை அருந்த வீட்டை நோக்கி நடந்தான். கடைத்தெருவின் வழியே உள்ள ஒரு கோழிக்கடையில் இறைச்சி வாடை அடித்தது. முன்பெல்லாம் இறைச்சி வாடையை தவிர்க்க மூக்கை பொத்திக்கொண்டு போவான். இப்போதோ ஒருகணம் பார்வையும் மனமும் அந்த பக்கம் சென்றது. கழுத்தருக்கப்பட்டு, பெட்டியில் துடித்த கோழியின் சிறகோசை அவன் நெஞ்சை புண்படுத்தியது‌. அருகில் இறைச்சி துண்டுக்காக தெரு நாய்கள் ஒன்றுடன் ஒன்று வெறிகொண்டு சண்டைப் போடுவதை பார்த்தான். சற்றே பயந்து சாலையின் மறுமுனைக்கு சென்று நடைபயணத்தை மேற்கொண்டான். 


அவன் வீட்டை அவன் அடைந்ததும், முரளியின் வாகனமும் வந்து நின்றது.


"அம்மா சாப்பாடு" என்ற கூவலுடன் உள்ளே செல்ல "கையகால கழுவிட்டு வா" என்றாள் விஜயலெக்ஷ்மி.


சுடச்சுட சாதத்தை வைத்தவள் 


"உனக்கு புடிச்ச ஈரல் இந்தா"


"கோழிக்குழம்பா"


"ஆமாண்டா, ஏன்?"


"இல்ல, எனக்கு வேண்டாம்"


"எதுக்கு வேணாம்ங்குற!?"


"அதெல்லாம் சாப்பிடக்கூடாது. சார் சொல்லியிருக்காங்க - ஒரு உயிர கொல்லுறது தப்புனு!"


"எந்த சார்டா அப்புடி சொன்னது!?" 


முரளி ஆசிரியர் நடத்திய பாடத்தை, அப்படியே வரி மாறாமல் பாரதி ஒப்பித்து முடித்தான். தீடீர் என்று ஒரு பூனை வாசலில் இருந்து ஓடி வந்து நேரே அவர்கள் இருவருக்கும் இடையேயும் உள்ள இடைவெயில் சாதம் வைக்கப்பட்ட தட்டினை தாண்டி கொல்லைப்புறம் ஓடியது.  இருவரும் பூனை ஓடிய நேர் எதிர் திசையில் வாசலினை நோக்கி தலையை திருப்ப, முரளி வாத்தியார் கையில் குச்சியுடன் "எங்க அந்த பூனை?" என்றார். அவர் முகத்தில் கோபம். பாரதிக்கு தெரு நாயின் முகத்தில் இருந்த அதே கோபம் அவர் முகத்தில் இருப்பது போல தோன்றியது. பாரதி சற்று நடுங்கியே போனான்.


 "ஏன் சார்!? என்ன ஆச்சு?"


"இல்லக்கா, அம்மா ஊருக்கு போறத்துக்கு முன்னடி எனக்கு புடிச்ச கோழி குழம்பு செஞ்சிவச்சிட்டு போனாங்க, இந்த பூனை தட்டி உட்டு குழம்புல வாய வச்சிட்டு!. மொத்த குழம்பையும் இப்ப கொட்ட வேண்டியது தான்" 


"அட பாவத்தே!,  சரி அத விடுங்க எங்க வீட்ல கோழிகறிக்குழம்புதான் கொஞ்சம் தரேன்"


"இல்ல இல்ல வேணாம்கா"


"பேசமா இருங்க.(உள்ளே சென்றாள்) இந்தாங்க''


"அக்கா அந்த பூனை வந்தா, அது அடிச்சி கொல்லுங்க" என்ற புலம்பலுடன் முரளி தன் வீட்டை நோக்கி செல்ல, உள்ளே அமர்ந்திருந்த பாரதி பேந்த பேந்த விழித்தான். 


"என்னடா, உனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த வாத்தியாரே சாப்டுறாரு!, சரி இப்பையாவது சாப்புடு. டைம் ஆகிட்டு"


"இல்லம்மா எனக்கு இப்பையும் வேண்டாம்!"


"இப்ப என்ன?"


"அவர் வேணா - அவர் சொன்னத பின்பற்றாம இருக்கலாம்!. அதனால அவர் சொன்ன நல்லது கெட்டது ஆகிடாது. எனக்கு வேண்டாம், நான் இத தின்னு எனக்கு பாவம் வரத்துக்கா? அதோட ஒரு உயிர கொன்னு சாப்புடறது தப்புனு நா புரிஞ்சிகிட்டேன்... எனக்கு நீ மோர் உத்தியே போடு" 


"புண்ணுக்கு மருந்து இருக்கு, ஆனா உன் புடிவாதத்துக்கு மருந்து இருக்கா? எத்தன நாளைக்கினு நான் பாக்குறேன்! நைட்டு அப்பா வந்தோன சொல்லுறேன்"


"சொல்லிக்குங்க…"


அந்த பசியில், அவனுக்கு தயிர் சோறும் ருசியாகவே இருந்தது. அன்றிலிருந்து பாரதி தான் உடலை வளர்க்க, நம்மை நம்பியே வாழும் அந்த உயிர்களின் கொல்லாமலும் அதன் ஊனை உண்ணாமலும், கசடற கற்று அதன் படிநின்று நன்றாய் வாழ்ந்தான். 


உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்

புண்ணது உணர்வார்ப் பெறின்.


குறள் விளக்கம்:


ஒரு உயிரின் இறைச்சியை உண்ணாமல் இருக்க வேண்டும். ஆராய்ந்து அறிந்து பார்த்தால் அதுவும் பிற உயிரின் புண்ணே ஆகும்.


தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்.


குறள் விளக்கம்:


தன் உடம்பைப் பெருக்க மற்றோர் உயிரின் உடம்பை உண்பவன் பிற உயிர்களிடத்தில் எவ்வாறு இரக்ககுணம் காட்டுபவனாக இருக்க முடியும்?


குகன்


தென்றல் இதழ் 38

3 Comments

  1. குடியின் கேட்டை விலாவாரியாக கண்ணதாசன் எழுதிய போது குடிகாரனான நீ இதை எழுதலாமா? என்று கேட்டார்கள். குடியின் கேட்டை முழுமையாக அறிந்த நான் எழுதுவதுதான் சரியாக இருக்கும் என்று சொன்னார். அவர் எழுதியதை படித்து திருந்தியவர்கள் ஏராளமான பேர் இருப்பார்கள். முரளி சொன்னதை கடைபிடிக்க முடியாவிட்டாலும் பாரதியை அவனால் திருத்த முடிந்தது நல்ல விஷயந்தானே! வாரம் மூன்று முறை அசைவம் சாப்பிட்ட நான் மாதம் மூன்று முறை என மாறியதே தென்றலுக்கு வெற்றிதான். பத்து சிகரெட் குடித்தவனை டாக்டர் அப்படியே நிறுத்திவிட யோசனை சொல்லமாட்டார். பத்தை ஐந்தாக்கி ஐந்தை இரண்டாக்கி பின்பு நிறுத்த சொல்லுவார். Addiction என்பதை மாற்றுவது சாதாரண வேலை அல்ல. முயற்சி செய்வோம். அதற்கு இப்படிப்பட்ட கதைகள் பயன்படட்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இக்கதையில் பல கருத்துக்கள் ஒளிந்துள்ளது. ஊண் உண்ணாமை மட்டும் அல்லாமல் ஆசிரியரைப் பற்றி, மாணவனின் மனநிலை எப்படி இருக்க வேண்டும். என்று இன்னும் பல உள்ளது.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு