Trending

கால நேர் காணல் | 2.விருந்து

 கால நேர் காணல்

2.விருந்து
இந்த பெல்ட் நடந்து முடிந்த நிகழ்வுகளை மாற்ற அனுமதி அளிக்காதது போல் கலாமிற்கு தோன்றிற்று. ஒரு காந்தம் இன்னொரு காந்தத்தை எப்படி இழுக்குமோ அதேபோல் தான் இழுக்கப்பட்டதை எண்ணிப்பார்த்தான்.


அவன் உடல் சிலிர்த்தது. பாதங்கள் மெல்ல குளிராவதை உணர்ந்தான். காலணியை சரிசெய்து கொண்டான். குளிரான சுவாசத்தை உள்ளிழுத்த அவன் மார்பு மேலேறி நிம்மதியில்லா பெருமூச்சை வெளியிட்ட அந்த கணத்திலே 'இந்நேரம் காந்தி இறந்திருப்பார்' என்றவன் உதடுகள் முணகலித்தது.


தலையை மேல் நோக்கினான். அந்த புதிய இடத்தை கவனித்தான்.


அது ஒரு நீளமான அறையாக தெரிந்தது. மஞ்சள் நிற விளக்கொளியால் அவ்வறை மங்கிய வெளிச்சத்தையே தந்தது. ஆனாலும் முகம் தெரியுமளவிற்கு அவ்வொளி விரவி பரவியது.


கலாம் தான் அமர்ந்திருக்கும் இடத்தை கவனித்தான்.


வெள்ளை நிற சலவைக்கல், அதில் மஞ்சள் விளக்கொளி எதிரொளித்ததால் வெளிர் மஞ்சள் குழைப்பை தரை முழுதும் பூசியபடி இருந்தது. கலாம் தன் லேசான பிரதிபலிப்பை அதில் கண்டான்.


அதேபோல பெல்டிலிருந்து கசிந்து கொண்டிருந்த நீல விளக்கொளி குர்தாவையும் தாண்டி அந்த சலவை கல்லிலும் பிரதிபலித்தது.


சாளரம் இல்லாத அவ்வறையில், சுவற்றோடு ஒட்டப்பட்டிருக்கும் தூண்களில் வெள்ளை மற்றும் நீல நிற பலூன்கள் கட்டப்பட்டிருந்தது. அவை இன்னும் சிறிது நேரத்தில் இங்கொரு பிறந்தநாள் விழா நடைபெறப்போவதாகவே அவனை எண்ண செய்தது. அமர்ந்தபடியே கதவினை தேடத்தொடங்கினான்.


ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டுமே அறை விளக்கு ஒளியை தந்துகொண்டிருந்ததாலும், ஒளியின் பரவலை காட்டிலும் அறை நீளமாக இருப்பதாலும் கலாமிற்கு கதவு புலப்படவில்லை. அது நடுவில் மாட்டிய ஒளியை இருள் சூழ்ந்து விழுங்குவது போலிருந்தது.


இருந்தாலும் அவன் அங்கிருந்ததொரு முக்கிய அம்சத்தை கவனிக்காமலில்லை. அவனது கண்கள் குறுகியது. அதை கூர்ந்து கவனிக்கத்தொடங்கினான். ஓர இருள் அடர்ந்தும் மஞ்சள் ஒளி வெளிர்ந்தும் விரவிய அவ்விசால அறையின் மத்தியில் ஒரு மேஜை இருந்தது. அந்த மேஜைக்கு நேர்மேலே ஒரு குண்டு விளக்கும் தொங்கவிடப்பட்டிருந்தது. 


கலாம் ஆங்கே மேலும் உற்றுப்பார்த்தான். அங்கொருவர் அமர்ந்திருக்கிறார். திரும்பி அமர்ந்திருப்பதால் அவரது முகம் நமக்கு தெரியவில்லை. இருப்பினும் அவரது தலை சாய்ந்த படியே தெரிந்தது.


இருளையே மதிலாக அமைத்திருந்த அவ்வறையினுள் தான் மட்டுமே இருப்பதாக நினைத்த கலாமுக்கு 'திக்' என்றிருந்தது.


கலாம் ஒலி ஏற்படாதவாறு தரையை விட்ட மெல்ல எழுந்தான். அப்போது தான் அவனால் அம்மேஜையின் மீதிருந்த பொருளையும் கவனிக்க முடிந்தது.


உலர் திராட்சைகள், செர்ரிகள், ப்யூர் வைன், சூப், டீ, தண்ணீர், பிஸ்கெட்ஸ், ராமென், சான்வெட்ஜ், க்ரீன் சாக்லேட்ஸ், ஐஸ் க்ரீம், கெட்சப், டவல், சில்வர் ஸ்பூன், ச்சாப் ஸ்டிக் இன்னும் பல அயல்நாட்டு உணவுப்பொருளும் அதை உண்பதற்குரிய சாதனமும் நடுவில் ஒரு மெழுகுவர்த்தியும் அதில் இருப்பதை நோக்கினான்.


இது நிச்சயமாக இந்தியா அல்ல என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது. உணவுப்பொருட்களை பார்த்த பின் கலாம் ஒருவகையில் தெளிந்திருந்தான். தீன சுவரத்திலே 'ஹலோ' என சொல்லிக்கொண்டே மெல்ல முன் நகர்ந்தான்.


அந்த உருவமும் மெல்ல தன் உடலை திருப்பியபடியே கேட்டது,


'நீ எந்த காலக் கட்டத்தை சேர்ந்தவன்?'


கலாமுக்கு தூக்கி வாரி போட்டது. எங்கே இருக்கிறோம் என்பது கூட தெரியாத அவனிடம், எங்கிருந்து வந்திருக்கிறான் என்பதை அறிந்தது போல் 'நீ எந்த காலக்கட்டத்தை சேர்ந்தவன்' என்றொரு முகந்தெரியாத மனிதர் கேட்பதை அவனது அறிவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இருந்தாலும் கலாமுக்கு அந்த குரல் பரிட்சயமாய் தோன்றியது.


'நீங்கள் யார்?' அவன் கொஞ்சம் ஸ்திர படுத்தியே கேட்டான்.


அந்த உருவம் சில நொடிகள் அமைதியில் ஆழ்ந்தது.


'ம்ம்… நீ உன் காலப்பயணத்தை தெரிந்து செய்யவில்லை, ஏதேட்சையாக தான் இங்கு வந்திருக்கிறாய் சரியா?'


கலாம் ஒரு கணம் அதிர்ந்தே போனான். அவனது கண்கள் இத்தனை வியப்புக்குள்ளானதை அவன் உணர்ந்ததே இல்லை.


கணினிக் குரலாலே அந்த மனிதர் மேலும் தொடர்ந்தார், 'ஹபுலை மறந்த உலகம் என்னை மறப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை, என் பெயர் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி'


அண்டத்தையே மூன்று பொருட்களை வைத்து உருவாக்கி விடலாம் என்று கூறிய காலத்தின் வரலாற்றுச் சுருக்க நாயகன் ஸ்டீபன் ஹாக்கிங் ஜூன் 29, 2009 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜின் கோன்வில்லே&காயஸ் கல்லூரியில் காலப்பயணிகளுக்காக விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். தற்செயலாக நம் நாயகனும் அவ்விருந்தில் கலந்து கொண்டான்.'உங்களது பெயர்?' ஸ்டீபனின் கணினிக் குரல் மேலும் தொடர்ந்தது.


'கலாம்' என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன் மெல்ல தன் தலையை நிமிர்த்தினான். அங்கே 'வெல்கம் டைம் டிராவலர்ஸ்' என்றதொரு துணி பதாகை தொங்கவிடப்பட்டிருந்தது. அதை கவனித்துக்கொண்டே கலாம் ஸ்டீபன் அருகில் இருந்தொரு இருக்கையில் அமர்ந்தான்.'மிஸ்டர்.ஸ்டீபன் என்னை எப்படி நீங்கள் காலப்பயணி என உறுதி செய்தீர்கள்? இந்த விருந்திற்கு வந்ததாலா?


'ஆமாம்'


'அப்படியானால் இந்த விருந்திற்கு எவன் வந்தாலும் அவன் காலப்பயணி ஆகிவிடுவான்… அப்படித்தானே?'


'ம்ம்… அது மட்டும் போதாது. இதோ இது போல 'ஷூ'-வும் போட்டிருக்கவேண்டும்'


ஸ்டீபன் ஹாக்கிங் கலாமின் காலணியை பார்த்தபடியே அதை தெரிவித்தார். அவர் மேலும் தொடர்ந்தார்,


'எங்கள் காலக்கட்டத்தில் எவனும் காலணியில் வெப்பநிலைமானியும் டிஜிட்டல் மானிட்டரும் பொருத்தியிருப்பதாய் எனக்கு தெரியவில்லை'


கலாம் தன் காலணியை பார்த்துக்கொண்டே, 'இதற்கு பெயர் டெம் ஷூ' என்றான்.


'இது ஏன் என சொல்ல முடியுமா?' ஸ்டீபனின் கணினி குரல் இம்முறை கொஞ்சம் தாமதமாயிருந்ததை கலாம் கவனித்தான்.


'இது வெறும் வெப்பநிலைமானி மட்டுமல்ல மிஸ்டர் ஸ்டீபன். இது ஒரு மினி ஏசி. கால் பாத வெப்ப அளவை சீராக்குவதால் மனிதன் நீண்ட நாள் வாழ முடியும் என்பதை ஒரு அறிவியலாளர் கண்டுபிடித்தார். பின் இந்த காலணி வந்தது. எங்கள் காலத்தில் பெரும்பாலான மக்கள் இதை தான் பயன்படுத்துகிறார்கள்.'


கலாம் காலத்தை பற்றி முடிக்கையிலே ஸ்டீபன் தொடர்ந்தார், 'நான் உன் காலத்தை பற்றி கேட்டேனே?'


'31 ஆம் நூற்றாண்டு….. நானும் மறந்துவிட்டேன், நான் தற்செயலாக இங்கே வந்ததை எப்படி நீங்கள் அறிந்தீர்கள்?'


ஸ்டீபனின் சாய்ந்திருந்த தலை லேசாக ஆடியது. அவரது உதடுகள் விரிந்தன. கணினி மெல்ல தொடங்கியது,


'என் அழைப்பிதழை பார்த்து வந்தவன். என்னை யார் என்று கேட்டிருக்க மாட்டான். நீ கேட்டாய்…. என்னை தெரியாத ஒருவன் இங்கு வருகிறான் எனில் ஒன்று அவன் ஏதோ ஒரு வகையில் கேள்விப்பட்டு வந்திருக்க வேண்டும் இல்லை அவன் தற்செயலாக வர வேண்டும்'


'நீங்கள் பெரிய அறிவாளி மிஸ்டர் ஸ்டீபன்… உங்களை தெரிந்து வைத்து கொள்ளாதது என் தவறு தான் என்னை மன்னியுங்கள்'


'காலம் வளருகிறது கலாம். அது வளர வளர அதன் பழைய துணிகள் பயன்படாமல் போகும்'


அவர் மேலும் தொடர்ந்தார், 'ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி நீ வந்திருக்கிறாய். என் கணக்குப்படி 2600-களில் வாழத்தகுதியான இடங்கள் குறைவாகத்தான் இருக்கும். அதுபோக உலகில் நிற்பதற்கு கூட இடம் இருக்காது என்றொரு கணக்கு போட்டிருந்தேன்' ஸ்டீபன் தன் உதடுகளை லேசாக விரித்தார்.


'இல்லை மிஸ்டர் ஸ்டீபன் எங்கள் காலத்திலே நிற்க இடம் இருக்கிறது. ஆனால் நீங்கள் நினைத்தது சரி. 2600-களில் நிற்க கூட இடமில்லாமல் இருந்திருக்க கூடும். ஆனால் அந்த கிழ நோய் பல கோடி உயிரை பறித்துவிட்டது.'


அந்த கணத்தில் ஹாக்கிங்கின் முகத்தில் ஓர் மாற்றம் தெரிந்தது, 'கிழ நோயா? அதை பற்றி கூற முடியுமா?'


