Trending

அன்னதானம் சிறுகதை

 

அன்னதானம் சிறுகதை

மாலை 5 மணி இருக்கும். டவுனில் பத்தாவது படிக்கும் தனது மகன் மதிவாணனை எதிர்பார்த்து டீ போட்டு கொண்டிருந்தாள் மாலதி. உள்ளே நுழைந்தவுடன் "சாப்பிட என்ன இருக்கு" என்று கேட்டுக் கொ‌ண்டே வருவான். சின்ன டிபன் பாக்ஸில்தான் அவன் மதிய சாப்பாடு.


மகனை எதிர்பார்த்த மாலதிக்கு போன் ஒன்று வந்தது. போனில் பேசியவர் "ஒன்றும் பதட்டப்படாதீர்கள்.

சின்ன ஆக்ஸிடெண்ட் ஆகிவிட்டது. கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும் வேதா நர்சிங் ஹோமில் சேர்த்து இருக்கிறேன்" என்று கூறி போனை வைத்து விட்டார். மாலதிக்கு கையும் ஒடவில்லை காலும் ஓடவில்லை. உடனே ஒரு ஆட்டோ பிடித்து வேதா ஆஸ்பிடலுக்கு வந்து விட்டாள்.

நினைவு இல்லாமல் படுத்து இருந்தான் மதிவாணன்.

டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு நான்கு மணி நேரத்தில் 

விழித்து பார்த்தான்.

சைக்கிளில் வந்த போது நன்பனின் சைக்கிள் இடித்து ரோட்டில் விழுந்து விட்டதாகவும் அப்போது வந்த கார் ஒன்று அவன் மீது மோதிவிட்டதாகவும் கூறினான்.

"அடுத்த வாரம் மாடல் டெஸ்ட். அதற்குள் சரியாகி விடுவேனா அம்மா" என்றான்.

"எல்லாம் சரியாகிவிடும் காலைப்படாதே" என்று அம்மா கூறினாள்.


அவனை அழைத்து வந்து சேர்த்தது யார் என்று விசாரித்தாள்.

மாரிச்சாமி என்று பெயர் மட்டும்தான் தெரிந்தது. பெயரை கேட்டதும் அந்த மாரியம்மா தான் அவனை காப்பாற்றி இருக்க வேண்டும் என நினைத்து நல்லபடியாக வீட்டுக்கு வந்தவுடன் அர்ச்சனை அபிஷேகம் செய்து சர்க்கரை பொங்கல் செய்து அன்னதானம் செய்வதாக வேண்டி கொண்டாள்.


நல்லபடியாக வீட்டுக்கு வந்து மாடல் டெஸ்டும் நன்றாக எழுதி விட்டான் மதிவாணன். பிரார்த்தனையை நிறைவேற்ற அடுத்த ஞாயிற்றுக்கிழமை பொங்கல் செய்து கொண்டு வருவதாக பூசாரியிடம் சொல்லிவிட்டாள்.

கோவில் ஐந்து கிலோமீட்டர் தூரம்.

ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு பானையில் பொங்கல் செய்து, சைக்கிளில் மதிவாணனை எடுத்து வர சொல்லிவிட்டு அர்ச்சனை அபிஷேகம் செய்ய மாலதி முன்பே கோவிலுக்கு யோய்விட்டாள்.


பொங்கல் பானையை சைக்கிளில் எடுத்து கொண்டு மதிவாணன் புறப்பட்டான். வழியில் சைக்கிள் செயின் கழண்டு விட்டது. மதிவாணன் அதை சீர் செய்ய இறங்கியபோது அங்கு விளையாடி கொண்டு இருந்த ஒரு சிறுமி "எனக்கு பசிக்கிறது அந்த சாப்பாட்டை கொடு" என கை நீட்டினாள்.


"கோவிலுக்கு வா தருகிறேன்" என்று சொன்னான்.


யார் கூப்பிட்டாலும் எங்கும் போகக்கூடாது என அம்மா சொல்லியிருப்பதாக கூறினாள்.

இரக்கப்பட்ட மதிவாணன் கொஞ்சம் உணவை அவள் கையில் கொடுத்தான். இதை பார்த்து விளையாடி கொண்டு இருந்த சிறுவர்களும் கை நீட்ட வேறு வழி இல்லாமல் எடுத்து கொடுத்தான்.

கொடுக்க கொடுக்க பானை காலியாவிட்டது. கோவிலுக்கு வந்த மதிவாணன் நடந்ததை கூறினான்.

"அடப்பாவி அம்மனுக்கு படைக்க வேண்டியதை எடுத்து கொடுத்து விட்டாயே. தெய்வ குத்தம் ஆகிட்டே" என மாலதி கூறினாள்.

அதற்கு பூசாரி "அம்மனுக்கு படைப்பதும் பசித்தவருக்கு கொடுப்பதும் ஒன்றுதான்"அதை பற்றி கவலை பட வேண்டாம் என்று கூறினார்.


பூசாரி சிறு கலயத்தில் கொண்டு வந்த உணவை அம்மனுக்கு படைத்தார். கோவிலுக்கு வந்தவர்களுக்கு ஒன்றும் கொடுக்க முடியவில்லையே என வருந்தினாள் மாலதி.

அந்த நேரம் கோவிலில் ஒரு ஆரவாரம் கேட்டது. தங்களுக்கு பிடித்த ஒரு நடிகரின் பிறந்த நாளை முன்னிட்டு அண்டா நிறைய உணவை பூசாரியிடம் கொடுத்து கோவிலுக்கு அன்னதானம் செய்ய சொன்னார்கள் அவரது ரசிகர்கள்.

பூசாரி மதிவாணனை கூப்பிட்டு அவன் கையால் அதை எல்லோருக்கும்  கொடுக்க சொன்னார்.

மதிவாணன் மகிழ்வுடன் அதை கொடுத்தான். கடவுள் கைவிடவில்லை. 


ஜெ மாரிமுத்து

தென்றல் இதழ் 34

2 Comments

  1. நம்பினார் கெடுவதில்லை இது, நான்குமறை தீர்ப்பு!

    நீண்ட இடைவெளிக்குப்பிறகு பழையகாலத்து பாணியில்.. நல்ல சிறுகதை படித்த திருப்தி!

    ReplyDelete

  2. "அம்மனுக்கு படைப்பதும் பசித்தவருக்கு கொடுப்பதும் ஒன்றுதான்"

    அருமை. நல்ல சிறுகதை❤️

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு