Trending

நானறிந்த நபிகள் நாயகம் (ஆதாரமுடன்)

 

யாரும் அறியாத நபிகள் நாயகம்


nabigal nayagam
Copyright free image by PIXABAY


யூட்டா என்னும் நிகழ்ச்சி தொகுப்பாளர் நிஹோன் இனப் பெண்மணி ஒருவரிடம், 'இஸ்லாத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர் 'இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம்' என்றார். நம் நாட்டில் உள்ள பலருக்கும் கூட அந்த மனநிலை உண்டு. அப்படி நினைப்போர்களுக்கு என் பதில் 'ஒருமுறையேனும் நபிகள் நாயகத்தைப் பற்றி படியுங்கள்' என்பது தான் . சாலை ஓரத்தில் ஒரு நாணயத்தை கண்டெடுப்பவன் வழிநெடுக நாணயத்தையே தேடுவது போல குறைகளை கண்போரது மனம் குறைகளையே தேடிக் கொண்டு செல்கிறது. 


நபிகள் அவர்களைத் தெரிந்து கொள்ளும் போது அம்மாமனிதரின் மேன்மையும் மார்கத்தின் உயர்தரமும் தெளிவுறுகிறது. நபிகள் தாயின் வயிற்றில் இருக்கும் போதே தந்தை அப்துல்லாவை இழந்தது. தன் ஆறாவது வயதில் தாய் ஆமினாவை இழந்தது. பின் பாட்டனார் அப்துல் முத்தலிப்புடன் வளர்ந்தது. பள்ளிக்கே செல்லாமல் பெரிய தந்தை அபூதாலிபினுடன் சேர்ந்து வியாபாரத்தைக் கற்றது. தன் 25 ஆவது வயதில் விதவையான கதீஜா அம்மையாருக்கு வாழ்வளித்தது. இறைவனான அல்லாஹ்வின் அருளைப் பெற்று மக்காவிலிருந்து மதீனாவிற்கு சென்றது என பலருக்கும் தெரிந்த நபிகளைப் பற்றிய செய்திகளை நான் தவிர்க்கப் போகிறேன். இஸ்லாத்தைப் பற்றிய பொதுவானசிந்தனையில் உலகத்தின் பார்வையிலிருந்து வேறுபட்டு, என் உள்ளத்தில் பார்வையால் 'நான் அறிந்த நபிகள் நாயகம்' என்றுரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும் .


நபிகள் நாயகம் அவர்கள் ஓர் இறை தூதர் என்பதை பலரும் அறிவர். ஆனால் இன்றைய மாபெரும் வல்லரசு நாடான சவுதி அரேபியாவின் அன்றைய மாமன்னரும் அவர்தான் என்பது பலரும் அறியாத செய்தியாகும். அதற்கு காரணம், அவர் மன்னராக இருந்தாரே தவிர மன்னராக வாழவில்லை. 


'எங்கள் வீட்டில் அடுப்பு பற்ற வைக்காமலே மூன்று மாதங்கள் கழிந்துள்ளது , பேரீச்சம் பழங்களையும் தண்ணீரையுமே நாங்கள் உணவாக எடுப்போம்' (புகாரி 2567) என்று நபிகளின் மனைவி ஆயிஷா அவர்கள் கூறுகிறார்கள். 


'நபிகள் நாயகம் மதினாவுக்கு வந்தது முதல் மூன்று நாட்கள் தொடர்ந்து வயிறார உண்டதில்லை ' (புகாரி 5416) 


மாமன்னர்கள் உண்ட உணவுகளை நபிகள் நாயகம் அவர்கள் கண்ணால் கூட கண்டதில்லை , சராசரி மனிதன் உண்ணுகிற உணவைக் கூட நபிகள் உண்டதில்லை என்று புகாரி சொல்கிறது 


நபிகள் அவர்கள் ஒரு தடிமனான போர்வையையே ஆடையாக போர்த்தியிருப்பார்கள் . 'மழைத் தொழுகையின் போது தமது அக்குள் தெரியும் அளவிற்கு கைகளை உயர்த்துவார்கள்' (புகாரி 1031)


'நான் நபிகள் நாயகம் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன் அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது விரலால் என் காலில் குத்துவார்கள் உடனே நான் என் காலை மடக்கிக் கொள்வேன் . அவர்கள் ஸஜ்தா செய்துவிட்டு எழும் போது என் காலை நீட்டிக் கொள்வேன்' (புகாரி 382)  இதை நபிகளின் மனைவி ஆயிஷா அவர்கள் கூறுகிறார்கள். 


'நபிகள் நாயகம் அவர்களிடம் ஒரு பாய் இருந்தது . அதை பகலில் விரித்துக் கொள்வார்கள் . இரவில் அதையே வீட்டின் கதவாக பயன்படுத்துவார்கள்' (புகாரி 730)  


நபிகள் நாயகம் அவர்கள் இரவில் தமது வீட்டில் தொழுவார்கள் . வீட்டின் சுவர் குறைந்த உயரம் கொண்டதால் நபித் தோழர்கள் அதை காண்பார்கள்' (புகாரி 729)


நான் மேலே குறிப்பிட்ட வசனங்களின் மூலம் நீங்கள் ஒன்றை அறியலாம். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் என்ற அடிப்படை அத்தியாவசிய தேவையே சராசரி மனிதனைக் காட்டிலும் மாமன்னரான நபிகள் நாயகத்திடம் குறைவாகவே இருந்ததுள்ளது . நபிகளின் காலத்தில் வாழ்ந்த ஏனைய பிற அரசர்கள் ராஜபோகத்தில் திளைத்த போது நபிகளின் இந்த ஏழ்மைக்கும் எளிமைக்கும் காரணம் அவரது மேன்மைப் பொருந்திய நேர்மையாகும். அக்கால அரசர்களிலிருந்து இக்கால அரசியல் வாதிகள் வரை மக்கள் பணத்தையும் தங்கள் பணத்தையும் பிரித்துப் பார்ப்பதில்லை. ஆனால் கி.பி. 600 களிலே நபிகள் நாயகம் அவர்கள் மக்களிடமிருந்து பெறப்படும் ஸகாத் எனும் பொது நிதியிலும் பிற அரண்மனை சொத்துகளிலிலும் முஹம்மது குடும்பத்தாருக்கு அணுவளவும் உரிமை கிடையாது என்று அறிக்கை வெளியிட்டார்கள். (முஸ்லீம் 1784) அதன் படி வாழ்ந்தும் காட்டினார்கள். 


பெரும்பாலான இஸ்லாமிய நண்பர்கள் தங்கள் கருத்தின் ஆழ்ந்த உண்மையை அழுத்தமாய் கூறுவதற்கு 'அல்லாஹ் மீது ஆணை'யாக என்பார்கள். சாதாரண சத்தியத்திற்கும் 'அல்லாஹ் மீது ஆணை' என்பதற்கும் உள்ள உணர்வுப் பூர்வமான வேறுபாட்டை என்னால் உணர முடிகிறது. அதில் ஒரு ஜீவன் உள்ளது. தூதர் நபிகள் அவர்கள் அதிலும் ஒரு மென்மைப் போக்கை விரும்பினார்கள்.


ஒரு முறை நபிகள் நாயகத்தின் வீட்டு வாசலில் இரண்டு பேர் குரலை உயர்த்தி சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருவர் தன் கடனில் சிறிதளவு குறைக்குமாறும் மென்மையாக நடக்குமாறும் கேட்டார். அதற்கு அவர் 'அல்லாஹ் மீது ஆணையாக' செய்யமாட்டேன் என்றார். இதைக் கேட்ட நபிகள் நாயகம் உடனே வீட்டை விட்டு வெளியே வந்து 'உதவி செய்ய மாட்டேன் என்று அல்லாஹ் மீது சத்தியம் செய்தவன் யார்? என்று கேட்டார்கள்' (புகாரி 2705) 


சத்தியம் செய்வதிலும் பிறருக்கு தீங்கிழைக்காது இருக்க வேண்டும் என்றெண்ணினார் நபிகள் நாயகம்  'அஸ்ஸலாமு அலைக்கும்' உங்கள் மீது சாந்தி நிலவட்டும் என்று கூறுவது இஸ்லாமிய முகமன் ஆகும். அன்றைக்கு இஸ்லாமியர்களை எதிரியாய் நினைத்த யூதர்கள் 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்பதை 'அஸ்ஸாமு அலைக்கும்' என்று இஸ்லாமியர்களிடம் கூறுவர். அதாவது 'உங்களுக்கு அழிவு ஏற்படட்டும்' என்று பொருள். ஒரு முறை யூதர் ஒருவர் நபிகள் அவர்களிடம் வந்து 'அஸ்ஸாமு அலைக்கும்' என்றார். இதைக் கேட்ட நபிகளின் மனைவி ஆயிஷா அவர்கள் 'அலைகுமுஸ் ஸாமு' உங்களுக்கும் அழிவு ஏற்ப்படட்டும் என்று கூறினார்கள். அதற்கு நபிகள் 'ஆயிஷாவே நிதனாம் தேவை, அல்லாஹ் அனைத்துக் காரியங்களிலும் மென்மைப் போக்கையே விரும்புகிறான்' என்றார் . (புகாரி 6024)


நபிகள் நாயகத்தின் உண்மைக்கும் பொறுமைக்கும் உள்ள ஆதாரம் ஏராளம். இரண்டு முக்கிய குறிப்புகளை மட்டுமே குறிப்பிடுகிறேன். அக்கால அரேபிய மக்கள் சூரிய சந்திர கிரகணம் ஏற்படும் போதெல்லாம் 'உலகில் யாரோ ஒரு முக்கிய நபர் மரணித்துவிட்டார்கள்' என்று கருதினர். 'பதினாறு மாதக் குழந்தையாக இருந்த போது நபிகள் நாயகத்தின் மகன் இப்ராஹீம் இறந்தார்' (அஹ்மத் 17760) அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபிகள் நாயகம், 'எவரது மரணத்திற்காகவும் சூரிய கிரகணம் ஏற்படாது' என்றார்கள். (புகாரி 1043) 


இங்கு தான் என்னால் நபிகள் எத்தனை உயர்ந்த எண்ணம் படைத்தவர் என்பதை தெளிவுற அறிய முடிகிறது. மக்கள், கிரகணம் எப்படி ஏற்படுகிறது என்பது தெரியாது அறியாமையால் இப்படி பேசிக் கொள்கிறார்கள். நபிகள் அவர்களோ மீளாத துயரத்தில் இருக்கிறார்கள். மக்களின் இந்த அறியாமையை நபிகள் கண்டு கொள்ளாமலே இருந்திருந்தால் அந்நேரத்தில் அவருக்கு மேலும் புகழ் வந்தடைந்திருக்கும். ஆனால் நபிகளோ அந்த புகழை விருப்பவில்லை. மக்களின் அறியாமையை ஒழிக்க வேண்டும், உண்மையை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே அந்த துயரமான நேரத்திலும் மக்களுக்கு உண்மையை உணர்த்துகிறார்கள். 


ஒருமுறை கிராமவாசி ஒருவர் வந்து பள்ளி வாசலில் சிறுநீர் கழித்தார். மக்கள் அவரை விரட்டினார்கள், அப்போது நபிகள் நாயகம் அங்கு வந்து 'அவர் சிறுநீர் கழிக்கும் வரை விட்டு விடுங்கள்' என்றார்கள் அவர் சிறுநீர் கழித்து முடித்ததும் அவரை அழைத்தார்கள், 'இது அல்லாஹ்வின் ஆலயம் இங்கு சிறுநீர் கழிப்பதோ மற்ற அருவருப்பான செயல்களை செய்வதோ தகாது. தொழுகைக்கும் இறைவனை நினைவுப்படுத்தவும் உரியது' என்றார்கள். (முஸ்லீம் 429) 


இங்கு தான் நபிகளின் பொறுமை குணமானது உச்சகட்ட சிறப்பை மார்கத்திற்கு தருகிறது. ஒவ்வொரு மத நெறியாளர்களுக்கும் அவர்களுடைய இறைவழிப்பாட்டு பகுதியே புனித இடமாகும். அங்கு ஒருவர் சிறுநீர் கழித்தால் அவர்களுக்கு எத்தனை கோபம் வரும். நபிகள் அவர்கள், சிறுநீரை இடையிலேயே நிறுத்துவது அவருக்கு தான் சிரமமாக இருக்கும் என்பதை புரிந்துக் கொள்கிறார். ' சிறுநீர் கழிக்கும் வரை அவரை விட்டு விடுங்கள்' என்கிறார். சிறுநீர் கழித்து முடித்த உடன் அவரை கூப்பிட்டு எந்த வித தண்டனையும் கொடுக்காமல் மென்மையாக அறிவுரைக் கூறி அனுப்புகிறார். பின் நபிகள் தன் தோழர்களை கூப்பிட்டு, 'அந்த இடத்தில் ஒரு வாளி தண்ணீர் ஊற்றுங்கள் என்கிறார்' (புகாரி 220) உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்கவில்லையானாலும் உயர்ந்து விடுகிறது. அதை நபிகள் மூலம் அறியலாம். 


ஒருமுறை நபிகள் நாயகம் அவர்கள், தமது தோழர்களுடன் வெயிலில் நடந்து சென்றார்கள், தன் தலைமீது நிழல் பட்டதை கவனித்தார்கள், மேலே பார்த்தார்கள், நபி தோழர் ஒருவர் நபிகளுக்கு துணி குடை பிடித்திருந்தார். நபிகள் அதைப் பிடுங்கி 'நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான்' என்றார்கள். (தப்ராணி) 


'உலகத்தில் நபிகள் நாயகத்தைவிட எங்களுக்கு மதிப்புமிக்க நபர் எவரும் இல்லை, இருந்தாலும் அவர்கள் எங்களை நோக்கி வரும்போது நாங்கள் எழ மாட்டோம் ஏனென்றால் அவர்கள் அதை கடுமையாக வெறுப்பார்கள்' (அஹ்மத் 12068) 


நபிகள் நாயத்தின் மிக நெருங்கிய தோழர்களுள் ஒருவரான அனஸ் இதை அறிவிக்கிறார். நபிகள் அவர்களின் பார்வையில்  'மனிதருள் உயர்ந்தோரில்லை' என்னையும் உயர்த்தாதீர்கள் என்றார்கள். 


'நான் அல்லாஹ்வின் அடிமையும் தூதரும் ஆவேன். தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ் மீது ஆணையாக நான் விரும்பமாட்டேன்'. (அஹ்மத் 12093) 


அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க 


இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் . 


மன்னரை நீங்காமலும் நெருங்காமலும் நெருப்பில் குளிர் காய்வது போல் இருக்கச் சொல்கிறது வள்ளுவம். வள்ளுவர் சொல்வதுபடி பார்த்தால், மன்னானவன் உயர்ந்தவனாகவும் அவனை சார்ந்தோர் தகுதியில் தாழ்ந்தோனாகவும் தெரிகிறார்கள். அனைவரும் சமம் என்பதை அன்றே நபிகள் நடைமுறைப் படுத்தினார்கள். உலகில் எந்த மன்னரும் செய்யாத செயலாக நபிகள் தன்னை சேர்ந்தோர்களை தோழராக கொண்டார்கள், சேராதோர்களை பகைவராக எண்ணியதே இல்லை. அதனாலே அந்நாட்டின் சிறுபான்மை யூதர்களும் மிகு எளிதில் நபிகளை ஏளனம் செய்ய முடிந்தது. 'மன்னரை ஏளனம் செய்தான்' என்று ஒருவரக்கூட ஒருமுறைக்கூட தண்டிக்கப் பட்டதே இல்லை. 


'உயர் குலத்தை சேர்ந்த பெண் ஒருத்தி திருடியபோது பலரும் அவருக்காக மன்னிக்கும்படி நபிகளிடம் பரிந்துரை செய்தார்கள், என் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கைகளையும் வெட்டுவேன் என்றார் நபிகள் நாயகம்'. (புகாரி 3475) 


சட்டத்தில் சமத்துவமும் நபிகளின் அரசில் நிலவியது. நபிகள் வீட்டில் இருக்கும் போது என்ன செய்வார்கள் என்று அவரது மனைவி ஆயிஷாவிடம் கேட்டதற்கு, 'என்னுடைய பணிகளுக்கு உதவுவார்கள் . செருப்பு தைப்பார்கள், கிழிந்த துணிகளை தைப்பார்கள், அனைத்து வேலையும் பார்ப்பார்கள்' என்றார். (அஹ்மத் 23756) 


ஆணும் பெண்ணும் சமம் என்பதைக் கூட நபிகள் அன்றே வாழ்வியல் நெறியாக கொண்டிருந்தார்கள் என்பதையும் அவரிடமிருந்து கற்க முடிகிறது. 


பிற மதத்தாரிடம் இல்லாத ஒற்றுமையை என்னால் இஸ்லாமியர்களிடையே காண முடிகிறது  நபிகள் வகுத்த உயர்வான கொள்கைகள் இன்றளவும் எந்த முரண்பாடும் இல்லாமல் இஸ்லாத்தோரால் போற்றிக் கடைப்பிடிக்கப் படுகிறது. அவர்களின் மேன்மைப் பொருந்திய கொள்கை இஸ்லாம் மார்கத்தின் சிறப்பை மேலும் மிளிரச் செய்கிறது. இறுதியாக , நானறிந்த நபிகள் நாயகமானவர் ஏழ்மையோடும் எளிமையோடும் நேர்மையாக வாழ்ந்தவர், மென்மையோடும் உண்மையோடும் பொறுமையினைக் காத்தவர், உயர்வான இடத்திலிருந்தும் சமத்துவத்தை விதைத்தவர் . வகுத்த கொள்கைகளை வாழ்ந்துக் காட்டியவர். 


'எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டு செல்லக்கூடிய ஒரு பயணிக்கும் அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அதுபோன்ற உறவு தான் எனக்கும் இவ்வுகத்துக்கும்' என்கிறார் நபிகள் நாயகம் (திர்மிதி 2299)


இவ்வரிகள் அவரின் அடக்கத்தைக் காட்டுகிறது. நல்லுள்ளம் கொண்ட நல்லோர்கள் உலகு உள்ளளவும் வாழ்வார்கள். நபிகள் நாயகம் வாழ்கிறார்; வாழ்வார்.


-ஈசதாசன்

1 Comments

முந்தைய பதிவு அடுத்த பதிவு