'அது ஒரு துயர சம்பவம். 2590 களில் தான் அது வந்ததாய் நினைக்கிறேன். செவ்வாயை காலணிபடுத்துவதில் சாதித்த நாசா, 'யூரோப்பா' எனும் குட்டி கிரகத்தை ஆராயப்போய் வந்த பிரச்சனை தான் அது. அந்த கிரகம் முழுவதும் நீரால் ஆகியிருப்பதை அவர்கள் கண்டறிந்தார்கள். அந்த கிரகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு உயிரி பொருள் காற்றில் வேகமாக பரவத்தொடங்கியது. அந்த கிருமி நீரிலும் கூட பரவியது. சூரிய ஒளி பட்டால் அதன் தாக்கம் அதிகமாகும். சுமார் ஆயிரம் டிகிரி செல்சியஸ் வரை அதனால் தாங்கிகொள்ள முடியும். அந்த கிருமி பாதித்த எவராயினும் அவருக்கு வாழ்நாள் 10 தான்'


'என்ன 10 தானா?'


'ஆமாம் மிஸ்டர் ஸ்டீபன். நான் வீடியோகளிலும் படங்களிலும் தான் பார்த்திருக்கிறேன். இப்போது நினைத்தாலும்….' கலாமின் உடல் சிலிர்த்தது.  


'அந்த நோய் பாதிக்க தொடங்கிய இரண்டே நாட்களில் உடலில் மாற்றங்கள் ஏற்படும். முடி கொட்டுதல், தோல் சுருக்கம், பல் விழுதல், இடுப்பு வலி, மூட்டு வலி என வயசாக வயசாக என்னவெல்லாம் வருமோ அதெல்லாம் வரும். பத்தே நாளில் அவர்கள் உடல் பூரணமாக கிழப்பருவத்தை எய்தியிருக்கும். பரிதாபமாக சாவார்கள்….. ஐயோ, மிஸ்டர் ஸ்டீபன் நான் 3 வயது குழந்தை தலை நரைத்து தோல் சுருங்கி கிழவனாகி இறந்து போனதை ஒரு டாக்குமெண்ட் படத்தில் பார்த்தேன். அது மிகவும் கொடுமை.


'கலாம் நீ சொல்வதை பார்த்தால், அந்த கிருமி ஒரு ஏலியன். அப்படித்தானே?'


'சரியாக சொன்னீர்கள் ஸ்டீபன்… அது ஏலியன் தான்' 


'மக்கள் தொகையில் எந்தனை பேரை அது விழுங்கியிருக்கும்?'


'அனைத்து நாட்டு அரசும் அதன் சரியான தொகையை மறைப்பதாகவே இன்றும் மக்கள் நினைக்கிறார்கள் மிஸ்டர் ஸ்டீபன். எனக்கு தெரிந்தவரை சுமார் 500 கோடி மக்களை அது கொன்றுவிட்டது…. ஆனால் அந்த நோய் வந்ததால் தான் இன்று எங்களால் வாழ முடிகிறது என்பதை எங்கள் கால அறிவியலாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இல்லையெனில் நீங்கள் சொல்வது போல நிற்க இடமில்லாமல் கூட ஆகியிருக்க கூடும்'


'சரி… அந்த நோய் எப்படி போனது கலாம்?'


'அதற்கும் நாசா தான் காரணம். அவர்கள் ஏதோவொரு கிரகத்திலிருந்து எடுத்து வந்த ஒரு உயிரி இதற்கு எதிர்பொருளாக பயன்படுகிறது என்பதை பல ஆண்டுகள் கழித்து கண்டுபிடித்தார்களாம்… பின் அதை வைத்தே ஒரு மருந்து தயாரித்து இந்த நோயை வென்றதாய் கேள்விபட்டிருக்கிறேன்'


ஸ்டீபனின் கணினி மீண்டும் மெல்ல தொடங்கியது, 'விண்வெளி துறை சார்ந்த வளர்ச்சி இத்தனை பெரிய இன்னலை தருவது வேதனையாக இருக்கிறது. நானும் என் பல புஸ்தகத்தில் விளக்கி கொண்டு தான் இருக்கிறேன். இது போன்ற சச்சரவுகளை நாம் தவிர்க்க வேண்டுமானாலும் எதிர்கால நன்மைக்காக இவைகளை நான் என் மனதிற்குள்ளே வைத்திருப்பது தான் நல்லதென்று யோசிக்கிறேன்'


ஸ்டீபனின் கணினி குரல் சட்டென அமைதியுற்றது. சில நிமிடங்களுக்கு பின் மீண்டும் மெல்ல தொடங்கியது,


'அந்த கோளுக்கு செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோகளை அனுப்பி இருக்களாமே?'


'எங்களது நூற்றாண்டில் தான் அது சகஜமாகியுள்ளது. வீட்டுக்கொரு நுண்ணறிவு ரோபோ இருக்கும்…. எங்கள் வீட்டில் 'மெகோனஸ்' என்ற வகை ரோபோ இருக்கிறது. அதன் பெயரும் அது தான். மெகோனஸ் ரோபோகள் வீட்டு வேலை மட்டும் செய்யக்கூடியது. சூரிய வெளிச்சத்திலே இயங்கும். இதன் ஜோடி 'டெக்ராட்ஸ்' வகை, அதுவும் வீட்டு வேலை மற்றும் எடுபுடி வேலைக்கு தான் லாயக்கு… விண்வெளிக்கு அனுப்ப படுபவை மூரின் கோட்பாடுபடி உருவாக்கப்பட்ட 'பைன்மெட்டிக்ஸ்' ரோபோகள். எங்களது நூற்றாண்டில் அவை மட்டும் தான் அதிபுத்திசாலி. இப்போதைக்கு அவைகளை விண்வெளிக்கு மட்டும் தான் அனுப்பப்படுகிறது. அதை வீட்டில் வைத்து பயன்படுத்த யாருமே தயாராக இல்லை. காரணம் மூரின் கோட்பாடு'


'என்னை கேட்டால் அதிமேதாவித்தனமான செயற்கை நுண்ணறிவின் வருகை ஒன்று மனித குலத்திற்கு இதுவரை நிகழ்ந்துள்ளதிலேயே மிகச் சிறப்பாக அமையலாம், அல்லது படுமோசமான ஒன்றாக உருவெடுக்கலாம். காலத்தின் தேவை அதை நிவர்த்தி செய்து கொள்கிறது. உங்களது காலம் மூரின் கோட்பாட்டை திறமையுடன் கையாளவும் வாய்ப்பிருக்கிறது. கணினிகள் தொடர்ந்து மூரின் விதிகளுக்கு கீழ்படிந்து நடந்து கொண்டிருந்தால், அவற்றின் வேகமும் நினைவாற்றலும் பதினெட்டு மாதங்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாகும், உனக்கு தெரியுமா கலாம்?


'என் தந்தையும் இதை பற்றி கூறியுள்ளார். ஆனால் வியாழனை தாண்டியும் அனுப்பக்கூடிய களங்களில் மூரின் விதிக்குள்ளான ரோபோவை தான் பரிந்துரை செய்கிறார்கள்.'


'உங்களது வீட்டு ரோபோ கைகளிலே கத்தியை கொடுப்பீர்கள் என்றால் நிச்சயமாக உங்களது காலம் மூரினை எதிர்க்கவும் திட்டமில்லாமல் இருக்காது' என சொல்லிக்கொண்டே ஸ்டீபன் மெல்ல தன் உதட்டை விரித்தார்.


'ஆமாம் நாங்கள் கத்தியை கொடுத்திருக்கிறோம். 'மெகோனஸ்' வகை ரோபோகள் ரொம்ப சாது. அது ஒன்றும் செய்யாது. அதன் குரல் கூட உங்களது கணினி குரல் போன்றே தான் இருக்கும்…. எப்போதாவது வீட்டின் சில பாத்திரங்களை உடைத்திடும் அப்போதெல்லாம் என் தந்தை எந்த ஒரு இயந்திரமும் 100 சதவீதம் சரியாக இயங்காது என்பார்' என கூறிக்கொண்டே கலாம் மெல்ல நகைத்தான்.


ஸ்டீபன் ஹாக்கிங்கும் இதுவரை கேட்கவிரும்பிய ஆவலுடன் தன் கேள்வியொன்றை கேட்கத்தொடங்கினார்,


'கலாம்… உன்னை இங்கு அழைத்து வந்த கருவியை என்னிடம் காட்ட முடியுமா?'


'மிஸ்டர் ஸ்டீபன் இந்த விஷயம் ரகசியமாக இருக்கும் என்பதில் எனக்கு நீங்கள் உறுதி தந்தால் அதை காட்டுவதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை'


திடீரென கலாம் தன் இடுப்பு பகுதி அதிர்வடைவதை உணர்ந்தான். அந்த நீல ஒளி வேகமாக மினுக்க தொடங்கியது. ஸ்டீபன் ஹாக்கிங்கை பார்த்து கொண்டிருந்த அந்த கணத்திலே கண்ணிமைக்கும் நேரத்தில் மீண்டும் கலாம் ஒரு கால சுழற்சியினுள் நுழைந்திருந்தான்.


ஒரு உருவம் கண்ணெதிரே சுருங்கி ஓர் துளையினுள் இழுக்கப்படுவதை நேரிலே கண்ட ஸ்டீபன் ஹாக்கிங் லேசாக தன் தானியங்கி சக்கர நாற்காலியை நகர்த்தி மேஜைக்கு முன் வந்தார்.


அந்தகாரம் சூழ்ந்த அவ்வறையுனுள் இப்போது அமைதியும் சூழ்ந்திருந்தது. தன் கைகளில் படுமளவிற் இருந்ததொரு பொத்தானை அழுத்தி வெளியே நின்ற தன் பணியாளை ஸ்டீபன் உள்ளே வர சொன்னார். பின் அவனிடம் அந்த அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவின் கேசட்டை உடனே எடுத்து தரசொன்னார்.


பிறகு இந்த விருந்திற்கான அழைப்பிதழ் ஒன்றை தயார் செய்து கொடுத்துவிட்டு வெகுநேர சிந்தனையில் ஆழ்ந்த ஸ்டீபன், விருந்தை பற்றி 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிக்கைக்கு ஒரு கட்டுரை எழுதினார்.


"வருங்காலத்திலிருந்து நம்முடைய காலத்திற்கு வருகை தரவிருப்பவர்களுக்காக கேம்பிரிட்ஜிலுள்ள என் கல்லூரியில் நான் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்து இருந்தேன். காலப்பயணம் தொடர்பான ஓர் ஆவண படத்திற்காக நான் அந்த ஏற்பாட்டை செய்தேன். உண்மையான வருங்கால பயணிகள் மட்டுமே வர வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்வதற்காக, நான் அந்த விருந்து முடியும் வரை யாருக்கும் அழைப்பிதழ்களை அனுப்பவில்லை. பொது சார்பியல் கோட்பாடு சரியாக இருந்து, ஆற்றல் அடர்த்தி நேர்மறையானதாக இருந்தால், காலப்பயணம் சாத்தியமில்லை என்பது என் மண்டையில் ஏற்பட்டிருந்தது. என் அனுமானங்களில் ஒன்று பொய்த்து போயிருந்தால் நான் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பேன். நான் காத்து கொண்டிருந்தது தான் மிச்சம், யாருமே வரவில்லை"


இந்த கட்டுரையை ஸ்டீபன் சொல்லி முடிக்கும் அதே நேரத்தில் லேசாக கண்களை விழித்த கலாம் தன் எதிரே ஒரு யானையை பார்த்தான். 


அதை சுற்றி ஒரு கூட்டமும் நின்றது.


(தொடரும்)


தீசன்
1 Comments

  1. அடுத்து யானையா? ஒரு வேளை மகேந்திர பல்லவனையோ இல்லை நரசிம்ம பல்லவனையோ கலாம் பார்க்க போகிறான் என்று நினைக்கிறேன்... ஆவலுடன் அடுத்த அத்தியாயத்திற்கு...

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு