Trending

குறுந்தொகை 16 பாடலும் கதையும்

குறுந்தொகை 16

ஆற்றும் தோழி

kurunthogai 16


பொன்னிற ஒளியை நிலவுத்தாய் வாரிப் பொழிந்த நிசி நேரம். அந்த ஒளியினை கண்டு போதை கொண்டது போல், மரங்கள் காற்றின் உந்துதலால் அங்கும் இங்குமாக அசைந்தன. அப்பொழுதில் குழலி உறங்க முடியாது காதல் கற்பனையில் கட்டிப் புரண்டாள். காதலன் எவனும் அவளுக்குகில்லை. இருப்பினும் காதல் செய்வது போல கனா காணத் தொடங்கினாள். காதல் பற்றி அவ்வளவாக கண்டு கொள்ளாத அவளுக்கு காதல் மீது காதல் கொள்ள வைத்தவன் கவிநிலவன். கவிநிலவன் தன் காதலியுடன் அன்பு பாராட்டி அரவணைத்ததை கண்ட இவளது உள்ளதிலும் காதல் பற்றிய உயர்ந்த எண்ணம் ஏற்பட்டது. அதன் காரணமாகத்தான் தன் தோழன் கவிநிலவன் காதலுக்கு உதவி,  பின் அவனது காதலியுடன் மணம்புரிந்து வைத்தாள்‌. இவர்களது நட்பை கொச்சைப்படுத்தி பேசி வந்த ஊர்மக்கள், கவிநிலவனுக்கு கோவழகியுடன் திருமணம் நடந்ததை அடுத்து உண்மை அறிந்தனர். ஆகியபோதும் அவர்கள் பழகி வருவதை கூறி குழலிக்கு ஏற்படுத்தப்பட்ட மணஏற்பாடுகள் தட்டிக் கழிந்தன. இதனாலே அவள் மனதுக்கு சிறு கவலை ஊசலாடியது. ஆதலாலே குழலி கற்பனை காதலனுடன் காதல் புரிய வேண்டிய நிலமை. 


மணம்முடித்து  ஒரே மாத காலம் தான் ஆகியிருந்தது கவிநிலவனுக்கும் கோவழகிக்கும். ஒன்றாக கூடி மகிழ்ந்த அவர்களுக்கு வெளியுலக சம்பாஷணை ஒன்றுமே தெரியவில்லை. அவர்கள் உண்ண உணவு ஆகியவற்றை தாயாரின் எதிர்பையும் மீறி குழலியே கொடுத்து வந்தாள். 


இனி குடும்பத்தை நடத்த ஏதாவது வேலை செய்ய வேண்டும் என்று முடிவுகட்டினான் கவிநிலவன். ஒர் நாள் வேலை தேட ஊர் உலா சென்றான். அப்போது " பாரைய்யா… இவன் மணம் செய்து மகிழ்ந்திருக்கிறான்! ஆனால் பாவம் இவன் காதலுக்கு உதவி செய்த அந்த பெண்தான் இவனால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள்"


"ஆமாம்… ஆமாம்… இவனுடன் பழகியதை கூறியே அந்த பெண்ணை மணமுடிக்க ஒருவனும் முன்வரமாட்டிகிறார்கள்"


"இவனுக்கென்ன… இவன் வேலை முடிந்ததல்லவா!?" இவ்வாறு இருவர் உரையாடல்களை கேட்ட கவிநிலவனின் நெஞ்சு; முட்களில் சிக்கியதை போல வலியில் துடித்தது.


ஒரு வழியாக கவிநிலவன் அசலூரில் வேலை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தான். 'நாம் சென்று திரும்பி வந்து நம்மால் ஏற்பட்ட கலங்கத்தினை துடைக்க; நாமே முன்னின்று நம் தோழி குழலிக்கு திருமணம் செய்ய வேண்டும்' என்று வைராக்கியம் கொண்டான்.


"நான் சென்று வரும் வரை என் மனையாளை பார்த்துக்கொள்!" என்று குழலியிடம் கூறினான். பின் கோவழகியிடமும் குழலியிடமும் விடைப்பெற்றுக்கொண்டு பாலை நிலத்தின் வழியே வெளியூருக்கு பிராயணித்தான். 


குழலி, கோவழகியை  கவனித்து வந்தாள். அவளிடம் அவளுக்கு நட்புணர்வு வலுத்தது. இருவரும் ஒழிவு மறைவிலா தோழிகள் ஆயினர். தனக்கு மணம் ஆகாதது பற்றி குழலி புலம்ப, அவளுக்கு ஆறுதல் கூறிவந்தாள் கோவழகி. அது குழலிக்கு ஆறுதல் அளித்தது‌


 சில மாதங்கள் கடந்தன. கோவழகியின் வயிற்றில் கவிநிலவனின் வாரிசு வளர்ச்சி பெறுவதை அவள் வயிற்றுப்பெருக்கம் தெரிவித்தது. அதனால் களிப்பை விட கோவழகிக்கு கவலையே ஆட்கொண்டது. இவ்வளவு நாட்கள் ஆகியும் தன் மனையாளன் வராததை எண்ணி அச்சமுற்றிருந்தாள். ஒர் நாள் குழலியிடம் "குழலி… நீ எங்களுக்கு மணம் செய்து வைத்தாய் இருவரும் ஒன்றாக களிப்புற்று காலம்காலமாக வாழ! ஆனால் பொருள் தேட சென்ற என்னவர் என்னை மறந்துவிட்டாரோ? என்று அச்சமடைகிறேன்!" என்றாள்.


இதை கேட்ட குழலிக்கு அவளது வருத்தம் புரிந்தது ஆகவே அவளை தேற்ற எண்ணி வாய்த்திறந்தாள் அப்போது மேலும் கோவலகி " என்னை நினைத்திருந்தால் இவ்வளவு நாட்கள் என்னை பிரிந்திருக்கமாட்டார், அவர் என்னை மறந்துவிட்டார்!" என்று கண்ணீர் கசிந்தாள்.


"நீ… அழாதே… வேடுவர் பகழியை தீட்டும் சத்தம் போல, ஆண்பல்லி பெண்பல்லியை அழைக்கும் ஓசை இருக்கும்!. அப்போது கவிநிலவன், பாழ் நிலத்தின் வழியே சென்றவன் அதன் வழியாகவே  திரும்புவான் உன்னை நினைத்து!" என்று குழலி கோவழகியிடம் ஆறுதல் கூறினாள்.


இந்த வார்த்தைகள் கோவழகியின் கவலை வெள்ளத்தை சற்றே வடிய செய்தது.


-குகன்


குறுந்தொகை 16 பாடல்


உள்ளார்கொல்லோ-தோழி! கள்வர்

பொன் புனை பகழி செப்பம் கொண்மார்,

உகிர் நுதி புரட்டும் ஓசை போல,

செங் காற் பல்லி தன் துணை பயிரும்

அம் காற் கள்ளிஅம் காடு இறந்தோரே?


பாடியவர் - பாலைபாடிய பெருங்கடுங்கோ


குறுந்தொகை 16 உரை


அவர் கள்ளிக்காட்டின் வழியே செல்கிறார். கள்ளி தன் வேரை நிலத்தில் பதித்து இருக்கும். அங்கு பல்லி தன் துணையை அழைக்கும். அது கள்வர் இரும்பாலான தன் அம்பு முனையை விரலால் தீட்டும் போது வரும் ஓசை போலிருக்கும். அந்த ஓசையை கேட்கும் போது அவர் நம்மை நினைக்காமலிருப்பாரா..?


1 Comments

 1. சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைதேர்தலின்போது (2021) செந்தாமரை என்ற பெயர் ஊடகங்களில் பேசபட்டது..

  அவர் வேறுயாருமல்ல இந்நாள் முதல்வரின் புதல்வி..
  முன்னாள் முதல்வர் கலைஞரின் பேத்தி.. ஓரிரு தசாப்தங்கள் முன்பு அவருடைய பரதநாட்டிய அரங்கேற்றவிழா மேடையில் கலைஞர் அவர்கள் சொற்பொழிவாற்றியபோது இந்த குறுந்தொகை பாடலை சொல்லி சிலாகித்தார்...

  "பல்லியின் சொல்லுக்கு எப்போதும் பலன் உண்டு.. "

  என நயம்உரைத்தார்..

  அந்த பாடலெதுவென தெரியாமல் இருந்தேன்.. இன்று கண்டுகொண்டேன்..!

  ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு