Trending

அரிச்சந்திரன் முழு கதை

 


கதைக்களத்துக்கு செல்லும் முன் ஒரு குறிப்பு.


ஒரு திரைப்படத்தை பார்த்தால் திரும்பவும் அதை பார்க்கமாட்டோம். ஒரு நாவலை படித்து விட்டால் மீண்டும் அதை படிக்கமாட்டோம். ஆனால் அரிச்சந்திரன் கதை இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளாக பொம்மலாட்டமாகவும், நாடகமாகவும்,

தெருக்கூத்தாகவும் இந்தியாவின் பல லட்சம் கிராமங்களில் நடந்து கொண்டுதான் உள்ளது. உண்மையே பேச வேண்டும் என மகாத்மா காந்தியையே உறுதி

ஏற்க வைத்தது அரிச்சந்திரன் கதைதான். நம் கால பிள்ளைகளின் நல் பழக்கம் கருதி கோடிக்கும் மேற்பட்டோர் சொன்ன கதையை கோடிக்கும் மேற்பட்டோர் கேட்ட கதையை நானும் கூறுகிறேன்.


விஸ்வநாதரும் விசாலாட்சியும் ஆட்சி செய்யும் பாவம் தீர்க்கும் புண்ய பூமியாம் காசியின் மன்னன்தான் காசிராஜன். மன்னவனுக்கு மகள் ஒருத்தி இருந்தாள். மதிவாணி அவள் பெயர். ஆண்டவன் படைப்பில் பெரும்பாலும் அறிவு இருக்கும் இடத்தில் அழகு இருக்காது. அழகு இருக்கும் இடத்தில் அறிவு இருக்காது. மதிவாணி அழகும் அறிவும் ஒரு சேர பெற்றவள். பருவ வயதை எட்டினாள் மதிவாணி. சுயம்வரம் வைத்து மணம் முடிப்பதே மன்னர் குல வழக்கம். மதிவாணிக்கு ஏற்ற மாவீரனை தேட சுயம்வர ஓலை அனுப்பினான் காசிராஜன். மதிவாணியின் அழகு பக்கத்து நாட்டு இளவரசர்களை மட்டும் அல்லாது தூர தேசத்து மன்னர்களையும் அழைத்து வந்தது. பாவையை மணம் முடித்து அவளது பவள இதழ் சுவைக்க படை கட்டி நின்றனர் பலநாட்டவர்.


கூண்டுக்குளே அடைபட்டு கிடக்கும் சிங்கத்துடன் போரிட்டு அதை சிறைபிடிக்கும் கொற்றவனுக்கே மாசற்ற தன் மகளை மணம் முடித்து தருவேன் என மார்தட்டி நின்றான் காசிராஜன்.


சிங்கத்தின் சீற்றம் கண்டு சிலர் தயங்கினர் சிலர் நடுங்கினர் சிலர் ஒதுங்கினர் சிலர் நெருங்கினர். அச்சப்பட்டவர் பலர் மிச்சப்பட்டவர் சிலர். அதே வேளையில் மகத நாட்டு இளவரசன் கட்டுடல் கொண்ட காளை அவன். திரிலோசனன் அவன் பெயர். கூண்டை திறந்து சிங்கத்தை நோக்கி சீறி பாய்ந்தான். இடறி விட்ட சிங்கத்தின் பிடறி முடி பிடித்து நேருக்கு நேர் சண்டையிட்டான். வலி மிகுந்த தோல் கொண்ட திரிலோசனன் முன் வலு இழந்து மன்னில் வீழ்ந்தது சிங்கம்.


சிங்கத்தை சிதறடித்த மகத நாட்டு இளவரசனின் மாவீரத்தை பார்த்து மயங்கி நின்றாள் மதிவாணி. மன்னரும் மகிழ்வுடன் மறுநாளே மறையவர் வேதம் பாட மங்கல ஒலியுடன் மணவிழாவை நடத்தி முடித்தார். எங்கு பார்த்தாலும் கொண்டாட்டம், கோலாகலம். திருமணம் முடிந்தவுடன் காசிநாதரை வணங்க

செல்வதற்காக மணமக்கள் இருவரும் கங்கையில் நீராட சென்றார்கள். அந்த நேரத்தில்.. மதிவாணி கிடைக்காத ஏக்கத்தில் இருந்த மன்னன் ஒருவன் மறைந்து நின்று வாள்வீசி திரிலோசனனை கொன்று விட்டான். மணவாளனை இழந்த மதிவாணி அழுது புரண்டாள். மன்னன் உயிர் போன பின் மண்ணில் வாழ்ந்து பயன் என்ன என்று உயிர் துறக்க என்னி கங்கையில் விழுந்து விட்டாள் மதிவாணி. அவள் நல்ல நேரம் நீராட வந்த கவுசிக முனிவர் கண்ணில் அந்த காட்சி பட்டுவிட்டது.

நீரில் மூழ்கி அவளை காப்பாற்றி கரை சேர்த்தார்.


துன்பத்துக்கும் துயரத்துக்கும் மரணம் ஒரு தீர்வல்ல என்று விளக்கிய கவுசிக முனிவர்,"நீ தீர்க்க சுமங்கலியாக வாழ்வாய் அம்மா" என்று வாழ்த்தினார். "மணம் முடித்த அன்றே மனங்கவரந்தவனை இழந்தேன். நான் எப்படி தீர்க்கசுமங்கலியாய் வாழமுடியும்"என கதறினாள் மதிவாணி.

"முனிவன் வாக்கு பொய்க்காதம்மா" என்று ஆறுதல் கூறிய கவசிக முனிவர், "கட்டிய தாலியை கழட்ட வேண்டாம். தாலியுடன் சிவனை நோக்கி தவம் இருப்பாய். மரணம் நிகழும் மறுபிறவி கிடைக்கும். உன் கனவன் திரிலோசனன் அயோத்தியில் சூரிய குலத்தில் அரிச்சந்திரனாகவும், நீ கண்ணமாபரியில் தாலியோடு சந்திரமதி ஆகவும் பிறப்பாய். உனது தாலி அரிச்சந்திரன் கண்ணுக்கு மட்டும் தெரியும். அவனே உன்னை மணம் முடிப்பான். நீ தீர்க்க சுமங்கலியாக வாழ்வாய்" என்று வாழ்த்தினார்.


முனிவர் சொன்னபடியே, அயோத்தியில் திரிசங்கு சக்கரவர்த்தியின் மகனாக சூரிய குலத்தில் அரிச்சந்திரனும், கண்ணமாபுரி மதிதேய மன்னனின் மகளாக சந்திரமதியும் பூமியில் அவதரித்தார்கள். மக்களின் மனம் அறிந்து அயோத்தியின் மன்னனாக ஆட்சி புரிந்து வந்தான் அரிச்சந்திரன். பருவ வயது வந்ததும் சந்திரமதிக்கு சுயம் வரம் ஏற்பாடு செய்தான் மதிதேய மன்னன். அரிச்சந்திரனும் சுயம்வரத்தில் கலந்து கொள்ள புறப்பட்டான். வழியில் காளி கோயிலில் வணங்கினான். அரிச்சந்திரன் கால் பட்டதும் அங்கிருந்த கல் தேர் பொன் தேராக மாறியது. அதைக் கண்ட காளி வந்திருப்பவன் தவ வலிமை பெற்றவன் என உணர்ந்து அவனுக்கு வேண்டிய உதவிகளை செய்தாள். சந்திரமதி சுயம்வரத்தில் பலதேச மன்னர்கள் சூழ்ந்திருக்க"சந்திரமதி கழுத்தில் உள்ள தாலியை காணும் பாக்யவானுக்கே சந்திரமதி உடையவள்" என்ற அசிரிரீ கேட்டது. அரிச்சந்திரனுக்கு மட்டுமே அந்தத்தாலி தெரிந்ததால் தேவர்கள் வாழ்த்தோடு இருவருக்கும் திருமணம் நடந்தது.


அரிச்சந்திரனும் சந்திரமதியும் மகிழ்ச்சியுடன் வாழ்வை தொடங்கினார்கள். எல்லா தர்மங்களும் செய்து ஆட்சி நடத்தினாலும் பிள்ளை பாக்யம் மட்டும் அவர்களுக்கு வாய்க்கவில்லை. தங்கள் குல முனிவரை வணங்கி இந்த குறையை தீர்க்க கூறினான். அவர் வருணனை வேண்டி விரதம் இருக்க சொன்னார். தவத்தின் பயனால் வருணனை பார்த்த அரிச்சந்திரன் கொஞ்சி விளையாட ஒரு குழந்தயை அருளுமாறு வேண்டினான்.

வருணன் ஒரு நிபந்தனை விதித்தான்.

"உனக்கு பிறக்கும் முதல் குழந்தையை யாகத்துக்கு பலி கொடுக்க வேண்டும் சம்மதமா?" என்று கேட்டான். மலடன் என்று பெயர் வாங்குவதற்கு இது எவ்வளோ பரவாயில்லை என்று 

நிபந்தனையை ஏற்று கொண்டான் அரிச்சந்திரன். குழந்தையும் பிறந்தது.

லோகிதாசன் என்று பெயரிட்டு பாசத்தோடு வளர்த்தார்கள்.


அரிச்சந்திரனும் சந்திரமதியும் சுறுசுறுப்பும் குறுகுறுப்பும் நிறைந்த அழகு மகன் லோகிதாசனோடு விளையாடி காலத்தை கழித்து மகிழ்ந்தார்கள். வருணன் யாகத்துக்கு பலி கேட்டு வரும்போதெல்லாம், பல் முளைக்கட்டும் என்றும்,கர்ப்ப கேசம் எடுத்த பிறகு அனுப்புகிறோம் என்றும் உபநயனம் முடிந்தவுடன் அனுப்பி வைக்கிறோம் என்றும் பிள்ளையை பிரிய மனமில்லாமல் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் கூறி அனுப்பிவைத்தார்கள்.


வான் உலகமான இந்திரசபையில் பூலோக மன்னர்களில் யார் சிறந்தவர் என்ற விவாதம் நடந்தது. என் குலத்தில் தோன்றிய அரிச்சந்திரனே சத்தியம் நேர்மையுடன் உண்மையே பேசி ஆட்சி புரிவதாக வஷிஷ்டர் கூறினார். வஷிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். அதனால் விஸ்வாமித்திரர் அதை மறுத்தார். சமய சந்தர்ப்பம் கிடைக்காத காரணத்தால்தான் அரிச்சந்திரன் உண்மை பேசி வாழ்கிறான் என்றும் அவனை பொய் பேச வைத்து காட்டுகிறேன் என்றும் சவால்விடுத்தார் விஸ்வாமித்திரர். தான் சவாலில் தோற்றால் தன் தவ வலிமையில் பாதியை வஷிஷ்டருக்கு வழங்குவதாக அறிவித்தார். வஷிஷ்டரும் அதை ஏற்றார். தன் சபதத்தை நிறைவேற்ற அயோத்தி வந்தார் விஸ்வாமித்ரர். அரிச்சந்திரனுக்கு எவ்வளவு துன்பங்களை கொடுக்க முடியுமோ அவ்வளவையும் கொடுத்தார்.

வருணனை ஏவிவிட்டு பெருமழை பெய்ய வைத்து பயிர்களை நீரில் மூழ்க செய்தார். காட்டு பன்றிகளை உருவாக்கி விளைந்த பயிர்களை நாசப்படுத்தினார்.

மக்கள் வருமானம் இல்லாமல் தவித்தார்கள். மன்னனை தேடி வந்தார்கள். ஆயிரக்கணக்கில் முனிவர்களையும் யோகிகளையும் அரிச்சந்திரனிடம் அனுப்பி யாசகம் பெறச் செய்து கஜானாவை காலி செய்தார்.


அந்த சமயத்தில் சுக்கிரன் யாகம் நடத்த தேவையான பெரும்பொருளை அரிச்சந்திரனிடம் கொடுத்து வைத்து தனக்கு தேவையான நேரத்தில் பெற்று கொள்வதாக கூறினான். விஸ்வாமித்திரர் காமன் சேனை என்ற இரண்டு ஆடல் அழகிகளை அரிச்சந்திரன் சபைக்கு அனுப்பி வைத்தார். ஆடல் முடிந்ததும்  அரிச்சந்திரன் மகிழ்ந்து அவர்களுக்கு காசு மாலை ஒன்றை பரிசாக அளித்தான். ஆனால் அதை அவர்கள் ஏற்காமல் மலர் மாலை சூட்டி தங்களை மணந்து கொள்ளுமாறு வேண்டினார்கள். ஆனால் அதை ஏற்க அரிச்சந்திரன் மறுத்து விட்டான். சபையை விட்டு வெளியே சென்ற அந்த ஆடல் அழகிகள் மீண்டும் விஸ்வாமித்திரருடன் வந்து அதே கோரிக்கையை வைத்தார்கள். "மனைவியையும் மகனையும்

பெற்று மகிழ்வோடு இருக்கும் நான் இவர்களின் வேண்டுகோளை ஏற்க மாட்டேன். இதைத்தவிர வேறு எது கேட்டாலும் தருகிறேன் " என்றான்.

எதை கேட்டாலும் தருவாயா? என்றார் விஸ்வாமித்திரர். இதைத்தவிர எதைக்கேட்டாலும் தருவேன் என்றான்

அரிச்சந்திரன்.  உடனே விஸ்வாமித்திர் "ஒரு நாள் இந்த நாட்டை எனக்கு தர்மம் செய்வதாக கனவில் கூறினாய். அந்த வாக்கின்படி நீ ஆளும் நாட்டை எனக்கு கொடுத்துவிடு. காமன் சேனைக்கு சேர வேண்டியதை நான் கொடுத்து கொள்கிறேன்" என்றார். கனவாக இருந்ததாலும் தான் வாக்கு கொடுத்ததாக விஸ்வாமித்திரரே சொல்வதால் உடனே அரச பரிபாலனத்தை அந்த நொடியே விஸ்வாமித்திரரிடம் ஒப்படைத்தான். தனது மனைவி சந்திரமதியையும் மகன் லோகிதாசனையும் அழைத்து கொண்டு வீதியில் இறங்கி காட்டை நோக்கி நடந்தான் அரிச்சந்திரன். விஸ்வாமித்திரரின் துரோகத்தை நினைத்து அயோத்தி மக்கள் கதறி அழுதார்கள்.


நடந்து செல்லும் அரிச்சந்திரனிடம் சுக்கிரன் தான் ஏற்கனவே யாகத்துக்கு கொடுத்து வைத்த பொருளை கேட்டு வாங்குமாறு விஸ்வாமித்திரர் தூண்டிவிட்டார். எல்லாவற்றையும் இழந்து விட்ட அரிச்சந்திரனால் அவன் கேட்டதை கொடுக்கமுடியவில்லை. 45 நாள் கால அவகாசம் கொடுத்தால் தானும் தனது மனைவியும் கூலி வேலை செய்தாவது கடனை அடைப்பதாக கூறினார்கள்.ஆனால் சுக்கிரன் அதை ஏற்கவில்லை.உன் மனைவியையும் மகனையும் விற்றாவது பணம் கொடு என்றார்.அதற்கு தோதாக காலகண்ட அய்யரை அழைத்து வந்தான். காலகண்ட அய்யர் தனது அடிமைகளாக சந்திரமதியையும் லோகிதாசனையும் வாங்கி கொண்டு சுக்கிரனுக்கு சேர வேண்டிய தொகையை கொடுத்தார்.

அதோடு விடவில்லை விஸ்வாமித்திரர்,

இவ்வளவு நாள் சுக்கிரன் அலைந்ததற்கு

கூலியும் பேசி முடித்த விஸ்வாமித்திரருக்கு தட்சனையும் கேட்டார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத அரிச்சந்திரன் 

பிணம் சுடும் தொழில் செய்யும் வீரபாகுவிடம் தன்னையே விற்று பொருள் வாங்கி விஸ்வாமித்திரரின் கடனை தீர்த்தான். பிணம் சுடும் வீரபாகுவிற்கு கால் பணமும்

முழத்துண்டும் கூலி. அரிச்சந்திரனுக்கு வாய்க்கரிசி மட்டும் கூலி. வாய்க்கரிசியை பசுவுக்கு கொஞ்சம் கொடுத்து பாவத்தை தீர்த்தபிறகு அரிச்சந்திரனும் அவனுக்கு என்றும் துணை நிற்கும் அமைச்சன் சத்யகீர்த்தியும் சமைத்து உண்பார்கள்.


காலகண்ட அய்யர் பணம் கொடுத்து அடிமைகளாக சந்திரமதியையும் லோகிதாசனையும் வாங்கியதால் வீட்டு வேலைகள் அனைத்தையும் அவர்கள் தலையில் கட்டினார்கள். பச்சை பாலகனான பத்து வயது லோகிதாசனை பசுக்களை மேய்க்கவும் சாணம் அள்ளவும் விறகு வெட்டவும் பூ கொய்யவும் இடைவிடாமல் பயண்படுத்தினார். சந்திரமதியை துணி துவைக்கவும் சமையல் செய்யவும் விறகு அடுப்பில் வெந்து சாகும்படி வேலைகளை கொடுத்து கொண்டே இருந்தாள் காலகண்டி. பஞ்சு மெத்தையில் படுத்துறங்கி பால் பழம் சாப்பிட்டு திசைக்கொரு வேலைக்காரர்கள் என மன்னனின் மனைவியாக வாழ்ந்தவளுக்கு விதி பெரும் அநீதி இழைத்து விட்டது. பசிக்கிறது அம்மா என லோகிதாசன் கேட்கும்போது ஒரு பிடி சோறு கொடுக்கவும் காலகண்டியை கெஞ்சுவாள். அந்த அரக்கி கழுநீரையும் வடித்த கஞ்சியையும் உணவாக கொடுப்பாள். அதுவும் எல்லா வேலையையும் முடித்தவுடன்.


ஒரு நாள், அமாவாசை நெருங்கும் தருவாயில் சமித்து குச்சிகள் சேகரிக்கவும் தர்பைப்புல் பறிக்கவும் காட்டுப்பகுதிக்கு லோகிதாசனை அனுப்பினார் கால கண்ட அய்யர். கூடவே சில பிராமண பிள்ளைகளும் சென்றார்கள். உச்சி வேளையில் தர்பைப்புல் சேகரித்து கட்டாக கட்டும்போது நாகம் ஒன்று லோகிதாசனை தீண்டி விட்டது. பாம்பு கடித்ததால் வலியுடன் துடித்த லோகிதாசன் கூட வந்த ஒரு சிறுவனை கூப்பிட்டு சமித்துகளையும் தர்ப்பையையும் தன் எஜமானனிடம் ஒப்படைத்துவிட கேட்டுக்கொண்டான்.

தன் தாயை பார்த்தால் இந்த பிறவியில் தன் தாய்க்கு எந்த உதவியையும் செய்ய முடியாததற்கு மன்னிப்பு கேட்டதாக கூறி உயிரை விட்டான். இதற்கு வருணனனுக்கு கொடுத்த வாக்கு கூட காரணமாக இருக்கலாம்.


லோகிதாசன் இறந்த செய்தியை பிராமணச் சிறுவர்கள் காலகண்ட அய்யரிடம் தெரிவித்தார்கள். சந்திரமதியிடம் இந்த செய்தியை சொன்னால் வேலையை பாதியோடு நிறுத்திவிடுவாள் என்று என்னிய காலகண்ட அய்யர் வேலை முடித்தபிறகு லோகிதாசன் மறைந்த செய்தியை கூறினார். வேர் இழந்த மரம் போல மயங்கி விழுந்தாள் சந்திரமதி.

கதறி துடித்தாள். அந்த இருட்டு வேளையில் மகனின் உடலைத் தேடி காட்டுக்குள் ஓடினாள். உடல் முழுவதும் முள் வேலி குத்திக்கிழித்திருக்க அரவம் தீண்டியதால் உடல் நீலம் பூத்திருக்க துவண்டு கிடந்தான் லோகிதாசன். ஆசையோடு வளர்த்த தன் மகனை மடியில் கிடத்திய சந்திரமதி

"இப்படி பார்க்கவா உன்னை தவம் இருந்து பெற்றேன். தான தர்மங்கள் செய்து நல்லாட்சி செய்த உன் தந்தைக்கு கடவுள் செய்த கைமாறு இதுதானா?. உண்மைக்கு நாட்டில் இதுதான் தண்டனையா?" என்று பலவாறு அழுது புலம்பினாள். தன் மகனை தூக்கி தோலில்

சுமந்தவாறு சுடுகாட்டை நோக்கி நடந்தாள். நாய்கள் நரிகளின் கூச்சலுக்கிடையே தன் தங்க மகனை சுடுகாட்டில் கிடத்தினாள். அருகில் கிடந்த மரச்சுப்பிகளையும் சறுகுகளையும் பொறுக்கி தீ மூட்டி 

தன் பிள்ளையை எரிக்க முயற்சி செய்தாள். இதை தூரத்தில் இருந்த சுடலையன் வீரபாகு" அங்கு என்ன நடக்கிறது என பார்த்து வா என்றான்". எங்களுக்கு சேர வேண்டிய கூலியை கொடுக்காமல் பிணத்தை எரிப்பது யார் என அரிச்சந்திரன் கேட்டான். தன் குழந்தை இறந்த கதையையும் தான் ஒரு அய்யர் வீட்டில் அடிமை வேலை பார்ப்பதாகவும் அதனால் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறுகிறாள். இதை கேட்ட அரிச்சந்திரன் "நீ பொய் சொல்கிறாய். நீ அடிமையாக இருந்தால் உன் கழுத்தில் தங்கத்தாலி எப்படி வந்தது? தாலியை விற்றாவது எங்கள் கூலியை கொடு" என்கிறான்.

தேவருலகத்தில் உள்ளவர்களாலேயே பார்க்க முடியாத என் தாலி ஒரு புலையன் கண்ணுக்கு தெரிந்து விட்டதே எனக் கூறி அழுதாள் சந்திரமதி.

அப்படியானால் வந்திருப்பது தன் மனைவி சந்திரமதியா? இறந்து கிடப்பவன் லோகிதாசனா? என அதிர்ச்சி அடைகிறான் அரிச்சந்திரன். புலையனாக ஊழியம் பார்ப்பவன் அரிச்சந்திரன்தான் என்பதை சந்திரமதியும் தெரிந்துகொள்கிறாள்.


இப்போதாவது மகனை எரித்து கொடுங்கள் என்று சந்திரமதி கணவரிடம் கேட்கிறாள். அப்போதும் அரிச்சந்திரன் "எனக்கு கொடுக்க வேண்டிய வாய்க்கரிசியை வேண்டுமானால் கொடுக்காமலிரு. ஆனால் என் எஜமானனான வீரபாகுவுக்கு சேர வேண்டிய கால்பணத்தையும் முழத்துண்டையும் கொடுத்து விடு" என்றான். உடனே தன் சேலையில் இருந்து ஒரு பகுதியை கிழித்து முழத்துண்டுக்காக கொடுத்தாள். கால்

பணம் கொடுக்க என்னிடம் வழி இல்லை 

என்றாள். அதற்கு அரிச்சந்திரன் "நீ வேலை செய்யும் வீட்டில் இருந்து வாங்கி வா" என்றான்.

சந்திரமதி புறப்பட்டு சென்றாள்.

காலகண்டி கால் பணம் கொடுக்க மறுத்து விட்டாள். மடிப்பிச்சை கேட்டாவது கால் பணத்தை திரட்ட முடிவு செய்தாள். திரும்பி வரும் வழியில் காட்டுப்பகுதியில் குழந்தை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்து 

அதிர்ச்சி அடைந்து லோகிதாசனைதான்

நாயோ நரியோ இங்கு வந்து போட்டதோ

என பதறியபடி அருகே சென்று பார்த்தாள். அந்நாட்டு மன்னனின் குழந்தை காணாமல் போனதால் அதை தேடி பாதுகாப்பு படை வீரர்கள் தேடி வருகிறாள்கள். இறந்த குழந்தையின் அருகில் சந்திரமதி இருப்பதை பார்த்து அவள்தான் குழந்தையை கொன்ற கொலைகாரி என நினைத்து அரசனிடம் கூட்டிச் செல்கிறார்கள். பிள்ளை இறந்த துக்கத்தில் இருந்த மன்னன் எதையும் விசாரிக்காமல் சந்திரமதிக்கு மரண தண்டனை விதிக்கிறான். மரண தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பு சுடுகாட்டு காவல்காரன் வீரபாகுவிற்கு வருகிறது. வீரபாகு, அரிச்சந்திரனை அழைத்து  சந்திரமதியின் கழுத்தை வாளால் வெட்டி மரண தண்டனையை நிறைவேற்ற சொல்கிறார். சந்திரமதி குற்றமற்றவள் என தெரிந்தும் எஜமானனின் கட்டளையை நிறைவேற்ற அரிச்சந்திரன் தயாராகிறான். அப்போது திடீரென தோன்றிய விஸ்வாமித்திரர் "இப்போதாவது நாட்டை கொடுப்பதாக வாக்கு கொடுக்கவில்லை என்று சொல். உன் நாட்டை உனக்கு தருகிறேன்" என பொய் சொல்ல தூண்டுகிறார். "எனக்காக சத்தியத்திலிருந்து தவறாதீர்கள் "என அரிச்சந்திரன் தனது தலையை வெட்டச்சொல்லி சந்திரமதி குனிந்து கழுத்தை காட்டுகிறாள். வாளை ஓங்கி அவள் கழுத்தில் போடுகிறான் அரிச்சந்திரன்.

திடீரென்று அவள் கழுத்தில் விழுந்த வாள் பூமாலையாகிறது. இந்திரனும் வசிஷ்டரும் விஸ்வாமித்திரரும் சுற்றி நிற்கிறார்கள். லோகிதாசன் உயிர்பிழைத்து எழுகிறான். விஸ்வாமித்திரர் தான் தோல்வி அடைந்ததை ஒப்புக்கொண்டு தனது தவவலிமையில் பாதியை வசிஷ்டருக்கு வழங்குகிறார். அரிச்சந்திரன் சந்திரமதி லோகிதாசன் மூவரையும் இந்திரன் தேவலோக சொர்கத்துக்கு அழைத்து செல்கிறான்.


ஜெ மாரிமுத்து

தென்றல் இதழ் 28

1 Comments

  1. அறியாத புரியாத வயதில் ஆயிரம் முறை கேட்டு படித்திருந்தாலும்... இப்போது ஒரே மூச்சில் சுலபமான நடையில் படிக்கையில் நல்லாயிருக்கிறது.!

    தற்போது படிக்கும்போதும் அந்த கதையில் ஏதோ வசீகரம் இருக்கதான் செய்கிறது.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு