Trending

இரத்த அழுத்தத்திற்கு மருந்து மாத்திரை இல்லாமல் ஒரு தீர்வு


எங்கள் ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். இஸ்லாமிய வகுப்பை சேர்ந்தவர் சிறு வயதில் மளிகை கடையில் வேலை பார்த்து, பிறகு மளிகை கடை சொந்தமாக வைத்து படிப்படியாக முன்னேறியவர். 


அவரது நான்கு பிள்ளைகளையும் ஓரளவு படிக்க வைத்து அவர்கள் வழக்கப்படி வெளிநாட்டு வேலைக்கு அனுப்பினார். எல்லோரும் தந்தைக்கு கட்டுப்பட்ட நல்ல பிள்ளைகள். 


பணம் பெருமளவு சேர்ந்தது. எல்லோருக்கும் சேர்த்து ஒரே வீடாக பெரிய வீடு ஒன்றை கட்டினார். வீடு வேலை நடைப்பெற்ற போது ஒரு நாள், மதியம் மூனு மணி இருக்கும், வேலை நடைபெறுவதை பார்க்க சென்றார். 


அங்கே கொத்தனார்களும் சித்தாட்களும் வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு சிரித்து பேசிக்கொண்டு அமர்ந்து இருந்தார்கள். வந்ததே கோபம் அவருக்கு, "பாவிகளே என் காசு இப்படியா போகனும் வேலைக்கு வருவதே பத்து மணிக்கு மாலை நாலு மணிக்கு கரணையை கழுவ ஆரம்பித்துவிடுவீர்கள். இடையிலே டி பட்சணம் சாப்பாடு இந்த லட்சணத்தில் அரட்டை வேறா…. நீங்க உருப்புடுவீங்களா" என கோபமாக கத்தினார்.


உடல் படபடத்தது. உடல் முழுதும் வியர்த்தது. கண்கள் இருண்டது போல் தெரிந்தது. மயங்கி சரிந்தார். 


உடனே மேஸ்திரி ஊரில் இருக்கும் ஒரு மகனுக்கு தகவல் தெரிவித்தார். உடனே கார் கொண்டுவரப்பட்டது. முதலில் திருவாரூரில் காட்டியபோது சிவியர் கார்டியாக் அரஸ்ட் மாரடைப்பு என்றார்கள். 


உடனடியாக தஞ்சாவூர் கொண்டு போக சொன்னார்கள். தஞ்சாவூரில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். நாலு லட்சம் செலவு செய்த பிறகு ஒரு வாரத்தில் பாதி குணமாகி வீட்டுக்கு வந்தார். அவர் மீது பெரிய தவறு இல்லை. ஆனால் நாலு லட்சம் போய் விட்டது. என்ன காரணம், காலத்துக்கு ஏற்ற மாதிரி அவர் அப்டேட் ஆகவில்லை. 


இந்த காலத்தில் இப்படி தான் இருப்பார்கள் என்ற எதார்த்த நிலையை அவர் உணரவில்லை. ஆத்திரம் அறிவுக்கு சத்ரு என்பார்கள். கோபம் ஏற்படும் போது நிமிடத்திற்கு 72 முறை துடிக்க வேண்டிய இதயம் 150 முறை துடிக்கிறது. 


சுருங்கி சுருங்கி விரியும் இதயத்தால் ரத்தம் பலமடங்கு ரத்த நாளங்களில் பாய்கிறது. குருகிய ரத்த குழாய்கள் அந்த வேகத்தை தாங்காமல் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.


சிலருக்கு மூளைக்கு செல்லும் இரத்த குழாய் வெடித்து பக்க வாதம் ஏற்படுகிறது. 


அவருடைய சின்ன வயதில் அவர் வீட்டுக்கு ஒருவர் வேலைக்கு வருவார். ஏழு மணிக்கே வந்துவிடுவார். இரண்டு மூன்று பேர் சாப்பிடும் பழைய சாதத்தை பச்சை மிளகாய் வெங்காயத்தோடு அவருக்கு கொடுப்பார்கள். திருப்தியாக சாப்பிடுவார் மதிய சாப்பாடும் உண்டு. 


மாலை ஏழு மணிக்கு தான் வேலை முடியும். சம்பளம் கூட மிகவும் குறைவு தான். மாலையில் பார்த்தால் மரங்களை கழித்து இருப்பார் தேவையற்ற கிளைகளை ஒடித்து இருப்பார். ஒடித்த கிளைகளை விறகாக பிளந்து இருப்பார். வெட்டிய விறகுகளை அழகாக அடுக்கி இருப்பார். செடிகளுக்கு மண்ணை வெட்டி பாத்தி கட்டி இருப்பார். தேங்காய் கூட பறித்து போடுவார். ஒரு நாளில் இவ்வளவு வேலைகள் முடிந்து இருக்கும். 


அப்படிபட்ட வேலையாட்களை பார்த்தவருக்கு இந்த காலத்து மனிதர்களை பார்ப்பதற்கு கோபம் வருகிறது. 


வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை இல்லை என 90 லட்சம் பேர் பதிவு செய்துள்ளார்கள். கடைத்தெரு வழியாக நாம் சென்றால் காய்கறிகடை பழக்கடை டி கடை ஓட்டல்கள் சூப்பர் மார்கெட்டுகள் எங்கு பார்த்தாலும் ஆட்கள் தேவை விளம்பர போர்டு தொங்கி கொண்டு தான் இருக்கிறது.


நம் மக்கள் இப்படி பட்ட வேலை செய்ய தயாராக இல்லை. அதனால் தான் வடநாட்டவர்கள் ஒருகோடி பேர் தமிழ்நாட்டில் புகுந்துவிட்டார்கள். 6000 சம்பளம் கொடுத்து மூன்று வேளை ரேசன் அரிசி சோறு போட்டால் கூட போதும். எந்த நேரமும் வேலை செய்வார்கள். 


அதனால் தான் சென்னையில் கட்டுமான நிறுவனங்களிலும் திருப்பூரில் டெக்ஸ்டைல் மில்களிலும் வடநாட்டவர்கள் மெஜாரிட்டி ஆகிவிட்டார்கள்.


நம் மக்களிடம் 10 மணிக்கு லேட்டாக வந்தாலும் கேட்க முடியாது. லீவு போட்டாலும் கேட்க முடியாது. கேட்டால் மறுநாள் வேலைக்கு வரமாட்டார்கள்.


எவ்வளவு பணம் இருந்தாலும் முதலை போட்ட முதலாளிக்கு இதையெல்லாம் பார்க்கும் போது கோபம் வருகிறது. கோபத்தில் சுரக்கும் ஹார்மோன் இரத்த அழுத்த நோயை உண்டாக்குகிறது.


இதயம் சுருங்கி விரிந்து இரத்த நாளங்களில் ஏற்படும் மாற்றத்தை வைத்து இரத்த அழுத்தம் கணக்கிடப்படுகிறது. இதயம் சுருங்கும் போது வெளியேறும் இரத்தத்தின் அழுத்தம் சிஸ்டாலிக் எனவும். விரியும் போது ஏற்படும் அழுத்தம் டையாஸ்டாலிக் எனவும் கணக்கிடப்படுகிறது. 


அதன் அளவு 80mm (Hg) - 120mm (Hg) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முதியவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் 90 - 140 என கணக்கிடப்படுகிறது. இதில் 10mm கூடுதல் குறைவு ஏற்படலாம். 


இருபது முப்பது மில்லிமீட்டர் கூடுதல் குறைவு ஏற்பட்டால் அது உயிரையே பறித்துவிடும். ஆண்டுக்கு எழுபத்து ஐந்து லட்சம் பேர் உயர் இரத்த அழுத்தத்தால் உயிரை இழக்கிறார்கள்.


உலகத்தின் ஒட்டுமொத்த மரணத்தில் 13 சதவீதம் இரத்த அழுத்தத்தால் ஏற்படுகிறது. இதற்கு மாத்திரைகள் கொடுக்கப்படுகிறது. காலம் செல்ல செல்ல இந்த மாத்திரையின் பவர் அதிகரிக்கப்படுகிறது. 


இந்த மாத்திரை இல்லாமல் இரத்த அழுத்தத்தை சமநிலை படுத்தலாம். அது எப்படி? அதை தான் இந்த கட்டுரையில் சொல்கிறேன்.


நான் சொல்கிறேன் என்றால் நான் சொல்லவில்லை மருத்துவதுறையில் வல்லுநர்களாக உள்ளவர்கள். சொன்னதை சொல்கிறேன். 


சோடியம்


முதலாவதாக சோடியத்தின் அளவை குறைக்க வேண்டும். சோடியம் குளோரைடு என்றால் நாம் பயன்படுத்தும் சாதாரண உப்பு தான். உப்பை ஒரு நாளைக்கு இரண்டு கிராம் முதல் ஐந்து கிராம் வரையே பயன்படுத்த வேண்டும். 


ஒரு பொருள் பல நாட்கள் வீணாகமல் இருக்க உப்பை தான் சேர்ப்பார்கள். ஊறுகாயை உப்பில் ஊற வைப்பதை பார்த்து இருப்பீர்கள். இல்லை என்றால் செயற்கை சுவை ஊட்டிகளை சேர்ப்பார்கள்.


கிராமத்தில் சோடா வாங்கி குடிப்பார்கள். சோடாவில் கேஸ் இல்லை என்றால் சிறிது உப்பு கல்லை போடுவார்கள். சோடா பொங்கி வழியும் அதுபோலத்தான் இரத்தமும் உப்பு அதிகமானால் பொங்கும் கொதிக்கும். 


வெள்ளை சர்க்கரையும் அப்படித்தான் ஒரு நாளைக்கு 25 கிராம் வரை மட்டுமே சேர்த்துகொள்ள வேண்டும். உப்பு அதிகமுள்ள சிப்ஸ் கெட்சப் சூப் மிக்ஸ் ஊறுகாய் பாப்கான் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள். அனைத்தையும் தவிர்க்க வேண்டும். சைனீஸ் உணவுகளும் பீட்சா பர்கர் போன்ற உணவுகளிலும் சோடியத்தின் அளவு 1000 மில்லி கிராமை தாண்டி உள்ளது. ஒரு பாக்கெட் நூடுல்சில் பதிநாலு கிராம் கொழுப்பும் 1500 மில்லி கிராம் சோடியமும் உள்ளது. 


இவ்வளவு திட்டினாலும் உனக்கு கோபம் வரவில்லையே நீ உப்பு போட்டு தான் தின்கிறாயா? என்பார்கள். உப்பு போட்டு தின்றால் கோபம் வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 


அடுத்து உடல் எடையை குறைக்க வேண்டும். உடல் எடைக்கும் இரத்த அழுத்தத்துக்கும் நிறைய தொடர்பு உண்டு. ஒருவரது எடையில் ஐந்து கிலோ குறைத்தால்  10mm (Hg) இரத்த அழுத்தம் குறையும் உடல் எடை குறைய உணவை குறைக்க கூடாது. 


நடைப்பெயர்ச்சி மெல்லோட்டம் அன்றாட வீட்டு வேலைகள் செய்து எடையை குறைக்க வேணும். ஒருவரது BMI (Body Mass Index) 25க்கு குறைவாக இருக்க வேண்டும். 


அடுத்து மனஅழுத்தம் கூடவே கூடாது. வேலை பளு, மன கவலை, கடன் தொல்லைகள், பிள்ளைகளால் பிரச்சனைகள் போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்படுகிறது.


இது இதயத்திற்கு பளுவை கொடுக்கிறது. இதயம் இலேசாக வேண்டுமானால் இனிமையான பாடல்களை கேட்கலாம் எளிமையான விளையாட்டில் ஈடுபடலாம் தியானத்தில் ஈடுபடலாம்.


கொலஸ்ட்ரால்


அடுத்த கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பு


கொழுப்பு அடைப்பு மாரடைப்புக்கு காரணமாகிறது இரத்த குழாய்களில் இரத்தம் பச்சை தண்ணீர் போல ஓட வேண்டும். கொழுப்பு நிறைந்த எண்ணெய்கள் இரத்த ஓட்டத்தை தடை செய்கின்றன. 


வருத்த மற்றும் எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.


மது பழக்கத்திலிருந்தும் புகை பழக்கத்திலிருந்தும் விடுபட வேண்டும். சிறிய அளவு மது கூட இரத்த அளவில் மாறுபாட்டை ஏற்படுத்திவிடும். புகை பழக்கம் இரத்த குழாயை சுருக்கி அடைப்பு ஏற்பட வழி வகுக்கிறது. 


காபி டி குடிப்பது கூட தவறானதே. காபியில் உள்ள காஃபின் அடினோஸ்சைன் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஹார்மோனை கொண்டுள்ளது. தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெள்ளை சர்க்கரை மைதா தவிர்க்கலாம். துரித உணவு துரித மரணத்திற்கு காரணமாகிறது. பேக்கரி பொருட்கள் 90 சதவீதம் கெட்ட கொழுப்பையே உண்டாக்குகின்றன. 


அப்படியானால் எதைத்தான் சேர்ப்பது 


பொட்டாசியம் மெக்னீசியம் அதிகமுள்ள பொருட்களை சேர்க்க வேண்டும். கொட்டை வகைகள் பாசிப்பயிறு நரிப்பயிறு உளுந்து கொண்டை கடலை சிறு தானியங்களை சேர்த்து கொள்ளலாம். 


கேழ்வரகு அதிக பொட்டாசியம் உள்ள உணவு கேழ்வரகு மாவை சாதாரண தோசை மாவில் ஒரு பிடி கலந்து உபயோகிக்கலாம். 


திருநெல்வேலி காரர்கள் ஆணும் பெண்ணும் பலம் வாய்ந்தவர்களாக இருப்பதற்கு இந்த கேப்பை என்ற கேழ்வரகு தான் காரணம்.


முருங்கைக்கீரை கீரை தண்டு பீன்ஸ் சுரைக்காய் பீக்கங்காய் பூண்டு வெங்காயம் போன்ற மெக்னீசியம் அதிகமுள்ள பொருட்களை சேர்க்க வேண்டும்.


இரத்த ஓட்டத்தை சரிபடுத்த முப்பது நிமிடம் முதல் 45 நிமிட நடைப்பெயர்ச்சி மிக முக்கியமானதாகும்.


எல்லாவற்றுக்கும் மேலாக இதயத்துக்கு பணி சுமை குறைக்க நல்ல தூக்கம் அவசியம். இடைவெளியின்றி தூங்குபவர்கள் குறைந்தபட்சம் 6 மணி நேரம் தூங்க வேண்டும்.


இரவு பத்து மணி முதல் பதினொறு மணிக்குள் தூங்க செல்பவர்களுக்கு இதய நோய் வருவதில்லை என ஐரோப்பிய ஹெல்த் ஆர்கனைசேசன் கூறியுள்ளது.


கோபம் பொறாமை இல்லாமல் எல்லோரையும் சமமாக நினைத்து பிறரது துயரை நம் துயராக ஏற்று கடவுளிடம் எல்லா பொறுப்பையும் ஒப்படைத்து ஆர்ப்பாட்டாம் இல்லாமல் பரபரப்பு இல்லாமல் அமைதியாக வாழ்ந்தாலே மருந்து மாத்திரை இல்லாமல் இரத்த அழுத்தத்தை சம படுத்தலாம்.


ஜெ மாரிமுத்து

தென்றல் இதழ் 24

2 Comments

  1. நேரில் பார்த்து உரையாடி விட்டு வந்தது போல் இருந்தது...

    வாட்ஸப்பில் உலவ விட்டால் அதிகம் பகிரப்படும்..

    ReplyDelete
  2. இன்றைய சூழலில், தேவையான பதிவு... நன்றி

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு