Trending

தற்கொலைக்கு காரணமாகும் இந்த NEET தேர்வு அவசியமா?

NEET தேர்வு அவசியமா? 

neet exam


தமிழகத்தில் 2021க்கான நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. நீட் தேர்வின் அச்சம் காரணமாக 2க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.  ஆட்சி பொறுப்புக்கு வந்து நீட் தேர்வை குறித்து நடவடிக்கை எடுக்காமல் இருந்த முதல்வர் ஸ்டாலின், மாணவர் தனுஷ் அவர்களின் மரணத்தை தொடர்ந்து சட்ட மன்ற கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் ஒருமித்த துணையுடன், தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு மாசோதாவை சமர்பித்தார்.  இது நடைமுறைக்கு வர வேண்டும் என்றால் அடுத்த கட்டமாக குடியரசு தலைவரின் ஒப்புதல் வேண்டும். ஆனால், பல தரப்பினர் குடியரசு தலைவர் தமிழகத்துக்கு மட்டும் ஒப்புதல் அளித்தால் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்பார்கள் ஆகவே குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வாய்பில்லை என்கின்றனர். 


பல கல்லூரிகள், மாநில அரசின் கைகளில் உள்ளன ஆகவே அவை அனைத்தும் நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தும். அதுமட்டுமல்லாது வெளிநாடுகளில் மருத்துவ படிப்புக்கு சேர விரும்பினாலும் கூட நீட் கட்டாயம். ஆகவே மாணவர்கள் தி.மு.க அரசின் பேச்சை கேட்டு குழப்பம் அடையாதீர் என்றும் இன்னொரு தரப்பு கூறுகிறது. 


தி.மு.க வோ கட்டாயம் நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்கி தருவோம், குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்றும் பழைய முறைப்படி 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர். 


இதன் விளைவாக மாணவர்கள்  நீட் தேர்வுக்கு தயாராவதை நிறுத்தாமல் தொடர்ந்து படியுங்கள். என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.


தமிழகத்தில்  நீட் தேர்வின் அச்சம் காரணமாக பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது மிகுந்த வருத்தத்தை தரும் செய்தியாக உள்ள நிலையில் தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கு சாத்தியமா என்றால் அது முடியாத காரியம் என்கின்றனர் பல வழக்கறிஞர்கள். 

 

இவ்வளவு சர்சைகளை தாங்கிய இந்த தேர்வு அவசியமா?



நீட் தேர்வு அறிமுகமானதிலிருந்தே பல எதிர்ப்புகள் தமிழகத்தில் கிளம்பின, ஆனாலும் 2017 நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைப்பெற்றதால் தமிழக மேல்நிலை கல்வி பொது தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வில் 700 - 86 மதிப்பெண் பெற்றதன் காரணமாக டாக்டர் கனவை அடையமுடியாமல்  தற்கொலை செய்து கொண்ட ச. அனிதா அவரின் இறப்பிற்குப் பிறகு, இந்த நீட் தேர்வுக்கான அவசியத்தை பற்றி அனைவரையும் சிந்திக்க வைத்தது.


அன்றிலிருந்து இன்றுவரை நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதும் இல்லை, மாணவர்களும் நீட் தேர்வின் காரணமாக தற்கொலை செய்யாமலும் இல்லை. கடந்த 2018 ஆம் ஆண்டில் "நீட்" தேர்வின் போது தமிழகத்தில் போதுமான தேர்வு மையங்கள் ஒதுக்கப்படாமல் ஒரு குறிப்பிட்ட அளவிலான மாணவ, மாணவிகள் இராஜஸ்தான் மற்றும் கேரளாவில் உள்ள மையங்கள் ஒதுக்கப்பட்டு, அங்கு சென்று தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டது. பல மாணவர்கள் அவ்வளவு தூரம் செல்ல பணவசதி இல்லாத காரணத்தால் பல தமிழக மாணவர்கள்  நீட் தேர்வையே எழுதவில்லை.


இன்று  நீட் தேர்வு எழுதும் மாணவர்களை விட 'நீட் கோச்சிங்' சென்டர்கள் தான் அதிகம் உள்ளது. பயிற்சி மையத்தில் சேர வாய்ப்பில்லாமல் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு தேர்வினை பற்றிய பயம் தொற்றிக் கொள்கிறது.


நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும், பல ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்காமல் இருந்துவருகிறது. ஆனால் குறைந்த மதிப்பெண் பெற்ற வசதி படைத்த பலர் தங்களது பண பலத்தின் மூலமாக 'ஸ்பெசல் கோட்டாவில்' சேர்வதனால் ஏழை மாணவர்களுக்கு படிக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்படுகிறது. 


அரசு நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்தாலும். 'கோச்சிங் சென்டரில்' சேர்ந்து பயில்பவர்களே அதிகம் தகுதி பெறுகின்றனர்.  நாடு முழுவதும் உள்ள மக்களின் நிலையும் கல்வியின் நிலையும் சமமாக இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. வசதி உடையவருக்கு CBSE, இல்லாதவருக்கு சாதாரண கல்வி.  அனைவருக்கும் CBSE கல்வி என்றாலும் அந்த கடினமான பாடத்திட்டம் ஏழை நடுத்தர குடும்ப சூழலுக்கு பொருந்தாத ஒன்று. காரணம் அவர்கள் சிறுபிள்ளையிலிருந்து பயின்ற கல்வி வேறு.  ஆகவே தான் சமச்சீர் கல்வி முறை தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது. இந்த ஏழ்மை சூழலில், தட்டு தடுமாறி 12ம் வகுப்பு வரை படிப்பதே இங்கு சிரமம். அதிலும் மருத்துவ கனவோடு படித்து 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்ணையும் பெறுவது மேலும் கடினம். இப்படி  இருக்க நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கு ஒரே நுழைவு தேர்வு என்றால்? இது வேடிக்கையான விஷயம்... இவ்வளவையும் சிந்தித்து பார்த்தால் இந்த தேர்வு தமிழகத்தை பொறுத்தவரையில் வயலில் விளையும் களையே.


மாணவர்கள் பலரும் நீட் தேர்வில் தோல்வி அடைந்து தவறான முடிவுகளை எடுக்கும் இச்சூழலில் உளவியல் மருத்துவர்கள் கூறுவதாவது: எந்த தேர்விலும்  தோல்வி என்பது வரக்கூடிய ஒன்று. வெறும் மதிப்பெண் வைத்தே வாழ்க்கை இல்லை என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்களே அவர்களுக்கு ஊக்கம் தரவேண்டும். தேர்வு எழுதி வந்த மாணவனுக்கு பெற்றோரே ஆறுதலாக பேசி தேற்ற வேண்டும். தேர்ச்சி பெற்ற எல்லாரும் திறமைசாலி இல்லை, தோல்வி அடைந்தவர்கள் எல்லாம் முட்டாளும் இல்லை. ஆகவே, மாணவர்களிடம் பெற்றோர்கள் மனம் விட்டு பேசி தைரியபடுத்த வேண்டும் என்கின்றனர்.



நீட் தேர்வை போலவே TNPSC தேர்வும் ஆகிவிடுமா?


முதல்வர் ஸ்டாலின் தற்போது வெளியிட்ட அறிக்கையில் - TNPSC தேர்வுகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு என்று அறிவித்திருக்கிறார். இது TNPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இடையேயும் அதற்கு பயிற்சி தரும் ஆசிரியர் இடையேயும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர்கள் சொல்வதாவது, காலம் மாறிவிட்டது ஆணுக்கு பெண் சமம் என்றாகிவிட்டது.  வசதிபடைத்த பெண் தேர்வரும் தேர்வு எழுதுவர். ஏழையான ஆண் தேர்வரும் தேர்வு எழுதுவர் அதனால் இருவருக்கும் சரியான இட‌ஒதுக்கீடு தருவதே சரி என்றும் ஏற்கனவே உள்ள இட‌ஒதுக்கீட்டில் பல குழப்பங்கள் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு மேலும் குழப்பத்தை மாணவர்கள் இடையில் ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். பல பெண்களுக்கு இதற்கு ஆதரவாக குரல் எழுப்புகின்றனர்.  மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர். அதில், அரசின் சார்பில், அனைத்து தேர்வுகளும் சமமான முறையில் நடத்தபடுகிறதா? என்பதை ஆராய ஒரு குழு அமைக்கபடும் என்பது. ஆகவே இந்த குழு விரைவில் அமைந்து அனைத்து தேர்வும் தமிழகத்தில் சமநிலையில் நடத்தப்படுவதை விரைவில் அரசு உறுதிபடுத்த வேண்டும். 


குகன்


2 Comments

  1. தென்றலில் இதுபோன்ற சமூகநோக்குள்ள கட்டுரை வரவேற்கபடவேண்டியது...

    கல்வித்தகுதியை சோதிப்பதற்குதான் பரீட்சை வேண்டுமே அன்றி கல்விபெறுவதற்கே தகுதியாக அது இருக்க கூடாது!

    ReplyDelete
  2. 40% பெண்கள் கோட்டா படியும்,ஓப்பன் கோட்டாவில் 20%வரையும் பெண்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.ஆண்கள் பாவம்தான்.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு