Trending

யாருமில்லை | குறுந்தொகை 25 சிறுகதை

 


ஜானகி, கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து முகப்பூச்சு இட்டுக் கொண்டிருந்த நேரம்.  அவளின் அலைபேசி ஒலி எழுப்பியது. உடனே அந்த முக்கியமான வேலை விட்டுவிட்டு அலைபேசியை செவி அருகில் வைத்தாள்.


"ஜானகி, சாப்டியாம்மா?" என்றார் ஜானகியின் அம்மா. 


"இப்பதான் குளிச்சிட்டு வந்தேன், இனிமே தான் சாப்புடனும்"


"சரி எப்ப கிளம்பி வர?"


"இன்னக்கி நைட் ஒன்பது மணிக்கு கிளம்பிடுவேன். அங்க ஒரு பனிரெண்டு மணிக்கெல்லாம் வந்துடுவேன்"


"சரி நான், அப்பாவ வந்து நிக்க சொல்லுறேன்"


"சரிமா. மணி ஆயிடுச்சு… நான் அப்பறமா உன்ட பேசுறேன்." என்று அழைப்பை துண்டித்து விட்டு முகத்தை அலங்கரிக்கும் வேலையில் ஆழமாக இறங்கினாள். 


பிறகு எழுந்து. அந்த துரு பிடித்த ஸ்டவ் அடுப்பை பெரும் பாடு பட்டு பற்றவைத்து தோசை கல்லை சூடு செய்து அதில் தோசை உத்தி அவசர அவசரமாக சாப்பிட்டாள். ஜானகிக்கு துணையாக அந்த வீட்டில் தங்கி இருந்த அவள் தோழியும், இரண்டு மாதத்துக்கு முன் திருமணம் ஆகி சென்றுவிட்டாள். அதனால் ஜானகி மட்டுமே தனியே இருக்கும் நிலை‌.  கைப்பையை தோளில் மாட்டிக்கொண்டு கதவு ஒழுங்காகப்பூட்டி இருக்கிறதா என்பதை பூட்டை இருமுறை இழுத்து பார்த்து உறுதி செய்த பின் நடைப்பயணத்தை மேற்க்கொண்டாள்‌.


திருப்பூரின் அந்த நெருடலான சாலையில் சிக்கி நகர்ந்து கொண்டே இருந்த அவளுக்கு அந்த காலை நேர சூரிய ஒளி கண்களை கூச செய்யும்படியாகவே இருந்தது. ஒர் ஆறுநூறு மீட்டர் கடந்த அவள் 'பீ.கே.சி உள்ளாடை மொத்த விற்பனையகம்' என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்த அந்த உள்ளாடை தயாரிக்கும் தொழிற்சாலையில் நுழைந்தாள். உள்ளே இருந்த ஒர் பெரிய நோட்டுப் புத்தகத்தில் தனது பெயர் எழுதப்பட்டிருந்த இடத்திற்கு நேராக தனது கையொப்பைத்தை போட்டுவிட்டு மேலும் உள்ளே செல்ல அங்கு அனைவரும் தையல் வேலைகள் முடிந்து இறுதி நிலைக்கு வரும் துணிகள் பேக்கிங் செய்யும் செக்சனில் வேலை பார்த்ததுக்கொண்டிருந்தனர். அதில் இவளும் ஒர் ஆளாக சேர்ந்து பணியை தொடங்கினாள்.


சிலநிமிடம் சென்ற பின்னே, ஒர் ஆடவன் உள்நுழைந்தான் அவனது பார்வை ஜானகியின் மீதே இருந்தது. ஜானகி அவனை பார்க்க அவன் ஒற்றைக்கண்ணை சிமிட்டி விட்டு சிரித்த படியே தையல் செக்சனுக்குள் நுழைந்தான். ஜானகியும் அவனின் செய்கையில் அகமகிழ்ச்சி அடைந்தாள்.


மதிய உணவு இடைவெளியின் சங்கு அலற அனைவரும் உணவு வழங்கும் இடத்தில் உணவை வாங்கிக்கொண்டு உணவு உண்ணும் பலகையில் அமர்ந்து சாப்பிட அந்நேரம் எதிரில் அந்த ஆடவனும் அமர்ந்தான்.


"ஏன் இன்னக்கி லேட்?" என்றாள் அவனிடம்.


"இல்லடி இன்னக்கி கிளம்பி வர லேட் ஆகிட்டு வேற ஒன்னும் இல்ல…" வாயில் உணவை அரைத்துக்கொண்டே தலையாட்டிய ஜானகி  "சொன்னது நியாபகம் இருக்கா?" என்றாள்.


"இப்ப என்ன அவசரம்?"


"கபிலா… இந்த விசயத்துல விளையாடாத! நாளைக்கு நான் ஊருக்கு போயிடுவேன். இனி என்னால வேலைக்கு வர முடியாது! எவ்வளவு நாள் இத என்னால மறைக்க முடியும்னு தெரியல… (சுடிதாரின் முன் கழுத்து  பகுதியை தொட்டபடியே பேசினாள்) அதனால சொன்னபடி வீட்ல வந்து பேசு!"


"சரி சரி கோவப்படாத!, நீ போ நான் ஒரு வாரத்துக்குள்ள வந்து கண்டிப்பா பேசுறேன். அது வரைக்கும் சமாளிச்சிக்க" என்றான் கபிலன்.


"சீக்கிரம் வர பாரு… சொல்லிட்டேன்!" இப்போது கபிலன் உணவை வாயில் அரைத்தபடியே தலையாட்டினான்.


இரவு எட்டுமணி. மீண்டும் அந்த பெரிய நோட்டுப் புத்தகத்தில் தனது கையொப்பத்தை போட்டு அதை அங்கு அமர்ந்திருந்த பெரியவரிடம் நீட்டினாள். அவர் ஜானகியின் வேலை நேரங்கள் மற்ற விபரங்களை பார்த்துவிட்டு பதினைந்து ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அவள் கையில் கொடுத்தார். ஜானகியும் அதனை எண்ணிப்பார்த்துவிட்டு கைப்பையில் போட்டு கடையின் வெளியே வந்தாள்.


கபிலன் தன் இருசக்கர வாகனத்தை தயாராக வைத்திருந்தான். அதில் அமர்ந்தாள் ஜானகி. வண்டி, அவள் தங்கி இருந்த வாடகை வீட்டினை அடைந்தது. 


"எப்புடியும் இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம விசயம் எல்லாருக்கும் தெரிய தான் போகுது அதுக்கு முன்னடி… நம்ம இரண்டு பேரும்…"


"இல்ல, நான் முன்னடி சொன்னது மாதிரி தான்! நீ கிளம்பு, சீக்கிரம் வீட்டுக்கு வந்து பேசு"


கபிலனின் முகம் சுருங்கியது "சரி வரேன்" என்று கூறி கிளம்பினான். ஜானகியும் ஊருக்கு கிளம்ப வீட்டின் உள்ளே சென்று ஆயத்தமானாள். 


ஒரு மாதத்திற்கு பிறகு...


"ஜானகி  சீக்கிரம் குளிச்சிட்டு வா, அனு வந்திருக்கா!" என்று ஜானகியின் அம்மா குரல், குளியலறையில் இருந்த ஜானகிக்கு கேட்டது. ஜானகி அவசர அவசரமாக குளித்துவிட்டு, கண்ணாடியை பார்த்து முகத்தில் பொட்டு வைத்துவிட்டு, எதிர்வீடான அனு வீட்டுக்குள் நுழைந்தாள்.


"ஜானகி உள்ளவா, என்ன இளைச்சி போயிட்ட!?" என்றாள் அனு ஜானகியை பார்த்த மகிழ்ச்சியில்.


"அதெல்லாம் ஒன்னும் இல்ல… நீ நல்லாருக்கியா?"


"நல்லா இருக்கேன்டி. அம்மாவ பாத்து ரொம்ப நாள் ஆகுது, அதான் அவர் கிட்ட கேட்டேன். சரி போய் இரண்டுநாள் தங்கிட்டுவானு அனுப்பி வச்சாரு…"


"ம்ம்… சரி சரி"


"நான் இல்லாம ரெண்டு மாசம் தனியா தங்கிட்ட!? சாதனதான் போ! அம்மா வந்து இப்ப தான் சொன்னாங்க, தனியா தங்கி வேலைக்கு போனதெல்லாம் போதும் இனிமே வேலைக்கு போக வேணாம்னு சொல்லி அப்பா உன்ன வர சொன்னாறாமே, உனக்கு கல்யாண ஏற்பாடு வேற நடக்குதுனு சொன்னாங்க?"


"ஆமா."


"எப்புடியோ உங்க காதல் பயணம் முடிஞ்சு கல்யாண வாழ்க்கை பயணம் தொடர போகுதுன்னு சொல்லு!"


"அது இருக்கட்டும், உன் கிட்ட ஒரு விசயம் பேசனும் வா…" என்று சொல்லிய ஜானகி அனு வீட்டின் கொள்ளைப்புரம் நோக்கி சென்றாள். ஜானகி முகம் சுருங்கிய படி சென்றதை பார்த்த அனுவுக்கு ஏதும் புரியவில்லை. ஜானகியை பின் தொடர்ந்து அவளும் சென்றாள். 


"என்னனு சொல்லு!?"


"அது…அது… வந்து" என்றபடியே யாருக்கும் தெரியாமல் உடையின் உட்புறம் மறைத்து வைத்திருந்த தாலியை நீட்டினாள்.


அதை பார்த்த அனு, கண்கள் விரிந்த நிலையில் "என்னடி கல்யாணம் ஏற்பாடு தான்னு சொன்னாங்க அதுக்குள்ள கல்யாணம் பண்ணிடிங்களா!?"


"ஆமா, ஆனா இது வீட்டுக்கு தெரியாது"


"சரி. அதான் கல்யாண ஏற்பாடு பண்றாங்க அப்பறம் என்ன, விடு"


"அதான் பிரச்சனையே"


"என்னடி சொல்ற?"


"ஆமாம். கல்யாண ஏற்பாடு கபிலன் கூட பண்ணல, இந்த விசயம் வீட்ல யாருக்கும் தெரியாது."


"கபிலன் கூட பண்ணலையா!? சரி நீங்க  எப்ப கல்யாணம் பண்ணிட்டீங்க?" 


"உனக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசத்துக்கு அப்பறம் தான். நான் தனியா வேலை பாக்குறது அப்பாவுக்கு பிடிக்கல இன்னும் ஒரு மாசம் வேணா வேலைக்கு போ அதுக்கப்புறம் எங்களையும் போக வேணாம்னு சொன்னாரு, அத அவன் கிட்ட சொன்னேன். நீ அடுத்த மாசம் உங்க ஊருக்கு போயிடுவ என்ன ஏமாத்திட்டீனா என்ன பண்றது? வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டினா? அப்புடினு சொல்லி அவன் கல்யாணம் பண்ணிக்குவோம் சொன்னான். அதான் யாருக்கும் தெரியாம கோயில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம்."


"சரி அது உங்க வீட்ல சொல்ல வேண்டியது தான?"


"அதான் அவன வந்து பேசுனு சொல்லிட்டு ஊருக்கு வந்தேன். அவனும் ஒரு வாரத்துல வரேன் சொன்னான். ஆனா ஒரு மாசம் ஆகிட்டு!, அவன் நம்பருக்கு அடிச்சா ரிங் போகல, கடைக்கு ஃபோன் பண்ணி கேட்டா அவன் வேலைய விட்டுட்டு வேற ஊருக்கு போயிட்டானு சொன்னாங்க…"


"என்னடி சொல்ற!?, சரி கல்யாணம் பண்ணிக்கிட்ட ரெஜிஸ்டர் சீட், போட்டோ இல்ல கல்யாணம் யார் தலைமைல பண்ணிங்க?"


"எதுமே இல்ல… நாங்க கோயில்ல தான் கல்யாணம் பண்ணோம், நாங்க மட்டும் தான் இருந்தோம் கோயில்ல யாருமே இல்ல…"


"சரி நான் கேக்குறேனு தப்பா நனச்சிக்காத, வாழ்கைய... தொடங்கிட்டீங்களா?"


"இல்ல…"


"அவன் வாழ்கைய தொடங்குறத… பத்தி உன்ட பேசிருக்கானா?..."


"அடிக்கடி பேசுவான், நான் தான் - ஊர் அறிய நம்ம விசயம் தெரியட்டும் அப்பறமா… தொடங்கலாம்… சொன்னேன்"


"காதலிக்கறதா சொல்லி அவன் உன்ன ஏமாத்திடான், அவன் உன்ட எதிர்பார்த்ததே வேற, அதுக்கு நீ ஒத்து வரலனு தெரிஞ்சதும்… ஏமாத்திட்டு போயிட்டான். தப்பு அவன் மேல இல்ல உன் மேல தான் இருக்கு."


"நான் என்ன பண்ணுவேன், அந்த ஏமாத்துகாரன் ஏமாத்துவானு எனக்கு எப்புடி தெரியும். அவன நம்புனனே, ஐயோ...நாங்க கல்யாணம் பண்ணப்ப அங்க யாருமே இல்லையே. கல்லா இருந்த அந்த சாமி மட்டும்தான் இருந்திச்சி அது சாட்சிக்கு வராதே…" என்று தலையில் அடித்துக்கொண்டு புலம்பினாள் ஜானகி. ஜானகியை பார்த்த அனுவுக்கு  அவன் ஏமாற்றியது ஏற்கனவே தெரிந்தும் அதை யாரிடம் சொல்லி அழுவது என்று தெரியாமல் நம்மிடம் சொல்லி அழுகிறாள் என்றே நினைக்க தோன்றியது.  என்ன செய்து இவளின் வாழ்க்கைக்கு உதவுவது என்று புரியாமல் அனு மனதுக்குள் தவித்தாள்.


குகன்


குறுந்தொகை 25 செய்யுள்


"யாரும் இல்லைத் தானே கள்வன்

தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ

தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால

ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்

குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே"


கபிலர்


குறுந்தொகை 25 உரை விளக்கம்


யாரும் இல்லை. என்னை மணந்த அந்த கள்வன் மட்டுமே இருந்தான், அவன் பொய் உரைத்து என்னை ஏமாற்றினால் நான் என்ன செய்ய முடியும்?. தினையின் அடியைப் போன்ற, சிறிய செழுமையான கால்களை கொண்ட, குருகு மட்டுமே அங்கே இருந்தது. அதுவும்

ஓடும் நீரில் வரும் ஆரல் மீனை உண்ணுவதற்காகப் பார்த்து நின்று கொண்டிருந்தது‌; அவன் என்னை மணந்த போது.

தென்றல் இதழ் 32

3 Comments

  1. திரைக்கதைக்கான இலக்கணம் என்று உலக திரைக்கலைஞர்களால் கொண்டாடப்படுகிற 'சித் ஃபீல்டு' என்பாரின் கட்டுரைகளை சில வருடங்கள் முன்பு வசந்தம் இணைப்பிதழில் (தினகரன்)படித்திருக்கிறேன்..

    அதில் அவர் குறிப்பிட்டிருந்த சில நுணுக்கங்களை அநாயசமாக குகன் ஆங்காங்கே வைத்திருப்பது பிரமிப்பூட்டுகிறது.

    ஆயினும்,
    எனக்கு இதில் ஒரு குறையும் உண்டு.

    மூல பாடலில் மிக நயமாக ,,, அங்கே ஒரேஒரு பறவைதான் சாட்சி அதற்கும்கூட தன் இரையின் மீதுதான் கண்ணே தவிர.. என்னைபார்க்கவில்லை என்று சொல்லி அசத்தியிருக்க..

    நீங்கள் தெய்வம் தான் சாட்சி என்று சாதாரணமாக மக்கள் வழக்கில் சிம்பிளா சொல்லிவிட்டீர்.. அதற்கு வேறு உவமை யோசித்திருந்தால் மூலப்பாடலினும் அதிகமாய் இக்கதை மிளிர்ந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. யோசித்து இருந்தேன். (அந்த கோயிலில் ஒர் ராஜ பல்லி சத்தம் எழுப்பியது. அது அதன் பசிக்காக அங்கே பறந்து கொண்டிருந்த பூச்சியை விழுங்கவே சத்தமிட்டது. அதன் முழு கவனமும் அதன் செயலிலே இருந்தது. என் வாழ்வை அவன் விழுங்க காத்திருப்பதை, அது சத்தம் எழுப்பி சொன்னாதாக எனக்கு தெரியவில்லை. அது அப்படி சொல்லி இருந்தாலும் இப்போது அதனை சாட்சிக்கு அழைத்தால், அது கூறும் சாட்சியை ஏற்றுக்கொள்பவர் யாரோ??)

      Delete
  2. இரண்டாவதாக யோசித்தது நன்றாக உள்ளது.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு