Trending

ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள் | நகைச்சுவை சிறுகதை

 


சுவாமி சித்தானந்தா தனது அறையில் தூக்கம் வராமல் செல்லில் யூ டியூப் பார்த்து கொண்டு இருந்தார்.


அறைக்கு வெளியே தாழ்வாரத்தில் அவரது சீடர்கள் இருபது பேரும் ஒரே வரிசையில் படுத்து இருந்தார்கள்.


காசி விஸ்வநாதரை பற்றிய வீடியோ பார்த்தபோது ஒரு விளம்பரம் வந்தது.

சாதுக்கள் மாநாடு அடுத்த மாதம் இருபதாம் தேதி காசியில் நடக்கிறதாம்.

அதில் கலந்து கொள்ள இப்போதே பதிவு செய்ய வேண்டுமாம்.

கலந்து கொள்ளும் சாதுக்களுக்கு உணவு தங்கும் விடுதி இலவசமாம். 


அதை பார்த்தவுடன் சித்தானந்தாவுக்கு அதில் கலந்து கொள்ளும் ஆசை வந்து விட்டது.


நாமும் இவ்வளவு நாளாக சாமியாராக இருக்கிறோம். எவனும் கண்டு கொள்ளவில்லை.

ஒரு வேளை இந்த சாதுக்கள் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பி விட்டால் ஒரு விளம்பரம் தேடலாம். இல்லை அங்கேயே செட்டில் ஆகி விடலாம் என்று திட்டமிட்டார்.


சித்தானந்தா சாமியார் ஆனதே ஒரு பெரிய கதை.

அவர் பத்தாவது முடித்து டிசி வாங்கும்போது தலைமை ஆசிரியர் "நீங்கள் படித்து முடித்து எதிர்காலத்தில் என்ன செய்ய போகிறீர்கள்" என எல்லா மாணவர்களிடமும் கேட்டார்.

சிலர் டாக்டர் ஆக போவதாக சொன்னார்கள். சிலர் என்ஜினீயர் ஆகப்போவதாக சொன்னார்கள்.


டாக்டர் ஆவதற்கு என்ன படிக்க வேண்டும், எதில் சேர வேண்டும், எவ்வளவு செலவாகும், இதில் எதுவுமே அவர்களுக்கு தெரியாது. இருந்தாலும் டாக்டர் ஆவேன் என்று சொல்வார்கள்.


வீடு கட்டும் என்ஜினியர் தவிர வேறு எந்த என்ஜினீயரையும் பார்க்காதவர்கள் எல்லாம் நான் என்ஜினீயர் ஆவேன் என்பார்கள்.


அதுபோல கிருஷ்ணகுமாரிடம் கேட்டபோது, அவர்தான் நம் சித்தானந்தா "நான் சாமியார் ஆக போகிறேன்" என்று கூறினான்.


எல்லோரும் சிரித்தார்கள்.


"ஏன் என்னை பார்த்து எல்லோரும் சிரிக்கிறீர்கள். நான் சாமியாராகி இந்த ஊருக்கு வரத்தான் 

போகிறேன். நீங்கள் எல்லாம் என் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கத்தான் போகிறீர்கள். இது நிச்சயம் என்றான்.


பத்தாவது முடித்த பிறகு மேலே படிக்க விருப்பமில்லை கிருஷ்ணகுமாருக்கு.

எப்படி சாமியாராவது என்ற சிந்தனையே மேலோங்கி இருந்தது.


மரத்தடியில் யாரிடமும் பேசாமல் தியானம் செய்வது போல் உட்கார்ந்தே இருப்பான்.


"நீ எக்கேடு வேண்டுமானாலும் கெட்டு போ.ஆனால் வேளாவேளைக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு போய்விடு" என்று அம்மா கத்துவாள்".


ஹரித்வார் போகிறேன் என்று வீட்டில் சொல்லி விட்டு கிளம்புவான்.சென்னை,பெங்களூர் என்று சுற்றி விட்டு ஊருக்கு வந்து விடுவான்.இமயமலையில் ஏற முடியுமா என்று பயப்படுவான்.

இமயமலையில் மலைப்பாதை இருப்பதெல்லாம் அவனுக்கு தெரியாது.


"இமயமலை போனியே எங்களுக்கு என்ன வாங்கி வந்தாய்" என பக்கத்து வீட்டுக்காரர்கள் கேட்பார்கள்.


"நான் என்ன சிங்கப்பூரா போனேன். உங்களுக்கு கோடாலி தைலம் வாங்குவதற்கு? இமயமலையில் பனிக்கட்டிதான் கிடைக்கும்.

அதைத்தான் பை நிறைய எடுத்து வந்தேன் என வெறும் பையை காட்டுவான்.


டிரெஸ்ஸை மாற்றி பார்த்தால் சாமியார் எஃபெக்ட் வருமா என்று யோசித்தான். இல்லை நிர்வான சாமியார் ஆகலாமா என சிந்தித்தான். அது ரொம்ப கேவலமாக இருக்கும் என்று விட்டு விட்டான்.


வேட்டியை வயிறு வரை நெஞ்சு வரை கழுத்து வரை என மாற்றி மாற்றி கட்டி பார்த்தான்.


முதலில் இந்த சனியன் பிடித்த கிருஷ்ணகுமார் என்ற பெயரை மாற்றி தொலைக்க வேண்டும்.

என்ன பெயர் வைத்து கொள்ளலாம்?


பிரேமானந்தா,நித்தியானந்தா இந்த பெயர்கள் எல்லாம் கெட்டு விட்டது.


யோகானந்தா,

அமிர்தானந்தா,

லாபானந்தா,

சத்தியானந்தா,

சித்தானந்தா என பல பெயர்களை சொல்லி பார்த்தான்.

சித்தி என்றால் வெற்றி.

சித்தானந்தா என்றே இருக்கட்டும்.

எது செய்தாலும் நம்ம ஊரில் எடுபடாது.

கணேசன் மகன் கிருஷ்ணகுமார் தானே என்று அலட்சியப்

படுத்துவார்கள்.


அதனால் பக்கத்து ஊரான வானூருக்கு பயணமானார் சித்தானந்தா.


குடும்பத்தில் பிரச்சினையா?

வியாபாரத்தில் நஷ்டமா?

குழந்தை இல்லையா?

அருள் வாக்கு வழங்குகிறார்.

அபூர்வ சித்தர்

சித்தானந்தா!  என

போஸ்டர் அடித்து ஒட்டினார்.


அதற்கு ஓரளவு பலன் கிடைத்தது.

சித்தானந்தா என்றதும் சித்து வேலை செய்பவர்

என நினைத்து பெண்கள் கூட்டம் கூட்டமாக நின்று ஆசிர்வாதம் வாங்கினார்கள்.

காணிக்கையும் சேர்ந்தது.


கூகுள் வெதர் ரிப்போர்டை பார்த்து மழை வரும் நேரத்தை கணித்து மழை வேண்டி யாகம் நடத்துவான்.

மழை கொட்டும்.

மக்கள் ஆச்சரியப்படுவார்கள்.


தான் தவம் செய்ய ஒரு குடிலை ஏற்படுத்தி தரும்படி ஊர்தலைவர் சண்முகம் பிள்ளையிடம் கேட்டார் சித்தானந்தா.

சண்முகம் பிள்ளை ஐநூறு தென்னை மரம் கொண்ட தென்னந்தோப்பு வைத்து இருந்தார்.

தேங்காய் திருட்டு போகாமல் இருக்க அதில் ஓர் ஓலை குடிசை கட்டி அதில் படுத்து இருப்பார் சண்முகம்.

சில சமயம் தென்னை மட்டை விழும் சத்தத்தையும், தேங்காய் விழும் சத்தத்தை கேட்டு பேயாக இருக்குமோ என்று பயப்படுவார் சண்முகம்.


அவர் சித்தானந்தாவிடம்

"சுவாமி என் தென்னந்தோப்பில் உங்களுக்கு ஒரு குடில் கட்டித் தருகிறேன். அதை தங்கள் தவம் செய்து கொள்ளுங்கள்" என்றார்.

ஒரே கல்லில் இரண்டு தேங்காய்.

தேங்காய் கொல்லைக்கு வாட்ச்மேனும் ஆச்சு. தனக்கு ஒரு துணையும் ஆச்சு என்று மகிழ்ந்தார் சண்முகம்.


சுவாமி சித்தானந்தாவுக்கு சின்ன சின்ன வேலைகள் செய்ய சில சீடர்கள் தேவைப்பட்டார்கள்.

அதனால் ஒரு பிட் நோட்டீஸ் அடித்து ஊருக்குள் கொடுத்தார் சித்தானந்தா.

"யோகத்தை அறிய,

ஞானத்தை அடைய,

தீட்சை பெற,

சுவாமி அனுக்கிரகம் பெற, ஆசிரமத்தை அனுகவும். உணவு இலவசம்" என அறிவிக்கப்பட்டது.


உணவு இலவசம் என்ற ஒற்றை வரிக்காக பத்து சீடர்கள் உடனே சேர்ந்துவிட்டார்கள்.


இதற்கிடையில் சித்தானந்தாவை வற்பறுத்தி தனது தங்கை மகளை திருமணம் செய்து வைத்து விட்டார் அவர் அப்பா.

அப்பா பேச்சை அவரால் தட்ட முடியவில்லை என்றாலும் தாமரை இலையில் தண்ணீர் போல் ஒட்டி ஒட்டாமல் வாழ்ந்தார் சித்தானந்தா.


காசி செல்வது என முடிவெடுத்ததும் "மகாஸ்ரீ சித்தானந்தா சுவாமிகள் காசி வர சம்மதம் தெரிவித்து விட்டார்கள்.

சுவாமிகளுக்கும் இருபது சீடர்களுக்கும் உரிய உணவு இருப்பிடம் ஏற்பாடு செய்யவும்"

இப்படிக்கு,

அந்தரங்க காரியதரிசி.

என சித்தானந்தாவே ஒரு கடிதம் எழுதினார்.


காலை அந்த கடிதத்தில் பத்து ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட் பாக்ஸில் போட சொல்லி ஒரு சீடரை அனுப்பினார்.


போஸ்ட் செய்து விட்டு வந்த சீடன்,

பெட்டியில் போட்ட கடிதம் எப்படி காசி போகும்?

பத்து ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டியதற்கு பத்து ரூபாய் நோட்டை ஒட்டி அனுப்பக்கூடாதா?

பத்து ரூபாய் ஸ்டாம்ப் வைத்து டீ குடிக்கலாமா?

என கேள்வி மேல் கேள்வி கேட்டான்.


பரமார்த்த குருவுக்கு வாய்த்த சீடர்கள் போலவும், ஹேமநாத பாகவதருக்கு வாய்த்த சீடர்கள் போலவும் நமக்கு வாய்த்த சீடர்கள் இருக்கிறார்களே என வேதனைபட்ட சித்தானந்தா இவர்களுக்கு பதில் சொல்லி கொண்டு இருந்தால் நாமும் மென்டலாகி விடுவோம் என கதவை சாத்தி கொண்டார்.


காசி புறப்படுவதற்கு முன் மனைவியை அழைத்த சித்தானந்தா தான் காசியில் முழு சந்நியாசி ஆக விரும்புவதாக கூறினார். இதைக் கேட்டதும் ராகவேந்திரா படத்தில் ராகவேந்திரர் மனைவி கிணற்றில் விழுந்தது போல தனது மனைவியும் ஏதாவது செய்து கொள்வாளோ என பயந்தார்.

ஆனால் அவர் மனைவி "நீங்கள் நித்தியானந்தா போல் பெரிய சாமியார் ஆவதைத்தான் நானும் விரும்புகிறேன். மாதாமாதம் பணம் மட்டும் அனுப்பி விடுங்கள்" என கூறி விட்டாள்.


சிவானந்தா சீடர்களுடன் காசி போய் விட்டார். எல்லோரும் தங்குவதற்கு ஏற்பாடு செய்த பழனியப்ப செட்டியார் தினமும் உணவு ஏற்பாடு செய்வதாக கூறினார்.

ஆனால் சித்தானந்தாவுக்கு பணம் கொஞ்சம் தேவைப்படுவதால்,

உணவுக்கு பதில் பணமாக கொடுக்க கேட்டுக்கொண்டார்.


அந்த பணத்தில் கொஞ்சம் பொருட்களை வாங்கி கொடுத்து சீடர்களை விட்டே சமைக்க சொல்லி விட்டார்.


சாதுக்கள் மாநாட்டில் சித்தானந்தா உரையாற்றும் நாள் வந்தது. சித்தானந்தா உரையை தொடங்கினார்.

உருண்டை வடிவிலான இந்த பூமியின் இயக்கத்தை பற்றி பேச தொடங்கினார்.

அப்போது ஒரு பக்தர்,

பூமி எப்படி உருண்டையாக இருக்கும்? நாம் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்லலாம். ரஷ்யா செல்லலாம். ஈரான் செல்லலாம். ஈராக் செல்லலாம். எங்கு போனாலும் உலகம் தட்டையாக தானை உள்ளது. பூமியை சுற்றி கடல் உள்ளதால் பூமி சுற்றி வரும் போது பூமி உருண்டையாக இருந்தால் கடல் நம் மீது கொட்டி 

விடாதா? என்று கேட்டார்.

இதற்கு கடைசியில் பதில் சொல்கிறேன் என்றார் சித்தானந்தா.


அடுத்து சந்திரகிரகணம் ஏற்படுவது பற்றி பேச தொடங்கினார்.

சூரியனும் சந்திரனும் பூமியும் நேர் கோட்டில் வரும் போது பூமியின் நிழல் சந்திரனில் படுவதால் சந்திரகிரகணம் ஏற்படுவது பற்றி விளக்கினார்.

அப்போது ஒரு பக்தர் சூரியன் வருவது பகலில், சந்திரன் வருவது இரவில். அப்புறம் எப்படி நேர் கோட்டில் வரும்? என்று கேட்டார்.

சித்தானந்தாவால் பதில் சொல்லமுடியவில்லை.

உரையை பாதியிலேயே முடித்துவிட்டார்.


நல்ல சாப்பாடு கிடைக்கும் என்று நம்பி வந்த சீடர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

குருநாதரை சந்தித்து சமையலுக்காவது ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தலாம் என்று யோசனை சொன்னார்கள்.

சித்தானந்தா அதை ஏற்கவில்லை.

நீங்கள் இளம் பிராயத்தவர்கள்.

பெண்னை சேர்த்தால் தேவையற்ற பிரச்சினை ஏற்படும் என்றார்.


அப்படியானால் ஒரு வயது முதிர்ந்த பெண்ணை வேலைக்கு சேர்த்தால் என்ன என்று கேட்டார்கள்.

இதற்கு நாளை பதில் சொல்கிறேன் என்றார் சித்தானந்தா.


அன்று இரவு சமைக்கும்போது ஒரு சட்டி குழம்பில் ஒரு கிலோ உப்பை யாருக்கும் தெரியாமல் கொட்டி விட்டார் சித்தானந்தா.


எல்லோரும் சாப்பிட அமர்ந்தார்கள்.

சித்தானந்தா ஒரு வாய் சாப்பிட்ட பிறகே சீடர்கள்  சாப்பிடுவார்கள்.

சித்தானந்தா முதல் வாய் எடுத்து வைத்த உடன் "ஆகா என்ன அருமையான சாப்பாடு" என புகழ்ந்தார்.


குருவே புகழ்ந்தபின் அந்த உப்பு சாப்பாட்டை யாராலும் குறை சொல்ல முடியவில்லை.

கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடித்தார்கள்.


சித்தானந்தா ஒரு சீடனை அழைத்து காலையில் சானம் தெளிக்க ஒரு பெரிய வாளியில் தண்ணீருடன் சானத்தை கரைத்து வைக்க சொன்னார்.


பின்பு அறையை மூடி விட்டு சென்று விட்டார்.

உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துதானே ஆகவேண்டும்.


எல்லோருக்கும் கடுமையான தாகம் எடுத்தது.

புரண்டு புரண்டு படுத்தார்கள்.

தாகத்தை தாங்க முடியாத ஒரு சீடன், சானம் கரைத்த நீரை கொஞ்சமாக எடுத்து குடித்தான்.


காலையில் பார்த்தால் சானம் கலந்த தண்ணீர் வாளி காலியாக இருந்தது.


அடுத்த நாள் "ஏன் சாமி இப்படி செய்தீர்கள்" என கோபமாக கேட்டார்கள்.


"நேற்று என்ன சொன்னீங்க? 

சமையல் செய்ய வயதான பெண்மணி ஆக இருந்ததாலும் பரவாயில்லை என்று சொன்னீங்க.

நேற்று தாகம் அதிகமானதும் சானம் கரைத்த நீரை குடிச்சுங்க.

மோகம் அதிகமானால்

என்ன செய்வீங்க?

வயதான பெண்மணியை

விட்டு வைப்பீங்களா?

அதை விளக்கவே இந்த 

நாடகத்தை நடத்தினேன்" என்றார்.

சீடர்கள் தலையில் அடித்து கொண்டார்கள்.


நல்ல சாப்பாடு கிடைக்காது என்பது உறதியானதால் நான்கு 

சீடர்கள் சொல்லாமல்

கொள்ளாமல் ஓடிவிட்டார்கள்.


மற்ற சீடர்கள் ஒடாமல் தக்க வைக்க,

செட்டியாரிடம் சொல்லி

உணவாக சமைத்து கொடுக்க சொல்லி விட்டார் சித்தானந்தா.


இருபது பேர் எப்படி பதினாறு பேர் ஆனார்கள் என்று

செட்டியார் கேட்டார்.

அவர்கள் பனி லிங்கத்தை தரிசிக்க இமயமலை சென்று இருப்பதாக சொல்லி சமாளித்தார் சித்தானந்தா.


அந்த சமயத்தில் ஒரு நாள் 

இமயமலையில் பனிப்பாறைகள் உருகி நீர் அதிகமாக கங்கையில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதனால் காசியே நீரில் மூழ்கும் என ஒரு புரளி கிளம்பியது.

இந்த செய்தி தமிழ்நாடு வரை சென்று விட்டது.

உடனே புறப்பட்டு வரம்படி சித்தானந்தாவின் மனைவி போன் செய்து கொண்டே இருந்தார்.


ஆத்மா அழிவு இல்லாதது.

உடல் அழியக்கூடியது.


அழியக்கூடிய உடலை வெள்ளம் புயலில் இருந்து பாதுகாப்பதே கடவுளுக்கு செய்யும் சேவைதான் என்று எண்ணிய சித்தானந்தா ஊருக்கு புறப்பட்டு விட்டார்.


மறுநாள் அவர்கள் எல்லோரும் 

அவரவர்கள் வீட்டில் 

இருந்தார்கள்.


ஜெ மாரிமுத்து

தென்றல் இதழ் 25

1 Comments

  1. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
    இல்வாழ்வான் என்பான் துணை.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு