Trending

உலகிலேயே மிகப்பெரிய நாடகம், இதோ!

 


உலகிலேயே பெரியதொரு நாடகத்தை நீங்கள் பார்த்ததுண்டா?


வியப்பிலும் வியப்பான மிகப்பெரிய நாடக மேடை. அதிக அளவிளான நடிகர்களால் அரங்கேற்றப்படும் மிக நீண்டதொரு கதைக்களம்.


விருப்பமில்லாத கதாபாத்திரங்கள். இருந்தாலும் நடிப்பில் எந்த குறையும் இருக்காது.


நான்கு அல்லது ஐந்து காட்சிகள். காட்சிகள் அறிவிக்கப்படும் போதெல்லாம் நடிப்பு பிரம்மாதமாக இருக்கும்.


நாடகத்தின் பெயர் - புரட்டாசி மாதம்.


ஒருசில விஷயங்களில் நான் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட சடங்குகளை எண்ணி சந்தோஷப்படுகிறேன்.


அது நமது உறவுகளை ஒன்று கூட வைப்பதிலும் சில ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வாழ்வியல் முறையை கற்பிப்பதிலும் நமக்கு பயனுள்ள வகையில் பயன்படுகிறது.


புரட்டாசி மாதமும் அப்படித்தான். ரமலானும் அப்படித்தான். 


கிருபானந்த வாரியார் ஒருமுறை சொற்பொழிவாற்றுவதற்கு அடியார்கள் கூடும் ஓர் ஊரிற்கு சென்றிருக்கிறார்.


சுவாமிகளை உபசரிக்க அவ்வூரின் ஆன்மீக அன்பர்களால் நியமிக்கப்பட்டிருந்த ஒருவர் தன் பணியாட்களிடம், 'சுவாமிகள் ரொம்ப சுத்தமானவர், அதனால் அசைவ பாத்திரத்தையெல்லாம் அவர் அறையில் வைக்க வேண்டாம்! தூய சைவ பாத்திரத்தை மட்டும் அறையினுள் வைத்தாற் போதும்' என்று கட்டளை இட்டுக்கொண்டிருந்தார்.


சுவாமிகள் இதை கவனித்தார். அந்த ஆன்மீக அன்பரிடம் சென்று, 'பாத்திரத்தில் என்ன சைவம்? அசைவம்?' என்று கேட்டிருக்கிறார்.


'இல்லை சுவாமி, இங்கு அசைவம் போட்டு சாப்பிடும் பாத்திரமும் இருக்கிறது. சைவம் போட்டு சாப்பிடும் பாத்திரமும் இருக்கிறது. நீங்களோ சுத்த சைவம். அதனால் தான் அசைவ பாத்திரங்களை நீக்க சொன்னேன்' என்றார் அவர்.


அன்பரின் சொற்களை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த வாரியார் சுவாமிகள் புன்னகைத்தார்.


'மிக்க வந்தனம். ஆனால், நான் சாப்பிடபோவது உணவைத்தான் பாத்திரத்தை அல்ல. உணவு முறையில் பேதங்கள் படையிலில் தானே தவிர பாத்திரத்தில் அல்ல. என் நோக்கம் எந்த உயிருக்கும் துன்பம் செய்யாமல் இருத்தலாகும். சைவம் அசைவம் என்று வகைப்பிரிப்பது அல்ல'


வாரியார் மிகவும் கனிவாக சொல்லி முடித்தார். அன்பருக்கும் அது இனிதே புரிந்தது.


நாம் வாரியார் சுவாமிகள் சொன்னதை 'நிற்க அதற்கு தக' வென்று கடைப்பிடித்தலில் இந்த புரட்டாசியையாவது கருதிற் கொள்ள வேண்டும்.


சுவாமிகளே இன்னொரு சொற்பொழிவில்….


நீங்கள் உங்களுக்கென சில ஒழுக்கக்கட்டுபாடுகளை விதித்துள்ளீர்கள். அமாவாசையானால் அசைவம் சாப்பிடக்கூடாது. சஷ்டியானால் சாப்பிடக்கூடாது. புரட்டாசி வந்தால் புலால் உண்ணக்கூடாது.


இவையெல்லாம் சரியே. ஆனால் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், சுத்தம் செய்யப்பட்டு பூஜைக்கு உகந்த நாட்களாக மாற்றப்படும் நாட்கள் தான் வேறே தவிர உங்களது வாயும் வயிறும் ஒன்று தான். அமாவாசைக்கு ஒரு வயிறு, சஷ்டிக்கு ஒரு வயிறு, புரட்டாசிக்கு ஒரு வயிறு இல்லை.


சரவண சரவண என்று சொல்லும் வாய் தான் மறுநாளே புலாலை புசிக்கிறது. மெய் அன்பர்களே! அப்படி இருத்தல் ஆகாது. இறைவன் ஒரு குறிப்பிட்ட நாள் மட்டும் உங்களை ஓர் கைப்பாவை போல் பயன்படுத்துவதை விரும்பமாட்டார்.


உங்களுக்கு அன்பு வேண்டும். நீங்கள் பிறரிடத்தில் அன்பு காட்ட வேண்டும். அது அனைத்துவிதமான உயிர்களையும் சமமென்ற பார்வையிலே நோக்க வேண்டும்.


தங்கம் உருகினால் மணி ஒட்டிக்கொள்ளும், உள்ளம் உருகினால் இறைவன் ஒட்டிக்கொள்வான். 


வாரியார் சுவாமிகளின் அறிவுரையிலிருந்து நாம் பல உள்ளார்ந்த கருத்துகளில் தெளிவு பெற முடிகிறது.


புனித நாட்களாய் கருதும் நாட்களில் புலால் உண்ண கூடாது என எண்ணும் பலர், ஏன் உங்கள் வருடத்தையே புனிதமாக்க விரும்புவதில்லை? ஏன் உங்கள் வாழ்க்கையையே புனிதமாக்கினாலென்ன?


இதற்கு காரணம் ஆசை எனலாம். ஆனால் இந்த ஆசை எண்ணங்களையும் கடந்து சில ஒழுக்கக்கட்டுபாடுகள் குறிப்பிட்ட நாட்களில் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதில் ஆறுதல் கொண்டாலும், அவை உயிர்நேய ரீதியில் கடைப்பிடிக்கபடுகிறதா? என்றால் இல்லை. அவை வெறும் போலி சடங்குகளே. நாடக ஒழுக்கங்களே.


புரட்டாசி தொடங்குவதற்கு முன்னைய மூன்று நாட்களையும், புரட்டாசி முடிந்த பின்னைய மூன்று நாட்களையும் நோக்கும் போது அது எத்தகைய அற்ப நாடகம் என்பது விளங்கும்.


திடீரென்று எங்கிருந்தோ ஒரு குரல் எனக்கு கேட்கிறது. அது ஓர் பெரியவரின் குரல்.


'நான் இந்து அல்ல, இஸ்லாம் அல்ல, கிறிஸ்தவன் அல்ல என் மதம் அன்பு'


ஆஹா! இப்படிபட்ட மதத்தில் தான் எனக்குமோர் இடம் வேண்டும். நான் அந்த குரல் பக்கம் நெருங்குகிறேன்.


அந்த குரல் மேலும் தொடர்கிறது


'ஆனால் என் மதத்தை எவனாவது பழிப்பானேயானால், ஒரே பாய்ச்சல் தான்'


என் மனம் மாறிவிட்டது. நான் இந்த மதத்தில் சேர்வதாய் இல்லை.


மதங்களின் மூலக்கருத்து அன்பு தான். ஆனால் இந்த மதமோ அந்த அன்பென்ற குளிர் நீரில் ஓரிரு நொடிக்கூட உயிர் வாழவில்லை.


அன்பென்ற மதத்தை கூட ஒருவன் எதிர்ப்பான் எனில் அவனை அன்பாலே திருத்துதலாம் பகுத்தறிவு, பாய்ச்சல் இல்லை.


ஆனாலும் இக்கருத்து மிகவும் சரி. நாம் அன்பென்ற மதத்தினையே தழுவ வேண்டும். அதுவும் காந்தியை பார்த்து, வள்ளல் பெருமானைப் பார்த்து, ஓஷோவைப் பார்த்து, இயேசுவை பார்த்து, நபிகள் நாயகத்தை பார்த்து, மகா பெரியவரைப் பார்த்து.


நான் விரதங்களை சடங்குகளை பழிக்கவில்லை. வாரியார் சுவாமிகள் சொன்னபடி, ஒரு நாளோ ஒரு மாதமோ போலியாக அசைவம் உண்ணக்கூடாது என்று இருப்பதைக்காட்டிலும் சத்தியமான உயிர்நேயத்தை உங்களது வாழ்வினிலே கடைப்பிடித்தாலென்ன?


புனித நாட்களென்ற பேதங்கள் வேண்டியதில்லை, நாம் என்றைக்குமே ஒழுக்கமாய் இருப்போம். அதுவே, உங்களது நாட்களை புனிதமாக்கும் என்பதே என் உறுதியான நம்பிக்கை.


இல்லை, இறுதிவரையில் இந்த 'புரட்டாசி மாத நாடகம்' நாடகமாகவே தான் இருக்குமெனில், உங்களது இந்த அரைகுறை நடிப்பை விடுத்து உயிர்நேய நடிப்பிற்கு முன்னேறுங்கள். 


வேடிக்கைப்பார்க்க 'இறைவன் இருக்கிறான்'.


தீசன்


3 Comments

  1. நீண்ட நாட்களுக்கு பிறகு படித்தும் ரசித்தும் சிரித்தேன்..

    ReplyDelete
  2. நூறு சதவீதம் உண்மை , சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பதிவு.

    ReplyDelete
  3. ஒருவன் ஒரு பொருளுக்கு அடிமையாக இருக்கின்றானா? அல்லது மனக்கட்டுப்பாட்டுடன் செயல்பட முடியுமா? என்பதை சோதிக்கவே விரத நாட்கள் தோற்றுவிக்க பட்டிருக்கும்.புரட்டாசி என்பது ஒரு மாத சோதனைக் களம் என்பதால் அதை நல்லது என்று நினைத்தால் அதை தொடரவும் வாய்ப்பு உள்ளது.புரட்டாசி சனிக்கிழமைகளில் சில அசைவ ஓட்டல்கள் மூடப்பட்டு இருப்பதை பார்க்கும் போது மக்களிடம் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டு இருப்பதையும் உனர முடிகிறது.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு