Trending

இந்த வருடம் என்ன துன்பம்

 


ஒரு வருடம் முடிந்து அடுத்த வருடம் ஆரம்பமாகும் போது 'இந்த செயல் நம்மை ஆபத்தில் விட்டது!, இந்த பழக்கத்தால் நாம் துன்பம் பெற்றோம்! இந்த வருடம் அந்த செயலையோ, பழக்கத்தையோ விட்டோழித்து விடவேண்டும். நல்ல பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்' என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு அந்த வருடத்தை துவங்குவது இன்றைய காலகட்டத்தில் சிலரின் இயல்பாகவே மாறிவிட்டது. நல்லதுக்காக எந்த ஒர் பழக்கத்தை கடைப்பிடித்தாலும் அதை குறை சொல்வதும் தவறு என நினைப்பதும் கூடாது.  ஆனால் நமக்கு துன்பம் தரும் செயல் எது என்பதை நாம் பெரும்பாலும் அனுபவத்தின் மூலமே அறிந்திருப்போம். நாம் இன்னும் அறியாமல், துன்பப் பட வேண்டியவை இருக்கும். அதை தான் கபிலர் நாற்பது பாடல்களில் துன்பம் தருபவை எவை எவை என்று  நூற்று அறுபது துன்பம் தரும் செயல்களை வகைப்படுத்துகிறார். 


இன்னா நாற்பது - துன்பம் தரும் நாற்பது. இந்த நாற்பது வாழ்க்கைக்கு துன்பத்தை தரும் அதனால் இந்த நூலில் சொல்லப்பட்டவையை செய்ய கூடாது என சொல்லும் நூல்.


இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது இவற்றில் கடை இரண்டான கார் நாற்பதும், களவழி நாற்பதும் அகம் புறம் பற்றி பேசும் நூல்கள். இனியவை நாற்பதும், இன்னா நாற்பதும் நீதியை சொல்லும் அற நூல்கள். இனியவை நாற்பது வாழ்க்கைக்கு தேவையான இனியவையை  சொல்லும், இன்னா நாற்பது வாழ்க்கையில் துன்பம் தரும் செயல்களை தொகுத்து வழங்கும்.


மரத்தில் ஏறி உச்சிக்கொம்பில் ஆடினால், அது துன்பம் தரும் என்பதை 'நெடு மரம் நீள் கோட்டு உயர் பாய்தல் இன்னா' என்று கூறுகிறது. மரத்தில் இருந்து கீழே விழுந்தால் ஆபத்து என்பதை அப்படி சொல்கிறார். இது எங்களுக்கு தெரியாதா? என்று தோன்றலாம். இப்படி நமக்கு தெரிந்த விஷயம் முதல் தெரியாத விஷயத்தையும் சொல்வது இன்னூல். 


"பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா;

தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா;

அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா; ஆங்கு இன்னா,

மந்திரம் வாயா விடின்"  (1)


பொருள்:


சுற்றங்கள் இல்லாத இல்வாழ்க்கையின் அழகு துன்பம். தந்தை இல்லாத மகனின் அழகு துன்பம். துறவோர் வீட்டில் உணவு உண்ணுதல் துன்பம். அதேபோல துன்பம் எதுவென்றால் பயன் இல்லாமல் சொல்லும் மந்திரங்கள்.


"மந்திரம் வாயா விடின்" என்பது மந்திரம் என்று கொள்ளாமல் பயன் இல்லாமல் சொல்லும் அறிவுரை, பேச்சு என்றும் சொல்லலாம். அத்தகைய தேவை இல்லாத பேச்சும் துன்பம் என்கிறார் கபிலர். 


இந்த நூல் ஆண்பால் நிலையில் நின்று எழுதியமையால் மனைவியிடம் எவை துன்பம் தருபவை என்று சொல்கிறது. ஆனால் கணவனிடம் துன்பம் தரும் செயல்களை சொல்லவில்லை.


மனைவியிடம் துன்பம் தருவனவற்றை பார்போம்… 


"ஆர்த்த மனைவி அடங்காமை நன்கு இன்னா" அதாவது கட்டிய மனைவி கணவனுக்கு அடங்காமல் நடத்தல் துன்பமாம். அதுபோல "வணர் ஒலி ஐம்பாலார் வஞ்சித்தல் இன்னா" கருமையான கூந்தலை உடைய மகளிர் தன் கணவனை வஞ்சித்தலும் துன்பம். "உடம்பாடு இல்லாத மனைவி தோள் இன்னா" உள்ளம் ஒத்துப் போகாத மனைவியின் தோள் சேர்தலும் துன்பம் ஆகும். 


தன்மை என்ற ஒர் நல்ல அழகினை உடைய மகளிர் வெட்கப்படாமல் இருப்பது துன்பம் என்பதை "நலத்தகையார் நாணாமை இன்னா" என்ற வரிகளில் சொல்கிறார்.


"ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா;

நாற்றம் இல்லாத மலரின் அழகு இன்னா;

தேற்றம் இலாதான் துணிவு இன்னா; ஆங்கு இன்னா,

மாற்றம் அறியான் உரை" (7)


பொருள் :


ஆற்றல் இல்லாதவன்  பிடித்த ஆயுதம் துன்பம். மணம் இல்லாத மலரின் அழகு துன்பமாகும். தெளிவு இல்லாதவன் செய்யும் வேலை துன்பமாகும். அவ்வாறே சொல்லும் சொற்களின் நுட்பத்தை அறியாதவன் சொல்லும் சொல் துன்பமாகும்.


"நாற்றம் இலாதான் மலரின் அழகு இன்னா" என்பது அறிவு அல்லது குணம் இல்லாமல் அழகு மட்டும் இருப்பது துன்பம் என்று பொருள்படும், ஏனென்றால் இதே போல இதே கருத்தை பலவாறு பல பாடலில் சொல்கிறார்.


"யானை இல் மன்னரைக் காட்டல் நனி இன்னா;

ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா;

தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா; ஆங்கு இன்னா,

கான் யாறு இடையிட்ட ஊர்" (22)


பொருள் : 


யானைப்படை இல்லாத வேந்தனை பார்த்தல் மிகவும் துன்பம். உயிர் கொலை செய்து அதன் சதை தின்று உடல் வளர்ப்பது மிகவும் துன்பம். தேனும் நெய்யும் புளித்துவிட்டால் துன்பம். அவை போலவே, காட்டாறுக்கு இடையில் உள்ள ஊர் மிகவும் துன்பமாம்.


யானைப்படை இல்லாத வேந்தனை பார்த்தல் துன்பம் என்பது இக்காலத்துக்கு பொருந்தாத வகையில் அமைந்திருக்கிறது என்றாலும்."ஆங்கு இன்னா, கான் யாறு இடையிட்ட ஊர்" என்பது, காட்டாறுக்கு இடையில் உள்ள ஊர் துன்பமடையும்! என்பது இன்றளவும் நம்மால் காண முடிகிறது.


"துறை இருந்து ஆடை கழுவுதல் இன்னா" குடிநீர் துறையில் ஆடைகளின் அழுக்குகளை போக்குவது துன்பம். 


"இன்னா, நிறை இலான் கொண்ட தவம்" சத்தியம் இல்லாதவன் மேற்கொள்ளும் சுயதர்மம் துன்பம்!. இதே போன்று பெரியாரின் துணை விடுதல், தன் பெருமையை தானே பேசுதல், சூதாடுவது, பெருமையுடையவர்களை தவறாக பேசுதல், நல்ல குணம் இல்லாதவிடத்து நட்பு, அடக்கமாக இருப்பவன் செருக்கு கொள்வது ஆகியவையும் துன்பமே தரும் என்கிறது இன்னா நாற்பது.


இதே போன்று பல துன்ப செயல்கள் இந்த இன்னா நாற்பது நூலில் சொல்லப்பட்டு உள்ளன. அதை இன்னா நாற்பது நூலில் படித்து அறிய வேண்டுகிறேன்.  ஆகவே இன்னா நாற்பதில் கூறப்படும் துன்பம் தரும் செயல்களை விடுத்து இன்பம் தரும் செயல்களை இனிதே தொடங்குவோம் இவ்வருடம்.!


குகன்

தென்றல் இதழ் 31

1 Comments

  1. சோப்பு / ஷாம்பு-லாம் கண்டுபிடிக்காத அக்காலத்திலேயே "துறையிருந்து ஆடை கழுவுதல் இன்னா.." னு சொல்லியிருக்காங்க.. ஆனா நம்ம பயபுள்ளைங்க நீர்நிலைகளில் ரசாயனங்களை கொட்டி பாழடிக்கிறதுல நீயா நானானு போட்டிபோடுதுங்க..

    திரைமறைவில் தீண்டாமல் இருக்கிற நல்லதமிழ் நூல்களை நோக்கி வெளிச்சமூட்டிய விரல்களுக்கு என் வாழ்த்துகள்.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு